பருவ நாடகம்
—————————-
45 வயது ராதா
தனது Redmi 9 power ல்
தனக்குப் பிடித்த
மேஸ்ட்ரோவின்
இஷ்ட கானத்தை play செய்து
தனக்குத் தானே
புன்னகைத்து
தலையசைக்கிறாள்
,
அவள் முன்
வெட்டவெளியில்
விரியும்
வெண் திரையில்
,
ஸ்டெப் கட்டிங் குலுங்க
பெல்பாட்டம்
பாபி காலர் சட்டை
அகலமான பெல்ட்டுடன்
“விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம் ….
பருவ நாடகம் அரங்கில்
ஏறு தாம்… “
,
எனப் பாடிக்கொண்டிருப்பது
அவள்
50 வயது மோகன் அல்ல
அவள்
20 வயது கிருஷ்ணன்
மரவள்ளிக் கிழங்கு
—————————————-
கிலோ இருவது…
கிலோ இருவது……
எனக் கூவிக் கொண்டிருந்தான்
மரவள்ளி வியாபாரி
,
ஒரு கிலோ கேட்டேன்
ஏழு கிழங்குகள்
கிடைத்தன
,
அதில் ஒன்று
விளைவித்தவனின்
ஐந்தாம்விரல்
போலவே இருந்தது.
,
சித்திரத்தில் வந்தமரும் கொக்கு
—————————————————————-
எருமை ஒன்றை
வரைந்து
கருமை தீட்டிக் கொண்டிருந்தேன்
,
சட்டென்று
பச்சை பசேலென
அருகம்புற்கள்
முளைக்கத் துவங்கிவிட்டன
,
இனி
எருமையின் மீது
வெண் கொக்கொன்று
வந்தமர்ந்தாலும்
அமரலாம்
இன்றே கடைசி
——————————–
திக்கெட்டும் கோலோச்சிய
திரையரங்கமொன்று
இடிபட்டுக்கொண்டிருக்கிறது
,
காரேறிப்போய்விட்டார்
காணச்சகியாத
முதலாளி
,
சோறிட்டநன்றியில்
தாவாங்கட்டையில்
நீர்வழிய
நின்று கொண்டிருக்கிறார்
ஊழியர்
,
கடைசி நொடி வரை
வரவேயில்லை
,
உச்சகட்ட காட்சியில் தோன்றி
ஊரையேக் காப்பாற்றும்
பராக்கிரமசாலிகளான
எந்தவொரு நாயகனும்
000

ஸ்ரீதர் பாரதி
நவீன தமிழ் இலக்கிய சூழலில் கவிதை சிறுகதை என தொடர்ச்சியாக இயங்கி வருபவர்
மதுரையில் வசித்து வருகிறார்
தமது படைப்புகளுக்காக புதுக்கோட்டை புத்தகக்
கண்காட்சியில் ‘தமிழ்நாடு அறிவியல் இயக்க விருது’
‘வடசென்னைத் தமிழ்ச்சங்க விருது’
திருப்பூர் இலக்கியவிருது’
ஆகியவற்றைப் பெற்றவர்
இதுவரை வெளிவந்த
கவிதை நூல்கள்
—————————————-
1.செவ்வந்திகளை அன்பளிப்பவன்
2.கருப்பு வெள்ளை கல்வெட்டு
3.முத்தம் சரணம் கச்சாமி
4. அப்பாவின் குதிரை
சிறுகதைத்தொகுப்பு
—————————————–
1.ஜெயக்கொடி