பஞ்சவர்ணக் காகம்
—
‘எனக்கு ஒரு ஏ ஃபோர் ஷீட்டும் பென்சிலும் குடுத்தீன்னா
நான் உன்னைய டிஸ்டப் பண்ணாம வரைஞ்சிட்டிருப்பேன்’
,
பணிவான மிரட்டலோடு கேட்ட அயலக ரௌடி பாலகனுக்கு
காப்பியர் தாள், பென்சில்களை மாமூல் செலுத்தினேன்
,
மேஜையிலோ அட்டையிலோ வைத்து வரையும் வழக்கமற்ற அவன்
தடாலென நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் வீழ்ந்து
வேற்றுலகில் புகுந்தான்
,
சோட்டா பீம், காளியா, வருத்தப்படாத கரடி, பச்சை டைனோஸர்,
விஜய் அங்க்கிள், ரஜினித் தாத்தா, கனிஷ்கா மிஸ், ஸ்கூல் பஸ்,
கடைசியாக பஞ்சவர்ணக் காகம்
,
விடுமுறைப் பிற்பகல் அற்புதங்களால் ஒளிர்ந்தது
,
‘ட்யூஷனுக்கு நேரமாச்சு…’
அழைப்புக் குரலில் வேண்டா வெறுப்பாக எழுந்து
பென்சில்களையும் மகிழ்ச்சியையும் விட்டுவிட்டு
உம்மணாமூஞ்சியோடு பழைய உலகுக்குத் திரும்பினான்
,
அவனது முதுகில் பஞ்சவர்ணச் சிறகுகள் முளைத்திருந்தன
படிக்கட்டிலேயே காத்துக்கொண்டிருந்த புத்தக மூட்டை
அவனது சிறகுகளை ஒடித்தெறிந்து வீசிவிட்டு
அவை இருந்த இடத்தில் தொற்றி ஏறிக்கொண்டது
++
ப்ளாடிபஸ் முட்டைகள்
++
கையளவு வானம்
150 கிராம் மேகங்கள்
ஒரு தேக்கரண்டிக் கடல்
இவை இருந்தால் போதும் இன்றைய இரவுணவுக்கு
,
டயட்டில் இருப்பதால்
திமிங்கலங்களையோ சுறாக்களையோ தின்பதில்லை
கடற் பாலூட்டி முட்டைகள் கிடைத்தால் ருசி பார்க்கலாம்
,
நள்ளிரவு வரை விழித்திருக்கலாகாதென மருத்துவர்கள் எச்சரிக்கை
பதினோரு மணிக்காவது தூங்கிவிட வேண்டும்
டாலியின் ஓவியங்களைவிடவும் அபத்தக் களஞ்சியங்களான
கனவுகளை என்ன செய்வது
சட்டகத்தில் அடைத்துச் சுவரில் மாட்ட முடிந்தாலாவது தேவலாம்
அழகியல் அருங்காட்சியமாகவே ஆகியிருக்கும் என் வீடு
எதார்த்தத்திற்கு ஜென்ம விரோதிகளான இந்த மூளைதின்னிகளை
மண்டைக்குள்ளிருந்து வெளியே கொட்டாமல்
ஒரு நாளும் என்னால் உறங்க முடிவதில்லை
நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள் சக கவிஞர்களே?
—
மென்மை மிகக் கொடூரமானது
—
உலகில் மிகக் கொடூரமானது அன்பும் கருணையும்
அவற்றை என் மீது செலுத்தி ஏன் இப்படிச் சித்ரவதை செய்கிறீர்கள்
,
நீங்கள் என்னை வாழவைக்க விரும்பினால்
உங்கள் உயிரைக் கொடுத்து வாழவையுங்கள்
அல்லது என்னைக் கொல்ல விரும்பினால்
சம்மட்டியால் பிடரியில் ஒரே அடியில் கொன்றுவிடுங்கள்
,
கேட்பாரற்ற வானம்
++
மறி மேக மந்தைகள் மேயும் புராதன வானத்தைத்
தொல்பொருள் அங்காடியில் விற்பதற்காக
கட்டைப் பையில் சுமந்து சென்றுகொண்டிருந்தேன்
அட்லஸின் பாரம் புரிந்தது
அவ்வளவு கனம்
,
செல்லும் வழியில்
செயற்கைக் கோள்கள் திரியும் அண்டவெளி கீழிறங்கி
கேட்பாரற்றுக் கிடந்தது
சுற்றுமுற்றும் பார்த்தேன்
பூமியுருண்டை அதி வேகமாகச் சுழன்றுகொண்டிருந்தது
நடமாடிகள், வாகனதாரிகள், நடைபாதை வியாபாரிகள்
ஒருவரும் கவனிக்கவில்லை
ஆளற்ற தொலைபேசிக் கூண்டின் மறைவில் நின்று
அண்டத்தை எட்டியெடுத்துச் சுருட்டிப் பையில் ஒளித்துக்கொண்டு
காலாவதி ஆகாயத்தை மேலே பொருத்திவிட்டுக்
கமுக்கமாக வந்துவிட்டேன்
,
நம்பவியலவில்லையெனில் அண்ணாந்து பாருங்கள்
அரதப் பழைய வானம்தான் உங்கள் தலைக்கு மேலே இருக்கும்
—
தேற்றங்களும் மறுதலைகளும்
++
பேரன்பு திரிபுற்று பெரும் வஞ்சமாகிறது
அடங்காப் பகை வெறியின் மையப்புள்ளி
பாசமோ நட்போ காதலோவாக இருக்கலாம்
ரோஜாவில் பேண்டுவிட்டுப் போகிறது பட்டாம்பூச்சி
*******
ஷாராஜ்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023 ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.