கலை – இலக்கியத்தில் மேன்மையுற: செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும் -எனது அனுபவங்களிலிருந்து

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் டிசம்பர் 2023 மாதாந்திரக் கூட்டத்தில், எழுத்து இலக்கிய அமைப்பின் நாவல் போட்டியில் பரிசு பெற்றதற்காக எனக்கு சிறப்பு செய்யப்பட்டது. வழக்கமான அமர்வுகளுடன், சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவர், தனது எழுத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வும் பொ.இ.வ. கூட்டத்தில் சமீப காலமாக இடம்பெற்று வருகிறது. அவ் வகையில் என்னிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

                பொதுவாகவே நான் முகநூல் பக்கம், கட்டுரைகள், எனது நூல் முன்னுரைகள் ஆகியவற்றில் சிறுகதை மற்றும் நாவல் எழுத்து, நுண்கலை ஓவியம் ஆகியவை பற்றிய விஷயங்களை – குறிப்பாக கலை, இலக்கியப் படைப்பாக்கம் தொடர்பானவற்றை – பகிர்ந்துகொள்வது வழக்கம். சக படைப்பாளிகள், புதிதாக எழுதுபவர்கள் ஆகியோருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக, அத்தகையதை மட்டும் எழுதுவேன். அவ்வாறே அவை பயனுள்ளதாக இருப்பதாக பலரும் சொல்வதுண்டு.

பொ.இ.வ.-வில் பெரும்பான்மையினர் கவிஞர்கள் என்பதால், வழக்கமாக நான் எழுதுகிற, சொல்கிற வகையிலான, கதை – நாவல் எழுத்து, ஓவியம் தொடர்பான அனுபவங்களோ, கருத்துகளோ, படைப்பாக்க டிப்ஸ்களோ அக் கூட்டத்திற்குப் பொருந்தாது. கவிதை பற்றிய உரையெனில் அவர்களுக்கு நிச்சயமாகப் பயனளிக்கும். ஆனால், எனக்கு கவிதை பற்றி உரையாற்றுமளவு எதுவும் தெரியாது. அதனால், ‘கலை – இலக்கியத்தில் மேன்மையுற, செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும் – எனது அனுபவங்களிலிருந்து’ என்ற பொதுத் தலைப்பில் எனது அறிதல்கள், அனுபவங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொண்டேன். மிக முக்கியமான பத்து புள்ளிகளை மட்டும் குறிப்பிட்டு, ஒவ்வொன்றுக்கும் சிற்சிறு விளக்கங்கள் அளித்தேன்.

                நாற்பது நிமிடங்கள் கொண்டிருந்த, அனுபவபூர்வமான அந்த உரை நன்றாக இருந்ததாக பலரும் தெரிவித்தனர். ‘பத்து கட்டளைகள் மாதிரி அந்த பத்து புள்ளிகளும் மிக முக்கியமானவையாக இருந்தன’ என்று இரண்டு முதியோர்கள் ஒரே மாதிரி வர்ணித்தது வியப்பளித்தது.

கலை – இலக்கியத்தில் மேன்மையுற விரும்புகிற இளம் படைப்பாளிகள், சக படைப்பாளிகள் ஆகியோருக்கு இந்தப் பத்து புள்ளிகளும் – அல்லது அதில் சில புள்ளிகளாவது – உதவும் என நம்புகிறேன். எனவே, அதன் விரிவுபடுத்தப்பட்ட கட்டுரை வடிவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். 

*******

  1. மேதைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்; மேதைகளைப் போல சிந்தியுங்கள்!

சாதாரண படைப்பாளிகளின் படைப்புகளை நாம் வாசிக்கவோ, பார்க்கவோ, கேட்கவோ செய்வதன் மூலம் அவர்களின் படைப்புகளில் உள்ளவற்றைத் தெரிந்துகொல்ளலாம். ஆனால், கலை – இலக்கிய நுட்பங்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள இயலாது. சிறந்த படைப்பாளிகளிடமிருந்து கொஞ்சம் கற்றுக்கொள்ளலாம். மேதைகளிடமும், கலை வல்லுநர்களிடமும் இருந்துதான் முழுமையாகவும், ஆழமாகவும் கற்றுக்கொள்ள முடியும். ஆகவேதான், மேதைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று, கலை – இலக்கியப் பயில்வுகளில் தவறாமல் வலியுறுத்தப்படுகிறது.

கூடுதலாக நான், ‘மேதைகளைப் போல சிந்தியுங்கள்!’ என்பதையும் சொல்கிறேன். அதுவும் மிகப் பயனளிக்கக்கூடிய ஒன்று. மேதைகளைப் போல சிந்திப்பதால் ஒருபோதும் நாம் மேதைகளாக ஆகிவிட மாட்டோம். ஆனால், மேதைகளைப் போல சிந்திக்கும்போது, நிச்சயமாக நமது சாதாரண சிந்தனைகளிலிருந்தும், சாதாரண படைப்புத்தன்மையிலிருந்தும் மேன்மையுறத் துவங்குவோம். அவ் வகையிலான தொடர் செயல்பாடு, நம்மையும், நமது படைப்புகளையும் சிறிது சிறிதாக காத்திரமடைய வைக்கும்.

writers diary jocket copy.PDF

தஸ்தாயெவ்ஸ்கியைத் தொடுகிறவர் தஸ்தாயெவ்ஸ்கியாகவே ஆகிறார் என்ற, படைப்புலகின் பிரபலமான ப்ளாட்டினமொழியை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். இந்தக் கூற்றை கலை – இலக்கியத் துறைகளின் மகா மேதைகள் அனைவருக்கும் பொருத்திச் சொல்ல இயலும்.

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கிறவரே தஸ்தாயெவ்ஸ்கியாக ஆகிறார் எனும்போது, மேதைகளைப் போல சிந்திக்கவும், செயலாற்றவும் செய்கிறவர், பிற்பாடு மேதையாக ஆகக்கூடும் என்பது இயலாத காரியமல்ல. மேதையாக ஆகாவிட்டாலும் கலை நுட்பங்கள் கற்றுத் தேர்ந்த நிபுணராகவோ விற்பன்னராகவோ ஆக முடியும். அது கூட இல்லாவிட்டாலும், நிச்சயமாக ஒரு சிறந்த படைப்பாளியாக ஆக முடியும் என்பது உறுதி.

2. பாராட்டுகளில் மயங்காதீர்கள்; பட்டங்கள் ஜாக்கிரதை!

நமது துறைசார் செயல்கள், மற்றவர்கள் பாராட்டுகிறபடியாக இருக்க வேண்டும் என்பது, பொதுவான நல்ல கருத்து. கலை – இலக்கியத்தில் மட்டுமல்ல; எந்தத் துறையிலும் செயல்படுகிறவர்கள் பாராட்டுகளை எதிர்பார்ப்பதும் இயல்பானது. மற்றவர்கள் பாராட்டத் தக்க அளவில் நம் செயல்களோ, படைப்புகளோ இருக்கின்றன, நாம் சரியான முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது என்ற அளவில் மட்டுமே பாராட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் அதில் பெருமிதமோ, அகந்தையோ, நார்சிஸ சுயமோகமோ வந்துவிடக் கூடாது.

புற ரீதியாக, அவை நம் மீதான மதிப்பைக் குறைக்கும். அதைவிட மிக முக்கியம், அக ரீதியில் அவை நம் செயல்பாடுகளின், படைப்புகளின் தரத்தைக் குறைக்கக்கூடும் என்பது.

எழுத வந்த காலம் முதலாகவே எனக்கு ஒரு பழக்கம் உண்டு – பாராட்டுகளில் மயங்காததும், பரிசுகள் மற்றும் விருதுகளைப் பெரிதாகவோ, சாதனையாகவோ கருதாதும்.

மற்றவர்கள் பாராட்டுகிறபடியாக எழுதவும், வரையவும்தான் நானும் விரும்புகிறேன். அவ்வாறு பாராட்டப்பட்டால் அதில் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சி இருக்கவே செய்கிறது. ஆனால், அது ஆகச் சிறிதளவே. பாராட்டுகளை அரை நிமிடம் கேட்பேன். அதற்கு மேல் ஆனால், இனி பாராட்ட வேண்டாம்; விமர்சனம் செய்யுங்கள் என்பேன். விமர்சனங்களில் பாராட்டுகளும் இருக்கலாம். ஆனால், பாராட்டுகள் மட்டுமே கூடாது. நிறை – குறை இரண்டையும் சொல்லுங்கள் என்பதே எனது விருப்பம், வேண்டுகோள்.

ஏனென்றால், பாராட்டுகள் என்னை ஒரு அங்குலம் கூட வளர்த்தாது; விமர்சனங்கள்தான் – என்னை வளர்த்துகிறதோ இல்லையோ – என் படைப்புகளை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

எழுத வந்த காலம் முதல் இன்றுவரை இதைத் தவறாமல் கடைபிடிக்கிறேன். அடிக்கடி நான் சொல்லக்கூடிய, மேலே குறிப்பிட்டுள்ள எனது (முத்திரை) வாக்கியங்கள், நெருங்கிய இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தஞ்சை ப்ரகாஷ், தொண்ணூறுகளில் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ‘பாராட்டினால் உங்களுக்குப் பிடிக்கலை. அரோசிகம்’ என்று எழுதியிருந்தார். (அரோசிகம் என்னும் சொல் ஒவ்வாமை, வெறுப்பு, அருவருப்பு ஆகியவற்றைக் குறிக்கும்).

நான் அவ்வளவு சீக்கிரம் யாரையும், எந்தப் படைப்பையும் பாராட்டிவிட மாட்டேன். நண்பர்கள் என்பதற்காக அவர்களின் படைப்புகளைப் பாராட்டுவதை ஒருபோதும் செய்ய மாட்டேன். ஆனால், நண்பர்கள் என்று பாராமல் கறாராக விமர்சனம் செய்து, பலரின் மனஸ்தாபங்களை சம்பாதித்துக்கொண்டிருக்கிறேன். நண்பர்களானாலும் சரி, நான் மதிக்கிற படைப்பாளிகளானாலும் சரி, மிதமிஞ்சிப் பாராட்டுவதோ, புகழ்வதோ கிடையாது. ஆனால், தகுதியுடைய படைப்பென்றால், அறிமுகமற்ற எந்தப் படைப்பாளியானாலும், ஒரே ஒரு சிறுகதை என்றாலும், விரிவான திறனாய்வு செய்து, பாராட்ட வேண்டியதை மிச்சம் மீதியில்லாமல் பாராட்டிவிடுவேன். எனது முகநூல் பதிவுகளிலேயே அவ்வாறு செய்ததுண்டு.

ஜனரஞ்சக எழுத்துத் தரப்பில் பாராட்டுகள் மட்டுமல்ல; பட்டங்கள் வழங்கி, பிறகு அந்தப் பட்டப் பேராலேயே குறிப்பிட்டுப் பேசுவதும், எழுதுவதும், போற்றுவதும் நடைமுறையாக்கப்பட்டுவிடும்.

மித இலக்கியத் தரப்பும் சளைத்ததல்ல. அவர்களில் பலரும் ஒருவருக்கொருவர் பாராட்டுப் பெருமழையில் நனைத்து, புகழ்ச்சிப் புயலில் மையம் கொள்ளச் செய்வதை, இலக்கியக் கூட்டங்களிலும், நூல் முன்னுரை, அணிந்துரை ஆகியவற்றிலும் காணலாம். அதிகமான நகைச்சுவை உணர்வும், அளவு கடந்த சகிப்புத்தன்மையும் இருந்தால் நாமும் இவற்றை ரசிக்க முடியும்.

தீவிர இலக்கியத் தரப்பு, நவீன இலக்கியத் தரப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. முன்னே கூறப்பட்ட அளவுக்கு இங்கே பாராட்டுகளைக் கேட்க இயலாது; பட்ட வழமைகளும் கிடையாது. இன்னமும் சொல்லப் போனால், அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்டாத, பாராட்டப்படுவதை விரும்பாத சீரிய படைப்பாளிகள்தான் இங்கே அதிகம். ஆனால் இங்கும் கூட, தகுதிக்கு மீறிய வீண் புகழ்ச்சிகளை செய்கிறவர்களும், அதை விரும்புகிறவர்களும் இருக்கிறார்கள்.

பாராட்டுகள் என்பது பூக்களை மேலே எறிந்து கொல்வது என ஒரு எழுத்தாளர் சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். விருதுகள் என்பவை படைப்புத்தன்மைக்கு அளிக்கப்படும் சவப்பெட்டிகள் என்று கூட ஒரு முன்னோடிப் படைப்பாளி தனது நேர்காணலில் சொல்லியிருந்தார்.

3. உங்கள் படைப்புகளை நீங்களே விமர்சனம் செய்யுங்கள்!

படைப்பாளிகளுக்கு தமது துறைப் படைப்புகள் மீதான விமர்சனத் திறனும், கண்ணோட்டமும் மிக அவசியம். அப்போதுதான் எந்தப் படைப்புகள் சிறந்தவை, எவை தரமானவை, எவை மோசமானவை என்பது தெரியும். அந்த அடிப்படையில் தமது படைப்புகளைத் தரமாகவும், சிறந்ததாகவும் படைக்க இயலும்.

மற்றவர்களின் படைப்புகள் மீது மட்டுமல்ல. தனது படைப்புகள் மீதும் விமர்சனப் பார்வைகள் தேவை. இன்னமும் சொல்லப்போனால், மற்றவர்களின் படைப்புகளை விமர்சிக்கிறோமோ இல்லையோ, தத்தமது படைப்புகளை விமர்சனக் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டியது மிக அவசியம். கட்டாயம் என்று கூட சொல்லலாம். அப்போதுதான் அவற்றில் உள்ள குறைகளைக் களைந்து, மேம்படுத்திக்கொள்ளவும், மேலான படைப்புகளைப் படைக்கவும் இயலும்.

மற்றவர்களின் படைப்புகளை விமர்சிக்கும்போதாவது, தேவைப்பட்டால் சில சலுகைகள் காட்டலாம். ஆனால், தனது படைப்புகளை விமர்சிக்கும்போது துளி கூட சலுகை காட்டக் கூடாது. கறாரான விமர்சனம் தேவை. எந்த அளவுக்கு ஒருவர் தனது படைப்புகள் மீது கறாரான விமர்சனங்கள் கொண்டவராக இருக்கிறாரோ, அந்த அளவுக்கு அவரது படைப்புகள் மேம்பட வாய்ப்பு இருக்கிறது.

சுய விமர்சனத்தால் மட்டுமே ஒருவரின் படைப்பு மேம்பட்டுவிடாது. மற்றவர்களின் விமர்சனங்களில் தக்கதை ஏற்றுக்கொண்டு, குறைகளைக் களைந்து, நிறைகளை மிகுதிப்படுத்தவும் வேண்டும். 

என்னைப் பொறுத்தவரை, நான் சுமாரான படைப்பாளி; ஆனால், கறாரான விமர்சகன். எந்தப் படைப்பையும் விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளும்போது, அது யாருடைய படைப்பு என்பதைப் பார்க்க மாட்டேன். அந்தப் படைப்பு எப்படியிருக்கிறது என்றுதான் பார்ப்பேன். நண்பர்கள், வேண்டியவர்கள், பிரபலமானவர்கள், முன்னோடிகள் யாராயினும் சரி – அதற்காக என் விமர்சனங்களைத் தளர்த்திக்கொள்ள மாட்டேன். தக்க காரணங்களால், சில படைப்பாளிகளின் படைப்புகள் மீதான விமர்சனத்தில் சில சலுகைகள் காட்ட நேரலாம். ஆனால், என் படைப்புகள் மீதான விமர்சனத்தில் இம்மியேனும் சலுகை காட்ட மாட்டேன்.

புத்தாயிரத் துவக்க காலகட்டத்தில் சக இலக்கியவாதிகள் யாராவது என்னிடம், இதுவரை எத்தனை சிறுகதைகள் எழுதியிருப்பீர்கள் என்று கேட்டால், “குப்பைக் கதைகள் உட்பட சுமார் 75 கதைகள்” என்று சொல்வது வழக்கம். இப்போது எனில், 100 கதைகள் என எண்ணிக்கை மாறியிருக்கும்.

நான் இப்படிச் சொல்லும்போது, கேட்பவர்கள் திகைப்பும், வியப்பும் அடைவார்கள். “உங்களோட கதைகள்தானே! அப்படியிருந்தும் குப்பைங்கறீங்களே…!?” என்று ஆச்சரியத்தோடு கேட்பார்கள்.

“என்னோட கதைகளா இருந்தாலும், குப்பை – குப்பைதானே!” என்பேன்.

கதை, கவிதை, நாவல், ஓவியம் – எதுவாயினும், எனது படைப்புகள் சிறந்தவை என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். அது தற்பெருமையாகவோ, அகந்தையாகவோ ஆகிவிடும். மற்றவர்கள் அவ்வாறு மதிப்பீடு செய்தால் மகிழ்ச்சி. ஆனால், நான் அவ்வாறு சொல்ல மாட்டேன். எனது கதைகளில் சிலவற்றை நல்ல கதைகள் என்றும், சிலவற்றை சுமாரான கதைகள் என்றும், சிலவற்றைக் குப்பைக் கதைகள் என்றும் தரம் பிரித்துச் சொல்வேன். இந்த தர வேறுபாடு, மற்ற பல இலக்கியவாதிகளின் படைப்புகளிலும் இருக்கும். ஆனால், பெரும்பாலும் மற்ற கலை – இலக்கியவாதிகள் தங்களின் படைப்புகளில் சிறந்தவை, சுமாரானவை என இரு தரம் இருப்பதைச் சொல்லவோ, ஒப்புக்கொள்ளவோ செய்வார்களே தவிர, குப்பைப் படைப்புகள் இருப்பதைச் சொல்லவோ, ஒப்புக்கொள்ளவோ மாட்டார்கள். நான், தானாகவே முன்வந்து என் கதைகளில் குப்பைக் கதைகள் இருப்பதைச் சொல்கிறேன். இத்தகைய சுய விமர்சனமும், நேர்மையும், துணிச்சலும் இருப்பதால்தான், மற்றவர்களின் படைப்புகளையும் தயவு தாட்சண்யமின்றி விமர்சிக்கிற தகுதி எனக்கு இருப்பதாகக் கருதுகிறேன். அது மட்டுமல்ல; என் படைப்புகள் மீதான, கறாரான சுய விமர்சனத்தால்தான், எனது படைப்புகளில் சிலதேனும் நல்ல படைப்புகள் என நான் திருப்தியடையத் தக்க அளவில் வந்துள்ளன.

மற்றவர்களின் பாராட்டுகள், பரிசுகள், விருதுகள், விமர்சனங்கள் யாவும் எனக்கு இரண்டாம் பட்சம். எனது படைப்புகள், எனது மதிப்பீட்டில், விமர்சனத்தில், தேறுகிறதா, தேர்ச்சி மதிப்பெண்ணாவது பெறுகிறதா என்பதுதான் எனக்கு முக்கியமானது.

இங்கே இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். குப்பைக் கதைகள் என நீங்களே சொல்கிறீர்கள் எனில், அதை ஏன் எழுதுகிறீர்கள் என்ற கேள்வி வரும். எனக்கு வருமானத்துக்கு வேறு வழியில்லை. எழுத்தின் மூலமே வருமானம் ஈட்ட வேண்டிய நிலை. அதனால்தான் மசாலாக் கதைகள், நீதிபோதனைக் கதைகள், போட்டிக் கதைகள் ஆகியவற்றை எழுத வேண்டியதாகிறது. எனக்கு இத்தகைய பொருளாதார சிக்கல் இல்லாவிட்டால், அல்லது நிலையானதும், போதுமான குறைந்தபட்ச வருமானத்துக்கு வழி ஏற்பட்டுவிட்டால், பிறகு காசுக்காக எழுத மாட்டேன்.

மோகமுள் திரைப்படத்தின், ‘நெஞ்சே குருநாதரின்’ என்ற பாடலில், பின்வரும் வரிகள் இடம்பெற்றிருக்கும்.  ‘குருவின் திருவடியில் கற்றறிந்த ஞானம் / தெருவில் கடைப்பொருளாய் விற்பதுவும் ஈனம்!’ இந்த வரிகளை எண்ணிப் பார்க்கையில், என்னை ஈனனாக உணர்ந்து கூனிக் குறுக வேண்டியுள்ளது. அதே சமயம், ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்று கேட்ட என் குருநாதனின் நிலைதான் எனக்கும் என்று தேற்றிக்கொள்கிறேன்.

குரு மூலம் கற்றோமோ, சுயமாகக் கற்றோமோ; கலை – இலக்கியத்தைக் காசுக்காகவே படைப்பது, காசு கிடைப்பதற்காக தரம் குறைப்பது ஆகியவை, கலை – இலக்கியவாதிகளின் இழிநிலைகளில் ஒன்று. எப்போதும் சீரிய இலக்கியம் படைக்கவே நான் விரும்புகிறேன். ஆனால், சீரிய இலக்கியக் களமான சிற்றிதழ்களில், படைப்புகளுக்கு சன்மானம் கிடைக்காது; அவர்களால் வழங்க இயலாது. முன்னணி வணிக இதழ்களில் தரப்படும் சன்மானத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமாவது நாலைந்து சிற்றிதழ்களிலிருந்து கிடைக்குமானால் எனக்கு அது போதும்; பிறகு அவற்றில் மட்டுமே எழுதுவேன்; ஜனரஞ்சகப் பக்கம் போக மாட்டேன்.

ஆனால், போதுமான வருமானமும், கை நிறைந்து வழியுமளவு சம்பாத்தியமும் உள்ள பலரும் கூட, காசுக்காக குப்பைக் கதைகள், தரமற்ற மசாலாக் கதைகள், தரம் குறைக்கப்பட்ட போட்டிக் கதைகள் ஆகியவற்றை எழுதத்தானே செய்கிறார்கள்! அவர்களைக் குற்றம் சாட்டவில்லை. ஆதங்கமாகத்தான் சொல்கிறேன்.

அது ஒரு புறம் இருக்க, சுய விமர்சனத்துக்குத் திரும்புவோம்.

ஒரு படைப்பாளியாக நீங்கள் வேறு எதைச் செய்கிறீர்களோ இல்லையோ, உங்கள் படைப்புகளைக் கறாரான முறையில் விமர்சனம் செய்யுங்கள்; அது உங்களின் கலை – இலக்கியம் மேம்பட வழி வகுக்கும் என்று பரிந்துரைக்க விரும்புகிறேன்.

4. அமெச்சூர் ஆர்ட், ஸன்டே ரைட்டிங் ஆகியவை கூடுமா, கூடாதா?

தொழில் ரீதியான கலைஞர்களை ப்ரொஃபஷனல் ஆர்ட்டிஸ்ட் என்றும் தொழில் சாரா கலைஞர்களை அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் என்றும் சொல்வது வழமை. சில சமயம், அமெச்சூர் ஆர்ட் என்னும் சொல்லாக்கம், தேர்ச்சி பெறாத தன்மைகளைக் குறிக்கக்கூடியகாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தரத்தை வகைப்படுத்தும் Kitsch என்ற சொல்லை நுண்கலை ஓவியத் தரப்பின் புழக்கத்தில் காணலாம். சரியாக வரையத் தெரியாத, மிகவும் தேர்ச்சிக் குறைவான வரைவுகளைக் குறிக்கக் கூடியது அது. தேர்ச்சி பெறாத தன்மை கொண்ட படைப்புகளை அமெச்சூர் படைப்புகள் என்பதை விட, Kitsch படைப்புகள் என்பதே சரியானது.

விடுமுறைகளிலும், ஓய்வுப் பொழுதுகளிலும் மட்டுமே படைப்புகளில் ஈடுபடுகிறவர்களை ஸன்டே ரைட்டர்ஸ், ஸன்டே ஆர்ட்டிஸ்ட் என சொல்வார்கள். அமெச்சூர் கலை – இலக்கியவாதிகள் என்பதும் கிட்டத்தட்ட இத்தகையதுதான். இவை கூடுமா, கூடாதா என்பது சரியான கேள்வி அல்ல. காரணம், எல்லோராலும் முழு நேர கலை – இலக்கியவாதியாக செயல்பட இயலாது; அது தேவையும் இல்லை. அது மிகச் சிலருக்கு மட்டுமே இயலும். கலை – இலக்கிய உலகில் அதிகமானோர், பிழைப்புக்கு வேறு வேலையோ, தொழிலோ செய்துகொண்டு, பகுதி நேர கலை – இலக்கியப் பணியில் ஈடுபடுகிறவர்களாகவே இருப்பர். இதன் காரணமாக அவர்களின் படைப்புகளில் தீவிரம் குறைய வாய்ப்பு இருக்கிறது. கலை – இலக்கியத்தில் மேன்மையுற வேண்டுமெனில், படைப்பில் தீவிரமாக ஈடுபட்டு, காத்திரமான படைப்புகளைச் செய்தால் போதுமானது. முழு நேர படைப்பாளியாக இருக்க வேண்டும், அல்லது தினமும் எழுதியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

24 சிறுகதைகள் மட்டுமே எழுதியவரும், குறுகிய காலத்திலேயே எழுத்தை நிறுத்திவிட்டவருமான மௌனி, அரை நூற்றாண்டு கழிந்தும் இன்னமும் தமிழ் இலக்கியத்தில் பேசப்படுகிறவராக இருக்கிறார். நுண்கலை ஓவியத்தில், ஓவியம், சிற்பம், எட்சிங், கொலாஜ், செராமிக் என பல வகையிலும் சேர்த்து, பத்தாயிரத்துக்கு மேற்பட்ட படைப்புகளைச் செய்த பிக்காஸோவைப் போலவே, தற்போது இருபத்துக்கும் குறைவான ஓவியங்கள் மட்டுமே கிடைக்கப்படக் கூடியதாக உள்ளவரான டாவின்ஸியும் உலகின் மகா ஓவிய மேதையாகப் போற்றப்பட்டு, நுண்கலை ஓவிய வரலாற்றின் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். பிக்காஸோவுக்கு நவீன ஓவியத்தின் சிம்மாசனம் எனில், டாவின்ஸிக்கு செவ்வியல் ஓவிய சிம்மாசனம்.

சுந்தர ராமசாமி இறுதிக் காலகட்டத்தில், வருடத்துக்கு ஒன்றே கால் சிறுகதை எழுதியிருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். க,நா.சு. தினமும் பதினைந்து பக்கங்களாவது எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

எவ்வளவு படைக்கிறோம், எத்தனை நாள் படைப்பில் ஈடுபடுகிறோம், எவ்வளவு நேரம் அதற்காக ஒதுக்குகிறோம் என்பதெல்லாம் அவ்வளவு முக்கியமல்ல. படைப்பில் எவ்வளவு ஆழமாகச் செல்கிறோம், எந்த அளவுக்கு சீரிய படைப்புகளைப் படைக்கிறோம் என்பதே முக்கியமானது.

5. உங்கள் இலக்குகளைத் தீர்மானித்துக்கொண்டு, அதற்கேற்ப செயல்படுங்கள்!

எந்தத் துறையாயினும் அதில் சாதிக்கவோ, பணம், புகழ் உள்ளிட்ட பிற பலன்களை அடையவோ, இலக்குகள் அவசியம். கலை – இலக்கியத் துறையைப் பொறுத்தவரை, இதில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. காரணம், இலக்கில்லாமலேயே உழைப்பு, காலம் ஆகியவை விரயமாகக் கூடிய வாய்ப்பு இதில் அதிகம்; இலக்குகள் இருந்தாலுமே வாழ்க்கையை இழந்துவிடக் கூடிய வாய்ப்பும் அதிகம்.

எழுத்தில் இலக்குகள் இல்லாததால் எனது இருபது முதல் நாற்பது வயது வரையிலான இருபது வருடங்களை இழந்து, பிந்தைய கால வாழ்க்கை இழப்புக்கும் காரணமாக இருந்துவிட்டேன். இளம் எழுத்தாளர்கள் அத்தகைய தவறுகளைச் செய்துவிடக் கூடாது என்பதற்காக அதன் முக்கிய விபரங்களை மட்டும் அறியத் தருகிறேன்.

17 வயதில் இலக்கியத் துறைக்கு வந்தேன். நாலைந்து வருடங்கள், அந்த விடலைக் கால அறியாமையிலும், பொறுப்பின்மையிலும் கழிந்ததாக வைத்துக்கொள்வோம். 22 – 23 வயதுக்குப் பிறகாவது தெளிந்திருக்க வேண்டுமல்லவா! அது நடக்கவில்லை. அப்போது சக படைப்பாளிகளாக இருந்த நண்பர்களில் பலரும், அவர்களாகவே புரிந்துகொண்டோ, பெற்றோர் சொல்லியோ, கவிதை – கதை எழுதுவதை விட்டுவிட்டு, சம்பாத்தியம், லோகாயத வாழ்க்கை என்று,’திருந்தி வாழ’த் தொடங்கிவிட்டார்கள்.

ஒன்றா சுயபுத்தி வேண்டும்; அல்லது சொல்புத்தியாவது வேண்டும். இரண்டும் இல்லாத என்னைப் போன்ற சிலர், கலை – இலக்கியத்தில் தொடர்ந்து பயணித்தோம். அப்போது நான் கோவையில் சைன் போர்ட் ஓவியராக வேலை செய்துகொண்டிருந்தேன். சம்பாத்தியத்துக்கு அந்த வேலை இருந்ததால், வீட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காவிட்டாலும், என் செலவுகளை மட்டும் பார்த்துக்கொண்டு வாழ்க்கை உருண்டது.

புற வாழ்க்கை இப்படி இருக்க, எழுத்து வாழ்வும் மெல்லமாக நகர்ந்தது. முன்பே சொன்னபடி, அப்போது எனக்கு எழுத்தில் எந்த இலக்கும் இல்லை. இலக்கியவாதிகளில் பலரையும் போல, நானும் கவிதை மூலமாகவே இலக்கியத்தில் பிரவேசித்திருந்தேன். பிறகு சிறுகதை எழுத்துக்கு வந்தேன். அது எனக்கு கவிதையை விட நன்றாக கைவந்தது; அதில்தான் ஓரளவு கவனம் பெற்றேன்; ஓரிரு சிறிய விருதுகள், சில பரிசுகள் கிடைக்கப் பெற்றன. ஆயினும் எது குறித்தும் எனக்கு கவனம் இல்லை. எனக்கு எழுத வந்தது; எழுதினேன். அவை பிரசுரமாயின. சுமாராக எழுதுகிறேன் என்று சில பேராவது பாராட்டும்படியாக என் எழுத்து இருக்கிறது. அவ்வளவுதான்! அதற்கு மேல் சிந்திக்கவில்லை.

வழக்கமாக இலக்கியத் தரப்பில் கவிதையோ, சிறுகதையோ எழுதுகிறவர்கள், சில வருடங்கள் ஆனதும் தொகுப்பு வெளியிட முயற்சிப்பார்கள். 92 முதல் 2004 வரை 12 ஆண்டுகள் ஆகியும் நான் அதையும் செய்யவில்லை.  2004-ல் பா.ராகவன் கேட்டு வாங்கி, கிழக்கு பதிப்பகத்தில் முதல் தொகுப்பை வெளியிட்டார். இல்லாவிட்டால் அதுவும் இல்லை.

இதற்கிடையே, மில்லேனியத்திலிருந்து ஃப்ளக்ஸ் போர்டுகள் வரவால், சைன் போர்ட் ஓவியத் தொழில் நலிவடைந்து, அந்த ஓவியர்கள் அனேகரும் வேலை / தொழில் இழந்தனர். அதில் நானும் ஒருவன். அதன் பிறகு வேறு வேலைக்கோ, தொழிலுக்கோ போக விருப்பம் இல்லை. எழுத்தை நம்பி வாழ்வது இயலாத காரியம் என்று தெரிந்தும், முழு நேர எழுத்தாளராக வாழ்வது என்று தீர்மானித்து, அதில் ஈடுபட்டேன். அப்போதே இலக்கிய நண்பர்களில் சிலரும், இலக்கியம் சாராத நண்பர்களும், குடும்பத்தினரும், நிரந்தர சம்பாத்தியத்துக்கு வேறு வேலை ஏதாவது செய்துகொண்டு, எழுத்தை ஓய்வு நேரப் பணியாக வைத்துக்கொள்ளும்படி அறிவுரைத்தனர். எனக்குத்தான் ரெண்டு புத்தியும் இல்லையாயிற்றே! அதனால், அறிவுரைகள், ஆலோசனைகள் எதையும் பொருட்படுத்தாமல், முழு நேர எழுத்தாளக் கனவில் மிதந்துகொண்டிருந்தேன்.

சிறுகதைகள் எழுதி மட்டுமே சம்பாதிக்க முடியாது என்று, நாவல்கள், தொடர்கதைகள் எழுதும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டேன். அடுத்தடுத்து நாலைந்து நாவல்களை முயற்சித்து, எதுவும் திருப்தியாகமல், பாதியிலேயோ, கால்வாசியிலோ கைவிடப்பட்டன. 2004 முதல் 2006 வரை கடுமையான ரைட்டர்ஸ் ப்ளாக். படைப்பிலக்கியமாக எதையுமே எழுத இயலவில்லை. அதிலிருந்து மெல்ல மீண்ட பின், மீண்டும் கவிதையிலேயே மறு பிரவேசம் செய்து, பிறகு அதை விட்டுவிட்டு சிறுகதை எழுத்துக்கு வந்து அதில் நிலைகொண்டேன். அப்போதைய கதைகள் காத்திரமாக அமைந்து, பல தரப்பிலும் கவனம் பெற்றன. ஓரிரு போட்டிகளில் பரிசும் பெற்றேன். ஆனால், 2010 வரை, சம்பாத்தியம் என்று சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லை. கண் மூடித் திறக்கும் நேரத்தில் பத்து வருடங்கள் ஓடிவிட்டிருந்தன.

இலக்கியம் சாராத உள்ளூர் நண்பன் ஒருவன், எழுத்தில் இத்தனை காலம் ஈடுபட்டு என்ன சாதித்தாய் என்று கேட்டான். அந்தக் கேள்வி என்னைக் கடுமையாகத் தாக்கி, எதார்த்தத்தை உணர வைத்தது. கடந்த 20 ஆண்டுகளாக எழுத்தில் சிறு சிறு வெற்றிகளை அடைந்திருந்தாலும், வாழ்வில் மாபெரும் தோல்வியையே அடைந்திருக்கிறேன் என்ற உண்மையை உணர்ந்துகொண்டேன். எழுத்தின் மீதும், என் மீதும் தாங்கவியலாத வெறுப்பு உண்டாயிற்று. நெருங்கிய இலக்கிய நண்பர்களிடம், ‘எழுத்தாளன் ஷாராஜ் இறந்துவிட்டான்’ என அறிவித்துவிட்டு, நுண்கலை ஓவியத்துக்கு வந்தேன்.

அதுவும் இன்னொரு கனவுதான். எழுத்திலிருந்து ஓவியத்துக்கு மடைமாற்றப்பட்ட கனவு. ஆனால், என்னைப் பொறுத்தவரை, எழுத்தையும் ஓவியத்தையும் தவிர வேறு எந்தத் தொழிலையோ, வேலையையோ செய்ய விருப்பம் இல்லை. மேலும், தமிழில் எழுதுவது, அந்த மொழிக்கும், சிறு பிரதேசத்துக்கும் மட்டுமே உரியது. ஓவியம் உலகப் பொதுமொழி. எனவே, அதில் கனவை நனவாக்க வாய்ப்புகள் அதிகம் என்று களம் இறங்கினேன். அந்தக் கனவு இன்னும் தொடர்கிறது. என்றும் தொடரவே செய்யும். இதை விட்டுவிட்டு இனி திரும்ப இயலாது. வேறு வழியில் செல்லவும் வாய்ப்பில்லை.

ஓவியத்துக்கு துறை மாறியதுமே நான் முதலில் எடுத்த தீர்மானம், எழுத்தில் செய்த தவறுகளை ஓவியத்தில் செய்யக் கூடாது என்பதுதான். ஆகவே, அதில் ஒவ்வொரு அம்சங்களையும் கவனித்து, திட்டமிட்டே செயல்பட்டேன். படிப்படியாக முன்னேறினேன். பொருளாதார பலன் இன்னும் வராவிட்டாலும். ஓவியத்தில் காத்திரமான, விலை மதிப்பு பெறக்கூடிய ஓவியங்களைப் படைத்திருக்கிறேன் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது.

ஆகவேதான், இளம் படைப்பாளிகளுக்கு இதைச் சொல்கிறேன்; உங்கள் இலக்குகளைத் துவக்கத்திலேயே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

 அது புறவயமாக, அதாவது, பிரபலம், பணம், புகழ், வசதி வாய்ப்புகள், பரிசுகள், விருதுகள் ஆகியவற்றை லட்சியமாகக் கொண்டதாக இருக்கலாம்; அல்லது, மேற்கூறிய எதுவும் எனக்குப் பொருட்டல்ல, நான் அகவயமான முன்னேற்றத்தை, அதாவது சிறந்த, சீரிய படைப்புகளைப் படைக்கவே விரும்புகிறேன் என்பதாகவும் இருக்கலாம். இலக்கு எதுவோ, அதைத் துல்லியமாக நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பிறகு, உங்கள் இலக்கை அடைவதற்கு உரிய வழியில், உரிய முறையில், திட்டமிட்டு செயல்பட்டு, உங்கள் இலக்கை அடையுங்கள்!

6. முழு நேர இலக்கியவாதி / கலைஞராக ஆகும் எண்ணம் இருந்தால்…

கலை – இலக்கியத் துறை, உலகாயத வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கக் கூடியதல்ல. உலகம் முழுதுமே இதுதான் பொது நிலவரம். கலை மேம்பாடு குறித்த ஓரு ஆங்கில நூலில் – அனேகமாக, ஜூலியா கேமரூனின் ‘தி ஆர்டிஸ்ட் வே’ என்ற நூலில் என்று நினைக்கிறேன் – இளைஞர்கள் கலைத்துறையில் ஈடுபட விரும்பினால், அவர்களின் பெற்றோர்கள், ‘கலை, கரன்ட் பில் கட்ட உதவுமா?’ என்று கேட்பார்கள் என்று ஒரு வாக்கியம் இடம்பெற்றிருக்கும்.

குறிப்பாக, தமிழில், முழு நேர ஜனரஞ்சக எழுத்தாளராக இருந்து வேண்டுமானால் வருமானம் ஈட்ட இயலும். ஆனால், முழு நேர இலக்கியவாதியாக இருந்து சம்பாதிப்பது, சராசரியான வாழ்க்கையையாவது நடத்துவது என்பது இயலாத காரியம். பிழைப்புக்கு வேறு வேலையோ, தொழிலோ பார்த்துக்கொண்டு, இலக்கியத்தை ஆத்மார்த்தத்துக்கானதாக வைத்துக்கொள்வதே நல்லது. அதில் பணம் சம்பாதிக்கவும், நிரந்தர வருமானத்துக்கும் உத்தரவாதம் ஏற்பட்ட பிறகு வேண்டுமானால், அதுவரை பார்த்துவந்த வேலையையோ தொழிலையோ விட்டுவிடலாம். இது பிற கலைகளுக்கும் பொருந்தும்.

ஆனால், தீவிர கலை – இலக்கியவாதிகள், ஆன்மிகவாதிகள், இறையியலாளர்கள், சமூக சேவகர்கள், போராளிகள் ஆகியோருக்கு பணம், சம்பாத்தியம், குடும்ப வாழ்க்கை, உலகாயதம் ஆகியவற்றில் அவ்வளவாக நாட்டமிராது. துறை சார் செயல்பாடுகளே அவர்களுக்கு மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் அளிக்கக் கூடியதாக இருக்கும். இது முற்றி, லட்சியமாகவும் ஆகிவிட்டால், பிறகு புற வாழ்வில் எதையும் பொருட்படுத்தாத நிலையும் ஏற்பட்டுவிடும். வேறு எந்த வேலைக்கும் போக மாட்டேன்; எழுத்து அல்லது இலக்கியம்தான் எனக்கு முழு நேரத் தொழில் என்று என்னைப் போல வாழ்ந்து, கஷ்டப்பட்டவர்கள் ஏராளம். அவர்கள் தமக்கும் துன்பங்களை ஏற்படுத்திக்கொண்டு, குடும்பத்தாரையும் கஷ்டத்துக்கு உள்ளாக்குவது நடைமுறை.

முந்தைய தலைமுறைகளில் இப்படி வாழ்ந்து கஷ்டப்பட்டவர்கள், வாழ்வை இழந்தவர்கள் அனேகர். இன்றைய தலைமுறையினர் பொதுவாக எச்சரிக்கையோடு இருப்பதால், இத்தகைய அபாயங்களில் இறங்குவதில்லை. ஆயினும், திரைப்படத் துறையில், தமது இருபதுகளின் துவக்கம் முதல் கனவுகளோடேயே போராடி, ஐம்பது வயது கடந்த பின்னும் லட்சியத்தை அடையாமல் தோற்கிறவர்கள் ஏராளம்.

அகவயத் தேடலில் உள்ள ஆன்மிகவாதிகள், இறையியலாளர்கள் ஆகியோருக்கு போராட்டமோ, வெற்றி இலக்கோ, பணம் உள்ளிட்ட புற ரீதியான நோக்கமோ இல்லை அல்லது தேவையில்லை. சமூக சேவகர்கள், போராளிகள் ஆகியோர் சமூகத்துக்காவே போராடுகிறவர்கள். அவர்களது போராட்டங்களின் வெற்றி – தோல்விகள், அவற்றின் சூழலைப் பொறுத்தது. அதில் ஒருவர் இல்லாவிட்டால் வேறொருவர் அதைச் செய்யவோ, தொடரவோ இயலும். கலை – இலக்கியவாதிகள் தமது இலக்குகளையும், வெற்றிகளையும் தாமே அடைய வேண்டிய நிலையில் இருப்பவர்கள். ஆனால், இங்கே வெற்றி பெறுகிறவர்கள் சொற்பம். தோல்வியடைகிறவர்கள் ஏராளம். ஆகவே, முழு நேர இலக்கியவாதி / கலைஞராக ஆகும் எண்ணம் இருந்தால் அதைக் கைவிட்டுவிடுங்கள்; அல்லது நிரந்தர வருமானத்துக்கு உத்தரவாதம் ஏற்பட்ட பிறகு அதைச் செய்யுங்கள்.

7. தனித்துவமும் ஆளுமையும் இருந்தால்தான் நீங்கள் நீங்களாகிறீர்கள்! (Copy cat ஆகவோ, மந்தையாடாகவோ இருக்காதீர்கள்).

கலை – இலக்கியப் படைப்பாளிகளுக்கு தனித்துவமும் ஆளுமையும் மிக மிக அவசியமானவை. கலை – இலக்கியப் பயில்வுகளில் அவை வலியுறுத்தப்படுவது அதனால்தான்.

ஆயிரம் – லட்சம் – கோடிக் கணக்கான படைப்பாளிகளிடையே ஒருவர் தனித்து அடையாளப்பட தனித்துவம் அவசியம். இல்லாவிட்டால், அந்தப் பெருங்கூட்டத்தில் ஒருவராக, அடையாளமற்றுப் போய்விட நேரும். உதாரணத்துக்கு, இன்று தமிழில் மலினமான முறையில் டன் கணக்கில் உற்பத்தி செய்யப்படுகிற கவிதைகளை எடுத்துக்கொள்வோம். அவற்றை எழுதியவர்களின் பெயர்களை நீக்கிவிட்டால், எது யாருடையது என்று வாசகர்களால் கண்டறிய இயலுமா? இயலவே இயலாது.

தமிழ் சூழலிலேயே இவற்றின் தரம் இப்படி எனில், இந்திய அளவில், உலக அளவில் இவற்றை வைத்தால் என்னாகும்?

ஆனால், இந்த பூமிப் பெருங்கோளத்தின் மேல் வான்கோ, பிக்காஸோ, காகெய்ன் போன்றவர்களின் ஓவியங்களை வையுங்கள். கையொப்பத்தைப் பாராமலேயே எவையெவை யாருடையவை என்று ஓவிய ஆர்வலர்களால் சொல்லிவிட இயலும். அல்லது மாப்பஸான் கதை எது, முரகாமி கதை எது என்று, அவர்களின் பெயர்கள் இல்லாமலேயே வாசகர்கள் கண்டறிந்துவிட இயலும்.

வான்கோ எவரின் உருவச் சித்திரத்தை வரைந்தாலும் அது அவர்களின் உருவச் சித்திரம் மட்டுமல்ல; வான்கோவுடையதும்தான். அவர் எந்தப் பொருள்களை வரைந்தாலும் அதில் நீங்கள் அவரைக் காண இயலும். புதுமைப்பித்தனின் எந்தக் கதையானாலும் அதில் புதுமைப்பித்தன் தெரிவார். அதுதான் தனித்துவம்.

ஆங்கிலத்தில், கலைப் பயில்வுகளிலும், மதிப்பீடுகளிலும் Individuality, uniqueness ஆகிய சிறப்புச் சொற்கள் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். இவை இரண்டும் ஒத்த தன்மைகள் கொண்ட சொற்கள். ஆனால், இரண்டுக்கும் ஒரே பொருள் அல்ல. அவற்றுக்கிடையே கனத்த பொருள் வேறுபாடுகள் உள்ளன. Individuality என்ற சொல்லைத்தான் தமிழில் தனித்துவம், தனித்தன்மை என்று குறிப்பிடுகிறோம். இது கூட்டத்தில் தனித்துத் தெரிகிற ஒருவரின் / ஒன்றின் குணச்சித்திரத்தைக் குறிப்பதாகும். Uniqueness என்னும் சொல்லைத் தமிழில் தனிச்சிறப்பு என்கிறார்கள். இது ஒருவர் / ஒன்று, தன்னளவில் தனி அடையாளங்களோடோ, தன்மைகளோடோ இருக்கும் நிலையைக் குறிப்பது. கூடுதலான புரிதலுக்காக இப்படிச் சொல்லலாம்: Uniqueness என்பது பிறப்பியல்பு. அது உருவாக்கப்படுவதோ, வளர்த்துக்கொள்ளப்படுவதோ அல்ல. Individuality என்பது உருவாக்கப்படுவதும், வளர்த்துக்கொள்ளப்படுவதும் ஆகும். கலை – இலக்கியப் படைப்பாளிகளிலும், படைப்புகளிலும் uniqueness இருக்கிறதோ இல்லையோ, Individuality கட்டாயம் தேவை.

படைப்பாளிகளுக்கு தனித்துவம் மட்டும் போதுமானதல்ல. ஆளுமையும் மிக அவசியம். காத்திரமற்றதும், பலவீனதுமானதுமான மாறுபட்ட தன்மைகளே கூட தனித்துவமாக ஆகிவிடும். அவ்வாறான படைப்பாளிகளும் நிறையவே இருப்பார்கள். ஆனால், அந்தத் தனித்தன்மை, அவர்களின் கலையை மேன்மையானதாக ஆக்கவோ, அவர்களை மேதைகளாக ஆக்கவோ செய்யாது. அங்க அடையாளங்களில் மிக மாறுபட்டு இருக்கிற ஒருவர், கூட்டத்தில் தனித்து அடையாளப்படுவது போலத்தான் அவர்களின் தனித்தன்மையானது அடையாளத்துக்கு மட்டுமே பயன்படும். தனித்தன்மை மட்டுமன்றி, ஆளுமையும் கொண்டிருந்தால்தான் சிறந்த படைப்பாளிகளாகவும், மேதைகளாகவும் இயலும்.

ஆளுமை என்ற தமிழ் சொல்லுக்கான ஆங்கிலச் சொல் personality என்பது தெரிந்ததே. இவ்விரு மொழிச் சொற்களையும் ஒப்பிடுகையில், ஆளுமை என்ற சொல்லின் பொருள் அளவுக்கு பர்சனாலிட்டி என்ற சொல்லின் பொருள் இருக்குமா என்று எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. ஆங்கிலத்தில் தேர்ச்சி கொண்ட ஒருவரிடம் விசாரித்தேன். ஆளுமை என்ற சொல்லில் இருக்கும் ஆழம், கனம் ஆகியவை personality என்பதில் இல்லை என்றார்.

ஆளுமை என்ற சொல், ஆள்தல் என்னும் வேர்சொல்லில் இருந்து வருவது. படைப்பாளி, எழுத்தாளர் என்றால் படைப்பை, எழுத்தை ஆள்கிறவர் என்ற பொருள். வெறுமனே படைக்கிறவர், எழுதுகிறவர் என்று பொருள் அல்ல. அவற்றை ஆள்கிறவர். ஆகவே, அந்த வல்லமை நம்மில் இருக்க வேண்டும்; நம் படைப்பில், எழுத்தில் வெளிப்படவும் வேண்டும்.

மந்திரம் போல் சொல் வேண்டும் என்றானே பாரதி! நெருப்பு என்று சொன்னால் நாக்கு சுட்டுவிட வேண்டும் என்றாரே லா.ச.ரா.! அதுதான் படைப்பாளுமை. ஓவியத்தில் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்பார்கள். கலை மேதைகள், ஆளுமைகளின் வல்லமை மிக்க தீற்றல்களைக் குறிப்பது அது. ஒரே ஒரு தீற்றல் போதும், அவர்களின் மேதைமை, ஆளுமை, வல்லமை ஆகியவற்றை வெளிப்படுத்த.

‘வான்கோ தீற்றும் ஒரு புள்ளி, சூரியனாக ஆகிவிடுகிறது. மற்றவர்கள் வரையும் சூரியன், வெறும் புள்ளியாக ஆகிவிடுகிறது’ என்றார் பிக்காஸோ.

இங்கே இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். மக்கள் இயல்பாகவே சராசரி வாழ்வில், சாரமற்ற கூட்டத்தன்மையோடு இருப்பவர்கள். மந்தைத்தன்மை என்று பரவலாகவே சொல்லப்படக்கூடியது அது. கலை – இலக்கியத்திலும் இதே வித கூட்டத்தன்மையும், மந்தைத்தன்மையும்தான் பெரும்பான்மையாக நிலவுகிறது. அதுவும் இயல்பானதே. தமக்கு அது போதும் என்றிருப்பவர்கள் அதிலேயே இருக்கலாம். ஆனால், தமது கலை – இலக்கியம் மேன்மையுற வேண்டும் எனில் அந்தப் போக்குகளிலிருந்து மாறுபட்டு, தனித்துவமும், ஆளுமையும் அடைந்தாக வேண்டும்.

கலை – இலக்கியங்களைக் கற்கத் துவங்கும்போது, வழிகாட்டிகள், ஆசிரியர்கள், குருமார்கள், பிடித்தமான முன்னோடிகள், மேதைகள் ஆகியோரின் தாக்கங்களும், சாயல்களும் வருவது பலருக்கும் இயல்பு. துவக்க நிலையில் அது தவறல்ல. ஆனால், எவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து விடுபட்டு, தனித்துவத்தை அடைய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அதை அடைந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் copy cat ஆக மலினப்பட நேரும்.

ஒருவேளை உங்களால் ஆளுமையாக ஆக முடியாவிட்டாலும் கூட பாதகம் ஏதுமில்லை. ஆனால், ஒருபோதும் copy cat ஆகவோ, மந்தையாடாகவோ இருக்காதீர்கள். முந்தையது கலைத்தன்மைக்கு மட்டுமாக சொல்லப்பட்டது. பிந்தையது, உங்களின் சமூகத்தன்மை, கருத்தியல், நிலைபாடுகள் ஆகியவற்றுக்கும் சேர்த்து சொல்லப்படுவது.

தனித்துவமும் ஆளுமையும் இருந்தால்தான் நீங்கள் நீங்களாகிறீர்கள். இல்லாவிட்டால் பெருங்கூட்டத்தின் அடையாளமற்ற யாரோ ஒருவராக, அனாமதேயமாக மட்டுமே இருப்பீர்கள்.

8. உங்களை நீங்கள் முறியடித்துக்கொண்டே இருங்கள்!

கலை – இலக்கியத்தில் படைப்பாக்க மேம்பாடு என்பது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கக் கூடியதும், தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டியதுமாகும். இது தொடர் பயிற்சி, பல்திறக் கற்கை, மேம்பாட்டில் அக்கறை ஆகியவற்றின் மூலமே சாத்தியமாகும்.

நாம் படைப்பாளியாகிவிட்டோம், நமக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது, நமது படைப்புகளைப் பலரும் பாராட்டுகிறார்கள் அல்லது பாராட்ட ஒரு கூட்டமே இருக்கிறது, நமது படைப்புகளுக்காக பரிசுகளும், விருதுகளும் தொடர்ந்து கிடைக்கின்றன, இதுவே போதும் என்று திருப்திப்பட்டால் அவர்களின் படைப்பு மேம்படாது. அவர்கள் தமக்குத் தெரிந்த அளவிலேயே தேங்கியிருப்பார்கள். தேக்க நிலை என்பது இதுதான்.

பொதுவாக ஜனரஞ்சகப் படைப்பாளிகள், மித கலை – இலக்கியவாதிகள் இப்படியான தேக்க நிலை கொண்டவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு அது போதுமானது. ஜனரஞ்சகப் படைப்பாளிகள் தேடலற்றவர்கள், மித கலை – இலக்கியவாதிகள் ஆழ்ந்த, தீவிர தேடலை மேற்கொள்ளாதவர்கள். ஆனால், தீவிர கலை – இலக்கியவாதிகள் இதற்கு மாறாக, தேடலில் தணியாத வேட்கை கொண்டிருப்பார்கள். விரிவும் ஆழமும் நாடுகிற அவர்களின் தேடல், அவர்களை மென்மேலும் ஆழங்களுக்கும், புதிய புதிய சிகர அடைதல்களுக்கும் வழி அமைத்துக்கொண்டேயிருக்கும்.

கலை – இலக்கியத்தில் ஆழ்ந்த தேடல் உள்ளவர்களாக இருந்தால், ‘மேதைகள் எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பார்கள்’ என்ற பிரபல கூற்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். மேதைகளின் முக்கிய இயல்புகளில் ஒன்றாக அது சொல்லப்படுகிறது. அவர்கள் மேதைகளாக ஆவதற்கான, நீடிப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, அவர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பது.

மேதைகளுக்கே அப்படி எனும்போது, சாமானிய படைப்பாளிகளான நாம் எம் மாத்திரம்?

என்னைப் பொறுத்தவரை, கற்றுக்கொள்வதில் என்றும் தணியாத ஈடுபாடு கொண்டிருப்பது மட்டுமே நான் ஒரு கலைஞன், இலக்கியவாதி என்பதற்கான அடிப்படைத் தகுதி என உறுதியாகச் சொல்வேன். ஆகவேதான், ‘கலை -இலக்கியத்தின் கடைசி பெஞ்ச் மாணவன் நான்!’ என்றும் அடிக்கடி சொல்கிறேன். சொல்வது மட்டுமல்ல; இன்றும், ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். ‘வரையாத நாட்கள் எல்லாம் வாழாத நாட்கள்’ என்றான் வான்கோ. நான் வரையாத நாட்களும், எழுதாத நாட்களும் அதிகம். ஆனால், கற்காத, பயிற்சி செய்யாத நாட்கள் குறைவு. வரையவோ, எழுதவோ செய்யாவிட்டாலும், ஓவியம் கற்பது தொடர்பான நூல்களை சிறிதேனும் வாசிக்கவோ, காணொளிகளைப் பார்க்கவோ செய்வேன். அல்லது சேகரிப்பில் உள்ள, நாவல் எழுத்துக் கலை நூல்களில் எதையாவது எடுத்து வாசிப்பேன். அவ்வளவு இல்லாவிட்டாலும், கூகுளில் சிறு டிப்ஸ்களையாவது பார்த்துக்கொள்வேன். இவை என்னை மயிரிழை அளவேனும் மேம்படுத்துகின்றன.

நேற்றைக்கு நீங்கள் படைத்த படைப்புக்கும், இன்று நீங்கள் படைத்த படைப்புக்கும் ஒரு மில்லி மீட்டராவது மேம்பாடு இருக்க வேண்டும். மேம்பாட்டில் கவனம் உள்ளவராக இருந்தால் அது நிச்சயமாக நடக்கும். ஒவ்வொரு நாளும் நிகழ்கிற மேம்பாடு நுண்ணியதாக இருப்பதால் அது நம் கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், துவக்க நிலையில் உள்ள இளம் படைப்பாளிகள் எனில், அவரின் கற்றல் படிநிலைகளில் இது நன்றாகவே தெரியும். உதாரணமாக, ஒரு ஓவிய மாணவரின் மேம்பாடு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் முன்னேறிக்கொண்டிருக்கும். அடிப்படைகளைக் கற்று முடித்த முதிர் படைப்பாளிகள் எனில், அதற்குப் பிறகான மேம்பாடு இவ்வளவு விரைவாக இராது. ஆனால், அவர் மேம்பாட்டில் அக்கறை கொண்டு அதற்காக செயல்படுகிறவர் எனில், ஒவ்வொரு வருடத்திலுமோ, அல்லது ஓரிரு வருடங்களுக்குள்ளாகவோ படைப்பு முன்னேற்றங்களை அடையாளப்படுத்த இயலும்.

நீங்கள் எவ்வளவு மலிவான படைப்புகளை உற்பத்தி செய்தாலும், அதைப் பாராட்ட சிலரோ, பலரோ, ஒரு பெருங்கூட்டமோ இருக்கத்தான் செய்யும். அது போதும் என நினைத்தால் உங்கள் படைப்பு ஒருபோதும் மேம்படாது. 

படைப்பு மேம்பாட்டுக்கு, அதிருப்தி ஒரு முக்கிய காரணி. பல கலைஞர்கள், இலக்கியவாதிகள், தங்கள் படைப்புகளை மென்மேலும் செம்மைப்படுத்தி, மெருகேற்றிக்கொண்டே இருப்பார்கள். தங்களால் இயன்றவரை செம்மையான படைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கும். மற்றவர்கள் பாராட்டுவதற்காகவோ, குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவோ அல்ல; தன்னளவில் முழு திருப்தியான படைப்புகளைப் படைக்க வேண்டும் என்பதற்காக. 

                உங்கள் படைப்புத்தன்மை தேர்ச்சி பெற்றதாக இருந்தால், அதற்குப் பிறகு தொடர்ந்து கற்கிறீர்களோ இல்லையோ, உங்களை – உங்கள் படைப்புகளை – நீங்கள் தொடர்ந்து முறியடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

1992-ல் சிறுகதை எழுதத் தொடங்கிய எனக்கு, 2004-ல், வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சக படைப்பாள நண்பர்கள், வாசகர்கள் சிலர் அத் தொகுப்புக் கதைகளைப் பாராட்டவும், கொண்டாடவும் செய்தனர். சக சிறுகதையாள நண்பரான பலராம் செந்தில்நாதன், அத் தொகுப்புக்காக, சாஹித்ய அகாடமி – ஞான பீடம் விருதுகளை விட மேலாக நான் மதிக்கக் கூடிய வகையிலான மரியாதையை எனக்கு செய்தார். ஆனாலும், அத் தொகுப்பு வெளியான பின் எனக்கு அத்தகைய கதைகளில் அலுப்பு வந்துவிட்டது. குடும்பக் கதைகள் என பொதுவாக வகைப்படுத்தக் கூடிய கதைகள் அவை. குடும்பங்களில் நடக்கும் சம்பவங்கள், உறவுகளுக்கிடையிலான அன்பு, பாசம், நட்பு, காதல் முதலான உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதைகளே அதில் அதிகமாக இருக்கும். சமூகக் கதைகள் குறைவு. மித இலக்கியத் தரப்புக்கும், ஜனரஞ்சகத் தரப்புக்கும் ஏற்ற அக் கதைகள், அத் தரப்பில் சிலரது பாராட்டுகளைப் பெற்றாலும், தீவிர இலக்கியத் தரப்பில் கவனம் பெறவில்லை. எனக்கு அது குறையாகப் பட்டது. நான் தீவிர இலக்கியம் படைக்கிறேனோ இல்லையோ, இனி மேல் இப்படியான குடும்பம், நட்பு, காதல் போன்ற மெல்லியல் கதைகளை எழுதக் கூடாது; காத்திரமான சமூகக் கதைகளையே எழுத வேண்டும் எனத் தீர்மானித்தேன்.

                பிற்பாடு சிறுகதைகள் எழுதும்போது அவ்வாறுதான் எழுதினேன். சமூகக் கதைகளும், கூரிய சமூக விமர்சனங்கள் கொண்ட நையாண்டிக் கதைகளுமாக, 2016-ல், வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது என்னும் தொகுப்பு வெளியாயிற்று. அது இன்னொரு ஜனரஞ்சகத் தரப்பிலும், தீவிர இலக்கியத் தரப்பு சக படைப்பாளிகள் சிலரிடத்திலும் பாராட்டுப் பெற்றது. ஆனால், முதல் தொகுப்பு பிடித்திருந்தவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அந்தத் தொகுப்பு போல இல்லை என்று ஏமாற்றத்தோடு கூறினர்.

                அவர்களிடம் அது பற்றிப் பேச நேரும்போது, “வடக்கந்தற தொகுப்பு ஒரு கட்டம். நான் அந்தக் கட்டத்தைப் பத்து வருடங்களுக்கு முன்பே கடந்துவிட்டேன்” என்பேன்.

                அது என்னை நானே தாண்டிய ஒரு முறியடிப்பு.

                2010-ல் எழுத்தைக் கைவிட்டு ஓவியத் துறைக்கு வந்தபோது, அதிலும் இத்தகைய ஒரு முறியடிப்பு நேர்ந்தது.

                அதுவரையிலான எனது எழுத்தாக்கங்களில், சிறுகதை – கவிதை ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எழுத்தில் நான் உச்சம் தொட்டது கவிதையில்தான். கவிதை என்று பொதுவாக சொல்வதைவிட, எனது எதிர்கவிதைகள், குறுங்காவியங்கள் ஆகியவற்றில்தான் என்பது இன்னும் சரியானது. ஓவியத்தில் நான் என்ன செய்யப்போகிறேன் என்பது கூட தீர்மானமாகாத துவக்க நிலையிலேயே, எனக்கு ஒரு லட்சியம் உண்டாயிற்று. எனது ஓவியங்கள், கவிஞன் ஷாராஜைத் தோற்கடிப்பதாக இருக்க வேண்டும் என்பதுதான் அது.

                நவீன தாந்த்ரீக ஓவியத்தை எனது சிறப்புத் துறையாகத் தேர்ந்தெடுத்து, அதில் விரிவும் ஆழமும் கொண்ட தேடல்கள் செய்து, அந்த அடிப்படையில் ஓவியங்களை வரைந்தேன். போகப் போக எனது தேடல் மிகத் தீவிரமுற்றது. ஏழு ஆண்டு கால கடும் உழைப்பின் பயனாக, எனது மேஜர் ஓவியங்கள் பலவற்றை வரைந்தேன். அது நானே எண்ணிப் பார்த்திராத அளவுக்கு ஆழமானதாகவும், மேன்மையானதாகவும் இருந்தது. அதற்குப் பிறகு, இன்று வரை நான் சொல்வது இதுதான்: “எழுத்தாளன் ஷாராஜ் ஏழு ஜென்மம் எடுத்தாலும் ஓவியன் ஷாராஜைத் தொடக் கூட முடியாது!”

                என்னளவில் இது மாபெரும் முறியடிப்பு.

                ஆனால், இதோடு நான் தேங்கிவிட மாட்டேன். 2017-ல் ஏற்பட்ட கடும் விபத்தின் விளைவாக, கடந்த ஆறு ஆண்டுகளாக என்னால் ஓவியப் பணியைத் தொடர இயலவில்லை. இனி மேல் தொடரவிருக்கிறேன். அப்போது, எனது இந்த ஓவியங்களை முறியடிப்பதே என் லட்சியமாக இருக்கும்.

9. லட்சியவாதம் நாட்டுக்கு நல்லது; ஆனால் வீட்டுக்குக் கேடு. ஒருவேளை, லட்சியவாதிகளுக்குமே கூட.

லட்சியவாதங்கள் நாட்டுக்கு மட்டுமல்ல; உலகம் முழுமைக்குமே தேவையானது. சமூகம், அரசியல், மதம், ஆன்மிகம், அறிவியல், கலை – இலக்கியம், வரலாறு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், லட்சியவாதிகளே அந்தந்தத் துறைகளைச் செழுமைப்படுத்தி, உலக முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைகிறார்கள். அவ் வகையில் லட்சியவாதங்கள் நாட்டுக்கும், உலகிற்கும் கட்டாயம் தேவை. லட்சியவாதிகள் இல்லாவிட்டால், நாடும், உலகமும் சுயநலவாதிகளால் நிறைந்து, மனிதனை மனிதன் தின்று, வெகு விரைவில் அழிந்தேவிடக் கூடும்.

லட்சியவாதிகளால் உலகிற்குப் பெரும் நன்மை. ஆனால், அவர்களால் அவர்களின் குடும்பத்திற்கு எந்த நன்மையும் இல்லாமல் போகவும், கேடுகள் விளையவும் அதிக வாய்ப்புள்ளது. அதே போல, லட்சியவாதிகள் தம்து லட்சியத்தாலேயே தம் வாழ்வையும், தம் உயிரையும் கூட இழக்க நேரிடுவதுண்டு. குறிப்பாக சமூகம், அரசியல், மதம், கலை – இலக்கியம் ஆகியவற்றில் லட்சியவாதிகளால் அவர்களின் குடும்பத்துக்கும், அவர்களுக்குமே உண்டாகக் கூடிய தீங்குகள் அதிகம்.

அப்படியானால், லட்சியமே கூடாதா என்ற கேள்வி எழும். தனி மனித அளவில், முன்னேறவும், சாதிக்கவும் நினைக்கிற ஒவ்வொருவருக்கும் லட்சியம் தேவை. அது குடும்பத்தையோ, தன்னையோ பெரிதாக பாதிக்காத அளவுக்குப் பார்த்துக்கொள்வது அவசியம். இந்த தனிமனித லட்சியம் என்பது வேறு; சமூக – அரசியல் லட்சியவாதங்கள் என்பது வேறு. அந்த லட்சியவாதங்களைப் பொறுத்தவரை, கூடுமா – கூடாதா என்ற கேள்விக்கே இடமில்லை. சீர்திருத்தம், முன்னேற்றம், மறுமலர்ச்சி யாவும் லட்சியவாதங்களால்தான் உண்டாகின்றன. அதற்கான போராட்டத்தில், உயிரிழப்பு உள்ளிட்ட பெரும் பாதிப்புகள் நேரவே செய்யும். அது குறித்து கூடுதலாக விவாதிக்க இது இடமல்ல. இது கலை – இலக்கிய மேம்பாட்டுக்கான கட்டுரை என்பதால், அதைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

கலை – இலக்கிய லட்சியத்தால் வீணாய்ப்போனவர்களில் நானும் ஒருவன். இந்த லட்சியம் மட்டும் இல்லாதிருந்தால், நானும் சராசரி வாழ்வை வாழ்ந்து, நன்றாக இருந்திருப்பேன்; என்னால் என் குடும்பத்துக்கும் பல நன்மைகள், முன்னேற்றங்கள் உண்டாகியிருக்கும். எனக்கும் பயனனின்றி, என் குடும்பத்துக்கும் பயனின்றி, ஐம்பது ஆண்டு கால வாழ்வை வீணடித்துவிட்டேன்.

கலை – இலக்கியத்தில், தமிழகத்தில் மட்டுமே இதே போல எத்தனை ஆயிரம் பேர் இருப்பார்கள்! இந்த லட்சியத்தால் பெரும் பணத்தை இழந்தவர்கள், வாழ்வை இழந்தவர்கள், குடும்பத்தைக் கஷ்டப்படுத்தியவர்கள், வறுமையில் உழன்றவர்கள், திருமணம் கூட செய்துகொள்ளாதவர்கள் என எத்தனை எத்தனை பாதிப்புகள், கேடுகள்! எனது நட்பு வட்டத்திலேயே பலர் உண்டு. முந்தைய தலைமுறையினரில் இது அதிகம். இன்றைய தலைமுறையும், இனி வரும் தலைமுறைகளும் இப்படி கலை – இலக்கிய லட்சியத்தால் சீரழிந்துவிடக்கூடாது; குடும்பத்துக்கு சீர்கேட்டை உண்டாக்கிவிடக் கூடாது என்பதே என் விருப்பம்.

10. பரிசுகளும் விருதுகளும் முக்கியமல்ல; தரமும், காலம் கடந்து நிற்பதுமே முக்கியமானது.

அங்கீகாரம் என்ற வகையில் விருதுகள் ஓரளவு முக்கியமானதாக இருக்கக் கூடும். பணப் பரிசுகள், நிச்சயமாக பணத் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படும். அதோடு, விருதுகளும் பரிசுகளும், அவற்றைப் பெற்ற படைப்புகள் மீதும், அந்தப் படைப்பாளிகள் மீதுமான கவனத்துக்கு வழி வகுக்கலாம். இது எந்தப் பரிசு, எந்த விருது என்பதைப் பொறுத்தது. தரமானதும், தேர்வில் நியாயமானதுமான விருதுகள், பரிசுகள் என்றால் மட்டுமே அவற்றைப் பெறுவது மதிப்புக்குரியதாகப் பாராட்டப்படும். இல்லாவிடில், தொகை பெரிதெனினும் மதிப்பு இராது.

தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை சில விருது, போட்டி அமைப்புகள் மட்டுமே நேர்மையான முறையில் நடத்தப்படுவதாகவும், மதிப்புக்குரியதாகவும் உள்ளன. பல அமைப்புகளிலும் நேர்மையான செயல்பாடுகள் இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாகவே இருந்துவருகிறது. பெரும்பாலான விருதுகளைப் பொறுத்தவரை, விருது வாங்குவது ஒரு கலை; அதிகாரம் உள்ளவர்கள் விருதுகளை எடுத்துக்கொள்வது இன்னொரு கலை; இது தவிர, தமக்கு வேண்டியவர்களுக்கு விருது வழங்குமாறு பரிந்துரைப்பது ஒரு புறம். இது பெறுவதல்ல; வாங்குவது. இப்படி விருது வாங்குவதில் என்ன பெருமை இருக்க முடியும்? ஆனால், இத்தகையோர் விருது வாங்கியதைப் பற்றிக் கூசாமல் பீற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் அதைப் பற்றி பெருமை முழக்கவும் செய்வார்கள்.

போட்டிகளில் நடுவர்கள் நியாயமற்ற முறைகளில் நடந்துகொண்டதாகவும், தேர்வுகள் தவறாக இருப்பதாகவும் பல சமயங்களில் சர்ச்சைகள் எழுகின்றன. சாஹித்ய அகாடமி விருதைப் பொறுத்தவரை, தகுதியற்ற படைப்பாளிகளுக்கு வழங்கப்படுவது முன்பு பல முறை நடந்து, பலத்த விவாதங்கள் நடந்துள்ளன. அல்லது இந்தப் படைப்பாளிக்குக் கொடுத்தது சரி; ஆனால், அவரது இந்தப் படைப்புக்குக் கொடுத்தது சரியல்ல; முந்தைய அந்தப் படைப்புக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்கிற பேச்சு வரும். சமீப காலங்களாக அத்தகைய அகாடமி சர்ச்சை குறைந்திருக்கிறது.

சாஹித்ய அகாடமி, ஞானபீடம் ஆகியவை இந்திய அளவில் முக்கிய விருதுகளாகக் கருதப்படுகின்றன. தமிழில் ஞானபீடம், தகுதி உடையவர்களுக்கெல்லாம் கிடைத்ததா? இல்லையே! ஆனால், அதிகாரம் மூலம் அகிலனுக்குக் கிடைத்தது. அகிலனின் படைப்புகளை எந்த தீவிர இலக்கியவாதியாவது பாராட்டுவது உண்டா? அவருக்கு ஞானபீடம் கிடைத்தது சரிதான் என்பதுண்டா? தமிழில் சாஹித்ய அகாடமி விருது பெற்றவர்களில் எத்தனையோ பேரின் பெயர்கள் கூட இலக்கியத் தரப்பினருக்குத் தெரியாது. அவர்களை யாரும் இன்று பேசுவதும் கிடையாது. நகுலன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், பிரமிள், தஞ்சை ப்ரகாஷ் ஆகியோருக்கு சாஹித்ய அகாடமி வழங்கப்படவில்லை. ஆனால், இலக்கிய வட்டத்தினர் அன்றும், இன்றும், என்றும் அவர்களின் படைப்புகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

அவ்வளவு ஏன், புதுமைப்பித்தன், பாரதி, பஷீர், மாண்ட்டோ, தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி போன்ற மேதைகள் காலம் கடந்து நிற்பது அவர்கள் பெற்ற பரிசுகளாலும், விருதுகளாலுமா? படைப்புத் தரத்தினால்தானே! உலகெங்கும் நூற்றாண்டுகள், ஆயிரத்தாண்டுகள் கடந்து கலை – இலக்கியப் படைப்புகள் புகழோடு வாழ்ந்துகொண்டிருப்பதும், அவற்றின் தரத்தினாலும், காலம் கடந்து நிற்கக் கூடிய தகுதியினாலும்தானே!

எனக்கு பரிசுகளும் விருதுகளும் ஒரு பொருட்டல்ல. பணத் தேவைக்காகத்தான் வணிக இதழ்களுக்கும், போட்டிகளுக்கும் எழுதுகிறேன். சம்பாத்தியத்துக்கு வேறு வேலையோ, தொழிலோ இல்லை. அதனால் எழுத்து, ஓவியம் மூலமாகத்தான், என் செலவுக்கான குறைந்தபட்ச பணத்தை ஈட்டிக்கொண்டிருக்கிறேன். இதில் வீட்டுக்குக் கொடுக்கிற அளவுக்கு வருமானமும் இல்லை. என்னை நம்பி குடும்பத்தார் இல்லை என்பதால் எப்படியோ வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால், இந்த ஐம்பது ஆண்டு காலமாக எனக்கு சோறு போட்டுப் பராமரித்துக்கொண்டிருப்பது என் குடும்பத்தார்தான். நான் அவர்களுக்கு இன்றுவரை ஐநூறு ரூபாய் கூட கொடுத்ததில்லை. இப்படித்தான் இருக்கிறது கலை – இலக்கியப் பிழைப்பு.

வெளிப்படையாகச் சொல்லப்போனால், குடும்பத்தாருக்கு நான் பெரும் பாரம். அதில் பொருளாதார பாரத்தை சற்று குறைக்க, என் செலவுகளை மட்டுமாவது நான் பார்த்துக்கொள்ள, காசுக்காக எழுத வேண்டியிருக்கிறது. முன்பே சொன்னபடி, எனக்கு இத்தகைய பொருளாதார சிக்கல் இல்லாவிட்டால், அல்லது நிலையானதும், போதுமான குறைந்தபட்ச வருமானத்துக்கும் வழி ஏற்பட்டுவிட்டால், பிறகு காசுக்காக எழுத மாட்டேன்.

கதை எழுத்துகளைப் பொறுத்தவரை, எனது சில சிறுகதைகளில் எனக்கு முழுமையான திருப்தி உண்டு. இலக்கியம், ஜனரஞ்சகம், நடுமை ஆகிய மூன்று தரப்பு இதழ்களிலும் எழுதப்பட்ட நல்ல கதைகள் அவை. ஆனால், போட்டிக்காக எழுதப்பட்டு பரிசு பெற்ற கதைகளில் அத்தகைய திருப்தி இல்லை. முதல் பரிசு பெற்ற கதைகள் என்றாலும் கூட. காரணம், அவை போட்டிக்கு ஏற்ப எழுதப்பட்டதுதான்.

போட்டிகள் ஒவ்வொன்றிலும், அதை நடத்தும் இதழ்கள் அல்லது அமைப்புகளுக்கு ஏற்ப தர வேறுபாடும், நிபந்தனைகளும் இருக்கும். அவற்றுக்கு உட்பட்டே எழுத வேண்டும். இது தவிர, அனைத்து போட்டிகளிலும், சொல்லப்படாத நிபந்தனைகள் சிலதும் இருக்கும். அவற்றையும் புரிந்துகொண்டு எழுதவேண்டும். அதனால் எழுத்தாளர்கள் தன்னிச்சையாகவோ, சுதந்திரத்தோடோ எழுத இயலாது. ஆகவே, அவை என்னளவில் திருப்தியற்றதாகவே அமைந்தன.

வேலந்தாவளம் தொகுப்பில் முதல் மூன்று கதைகள் பரிசுக் கதைகளாக வைத்திருந்தேன். ஒன்று ஆறுதல் பரிசுக் கதை, மற்ற இரண்டும் முதல் பரிசுக் கதைகள். ஆனால், அந்தத் தொகுப்பைப் பாராட்டிய, இன்றளவும் பாராட்டுகிற சக படைப்பாளிகள் யாரும் பரிசுக் கதைகளைப் பாராட்டவில்லை. அது மட்டுமல்ல; அந்த மூன்று கதைகளும் தொகுப்போடு ஒட்டவில்லை, சிறந்த கதைகளாகவும் இல்லை என்றும் ஒருவர் குறிப்பிட்டார்.

2020-லிருந்துதான் நாவல் எழுத்துக்கு வந்தேன். இதுவரை ஆறு நாவல்கள் எழுதிவிட்டேன். அதில் வானவில் நிலையம் தவிர மற்ற ஐந்தும் போட்டிகளுக்காக எழுதப்பட்டவைதான். ஆனால், இப்போது ஒரு விஷயத்தில் மிக கவனமாக இருந்தேன். சிறுகதைகளை போட்டிகளுக்காக தரம் குறைத்து எழுதினால் பெரிய இழப்பில்லை. பரிசு பெறுகிறதோ இல்லையோ; அவற்றை விரும்பினால் தொகுப்பில் சேர்க்கலாம்; பத்தோடு ஒன்றாக அந்த பலவீனக் கதை இருப்பது பெரிய பாதிப்பாகாது. அல்லது, வேண்டாம் என நினைத்தால் அக் கதைகளை தொகுப்புகளில் சேர்க்காமல் விட்டுவிடலாம். குறுகிய கால உழைப்புதான் என்பதால் அதிக நட்டம் நேராது. ஆனால், எனது நாவல்கள் ஒவ்வொன்றும் சில மாத உழைப்பில் உருவாக்கப்படுபவை. போட்டிகளுக்காக தரம் குறைத்துக்கொண்டு எழுதினால், பரிசு கிடைக்காதபட்சத்தில் சிக்கலாகிவிடும். பரிசு கிடைத்தால், நாவலில் தரம் இல்லாவிட்டாலும், அந்தப் பணம் லாபம். பரிசு கிடைக்கவில்லை எனில், நாவலை சாதாரணமாக வெளியிடும்போது, தரம் இன்மை காரணமாக, உரிய கவனம் பெறாமல் போய்விடும். பல மாத உழைப்பு வீணாகிவிடும். ஆகவே, போட்டிக்காக நாவல்களை எழுதும்போது, உள்ளடக்கம் பரிசுக்குரிய வகையில் இருக்க வேண்டும்; ஆனால், தரத்தைக் குறைத்துக்கொள்ளக் கூடாது; போட்டியில் பரிசு பெறாத பட்சத்தில், சாதாரணமாக வெளியிடும்போது, போட்டிக்காக எழுதப்பட்டது என்பது தெரியாதபடி தரம் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, அதற்கேற்பவே எழுதினேன்.

அதில் வள்ளிநாயகம் காம்பௌண்ட், ஸீரோ டிகிரி போட்டியில் பிரசுரத் தேர்வுடன் ஆறுதல் பரிசு பெற்றது. நீர்க்கொல்லி, எழுத்து அமைப்பின் திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு வென்றது. மாதீஸ்வரி, யாவரும் பதிப்பகத்தின் புதுமைப்பித்தன் நினைவுப் போட்டியில் நெடும்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

எழுதிய ஆறு நாவல்களில் ஒன்று, பிஞ்ச் செயலிக்கு ஏற்பவும், மற்ற நாவல்கள் போட்டிகளுக்கு ஏற்பவும் எழுதப்பட்டவை. தரம் குறைத்துக்கொள்ளவில்லை எனினும், இவற்றை நான் தன்னிச்சையாகவும், முழு சுதந்திரத்தோடும் எழுதவில்லை. ஆகவே, எனது சில சிறுகதைகளில் உள்ள முழு திருப்தி, இந்த ஆறு நாவல்களிலுமே கிடைக்கவில்லை. பணத் தேவை காரணமாக, இனியும் கூட சில நாவல் போட்டிகளில் கலந்துகொள்வேன். அவற்றிலும் இத்தகைய மனக்குறை இருக்கவே செய்யும். போட்டிகளுக்காக இல்லாமல், தன்னிச்சையாக நாவல் எழுதும்போதுதான் நாவல் எழுத்தில் எனக்கு முழு திருப்தி கிடைக்கும்.

பரிசுகளும் விருதுகளும் சில தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவேயன்றி, கலை – இலக்கிய மதிப்பீட்டில் அவை முக்கியமல்ல. தரமும், காலம் கடந்து நிற்பதுமே முக்கியமானது. நம் படைப்புகள் காலம் கடந்து நிற்பது நம் கையில் இல்லை. ஆனால், அதற்கான தகுதிப்படுத்தலும், தரமும் நம் பொறுப்பில்தான் உள்ளன.

*******

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். இந்த ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *