‘தேவவிரதன்’
சமீப காலங்களில் நான் வெகுவாக கேட்கும் இந்த வார்த்தையை யார் முதன் முதலில் கண்டுபிடித்து, பெரும்பாலான மணமுறிவுகளுக்கும், விவாகரத்துகளுக்கும் காரணமாக உபோயகப்படுத்தலானார்கள் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது.
மூத்த குடிமகனாக எனக்கு ஏன் இந்த சந்தேகம் வந்தது என்று இதை படிக்கும் உங்களில் பலர் மனதிலும் இந்த கேள்வி எழலாம்.எழும்.; எழாவிட்டால்தான் ஆச்சரியம்.
எனக்கு உண்மையில் இந்த தமிழ் வார்த்தையின் அர்த்தம் மிகவும் ஆழமானதாக தோன்றுகிறது.
உலகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் எந்த ஓர் விஷயத்தை பற்றியும் ஓர் கருத்து இருக்கும் என்பதை கட்டாயம் மறுக்க முடியாது. அது அரசியலோ, தின்பண்டமோ, சாப்பாடோ, கதையோ, உடையோ, திரைப்படமோ, சங்கீதமோ, பழக்க வழக்கங்களோ எல்லாவற்றை பற்றியும் ஒவ்வொருவருக்கும் ஓர் அபிப்ராயம் ஏற்படுகிறது அல்லது இருக்கும். அது மனித இயல்பு; அதுதான் மனித குணம்.
ஒருவருக்கு பிடித்த ஒன்று உங்கள் நண்பராகவோ, பிள்ளைகளாகவோ, மனைவியாகவோ, கணவராகவோ இருந்தாலும் கூட அவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
வாழ்வில் நாம் சந்திக்கும் எல்லா விஷயங்களிலும், ஒரே கருத்து உடைய இருவருக்கும் இடையிலும் கூட மாறுபட்ட அபிப்ராயங்களோ, கருத்தோ இருக்கக்கூடும். அதை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது.
பிடித்த விஷயங்களை இணைந்து அனுபவித்து போல, பிடிக்காத விஷயங்களை நமக்கு நெருக்கமான ஒருவருக்கு உகப்பாக இல்லை என்பதற்காக தூக்கி எறியவும் முடியாது; முயன்றவரை, நம் கருத்தை அவருக்கு ஏற்ற முறையில் எடுத்து வேண்டுமானால் சொல்லலாம்; அதற்கு மேலும் விவாதம் தொடருமானால், அதை தவிர்த்து விடுவது நல்லது என்பது என் அபிப்ராயம்.
இதை தாண்டி அது எந்த மாதிரியான விஷயம் என்பதும் இங்கு முக்கியமாகிறது. இரு நண்பர்களிடையே ஒருவருக்கு இன்னொருவருடன் இருக்கும் நட்போ, தொடர்போ மற்றவருக்கு பிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். பிடிக்காத நண்பரைப்பற்றிய சமாச்சாரங்களை நாமும் பிடித்த, ஆனால், மற்றொரு நண்பருக்கு பிடிக்காத விஷயமாக இருந்தால் அதை இவரிடம் சொல்வதையும், நமக்கும், அந்த மூன்றாவது மனிதருக்கும் உள்ள தொடர்பை பற்றியும் பேசாமல் தவிர்த்து விடுவது நல்லது. அதையும் தாண்டி மற்றவர் குறுக்கீடு செய்தால் அதை நாம் சரியான முறையில் பேசி விவாதத்தை தடுக்க வேண்டும். இதையும் தாண்டி இந்த குறுக்கீடு தொடருமானால், நமக்கு யாருடைய நட்பு முக்கியம் என்ற கேள்வி எழும். அதை சமாளிக்க வேண்டியது அந்த தனி மனிதனின் பொறுப்பு.
ஆனால், திருமண பந்தங்களில் இது போன்ற சந்தர்ப்பங்கள் வீணான வாக்குவாதங்களில், சந்தேகங்களிலும் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயம் இல்லை. இது போன்ற சந்தர்ப்பங்கள் சிக்கலை உண்டாக்குவதுடன், ஒருவர் மேல் இன்னொருவர் சந்தேகம் கொள்ள வழி வகுக்கிறது என்பது என் கருத்து.
நண்பர்கள் இடையே இந்த மாதிரி பிரச்சினை எழுந்தால் அதை ஓரளவு தீர்த்து விடமுடியும். அப்படியும் முடியாவிட்டால், எந்த நட்பு முக்கியம் என்பதை முடிவு செய்வது அந்த தனி ஒருவனின் பொறுப்பாகிறது. நண்பர்கள் மட்டுமே எனில் இந்த பிரச்சினை வளர வாய்ப்பில்லை; ஆனால், கணவன்-மனைவி என்று வரும்போது இது போன்ற சந்தர்ப்பங்கள் விபரீதமான சந்தேகங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் வழி வகுக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
ஆக, இந்திய மணமுறிவுகளுக்கு முக்கிய காரணம் இது போன்ற பிடிவாதமான தனி மனித அபிப்ராயங்களும், முடிவுகளுமே காரணம் என்று கொள்ளலாமா?
பழக்க வழக்கங்களில் தோன்றும் மன வேறுபாடுகள் ஓரளவு சமாளிக்க கூடியவை என்றாலும், அதிலும் ஒருவரே விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல; அந்த நாட்களில், பெண்களுக்கு சுதந்திர சிந்தனைகளோ, அபிப்ராயங்களோ இல்லாததால், இருந்தும் செயல் படுத்த முடியாததால், விட்டுக்கொடுத்து வாழ்ந்து கொண்டிருந்தனர் என்பதை மறுக்க முடியாது. காரணம் பெரும்பாலும், பொருளாதார வசதி, மற்றும் குழந்தை வளர்ப்பு தவிர அவர்களின் எதிர்காலம் ஓர் கேள்வி குறியாகி விடும்.. மணமுறிவு ஏற்பட்டால் அது அந்த நாட்களில், ஏன் இந்த நாட்களில் கூட வளரும் பிள்ளைகளின் வாழ்க்கையில், பிரச்சினைகளை அணுகும் முறைகளில் வித்தியாசத்தை உண்டு செய்யக்கூடும்.
இன்று நிலைமை கிட்டத்தட்ட தலைகீழாய் மாறிவிட்டது என்றே கூறலாம். நான் பார்த்து அறிந்த பல நண்பர்கள் குடும்பங்களில் மணமுறிவு என்பது சர்வசாதாரணமாகி விட்டது என்றால் மிகையில்லை. நான் ஓரளவு நெருங்கி பழகும் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் குடும்பகளிலேயே இத்தகைய பிரிவு ஏற்பட்டு விட்டது; ஒருசில இடங்களில் குழந்தைகள் இருந்தும் கூட. இல்லாவிட்டால் அதிக பிரச்சினை இல்லை என்பதும் நிஜம்.
நான் இந்த சமாச்சாரத்தில் அதிகம் கேள்விகள் கேட்பதில்லை. ஏனெனில் இது போன்ற விஷயங்களில் ஒரே மனிதரிடம் கேள்வி கேட்டு அதை ஆதாரமாகக் கொண்டு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.
ஆனால்,சில விஷயங்களை என்னால் புரிந்துணர முடிகிறது.
என்னதான் புனிதத்துவம் கொடுத்தாலும் கணவன்-மனைவி உறவு என்பது மிகவும் பிரத்தியேகமான தவிர, அதே சமயம் மிகவும் சிக்கலான ஒன்றுதான். ஒருவரிடம் கேட்டு முடிவு எடுத்து தீர்ப்பு வழங்குவது ஏற்க முடியாதது. எனக்கு தெரிந்து முதல் பார்வையிலேயே வித்தியாசமாக (நான்) உணர்ந்த ஓர் தம்பதி சில நாட்களிலேயே விவாகரத்து பெற்றதும், பின் நண்பர்களை போல் தோன்றிய போது சந்தித்து கொண்டதும் சற்று வியப்பான விஷயங்களே.
ஆக, இந்த ‘கருத்து வேறுபாடு’ என்று மிகவும் அதிகமாகி வர எனக்கு மனதில் பட்ட சில காரணங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
v படிப்பறிவு
v பொருளாதார சுதந்திரம்
v விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை
v சுய கெளரவம் அல்லது கர்வம்
v தன்னை பற்றிய மிக உயர்வான எண்ணங்கள்
v பிறர் மீது நம்பிக்கை வைக்கும் குணம் இல்லாமை
v சமூகத்தை பற்றி கவலைப்படாமை
v மேல்நாட்டு வாழ்க்கை முறையை பின் பற்றும் குணம்
v தாம்பத்ய வாழ்க்கையில் தோன்றும் எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் எல்லாவற்றிற்கும் மேலாக
v அசாத்திய மனவலிமை அல்லது தைரியம்
இந்த குணங்களை நான் ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுவாக வைக்கிறேன். இதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.
நாம் நினைப்பது போலவே நடப்பது ஒரு சிலருக்கே என்று இருந்த இந்த சமூகத்தில் இன்று பண பரிவர்த்தனைகளை, சுய சார்பும் அழுத்தமாகி விட்டன. பிறரை பணத்திற்காகவோ, சமூக அந்தஸ்திற்காகவோ அல்லது
குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவோ சார்ந்து வாழும் வாழ்க்கை இன்று எவருக்குமே இல்லை.
அந்த விதத்தில் நாம் சமூக அந்தஸ்திலும், வாழ்க்கை முறையிலும் மேம்பட்டு விட்டோம் என்பதில் ஐயமில்லை.
என் அனுபவத்தில் வாழ்க்கையில் சமரசங்கள் செய்துகொண்டு வெற்றி கண்டவர்களும் உண்டு; தோல்வி தழுவியவர்களும் இருக்கிறார்கள். அதனால், இதுதான், நியாயம், சரி, தப்பு என்று சொல்ல எந்த மூன்றாமவருக்கும் உரிமை இருப்பதாக நான் நினைக்கவில்லை.
‘சரி’, ‘தவறு’ என்பது அந்த தனி ஒருவருக்கே சொந்தமானது. ஆனால், அன்று அதை வெளிப்படையாக சொல்ல, செய்ய உரிமை மறுக்கப்பட்டிருந்தது.
அந்த தளைகளிருந்து இன்றைய சமூகம் விடுபட்டு விட்டது.
நான் இன்று தைரியமாக, தங்கள் கருத்துக்களோடு முன்னேறி செல்லும் இளையதலைமுறையை கண்டு வியக்கிறேன்; பாராட்டுகிறேன். இதனால், பாதிப்பு அந்த இருவரைத்தவிர சுற்றில் இருக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படலாம். அதை எப்படி எதிர் கொள்வது, அல்லது ஏற்றுக் கொள்வது என்பது அவரவர்களின் சொந்த பிரச்சினை அல்லது அபிப்ராயம்.
அதை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அது முறையன்று என்பது என் கருத்து.
00

தேவவிரதன்
இராசயன பொறி இயல் துறையில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்ற எனக்கு சிறுவயது முதலே எழுத்து, இசை, ஓவியம், ஆகிய துறைகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. பல சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. ஆங்கிலத்திலும் வலைத்தளங்களில் எழுதுவதுண்டு. கர்நாடக இசை விமர்சங்களை தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரபல ஆங்கில நாளிதழில் எழுதி வருகிறேன். சமீப காலங்களில் வலைத்தளங்களில் கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

