எல்லா விஷேசங்களுக்கும்
அடர் அரக்குச் சிவப்பு முதல்
நீர்த்த அரக்குச் சிவப்பு வரை
நிறைய சட்டைகள் வைத்திருக்கிறான்.
நண்பர்களின் கேலிகளை அவன்
பொருட்படுத்துவதில்லை.
அவனது திருமணத்தில்
மணப்பெண்
அரக்குச் சிவப்பு நிறப் பட்டுப்புடவையணிந்திருந்ததில்
யாருக்கும் ஆச்சர்யமில்லை.
பிள்ளைகளின் பள்ளிச் சீருடைகளும்
அரக்குச் சிவப்பு நிறத்திலேயே அமைந்ததில்
பெருமகிழ்ச்சி அவனுக்கு.
விழா மேடையில்
அரக்குச் சிவப்பு நிற பொன்னாடையில்
அவன் முகம் கூடுதலாய்ப் பூரித்திருந்தது.
நேற்றிரவு புறவழிச்சாலையில்
அவனை மோதித் தள்ளிப் பறந்த வாகனததின் நிறம்
அரக்குச் சிவப்பாவென எனக்குத் தெரியவில்லை.
ஆனால்,
மின்மயானத்தில்
சரியாகப் பொருத்தப்பட்டு
அவன் தள்ளப்பட்ட நெருப்பறையின் நெருப்பு
அரக்குச் சிவப்பு நிறத்தில் சுடர்கிறது
2
நீ…
பிரிவுக்குப் பின்னான சந்திப்பில்
ஈர விழிகளில் மலர்ந்திருக்கும் பார்வை
தகித்த சாலை கைகளேந்திப் பருகும்
லாரி ததும்பும் குளிர் நீர்.
ஒரு விலைமகளின் கிறங்கி மூடும் கண்களில்
பதியும் முத்தம்.
பசித்த சின்னஞ் சிறு உதடுகள்
கவ்வி உறிஞ்சும் காம்பு.
பல நாட்களாய் திக்குத் தெரியாத காட்டின்
ஒற்றையடிப் பாதை.
இருசக்கர வாகனத்திலிருந்து
இருட் சாலையில் விழுந்து
கபாலம் திறந்து பரிதவிப்பனின்
தலை மேலேறி இறங்கும்
கன சக்கரம்.
++
ஜி சிவக்குமார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர்.வேதியியலில் முனைவர்
பட்டம் பெற்றுள்ளார்.தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி
இயக்குனராகப் பணி புரிந்து வருகிறார்.கவிதைகள், சிறுகதைகள்
எழுதுவதோடு,பயணங்கள் செய்வதிலும் புகைப்படம் எடுப்பதிலும்
விருப்பம் கொண்டவர்.ஆனந்த விகடன், கணையாழி, காணி நிலம்,புரவி
இதழ்களிலும், கொலுசு,கோடுகள் முதலான மின் இதழ்களிலும் இவரது
கவிதைகள் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. வெம்புகரி என்ற சிறுகதைத்
தொகுப்பு மற்றும் புல்லாங்குழல்களைச் சுவைக்கும்
யானை,ஆத்மாநாமின் கடவுள்,தோடுடைய செவியள் ஆகிய கவிதைத்
தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்