1
உரங்களின் வேட்டையில்
உயிரை விடுகிறது
நிலத்தின் வளம்.
நெருக்கியடிக்கும்
நெகிழிகளின் பாய்ச்சலுக்குள்
சொட்டுச் சொட்டாக வடிந்தபின்
தன்னைத் தொலைத்து விட்டது
தண்ணீரின் யாத்திரை.
வெட்ட வெட்டத் துளிர்க்குமென்ற
நம்பிக்கையைத் துறந்து
வெய்யோனின் வீச்சுக்குள்
எரிந்து போகிறது வனத்தின் இருப்பு.
காட்சியென ரசித்த நமக்குள்
பசுமையெனக் கிடக்கும் இயற்கையை
கொலை செய்துவிட்டதைப் பற்றி
மூச்சுவிடக்கூட முடியவில்லை.
2
சிறுமழை பிடிக்கையில்
அலறுகிறது அலுவலகம்
வீடடையும் நேரத்தில்
வீதியில் சாக்கடை ஓட்டம்
விரையும் வாகனங்கள்
அள்ளித் தெளித்ததில்
மேனி எங்கும் துர்நாற்றம்
எடுத்து வர மறந்த குடையின் மீது எப்போதும் போல எரிச்சல் எழ
நிற்கவும் வழியற்று
ஒதுங்கப் பார்க்கும் நிழற்குடைக்குள் ஓயாமல் வீசுகிறது மதுவின் வாசம் நேரத்தை கடந்தும்
நிறுத்தத்தைத் தாண்டியும்
நின்றுவிட்ட பேருந்தைப் பிடிக்க
மழையின் வேகத்தில்
சாலையில் ஓட்டம்
இருக்கைகளும் நீராட
நகரப் பேருந்துக்குள்
நனைந்தே பயணம்
கம்பியைப் பிடிக்கவும்
சாய்வைத் தேடவும்
அலையும் உடலோடு
அவ்வப்போது உரசிப் போகிறது
ஆபாச மனங்களின் விரல்கள்
எப்போதும் போலவே வரவேற்கிறது மழலையின் விளையாட்டில் மகிழ்ந்து வீட்டிற்குள் வெள்ளமென
நுழைந்திருக்கும் மழை
3
மழையை ரசித்தபடி
குடையை விரிக்கிறாய்
உன்னை நனைக்க தவமிருந்த
மேகத்தின் கண்ணீரை
ஏந்திக் கொண்டு நடக்கும்
ஈரத்தடத்தில்
எழுதிப் பார்க்கிறேன்
நேசத்தை நாடும் கவிதையை.
000
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.