”அடாங் ! அடாங் ! அடாங் ! அ டங்கு டங்கு டாங் “

தாத்தா ராமகிருஷ்ணன் தனது வலது முழங்காலை ஒரு அடி முன்னால் வைத்து, வலது கையை மேலே தூக்கிக் கொண்டு, சற்றே வளைத்து, வளைத்து ஆடிக்கொண்டு இருந்தார்.

அருகே, பேத்தி தரையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு , “இல்ல, இல்ல… போ …  நா தா ஜெயிச்சேன்.” என்று கத்திக் கொண்டு இருந்தாள்.

“இல்ல, நா தா ! நா தான உன் காயின் கட் பண்ணி, முதல்ல வந்தேன் . டடாங் டடாங் !“  : தாத்தா.

ஜலஜாவின் கத்தல் அதிகம் ஆனது. பாட்டி செல்லம்மா சமையலறையில் இருந்து ஓடி வந்தாள்.

“ஏங்க ! என்னங்க சத்தம் ! ஆட்டம் வேறயா ? சின்னப்புள்ளய அழ விட்டுகிட்டு..” என்றார் செல்லம்மா.

தாத்தாவைப் பாட்டி திட்டிவிட்டாள் என்பதில் ஜலஜா முகத்தில் கொஞ்சம் திருப்தி! இருந்தாலும், பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

“பாட்டி, நா தா ஜெயிச்சேன்”. அ அஎ ஆ…அழுகையும் ஆர்ப்பாட்டமும் ஐந்து நிமிடம் தொடர்ந்தது.

பேத்தியை சாந்தம் பண்ண பிஸ்கெட், கேண்டி என அதை இதைக் கொடுத்தார் செல்லம்மா.

“என் காயின்ஸ் எல்லாம் கட் பண்ணிட்டாரு தாத்தா ! பேட் பாய் !”

”ஏங்க ஒரு அரை மணி நேரம் விளையாடி இருப்பீங்களா ? அதுக்குள்ள கத்த விட்டாச்சு. நா இன்னும் சமையலே முடிக்கல்ல !”

“ஜல்லுக்குட்டி, ஜல்லுக்குட்டி ! “ ராமகிருஷ்ணன்.

“போ, நா பேச மாட்டேன், நீ பேட் பாய் ! “ ஜலஜா.

“சரி வா, நீ என் காயின்ஸ் கட் பண்ணு ! மறுபடி விளையாடலாம் “

ஜலஜா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“டீவி போடறேன் கன்னுக்குட்டி , என்னப் பாட்டு பாக்கற ? நீங்க உங்க ருமுக்குப் போங்க, அவள அழவிடாதீங்க “

‘யானைப் பாத்து போடு “

“சரிம்மா, சங்கர் சார் பாக்கணும்ன்னு சொன்னாரு, என்ன விஷயம்ன்னு கேட்டுட்டு வரேன் “ ராமகிருஷ்ணன் கிளம்பினார்.

டீவி போரடிக்க ஆரம்பித்து விட்டது ஜலஜாவுக்கு.

“பாட்டி, அம்மா எப்போ வருவாங்க?”

“இதோ வேல முடிஞ்சதும் வந்துருவா, பாட்டி  உனக்கு இன்னிக்கி கேரட் ரைஸ் பண்ணி இருக்கேன்,சூப்பரா சாப்பிடுவியாம் ! “

தாத்தா வந்து விட்டார். கையில் ஒரு பாக்கெட் மல்லாக் கொட்டை !

ஹாலில் உட்கார்ந்து, மல்லாக் கொட்டையை ஒன்று ஒன்றாக உடைத்து வாயில் போட்டுக் கொள்ளத் துவங்கினார்.

“இந்தா செல்லம்மா, நீயும் சாப்பிடு”

ஜலஜா, எழுந்திருக்காமல், மெல்ல மெல்ல நகர்ந்து, தாத்தா பக்கத்தில் வந்தாள்.

“தாத்தா… எனக்கு ! “

“நா தான் பேட் பாய் ஆச்சே ! “

“மல்லாக் கொட்டைப் பொட்டலத்தைத் திருப்பி வேற பக்கத்தல வைத்துக் கொண்டு, முஞ்சியை சுருக்கிக்கொண்டார்.

ஜலஜா டக்கென எழுந்து, மல்லாக் கொட்ட பொட்டலத்துக்கு எதிரே அமர்ந்து கொண்டாள்.

”ஃப்ரெண்ட்ஸ் “ என்ற படி கைகுலுக்க கை நீட்டினாள்.

“யேய், தொடாத ! என்னோடது “ என தாத்தா சிலுப்பிக் கொண்டார்.

“என்னங்க ! மறுபடி அவளக் கிளப்பிவிடவே இந்த வேர்க்கடலய வாங்கிட்டு வந்தீங்களா ? என அங்கலாய்த்தார் செல்லம்மா.

ஜலஜாவைப் பார்த்து கண்ணடித்தபடி, “ சரி, நாம இன்னொரு கேம் லூடோ ஆடலாமா “ என்றபடி ஒரு மல்லாக்கொட்டையைப் பிரித்து அதை ஜலஜா கையில் கொடுத்தார் தாத்தா.

“சரி, ஆனா, நா தான் ஜெயிப்பேன் “ ஜலஜா.

“நீயும் தாத்தா காயின்ஸ் எல்லாம் நல்லா கட் பண்ணி வெளையாடனும் ஜல்லு”

“சரி பாட்டி”

பாட்டி, பேத்திக்கு மல்லாக் கொட்டையைப் பிரித்து பிரித்து கையில் கொடுக்க ஆரம்பித்தாள்.

“ஜலஜா, விளையாடும் போது ஜெயிக்கணும். ம்ம், வின் பண்ணறதெல்லாம் முக்கியம் தான். அதே சமயம், தோத்துப் போயிட்டா அதுக்காக அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, மனச வருத்திக்கக் கூடாது.”

“ தாத்தா, பச்சைக் காயின்ஸ் என்னோடது”

”டீவில ஏதாவது மேட்ச் பார்த்து இருப்பியே ! ஜெயிச்சவங்க தோத்தவங்க ரெண்டு பேரும் கை குலுக்குவாங்க !  வெற்றி தொல்வியை சமமா ஏத்துக்கணும். வெற்றி தோல்வி முக்கியமில்ல. நாம எப்படி விளையாடுறோம், கரக்ட்டா விளையாடாறோமா அப்படிங்கறது தான் முக்கியம். புரியுதா ஜல்லு ? எது முக்கியம் ?”

“மல்லாக்கோட்டை” என்றாள் ஜலஜா.

 தாத்தாவின் பேச்சைப் பார்த்து, ரசித்து, தலையை ஆட்டிக்  கொண்டே இருந்த செல்லம்மா மல்லாக் கொட்டையைத் தரவில்லயே !

ராமகிருஷ்ணனும் செல்லம்மாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

செல்லம்மா, ஜலஜா கையில் உரித்த கடலையை வைக்க… தாத்தா ராமகிருஷ்ணன் போய் கொஞ்சம் வெல்லம் எடுத்து வந்து, அதையும் பேத்திக்குக் கொடுத்தார்.

000

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். சென்னை, மேக்ஸ்முல்லர்பவன், ஜெர்மன் கல்வியகம், கேந்திரிய வித்யாலயாவுடன் இணைந்து அளித்த திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி பயின்று, ஜெர்மனி, மேன்ஹெய்ம் நகரில் ஜெர்மன் பயின்றார்.கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், இந்து தமிழ்திசையின் மாயாபஜார் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. அவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *