படித்துப் பல ஆண்டுகள் கடந்து மீண்டும் எடுத்துப் படிக்கையிலும் மனதுக்கு வெகு நெருக்கமாகவே இருந்தது தி. ஜானகிராமனின் நளபாகம் ‘நாவல். இப்படிக் கால நீளங்களுக்குப் பிறகும் வாசிப்பு உன்னதம் வழங்கி நிற்கின்ற நாவல்கள் குறைவுதான். முதல் வாசிப்பில் பரவசத்தையும் ஒரு இடைவெளி தந்து வாசிக்க அயர்ச்சியையும் தந்த கதைகளையும் நாவல்களையும் தனியே பட்டியலிடலாம். 70-80 களில் எழுதப்பட்ட எத்தனையொ கவிதைகளையும் இந்தப் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம். அந்தக் காலகட்டத்துக் கவிதைகளில் பலவும் இன்றைக்கு நிறம் வெளிறி மொழிகுன்றி சக்கையாகக் கிடக்கின்றன. ஆனால் கம்பனும் பாரதியும் தொடர்ந்து வந்த நவயுகக் கவிஞர்களும் ஜீவிக்கிறார்கள்.

படைப்பிலக்கியத்தைப் பொறுத்தவரை சிருஷ்டியின் போதே அதற்கொரு அமரத்துவ முத்திரை கிடைத்துவிடவேண்டும். ஆயுள் நிர்ணயத்துள் அது அடங்கிவிடக் கூடாது. காலத்தைக் கடந்து நிற்கக்கூடிய திராணிதான் அமரத்துவம். அது எழுதும் கைகளின் விசையை, அவர்தம் ஆன்ம விசாலத்தைப் பொறுத்தது. எல்லா எழுத்தாளனுக்கும் அது சித்திப்பதில்லை. ஜானகிராமனுக்கோ அது தொடக்கம் முதலே வசமாகிவிட்டிருக்கிறது. ஒரேசமயத்தில் இருதரப்பு வாசகனையும் வசீகரித்துவிடக்கூடிய விந்தை மிகு ஆற்றல் கைவரப் பெற்றவர் அவர்.

இரண்டு தரப்பு வாசகருக்கும் விருப்பமான எழுத்து? இது சாத்தியமா என்று கேட்டால், ஜானகிராமன் எழுத்தை, அதன் வாசகர் பரப்பைக் கணக்கிட்டு ‘சாத்தியமே’ என்று உறுதிப்படுத்த முடிகிறது. மோகமுள்ளை விருப்பமுடன் எடுத்துக் குத்திக்கொண்டு, சுகமாக இருப்பதாகச் சிலாகிப்பவர் அதிகம். அம்மா வந்தாளின் அலங்காரத்தம்மாள் குறித்த அதிர்ச்சியுடன் கூடிய கிசுகிசுப்புகள் நிறைய. இதற்கெல்லாம் ‘நளபாகம் நாவலும் விட்டதில்லை. ரங்கமணி, பங்கஜம் இவர்களுடன் காமேச்வரனும் நாவலுக்குள் பிரவேசிப்பதுதான் சுவாரசியம்.

ஜெயகாந்தனுக்கும் இருபக்க வாசகர் திரள் இருந்தது. இரு பக்க விமர்சகர்களால் ஜெயகாந்தன் ஒரேநேரத்தில் ஆராதிக்கப்பட்டும் நிராகரிப்புக்குள்ளாகியும் இருந்திருக்கிறார். ஜெயகாந்தனில் மேதாவித்தனமான பிதற்றல் அதிகம். கலாநேர்த்தி குறைவு. ஜெயகாந்தனை வாசிக்கும்போது வாசகன் தரிசிப்பது, கொஞ்சம் விவகாரமான கதையாடலையும் ஜெயகாந்தன் என்கிற ஆளுமையையும் தான். ஜானகிராமன், ‘தான்’ வெளியில் மறைந்துகொண்டு தன்னுடைய கதாபாத்திரங்களை நம்முடன் உறவாட விடுவார் – விட்டு, ஏக்கத்தையும் பெருமுச்சுக்களையும் கிளப்புவார்.

ஜானகிராமன் முதலில் ரசிகர். அந்த அழகியல் மனோபாவமே அவருடைய எழுத்தை நடத்திச் செல்கிறது. அவருக்குப் பெண்களும் அவர்களுடைய அங்க லட்சணங்களும் முக்கியம். பெண்கள் பெரும்பான்மை கொள்ளாத சிருஷ்டிகளே அவரில் குறைவு. அங்குலம் அங்குலமாக அவர்களை வர்ணிப்பதில் முழு உழைப்பைச் செலுத்தத் தயங்காதவர். நதியும் இசையும் பெண்ணும் காமமும் இயைந்த கலைஞன் அவர். ஆண்களின் பார்வையில் பெண்கள் மட்டுமல்ல, பெண்களின் பார்வையிலிருந்து ஆண்களின் உடல்களையும் அவர் ரசிக்கிறார் – நளபாகத்தில் பங்கஜம் மட்டுமல்ல, ரங்கமணி அம்மாளும் காமேச்வரனின் உடம்பைக் கண்களால் துழாவுகிறாள்.

‘நளபாகம்’ என்றால் அது சமையல் கலையைக் குறிக்கின்ற சொல், மகாபாரதத்தில் ‘நிடத’ நாட்டை ஆண்ட நளன், நீதிதவறாத. ஆட்சிக்குரியவன், கூடுதலாக சமைப்பதிலும் சமர்த்தன். சமையலில் நள பாகம், பீம பாகம் என இரண்டு வகை உண்டு. நள பாகம் நெருப்பால் உணவு சமைப்பது; பீம பாகம் சூரிய வெப்பத்தால் பொருட்களின் சத்து குறையாமல் சமைப்பது.

‘நள பாகம்’ ஜானகிராமனின் கடைசி நாவல். 1979 – ஏப்ரல் இதழில் தொடங்கி 1982 – ஜூலை இதழ்வரை ’கணையாழி’ யில் வெளிவந்த தொடர்கதை. 1982 – நவம்பரில் ஜானகிராமன் இறந்துவிடுகிறார். அவருடைய மரணத்துக்குப் பிறகு 1983- ஆம் ஆண்டு நளபாகம் நாவல் வடிவில் வெளிவந்தது. மோகமுள், அம்மா வந்தாள் போலவோ, அவருடைய பிற ஆக்கங்களைப் போலவோ ‘நள பாகம்’ பிரபலமடையவில்லை. நுட்பமான வாசகர்கள், விமர்சகர்கள் சிலர் ‘நள பாகம்’ நாவல் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்

தனக்குப் பிள்ளைப் பேறு வாய்க்காமல், இரண்டு பெண் பிள்ளைகளைக் தத்து எடுத்து, அவர்களுக்குத் திருமணம் செய்வித்து, அவர்களுக்கும் பிள்ளைப் பேறு தவறி, குழந்தைக்காக ஏங்கி, ஏதோ ஒரு நம்பிக்கையில் ‘யாத்ரா ஸ்பெஷல்’ ரயிலில்- சமையல்காரனாக இருந்த காமேச்வரன் என்பவனைத் தனது வீட்டில் கொண்டுவந்து அமர்த்துகிறாள் ரங்கமணி. அவன் அவர்களுக்கு சமைத்துப் போடுகிறான்; பூஜைகள் செய்கிறான். அவன் வந்த சில மாதகாலத்தில் ரங்கமணியின் மருமகள் பங்கஜம் கரப்பம் தரிக்கிறாள். அத்தனை காலமும் குழந்தை உண்டாகாதவள், காமேச்வரன் வந்ததும் எப்படிக் கருத்தரிக்கிறாள் என்கிற கேள்வி ஊரார் மத்தியில் எழுகிறது. காமேச்வரனை எல்லோரும் சந்தேகக் கண்கொண்டு காண்கிறார்கள். உண்மை என்னவென்று ரங்கமணிக்கும், பங்கஜத்தின் கணவன் துரைக்கும் தெரியும். ஆனாலும் காமேச்வரன் அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறான். இதுதான் நளபாகம் நாவலின் மையக்கதை.

ஜானகிராமன் இந்நாவலை நர்மதை நதிப் பிரவாகத்துடன் தொடங்குகிறார். அவருக்குப் பெண்களைப் போலவே சங்கீதத்தைப் போலவே நதிகளின் மீதும் அளவற்ற ஆர்வம். காவிரியின் ஆராதகர் அவர். இந்நாவலில் நர்மதா நதியை விதந்தோதுகிறார். ’நர்மதே சிந்து காவேரி கோதாவரி சரஸ்வதி கங்கே யமுனே சைவ ஜலேஸ்மின் சந்நிதிம்’ என்று அதற்கொரு சுலோகம் சொல்கிறான் காமேச்வரன். நர்மதைத் தண்ணீரில் சமைத்தால் நளபாகம் தேவாமிர்தா இருக்கும் என்கிறான். ‘இந்த நூற்றாண்டு நளன் ‘ என்று காமேச்வரனைப் புகழ்கிறார் நாவலில் வரும் நாயுடு. அவனும் யாத்ரா ஸ்பெஷல் ரயிலில் பயணிக்கின்ற எல்லோருக்கும் அவரவர் நாவுக்குத் தகுந்தாற்போல மொளகு ரசம், கொட்டு ரசம், கோஸ்க்ரூரா தொகையல், வத்தக் குழம்பு, கல்கண்டு பொங்கல் என்று வகை வகையாக ஆக்கிப் போடுகிறான்.

’உடம்பு கிடம்பு சரியில்லே, எதாவது ஸ்பெஷலாப் பண்ணிச் சாப்பிடணும்னு தோணித்து – பொரிச்ச ரசம், பொரிச்ச குழம்பு, மணத்தக்காளி வத்தல், வேப்பம் பூ ரசம் எல்லாத்துக்கும் சாமான் ரெடியா இருக்கு. சங்கோசப் படாம ஒரு வார்த்தை எங்கிட்ட சொன்னாப் போரும்’ என்கிறான்.

காமேச்வரனுக்கு ஒருகுருநாதர்- வத்ஸன். அவரும் ஒரு சமையல்காரர். ஆனால் தொழிலுக்குப் போகாமல். ஓம் காரேச்வரர் கோவிலில் மடைப்பள்ளி பரிசாரகராக சேவுகம் செய்தவர், நாவல் நெடுக காமேச்வரன் அவர் பெயரை உச்சரித்தபடியே இருக்கிறான். குருபக்தி என்றால் இப்படி இருக்கணும் என்று நமக்கு உணர்த்தி வைக்கிறான். ரங்கமணி அழுத்தமான’ கதாபாத்திரம். காசநோய்க்காரனைக் கல்யாணம் செய்துகொண்டு தேக ரீதியாக- எந்தச் சுகமும் காணாமல் ஐந்தே வருடத்தில் விதவையாகி, குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள மாமியாரால் வற்புறுத்தப்படுகிறாள்.

’மொதமொதல்ல ஒரு ஜீவன் கரையேறணும். அதுக்கு வருஷா வருஷம் பிண்டம் போடணும். இல்லாட்டி அது பசியில அலையும். அதோட மனசு ஆயாசப்பட்டுதுன்னா வம்சத்துக்குத் தானே கஷ்டம்’ என்று கூறும் மாமியாரிடம், ’எங்கே இருக்கு வம்சம்? வம்சம் உண்டாக்காம தான் போயிட்டுதே அந்த ஜீவன்’ என்று பதிலுக்கு கேட்கிறாள் ரங்கமணி.

அது யாரோட குத்தம்?’ என்று மாமியார் கேட்குமிடத்தில் ஜானகிராமன், ரங்கமணியின் மன ஓட்டத்தை எழுதுகிறார்.

’ரங்கமணிக்கு ஒரு வெறி வந்து ஆட்டிற்று. அரைப்புடவையை அவிழ்த்து, ரவிக்கையைக் கழற்றிவிட்டு நிற்கவேண்டும் போலிருந்தது. சராசரிக்குச் சற்று மிஞ்சின உயரத்தை, தன் உடம்பை, எலும்போடும் நரம்போடும் இழுத்துக் கட்டியிருந்த தசைக்கட்டை, அழுத்தத்தை, இரவின் அரைவயிற்று உணவையும் மீறி, மதர்த்திருந்த வளத்தை, மணிக்கட்டு உள்ளங்கைகளின் உரத்தை – அப்படியே தன் ஆகிருதி அனைத்தையும் நிமிர்ந்து நின்று விசிற வேண்டும் போலிருந்தது’

ரங்கமணி விசிறியிருக்கலாம். நானாக இருந்தால் விசிறவிட்டிருப்பேன். ‘பாருடி முண்ட என் உடம்பை உன் பிள்ளை கையாலாகாதவன் தெரியுமா உனக்கு?,’ என்று கேட்க வைத்திருப்பேன், ரங்கமணி கேட்கவில்லை. அங்கே தான் ஜானகிராமன் நிதானிக்கிறார். அது கால காலமாக மாமியார்களுக்கு அடங்கிப் பணிந்து மலடிப் பட்டம் சுமந்தலையும் மருமகள்களின் சாபக்கேடு. `எங்கே இருக்கு வம்சம்’ என்று கேட்டதே பெரிய விஷயம்.

தன் கணவனுடனான ரங்கமணியின் இரவுகள் பலனற்றவை. இயலாதவனிடம் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்புகளுக்கு என்ன நிவர்த்தி கிடைத்துவிடப்போகிறது.

நோயாளிக் கணவன் இரவில் படுக்கையிலிருந்து எழுந்து செல்லமுயற்சிக்கிறான். ரங்கமணி அவனைச் செல்லவிடாமல் அவனுடைய காலை தன் காலால் அழுத்திக்கொண்டிருக்கிறாள். வேண்டுமென்றே தான். பலம்கொண்ட மட்டும் காலை இழுத்துப் பார்க்கிறான் அவன். கால் நசுங்கிற்று. உதட்டை வாய்க்குள் மடக்கி முக்கிப் பார்த்துப் பார்த்து முடியாமல் கடைசியில் வாய் திறந்து பெருமூச்சுத்தான் வந்தது. அவள் சிரித்தாள். கடைசியில் இரக்கப்பட்டு காலைத் தளர்த்தினாள். எழுந்து போனவன் திரும்ப வராமல் ’காத்தே இல்லையே’ என்று கூடத்திலேயே படுத்து உறங்கிவிடுகிறான். காலை விடுவித்துக் கொள்ள அவன் பட்ட இரண்டு நிமிஷ சிரமம் இரண்டு சம்போக அயர்வாக இருந்ததோ என்னவோ என்று ரங்கமணி நினைக்கிறாள். என்ன ஒரு கிண்டல்?

நளபாகம் 319 பக்க நாவல். எனக்கென்னவோ 75 பக்கங்களைச் சுருக்கியிருக்கலாம் என்று படுகிறது. காமேச்வரன் நல்லூருக்கு ரங்கமணி வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகு, பசங்களுடன் சேர்ந்து காவேரி மணல் மேட்டில் சலாங் குடு விளையாடுவது, சீட்டாடுவது, இளங்கண்ணன் ஜகதுவுடன் சேர்ந்து அரசியல் குறித்து உரையாடுவது எல்லாம் அவனுடைய பாத்திரத்துக்குப் பொருந்தாத மாதிரி இருக்கிறது.

நாவலின் தொடக்க அத்தியாயங்கள் யாத்ரா ஸ்பெஷல் ரயிலிலும், புண்ணியத் தலங்களிலுமாக நிகழ்வதால் ஆன்மிகப் பயண அனுபவங்களை ஜானகிராமன் எழுதுகிறாரோ என்கிற மயக்கம் ஏற்படுகிறது. ஆனாலும் வாசிப்புச் சுவாரசியத்துக்குக் குறைச்சல் இல்லை.

காமேச்வரன் வீட்டுக்குள் வந்த பிறகுதான் ரங்கமணிக்கும், பங்கஜத்துக்கும் வாழ்வதன் அர்த்தம் பிடிபடுகிறது. அப்படி ஒரு ஆன்மிக ஒளி அவனிலிருந்து அவர்களுக்கு விகாசமடைகிறது. அதனால்தான் அத்தனை காலமும் பிள்ளைப் பேறில்லாமல் உழன்ற பங்கஜம் சூல் கொள்கிறாள்.

மோகமுள்ளை விடவும் ஜானகிராமனின் முக்கியமான சிருஷ்டி இது. மனிதர் கடைசிகடைசியாக வாசகர்களின் பெருமூச்சுகளை அள்ளிச் சென்றிருக்கிறார்.

000

கீரனூர் ஜாகிர்ராஜா

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இயங்கிவரும் கொங்கு மண்டலம் சார்ந்த முக்கியமான படைப்பாளி. 10 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 7 தொகை நூல்கள் என தமிழுக்குத் தனது வளமான பங்களிப்பை வழங்கியவர். தொடர்ந்து முழுநேர எழுத்தாளராக இயங்கி வரும் கீரனூர் ஜாகிர்ராஜா தஞ்சையில் வசிக்கிறார். கனடா இலக்கியத் தோட்டம் விருது, தி இந்து நாளிதழ் வழங்கிய Lit for life விருது, ஆனந்த விகடன் வழங்கிய இரண்டு விருதுகள் உள்ளிட்ட பல சிறப்புகள் பெற்றவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வருகை தரு இலக்கிய ஆளுமை யாகத் தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *