பிரியா பாஸ்கரன்

லண்டனின் நள்ளிரவு ஒரு மெல்லிய கத்தி போல உடலை அறுத்துக் கொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே பனிப்புகை தெருவிளக்குகளின் ஒளியை விழுங்கிவிட்டு, ஒரு சாம்பல் நிற மௌனத்தைப் போர்த்தியிருந்தது. மிதிலா தன் அடிவயிற்றைத் தன் இரு கைகளாலும் இறுகப் பிணைத்துக்கொண்டு படுக்கையில் சுருண்டாள். ஒவ்வொரு மாதமும் அவளது கருப்பையின் சுவர்கள் கண்ணீராய் உதிரும் அந்தச் சில நாட்கள், அவளை ஒரு போர்க்களத்திற்கு இணையாகச் சிதைப்பது வழக்கம். இன்று அந்த ஊசிமுனைப் பிசைவு, நரம்புகளின் வழியாகப் பாய்ந்து அவளது ஆன்மாவின் ஆழம் வரை துளைத்துக் கொண்டிருந்தது. அறையில் ஹீட்டர் ஓடிக்கொண்டிருந்தாலும், அவளது உடலுக்குள் ஒரு குளிர் நதி ஓடிக்கொண்டிருந்தது. அந்த நதியின் பெயர் தனிமை.

உடல் ஒரு வில்லாக வளைந்து கொடுக்கும் போதெல்லாம், அவளது நினைவுத் தடாகத்தில் ஆரியனின் முகம் ஒரு கல்லெறிந்த பிம்பமாய் அதிர்ந்தது. ஆரியன் – அவன் அவளுக்கு ஒரு மனிதன் என்பதை விட, ஒரு காலநிலையைப் போன்றவன். பொதுவெளியில் அவன் ஒரு கல்லுளி மங்கன். மற்றவர்கள் முன்னிலையில் ஆரியன் தன்னை ஓர் இரும்பு மனிதனாகவே காட்டிக்கொள்வான். ஒருமுறை நண்பர்கள் கூடியிருந்த மாலைப் பொழுதில், மிதிலா அவனது தோளைத் தற்செயலாக உரசி, அவன் கண்களைத் தேடி அலைந்தபோது, அவன் அவளை ஓர் அறிமுகமில்லாத அந்நியரைப் போலக் கடந்து சென்றான். “மிதி, வழியை விடு… எல்லாரும் பார்த்துட்டு இருக்காங்க,” என்று அவன் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுச் சென்றபோது, அந்தப் பாராமுகம் ஒரு கூர்மையான ஊசியைப் போல அவளைக் கீறியது.

ஆனால், அந்தப் பாராமுகத்திற்குப் பின்னால் ஓர் எரிமலை ஒளிந்திருப்பதை அவள் அறிவாள். அன்று மாலை கூட்டம் கலைந்த பின், கல்லூரியின் அந்தப் பழைய நூலகத்தின் இருள் சூழ்ந்த மறைவான பகுதியில் அவளை வழிமறித்தபோது அவனது கண்கள் சிவந்திருந்தன. கோபத்தில் அவனது தாடை எலும்புகள் இறுகியிருந்தன. அவனது மூச்சுக்காற்று அவளது முகத்தில் அனலாய் வீசியது.

“என்கூட பேசணும்னா தனியா இருக்கும்போது பேசு. நாலு பேருக்கு முன்னாடி உன் காதலைக் காட்டி என்னை எரிச்சல் படுத்தாதே,” என்று அவன் சீறியபோது அவன் கோபத்தில் ஒரு காட்டுமிராண்டித்தனமான நியாயம் இருந்தது. “ஏன் எல்லாரும் முன்னாடியும் நீ என்னைத் தொடணும்? என் கண்கள் உன்னைப் பார்க்கலன்னு உனக்குத் தோணுதா? உன் ஒவ்வொரு அசைவையும் நான் கவனிச்சுட்டேதான் இருக்கேன் மிதி. ஆனா அதை ஊர் முன்னாடி காட்ட எனக்குத் தெரியாது,” என்று அவன் கத்தியபோது அவளது அழுகை நின்றது.

அவனது வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தினாலும், அந்தச் சீற்றத்தின் அடுத்த நொடியே, அவன் தன் கைகளை மெல்ல விரித்தான். அதுவரை சிங்கம் போலக் கர்ஜித்தவன், ஒரு நொடியில் சரணாகதி அடைந்த கணம் அது. அவன் கைவிரித்து நின்ற அந்த விநாடியில், அவள் ஓடிச் சென்று அவனது அகன்ற தோள்களில் தலைசாய்த்துத் தஞ்சம் புகுந்தாள். அந்தத் தோள் அவளுக்கு ஒரு தனித் தேசத்தைப் போலத் தெரிந்தது. அவனது சட்டையில் படிந்திருந்த வியர்வையும், அவனுக்கே உரித்தான அந்தச் சந்தன வாசனையும் கலந்து அவளை ஒரு போதையில் ஆழ்த்தியது. அவனது இதயம் ஒரு போர்க்களத்து முரசைப் போல அவளது காதுகளுக்கு மிக அருகில் துடித்தது. அவனது ஆவேசமான கோபம் தணிந்து, அந்த அணைப்பில் ஓர் அதீத மென்மை கூடியிருந்தது. அவன் அவளை அணைத்திருந்த விதத்தில் ஓர் ஆதிக்கம் இருந்தது, அதே சமயம் அது அவளைத் தொலைத்துவிடக் கூடாதென்கிற பயத்தையும் சுமந்திருந்தது.

அன்றிரவு, அது அவர்கள் இருவருக்குமே காலத்தால் அழிக்க முடியாத ஓர் ஓவியமானது. மழை பெய்து ஓய்ந்திருந்த அந்த இரவு, காற்றில் ஒருவித ஈரப்பதமும் மண்ணின் மணமும் நிறைந்திருந்தது. ஒரு சிறிய அறையின் மௌனத்தில், அவர்கள் ஒருவரை ஒருவர் கண்டடைந்தார்கள். அதுவரை வார்த்தைகளால் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த அவர்களின் காதல், அன்றுதான் மௌனத்தின் மொழியில் உடல் கடந்து உயிர் தொட்டது. இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும் இடையிலான அந்தப் பொழுதில், ஆரியன் அவளைப் பார்த்த பார்வை அவள் முன்னெப்போதும் கண்டிராதது.

“நீ ஏன் இப்படி இருக்க? ஏன் என் நிம்மதியைத் திருடுற?” என்று அவன் அதட்டலாகக் கேட்டபடி அவளது முகத்தைத் தன் கைகளுக்குள் ஏந்தினான். அவனது கட்டை விரல் அவளது உதடுகளை வருடியபோது, அவளுக்குள் இருந்த அத்தனை அச்சங்களும் கரைந்து போயின. அவனது முத்தம் நெற்றியில் தொடங்கி மெல்ல இறங்கியபோது, அவளது ஆன்மா அவனிடம் சரணடைந்தது. அன்று இரவு அவர்களின் காதலில் கூடிய அந்த நெருக்கம், வெறும் ஒரு சந்திப்பல்ல. அது இரண்டு பிளவுபட்ட ஆன்மாக்கள் தங்களை மீண்டும் ஒரு முழுமையான வடிவில் கண்டடைந்த தருணம்.

அவனது முரட்டுத்தனமான கைகள் அவளது கூந்தலைக் கோதிய விதம், அவளது உடலின் அத்தனை நரம்புகளையும் மீட்டின. அவனது ஒவ்வொரு தீண்டலும் அவளது அடிவயிற்று வலியைப் போக்கும் ஒரு ரசவாதமாக மாறியது. அந்த அறையின் மௌனத்தில் அவர்களின் மூச்சுக் காற்று மட்டும் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட ஓசை, இப்போதும் லண்டனின் இந்தக் குளிரில் அவளுக்குள் கதகதப்பை உண்டாக்குகிறது. அந்த இரவுதான் மிதிலா தன்னை முழுமையாக ஆரியனிடம் ஒப்படைத்தாள்.  அவனது கோபம், அவனது அன்பு, அவனது பாராமுகம் என அனைத்தையும் அவள் தன் சுவாசமாக மாற்றிக்கொண்டாள்.

நினைவுகளின் அடுக்கிலிருந்து மீண்டும் லண்டனின் குளிருக்குத் திரும்பினாள். கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தாள். அதிகாலை மூன்று மணி. இந்தியாவில் இப்போது காலை விடிந்திருக்கும். ஆரியன் இப்போதுதான் தூக்கத்திலிருந்து விழித்திருப்பான் அல்லது அவளைப் போலவே அவனும் அவளது நினைவுகளில் ஊடாடிக்கொண்டிருப்பான். ஆனால், ஒருபோதும் அதை அவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தியதில்லை. அவனது மௌனம் அவளுக்கு ஒரு பெரும் சுவராய்த் தோன்றும். ‘உனக்கு என் ஞாபகமே வராதா? ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?’ என்று அவள் சண்டையிடும் போதெல்லாம், அவன் மிக நிதானமாக ஒரு கேள்வியை எறிவான். ‘நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டுமா மிதி? சொல்லில் அடங்குவது காதலா?’ அவனது அந்தக் கேள்வி அவளை வாயடைக்கச் செய்யும். சொல்லாத அன்பில் தான் அவன் அதிகாரம் ஒளிந்திருந்தது. மாதவிடாய் நாட்களின் இந்தத் தவிப்பு அவளுக்குப் புதிதல்ல. ஆனால் ஆரியன் அருகில் இல்லாத இந்தத் தூரம் தான் அவளை வதைத்தது.

அவள் கண்களை மூடினாள். ஒரு வெயில் காலக் காலைப் பொழுதில் அவர்கள் சந்தித்த ஒரு கோவில் காட்சி அவள் கண்முன் வந்தது. அது ஊருக்குப் புறநகரில் இருந்த ஒரு பழமையான அம்மன் கோவில். அங்கே திருவிழா நடந்துகொண்டிருந்தது. மிதிலா, தனது தோழிகளுடன் நின்று கொண்டிருந்தாள். ஆரியன் அங்கே வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. திடீரென, கூட்டத்திற்குள் இருந்து அவனது குரல் ஒலித்தது. “மிதி! இங்க என்ன பண்ற?” அவனது குரலில் அதே அதிகாரம். அவளைப் பார்த்ததும் அவனது முகம் ஒரு கணம் இறுகியது. அவனது நண்பர்களும் அங்கிருந்தனர். அவன் மற்றவர்களிடம் பேசும்போது அவள் ஒரு பொருட்டல்ல என்பது போல அலட்சியம் காட்டினான். “நீங்க உள்ளே போயிட்டு வாங்க… நான் இவள்கிட்ட ஒரு நிமிஷம் பேசணும்,” என்று அவன் தன் நண்பர்களை அனுப்பிவிட்டு, அவளை ஒரு மரத்தடிக்கு இழுத்துச் சென்றான்.

“ஏன் இங்க வந்த? நான் உன்னை இங்க வரச் சொன்னேனா?” அவன் கேட்டான். “கோவிலுக்கு யார் வேணும்னாலும் வரலாம் ஆரியன்,” என்று அவள் பதிலுக்குக் கத்தினாள். “மிதி, எரிச்சல் படுத்தாதே. எல்லாரும் நம்மளத்தான் பார்த்துட்டு இருக்காங்க. இங்கெல்லாம் வந்து உன் காதலைக் காட்டாதே,” என்று அவன் பற்களைக் கடித்தான். அவனது கோபம் அவளைச் சுட்டெரித்தது. கண்ணீரோடு அவள் திரும்பிச் செல்ல எத்தனித்தபோது, அவன் அவளது கையைப் பற்றினான். “நில்லு,” என்றான். அவளது விரல்கள் அவன் பிடியில் சிக்கியிருந்தன. அந்தப் பிடி இறுகியிருந்தது, ஆனால் அதில் ஒரு மென்மையான தவிப்பு இருந்ததை அவள் உணர்ந்தாள்.

“நான் உன்னை எங்கேயோ தனியா பார்க்கக் கூப்பிட்டா, நீ வர மாட்டே. இங்க பாரு, இந்தச் சூழல் எனக்குப் பிடிக்கல. என் பொறுமையைச் சோதிக்காதே மிதி,” என்று அவன் சொன்னபோது, அவனது குரலில் இருந்த கோபம் மெல்லத் தணிந்து, ஒருவித கெஞ்சல் கலந்திருந்தது. அவளை அந்தக் கூட்டத்திலிருந்து விலக்கி, கோவிலுக்கு வெளியே இருந்த பாழடைந்த மண்டபம் ஒன்றின் அடியில் அழைத்துச் சென்றான். அங்கே யாரும் இல்லை. ஒரு மௌனம் இருவரையும் சூழ்ந்தது. அவன் மெல்ல அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தி, கண்களை உற்றுப் பார்த்தான். “இந்தக் கண்கள் மட்டும் ஏன் என் நிம்மதியை இப்படித் திருடுது?” என்று அவன் கேட்டபோது, அவளது இதயத்தில் இருந்த கோபம் கரைந்து காதலாக மாறியது.

அவனது விரல்கள் மெல்ல அவளது கன்னங்களை வருடின. அவன் நெற்றியில் முத்தமிட்டான். அது ஒரு நீண்ட, ஆழமான முத்தம். அந்த முத்தத்தின் வழியாக அவன் தன் அத்தனை கோபத்தையும், கவலைகளையும், அதே சமயம் தன் அளவிட முடியாத காதலையும் அவளுக்குள் கடத்தினான். “கோவிலுக்கு வந்து என் மனசைக் கலைக்காதேன்னுதான் சொன்னேன். நீ என் மனசைக் கலைச்சுட்டா, அப்புறம் என் வழி மாறிப் போகுது மிதி,” என்று அவன் மெல்லிய குரலில் சொன்னபோது, அவனது அந்த முரட்டுத்தனமான அன்பில் அவள் மூழ்கிப் போனாள். அன்று அவளது உடல்வலி இல்லை. ஆனால் அவளது ஆன்மா அவனிடம் அடைக்கலம் தேடியது. அந்தக் கோவில் சந்திப்பு, அவர்களின் காதலுக்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுத்தது. புனிதமான சூழலில், கோபத்திற்கும் காதலுக்கும் இடையிலான மெல்லிய இழையில் அவர்கள் தங்கள் பிணைப்பைப் பலப்படுத்திக் கொண்டார்கள்.

இன்று லண்டனின் தனிமையில், அந்தச் சண்டைகளும் அதன் பின் நிகழ்ந்த அந்த இரவும், கோவிலில் நடந்த அந்தத் தனிப்பட்ட சந்திப்பும் தான் அவளுக்கு ஒத்தடமாகின்றன. ஆரியனின் காதல் என்பது ஒரு பூவைப்போல மென்மையானது அல்ல. அது ஒரு வேரைப் போல மண்ணைத் துளைத்துக்கொண்டு உள்ளே செல்வது. மற்ற ஆண்கள் காதலைக் கொஞ்சல்களில் காட்டும்போது, ஆரியன் அதை ஓர் அதிகாரத்தில் காட்டினான். மிதிலாவின் இந்த நாட்களில், அவள் எரிச்சலில் எறியும் பொருட்களை அமைதியாகப் பொறுக்கிக் கொண்டே, “இப்போ எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்? உன் வலியைக் காட்ட வேற வழி இல்லையா?” என்று அவன் கேட்கும் கோபத்தில் ஓர் உயிரையே உருக்கும் அக்கறை ஒளிந்திருக்கும்.

அவள் மெல்லக் கைப்பேசியைத் தேடி எடுத்தாள். திரையின் ஒளி அவளது சிவந்த கண்களில் கத்தியாய் இறங்கியது. ஆரியனின் பெயர் அங்கே ஒரு சாட்சியைப் போல நின்றது. நாடு விட்டு நாடு வந்தும், ஊர் விட்டு ஊர் வந்தும், இந்த அர்த்த ராத்திரியில் அவன் நினைப்பு ஓர் ஈரமான முத்தத்தைப் போல அவளது வலியின் மேல் படிந்தது. அழைக்கும் தொலைவில் இருந்தும் பேச இயலா மௌனம் இருவருக்கும் இடையே நிலவியது. கைப்பேசியில் ‘Typing…’ என மின்னியது. சில விநாடிகளில் ஆரியனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி.

“மிதி, உன் வலியின் வாசம் இங்க வரைக்கும் வீசுது. இந்த நிமிஷம் உன் நெற்றியில நான் ஓர் ஈரமான முத்தம் வைக்கிறதா கற்பனை பண்ணிக்கோ. அந்த ஈரம் உன் அடிவயிறு வரைக்கும் ஓர் அமைதியைக் கொண்டு வரும். அன்னைக்கு என் தோள்ல சாய்ஞ்சப்ப இருந்த அதே கதகதப்பையும், கோவிலில் நான் தந்த முத்தத்தையும் இப்போ உணர முடியுதா? தூங்கு மிதி… நான் உன் கனவுல காத்துட்டு இருக்கேன்.”

அவனது வார்த்தைகள் வெறும் எழுத்துக்கள் அல்ல. அவை பிளவுபட்டுக் கிடக்கும் அவளது உயிருக்கு இடப்படும் தையல்கள். ஆரியனின் கோபம், அவனது பாராமுகம், அவனது மௌனம் இவை அனைத்தும் அவளது வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டன. அவனது சமாதானத்திற்காக ஏங்கும் அந்தத் தவிப்பே அவளது காதலை இன்னும் உயிருடன் வைத்திருக்கிறது.

விடியல் நெருங்கிக் கொண்டிருந்தது. லண்டனின் வானம் மெல்ல வெளுக்கத் தொடங்க, வலியின் தீவிரம் ஒரு மந்தமான பாரமாக மாறியிருந்தது. ஆரியன் அங்கே சூரிய உதயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பான், இவள் இங்கே நிலவின் இறுதி ஒளியில் அவனது நினைவுகளைப் போர்த்திக் கொண்டிருக்கிறாள். அவர்களின் காதல் ஒரு முடிவற்ற இசைக்கோவை போல நீண்டு கொண்டே இருக்கிறது. சில உறவுகள் இணையாமலேயே இருப்பதில்தான் அதன் கனம் கூடுகிறது. மிதிலா கைப்பேசியைத் தன் இதயத்தோடு அணைத்துக் கொண்டாள்.

தூரத்திலிருந்து ஆரியன் அனுப்பிய அந்தப் புலப்படாத முத்தம், அவளது வலியைக் கடந்து அவளது ஆன்மாவைத் தீண்டியது. அவர்கள் ஒருவரை ஒருவர் மீண்டும் எப்போது சந்திப்பார்கள் என்பது தெரியாது. ஆனால், அந்த நள்ளிரவின் மௌனத்தில் ஓர் உண்மை மட்டும் தீர்க்கமாகத் தெரிந்தது. உடலின் வலியை விடவும், ஒரு முரட்டுக் காதலனின் சமாதானத்திற்காக ஏங்கும் மனதின் தவிப்பே அதிக ஜீவனுள்ளது.

அவள் மெல்லக் கண்களை மூடினாள். லண்டனின் பனி அவளது ஜன்னலில் பூக்களை வரைந்து கொண்டிருக்க, மிதிலா ஆரியனின் நினைவென்னும் போர்வையை இன்னும் இறுகப் போர்த்திக்கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்தாள். அந்த உறக்கத்தில் அவள் மீண்டும் அந்தப் பழைய சந்தில், அவன் விரித்த கைகளுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டிருந்தாள். விடியல்கள் மாறலாம், நாடுகள் மாறலாம், ஆனால் ஆரியனின் அந்த முரட்டுத்தனமான அன்பும், அந்த ஓர் இரவின் ஈரமும் அவளது ஆன்மாவில் என்றென்றும் வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

00

பிரியா பாஸ்கரன்

வணக்கம். எனது பெயர் “பத்மப்ரியா பாஸ்கரன்”. காஞ்சிபுரம் அருகில் வெம்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்தேன். கடந்த இருபத்தி ஐந்து வருடத்திற்கும் மேலாக மிச்சிகன் மாகாணம், வட அமெரிக்காவில் பொது நிறுவனமொன்றில் மேலாளராகப் பணியிலிருக்கிறேன். கணவர், இரண்டு மகன்கள் ஒரு மகள் என அமெரிக்காவில் வசிக்கின்றேன்.

கடந்த ஆறு வருடங்களாகக் கவிதைகள் (மரபுக் கவிதை, புதுக் கவிதை, நவீனம், ஐக்கூ, சென்றியூ), சிறுகதைகள், கட்டுரைகள், நூல் அறிமுகம், ஆகியவற்றைத் தொடர்ந்து பல இதழ்களில் எழுதிக்கொண்டு வருகிறேன். பல் வேறு இலக்கிய தளங்களில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், சங்க இலக்கியம் மீதுள்ள ஆர்வத்தினால் குறுந்தொகை போன்ற இலக்கியங்களைக் கதை வடிவில் குழுவாக இணைந்து நிகழ்ச்சிகளை அளித்துள்ளேன். மிச்சிகன் தமிழ்ப் பள்ளியில் தன்னார்வ யோக இணை ஆசிரியராகப் பெற்றோர்களுக்கு யோகம் கூட்டுப் பயிற்சி அளித்துள்ளேன். தமிழ்ப் பள்ளியில் தமிழ்க் கற்றுத் தரும் ஆசிரியர் பணியிலும் ஈடுபடுகிறேன். சரகப் பாதுகாப்பு அதிகாரியாகவும், தற்காப்பு பயிற்சியில் தேர்வு பெற்றவராகவும் இருக்கிறேன்.

பிரியாவின் கிறுக்கல்கள் என்ற வலைப்பூவில் எனது எண்ணங்களைக் கவிதைகளாகப் பதிக்கிறேன். எனது படைப்புகள் இனிய உதயம், கணையாழி, குமுதம், ராணிமுத்து, சொல்வனம், நக்கீரன், பேசும் புதியச்சக்தி, கொலுசு, படைப்பு கல்வெட்டு, படைப்பு தகவு, கதம்பம், தமிழ்ச்சாரல், வளரி, வல்லினச் சிறகுகள், தமிழ் டாக்ஸ், கொக்கரக்கோ, தாரகை, ஆக்கம், ஆனந்தசந்திரிகை, புக் டே இணையதளம், காணிநிலம், புன்னகை  போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. 

மரபுக் கவிதைகளின் மேலுள்ள ஈடுபாட்டால் வெண்பா பயிற்சிப் பட்டறை நடத்துகிறேன். எனது  கவிதைகள் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை தமிழில் நான்கு கவிதைத் தொகுப்புகள், “நினைவில் துடிக்கும் இதயம்”, “காற்றின் மீதொரு நடனம்”, “சலனமின்றி மிதக்கும் இறகு” மற்றும் “யாம நுகர் யட்சி” தொகுப்புகள் வெளி வந்துள்ளன.  “சிறு வீ ஞாழல்” என்ற குறுந்தொகைப் பாடல்கள் கதை வடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்க் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, “The Horizon Of Proximity” என்ற தொகுப்பும், “Ubiquity” என்ற ஆங்கில கவிதைத் தொகுப்பும் வெளி வந்துள்ளன.

இவை பொள்ளாச்சி இலக்கிய வட்டம், டிஸ்கவரி புக் பேலஸ், அம்போருகா பதிப்பகத்தின் மூலம் வெளி வந்துள்ளன.

வட அமெரிக்க, இந்திய கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து “பால்யத்தின் சாவி” என்ற தொகுப்பு நூல் வட அமெரிக்கத் தமிழ் ஆர்வலர்கள் மூலம் மிச்சிகன் மாகாணத்திலும், மகாகவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதைகள் குறித்தான கட்டுரை ஆய்வு நூல் “ஒரு கவிஞனும் பல கவிதைகளும்” என்ற தொகுப்பு நூல் ஒரு துளிக்கவிதை பதிப்பகத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவில் FeTNA நிகழ்விலும் வெளியிடப்பட்டுள்ளன.

சேலம் தமிழ் இலக்கியப் பேரவையில் பாரதியார் விருதும், படைப்பு குழுமத்தின் சிறந்த படைப்பாளி விருதும், தமிழால் இணைவோம் உலகத் தமிழ் களத்தின் தங்கமங்கை விருதும், திருப்பூர் சக்தி இலக்கிய விருதும் பெற்றுள்ளேன்.

“காற்றின் மீதொரு நடனம்” மற்றும் “நினைவில் துடிக்கும் இதயம்” கவிதைத் தொகுப்புகளுக்கு, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தஞ்சை பிரகாஷ் நினைவு விருதும், வல்லினச் சிறகுகளின் மகாகவி ஈரோடு தமிழன்பன் கவிதை 80 விருதும், “காற்றின் மீதொரு நடனம்” தொகுப்பிற்கு இலங்கை மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டு காலண்டிதழின் பிரமிள் விருதும் பெற்றிருக்கிறேன். “சலனமின்றி மிதக்கும் இறகு” நூலுக்கு தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தேசிய விநாயகம் விருது கதை பித்தன் வெளிநாடு வாழ்படைப்பாளருக்கான சிறப்பு விருதும் பெற்றுள்ளேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *