எழுந்தாளர் அரு.சு.ஜீவானந்தனின் ‘ஜீவானந்தன் கதைகள்’
இந்தப் புத்தகம் 1994-ஆண்டு வெளிவந்தது. இன்றோரு 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1971-ல் இருந்து 1992-ஆம் ஆண்டு வரை வார மாத நாளிதழ்கள் இதழ்களில் வெளிவந்த 15 சிறுகதைகளின் தொகுப்பு.
எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன் மலேசிய எழுத்துலகில் 70-களில் மிகத்தீவரமாக எழுதியவர். அது அவரது எழுத்தின் தொடக்க காலம் என்றும் சொல்லலாம். அப்போதைய சூழலில் வழக்கமாக வெளிவந்து கொண்டிருந்த பல படைப்புகளில் இருந்து மாறுபட்ட படைப்புகளைக் கொடுத்ததன் மூலமமதிகம் கவனிக்கப்பட்டவர். அன்றைய காலக்கட்டத்தில் ‘தமிழ் நேசன்’ நாளிதழ் நடத்திய ‘சிறுகதை பவுன் பரிசு’ திட்டத்தின் கீழ் 1972,1973,1974- ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை தன் சிறுகதைக்காக தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
1970-ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு வரை மலேசிய அரசாங்க வானொலி மற்றும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். இன்றும் கூட தனது மிடுக்கான குரலில் வசிகரிக்கின்றார். 1997ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோசமான விபத்திற்கு பின் எழுதுவதைக் குறைத்துக்கொண்டவர் 1992-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘புள்ளிகள்’ சிறுகதையோடு எழுதுவதை நிறுத்திக்கொண்டார். அதன் பின் ‘வல்லினம்’ இணைய இதழ் ஆசிரியர் எழுத்தாளர் ம.நவீன் மற்றும் அவரின் நண்பர்களின் இலக்கிய உரையாடல்கள் கொடுத்த உந்துதலில் 2017-ஆம் ஆண்டு ‘சக்கரம் சுழலும்’ என்கிற சிறுகதையை டிசம்பர் மாத வல்லினத்திற்கு எழுதினார்.
எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தனைக் குறித்து மேலதிக விபரங்களை தமிழ் விக்கி இணைய பக்கத்தில் வாசிக்கலாம்.
‘அரு.சு.ஜீவானந்தன் கதைகள்’ புத்தகத்திற்குள் நுழைவதற்கு முன் எழுத்தாளரின் முக்கியமான நேர்காணல் ஒன்று 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத வல்லினம் இணைய இதழில் வெளிவந்துள்ளது. ‘வாழ்க்கை என்னைத் தின்றுவிட்டது!’ என்கிற தலைப்பில் எழுத்தாளரின் வலி மிகுந்த அதே சமயம் எழுத்தின் மீது தீரா காதல் கொண்ட நேர்காணலை நீங்கள் வாசிக்க வேண்டும் நண்பர்களே.
இனி புத்தகத்திற்கு செல்வோம்.
ஒரு படைப்பு காலம் கடந்து நிற்பதற்கும் அது எழுதப்பட்ட காலத்திலேயே மறக்கப்படுவதற்கு அந்த எழுத்தாளர் அந்தப் படைப்பை எப்படி அணுகியுள்ளார் என்பது முக்கிய காரணமாக அமைகிறது. இதுவே ஒரு படைப்பின் செவ்வியல் தன்மையைப் பிற்காலத்தில் கொடுக்கவும் செய்கிறது. அது போக; ஒரு படைப்பு காலம் கடந்து நிற்பது அப்படைப்பில் வாசகர்களுக்கு இருக்கக்கூடிய சுதந்திரமும் ஒரு காரணமாக அமைந்துவிடுவதை தவிர்க்க முடியாது. அதுதான் எப்போதோ மறக்கடிக்கப்பட படைப்புகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழ வைக்கிறது. வாசகர் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் என்பது எழுத்தாளர் தன் படைப்பில் வைத்திருக்கும் இடைவெளியின் வாசலைப் பொருத்தது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அந்த இடைவெளியை எழுத்தாளர் தன் பிரக்ஞையில் இருந்தும் வைக்கலாம் அதில்லாமலும் வைக்கலாம். சொல்லப்போனால் அது அவர் எழுதத் தவறிய இடமாகவும் இருக்கலாம். அதனால்தான் என்னவோ எழுத்தை வாசித்து அதன் வழி வாழ்வை கண்டறிந்த பின் எழுத்தாளருடன் பேசும்போது ஏமாற்றம் அடைந்துவிடவும் நேர்கிறது.
இப்போது நான் எழுதப்போகும் இந்தக் கதைகளில் சில நான் பிறப்பதற்கு முன்னமே பிறந்துவிட்டன. இன்றைய என் வாசிப்பையும் வாழ்க்கையையும் வைத்து இக்கதைகளை நான் நிகழ்காலத்தோடு வைத்து புரிந்து கொள்ளவும் அதிலிருந்து எனக்கானவற்றை எடுத்துக் கொள்ளவுமே இதனை எழுதுகிறேன். எழுதிய காலத்தில் விவாதிக்கப்பட்ட கதை இன்றைய வாழ்க்கை முறையில் ரொம்பவும் சாதாரணமாக மாறியுள்ளது. அதே போல எழுதிய காலத்தில் பெரிதாக கவனிக்கப்படாமல் இன்றைய வாசிப்பில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லும் கதையும் உள்ளது. இந்த இரண்டு விதமானக் கதைகளையும் இந்தக் கட்டுரையில் நீங்கள் பார்க்கலாம். ஒரு வாசகனாக எங்களின் மூத்த மலேசிய படைப்பாளியின் படைப்பை இன்னமும் ஆழமாக அறிந்து கொள்ளும் முயற்சியே இது.
‘மாளாத இனி மீளாத உறவு’ என்னும் கதையை 1971ஆம் ஆண்டில் எழுதியிருக்கிறார். இன்றைய மிகையுணர்ச்சி ததும்பி வழியும் மெகா சீரியலுக்கு ஏற்றதொரு கதைக்கரு. இதை அப்படியே குறும்படமாகவும் நம்மால் எடுத்து பார்ப்பவர்களை ‘காதல் எத்துணை புனிதமானது’ என அங்கலாய்க்க வைக்க முடியும். நாயகனின் காதல் சந்தர்ப்ப சூழ்நிலையிலும் காதலியின் தந்தை செய்த சூழ்ச்சியிலும் நிறைவேறாமல் போகிறது. பின்னர் அவர் ஒரு திருமணம் செய்து அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் பிறக்கிறார்கள். கடைசி மகளை ஈன்றதும் மனைவி இறைவனடிக்கு சென்றுவிடுகிறார். மனைவி மீது இருந்து காதலும் (நான்கு பிள்ளைகள் பெற்ற பின்) திருமணத்திற்கு முன் தான் நேசித்த பெண்ணின் கைகூடாத காதலும் ‘காதல் ஆத்மாவா’ அவர் மனதில் வலியாக படிந்துவிடுகிறது.
தன் மகளுக்கு இம்மாதிரி காதல் வலி ஏற்பட கூடாது என்பதற்காக; அவள் விரும்புவதாகச் சொன்ன காதலைச் சந்திக்க அவனது வீட்டிற்கு செல்கிறார். அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தன் முன்னால் காதலியின் மகனைத்தான் தன் மகள் காதலித்திருக்கிறாள். அவரோ காதலியை விசாரிக்க ; திருமணமாகி பத்தாண்டுகளில் கணவனைப் பறிகொடுத்து தன் மகனுடன் வாழ்வதாக சொன்னதோடு மட்டுமல்லாது அவர் இங்கு வந்ததன் நோக்கம் அறிந்து “இன்னமும் காதல் ஆத்மாவால் கட்டுண்டு இருக்கிறோமே. உங்கள் பெண் என் பெண்ணில்லையா? என் மகன் உங்கள் மகன் இல்லையா?” என கேட்கிறார். மறைந்த கணவருடன் பத்தாண்டுகாலம் வாழ்ந்திருந்தாலும் கூட தானும் தன் காதலனின் மீதுள்ள காதலால்; காதல் ஆத்மாவின் துடிப்போடு இருப்பதாக சொல்கிறார்.
மாப்பிள்ளை பார்க்க போனவரோ நெஞ்சில் தாளாத வேதனையைச் சுமந்து திரும்புவதாக கதையை எழுத்தாளர் முடிக்கின்றார்.
திருமணத்திற்கு பின்னும்; அதாவது ஆணுக்கு நான்கு குழந்தைகள் பிறந்த மனைவி இறந்த பின்னும், பெண்ணுக்கு திருமணமாகி மகன் பிறந்து பத்தாண்டு கடந்து கணவன் இறந்தும் கூட இவர்களுக்கு முன்னால் காதலே இவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்றால் இவர்கள் இருவரும் அவரவர் திருமண வாழ்க்கையை எப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் என்கிற கேள்விதான் முன்னே எழுந்து நிற்கிறது. அதே சமயம் அப்படி நினைக்கும் அளவிற்கு அவர்களின் காதலும் இக்கதையில் சொல்லப்படவில்லை. ஆனாலும் இன்று இதையே நகைச்சுவையாகவும் அதே சமயம் மனதை கணக்கும்படியும் சில மாற்றங்கள் செய்து இன்னொரு படைப்பாக கொடுக்கலாம் என்றே தோன்றுகிறது. “என் மகன் உனக்குமே மகன்தான்..” என்று மட்டுமே முன்னால் காதலி சொல்லியிருந்தால் இந்தக் கதை மிகையுணர்ச்சியைத் தாண்டி இன்னொரு இடத்திற்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும் பட்த்தில் இவர்கள் இருவரும் சொல்லும் காதல் ஆத்மாவின் வலியை வாசகர்களும் புரிந்திருப்பார்கள். தன் தகப்பனின் சாயலில் இருந்தவனையே மகள் காதலித்திருக்கிறாள் என்கிற இன்னொரு கதையை இங்கிருந்து வாசகர்கள் எடுத்து கொள்வதற்கான வாய்ப்பும் அமைந்திருக்கும்.
யார் உயிர் எப்போது போகும்; யார் உயிரை யார்தான் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வியைக் கேட்கும் கதையாக ‘இறைவனை மன்னித்தேன்’ என்ற கதையை எழுதியிருக்கிறார். சிறுவனுக்கு இருதயத்தில் ஓட்டை, வறுமையான சூழலில் நாளிதழில் இச்செய்தி பகிரப்பட்டு பொதுமக்கள் நன்கொடை கொடுக்கிறார்கள். அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து சிறுவன் இளைஞனாகிறான். இராணுவத்தில் சேர்ந்து சண்டையில் மரணமடைகிறான். அதிலும் இருதயத்திலே குண்டு பாய்ந்து அந்த இளைஞன் இறந்திருக்கிறான். எந்த ஓட்டையால் உயிருக்கு ஆபத்து என ஊர் மக்கள் நன்கொடை கொடுத்து அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழைத்து இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தானோ அதே இதயத்தைதான் அந்தக் குண்டு துளைத்திருக்கிறது. “என்னவோ கதை சொல்வார்களே அப்படி நடந்துவிட்டது. யார் மேல் பழி சொல்ல முடியும் ? ஊரார் கொடுத்த உயிர் ஊரார்க்காகவே போயிற்று. என்ன வாழ்வோ போ..!” என அவனது அம்மா புலம்புகிறார்.
பிறப்பையும் இறப்பையும் யாரால் தடுக்க முடியும்; யாரால்தான் கணிக்க முடியும். சிறுவயதில் இருதயத்தில் இருந்த ஓட்டையைச் சரிசெய்து; இளைஞனான பின் அதே இருதயத்தில் குண்டு துளைத்து மரணிக்கும் இளைஞனை நாம் நம் வாழ்வோடு எந்த இடத்தில் பொருத்தி ஆறுதல் அடைகிறோம் என்பதுதான் இக்கதைச் சொல்லும் செய்தியாகப் பார்க்கிறேன்.
‘சவங்கள் இங்கே உயிர் வாழ்கின்றன’ என்னும் கதையும் ‘தீர்மானங்கள்’ என்னும் கதையும் ஏறக்குறைய ஒரே விடயத்தைதான் சொல்கின்றன. ஆனால் அது இரண்டுமே இச்சமூகம் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுதாக அமைகிறது.
‘சவங்கள் இங்கே உயிர் வாழ்கின்றன’ கதையில் ‘தமிழர் இறப்பு நிதி உதவிச் சங்கம்’ என்னும் அமைப்பை தொடங்குகிறான் நாயகன். அதற்கு ஊர்த்தலைவர் துணையாக இருப்பார் என நம்புகிறான். ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்தில் நடக்கும் ஊழலைக் கண்டறிந்து கேள்வி கேட்கிறான். பிறகு அவனுமே பிணமாகி விழ; எதுவுமே நடக்காதது போல ஊர்த்தலைவர் அவனது பிணத்தின் முன்னால் நடக்கிறார் என கதை முடிகிறது. பிணமே தன் இறுதி ஊர்வலத்தில் தன் கதையைச் சொல்வதாய் எழுத்தாளர் இக்கதையை எழுதியிருப்பார்.
அடுத்ததாய்த் ‘தீர்மானங்கள்’ என்னும் கதையில் ‘தமிழர் ஒன்றியப் பேரவை’ இயக்கத்தின் அபத்தமான தீர்மானங்களை கேள்வி எழுப்புகிறான் நாயகன். அவனுக்கு எதிராகவே குழுக்கள் அமைக்கப்பட்டு சூழ்ச்சிகள் நடக்கின்றன. நடக்கும் கசப்புகளையும் சுயநல விஷமிகளின் சூழ்ச்சிகளையும் பொறுக்காது பேரவையில் இருந்து விலகிவிடுகிறான்.
ஓர் இயக்கமோ அல்லது அமைப்போ; சுயநலவாதிகள் கையில் இருந்தால் என்ன ஆகும் என்பதை இருகதைகளுமே அன்றைய காலக்கட்டத்தை மையப்படுத்தி சொல்லியிருந்தாலும்; இதுபோன்ற கசடுகளும் சூழ்ச்சிகளும் இன்றளவுமே நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன் என்பது மாறி உடல் வேறு மனம் வேறு என்கிற மனநிலையில் பலர் வாழ ஆரம்பித்துவிட்டார்கள். நான் என் கணவனையும் என் மகளையும் மிகவும் நேசிக்கிறேன். என் உள்ளத்தோடு வாழ முடிந்த கணவரால் என் உடலோடு வாழ முடியவில்லை. அதற்கு நான் தீனி போட்டுக்கொள்கிறேன் ஆனால் நான் மனதார கணவரோடு வாழ்கிறேன் என வாழும் ஒரு பெண்ணின் கதை. இன்று இது பலருக்கு தெரிந்த ஒரு விடயமாக பல இடங்களின் பார்த்த அறிந்த கதையாகவும் இருக்கலாம் ஆனால் இது எழுதப்பட்ட காலக்கட்டத்தில் நிச்சயம் சர்ச்சைக்கு ஆளாகியிடுக்கும்.
‘ஒரு நிர்வாணமான மனம்’ என்னும் கதையில் குழந்தை பிறந்த பின் கணவனுக்கு மனைவி மீது ஈர்ப்பு இல்லாமல் போகிறது. இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறான். அதை தெரிந்து கொண்ட மனைவி அவனுடன் பேசி விவாகரத்து பெற்று கொள்கிறாள். அதன் பின் ஒருமுறை கணவன் அவனது முன்னால் மனைவியைச் சந்திக்கும் போது அவள் விதவை கோலத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறான். “நீங்கள் என்னோடு இருந்த போது உங்கள் அன்பைத்தாங்கிய உடலை அலங்கரித்துப் போற்றி வந்தேன். நீங்கள் இல்லாதபோது உங்கள் நினைவாகவே வாழ்கிறேன்……. வண்ண வண்ண நிறங்கள் இல்லாமல் என் சேலை மட்டும் நிர்வாணமாய் இல்லை. என் மனங்கூடத்தான்..” என சொல்லி விடைபெறுகிறாள்.
மிகையுணர்ச்சி தூண்டும் கதைதான் ஆனால் இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு விடயத்தை நாம் யோசித்துதான் ஆகவேண்டும். ஒருவனை விட்டு பிரிந்து அவன் நினைவாகவே வாழ்வதற்கு பதிலாக அவனையே பொறுத்துக்கொண்டு வாழலாமே. அதுமட்டுமில்லை; ஓர் உறவு நமக்கு துரோகம் செய்துவிட்டதால் அதிலிருந்து பிரிந்தும் கூட அந்த உறவை எதைக் கொண்டும் நிரப்பாமல் அந்த உறவுக்கே இன்னமும் விசுவாசமாக இருக்கும் மனநிலை எத்துணை மோசமான பின்விளைவுகளைக் கொடுக்கக்கூடியது என இக்கதையில் முடிவில் இருந்து நாம் யோசிக்கலாம். நாம் எடுக்கும் முடிவை முதலில் நாம் முழுமையாகத்தான் புரிந்து கொண்டோமா என திரும்ப திரும்ப கேட்க வேண்டியுள்ளது. யாரோ நன்றாய் வாழ நாம் ஏன் நம்மை வதைத்துக் கொள்ள வேண்டும்.
‘நான் பகிரங்கமாகிறேன்’ விலைமாதர்களின் தேவை என்ன என சொல்லும் வகையைச் சார்ந்த கதை. நமக்கு நமது வாழ்க்கைதான் முக்கியம் அதில் முழு இன்பத்தோடு வாழ்ந்துவிட வேண்டும் யார் குறித்தும் கவலைப்பட அவசியமில்லை என்கிற சிந்தனை கொண்ட நண்பனால் மனம் தடுமாறுகின்றான் நாயகன் ; ஒரு முறை நிலப்படங்களைப் பார்த்துவிட்டு தனிமையில் நடந்து போகும் பெண்ணிடம் தப்பாக நடக்க எண்ணி அதன் பின்விளைவுகளை யோசித்து சட்டம் கொடுக்கும் தண்டனையை நினைத்துப்பார்த்து மனம் மாறி சிவப்பு விளக்கு பகுதிக்கு செல்கிறான் நாயகன்.
‘தழல்’ அனைத்துலகப் புகழ் பெற்ற ஒரு தொழில் அதிபரான எஸ்.எஸ் என்பவருக்கும் நாயகனுக்குமான உரையாடல்தான் இக்கதை. தம் சந்திதி சிறப்பாக வாழ பல தலைமுறையில் பாடுபடவேண்டும் என சொல்லும் கதையில் அதன் தீவிரத்தன்மை குறைவாகவே இருக்கிறது. ரொம்பவும் மேலோட்டமான உரையாடல் கதையை மேலும் பலவீனப்படுத்திவிட்டது.
‘மண்’ என்ற தலைப்பில் இவர் எழுதியிருக்கும் கதையில் நம்மையும் நம்முடைய பழைய வாழ்வியலை நினைக்க வைக்கிறார். இன்றைய குழந்தைகள் பிறந்த சில ஆண்டுகளுக்கு மண்ணையே மிதித்துப்பழகுவதில்லை. மண் தின்று வாய்த்திறந்து உலகை காட்டிய கண்ணன் கதைகளை கேட்டு வளர்ந்த ஒரு சமூகம் மண்ணை மிதிப்பதே அசுத்தமாக பார்க்கிறது. மரண படுக்கையில் இருக்கும் ஒருவன் தனக்கும் தன் மண்ணுக்குமான நெருக்கத்தை நினைத்துப்பார்த்தபடியே இறந்து போகிறான். அவன் இறந்து நாம் மிதித்த மண்ணை நினைக்க வைக்கிறான். இக்கதையை எழுத்தாளர் விவரித்த விதம் சிறப்பாக இருந்தது.
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதைச் சொல்லும் கதையாக ‘அஸ்தமனத்தில் ஓர் உதயம்’ என்கிற கதையை எழுதியுள்ளார். இக்கதையைச் சொல்ல அவர் தேர்ந்தெடுத்த கதைமாந்தர்கள்தான் இதன் சிறப்பு. கோவலன் கண்ணகி கதை நமக்கு தெரியும். ஊழ்வினையைச் சொல்லும் கதைகளில் அதுவும் ஒன்று. கோவலனின் வாழ்க்கை வழிமாறி போனதன் காரணமென்ன. ஏன் அவன் மனம் திருந்தி மனைவியுடன் வாழ நினைக்கும் போது குற்றம் சுமத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றான்; என்ற கேள்விகளுக்கு பதிலாக இக்கதையை ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
‘அஸ்தமனத்தில் ஓர் உதயம்’ என்பது மாசாத்துவனின் கதை. ஆமாம் நீங்கள் சரியாகத்தான் புரிந்து கொண்டீர்கள். மாசாத்துவன் கோவலனின் தந்தை. பெரிய வணிகர். இக்கதையின் மொழி சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. முதல் பத்தியை வாசிக்கும் போதே இதென்ன ‘பூம்புகார்’ கதையோ என சந்தேகம் வரவைக்கிறது. மற்ற கதைகளில் ஆசிரியர் பயன்படுத்திய மொழிக்கும்; இக்கதைக்கு பயன்படுத்திய மொழிக்கும் பெரிய வித்தியாசத்தை நாம் உணரலாம்.
பல ஆண்டுகளாக குழந்தைபேறு இல்லாமல் தவிக்கிறார் மாசாத்துவன். வேதனை கொண்ட நெஞ்சத்துடன் பூங்குழலி என்னும் பெண்ணின் இசையைக் கேட்கும்படி ஆகிறது. அந்த இசை நாயகனை தன் துயர் மறுக்கச்செய்கிறது. சில மாதங்கள் கடக்கின்றன. மாசாத்துவனின் மனைவி கர்ப்பம் தரிக்கின்றாள். மாசாத்துவனோ தவறாது பூங்குழலியை இசையை ரசிக்கச் செல்கிறார்.
அப்படியான ஒரு சமயத்தில் பூங்குழலி இசை மீட்ட அவளுக்குள் ஏதோ குழப்பம் தோன்ற கைகள் நடுங்கி இசை ஸ்ருதி தவறுகிறது. அது மாசாத்துவனை தாக்குகிறது. அந்த நேரத்தில் மாசாத்துவனுக்கு மகன் பிறந்துள்ளதாக வேலையாள் சொல்ல அவரும் உடனே கிளம்புகிறார். தன் இசையை முழுமையாய்க் கேட்டுவிட்டு செல்லும்படி பூங்குழலில் சொல்லியும் மாசாத்துவனுக்கு பிறந்திருக்கும் மகனைவிட பூங்குழலி மீட்டும் வீணை பெரிதல்ல என சொல்கிறார். ஏற்கனவே தன் மனதில் வெளியில் சொல்லமுடியாத ஏதோ ஒன்றை வேதனையுடன் வைத்திருக்கும் பூங்குழலிக்கு இது மேலும் வேதனையைக் கொடுக்கின்றது. உடனே மாசாத்துவனின் மகனின் வாழ்க்கை இதுபோன்ற ஒரு வீணையால்தான் கெடும் என சபிக்கின்றார்.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு காப்பியக் கதைக்கு சற்று முன்னே சென்று ஒரு புனைவை உருவாக்கியிருக்கிறார் எழுத்தாளர். ‘அப்பன் பாவம் பிள்ளையை பிடிச்சுகிச்சி’ என சொல்லி இக்கதையை கடக்க முடியாதபடிக்கு பூங்குழலி அவள் மனதின் எந்த பாரத்தை சுமந்திருப்பாள் என நம்மை யோசிக்க வைக்கிறார் ஆசிரியர்.
‘இந்த அத்தியாயத்தின் மறுப்பம்’ என்னும் கதையை நான்கே குரல்களின் வழி எழுத்தி முடிக்கின்றார் ஆசிரியர். நீதிமன்றம்தான் கதைக்களம். வாதி, பிரதிவாதி, நீதிபதியின் தீர்ப்பு, வாதியின் மனசாட்சி என்ற நான்கு குரல்கள்தான் அது. வாதியின் மனசாட்சி பேசும்வரை நாமும் நாயகனை குற்றவாளி கூண்டில்தான் வைத்திருப்போம்.
வாதியாய் இருக்கும் பெண், பிரதிவாதியாக இருக்கும் தன் கணவரின் நண்பர் தன்னை வல்லுறவு கொள்ள முயன்றார் என்று கூறுகிறது. பிரதிவாதி சொல்லும் எதுவும் எடுபடவில்லை. அவருக்கு ஒன்பது ஆண்டுக் கடுங்காவல் தண்டனையும் நான்கு பிரம்படியும் கொடுக்கும் படி தீர்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வளவுதான் கதை. ஆனால் வாதியின் மனசாட்சி பேசும் கடைசி பத்திதான் இக்கதையை அப்படியே மாற்றிப்போடுகிறது.
வாதிக்கும் பிரதிவாதிக்கும் நீண்ட நாட்களாகவே தொடர்பு இருந்திருக்கிறது. அப்படியொருநாள் இருவரும் இணைந்திருக்கும் போதுதான் அவளின் கணவர் வந்துவிட்டார். அவளுக்கு வேறுவழியில்லாமல் தன் காதலன் மீது தன்னை வல்லுறவு செய்ய வந்தான் என பழி சுமத்தி தன்னைக் காப்பாற்றிக்கொண்டாள். அவளுக்கு வேறு வழி இல்லை.
இப்போது அவள் தன் காதலனுக்காக வருந்தவும் தன்னை தானே நொந்துகொள்ளவும் செய்கிறாள். முக்கியமாக எதையுமே வாய்திறந்து செய்யவில்லை. ஒருவர் தப்பிக்க ஒருவர் பலியாகியுள்ளார்.
தன்னைக் காப்பாற்றிகொள்ள யாரும் எதையும் செய்ய தயாராய்த்தான் இருக்கிறார்கள் என நமக்குமே ஒரு பயத்தை கொடுத்துவிடுகிறது இக்கதை.
‘வட்டத்துக்கு வெளியே’ என்னும் கதையை இன்னும் நீட்டித்திருக்கலாமோ என தோன்றுகிறது. அதே போல கடைசியில் பேசும் சமூகக் கோவமும் இக்கதைக்கு தேவையில்லைதான்.
யாரோ ஒருவனால் வல்லுறவு செய்யப்பட்டவள் அறிமுகம் இல்லாத இன்னொருவனின் அறைக்கு நுழைந்து அடைக்களம் தேடுகிறாள். அறைக்கு உரிமையாளனோ தனிமை விரும்பி மாறுபட்ட சிந்தனை கொண்டவன். அவளைக் கண்டதும் என்ன நடந்திருக்கும் என யூகித்து அவளின் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. மெல்ல மெல்ல இருவரின் உரையாடலும் எல்லை மீறுகிறது.
‘ஆபாசப் புத்தகத்தைக் காற்றில் விசிறி அதனிடையே கையால் வெட்டி, வெட்டப்பட்ட படத்தைப் போல மேற்கொள்கிற செக்ஸ் விளையாட்டுகளைப் பற்றி நாங்கள் அளவளாவி இருக்கிறோம்…. ‘கடலிலிருந்து வீசுகிற நிர்வாணமான நாற்பது’ எனும் படத்தில் விவரிக்கிற ஒவ்வொருவரின் காம அனுபவங்களை நாங்கள் விமர்சித்து இருக்கிறோம்.’ என நாயகன் சொல்கிறார்.
ஒருவகையில் அந்தப் பெண் எல்லை மீற அனுமதிக்கிறாளா அல்லது அவள் அதிகமட்ச சுதந்திரத்தை எடுத்துக்கொள்கிறாளா என்கிற கேள்வி எழுகிறது. அவளின் கதாப்பாத்திரத்தை இன்னமும் தெளிவாக சொல்லியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஏனெனின் தனக்கு நடந்ததாய் அவள் சொல்லும் வல்லுறவும் அதற்கு பிந்திய அவளின் செயல்பாடுகளும் நம்மை அவ்வாறு யோசிக்க வைக்கிறது.
சிலநாட்கள் கழித்து நாயகனை சந்திக்க வந்த நாயகி அவனிடம் முந்நூறு ரிங்கிட் பணம் தேவைப்படுவதாக வாங்கி செல்கிறாள். சிறிய இடைவேளைக்கு பிறகு இருவரும் சந்திக்கின்றார்கள். அன்று அவளின் நிலைமைக்கு என்ன காரணம் என இப்போதுதான் அவனிடம் சொல்கிறாள். அதோடு அவன் கொடுத்த பணத்தை கொண்டு தன்னை தான் சுத்தப்படுத்திக் கொண்டதாக சொல்வதோடு கதையை முடிக்காமல்; சமுகம் மீது அறச்சீற்றமாக; “என் எதிர்ப்பின் வலுவெல்லாம் இழந்து, வதங்கிய நிலையில் நடந்தது அது. உன்னிடம் கேட்டுப்பெற்ற முந்நூறு வெள்ளியின் நான் என்னைச் சுத்தப்படுத்திக் கொண்டேன். என் மனத்திற்கும் அதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அது குறித்து நான் மேளம் கொட்டிக் கொள்ளவும் விரும்பவில்லை. உன்னுடைய சமுதாயப் பார்வையிலிருந்து – எண்ணத்திலிருந்து நீ கேட்கப்போகிற எந்தக் கேள்விக்கும் நான் பதில் சொல்லத் தயார் இல்லை” என்கிறாள். இப்படி சொல்வதுதான் அந்தக் கதாப்பாத்திரத்தின் பலவீனம் என தோன்றுகிறது.
இந்தக் கதைக்கு முக்கியமே அந்த இளைஞனும் இந்த பெண்ணும் பேசக்கூடிய உரையாடல்கள்தான். அதில்தான் இக்கதையின் முக்கியத்துவம் இருக்கிறது. அதனை எழுத்தாளர் பல இடங்களில் சட்டென கடந்துவிடுகின்றார்; என்று சொல்லி என்னால் கடக்க முடியவில்லை. அந்த இருவரின் உரையாடலில் என்னென்ன இருந்திருக்கும் என யோசிக்க வைக்கிறது.
இந்தத் தொகுப்பில் இன்னும் இருப்பது மூன்று கதைகள். அவை ‘புள்ளிகள்’, ‘அட.. இருளின் பிள்ளைகளே..’ “மனந்திரும்புங்கள்”. இந்த மூன்றுமே கவனிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட கதைகள்தான். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்தக் கதைகள் மீதான வாசகப்பார்வை அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே போகிறது.
‘மனந்திரும்புங்கள்’ என்னும் கதையை வாசிக்கையில் புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ கதையை நினைவூட்டியது. அந்தக் கதையில் புதுமைப்பித்தன் விட்ட இடத்தில் இருந்து இன்னொரு பார்வையில் இக்கதைச் சொல்லப்பட்டதாக தோன்றுகிறது. “என்னமோ கற்பு.. கற்பு.. என்று கதைக்கிறீர்களே ! இதுதான் ஐயா பொன்னகரம்..” என சொல்லும் அந்தப் பெண் வீட்டிற்கு சென்ற பின் என்ன நடந்திருக்கலாம் என அரு.சு.ஜீவானந்தன் சொல்கிறார். ஒருவரின் தியாகம் இன்னொருவருக்கு எப்படி துரோகமாக மாறுகிறது என்பதை வாசிக்கையில் நமக்குமே பதற்றம் ஏற்படுகிறது. கொலை செய்தவன் சொல்லும் ஒப்புதல் வாக்குமூலமாகவே இக்கதையைக் கொண்டு செல்கிறார் ஆசிரியர். இந்தக் கதையை நீங்கள் கட்டாயம் வாசிக்கத்தான் வேண்டும். நாம் உரையாடுவதற்கு இக்கதை தகுந்த கேள்விகளைக் கொடுக்கும்.
அரு.சு.ஜீவானந்தனின் எழுத்துகள், ஜி.நாகராஜன் கதைகளை நமக்கு நினைவுப்படுத்தவும் தவறுவதில்லை. விளிம்புநிலை மனிதர்களின் கதைகளை மிகவும் நெருக்கமாக எழுத்தாளர் எழுதிச்செல்கிறார். மலேசியச் சூழலில் அந்தக் காலக்கட்டத்தில் அப்படியான மனிதர்களை எழுதுவதில் ஒரு சிலரே ஆர்வம் காட்டியிருந்தனர்
‘அட.. இருளின் பிள்ளைகளே..’ என்னும் கதை ஒரு தலைமுறையின் அறியாமையைச் சொல்கிறது. நாயகன் துலுக்காணம் வாழும் தோட்டத்தில் பொதுத்தொலைபேசி வைக்க ஏற்பாடு செய்கிறது அரசாங்கம். அதிலும் நாயகனின் நிலத்திலேயே வைக்கிறார்கள். இது அரசாங்க திட்டம் என்பதால் இழப்பீடும் கொடுக்கப்படும் என சொன்னாலும் அதனை துலுக்காணம் வேண்டாம் என்கிறான். ஊருக்கு நல்லது நடக்கிறதே அது போதாதா என்பது அவனது எண்ணம். அங்கு பொதுத்தொலைபேசி வைக்கப்படுகிறது. அதன் பின் அது அவனுக்கு பயனாக இருந்ததா இல்லையா என்பதை கதையாக்கியிருப்பார் ஆசிரியர்.
பொதுத்தொலைபேசி என்பதே நாயகனுக்கு பெரும் அதிசயமாக இருப்பதை எழுத்தாளர் இயல்பாக சித்தரித்திருப்பார்.
துலுக்காணத்தின் மனைவிக்கு பிரசவ வலி வந்துவிட்டது; வீட்டின் முன் பொதுத்தொலைபேசி இருக்கிறது. மருத்துவரை அழைக்க ஓடிச்சென்று பார்க்க பொதுத்தொலைப்பேசியை பொறுப்பற்ற யாரோ சேதப்படுத்தில் பணத்தை திருடியிருப்பது தெரிகிறது.

இக்கதையில் மூன்றுவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். எதையும் இன்னொருவருக்கு கற்றுக்கொடுக்காமல் இருப்பவர். எதையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பவர். எதையும் சரியாக பயன்படுத்த தெரியாமல் அதனை சேதப்படுத்துபவர்கள். இந்த மூன்று பேரில் யாரை எழுத்தாளர் சொல்லும் இருளின் பிள்ளைகள் என தெரிந்து கொள்ள இக்கதையை நாம் வாசிக்க வேண்டும். இங்கே எது இருளாக இருக்கிறது? அறியாமையா பொறுப்பின்மையா அல்லது அதிகார புத்தியா?
நிறைவாக ‘புள்ளிகள்’ சிறுகதை. 1992-ஆம் ஆண்டில் எழுதிய கதை. அதுதான் இந்தத் தொகுப்பின் முதல் கதை. எழுத்தாளர் எழுதிய கடைசி கதையும் அதுதான். (அதன் பின் பல ஆண்டுகள் கழித்து வல்லினம் இணைய இதழுக்கு இவர் சிறுகதையை எழுதியிருக்கிறார்)
என்னளவில் இது எனக்கு நெருக்கமான கதையும் கூட. கையில் கிடைத்ததையெல்லாம் வாசித்த பதின்ம வயதில் இந்தப் புத்தகம் என் வீட்டில் இருந்தது. முகப்பில் பார்ப்பதற்கு தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தன் போல இருந்தார். அதன் பிறகுதான் இவர் மலேசிய எழுத்தாளர் என என் தந்தை அறிமுகம் செய்தார்.
அரு.சு.ஜீவானந்தனின் எழுத்தில் நான் வாசித்த முதல் சிறுகதை ‘புள்ளிகள்’. கடந்த ஆண்டு எங்களின் சிறகுகளின் கதைநேரம்; சிறுகதை கலந்துரையாடலிலும் இந்தச் சிறுகதையை வாசித்து கலந்துரையாடினோம். இன்று இந்தக் கதையை வாசிக்கும் வாசகர்களுக்குக்கூட இது பல திறப்புகளை வைத்திருக்கும் கதைதான்.
உயர்ந்த இடத்தில் நாம் வைத்திருக்கும் கருணையை ஆழமான பார்வையில் எழுத்தாளர் விமர்சித்திருப்பார். ஒருவர் மற்றொருவர் மீது காட்டும் கருணை ஏற்றுக்கொள்ளப்படாமல் போகும் போது கருணை தன்னை என்னவாக மாற்றிக்கொள்கிறது என்னும் ஒரு பார்வையும் இக்கதையில் உண்டு.
ஆசாரிகள் பட்டறை வைத்திருக்கும் இடத்தில்தான் குண்டாவிற்கு வேலை. வேலை என்றால் யாரும் சம்பளம் கொடுக்கும் வேலை இல்லை. தானே சம்பாதிக்க வழி கண்டுகொண்ட தனக்கான ஒரு வேலை. ஆசாரிகள் தங்கம் அடிக்கும் போது தங்கத்தை உருக்கும்போதும் சிதறித்தெறிக்கும் சில தங்கத்துகள்கள் சாக்கடையில் விழும். அந்த சாக்கடையை ஒரு பக்கம் அடைத்து, அந்தச் சாக்கடை நீரை மண்ணோடு அள்ளி வெளியில் எடுத்து , நாற்றத்தையும் பொருட்படுத்தாது மண்ணை அலசி அதிலிருந்து தங்கத் துகள்களை எடுப்பதுதான் குண்டாவின் வேலை. அதை எடுத்து சீனனிடம் விற்று பணம் வாங்கிகொள்வான். ஆனால் அதற்கு முன் அந்தத் தங்கத்துகள்களை ஆசாரியிடம் கொடுத்து உருக்கித்தரும்படி உதவி கேட்பான்.
ஆசாரி அவனிடம் இதற்கு மூன்று வெள்ளி வேண்டும் என கேட்க; தன்னிடம் இருக்கும் ஒரு வெள்ளியைக் கொடுத்து மீதப் பணத்தை சீனனிடம் விற்று வரும் பணத்தில் ஆசாரிக்கு கூறுகிறான்.
தங்கத்தோடு வாழும் ஆசாரிக்கு ஒரு மமதை இருக்கிறது. எப்படியும் சீனனிடம் குறைந்த விலைக்குதான் குண்டா இந்தத் தங்கத்தை விற்று ஏமாறுவான் என சொல்கிறார் ஆசாரி. ஆனால் ஆசாரி சொன்ன பணத்திற்கு அருகிலேயே குண்டா சீனனிடம் பணத்தை வாங்கிவிட்டான். அதனை ஆசாரியால் ஜீரணிக்கவே முடியவில்லை. இத்தனை ஆண்டுகளாக வேலை செய்யும் தனது கணிப்பு தவறானது ஒன்று தன்னிடம் பணிந்து உதவி கேட்டவன் தனது கணிப்பை பொய்யாக்கியது இன்னொன்று.
ஆசாரியால் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சீனன் குண்டாவிற்கு கொடுத்த பணத்தில் இருந்து தான் கேட்தைவிட கூடுதலாக ஒரு வெள்ளியை எடுத்து கொண்டு அவனிடம் வாக்குவாதம் செய்து குண்டாவை கடையை விட்டு விரட்டுகிறார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்போதும் தங்களுக்கு கீழ் சிலர் இருக்க வேண்டும் என்பதை எதிர்ப்பார்த்தே எதையும் செய்கிறார்கள். காட்டும் கருணையைக் கூட அதில் சேர்க்கலாம். ஆனால் கீழிருப்பவர்களின் சிறு சிறு முன்னேற்றம் கூட அவர்களை பதட்டமடைய வைத்து சுயரூபத்தை காட்ட வைக்கிறது.
இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளின் உரையாடலும் உரைநடையும் ஒன்றே போல் எழுதப்பட்டிருக்கிறது. ஒருவேளை இக்கதைகள் எழுதப்பட்ட சமயத்தில் அதற்கு அவசியம் இல்லாமல் இருந்திருக்கலாம்.
மலேசியாவில் எழுத்தாளர்களில் தனக்கென தனி முத்திரை பதித்த எழுத்தாளர்களில் அர.சு.ஜீவானந்தனும் ஒருவர். இன்றைய இளம் தலைமுறை எழுத்தாளர்களும் வாசகர்களும் இவரின் எழுத்துகளை தவறாது வாசிக்க வேண்டும். ஓர் எழுத்தாளரின் புனைவுகள் பல ஆண்டுகள் கழித்தும் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படுவது அதன் பல்வேறு அடுக்குகள் வாசகர்களுக்கு திறப்பாக அமைவது அவ்வளவு எளிதல்ல. நிச்சயம் இவரது எழுத்துகள் வாசர்களை ஏமாற்றாது என்றே ஒரு வாசகனாக சொல்கிறேன்.
00

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.