நேரம் ஐந்து மணியைத் தாண்டியது.பள்ளிக்குடம் முடிந்து தட்டான்கள் பிடித்து விளையாடிக் கொண்டு வந்தான் காந்தி.பாலர் இல்லத்து வாசலைக் கூட்டிக் கொண்டு இருந்தா செவனிக்கெழவி.

ஏலேய் காந்தி, பள்ளிக்கொடம் என்னாயாரம் விட்டுச்சு, என்னாயாரம் வாரா. ஒங்கொப்பன் ஆத்தா,  நீ படிச்சு கலெக்டர் ஆகனும்னு சொல்லிட்டுப் போனாங்க. ஏம் பிள்ளைப் படிச்சுப் பெரியாளாகி, அறைத் துட்டுனாலும் அரசாங்கத் துட்டு வாங்கனும்னு  சொன்னாங்க. நீ ஊரு சுத்திட்டு வாரா. சீக்கிரம் போய், மூஞ்சி மொகறையை கழுவிட்டு வா. ரொட்டித்துண்டும் காபித்தண்ணியும் எடுத்து வச்சிருக்கேன் வந்து எடுத்துக்கோ”.காந்திச் சிரித்துக் கொண்டே வேப்பமரத்தடிக் குழாய்க்குப் போனான்.

இலையுதிர் காலம் தொடங்கிய நேரம்,வேம்பு இலைகளை உதிர்த்து விட்டு மாரு மாராக எலும்பும் தோலுமாய் இருந்தது. செம்போத்துக் குஞ்சு ஒன்றைத் தூக்கி வந்து வேம்பின் உச்சியில் ஒக்கார்ந்தது வலசார பறவை. காந்தியைக் கண்டதும் செம்போத்துக் குஞ்சை விட்டது. மரத்தின் உச்சியில் இருந்து தொப்பொன்று விழுந்தது. காந்தி வேகமாக ஒடி செம்போத்துக் குஞ்சைத் தூக்கினான்.

காயங்கள் இல்லாமல் தப்பித்திருந்தது. தண்ணியைக் கையில் வைத்து வாயில் ஊத்திவிட்டான். மெதுவாகத் தண்ணீரை உறிஞ்சிக் குடித்தது. செம்போத்துக் குஞ்சை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு செவனிக்கெழவியிடம் போனான்.

”ஏலேய், என்னத்தடா கொண்டாரா”.

“செம்போத்துக் குஞ்சு பாட்டி, வலசார தூக்கிட்டுப் போனது, நம்ம வேப்பமரத்தடியில போட்டுவிட்டுப் போயிருச்சு.”

“ஏலேய், காந்தி   பச்சக் குஞ்சா இருக்கேடா! எறை திங்கிதா”

“இல்ல பாட்டி. தண்ணி மட்டும் குடிச்சிச்சு”.

 செவனிக்கெழவித் தவிட்டை அள்ளித் தண்ணியிலக் கரைச்சு செம்போத்துக் குஞ்சுக்குப் பசியமத்தினாள். காந்திக்குச் செம்போத்துக் குஞ்சைச் செவனிக்கெழவியிடம் விட்டுவர மனமில்லை. வார்டன், ’காந்தி’ என்று ‌கூவினார். காந்தி வேகமாக ஓடினான்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை பாலர் இல்லத்து வாசலில் பாட்டிகளும், தாத்தாக்களும், அம்மாக்களும், அப்பாக்களும், அக்காக்களும், மாமாக்களும், குவிந்து கிடப்பார்கள். சங்கையாவும் பொன்னுமாரியும் காந்தியைப் பார்க்க நின்று கொண்டு இருந்தனர். சங்கையா போதையில் மிதந்தான். பச்சநெல்லுச் சோறும்,கோழிக்குழம்பும் வைத்துத் தூக்குச்சட்டியில் கொண்டு வந்திருந்தாள் பொன்னுமாரி. அம்மையையும் அப்பனையும் பார்த்ததும் வேகமாக ஒடி வந்து கட்டிப்பிடித்து அழுதான். பொன்னுமாரி, முந்தாங்கிச் சீலையில் கண்ணீரைத் துடைத்து விட்டு  அணைத்தாள்.

புங்கை மரத்தடிக்குச் சென்றனர் மூவரும். காந்தி வாழைத்தோட்டத்தில்‌ எலையைக் கிள்ளி வந்தான். பச்சநெல்லுச் சோறும் கோழிக்குழம்பும் தீரும் வரை வயிற்றை நெப்பினர்.  புங்கை மரத்தடியிலே பொழுதைக் கழித்தனர்.  மணி அடித்தது. போதையில் முத்தியிருந்தான் சங்கையா.

வார்டன் வந்ததும், ’யாரு இவர உள்ள விட்டது?’

சங்கையா போதையில்,“ஏன் பிள்ளையைப் பார்க்க யாருகிட்ட அனுமதி வாங்கனும்”. 

வார்டன் கோபத்தின் உச்சிக்குச் சென்றார். ”யாருகிட்டயும் அனுமதி வாங்க வேணாம். ஒம் பிள்ளையை, நீயே வச்சுக்கோ”.. கூட்டிட்டுப் போ”. வாக்குவாதம்  பெருந்தீயாய் பரவியது.

பொன்னுமாரி,  வார்டன் காலில் விழுந்து அழுது புரண்டாள். சங்கையாவை செருப்பால் அடித்தாள். செவனிக்கெழவி வந்ததும், “ஏம்மா குடிகாரனா இருந்தாலும் கட்டுன புருசன இப்படியா அடிப்பாக”

“நித்தம் குடிச்சுப்பிட்டு வந்து என் உசுர எடுக்கிறான். இன்னைக்கு பள்ளிக்கொடத்துக்கு வந்தும் இப்படி ரகளை பன்னுனா, நான் என்ன பன்னுறது?”.

தள்ளாடிக் கொண்டு இருந்த சங்கையாவைக் கைத்தாங்கலாக வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் பொன்னுமாரி. காந்தி அழுது கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான்.

பொன்னுமாரி களைக்கொத்தோடு காலையில் கிளம்புறவ பொழுதடைஞ்சாத்தேன் வீட்டுக்கு வருவாள். தவசப் பானைக்குள்ளச் சேர்த்து வைக்கும் காசுகளைப் பூராவும் சங்கையா களவாடிட்டுப் போய்க் குடிச்சிட்டு வந்திடுறான். நெத்தம் சங்கையாவிடம் அடிவாங்கி அடிவாங்கி பொன்னுமாரிக்கு ஒடம்பு அழுத்துப் போனது.

 “ஒத்தப் பொம்பளப் பிள்ளைதான் வீட்டுல இருந்து படிக்கிது. அதையும் அனாதை இல்லத்திலுச் சேர்த்து விட்டுத் தூக்குப்போட்டுச் செத்துப் போயிருவேன்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு இருந்தாள் பொன்னுமாரி.

”நான் செத்துப் போனா, நீ நடுத்தெருவுல நிக்கனும்.சோத்துக்கு வீடு வீடாக பிச்சையெடுக்கனும்”.

ஒரு நாள் ராத்திரி நடுச்சாமம், சங்கையா முழுப் போதையில் வந்து கதவைத் தட்டினான். சங்கையாவின் அப்பா செம்பட்டையன் கதவைத் திறந்தார்.

சங்கையாவின் அம்மை கட்டிலில் படுத்து எறங்கினாள். பொன்னுமாரி அடுப்படியில் ஒறங்கினாள்.

”அடியே பொன்னுமாரித் தேவிடியா, ஒங்க மாமன் கூட பேசிக்கிட்டுத் திரிகிறயாம்ல, ஊருக்குள்ள பேசிக்கிறாங்க”.

”ஏலேய்!ஒன்னய்ய மாதிரியா நான் தேவிடியா குடிகிட்ட போய்ட்டு வாரேன். சொந்த பந்தங்களோட‌பேச‌க் கூடாதா?.  ஒன் சந்தேகப் புத்தியில எங்கேயும் வேலவெட்டிக்கு போக முடியல.ரொட்டிக் கம்பெனிக்கு வேலைக்குப் போனா மேனேசர் கூட தொடுப்பு வச்சிருக்கேன்னு சொல்லுற. சித்தாள் வேலைக்குப் போனா கொத்தனார சேர்த்து வச்சிருக்கனு பேசுற. நான் எந்த வேலைக்கும் போகல. நீ சம்பாரிச்சு குடுடா, நீ ஆம்பள தான, ரெண்டு பிள்ளைகள் இருக்குல” நீ போய் சம்பாரிச்சிட்டு வாடா”.

”நான் வேலைக்கு போகல”.

சங்கையாவுக்குப் போதைக் கொறைஞ்சது. வெறகுக் கட்டையை எடுத்து பொன்னுமாரி மண்டையை ஒடைச்சு விட்டுட்டான் சங்கையா.

இளநேரம் ரெத்தம் பெருகி ஓடியது. செம்பட்டையன் மகன் சங்கையாவை தூணுக்கல்லில் கொச்சைக்கயிற்றில் இறுக்கக் கட்டினான்.

பொன்னுமாரியைத் தர்மாஸ்பத்திரிக்கு கூட்டிட்டு ஓடினர். பொன்னுமாரி மயங்கி விழுந்தாள்.

‌எந்தச்சாமிச் செய்ஞ்சப் புண்ணியமோ, நடுராத்திரியில் தர்மாஸ்பத்திரியில டாக்டரு‌ இருந்தாரு. ஒரு வழியாக பொன்னுமாரி பிழைத்தாள். 

பொன்னுமாரி வீட்டாருக்கு சேதி தெரிஞ்சது. அரிவாள், கம்போடு லாரியில் வந்து எறங்கினர். பொழுது விடிஞ்சு கதிரவன் நிமிர்ந்து கொண்டு இருந்தான். சங்கையா போதைத் தெளிந்து ஒன்னுந்தெரியாதவனைப் போல இருந்தான். பொன்னுமாரியின் உறவுக்காரர்கள் சங்கையாவை அடித்து வெளுத்தனர்.

காலம் முழுக்க எம்பிள்ளையைச் சந்தேகப் பட்டே அடிச்சுப் பாடாய் படுத்துறான். இனிமேப்பட,“ஒனக்கும் எம்பிள்ளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பொம்பளப் பிள்ளயை, நாங்க வளர்த்தெடுத்து ஆளாக்கிப் பார்த்துக்கிறோம். ஆம்பளப் பிள்ளையை நீ பாக்கிறதுனா பாரு, இல்லாட்டி நாங்களேப் பாத்துக்கிறோம்”

சங்கையாவின் அம்மையும் அப்பனும் பொன்னுமாரி காலில் விழுந்து அழுதனர். ”எங்கள மன்னுச்சிரு தாயி.போதைக்கு அடிமையாப் போயிட்டான். இவன ‌அடிச்சுப் பார்த்தும் இவன் திருந்தல. நீ ஒங்கப்பன் ஆத்தா வீட்டுலப் போய்,நிம்மதியா இரு தாயி”.

பொன்னுமாரி மச்சு வீட்டுக்குள்ளப் போய் தவசப் பானைக்குள்ளச் சேர்த்து வைத்திருந்தக் காசுகளை அள்ளிச் சங்கையாவின் அப்பா‌ செம்பட்டையனிடம் கொடுத்துவிட்டு,“எம்மகன நல்லா பாத்துக்கோங்க மாமா” என்று கண்ணீரை வடித்து விட்டு உறவுக்காரர்களோடு வண்டியில் ஏறிக் கிளம்பினாள்.

முழுப் பரீட்சை முடிந்து லீவு ஆரம்பித்தது. பாலர் இல்லத்துல இருந்து எல்லாப் பிள்ளைகளும் ஊருக்குச் சென்று விட்டனர். காந்தி மட்டும் இருந்தான். வீட்டுக்குக் கடிதம் அனுப்பியும் யாரும் வரவில்லை.

மூனு நாள் கழித்துச் செம்பட்டையன் தாத்தா, வெள்ளாட்டங்கறி வாங்கி ஆக்கி, தூக்குச் சட்டியோடு வந்தார்.

பாலர் இல்லத்து வாசலில் நின்று செவனிக்கெழவியிடம் பேசிக்கொண்டு இருந்தார். காந்தி உள்ளிருந்து தாத்தானு ஓடி வந்தான்.

 “அம்மா வரலயா தாத்தா”

“அம்மை ஊருக்குப் போயிருக்கா. ஊருல எழவாம். அதான் நான் வந்தேன்.” செம்பட்டையன் தாத்தா தூக்குச் சட்டி நெறைய சோறும் வெள்ளாட்டங்கறியும் கொண்டு வந்திருந்தார். செவனிக்கெழவி சமையலறையில் பாத்திரம் கழுவிக் கொண்டு இருந்தாள்.

”பாட்டி இந்தா சோறு, தாத்தா குடுக்க சொன்னாரு. நல்லா சாப்பிடு பாட்டி. வெள்ளாட்டங்கறி பாட்டி”.

“ஏலேய் காந்தி, அந்த அலமாரியில வச்சிட்டுப் போ நான் பெறகு சாப்பிட்டுக்கிறேன்”.

இன்னைக்கு ஊருக்குப் போகும் சந்தோசத்தில  இருந்தக் ‌காந்தியைப் பிடிக்க முடியல. தகரப்பெட்டியில துணிகளை அள்ளிப் பூட்டி வைத்திருந்தான் காந்தி.

செம்பட்டையன் தாத்தாத் தலையில் தகரப்பெட்டி வச்சிக்கிட்டு, காந்தியைக் கையில பிடிச்சபடி வீடு வந்து சேர்ந்தனர். காந்தியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள் பாட்டி. ’அம்மா எங்க பாட்டி, அப்பா எங்க பாட்டினு’ வீட்டைச் சுற்றினான்.

செம்பட்டையன் தாத்தாவும், பாட்டியும் எப்படிச் சொல்வார்கள் நடந்த பிரச்சினைகளை. காந்தியைக் கட்டிப் பிடித்து அழுதார் செம்பட்டையன் தாத்தா. “ஒங்க அப்பன் போதை அடிச்சுப்பிட்டு வந்து, நெத்தம் படுத்துன கொடுமையில ஒங்க அம்மை தாலி தீர்ந்திட்டுப் போயிட்டா. தங்கச்சியையும் கூட்டிட்டுப் போயிட்டா”.

மச்சு வீட்டுக்குள்ளப் போய் ஒக்கார்ந்து, அம்மையின் முகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான் காந்தி.

++

அய்யனார் ஈடாடி

மதுரை மாவட்டம், மாடக்குளம் அருகிலிருக்கும் தானத்தவம் எனும் கிராமத்தைப்  பூர்வீகமாகக் கொண்டவர். வேதிப் பொறியியல் துறையில் பி.டெக்  பட்டம் பெற்றவர். தற்போது தொழில் முனைவோராக உள்ளார்.

கல்லூரிக் காலத்திலேயே படைப்புகளை எழுதத் தொடங்கியவர். வேளாண் தொழில் குடும்பப் பின்புலமும், தமிழின்  மீதான பற்றாலும், இயற்கையின் கொண்டிருக்கும் அதீதக் காதலாலும் கவிதைகளைப் படைப்புகளாக வடித்தெடுக்கிறார்.

ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதை நூலை 2022லும் , மதுரை வட்டார கிராமத்து எளிய மக்களின் பாடுகளையும் , வரலாற்று சரித்திரத்தையும்

எனதூர் சரித்திரம் எனும் சிறுகதை நூலாக தொகுத்து 2023ல் வெளியிட்டிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *