ஒரு காட்டில் சிட்டுக் குருவி ஒன்று இருந்தது. சின்னம் சின்னமாய் அதற்கு நான்கு குஞ்சுகள் இருந்தன.
ஒரு நாள் சிட்டுக் குருவி, தன் குஞ்சுகளுக்குச் சோறு ஊட்டிக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் குஞ்சுகளில் ஒன்று, ‘அம்மா, அம்மா என்னால் வெயிலைத் தாங்க முடியவில்லை” என்றது.
உடனே மற்றொரு குஞ்சு, “அம்மா அன்று ஒரு நாள் மழை பெய்த போது நான் தெப்பமாய் நனைந்து விட்டேன்” என்றது.
“நேற்று இரவு பனியில் படுத்திருந்ததால் எனக்குத் தடிமன் பிடித்துக் கொண்டது” என்றது மூன்றாவது குஞ்சு.
இவற்றை யெல்லாம் கேட்டதும் சிட்டுக் குருவிக்குக் கவலை வந்து விட்டது. குஞ்சுகள் உடல் நலமாய் இருக்க என்ன செய்யலாம் என்று அது நினைத்துப் பார்த்தது.
கவலையோடு அது சிந்தித்துக் கொண்டிருப்பதைக் கண்ட நான்காவது குஞ்சு. “அம்மா, எங்களுக்கு ஓரு வீடு கட்டித் தா அம்மா!” என்று கூறியது.
இதைக் கேட்டதும் அந்தச் சிட்டுக் குருவிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. ஒரு சின்ன வீடு கட்டிவிட்டால் நன்றாக இருக்கும். வெயிலில் காயாமலும், மழையில் நனையாமலும், குளிரில் நடுங்காமலும், குஞ்சுகளோடு அந்த வீட்டில் இருக்கலாம். குஞ்சுகளுக்கும் காய்ச்சல் தடிமன் எந்த நோயும் வராது. கவலை ஒன்றுமில்லாமல் மகிழ்ச்சியோடு இருக்கலாம்.
இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்த அந்தச் சிட்டுக் குருவி உடனே வீடு கட்ட ஏற்பாடு செய்தது.
அந்தச் சிட்டுக் குருவி. சின்னஞ்சிறிய கூடை ஒன்றை எடுத்துக் கொண்டு வாய்க்காலுக்குச்சென்றது. வாய்க்கால் ஓரத்தில் இருந்த களிமண்ணை அந்தக் கூடை நிறைய அள்ளிக் கொண்டு வந்தது.
மறுபடியும் ஒரு வாளி எடுத்துக் கொண்டு அந்த வாய்க்காலுக்குப் போனது. வாளி நிறையத் தண்ணீர் கொண்டு வந்தது.
காட்டுக்குள்ளே கிடந்த சின்னச் சின்ன மரக்குச்சிகளை யெல்லாம் இழுத்துக் கொண்டு வந்தது.
களிமண்ணில் தண்ணீரை ஊற்றிக் குழைத்தது. குழைத்த களிமண்ணால் சுவர் எழுப்பியது. சுவரில் அங்கங்கே சன்னல் வைத்தது. குளிப்பதற்கும் சமைப்பதற்கும் தனித் தனியாய் அறை அமைத்தது. தனக்கும் நான்கு குஞ்சுகளுக்கும் தனித் தனியாய்ப் படுக்கையறை அமைத்தது. எல்லாம் சேர்ந்து இருப்பதற்கு ஒரு கூடம் அமைத்தது. வீட்டுக்கு வாசலும் வாசலுக்குக் கதவும் அமைத்தது. காய்ந்த இலை சருகுகளைத் தைத்து வீட்டுக்குக் கூரை வேய்ந்தது.
வீடு கட்டி முடிந்ததும், அந்தச் சிட்டு தன் குஞ்சுகளை அழைத்துக் கொண்டு அந்த மண் வீட்டில் குடியிருக்கச் சென்றது.
சிட்டுக் குருவிக் குஞ்சுகளுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி, “அம்மா கட்டிய வீடு, அம்மா கட்டிய வீடு” என்று சொல்லிக் கும்மாளம் போட்டன. அடிக்கொரு தடவை வீட்டுக்குள் போவதும் வெளியில் வருவதுமாக இருந்தன. அந்தக் அந்தக் குஞ்சுகள் தங்கள் அறைக்குள்ளே போய் இருந்தன; சிறிது நேரம் சென்றவுடன் வெளியில் வந்தன. வீட்டின் எதிரில் நின்று கொண்டு, ஒன்றையொன்று பார்த்து, “அழகான வீடு! இல்லையா?” என்று கேட்டுக் கொண்டன.
பகலெல்லாம் வெட்டவெளியில் போய் விளையாடித் திரிந்துவிட்டு இரவில் வீட்டில் வந்து அவை படுத்துக்கொண்டன.
அம்மாச் சிட்டும் அதன் குஞ்சுகளும் அந்த மண் வீட்டில் இன்பமாக இருந்து வந்தன.
ஒரு நாள் திடீரென்று அந்த அம்மாச் சிட்டு இறந்து விட்டது. சின்னச் சிட்டுக்கள் நான்கும் கவலையோடு இருந்தன. அம்மா தங்களை வளர்க்கப் பாடுப்பட்டவற்றை யெல்லாம் நினைத்து நினைத்து அழுதன. சிறிது கூடக் கவலை தோன்றாமல் அம்மா தங்களை வைத்திருந்ததை எண்ணிஎண்ணி ஏங்கின.
இனிமேல் நமக்கு அய்மாவைப் போல் அன்பானவர்கள் யார் கிடைக்கப் போகிறார்கள் என்று நினைத்துத் துன்பப்பட்டன. கடைசியில் ஒருவாறு மனம் தேறி அந்த மண் வீட்டில் இருந்து வந்தன.
ஒரு நாள் இரவில் இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. மழை பெய்ததால் வாய்க்காலில் வெள்ளம் பெருகியது. தண்ணீர், குருவிக் குஞ்சுகளின் வீடு வரை வந்து விட்டது. வீட்டுக் களிமண் சுவர் தண்ணீரில் கரைந்து வீடு இடிந்து விட்டது.
அந்தச் சிட்டுக் குஞ்சுகள் நான்கும் தத்தித்தடுமாறிப் பறந்து சென்று ஒரு மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டன. அன்று இரவு முழுவதும் மழையில் நனைந்து அவற்றிக்குக் காய்ச்சல் வந்து விட்டது. நான்கு குஞ்சுகளுக்கும் காய்ச்சல்! மருந்து கொடுக்க யாரும் கிடையாது. மருந்து இல்லாமலேயே மூன்றாவது நாள் காய்ச்சல் விட்டுவிட்டது.
“அம்மா கட்டிய வீடு மழையில் இடிந்து போய் விட்டது. இனி யார் வீடு கட்டித் தருவார்கள்? என்று அவை வருந்தின.
அவை இருந்த பக்கம் ஒரு காகம் வந்தது. அந்தச் சிட்டுக் குஞ்சுகள் காகத்தைப் பார்த்து “அம்மா கட்டிய வீடு இடிந்து விட்டது. இனி நாங்கள் என்ன செய்வோம்?’ என்று கேட்டன.
“எனக்கென்ன தெரியும்? நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என்று சொல்லி விட்டு அந்தக் காகம் போய்விட்டது.
பிறகு அந்தப் பக்கமாக ஒரு கிளி வந்தது. அந்தச் சிட்டுக் குஞ்சுகள் கிளியைப் பார்த்து, “அம்மா கட்டிய வீடு இடிந்து விட்டது. இனி நாங்கள் என்ன செய்வோம்?” என்று கேட்டன.
இப்படியாக அந்தப் பக்கம் வந்த எந்தப் பறவையும் அவற்றிற்கு ஒரு வழியும் சொல்லாமல் போய்விட்டன. கடைசியில் அந்தப் பக்கமாக ஒரு மயில் வந்தது, அந்த மயில் பார்ப்பதற்கு ஒரு தேவதை போல் அழகாக இருந்தது. அது தன் அழகான தோகையை ஆட்டி ஆட்டிக் கொண்டு வந்தது. அந்த மயிலைப் பார்த்தவுடன், அது எப்படியும் தங்களுக்கு ஒரு வழி சொல்லும் என்ற நம்பிக்கை அந்தச் சிட்டுக் குஞ்சுகளுக்கு உண்டாயிற்று.
அவை, அந்த மயிலைப் பார்த்து, “அம்மா கட்டிய வீடு இடிந்து விட்டது. இனி நாங்கள் என்ன செய்வோம்?” என்று கேட்டன.
அந்த மயில் அவற்றைப் பார்த்து ஒரு புன்சிரிப்புடன் பேசியது.
நீங்கள் உங்கள் அம்மாவைப் போல் தான் இருக்கிறீர்கள். உங்கள் அம்மா ஒருத்திதான். நீங்கள் நான்கு பேர். ஒருத்தியாக இருந்து அவள் வீடுகட்டி முடித்திருக்கிறாள். அதே செயலை நீங்கள் நான்கு பேரும் சேர்ந்து செய்ய முடியாதா? முயன்றால் முடியும்!” என்று அந்த மயில் சொன்னது. பிறகு அது போய்விட்டது,
இவ்வளவு நாளும் தங்களுக்கு இந்த எண்ணம் தோன்றவில்லையே! என நினைத்தபோது அந்தக் குஞ்சுகளுக்கு வெட்கமாயிருந்தது.
அன்றே அவை நான்கும் சேர்ந்து வீடுகட்டத் தொடங்கின. இரண்டே நாளில் வீடுகட்டி முடிந்தது. வீட்டுக்குள் குடிபுகும்போது “அம்மா கட்டிய மாதிரி அழகான வீடு” என்று அவை சொல்லிக் கொண்டன.
அந்த வீட்டில் அந்தச் சிட்டுக் குருவிகள் நெடுநாள் இன்பமாக வாழ்ந்தன.
சிட்டுக் குருவிகள் பாடிய பாட்டு :
அம்மா கட்டித் தந்தது போல்
அழகு வீடு கட்டிவிட்டோம்
சும்மா குந்தி யிருந்திருந்தால்
சுகமாய் வாழ முடிந்திடுமோ?
சின்னஞ் சிறிய பிள்ளைகளே!
சிட்டுக் குருவி கதை கேட்ட
பின்னும் தயக்கம் ஏனோ! நீர்
பேசா தெழுவீர்! செயற்படுவீர்!
முயற்சி இருந்தால் பிழைத்திடலாம்!
முன்னேற் றத்தைக் கண்டிடலாம்!
உயர்ச்சி பெறலாம் வாழ்வினிலே
உண்மைப் புகழும் அடைந்திடலாம்!
000
நாரா நாச்சியப்பன் 1950-ல், பணி நிமித்தம் பர்மாவுக்குச் சென்றார். அங்கு கப்பல்களுக்கு உணவுப் பொருள் வழங்கும் நிறுவனம் ஒன்றில் கணக்கராகப் பணி புரிந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் திரும்பினார். மணமானவர்.
நாச்சியப்பன் சிறார் இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் ‘முத்து’ என்ற சிறார் இதழை ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். இளைஞர்களுக்காக ‘இளந்தமிழன்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். தனது நூல்களை அச்சிடுவதற்காக ’நாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ்’ என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார்.
தமிழக அரசின் பாரதிதாசன் விருது (1990)
சிறுவர் இலக்கியப் பங்களிப்புக்காகத் தமிழக அரசின் பரிசு (1991)
சேலம் அறக்கட்டளைப் பரிசு – கீதை காட்டும் பாதை நூலுக்காக.
பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் பணமுடிப்பும் பாராட்டும் அளிக்கப்பட்டு தமிழக அரசால் சிறப்பிக்கப்பட்டார்.
மறைவு : நாரா. நாச்சியப்பன் 2000-ங்களுக்குப் பின் வந்த ஓர் ஆண்டில் காலமானார்.நாரா. நாச்சியப்பனின் நூல்கள், 2015-ல், தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.