கண்கள் தூங்குவதுபோல இருந்தாலும் உண்மையாகவே தூங்கவில்லை. ஏதேதோ குழப்பமான சிந்தனைகளிடையே, வெற்றுத்தரையில் எதுவும் விரிக்காமல் இடது கையை தலைக்கு அண்டக்குடுத்து, துணிமணிகள் வைத்திருந்த கட்டப்பையை கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தார் செல்வம்.

பஸ்களின் ஹாரன் சத்தம், மக்களின் காலடி சத்தம், கண்டக்டர்களின் சத்தம் என எல்லாம் சேர்ந்து கலவை ஒலிகளாக கேட்டன.

  திடீரென்று தலைமாட்டில் வந்த நெருக்கமான சத்தத்தைக் கேட்டு சட்னு  மூடியிருந்த இமைகள் பிரிந்தன. படுத்துக்கொண்டே கண்களை உருட்டிதெரட்டி இடப்பக்க கோடியில் வைத்து பார்த்தார் செல்வம்.

அழுக்குப்படிந்து முகம்,கிழிந்த சட்டை, சடைபிடித்த தலைமயிர், ஒழுங்காக கட்டாத சேலை, கைநிறைய கலர்கலரான வளையல், நீண்ட நாள் குழிக்காத உடல், பையில் ஏதேதோ கிழிந்த பேப்பர் கொண்ட -மனநிலை சீரழிந்த பெண் உருவம் நிலக்கடலையை உடைக்காமலே தொளியுடன் அப்படியே வாயில் போட்டு மென்னுகொண்டிருந்தது. கடவாயில் வெள்ளேரென்று சாறு வடிந்திருந்தது.

இரவெல்லாம் சரியாக துங்காததால் ஊறுகாய் நிறத்திலிருந்த செல்வத்தின் கண்கள் திகுதிகுவென எரிந்தன. கண்களை கசக்கிவிட்டு நன்றாக பார்த்தார். அந்த உருவம் செல்வத்தின் காலடியில் கொட்டிக் கிடக்கின்ற நிலக்கடலை சுருட்டைப் பார்த்தது. செல்வம் டக்னு அந்தச் சுருட்டை எடுத்து தூக்கிப் போட்டார். செல்வத்த பார்த்து சிரித்தது அந்த உருவம். பதிலுக்கு சிரிக்காமல் உம்முனு இருந்தார். இடத்தைவிட்டு நகர்ந்துபோனது  அந்த உருவம்.

  அடுத்து என்ன பண்ண… ஏது பண்ண.. என்ற குழப்பம் கூடியது செல்வத்துக்கு. எதார்த்தமாக டீக்கடையின் மேற்கூரையிலிருந்த ப்ளக்ஸ் பேனரைப் பார்த்தார் செல்வம். ஒரு நடிகையும்-ஒரு நடிகரும் கையில் தேநீர் கோப்பையுடன் இருக்க, அதற்கு கீழே “வசீகரா தேநீர் கடை” என எழுதியிருந்தது. அங்கிருந்து கண்களை நகட்டி பக்கத்து கடையின் மேற்கூரையின் மீதுள்ள ப்ளக்ஸ் பேனரைப் பார்த்தார். இரு குழந்தைகள் கையில் புத்தகத்துடன் இருக்க “சேது புக் சென்டர்’ என எழுதியிருந்தது.

‘ப்ச்னு’ மனதினுள் ஒரு வெறுமையுடன் இந்த இடத்திலெல்லாம் எவ்வளவு ஆர்ட் ஒர்க் நடக்கும்.. எந்த விளம்பரத்திற்கும் நம்மள மாதிரி ஆர்ட்டிஸ்ட் வந்துதான வரைஞ்சு கொடுப்பாங்க, எழுதுவாங்க… .சாப்பிட நேரமிருக்குமா அப்பையெல்லாம்… !

 முன்னையெல்லாம் தொழிலு நல்லா நடந்ததனாலே கைநெறைய செல்வம் இருந்தது. ஆனா இப்ப பேருல மட்டும்தான் செல்வம் இருக்கு..! கையில…? என்னத்தச்சொல்ல எல்லாம் தலவிதி. கையில காசிருந்தா-எனக்கு பெறந்த நோனி ஏந்தொழில இழிவா பேசிருப்பானா..!

‘பூனை மெலிஞ்சுபோச்சுனா எலி வங்கனத்துக்கு கூப்பிடுமாம்’ அது மாதிரிதான் நம்ம நெலம ஆகிப்போச்சு…. ‘இப்படி ஏதேதோ நினைப்பு செல்வம் மனதிலோடியது.

 கண்ணிலிருந்த பீளையை எடுப்பதற்காக வலது கையை கண்ணருகே கொண்டுபோனவர், திடீரென்று கையை கீழே இறக்கி சிறிதுநேரம் பார்த்தார். “எண்ணே மத்தவங்க கை வெரலுக்கு தங்க மோதிரத்த போட்டாதான் கௌரவம் வரும் -ஆனால் ஓங்கை வெரலுக்கு தங்கமோதிரத்த போடாட்டாலும் கௌரவம்தான் வரும்.. ஏன்ன ஓங்கைவெரலு சாதாரணமானதில்ல ஓவியம் வரைகிற வெரலு..’ என்று என்றோ பால்பாண்டி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அதை இப்போது நினைக்கும்போது அவலச்சிரிப்புதான் வந்தது செல்வத்துக்கு.

இப்படியே தெரிந்தால் என்னாகப் போகுது. ஏதாவது வேலைக்குப் போனாத்தானே நல்லது. ஏதோ ஒரு கட்டத்தில எல்லாத் தொழிலும் அழியுற மாதிரி நம்ம தொழிலும் -இந்த ப்ளக்ஸ் பேனர் வந்ததும் முன்ன மாதிரி இல்லாமப் போச்சு. அதனால நம்ம நெலம இப்படியாகிப் போச்சு. இனி அடுத்த ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்ற சமாதானப் புலம்பல் செல்வம் மனதிலோடியதும்- நிமிந்தாள், சித்தாள் வேலைக்குப் போகலாம் என்ற நினைப்பு வந்தது. 

                வீட்ல இருக்கும்போது கொத்த வேலைக்கு போயிருந்தாக்கூட மகனோட சண்டை வந்திருக்காது. நாம வீட்ல இருக்கப்போயி -அவன் நமக்கு வேலை விசாரிக்க என்று ஆகி கடைசியில் மகனோடு சண்டை வந்ததை நினைத்ததும், ஞாபகம் பின்னோக்கிப் போனது செல்வத்துக்கு.

 ஆர்ட்டிஸ்ட் வேலை முன்ன மாதிரி இல்லாததால், ஊரின் முகப்பில் உள்ள டீக்கடைக்கும், வீட்டுக்குமாக இருந்தார் செல்வம். செல்வத்தின் வயதொத்த பெரும்பாலனாவர்கள் கொத்தனார் வேலையையும், கல்குவாரி வேலையையும் பழகியிருந்தார்கள். அவர்களிடம் தயங்கியபடியே வேலைக்கு கேட்டுவிட்டு, வீட்டுக்கு போனதும் முடிவை மாற்றிக்கொள்வார். நாளைக்கு வேலைக்கு போகலாமென்று. இப்படியே நாட்கள் செரிக்காமல் நகர்ந்தன.

பெருமாள் கோவிலின் முன்புறம் இரும்பு போர்டில் வரையப்பட்டிருந்த என்பது,தொண்ணூறு காலத்து பிரபல நடிகரின் சாயம்போன ஓவியத்தை பட்டும் படாமல் பார்த்துக்கொண்டேபோவார். அந்த ஓவியத்தின் இடதுபுறம் ‘அன்னை’ ஆர்ட் என்று எழுதியிருக்கும். அதைப் பார்த்ததும் செல்வத்திற்கு கண் கலங்கிவிடும்.

             பார்வதி இருந்தாவது தீப்பெட்டி கம்பெனி, காடு கரை வேலைக்குப் போயாவது கஞ்சி ஊத்துவா..! அவளும் போய்ச் சேர்ந்துட்டா.. என்று மனைவியை நினைத்து செல்வம் மனது புலம்பியது. எத்தனை நாளைக்குதான் மகன்கிட்ட கஞ்சி குடிக்க. பேர புள்ளைக கை நீட்டும்போது காசு இல்லேனு சொன்னா நல்லாவாயிருக்கு. அதுக்காகனாச்சும் வேலைக்கு போகவேண்டாமா..?

    நாளைக்கு கஞ்சிய ஊத்திட்டு விட்டுனுவிடியாம  நிமிந்தாள், சித்தாள் வேலைக்கு ஓடிப்போயிரணும்-நம்ம ஊர்ல கல்குவாரி வச்சு ஆஹோ, ஓஹோன்னு தொழில் பண்ணுன குருவாண்டி அண்ணன் தொழில் நஷ்டமானதும் கூலி வேலைக்குதான போனாரு- அவரே போனாபோது…நாம போறதுக்கு என்ன..? என்ற ஏதேதோ நினைப்பு ஓடியது செல்வத்துக்குள். மறுநாள் விடிந்ததும் கஞ்சிய ஊத்திக்கிட்டு நிமிந்தாள் வேலைக்கு புறப்பட்டார். வீட்டில் இருந்த வேகம் வேலைக்குப் போனதும் குறைந்தது. மனசு ஒருநிலையில் இல்லாமல் மழைக்கால பஸ்ஸின் முகப்புகண்ணாடி வைப்பராய் அங்கிட்டும், இங்கிட்டும் ஆடியது.

           தன்னிடம் ஆர்ட்ஸ் வேலை பழக வந்த சில இளவட்டப் பையன்கள் நிமிந்தாள் வேலைக்கு வந்திருந்தார்கள்.

செல்வத்தைப் பார்த்ததும் ஆச்சர்யமாக “என்னணே இந்தப்பக்கம் “என்றார்கள். “பெறகு என்னசெய்ய… வீட்ல சும்மாவே இருக்கமுடியும்மா.. !அதான்..” என்று கூச்சப்பட்டுக்கொண்டே சொன்னார் செல்வம்.

      “நாங்க இந்த வேலைக்கு வந்தது ரைட்டு. ஆனா நீங்க…..” என்று இழுத்தான் அந்தக்கூட்டத்தில் ஒரு பையன்.

    “அதுக்கு என்ன செய்ய முடியும் தம்பி” என்றார் வெறுமையாக செல்வம்.

      அதற்குப் பிறகு  நிமிந்தாள் வேலைக்குப் போகல. இரண்டு, மூனுநாள் வீட்டிலிருந்தார். அந்த சமயத்தில் வீரபத்திரன் மகன் பாண்டி -தன் அக்கா மகள் சடங்குக்கு ப்ளக்ஸ் பேனர் வைத்தான். ஊர் முழுவதும் அந்த ப்ளக்ஸ் பேனர் பற்றிதான் பேச்சாகயிருந்தது. இதைப்பார்த்து செல்வத்துக்கு எரிச்சலாகயிருந்தது.

    ரோட்டின் முகப்பில் உள்ள டீக்கடைக்கு போகும்போது – அந்த ப்ளக்ஸ் பேனரை பட்டும், படாமல் பார்த்தார். இதுதானா அது என்று மனதில் நினைத்துக்கொண்டே.. ப்ச் காலம் மாறிப்போச்சு.. இனி நம்மகிட்ட படம் வரைவதற்கு வருவாங்களா…?

 என்னதான் இருந்தாலும் ப்ளக்ஸவிட நம்ம ஆர்ட்ஸ்தான் பெரிசு -இது இவங்ககிட்ட சொன்னம்னு பொறாமையில சொல்றேன்னு சொல்லுவாங்கெ.. நாம வரைகிற ஓவியம் ,வாழையிலைல சோறு வச்சு சாப்பிடுறது மாதிரி..-ஆனா இந்த ப்ளக்ஸ் பேனர், பிளாஸ்டிக்  தட்டுல சோறு வச்சு சாப்பிடுறதுபோலதான்…

    ப்ளக்ஸ் பேனர் வைத்த  பாண்டியைப் பார்த்து, செல்வத்தின் மகன் முத்து ஆர்வமாக “ப்ளக்ஸ் பேனரின் அகலம்-நீளம் எத்தனை, காசு எவ்வளவு, ப்ளக்ஸ் பேனர் தயாரிக்கிற இடம் எந்த இடத்தில இருக்கு..” என்று ஆர்வமாக கேட்டுவிட்டு – கடைசியாக அந்த ப்ளக்ஸ் கடைக்காரர் ஒனக்கு ஏதாவது பழக்கமா.. -அங்கு வேலை ஏதாவது இருந்தா கேட்டுச் சொல்றயா ..” என்று பவ்யமாக கேட்டான். “யாருக்கு வேல”என்றான் பாண்டி. “எங்கப்பாவுக்குதான் முன்னமாதிரி வேல நடக்கலேல.. -அதுவுமில்லாமல அவரும் படம் வரையருவர்தான.. இந்த ப்ளக்ஸ்ம் அச்சு படம் சம்பந்தப்பட்டதுதானே..அதான்..” என்று இழுத்தான் முத்து. அந்த ப்ளக்ஸ் கடைக்காரன் -என் ப்ரண்ட் மூர்த்திக்கு பழக்கம்.. நான் வேணும்னா அவன கேக்கச்சொல்றேன் கடைக்காரன்கிட்ட” என்றான் பாண்டி.

வேலைகேட்டு வந்த விஷயத்தை செல்வத்திடம் வந்து முத்து சொன்னதும், கோபம் உச்சிக்கேறியது செல்வத்துக்கு.

 “உங்களுக்குதான் வேலை முன்ன மாதிரி நடக்கலயே அதான் ப்ளக்ஸ் கடையில… “என்று வார்த்தையை முழுங்கியபடி நின்றான் முத்து

      மனதில் ஆத்திரத்தோடு வாயைத் திறக்காமல் செரி.. செரி என்று தலையசைத்தார். மனதுக்குள்ளே ‘எனக்கு இப்ப வேலை விசாரிச்சிட்டு வரச்சொன்னனா இவன.. பெரிய புளுத்திகெனக்க வேலை கேட்டு வந்திருக்கான்’ என்று வசவாய் மென்னு தள்ளினார்.

         சட்டமன்றத் தேர்தல் வந்ததால் வேலை வந்தது செல்வத்துக்கு. நீண்டநாளுக்குப்பிறகு தன் வேலையைப் பார்ப்பதால் மகிழ்ச்சியாயிருந்தது. உலகத்தில் உள்ள அத்தனை பூக்களின் வாசனையைவிட ஓவியம் வரையும்போது வருகின்ற பெயிண்ட் வாசனை உயர்ந்ததாயிருந்தது செல்வத்துக்கு.

ஒரு பழைய வீட்டின் சுவற்றில் வேட்பாளாரின் சின்னத்தினை, செல்வம் வரைந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டின் தெற்குப்புறத்திலிருந்து போதையில வந்த ஒருவன் முறைத்துக்கொண்டே செல்வத்தைப் பார்த்து “ஓங்கள யாருண்ணே இந்தச் சின்னத்தை வரையச் சொன்னது இந்தச் செவத்துல” என்றான் கோபமாக. அதற்கு செல்வம் “இவருதான்” என்று கூட்டிட்டு வந்தவனைப் பார்த்து கையை நீட்டினார். “அவன் வரையச் சொன்னா வரைஞ்சிருவிங்களா…? அத மொதல்ல அழிங்கண்ணே.. ” என்றான் ஆவேசமாக போதையில் வந்தவன்.

         செல்வத்தை  படம் வரைய  கூட்டிட்டு வந்தவன் “அதெல்லாம் அழிக்க முடியாது” என்றான் கோபமாக. 

 “என்னது அழிக்கமுடியாதா.. மூஞ்சி பிஞ்சுபோகும்.. எனக்கு பிடிக்காத வேட்பாளர் சின்னத்தை இந்தச்சொவத்துல வரைஞ்சா அழிச்சுதான் ஆகணும்.” என்றான் தெனாவட்டாக போதையிலிருந்தவன்

     “அதெல்லாம் ஒன்னும் நொட்டமுடியாது” என்றான் படம் வரைய கூட்டிட்டு வந்தவன் கோபமாக.

 “இங்க பாரு இந்தவீடு ஒன்னும் ஓம்பேருக்கோ, ஏம்பேருக்கோ இன்னும் பிரிச்சு எழுதல்ல. இந்தவீடு இன்னும் அப்பா பேருலதான் இருக்கு. அதனால இந்த வீட்ல எனக்கும் பங்கு இருக்கு. ஓ.. இஷ்டத்துக்கு கண்ட கண்ட படத்த வரையாத.. ஒழுங்கா வரைஞ்ச சின்னத்த அழிக்கப்பாரு. அப்படியே வரையணும்னாலும் இந்தச் சின்னத்தை ஓம் புதுவீட்ல வரைஞ்சுக்கோ… அங்க வந்து நான் என்னன்னு கேட்கப்போறதில்ல… ” என்றான் போதையிலிருந்தவன்

           படம் வரைய செல்வத்தை கூப்பிட்டு வந்தவன் “வரைஞ்சது, வரைஞ்சதுதான் அதெல்லாம்…” என்று தலையில் கையைவைத்து மயிரை கைவிரலால் பிடுங்கிக்காட்டினான். அவன் செய்கையைப் பார்த்து  போதையிலிருந்தவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “ஏன்டா அழிக்கச் சொன்னா மயிர புடுங்க முடியாதுங்குற” என்று சொல்லிக்கொண்டு பெயிண்ட் டப்பாவை எடுத்து வரைஞ்ச சின்னத்தில் பொல்லுனு ஊத்திவிட்டு, செருப்பாலே -அந்த சின்னத்தை எத்தினான்.

அதைப்பார்த்ததும் மல்லுக்குத் தவ்வினான் படம் வரைய கூட்டிட்டு வந்தவன்.

 தான் வரைந்த ஓவியம், பெயிண்ட் ஊற்றப்பட்டு செருப்பு காலால் மிதிபடுவதைப் பார்த்ததும் செல்வத்துக்கு எப்படியோப் போனது.

  எல்லாமும் தனக்கு எதிர்மாறலாக நடப்பதாக மனதினுள் நினைத்துக்கொண்டு கொஞ்ச நாளாகவே உம்முனு இருந்தார் செல்வம். அந்த நேரம் பார்த்து முத்து “எப்பா ப்ளக்ஸ்பேனர் கடையில பாண்டி வேலைக்கு கேட்டு வந்துருக்கான் உங்களுக்கு” என்றான் மகிழ்ச்சியாக.

கோபமாக அவனைப் பார்த்தார் செல்வம்.

    “எப்பா உங்களுக்கத்தான்பா “

    ஏற்கனவே எரிச்சலில் இருந்தவருக்கு, ப்ளக்ஸ் கடை என்றதும் கோபம் சுள்ளுனு வந்தது. “எனக்கு வேலை ஒன்னும் நொட்டவேண்டாம் ” என்றார் கோபமாக செல்வம். அப்பாவா இப்படிப் பேசுறாரு என்று முத்துவுக்கு ஆச்சரியமாகயிருந்தது.

   “இப்ப என்னப்பா சொல்லிட்டேன். இப்படி கோவமா திட்டுறிங்க..” என்றான் முத்து                                       

“ஓ வேல மயிற பார்த்திட்டுப்போ.. எனக்கு வேலை தேடிக்கத்தெரியும். பெரிய வேல விசாரிக்கிறானாம் எனக்கு. நேத்து பெறந்த நோனி நீயெல்லாம்… !”

    இதையெல்லாம் செல்வத்தின் மருமகள், விளையாடிக்கொண்டிருந்த பேரப்பிள்ளைகள் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள்.

   “ஏதோ …ஓங்கையால நாலுநாளு ஒட்காந்து சாப்பிட்டேன்.. ஏந்தொழிலு நொடிஞ்சுபோனதுனாலே… ஒனக்கு எளக்காரமாப் போச்சு.. எனக்கு நீ தொழிலு தேடுற…ம்” என்று பல்லைக் கடித்தார் செல்வம்.

“எப்பா.. ஏன்ப்பா ஏதேதோ பேசுறிங்க சம்பந்தமில்லாம. ஏதேதோ தப்பா நெனக்கிறிங்க. சரியா புரிஞ்சுக்கிங்கப்பா”

“புரிஞ்சுக்கிறவேணாம்.. புளுத்தவும் வேணாம்.. ஓஞ்சோலி மயிற பார்த்திட்டுப்போ”

“சரி ஒங்கிஷ்டம், வருஷம்பூறாம் சாயம்போன.. ஒண்ணுமில்லாமப்போன ஒங்க தொழிலவே கட்டிட்டு அழுங்க” என்றான் கோபமாக முத்து.

 “ஏன்டா ,புளுத்தி.. சாயம்போன தொழிலுன்னு சொல்ற..-அந்த சாயம்போன தொழில்ல பார்த்துதான்டா ஒன்ன வளர்த்தேன்” என்றார் கோபமாக செல்வம்

திடீரென வந்த வாகன ஒலிச்சத்தத்தால் மகன் நினைவிலிருந்து மீண்ட செல்வம். அன்றைக்கு நாம அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று வருத்தப்பட்டார். நம்மளைத் தேடி மகன் வருவானா என்ற தவிப்பு அவர் மனதை வாடாச் செய்தது.

      விருதுநகர் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள பொட்டலில் போய் நிற்போம் அங்குதான் கொத்தனார் வேலைக்கு நிமிந்தாள்,சித்தாள் வேண்டி தேடி வருவார்கள். யாரவது வேலைக்கு கூப்பிட்டால் போயிரவேண்டியதுதான் என்ற நினைப்போடு நடந்தார் சாலையில்.

 எதிரே தெரிந்தவர்கள் யாரும் வந்திரக்கூடாது ;அப்படியே வந்தாலும் முகத்தை வேறதிக்கும் திருப்பிக்கொள்ளவேண்டியதுதான்..

அப்படியே தெரிந்தவர்களைப் பார்த்துப்பேசி என்னாகப் போகுது பேச்சுவாக்கில் பழசை கிண்டிவிடுவார்கள். பிறகு அந்தக்காலத்தில் நம்ம தொழிலை நினைத்து ஏங்க வேண்டியதிருக்கும்.

    பிறகு  அந்தக்காலத்தில் நம்ம தொழிலுக்கு எவ்வளவு மதிப்பிருந்தது. ஏதாவது ரசிகர் மன்றத்தினர் அவர்களுக்கு பிடித்த நடிகரின் படத்தை வரைய வரும்போது, எவ்வளவு பயபக்தியோடு தாம்பலத்தட்டில் தட்சணையாக ரூபாய் பழங்கள் வைத்து கொடுப்பார்கள். வரைந்த படத்தின் திறப்புவிழாவுக்கு நம்மை அழைத்துப்போய் எந்தளவு கௌரவப்படுத்துவார்கள்” என்று பழைய நிகழ்வுகளை தொடர்ந்து பல நினைவுகள் வரும். அதனால எதுக்கு வம்பு..! தெரிந்தவர்களை கண்டுகாணாமல் போவதுதான் நல்லது என்ற நினைப்போடியது செல்வத்தின் மனதினுள்.

வேகமாக மாரியம்மன் பொட்டலை நோக்கி போனார் செல்வம். அங்கே இவரைப்போன்று ஆட்கள் வேலைக்காக நின்று கொண்டிருந்தார்கள்.

கொத்தனார் ஒருவர் “வேலைக்கு வாறீங்களா “என்று செல்வத்தைப் பார்த்துக் கேட்டதும் என்னசொல்வதென்று தெரியாமல் கூச்சத்தில் “இல்ல வரல” என்று தலையசைத்து விட்டார். கொத்தனார் கடந்துபோனதும்,நாம எதுக்கு வேலைக்கு வரலென்னு சொல்லிட்டோம்.. நமக்கென்ன கிறுக்கா..இங்க வந்ததும் ஏதோ ஒன்னு ஏன் தடுக்குது..” என்ற  நினைப்பில் -அந்த இடத்தில் நீண்ட நேரம் நிற்கமுடியாமல் இடத்தைவிட்டு நகர்ந்தார் செல்வம்.

     நடந்துவரும்போது எதிர்த்திசையை பார்த்த செல்வத்திற்கு ஐயையோ என்றிருந்தது. காலையில் தூக்கத்தின்போது தலைமாட்டில் வைத்து பார்த்த , மனநலம் பாதிக்கப்பட்டவள் அலங்கோலமாக எதிரே வந்துகொண்டிருந்தாள். அவளைப் பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டார். கடக்கும்வரை வெறுத்துவர் கடந்துபோனதும் அவளைப் பின்னாலிருந்து பார்த்து பாவப்பட்டார். பசி அளவுக்கு மீறி வந்ததால் ஹோட்டலுக்குள் நுழைந்து நாலு இட்லியை அள்ளிப்போட்டு பஸ்டாண்டை நோக்கி வந்தார் செல்வம்.

 தற்செயலாக தன் மார்பை தடவியவரின் கையில் உருகிவடிந்து மெழுகுகற்றைப்போலிருந்த தழும்பொன்று தட்டுப்பட்டது. அது தட்டுப்பட்டவுடனே சின்னப்பேரன் ஞாபகம் வந்துவிட்டது செல்வத்துக்கு. மார்பில் உட்கார்ந்துகொண்டு அந்த தழும்பை பிடித்து பிடித்து விளையாடும் சின்னப்பேரன் கண்ணுக்குள்ளே நின்றான் செல்வத்துக்கு. வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்.

        பல நினைவுகள் அவர் மனதை மோதியதால் அவர் இரவுகள் விபத்துக்குள்ளானது. கண்ணீர் வழிந்தாப்புலேயே தூங்கிப்போனார்

      விடிவதற்கு கொஞ்ச நேரம் முன்பே செல்வத்துக்கு விழிப்புத் தட்டியது. எழுந்தவர், கூதலுக்கு பீடியை எடுத்து பற்ற வைத்துக்கொண்டே இடப்பக்கமாக திரும்பினார் – அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவள் உட்கார்ந்தவாறே தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் கட்டியிருந்த சேலை உடலைவிட்டு விலகி அலங்கோலமாக கிடந்தது.

     மழைமேகமாக இருந்ததால் விடிந்தும், கொஞ்சம் இருளிருந்து. கொஞ்ச நாளில் உடம்பு குறைந்து, வயது அதிகம் ஏறியிருந்ததுபோல இருந்தது அவரின் முகம். நீண்ட நாட்களாக கால்களில் போட்ட கொலுசுபோல கருத்தும்-வெளுத்தும் போயிருந்த தாடிமயிரை இடது கையால் வருடிக்கொண்டே எழுந்து கட்டப்பையை எடுத்துக்கொண்டு டீக்கடைக்குப் போனார். பஸ்டாண்டு அருகிலிருந்த கிருஷ்ணன் கோவிலில் கூட்டம் அதிகமாகயிருந்தது. செல்வம் கூட்டத்தை கவனித்து என்னனு பார்க்கும்போது-அன்றுதான் கிருஷ்ண ஜெயந்தி என்று தெரிந்தது.  கடைகளில் கலர்கலரான சாக்பீஸ்களை வாங்கிக்கொண்டார். மேகத்தை பார்த்தார். மழை மேகம் முன்னைவிட வலுவாகயிருந்தது. மழை வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக்கொணடே பஸ் நுழையும் வடக்குப்புறச் சாலையிலிருந்த ஒதுக்குப்பறமான இடத்தில் முடிந்தளவு கைகளால் சுத்தம் செய்துவிட்டு, வெள்ளை மற்றும் நீல நிற சாக்பீஸால் சங்கு, சக்கரத்துடன் நிற்கும் பகவான் கிருஷ்ணனின் படத்தை வரைய ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் செல்வத்தின் விரலிலிருந்து கிருஷ்ணன் அவதாரம் எடுத்தார். பார்ப்பதற்கே அவ்வளவு அழகாகயிருந்தது அந்த ஓவியம். செல்வத்திற்கு இதுவரையிருந்த மனச்சஞ்சலங்கள் அந்த ஓவியத்தை வரைந்ததும் இல்லாமல் போனது. வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்.

        சாலையில் வருவோர், போவோர் பயபக்தியுடன் கிருஷ்ணன் ஓவியத்தை வணங்கி காசுகளை போட்டுச்சென்றார்கள். அதே சாலையில் நடந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்டவள் கிருஷ்ணன் ஓவியத்தைப்  உற்றுப் பார்த்தாள். மற்றவர்கள் சில்லறை போடுவதைப் பார்த்து, தானும் கையிலிருந்த கிழிந்த பேப்பர், நிலக்கடலைத்தொளியை, சில சில்லறைகளை போட்டாள்.

அதைப்பார்த்து செல்வம் கோபப்படாமல் சிரித்துக்கொண்டார். மழையின் தூறல் செல்வத்தின் மீது ஒரு சிறுதுளியாக விழுந்தது. “ச்சே இன்னைக்குப் பார்த்தா மழை வரணும்” என்று புலம்பிக்கொண்டே பீடி வாங்க பக்கத்திலிருக்கும் கடையை நோக்கிப்போனார். மழை வலுக்கத்தொடங்கியது. சாலையின் ஓர நடைபாதையில் கடை போட்டிருப்பவர்கள் கடை பொருட்கள் நனையாமலிருக்க கையிலிருந்த குடை, துண்டு, துணிகளால் பொத்தினார்கள்.

     மழைத்துளியால் கிருஷ்ணன் ஓவியம் நனையத்தொடங்கியதும், ஓவியம் பக்கத்திலிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவள் -அருகிலுள்ள கடைக்காரர்கள் அவர்களது கடை பொருட்களை துண்டு, துணிமணி, குடையால் பொத்துவதைப் பார்த்துவிட்டு ,தன் உடலில் அரைகுறையாக கட்டப்பட்டிருந்த அழுக்கப்படிந்த சேலையால் கிருஷ்ணன் ஓவியத்தை பொத்தினாள். இவளின் சேலைநுனி கிருஷ்ணனின் கை பக்கத்தில் விழுந்திருந்தது.

          கடையில் பீடியை வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டே திரும்பியவருக்கு மழையில் அந்தக் காட்சியைப் பார்த்ததும் அபூர்வமாகயிருந்தது. ஆயிரம் மின்னல் தோன்றி மனதில் ஏதேதோ சிந்தனைகளை கிளப்பிவிட்டது. முக்கியமா அந்த சேலையின் நுனி கிருஷ்ணனின் கையில் இருப்பதைப் பார்த்துவிட்டு பக்கென்றிருந்தது. சிலநொடி தோன்றி மறையும் மின்னல் வெளிச்சத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவள் பாஞ்சாலியாக தெரிந்தாள் செல்வத்தின் கண்களுக்கு. எத்தனையோ யுகங்களுக்கு முன்பு மகாபாரதத்தில் பாஞ்சாலி மானத்தை காக்க கிருஷ்ணன் அவதாரம் எடுத்து, சேலை கொடுத்தான். அதற்கு கைம்மாறாக பாஞ்சாலி- இன்று  அதே சேலையாலே இதோ என் கண் முன்னிலையில் கிருஷ்ணனை காக்கிறாள். இனி பாஞ்சாலி , கிருஷ்ணனுக்கு கடன்பட்டவளில்லை. இதோ பாஞ்சலி கிருஷ்ணனை சேலையால் காக்கிறாள் .பாஞ்சாலி கையால் கிருஷ்ணன் கைம்மாறு பெற்றுவிட்டான். இதோ பாஞ்சாலி கிருஷ்ணனைவிட பலமடங்கு தெய்வமாகிவிட்டாள்.

மீண்டும் மகாபாரதம் நிகழ்கிறது. அதுவும் நான் வரைந்த ஓவியத்தால் மீண்டும் இப்போது மகாபாரதம் நிகழ்கிறது. ஆஆஆஆ… என்று மனம் குதூகலத்தில் குதித்தது. நான் சாதரணவனில்லை.. நான் சாதரணவனில்லை என்று செல்வம் மனதுக்குள்ளே குதித்தார். மழையைவிட மின்னல் அதிகமாகயிருந்தது. மின்னலில் கிருஷ்ணனை காக்கும் பாஞ்சலியைப் பார்க்க தெய்வம்சமாக, கருணைக்கடலாக இருந்தாள். கண்ணீர்கசிய செல்வம் கையெடுத்து கும்பிட்டார் தன்னையறியாமல்… செல்வம் தனது கைகளைப் பார்த்தார். “எண்ணே  மத்தவங்க கை வெரலுக்கு தங்க மோதிரத்த போட்டாதான் கௌரவம் வரும்-ஆனால் ஓங்கைவெரலுக்கு தங்க மோதிரம் போடாட்டாலும் கௌரவம் வரும்… ஏன்ன ஓ.. வெரலு சாதரணமானதில்ல ஓவியம்  வரைகிற வெரலு..” என்று என்றோ பால்பாண்டி சொன்னது ஞாபகம்வந்தது. அதை இப்போது நினைத்து உண்மைதான்..உண்மைதான் என்று சிரித்தார். அந்தச் சிரிப்பில் இதுவரை பிரபஞ்சம் கண்டிராத வெளிச்சம் இருந்தது.

++

க. செல்லப்பாண்டி

செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *