ஊருக்கு நடுவில் இருந்த சேந்து கிணற்றருகே எல்லோரும் கூடியிருந்தார்கள். அங்கிருந்த யாருக்குமே அங்கு ஒரு கிணறு  இருந்ததற்கான ஞாபகமே அப்போதுதான் வந்தது போல்  இருந்தார்கள். அந்த கிணற்றை பார்த்தபோது இதுல ஒருத்தன் இறங்கி தூர் வாருவான் என்பதே அவர்களுக்கு சந்தேகமாக இருந்தது. ஏன்னா அவ்வளவு பிளாஸ்டிக் பாட்டில்,கவர் செருப்பு,துணிமூட்டைகள் என அந்த கிணறே தேங்கிய சாக்கடையாய் இருந்தது.

  மழை இல்லாமல் ஊர் சனங்கள் குடிநீருக்காக சுத்து பக்கத்து ஊர்க்கெல்லாம் சென்று அல்லோலப்பட்டார்கள்.

       கிணற்றுக்குள் பார்த்தவர்கள் சலித்தபடி மூக்கை பொத்தியபடி  தள்ளிபோனார்கள். பெரியவர்களோட குரல்ல மட்டும் அந்த கிணற்றில்  தண்ணி எடுத்த கதைகளை பேசிக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் பெண்களும், குழந்தைகளும் என்னவோ நடக்கிறது என்று மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெறுமனே பேசிக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து மணி சட்டென கயிறு கட்டி உள்ளே இறங்கியதும் எல்லோரும் வாயடைத்து நின்றார்கள்.

   சனங்கள் கொஞ்ச கொஞ்சமாக கிணற்றை சுற்றி கூட ஆரம்பித்தார்கள். ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுவதை போல கிணற்றுக்குள் இருந்தவனுக்கு கயிறு,பிளாஸ்டிக் பக்கெட்,கோணிப்பை என அவரவர் வீடுகளிலிருந்து ஓடி போய் எடுத்து வந்து தந்தார்கள்.

   “டே பக்கெட்டு வச்சி குப்பைய அள்ளுடா”

   ”ஏம்பா அது சரிபட்டு வராது.சாக்குபையில கையிற கட்டி அள்ளுப்பா” என ஒவ்வொருவரும் தனக்கான யோசனைகளையும்,மணி மீதான பாதுகாப்பையும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பல முயற்ச்சிகளுக்கு பிறகு சில்வர் அன்னகூடையில் உள்ள இரு வளையங்களிலும் கயிறு கட்டி  குப்பைகளை எல்லாம் வெளியே எடுத்தார்கள். மேலே தேங்கி அழுக்கடைந்திருந்த தண்ணியில் சூரியன் தன முதல் வெளிச்சத்தை காட்டியது. தளும்பி அலையும் தண்ணியில் அந்த வெளிச்சத்தை பார்த்ததும் அங்கிருந்த எல்லோர் கண்களிலும் அக்கிணற்றுக்கான மீட்சி மட்டுமே தெரிந்தது. அக்கூட்டத்தில் ஒருவனாய் அன்பு நின்றிருந்தான்.

        அடுத்த நாள் கிணற்றில் தூர் வருவதற்கான கழி,கொம்பு,கயிறு தட்டு முட்டு சாமான்களை வாங்கி வர அன்பு ராதா அண்ணனுக்காக அவர் வீட்டு திண்ணையில் காத்துக்கொண்டிருந்தான். திண்ணையில் பாதி வரை  வெயில் ஏறியிருந்தது.இருட்டு படர்ந்திருந்த மீதி திண்ணையில் கூரை  சந்துகளிலிருந்து கசிந்த ஒளி ரவுண்டு ரவுண்டாய் சுக்கானி காயளவுக்கு தெரிந்தது.

தூரத்தில் சைக்கிளில் அவர் வருவதை பார்த்ததும் எழுந்து போய் ’வாங்கன்னா போலாமா?’ என்று அவசரப்படுத்தினான்.

அவர் கழனி  காட்டில் வேலை முடித்து வந்த களைப்பு அவர் சைக்கிளிலிருந்து இறங்கிய வாட்டத்திலியே தெரிந்தது.

”தம்பி மதியமாயிடுச்சி ஒரு வாய் சாப்பிட்டு வந்துடுறேன்” என்று சைக்கிளிலிருந்து தூக்கு வாளியை கழட்டி வீட்டுக்குள் போனவரை.

”வாங்கண்ணே டவுன்ல போய் பரோட்டா சாப்புட்டுக்கலாம்” என்று வண்டியில் கூட்டிக்கொண்டு போனான்

ராதா அண்ணன் கிணறு வெட்டும் வேலையில் இருந்தவர். நொசுவு, பாறை, தோட்டா வெடி என கிணறு தோண்டுவதற்கான நுட்பங்களை  தெரிந்தவர். மண் தோண்டும் லாவகங்களை போலவே மனிதர்களையும்  கையாள ஓரளவுக்கு தெரிந்தவர்.

அவலூர்பேட்டை ரோட்டில் உள்ள இரும்பு கடைக்கு போன போது  ஓலக்கடத்தில் சம்மட்டி போட்டுக்கொண்டிருந்த பாய் ராதா அண்ணனை பார்த்ததும் வாஞ்சையாக சிரித்தார். அதை பார்த்த அன்புவுக்கு அவர்களின் நெருக்கமான பழக்கமும்,அதே நேரத்தில் அவர்கள் மீது லேசான சந்தேகமும் அவனுக்குள் வந்தது.

  தூர் வாருவதற்கு மண்வெட்டி,ராட்டினம்,பிரி கயிறு,கொழு கொக்கி என ஒவ்வொன்றையும் கணம் பார்த்து எடுத்து வைத்துவிட்டு ’சரிய்யா இதுக்கெல்லாம் ஒரு விலை போட்டு சொல்லுய்யா’ என்று ராதா அண்ணன் சொல்லிய போது பாய் ஒவ்வொரு பொருளையும் எடுத்து பார்த்து மனதிற்குள்ளேயே கணக்கு போட்டு எட்டு நூறு என்று விலையை சொன்னார்.

   ’சரி தம்பி அந்த பணத்த கொடு’ என்ற போது அவனுக்குள் இருந்த சந்தேகம் வலுவடைந்து பணத்தை எடுத்து கொடுத்தான். அவனுக்குள் இது சரியான விலை தானா என்று குழப்பமாக இருந்தது

 வண்டியில் போகும்போது உச்சி வெயில் மண்டையை சுர்ரென்று அடித்தது. அடி வயிற்றில் இருந்த பசி மேலெழுந்து அவன் கண்களில் கோவமென எரிந்தது. ராதா அண்ணன் எதுவும் பேசாமல் பின்னால்  உட்கார்ந்து போனார்

  ஈசான்ய பாதையை தாண்டி சிறுவர் பூங்காவை ஒட்டியுள்ள மரத்துக்கு  கீழே கருத்து உரு திரண்ட பானை போல டயர் கூடைகள் யாருமற்று தனியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அன்பு வண்டியை நிறுத்தினான். அதில் முடுக்கியிருந்த போல்டு நெட்டில் வெளிச்சம் பட்டு அவன் கண்களை கூசவைத்தது. கொஞ்சம் தூரம் தள்ளி நிறுத்தியிருந்த ஆட்டோவிலிருந்து ஒருவர் இறங்கி வந்தார். அவர்தான் கடைக்காரர் என்று தெரிந்தது.

    ராதா அண்ணன் வண்டியிலிருந்து இறங்கி கூடையை திருப்பி கை வாரையும்,அடி திண்டையும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே விலையை அன்பு கேட்டான். அவர் பெரிய கூடை ஆயிரம் சின்ன கூடை ஐநூறு என்ற சொல்ல. அன்பு ராதா அண்ணனை பார்த்தான். அவர் பெரிய கூடை கையிலே இழுப்பதற்கு முடியாது அதனாலே சின்ன கூடையே போதும் என்று சொன்னார்.

   பேரம் துவங்கியது. அவர் நானுற்றி ஐம்பது சொல்ல அன்பு நானூரில் இருந்தான். சட்டென ’அண்ணே பொது கிணறுதான் தூர் வார்றாங்க  கொஞ்சம் கொறைச்சி கொடுங்க’ என்று ராதா அண்ணன் சொல்லியதும்  முன்னூற்றி ஐம்பது என்று விலையை சொல்லி கடைக்காரர் பேரத்தை முடித்தார்.

  அன்புவுக்கு இந்த பேரம் சந்தோஷமாகவே இருந்தது. ஆனால் அங்கே  ஒரு கூடை மட்டும்தான் இருந்தது. தூர் மாற்றி மாற்றி வாற இரண்டு கூடைகள் தேவையாய் இருந்தது. இன்னொரு கூடை பைபாஸ் கடையில் இருப்பதாக கடைக்காரர் சொன்னவுடன் அவர்களுக்குள் சந்தேகம் வந்தது. அங்கிருக்கும் கடையில் வாங்கி வந்து இங்கு அதிகமாக விற்பார்களோ என்ற சந்தேகம் வலுத்தது.

ரவுண்டான தாண்டி சின்ன கடை தெருவுக்குள் இருக்கும் மூன்று கடைகளில் வரிசையாக டயர் கூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்து போய் விலையை கேட்டார்கள். அவர்கள் சொன்ன விலையில் அதிர்ந்து மட்டும் போகவில்லை பின்னால் அந்த அண்ணன் சிரிப்பது போன்ற பிரமை தோன்றி திரும்பிபார்த்தான் அன்பு. ஆனால் அவர் இருப்பின் சாயல் மட்டும் அவனுக்குள் புள்ளியாய் தெரிந்தது.

    பசியின் காதுகள் துளைத்தெடுக்க அங்கிருந்து நகர்ந்து ஓட்டலுக்கு போனார்கள். பசி நிதானப்பட்டவுடன் கோபமில்லாத தொனியில் அன்பு கேட்டான். ’அண்ணே மீண்டும் அவர்கிட்டேயே போலாம்’ என்றதும் ராதா அண்ணனின் முகத்தில் சுரத்தில்லாமல் நின்றார். ‘சரிண்ணே  நான் போய் கேக்குறேன்’ என்று அன்பு அவரை நோக்கி போனான்.

  மேக மூட்டத்தில் சூரியன் மறைந்து லேசாய் வெயில் தணிந்திருந்தது. ஆட்டோவில் கண்மூடி சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அன்பு வண்டி அருகில் போனதும் அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் ‘ராஜா’ என்று அவரை தோளில் தட்டி எழுப்பினார். அன்புவை பார்த்ததும் எழுந்து வந்து ’வாங்க தம்பி நீங்க திரும்பி வருவீங்கன்னு தெரியும்’ என்று மட்டும் சொன்னார். அவர் கண்ணை பார்க்கவே அன்பு கூச்சப்பட்டான். அவர் பேச்சில் துளி கூட அகங்காரமோ,கோவமோ இல்லை. உழைப்பதை  பழகியது போலவே  மன்னித்து விடுவதையும் பழகியிருப்பார் போல என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

  வண்டி பைபாஸ் ரோடு தாண்டி ஆல்பா சீட் போட்ட குடிசை பகுதிக்குள்  போனது. இன்னும் கட்டிமுடிக்காத வீட்டுக்கு பக்கத்தில் தேய்ந்து போன ஆறு ஏழு லாரி டயர்கள் கிடந்தது. அதற்கு பக்கத்தில் பாதி முடிந்த டயர் கூடை ஒன்று அங்கிருந்த வெப்ப மரத்தடியில் இருந்தது  .

சாயந்திர சூரியன் அம்மரத்தில் மேகிளை வழியாய் தெரிந்தது. மரத்திலிருந்து விழுந்திருந்த வெப்பம் பூக்கள் அக்கூடையில் சிதறி கிடந்தன. கொஞ்சம் தள்ளி தனியாய் கிடந்த குண்டு கல்லில் ஒரு ஓணான் தலையசையாமல் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது. மரத்துக்கு  கீழே அறுத்து போட்ட டயர் கீத்துகள் தொடை உயரத்துக்கு குமிந்திருந்தன. அதிலிருந்து வந்த தீய்ந்த வாடை காந்தியது. காற்று கொஞ்சம் கூட  அசையாமல் இருக்க புழுக்கம் அவனுக்குள் வேர்வையை வரவழைத்தது. நடந்து குண்டு கல் பக்கம் போனதும் அங்கிருந்த ஓணான் தாவி கரம்புக்குள் ஓடியது. சாவகசாமாய் அதில் போய் உட்கார்ந்தான்.

    பார்த்துக்கொண்டிருக்கும் போதே கூடையை செய்வதற்காக  கத்தி,குத்தூசி,சுத்தி,ஸ்பேனர் என அத்தனை சாமான்களும் தரையில் விரித்திருந்த ஒரு சிமென்ட் சாக்கில் போட்டுவிட்டு வேலையை தொடங்கினார். அவரிடம் இதுவரை இருந்த ஏதோ ஒன்று விடுபட்டு வேகம் கூடியது போல் ஆகியது.

   ’தம்பி வேணும்னா ஒரு டீ சாப்பிட்டு வாங்க அதற்குள்ளே வேலையை முடித்து தந்துடுறேன்’

  ’பரவாயில்லன்ணா நா இங்கேயே இருக்கேன் நீங்க வேலையை பாருங்க’ என்று அன்பு சொல்லவும் ராஜா அண்ணனின் மனைவி தண்ணி எடுத்து வரவும் சரியாக இருந்தது.

   தண்ணியை கொடுத்துவிட்டு அவர் பக்கத்தில் போய் அமர்ந்தார். அவர் கேட்காமலேயே அவ்வேலைக்கான சாமான்களை ஒவ்வொன்றாய் எடுத்து கொடுத்துக்கொண்டிருந்தார்.

அதன் பிறகான பேச்சில் எந்த சுணக்கமும் இல்லை.

அவ்வேலை செய்து கொண்டே அன்புவின் வேலை, ஊர் பெயர் என அத்தனையும் தெரிந்து கொண்டார்.

 ”ஊர் கிணறா தூர் வார்ரிங்க?”

”ஆமாம்மா” என்றான் அன்பு.

ஒரு பெருமூச்சுக்கு பிறகு ’சாணியோ, பீயோ கரைக்காம பார்த்துக்குங்க தம்பி’ என்றார்.

அச்சொல் கேட்ட பிறகு ராஜா அண்ணனின் பார்வை நெடுஞ்சாலை எதிரில் இருக்கும் கழனி காட்டுப்பக்கம் ஒரு நிமிடம் நிலைத்து திரும்பியது.  அண்ணனின் கை நொடிக்கு நொடி அக்கூடையின் முழுமையை நோக்கி போய்க்கொண்டிருந்தது. இவ்வளவு துரிதமாக அவர் செய்கிற வேலையில் தவறாகாத நிதானம் ஒன்று அவனுக்கு தெரிந்தது. அது தொடர் பழக்கத்தால் மட்டும் வருவதல்ல அதையும் மீறின ஒழுங்கு அதில் இருந்தது. மூளைக்குள் பொறி தட்டி சுற்றி பார்த்தான். அவர் பேச்சில்,உடலசைவில்,கை,கால்,வேலையில், ஏன் அதில் உருவாக்கி வரும் கூடையில்,கீழே சிதறி கிடக்கும் சாமான்களில் கூட அந்த ஒழுங்கின் நுட்பம் முழுவதுமாக அவனுக்கு புலப்பட்டது.

  அன்பு பார்த்துக்கொண்டே இருந்தான். அக்கூடையின் ஒவ்வொரு பாகமும் சரியான ஒழுங்குக்கு வந்துக்கொண்டிப்பதை.

கூடையில் கைவார் இரண்டையும் இணைத்து போல்டு  நெட்டை முடுக்கிவிட்டு எழுந்த போது அவர் முகத்தில் ஒரு நிறைவு தெரிந்தது

   மறுநாள் காலை சுத்து கழியில் ராட்டினம் மாட்டி கிணற்றுக்குள் அன்பு  இறங்கிய போது பாதி கிணற்றில் கயிறு தாங்காமல் கயிறு அறுந்து  சுழட்டியபடி உள்ளே விழுந்தான். கிணற்றுக்குள் மூச்சு காற்று கிழே போக போக நினைவடுக்குகளில் கிணற்றில் விழுந்து இறந்து போனவர்களின் முகங்கள் ஓயாமல் ஓடிக்கொண்டிந்தது. இருள் கவிந்த பள்ளத்தில் அவன் மட்டும் தனியாய் போய்க்கொண்டிருந்தான். அந்த பாதையின் தூரத்தில் மெல்லிசான ஒரு சொல் மட்டும் எழுந்து எழுந்து பாடல் என விரிந்தது. துயரத்தின் கடைசி கானமாய் இருக்குமோ என்று அதை கூர்ந்து கேட்டான். அச்சொல் ஒலியில் இருந்து பிரிந்து இரண்டாய் ஆனது. இரண்டு பாடல்கள் இரண்டு குரல்கள் ஒன்றை ஒன்றை விகசித்தவாறு அர்த்தம் இல்லாமல் பாடியது. அப்பாடலுக்கான அர்த்தத்திற்க்குள் நுழைந்தான். காற்றில் அளவிட முடியாத அலைவரிசையில் அதன் லய பிசகு ஓடிக்கொண்டிருந்தது. நூறு நூறு மென் தடங்களாய் விரிந்து நின்ற தடத்தில் அப்பாடல் அர்த்தம் கொண்ட கணம் நெற்றியில் சிறிய வெளிச்சம் தோன்றியது. அதன் பிறகு அப்பாதை எங்கும் வெளிச்சம் மட்டுமே ஆகி பாடல்கள் காலை ஒலி போல தெளிவாய் கேட்டது. 

    அவன் கண் விழித்தபோது கிணற்றுக்குள் இருள் மொத்தமாக அடைத்திருந்தது. அவ்விருளில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அடி வயிற்றில் பயம் கோலி குண்டென உழன்று மேலேறியது. அவனுக்குள் இருந்த அத்தனை தைரியமும் பயத்தில் காலடியில் வழுக்கியது போல இருந்தாலும் உள்ளூர ஒரு சொல் மட்டும் மிஞ்சியிருந்தது. மேலிருந்து சனங்கள் பயத்தோடு கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவன் எழுந்து நின்றான். அவன் மேல் சிறு கீறல் கூட விழாமல் தப்பித்திருந்தான், கிணற்றாழத்திலிருந்து மேலே வந்த போது  சனங்களின்  முகத்தில் ஆச்சரியமும் சந்தோசம் மட்டுமே தெரிந்தது

 அன்பு கவுத்தி மலையை நோக்கி பார்த்தான். அதன் உச்சியில் கூர்மையின் வடிவம் தெளிவாய் தெரிந்தது.

 நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அக்கிணற்றில் இருந்த சேரையும்,சகதியையும்  டயர் கூடையில் இழுத்து வெளியே எடுத்து கொட்டினார்கள். 

குப்பைகள் மண்டி  பாழடைந்து போயிருந்த கிணறு தன் ஊற்றை ஒவ்வொரு துளியாய் கிணற்றுக்குள் சுரந்தது.

000

நான் திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவன். தொடர்ச்சியாக கனலி,தளம்,யாவரும் போன்ற இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அத்துடன் விவசாயப்பனியும்,சமூக பணிகளிலும் ஈடுபடுத்தியுள்ளேன். எங்கள் கிராமத்தில் குழந்தைகளுக்கான தும்பட்டான் என்ற நூலகமும் மாலை நேர பள்ளியும் நடத்தி வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *