செல்வியை ஆஸ்பத்திரிக்கிக் கூட்டிப்போக வேண்டுமென்று அம்மா சொல்லியிருந்தாள். காலையில் வயலுக்குக் கிளம்பும்போதே கத்திக் கத்திச் சொன்னாள் சேதுவிடம். படி இறங்கி வாசல் தாண்டி தெருவில் கால் பதித்தபோது அம்மாவின் குரல் அவனைத்துரத்தி வந்தது.
‘’எலேய்..மறந்துடாதடா.. செல்விய இன்னிக்கி ஆஸ்பத்திரிக்கிக் கூட்டிட்டுப் போவணும்.. அக்கடான்னு கரண்டுக் கொட்டாயில குந்திக்காத.. சீக்கிரமா வந்து சேரு.. பத்தர பஸ்ஸுக்குக் கெளம்பணும்’’
எப்போதும் இப்படித்தான்.. வீட்டிற்குள் இருக்கும்போது ஏதோ வேலையாய் இருந்துவிட்டு தெருவில் இறங்கும்போதுதான் சத்தம் போட்டு பேசுவாள். எரிச்சலாக இருந்தது சேதுவுக்கு.
பைப்பிலிருந்து தண்ணீர் பொதபொதவென தொட்டியில் கொட்டிக்கொண்டிருந்தது. வாய்க்காலில் விழுந்து பாம்புபோல வழிந்தோடியது. நீர் சிதறித் தெறிக்கும்போது ஆனந்தமாக இருந்தது. ஓடிப்போய் தொட்டிக்குள் விழுந்து நீரைத் தழுவிக் கொள்ளலாமா என்றிருந்தது. அவனுக்கு குளிர் மிகவும் பிடிக்கும். வெப்பம்தான் ஆகாத ஒன்றாகியிருந்தது. அதுவும் செல்வியின் சூடு அவனை உருக்குலைத்துக் கொண்டிருந்தது.
செல்வியின் உடல் எப்போதும் கதகதப்ப்பாகவே இருக்கும். இரவுகளில் அருகே படுத்திருக்கும் அவள் உஷ்ண மூச்சு அவனது மீசையின் பூனை ரோமங்களைப் பொசுக்கி விடும்படி அனல் அலைகளை எழுப்பும். அப்போதெல்லாம் அவனது நெஞ்சு தடக்தடக்கென தண்டவாளத்தில் விரையும் கூட்ஸ் வண்டியாய் பாரம் கனத்து ஓடும். எப்போது பாய்ந்து கடக்குமென தெரியாது.
செல்வி குறுகிக் கிடப்பாள். அவன் விடும் குறட்டை ஒலி மட்டும் அவள் காதுகளை நிரப்பிக் கொண்டிருக்கும். அறைக்குள் தகிக்கும் வெப்பத்தால் தலையில் சூடிய இரவு மலர்கள் கருகிப் போயிருக்கும். காலையில் எழுந்ததும் முதல் வேலையாய் காய்ந்தப் பூச்சரத்தைக் கொண்டுபோய் குப்பத்தொட்டியில் வீசிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்து கொள்வாள். உள்ளே அவள் காறிக் காறித் துப்பிக்கொண்டிருக்கும் சத்தம் அவனுக்கு வெகுநேரம்வரை கேட்டுக் கொண்டிருக்கும்.
செல்வி குளிர்வாக இருந்தது கல்யாணத்தின்போதுதான். பட்டு சரசரக்க பக்கத்தில் வந்து அவள் அமர்ந்தபோது சேது வெட்கத்தில் நெளிந்தான். அவளது கைவிரல்கள் எதேச்சையாக பட்டபோது ஐஸ் கட்டியைத் தொடுவது போலிருந்தது. ஜில்லிப்பாக இருந்த மருதாணி பூசிய அவளுடைய மெலிந்த விரல்களும் வாசம் வீசும் உடலும் முதலிரவைத்தொடர்ந்து வந்த இரவுகளில் எரிமலைக் குழம்பாக மாறி வெடித்தது. அத்தீயின் வாட்டலுக்குப் பயந்து கட்டிலிலிருந்து கீழே உருண்டு மூலையோரம் பதுங்கிக்கொண்டான் சேது.
ஒவ்வொரு இரவும் செல்வி தொடர்ந்து தீயைக் கக்கிக் கொண்டேயிருந்தாள். அவன்தான் எரியூட்ட முடியாத வாழை மட்டையாய் தூங்கி எழுந்து பிணம்போல நடமாடிக் கொண்டிருந்தான்.
போன வருடம் ஒரு மழை பொழியும் நாளில் அம்மா இதே போல்தான் கத்திக் கத்திப் பேசினாள். செல்வியை ஆஸ்பத்திரியில் காட்டிவிட்டு வரவேண்டுமென.. எப்படி சொல்வதென அவனுக்குத் தெரியவில்லை.அம்மாவுக்கு நிஜமாகவே ஒன்றுமே தெரியாதா.. அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கிறாளா.
அவனுக்குப் பெண் தர யார்தான் முன் வந்தார்கள்..செல்வி தூரத்து உறவுமுறை. வசதி கம்மி.அவளுக்கு இன்னும் இரண்டு தங்கைகள் வேறு இருக்கிறார்கள். செல்வியின் அப்பாவிடம் சேதுவின் அம்மா நைச்சியமாகப் பேசி சம்மதம் வாங்கிவிட்டார். கல்யாணப்பேச்சின்போதே செல்விக்கு அவ்வளவாக விருப்பமிலையென்று சொல்லியும் பண்ணி வைத்துவிட்டார்கள். ஒரே பையன். சொத்து பத்து காடு கரைன்னு வசதியா வாழலாம் அப்படீ இப்படீன்னு செல்வியை ஒத்துக்க வைத்துவிட்டார்கள்.
ஊரில் முறை கொண்டாடும் சிலர் அவனை எப்போதும் கிண்டல் பண்ணியபடியே இருப்பார்கள். ‘’என்ன மச்சான்.. பொண்ணு மாதிரி நாணிக் கோணிக்கிட்டுப் போற..’’ டேய் சேது..உன் தங்கச்சி கூட ஆம்பள மாதிரி நிமுந்துக்கிட்டு நடக்கறா.. நீ குனிஞ்ச தல நிமிராம பூமி அதிராம பூன மாதிரி போறியே.. ஒன்ன மாதிரிதான் எம் மவனுக்கு பொண்ணு பாக்கணும்..’’ இன்னும் நிறைய.. அதெல்லாம் அப்பா காதுக்குப் போனதோ போகலையோ..பெண் பார்த்து செல்வியை அவன் கையில் பிடித்துக் கொடுத்த மறாவது மாதமே போய் சேர்ந்து விட்டார். அதன்பிறகு அம்மாதான் எல்லாமும்.
வருடமாகியும் செல்விக்கு ஒரு புழு பூச்சிக்கூட தங்கவில்லை.. அம்மாவுக்கு ஒரே கவலை..சேதுவின் முகத்தைப் பார்த்துப் பொருமுவாள்.
‘’வாயில்லாப் பூச்சியான எம் புள்ளைக்கி ஒரு புள்ள வரம் குடு சாமி..’’ அவள் வேண்டாத சாமியில்லை.. போகாத கோயிலில்லை.. செல்வியின்மீது அம்மாவுக்கு ரொம்ப பிரியம்… அவளை ஆஸ்பத்திரிக்கிக் கூட்டிப்போகச் சொல்லி நச்சரித்துவிட்டாள். அவனுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
செல்வி பரபரவென கிளம்பிக் கொண்டாள். ரோஸ் கலர் புடவை அவளுக்கு எடுப்பாக இருந்தது. ஜன்னல் வச்ச டிசைன் ஜாக்கெட்டும் மல்லிகைச் சரமுமாய் ரெடியாகிவிட்டாள்.
முகத்தில் பவுடர்பூச்சு தூக்கலாக இருந்தது. வாசனையாக இருந்தாள். எப்போதுமில்லாத ஒரு மெருகு அவள் முகத்தில் இழையோடியது.. அவனும் ஒரு வேஷ்டியைச் சுற்றிக்கொண்டு அம்மா கொடுத்தப் பணத்தைப் பையில் திணித்துக் கொண்டு பஸ் ஏறிவிட்டாள்.
செல்வி மூன்றுபேர் சீட்டில் பெண்களோடு உட்கார்ந்து கொண்டாள். அவன் மட்டும் தனியாக. அவளை பார்க்கும் போதெல்லாம் கண்களை மூடியபடியே தெரிந்தாள். அவனுக்கு பரிதாபமாக இருந்தது.
டிக்கெட் வாங்கிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். எதேச்சையாக கண் திறந்தபோது செல்வி அவனை வெறித்துக் கொண்டிருந்தாள்.மனம் குமைந்துபோனான் சேது.
ஏதும் பேசாமலே நடந்துவந்தாள் செல்வி. சேதுவுக்கும் பேச பயமாய் இருந்தது. பேசத்தான் என்ன இருக்கிறது.. நடை துவண்டது. திக்குத் தெரியாமல் பயணித்துக் கொண்டிருந்தான். அம்மாவீட்டிற்குப்போக வேண்டுமென சொல்லிவிடுவாளோ என்று நடுங்கியபடியே அவளுடன் நடந்துகொண்டிருந்தான்.
இப்போதெல்லாம் ஊரில் ஒரு வாரம் பத்து நாள் தங்கிவிட்டு வரவேண்டுமென தொணதொணக்கிறாள். அவள் வீட்டுக்கு எதிரில் போஸ்ட் ஆபீஸ் இருக்கிறது. அங்கு வேலை பார்க்கும் ராஜா மிகவும் அழகானவன்.. பலசாலியும்கூட. மாமியார் வீட்டுக்குப் போனால் வலிய வந்து பேசுவான்.
‘’என்னண்ணே.. அண்ணி நல்லா இருக்காங்களா.. ஏதும் விஷேசம் உண்டா’’ என்றபடி பேசிக்கொண்டிருப்பான்.. ராஜா வந்தவுடன் செல்வியும் வாசலில் வந்து உட்கார்ந்துகொள்வாள்.
ராஜா சேதுவோடு பேசிக்கொண்டிருந்தாலும் அவனுடைய கண்கள் செல்வியோடுதான் பேசிக்கொண்டிருக்கும்.. அந்த நேரத்தில் அவள் ஒரு மகாராணிபோல ஜொலித்துக் கொண்டிருப்பாள். முகம் பூரித்துப்போய் சிவந்து கிடக்கும். எழுந்து போய்விடலாமா என்றிருக்கும் சேதுவுக்கு. வெளியே பொங்கிப் பாயும் கானலில் பார்வை நிலைகுத்திக்கிடக்கும் அப்போது.
செல்வியும் சேதுவும் ஏதாவது பேசுவதாக இருந்தால் அதில் கண்டிப்பாக ராஜாவைப் பற்றிய செய்தி இடம்பெறாமல் இருக்காது. அவனுக்கு உள்ளூர வேதனைப் பொங்கும்..வெளிக்காட்டாமல் நகர்ந்துவிடுவான் சேது.
பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆஸ்பத்திரிக்கு போகும் வழி. ‘’போய்ட்டிருங்க.. இதோ ஒண்ணுக்கிருந்துட்டு வந்துடறேன்..’’ பின் தங்கினாள் செல்வி. சேது மெதுவாக நடக்க ஆரம்பித்தான். பூமியுள் நழுவி புதைவது போலிருந்தது.
பேருந்தின் இரைச்சல்கள், மனிதர்களின் குரல்கள் எதுவுமே காதில் விழவில்லை. தன்னந்தனியனாய் பயணித்துக் கொண்டிருந்தான். திரும்பித் திரும்பி பார்த்தபடியே போனான். சற்று தூரம் போனதும் நின்றுவிட்டடான்.
செல்வி வரவேயில்லை..’’இன்னுமா ஒண்ணுகிருந்து கொண்டிருப்பாள்’’ அவனுக்கு அழுகை வந்தது. யாரையாவது கட்டிப்பிடித்து அழவேண்டும் போலிருந்தது.
பஸ் ஸ்டாண்டிற்கே திரும்பி நடந்தான். பேருந்துகளில், கடைவாசல்களில், மூலை முடுக்குகளில் தேடிப் பார்த்தான். எங்கும் செல்வியைக் காணவில்லை.’’ ஊருக்கு பஸ் ஏறிவிட்டாளோ..அந்த ராஜாப்பய இங்க வந்திருப்பானோ.. அவனோடு கிளம்பிவிட்டளோ..அதுதான் ரோஸ் புடவையும் மல்லியும் பவுடருமா புறப்பட்டு வந்தாளோ’’
துவண்டு போய் வீடு வந்து சேர்ந்தான். அம்மாவும் மகனுமாக இரவு முழுவதும் அழுதபடி கிடந்தார்கள். முகமெல்லாம் வீங்கிப்போய் பாவமாக இருந்தாள் அம்மா.
கருக்கல் மறைவதற்கு முன் செல்வி வந்துவிட்டாள். செல்வியோடு அவள் பெரியப்பா பையனும் வந்திருந்தார்.. மோட்டார் சைக்கிளில் வைத்து கூட்டிவந்துவிட்டார். பொழுது பளபளவென விளக்கிவைத்த வெண்கலப் பாத்திரம் போல துலங்கி வந்தது.
செல்வி அழுதிருப்பாள் போல.. முகம் வீங்கியிருந்தது..திட்டியும் அடித்தும் இருப்பார்கள் போல. சேதுவைப் பார்த்ததும் தலை தாழ்த்தி விசும்பத் தொடங்கினாள்.
அன்றிலிருந்து செல்வியை டவுனுக்குக் கூட்டிப் போவதென்றாலே சேதுவுக்குக் கலக்கமாக இருந்தது. இன்று சோதனையாக போயே ஆகவேண்டும். இரண்டு நாட்களாக செல்வி வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள். அம்மாவுக்கு சந்தோஷம் தாளவில்லை. செல்வியைக் கொஞ்சித் தீர்க்கிறாள்.சேதுவை பெருமை பொங்க பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போகிறாள். டாக்டரிடம் காட்டுவதற்காக அவளை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போக வேண்டும்.
செல்வி அன்று போலவே ரோஸ் கலர் புடவையில் கிளம்பிவிட்டிருந்தாள். பவுடர் அப்பியிருந்த கன்னம் செழுமையாக பழுத்த தக்காளிபோல கனிந்திருந்தது. இதுவரை அதில் ஒரு முத்தம் கொடுத்துப் பார்த்ததில்லை அவன்.
மல்லிகைப்பூவும் கனகாம்பரமுமாய் மணமணத்த செல்வி அவனைப் பார்த்து சிரிக்கவும் செய்தாள்.. அதில் என்ன சொல்ல வருகிறாள்..’’இந்த முறை எங்கேயும் போயிடமாட்டேன்..பயப்புடாத..’’ சொல்லாமல் சொல்கிறாளோ.
இந்த முறை செல்வி ஓடிப்போகவில்லை.. சேதுவோடு ஆஸ்பத்திரி வந்து உட்கார்ந்திருந்தாள். சிறுநீர் பரிசோதனை செய்யக் கொடுத்திருந்தார்கள். டாக்டரின் அழைப்பிற்கு செல்வி காத்திருந்தாள்..
சேது வெளியில் விரையும் வாகனங்களில் மனதை அலையவிட்டான்.
டாக்டர் அழைத்தார் பஸ்ஸரை அழுத்தி. செல்வி உள்ளே போனாள்.
முள்மேல் உட்கார்ந்திருப்பது போல் பட்டது சேதுவுக்கு. இதயம் குதிரைப் பாய்ச்சலில் தாவிக்கொண்டிருந்தது. எழுந்து வெளியில் போனால் தேவலாம் போலிருந்தது.
சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய் விடலாமா என்று நினைக்கும்போது கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள் செல்வி. முகத்தில் சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது.
மெதுவாக வந்து சேதுவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். நீர் பரிசோதனை செய்த ரிப்போர்ட்டை அவனிடம் கொடுத்தாள்.
‘’நீங்க அப்பாவா ஆகப் போறிங்க..’’
சேதுவுக்கு கண்கள் இருண்டு போனது..தலைக்குள் வெடி வெடித்ததுபோல் இருந்தது. செல்வியின் கைகளைப் பற்றிக் கொண்டான் கெட்டியாக. குளிர்வாக இருந்தது அவளது கை.
சிரித்துவிட்டு டச் போனை எடுத்து யாருக்கோ சொல்ல எழுந்து தள்ளிப் போனாள் செல்வி.
***

சுப்பு அருணாச்சலம்.
நான், சுப்பு அருணாச்சலம் என்ற பெயரில் 1998 முதல் சிறுகதைகளும் கோகிலாராஜ் என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறேன். நெய்வேலி சொந்த ஊர்.
ரேகை பதிந்த வீடு எனது முதல் தொகுப்பு 2002 -ல் வந்தது. சுந்தரசுகன் எனது யுத்தம் என்ற முதல் கதையை வெளியிட்டது. பிறகு ஆனந்த விகடன், கணையாழி,செம்மலர், சதங்கை,தினமணி கதிர் முதலிய இதழ்களில் கதைகளும் கவிதைகளும் வெளிவந்தன.