முத்தழகு கவியரசன் கவிதைகள்

மெளனத்தின் சலனம்….

கடலின் உப்புக் காற்று முகத்தில் அறைய,

தூண்டிலோடு நின்றிருந்தேன்.

,

என் நிழலுக்கு அப்பால், ஈர மணலில் சிலர்.

விரல்களில் பேனாவும், உதடுகளில் காதலும்.

வார்த்தைகளை வார்த்தைகளால் கோர்த்து,

காதலின் இலக்கணம் பேசிக்கொண்டிருந்தார்கள்

அந்த எழுத்தாளர்கள்.

,

காதல் என்பது கடல் என்றார் ஒருவர்.

இல்லை, காதல் என்பது அலை என்றார் இன்னொருவர்.

காதல் முத்தம், காதல் மௌனம், காதல் பிரிவு,

காதல் தேடல் — அவர்கள் பேசப் பேச,

காதல் ஒரு கவிதையாகிக் கொண்டிருந்தது.

,

நான் காத்திருந்தேன்.

தூண்டிலின் நுனி துடிக்கும் அந்த ஒரு கணத்திற்காக.

காலம் மணலில் கரைந்துகொண்டிருந்தது.

,

பிறகு —

ஒரு இழுப்பு.

ஒரு துடிப்பு.

வெள்ளியாய் மின்னி, தூண்டிலில் சிக்கிய மீன்,

வானில் ஒரு வில் வரைந்து,

சரியாய் எங்களுக்கு இடையில் வந்து விழுந்தது.

,

அவர்களின் காதல் கவிதைகளுக்கு நடுவில்,

என் வாழ்வின் பசிக்கு நடுவில்,

அந்த மீன் மணலில் கிடந்து துள்ளியது.

செதில்கள் வெயிலில் மின்ன,

செவுள்கள் வேகமாய் திறந்து மூட,

அது உயிருக்குப் போராடியது.

காதல் தெரியாத ஒரு போராட்டம்.

பசிக்காத வார்த்தைகள் அறியாத ஒரு தவிப்பு.

,

அதே கணம்

தூரத்துக் கடலில் இன்னொரு மீன்.

நீல அலையைக் கிழித்துக்கொண்டு,

வானம் நோக்கி ஒரு முறை துள்ளிக் குதித்தது.

மீண்டும் ஒரு முறை. வெறியோடு, தேடலோடு,

நீரை உதறி உதறி அது குதித்தது.

,

எழுத்தாளர்கள் பேச்சை நிறுத்தி, கடலைப் பார்த்தார்கள்.

நான் மணலில் துள்ளும் மீனைப் பார்த்தேன்.

,

அப்போதுதான் புரிந்தது.

,

நாம் கரையில் உட்கார்ந்து காதலைப் பற்றிக்

கவிதை பேசுகிறோம். அது அழகு. அது ஆழம்.

அது ஆயுள் முழுக்க பேசித் தீராதது.

ஆனால் காதல் என்பது இதுதான்

மணலில் கிடந்து உயிருக்காகத் துடிக்கும்

ஒரு மீனின் தவிப்பு. அதைத் தேடி,

கடல் முழுக்க அலைந்து, அலையைக் கிழித்து

வானம் நோக்கி துள்ளும் இன்னொரு மீனின் தேடல்.

சொற்களில் இல்லை காதல்.

துடிப்பில் இருக்கிறது.

தேடலில் இருக்கிறது.

பிரிவின் அந்த ஒரு துள்ளலில்,

சேரும் வரை ஓயாத அந்தப் போராட்டத்தில் இருக்கிறது.

,

நான் தூண்டிலை கீழே வைத்தேன்.

எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை மூடினார்கள்.

இரண்டு மீன்களின் காதலுக்கு முன்னால்,

பசியும், கவிதையும் மௌனமானது………

00

பிரிவதற்குத்தானே எல்லாம்…

அப்பா இல்லாத வீடு

மர்மம் நிறைந்ததாக இருக்கும்.

கிழிந்த பாயில் கிடக்கும்

அம்மாவின் இருமல் சத்தம் மட்டுமே

அந்த வீட்டின் ஒரே சொத்து.

சுவரில் தொங்கும் தேதி கிழிந்த காலண்டரும்,

மனசில் தொங்கும் கிழியாத கடன் நோட்டீசும்

அவனை தினம் தினம் கொன்றது.

கல்லூரி பீஸ் கட்டாத கடைசி தேதி

நெஞ்சுக்குள் ஓடையாக ஓடிக்கொண்டிருந்த வேளையில்தான்,

அவன் வயலில் சோளக்கதுருக்கு

தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.

,

தூரத்தில் மேய்ந்த மாடுகளை விரட்ட ஓடினான்.

திரும்பி வந்து ஓடையில்

கைகால் கழுவ குனிந்தபோது,

சேற்றுக்குள் மின்னியது ஒரு தங்கச் செயின்.

பாம்பு மாதிரி வளைந்து நெளிந்து கிடந்த அந்த தங்கம்,

அவன் கண்ணுக்கு விதியாகத் தெரிந்தது.

நெஞ்சு படபடத்தது.

கடன், அம்மாவின் இருமல், கட்டாத பீஸ்,

அரை வயிற்று கஞ்சி எல்லாம்

ஒன்றாக சேர்ந்து மனசுக்குள் கணக்கு போட்டது.

“இதை வித்தால் கொஞ்சம் நிம்மதி” என்று

வறுமை அவனுக்கு நியாயம் சொல்லிக் கொடுத்தது.

,

செயினை எடுத்துக்கொண்டு சைக்கிளில் ஏறினான்.

ரோட்டுக்கு வந்தால், அங்கே ஒரு பாட்டியும் பேத்தியும்

வெயிலில் உருகிக்கொண்டு, கண்ணீரோடு

“ஐயோ செயினை காணோம்” என்று தவித்து நின்றார்கள்.

அவன் சைக்கிளை நிறுத்தினான்.

சட்டைப் பையில் தங்கம் கனத்தது,

மனசுக்குள் அறம் அதைவிட கனத்தது.

,

அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.

எல்லாம் சேர்வது பிரிவதற்குத்தானோ?

அம்மாவை பிரிந்து அப்பா போனார்.

அப்பாவை பிரிந்து வறுமை வந்தது.

வறுமையை பிரிய இப்போது இந்த தங்கம் வந்திருக்கிறது.

இப்போது தங்கத்தை பிரிந்தால்

அறம் சேரும் என்று தோன்றியது.

கையை நீட்டி “இது உங்கக்குளதா பாட்டி?” என்று கேட்டான்.

பாட்டி அழுதாள், பேத்தி சிரித்தாள்,

அவன் மௌனமானான்.

,

வீட்டுக்கு வந்தபோது ஒன்றும் மாறவில்லை.

கடன் அப்படியே இருந்தது.

 பீஸ் கட்டவில்லை.

அம்மா இருமிக்கொண்டுதான் இருந்தாள்.

ஆனால் அன்று இரவு,

வயிறு காய்ந்தாலும் மனசு நிறைந்திருந்தது.

ஏனென்றால் அவன் புரிந்துகொண்டான்.

பணத்தை பிரிந்தால் நிம்மதி சேரும்,

ஆசையை பிரிந்தால் அன்பு சேரும்,

 ‘நான்’ என்பதை பிரிந்தால் மனிதம் சேரும்.

,

உறவு பிரியும், காதல் பிரியும், காமம் கலையும்,

மனைவி போவாள், மக்கள் பறப்பார்கள்.

ஆனால் நாம் எதை மனசார பிரிகிறோமோ,

அதுவே நம்மை நம்மிடம் சேர்க்கும்.

அன்று அவன் தங்கத்தை பிரிந்தான்,

அதனால்தான் தன்னை சேர்ந்துகொண்டான்.

நாம் பிறக்கும்போதே அம்மாவின் உடலை பிரிந்துதான் வருகிறோம்,

சாகும்போதும் உடலை பிரிந்துதான் போகிறோம்.

 நடுவில் இருக்கும் எல்லா சேர்க்கையும் தற்காலிகம்.

பிரிவதற்குத்தானே எல்லாம்.

பிரிதலில்தான் சேர்தல் இருக்கிறது,

அந்த இடைவெளியில்தான்

வாழ்க்கை என்ற கவிதை எழுதப்படுகிறது.

00

கிழித்தப் பின்…

நல்லவன் என்கிற பெயரைக் கிழித்தப்

பின்தான் தெரிகிறது

வாழ்க்கையின் அடுத்தப் பக்கம்

என்னவாக இருக்கிறது

என்று

,

நம்பிக்கை என்கிற வீட்டை இடித்தப்

பின்தான் புரிகிறது

உள்ளே குடியிருந்த நாகம்

எவ்வளவு காலமாக வளர்ந்திருக்கிறது

என்று

,

துரோகம் என்கிற கத்தியைப் பிடுங்கிய

பின்தான் தெரிகிறது

முதுகில் இருந்த காயம்

எவ்வளவு ஆழமாக இருக்கிறது

என்று

,

அன்பு என்கிற முகமூடியை உரித்தப்

பின்தான் தெரிகிறது

வெறுப்பின் பற்கள்

எவ்வளவு கூர்மையாக இருக்கிறது

என்று

,

மனைவி என்கிற மூச்சை

இழந்தப் பின் தான் தெரிகிறது

அனாதையின் வாழ்வு

எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது

என்று

,

காமம் என்கிற கனவைக்

கலைத்தப் பின்தான் தெரிந்தது.

இன்பமென்று துரத்தியது நிழலைத்தான்

நிஜமில்லை என்று

,

காலம் என்கிற நதியைக் கடந்தப்

பின்தான் புரிகிறது

கரையில் விட்டுவந்த காலடிகள்

எவ்வளவு வேகமாக அழிகிறது

என்று

00

கடினம்…

பார்த்த அனுபவத்திற்கும்

பட்ட அனுபவத்திற்கும்

நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.

,

வாழ்க்கையை எப்படி

வாழலாமென்று

பக்கம் பக்கமாக எழுதி வைக்கலாம்.

ஆனால் எழுதி வைத்தது மாதிரி

வாழ்க்கையை வாழ முடியாது.

கடினம்.

00

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *