-மணிமீனாட்சிசுந்தரம்.
“இப்பொழுதும்
அங்குதான் இருக்கிறீர்களா?
என்று கேட்டார்
“எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன் “
என்றேன்
– நகுலன்
நில்லாமல் ஓடும் காலத்தின் ஓட்டத்தை, வாழ்வையே ஓட்டப்பந்தயமாக்கிவிட்ட நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. விரைந்து செல்லும் வாகனத்தில் இருக்கும் நாம், நமக்கு எதிர்திசையில் விரையும் மரங்களையும் கட்டடங்களையும் எண்ணிக்கொண்டா இருக்கிறோம்? வாகனத்தின் வேகத்தைவிட முந்திச்செல்லும் வாழ்வின் பிரச்சனைகளைத் துலாவித் தொட முனைவதில்தானே நம் முழுக்கவனமும் இருக்கிறது.
ஆனாலும் சுழித்து ஓடும் ஆற்றின் போக்காய்க் கடந்துவிடும் காலம் குறித்து மனிதனுக்குக் கவலையில்லாமல் இல்லை. ஆனால் உண்மையில் காலத்தைக் குறித்த கவலை என்பது காலத்தைக் குறித்த கவலையல்ல. அது காலத்தில் கைவிட்டுப் போன வாழ்வின் வாய்ப்புகள் குறித்த கவலை. லாட்டரியில் பரிசைத் தவறவிடுபவன் எண்களை இகழ்வதுபோலத்தான் இதுவும்.
நம் பழைய இலக்கியங்கள் கழிந்துபோன காலங்கள் குறித்துக் கவலைப்பட்டிருக்கின்றன. மனித வாழ்வின் செல்வத்திற்கும் புகழுக்கும் உயர்வுக்கும் மகிழ்வுக்கும் அடிப்படையான ‘ இளமைக்காலத்தின் கழிவு’ பற்றிய கவலையே அவற்றில் பெரும்பாண்மை எனலாம். மீண்டும் திரும்ப வராத அக்காலம் குறித்த ஏக்கம் இல்லாத மனித மனங்களும் குறைவுதான். அவற்றையே நம் இலக்கியங்களும் பலபடப் பேசியுள்ளன.ஆனால், நாம் இங்கே பேச விரும்பும் இரு கவிதைகள், காலம் பற்றிய மரபு வழிப்பட்ட இந்தப் பண்பைக் கொண்டிருக்கவில்லை.
சென்ற வாரம் பணி ஓய்வுபெறும் நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். வந்திருந்தவர்கள்,
“இப்போதுதான் வேலைக்குச் சேர்ந்தது போல் இருந்தது, அதற்குள் இத்தனை வருடங்கள் ஓடிவிட்டதா? ” எனப் பேசிக்கொண்டார்கள். தோளுக்கு மேல் வளர்ந்து நின்ற நண்பரின் பேத்தியைப் பார்த்த ஒருவர், ” உங்க பேத்தியா, பிறந்தபோது பார்த்தது. அதுக்குள்ள இப்படி வளர்ந்துவிட்டாளே!” என்று வியந்துகொண்டார். இரண்டு உரையாடல்களிலும் காலம்தான் மையம் என்றாலும் முதல் உரையாடலில் காலத்தின் விரைவு குறித்த கவலையும், இரண்டாவது உரையாடலில் காலத்தின் விரைவு குறித்த மகிழ்வும் வெளிப்படுகிறது.
பொது மனநிலை இப்படித்தான் காலத்தின் தன்மையை தனக்குள் வைத்துக் காண்கிறது.
ஆனால், நாம் பேசப்புகும் இரு கவிதைகள் இந்தப் பொது மனநிலை யைப் பேசுபவையும் அல்ல. அதனாலேயே நம்மைக் கவரும் கவிதைகளாகவும் இவை இருக்கின்றன.
கவிதை – 1
——————-
அவன் எப்போது தாத்தாவானான்
————————————————————-
/தெருவில்
விளையாடிக்கொண்டிருந்தான்
பள்ளிக்கூடம்
போய்க்கொண்டிருந்தான்
வேலை பார்த்துக்கொண்டிருந்தான்
ஊர் சுற்றிக்கொண்டிருந்தான்
கவிதை எழுதிக்கொண்டிருந்தான்
குடித்துக்கொண்டிருந்தான்
பிள்ளைகளை ஆளாக்க
பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தான்
ஜோதிடம் கற்றுக்கொண்டிருந்தான்
ஸ்தல யாத்திரை
செய்துகொண்டிருந்தான்
என்னவெல்லாமோ
பண்ணிக் கொண்டிருந்தான்
எப்படியெல்லாமோ
இருந்துகொண்டிருந்தான்
இப்போது பார்த்தால்
தாத்தா என்கிறார்கள்
இன்னும் அவன்
கல்லத்தி முடுக்குத் தெருவிலேயே
நின்று கொண்டிருக்கிறான்./
கவிஞர் விக்ரமாதித்யனின் கவிதை இது. ஒருவர் தன் வாழ்வில் தாம் அறியாமலேயே நிகழ்ந்துவிட்ட கால மாற்றம் குறித்துக் கூறும் தொனியில் அமைந்த கவிதை இது. ஆனால், கவிதை வெறும் கால மாற்றத்தைக் கூறுவதாக மட்டுமே அமைந்துவிடவில்லை.
தான் தாத்தாவாகிவிட்டதை வியந்து உணரும் தருணத்தில், அதற்கேயான மெனக்கெடல்கள் எதுவும் இல்லாமல் இதுவரையில் அமைந்துவிட்ட தன் வாழ்வு பற்றிய ஒருவரின் சுயவிமர்சனமாகவும் கவிதை விரிகிறது. இங்கு விரைந்து கழிந்த காலத்தைப் பற்றிய புகாருமில்லை : காலத்தே செய்ய மறந்தவை பற்றிய குற்ற உணர்வுமில்லை.
இயல்பான ஒரு குடும்பவாழ்வில் ‘தாத்தா’ எனும் உறவுமுறை இடத்தை அடைய ஒருவருக்கு இருக்கவேண்டிய பொறுப்புகள், கடமைகள் குறித்து இயல்பான சமூகம் மனத்தில் கொண்டிருக்கக்கூடிய விசயங்கள் வெளிப்படையானவை ; எல்லோரும் நன்கறிந்தவை. அதனால், கவிதை அவைகளைப் பற்றிக் கூறுவதைத் தவிர்த்து விட்டு, தான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதையே பட்டியலிடுகிறது.
கால ஓட்டம் பற்றிய உணர்வேதுமில்லாமல் தன் வாழ்க்கை ஓட்டத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்த ஒருவரைத் ‘ தாத்தா ‘ என்ற சொல் திடுமென நிறுத்தித் திரும்பிப் பார்க்க வைக்கிறது. எவ்விதத் திட்டமிடலும் இல்லாத தன் கடந்த காலம் அவருக்கு நினைவில் ஓடுகிறது.
‘ என்னவெல்லாமோ பண்ணிக்கொண்டிருந்த,
எப்படியெல்லாமோ
இருந்துகொண்டிருந்த’
விட்டேத்தியான மனநிலை வாய்க்கப் பெற்றவராகவும், திட்டமான எல்லைகளை வகுத்து முன்னேறத் தவறியவராகவும், வாழ்க்கைக்கான போராட்டத்தில் கால ஓட்டம் பற்றிய அக்கறையற்ற ஒருவராகவும் அவரை நாம் கருதி வாசித்து முடிக்கையில் ,
‘ இன்னும் அவன்
கல்லத்தி முடுக்குத் தெருவிலேயே
நின்று கொண்டிருக்கிறான்’
என்னும் வரிகள், கவிதைக்கு வேறொரு வண்ணத்தைத் தருகின்றன. இதுவரையில் சாமான்ய ஒருவராக நாம் கருதிய ‘ தாத்தா’ எனும் நபரை இவ்வரிகள் வேறுபட்ட ஒருவராக, பற்றற்ற மனநிலை கொண்ட ஒருவராகக் காட்டிவிடுகிறது ; இல்லறத்தில் இருந்தாலும், தன் வாழ்வையே தனித்து நின்று பார்த்துச் சொல்லும் ஒரு பற்றற்ற குரலாக மாற்றி ஒலிக்கச் செய்கிறது.
கவிதையின் கடைசி இவ்வரிகள் கவிதையில் பெரும்பான்மையாக வெளிப்படும் ‘பொறுப்பின்மை’ என்பதிலிருந்து ‘பற்றின்மை’ எனும் தன்மைக்குள் முழுக்கவிதையையும் அடைக்கப்பார்க்கிறது.
‘கல்லத்திமுடுக்குத் தெருவிலேயே நின்று கொண்டிருப்பவர்’ என்பது வீட்டுக்குள், குடும்ப உறவுகளுக்குள் உழல மறுக்கும் மனநிலையைச் சுட்டுவதாகவே கவிதையில் ஒலிக்கிறது.கவிஞனின் இந்தச் சாமர்த்தியம், தன் பொறுப்பைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளாத ஒருவனின் புலம்பலை, ஒரு சித்தனின் வாய்வார்த்தையாக மாற்றிவிடுகிறது.

கவிதை -2
——————-
பிராயம்
——————
/அப்படியேதான் இருக்கிறாய்
என்பது அம்மா
எவ்வளவோ மாறிவிட்டேன்
என்கிறாள் மனைவி
தொட்டுப் பேசக் கூசுகிறான்
வளர்ந்துவிட்ட மகன்
நீயே பார்த்துக்கொள் என்று
காதோர நரையைக் காட்டுகிறது
கண்ணாடி
இடுப்பிலிருந்து
இறக்கப் பார்க்கும் கால்சட்டையை
ஒரு கையால் இழுத்துப் பிடித்தபடி,
மறுகையால்
பையில் உருளும்
கண்ணாடிக் கோலிகளைத்
தொட்டெண்ணும்
சிறுவன் எனது
விரலுக்குச் சிக்கியும்
மனதுக்குத் தப்பியும்
நடுவில் சில
நழுவிப் போய்விட
முழுதாய் ஒருமுறையும்
பின்னமின்றி எண்ணி
முடிக்கவில்லை
இன்னமும் நான்./
கவிஞர் க.மோகனரங்கத்தின் கவிதை இது. கால மாற்றத்தில் ஒருவரின் உடல் தோற்ற மாறுபாடுகளைக் கூறுவதாகக் கவிதை தொடங்குகிறது. உடல் தோற்ற மாறுபாடுகள் குறித்து உறவுகள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் கவிதை தொடர்ந்து சொல்கிறது.
கால மாற்றம் ஒருவரது தோற்றத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பிறரது செயல்பாடுகளாலும், தன்னைத்தான் பார்த்தும் உணர்ந்துகொள்வதுமாகக் கூறும் கவிதை, ஒருவரது பருவமாற்றம் வாழ்வில் ஏற்படுத்திவிட்ட எதிர்வினைகளைப் பற்றிக் கூறுவதற்காக எழுதப்பட்டதோ என எண்ணும் வேளையில், அடுத்து வரும் வரிகள் இதுவரையில் பேசப்பட்ட உடல் பற்றிய விசயங்களை மறுத்துக் கவிஞனின் பால்ய கால குணத்தில் மையம் கொள்கிறது.
“எனக்கு வயதாகிவிட்டது உண்மைதான்.
அம்மாவுக்கு மட்டும் எப்போதும் நான் குழந்தைதான். எப்போதும் அருகிலிருக்கும் மனைவியும் மகனும் கால ஓட்டம் ஏற்படுத்திய எனது உடலின் மாற்றங்களை எனக்கு உணர்த்தாமலில்லை. கண்ணாடியும் என் காலத்தின் கதையைச் சொல்லத்தான் செய்கிறது ” என்று கூறும் கவிஞர், தன் இளமைக் கழிவு பற்றித்தான் ஏதோ சொல்லப் போகிறார் என எண்ணினால், இல்லை இல்லை நான் சொல்ல வந்ததே வேறு என்கிறார்.மாறிவரும் என் பருவங்களில் மாறாத சிறுபிள்ளைப் பருவத்தானாகவே இப்போதும் நான் இருக்கிறேன் எனச் சொல்லி முடிக்கிறார் கவிஞர்.
இளமை கழிந்து முதுமையைத் தொட்டு விட்டாலும் இன்னும் சிறுவயது மனநிலையில் இருந்து மாறிவிடாத, ஒரு முதிய தோற்றமுள்ள இளம் பிள்ளையைக் கவிதை நம்முன் நிறுத்துகிறது. இங்குக் கவிதை கழிந்த இளமையைப்பாடி ஒப்பாரி வைக்காமல்
கழியாத பால்யத்தின் மனநிலையைக் கைகளில் ஏந்துகிறது. முதிர்ந்த உடலுக்குள் இன்னும் உயிர்ப்பாக இருக்கும் குழந்தைமையின் துடிதுடிப்பைச் சொல்லிக் காட்டுகிறது.
கழிந்த பருவம் குறித்துக் கவலைப்படும் பொதுவான கவிதைகளில் ஒன்றாக இது இல்லாமல், கழிந்த காலத்திலும் நிலைத்த பருவம் குறித்துப் பேசுவதில் தனித்து நிற்கிறது.
கல்லத்திமுடுக்குத் தெருவில் நின்று கொண்டிருப்பவரும், வயதானாலும் இப்போதும் தனது கால்சட்டைப்பையில் கோலிக்குண்டுகளை எண்ணும் மனநிலை கொண்டவரும் நிச்சயமாக ஒருவரல்ல ; ஆனால், காலம் வரையறுத்த மாற்றங்களை மறுதலிப்பதில் இருவரும் ஒருவரே.
இரண்டு கவிதைகளும் காலத்திரையில் வண்ணச் சித்திரங்களென நம்முன் அசைகின்றன.
– மணி மீனாட்சிசுந்தரம்.
துணை நின்ற நூல்கள் :
———————————————
1.அவன் எப்போது தாத்தாவானான் –
விக்ரமாதித்யன், நற்றிணை
பதிப்பகம், சென்னை – 05
2. கல்லாப்பிழை -க.மோகனரங்கன்,
தமிழினி, சென்னை – 51.
00


