– இத்ரீஸ் யாக்கூப்
அது வைரம்தான்! வைரமாகத்தான் இருக்க வேண்டும்! காட்டுவெளிப் பாதையில் சந்தனம், மஞ்சள், குங்கும அலங்காரமிட்டு, காலடியில் செம்பூக்கள் தூவப்பட்ட கொற்றவைச் சிலைப் போலத்தான் திகைக்க வைக்கிறாள் எதிரினில் காணும் ஒவ்வொரு முறையும். ஒவ்வொரு முறையுமென்றால் இடைவெளிக் காலங்கள் நாட்களோ, மாதங்களோ அல்ல; ப்ளஸ் டு விற்கு பிறகு அவளை எதிர்கொள்வது இது இரண்டாவது முறைதான். ஆனால் இந்த இரண்டு சந்திப்புகளும் இடைப்பட்ட தூரமோ இருபத்தாறு வருடங்கள்! இரண்டு மகாமகம் சென்று விட்டன!
காவேரி,கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களைத் தீர்த்து வைக்கும் பணியில் மாசுபட்டு மகாமக குளத்தில்தான் புனித நீராடி தங்களை மீண்டும் மீண்டும் தூய்மைப் படுத்திக் கொள்ளுமாம்.
ஒரு சாதாரணப் பிறப்பாய் இவைகளையெல்லாம் கேட்க வினோதமாக இருந்தாலும் நம்பிக்கைகளெல்லாம் அப்படித்தானோ? ஆனால் எனக்கு கிடைக்கப்பெற்ற இந்த இரண்டாவது வாய்ப்பும் மிகவும் பலவீனமான நம்பிக்கையோடேயே சென்றுவிடுமோ..!
அதிகம் அரவற்ற இச்சாலையில் தன் வாசத்தை எப்போதுமேப் பொத்திக் கொள்ளும் ஒரு அதிசய சாமந்திப் பூவைக் காண்பது போலவே அவளை இக்கணமும் உணர்கிறேன்..!
கழுகுப் பார்வையில் காட்டினுள் வளைந்து சுருண்டும் நீண்டும் ஓடும் வழித்தடத் தரையாய் பசுமைக்கு நடுவே வன்முறைகள் பெரிதுமின்றி தவிர்க்க முடியாத வடுக்கள் சில நம் வாழ்க்கையில் ஆங்காங்கே ரேகைப் பிடித்து நின்றுவிடுவதுண்டு.
சாக்கோட்டை பக்கம் ஒரு உறவினரைப் பார்த்துவிட்டு எங்கள் செம்மங்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் நாச்சியார்கோயிலை அடுத்து வழியில் ஒரு தள்ளு வண்டியில் ப்ளம் விற்றுக் கொண்டிருந்தவனைப் பார்த்தேன். பிள்ளைகளுக்குப் பிடிக்குமென என காரை நிறுத்திவிட்டு, காகித அட்டை போர்டிலேயே கிலோ இருநூறு என்றுக் குறிப்பிட்டிருந்தால் அவனிடம் பேரமேதும் பேசாமல், அரைக்கிலோவிற்கு நூறு ரூபாய் தாளை நீட்டினேன்.
பின் மத்திய நேரமென்பதால் வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருப்பினும் வழி நெடுகவிருந்த புளிய மரங்கள் வழிப்போக்கர்களையும், வியாபாரிகளையும், பறவைகளையும், கண்ணுக்குப் புலப்படாத மற்ற ஜீவராசிகளையும் குடைகளாய் இரட்சித்துக் கொண்டிருந்தன. அப்போதுதான் சிவப்பு நிற காரொன்று எனையொட்டி நின்றது. அதிலிருந்து இருபது, இருபத்தி இரண்டு வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் காரோட்டி இருக்கையிலிருந்து இறங்கி வந்தான். அதனைத் தொடர்ந்து பின்புற ஜன்னலின் கண்ணாடியும் ஐஸ்கட்டி உருகி சமமாகுவது போல இறங்கியது. அதில் கைக் குழந்தையை தனது வலது கையால் வெள்ளை – எலுமிச்சை நிற பட்டைகளிட்ட துருக்கித் துணியில் சுருட்டி அணைத்தபடி செங்காந்தள் மலராய் ஒரு இளம்பெண் தென்பட்டாள். அவள், அந்த இளைஞனுக்கு இரண்டு அரைக்கிலோ வாங்கு என குரல் கொடுக்கவும், தவிர்க்க முடியாமல் எனது கவனம் முழுவதும் அவள் மீது சிலை மேல் படும் வெயிலாய் குவிந்தது.
அந்த இருபது வயது செங்காந்தள் குழந்தை சப்த கன்னிகளின் கூட்டு என்றால்… இருக்கைகளின் இன்னொரு ஜன்னலின் முனையில் சாட்சாத் மௌன மகேஸ்வரியாய் என் வகுப்புத்தோழி(?) வைரமும் அமர்ந்திருந்தாள். கலசத்திலிருந்தபடி தலைத்திருப்பும் மரகதப் புறாவாய் நோக்கம் ஏதுமின்றி அவள் என்னை கவனித்தாள்! அவளுக்கு நான் யாரெனத் தெரிந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் உருவெடுத்த வருணன் போல என் உடலை ஏதோ ஒன்று அழுத்தியது. நான் உடனே நகர்ந்திருக்க வேண்டும்! ஆனால் யாரும் அள்ளாத உடைபட்ட தேங்காவாய் அங்கேயே சில நொடிகளைக் கடத்த நினைத்தேன். மிதமான இரண்டாம் சுற்றுக்கு தயாரான புயல் போல் மீண்டும் தள்ளுவண்டிக்காரனை அடைந்தேன். இன்னொரு அரைக்கிலோ போடுமாறு சொன்னேன். தொண்டை பாதி பழுத்த கற்பூரவல்லியை விழுங்கியது போல் அடைத்தது. ஆனாலும் அவனுக்கு என் ஏவல் புரிந்தது. வியாபாரிகளுக்கு அறிகுறிகள் அத்துப்படி.
அவன் அந்த இளைஞனைப் பார்த்து சில்லறை இல்லையா தம்பி..? எனக் கேட்க அவன், அந்த இளம் பெண்ணிடம் “எரநூறு இருக்காக்கா?” என சோதித்தான். அவள், “அம்மா, உங்கிட்ட இருக்கா?” என அவளின் பதிலை எதிர்பார்க்காமல், அவள் இடுப்போடு இடுக்கி அணைத்திருந்த சரிகை பிங்க் நிற தோள்பையிலிருந்த பர்ஸை எடுத்து இரண்டு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வெளியே நீட்டினாள். வைரத்திடமிருந்து எந்த ஒரு பதிலோ, செய்கையோ எதுவும் வரவில்லை. சிறு அசைவும் கூட இல்லாமல் சிலை போலவே அமர்ந்திருந்தாள். ஆகவே இம்முறையும் மெலிதாய் கூட அவள் பேசிக் கேட்கும் கொடுப்பினை இல்லை என்றே நினைத்துக் கொண்டேன்.
அவள் என்னை கவனித்தாளே… நான் யாரென்று புரிந்ததா? என் பெயர் அவள் நினைவிலிருந்திருக்குமா? வருகைப்பதிவேட்டில் முதல் பெயர் அன்பரசிக்கு அடுத்து ஆங்கில வரிசையில் சரியாக பத்தாவதாக இளையராஜா என்று என் பெயர் கூப்பிடப்படுமே அது அவளுக்குத் தெரியுமா? அதையெல்லாம் கூட மறந்திருப்பாள்… என்னைப் போல் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ள அவசியமுமில்லை… ஆனால் தவறவிட்ட அவளுடைய வாட்ச்! அதை எப்படி அவ்வளவு எளிதாக மறந்திருப்பாள்? நிச்சயம் முடியாது!
வைரத்தின் முகம், பழைய நடிகை காஞ்சனாவை நினைவூட்டும்; ஒரு சாயலில் கொஞ்சம் மெலிந்த அம்பிகா போலவும், சாமிக் கூடத்தில் ஏற்றியும் அசையாமல் சுடர் விடும் காமாட்சி விளக்காய் காட்சி தருவாள். தான் உடுத்தி வரும் வெள்ளைச் சட்டையையும், கருநீல தாவணியையும், கழுத்தில் அணிந்து வரும் முத்து மணிகளையும் இதோ இவைகளும் இருக்கின்றன என எடுத்துக் காட்டும் சந்தன நிறத்தவள். ஆனாலும் எல்லாவற்றையும் விஞ்சிவிடும் அவளது சாந்தம். எங்கள் ஊர் பெருமாள் கோயில் சொர்க்கவாசல் கூட வருடத்தில் ஒரு முறை திறக்கப்படும்… அவளுடன் படித்த அந்த இரண்டு வருடங்களில் அவள் பேசியேப் பார்த்ததில்லை. அது சில நாட்கள் அவளை அவ்வப்போது தொடர்ந்து கவனிக்கவும் வைக்கும், சரியான ராங்கிக்காரி என பல நாட்கள் புறக்கணிக்கவும் தூண்டும். ஒரு கட்டத்தில் நாளுக்கு நாள் நந்தி போல அவள் அழுத்தம் கூடுவதாக அவள் மீதான ஒரு சலிப்பை ஏற்படுத்தியது. நான் நன்றாக செய்தி வாசிப்பேன், கவிதை, கட்டுரை, தடகளம் என நடக்கும் போட்டிகளிலெல்லாம் கலந்து கொள்வேன், நல்ல மார்க்குகள் கூட எடுப்பேன். அதற்காகவே சதா என்னைச் சுற்றும் சிறு வட்டம் கூட இருந்தது. கலைச்செல்வி டீச்சர், ஏகாம்பரம் சார் என்று எல்லோரும் தங்களது வகுப்புகளில் என்னுடன் ஒரு வார்த்தையேனும் பேசாமல் செல்ல மாட்டார்கள். அது எங்கம்மாவும் அதே பள்ளியில் இங்கிலிஷ் டீச்சராக பணி புரிந்தார் என்ற கணக்கில் இல்லை. மேலும் எங்கம்மா, கிருஷ்ணவேணியம்மா ரொம்பவும் கண்டிப்பானவர். டீச்சர் மகன் போன்ற தனி கவனிப்புகளை அறவே ஆதரிக்காதவர். சிறிய தவறுகளுக்கும் குறை வைக்காமல் வீட்டிலும், வகுப்பிலும் சரியாக வெளுப்பார். இதற்காகவே சோபனா டீச்சர் உட்பட சிலர் என்னுடன் சகஜமாகப் பழகுவதை தவிர்த்துச் சென்றதுமுண்டு. ஆனால் அவர்களில் ஒருத்தியாய் வைரம் இருக்கவில்லை. உண்மையிலேயே அவள் பேருக்கு ஏற்றாற்போல நெஞ்சழுத்தக்காரி. ஆனால் பார்க்க வெண்தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியை போலவே சொரூபித்திருப்பாள். இதையும் கூட வித்யா கர்வம் என்று சொல்லலாமோ..! அதுதான் அவளை சீண்ட வைத்தது. மண்ணுக்கு பாரமாகுமென எங்கும் ஊன்றிராத இறகு போல் பள்ளிக்கு மிதந்து வரும் அவளுக்கு யாருமே வழிவிட்டு நகர்வார்கள்… நானும் அப்படித்தானே இருந்தேன்… ஆனால் யாரையும் ஏறெடுத்துப் பார்க்காத, பழகாத அவளின் நிலைத்தன்மை என்னை ஒரு நாள் புதிய வேதாளம் புகுந்து கொண்டவன் போல் நொடிப் பொழுதில் ‘ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா..!’ என்று சாமியாடும் அம்மன் கோயில் பூசாரிக்கியது.
அதே நேரம் கனவு போல் அவளுடனான ஆரம்ப நாட்கள் ஒரு கனவு போலவே என்னை மட்டுப்படுத்தவும் முயன்றது… அவளின் அன்னம் போன்ற மென்மையின் திரட்சியிலும், மரியாதை குவியும் தீட்சண்யத்திலும் என்னுள் அவள் வாயிலான ஒரு தாக்கம் ஏற்பட்டிருந்தாலும், அந்நாட்களில் திட்டமிட்டுப் பார்த்ததில்லை, தொடர்ந்ததில்லை. ஆனால் தும்பைப்பூவை அசைக்க முயன்று, தோற்று இன்புறும் காலை வெயிலாய் மிகவும் அளவான புன்முறுவலை ஓரிரு முறை அவள் வழி அனுபவித்திருக்கிறேன். கள்ளம் கனமில்லாத அந்நிலை அப்படியே தொடர்ந்திருக்கலாம்..!
அந்த உயர்நிலையிலிருந்து மீண்டு, மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறினேன்…
தங்க முலாமிட்ட தனது ‘எச்.எம்.டி.’ வாட்சை எங்கள் அறிவியல் கூடத்தின் ஜன்னல் ஓரத்தில் ஒன்றில் கழற்றி வைத்துவிட்டு, அதனையடுத்திருந்த அடிபம்பில் அவளும், ஆர். விஜயலட்சுமியும் தண்ணீர் அருந்தச் சென்றார்கள். அப்போதுதான் எனது மூளையில் அந்த வேதியியல் மாற்றம் நிகழ்ந்தது… அப்போது தாலுக்கா அளவில் நடக்கவிருந்த கண்காட்சி ஒன்றிற்காக அறிவியல் கூட்டத்திற்குள் உள்ளே தனியாளாக மின்சார இணைப்பு இல்லாமல் எரியும் மாதிரி விளக்கு ஒன்றை தயார் செய்து கொண்டிருந்தவன், பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். அவள் அனிச்சையாகக் கூட பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. ஆர். விஜயலட்சுமிதான் தொணத்தொணவென்று அண்ணந்திருச்சேறையில் விமர்சையாக நடந்த தனது சித்தி வழி தங்கையின் சடங்குச் சுற்றைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தாள். பதிலுக்கு வைரம் ஒரு ஊம் கூட சொன்னாளா என்றுத் தெரியவில்லை. ஆனால் ஆர்.விஜயலட்சுமி அதையெல்லாம் பொருட்படுத்துபவளா என்ன? ஆனால் எனக்கு அப்படியில்லை. பள்ளியில் சேர்ந்த நாளிலிருந்து அவள் அறிந்து என்னை ஒரு முறைக் கூட கவனிக்காதிருந்தது அன்று ஏனோ திடீர் கருமேகம் போல் பாரம் தலைக்கேறி, ஏதாவது செய்ய வேண்டுமென மனக்கிறுக்குத் தூண்டியது. சட்டென வெளியில் கைவிட்டு அந்த வாட்சை எடுத்துவிட்டேன்!
அவர்கள் தண்ணீர் குடித்து முடிக்கும் வரை எலியை கவ்வியப் பூனைப் போல் பார்த்துக் கொண்டிருந்தேன். வைரம், நான் நன்றாகப் பார்க்கும் வண்ணம் போல் லேசாக திரும்பினாள்… அட! ஆர். விஜயலட்சுமியின் இடைவிடாதப் பேச்சில் தன்னியல்பாக கரைந்துவிட்டதாய் அவளது முகபாவனைகள் எடுத்துக் காட்டின. பொலிவில் திருக்குளத்து தெப்பம் போல் இரசித்து மிதந்தாள். அன்றுதான் வைரம் இதழ் பிரிந்து, முத்துப் பற்கள், மாதுளை ஈறுகள் தெரிய நன்றாகச் சிரித்துக் கண்டேன். கண்களில் ஒளி வீசினாள். அவளின் ஸ்டிக்கர் பொட்டும், அதைத் தாங்கியிருந்த திருநீறும் முருகன் வேடமிட்டு நடித்த சிறு வயது ஸ்ரீதேவியை நினைவூட்டியது. பேச்சு சுவாரசியமோ என்னவோ வாட்சை ஒன்றை கழற்றி வைத்ததே அவளுக்கு நினைவில்லை. அப்படியே சென்றுவிட்டார்கள். ஆர்.விஜய லட்சுமி நல்லப் பேச்சுக்காரிதான். நான் வாட்சை எடுத்த இடத்திலேயே திருப்பி வைத்திருக்கலாம் அல்லது கூப்பிட்டுக் கூட கொடுத்திருக்கலாம். ஆனால் ஏனோ அப்படியே வாய்வராது நின்றுவிட்டேன். உள்ளங்கை பதற்றத்தில் பிசுபிசுக்க ஆரம்பித்தது. உருகிய தங்கத்தை பிடித்து வைத்திருப்பது போல் ஒரு அசூயை. ஓரிரு நிமிடங்களில் ஆர்.விஜயலட்சுமியின் குரல் மட்டும் கேட்க ஆரம்பித்தது. அப்போது நான் வாட்சை வெளியில் வைத்தால் கையைக் காணக் கூடுமென விறுவிறுவென ஓடி ஒரு தடுப்பினுள் ஒளிந்து கொண்டேன். வாட்சை காணாததையடுத்து ஆர்.விஜய லட்சுமி மட்டும் பதற ஆரம்பித்தாள். “என்ன ப்ள, எங்கடி வச்ச?” ஆர்.விஜயலட்சுமியின் குரல் சத்தமாகவேக் கேட்டது. வைரம் இம்முறை நிச்சயம் வாய் திறந்துப் பேசியிருப்பாள். ஆனால் என் காதுகளுக்குதான் எட்டவில்லை.
கைக்குள் கடிகாரத்தின் பட்டை பல்லியின் வால்களை போல் சுழன்றது. பேன்ட் பாக்கெட்டினுள் போட்டேன். அப்போது எனது அம்மாவின் குரலும் வெளியில் சேர்ந்து கேட்க ஆரம்பித்தது. இப்போதுதான் உண்மையிலேயே பயம் கூடியது. யாரோதான் திருடிவிட்டார்கள் என்ற பேச்சும் வரத் தொடங்க, குற்றவுணர்வு தலைக் கவிழ வைத்தது. அந்நேரம் பார்த்து சோபனா டீச்சரும் நானிருக்கும் இடத்திற்கு வந்து விட்டார். எனது கலவரமான முகம், அவருக்கு குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. ஆனாலும் என்னை சோதனைப் போட்டு பார்க்க சொல்லவெல்லாம் அவருக்கு மனம் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வீட்டில் எங்கு வைப்பதென தெரியாமல், எனது ஸ்கூல் பேக்கிலும், பேன்டிலும் இரவு எட்டு மணி வரை இடம் மாறிக் கொண்டிருந்தது. எனது தடுமாற்றங்களை அப்பாவும், அண்ணனும் கவனிக்கவில்லை என்றாலும், அம்மாவின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க முடியவில்லை. அவரது கேள்விகளுக்கு, பதில்கள் குளறின. ஏதோ தப்பு செய்திருக்கிறேன் என்று உறுதி செய்தார். எல்லோரும் கூடி விசாரித்தனர். முடியாமல் உண்மையை உளறி வைத்தேன். அம்மாவிடமிருந்து ஒரு அறையை எதிர்பார்த்தேன்.
“ஏண்டா இப்படி பண்ணினே?” என்று மட்டும் கேட்டார். அப்பாவும் அண்ணனும் இவன் நல்லாதானே இருந்தான் என்று என்னையே ஒரு புதிய ஆளைப் பார்ப்பது போல் பார்த்தார்கள். அன்றிரவுதான் வைரத்தின் பெரியப்பா குடவாசலில் போலீசாக பணி புரியும் நினைப்பும் வந்தது. அவங்க அப்பாவும் நெசவாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர். வீட்டில் ஒரு வேளை சொல்லியிருந்தால்… என்னவாகும்? விசாரிக்க நாளை யாரேனும் ஸ்கூலுக்கு வருவார்களோ…! என்ற பயம் என்னை பீடிக்கத் தொடங்கியது. உறக்கமும் பிடிக்கவில்லை.
அடுத்த நாள் காலை முதல் வேலையாக, அம்மா வைரத்தை தனியாக கூப்பிட்டு வாட்சை ஒப்படைத்தார். நடந்தவற்றை மறைக்காமல் குறிப்பிட்டார். என்னை மன்னித்துவிடும்படியும் கேட்டுக் கொண்டார். அதுவரை ஒரு கம்பீரமான, கண்டிப்பான அம்மாவை மட்டும் பார்த்திருந்த எனக்கு, என் உணர்வுகளையும் கூட சரியாகப் புரிந்துக் கொள்ளக் கூடியவராக கண்டு நெகிழ்ந்து நின்றேன். அன்று நடந்த இன்னொரு வியப்பு என்னவென்றால் வைரத்தை என்னுடன் பேச சொன்னது. வைரம் எந்தவித முகபாவனைகளையும் காட்டாமல் அப்படியே நின்றாள். அது அம்மாவை அச்சப்பட வைத்திருக்கக் கூடும்; வற்புறுத்துவது போல் மேலும் அவளிடம் பேச்சுக் கொடுக்கவில்லை.
அதன் பிறகும் வைரம் எப்போதும் போல் வந்தாள், சென்றாள். அவள் கடைசி வரை என் பக்கம் திரும்பவும் இல்லை. அம்மாதான் அவளைக் கண்டால் ஒரு மரியாதையைக் காட்டினார். அது என்னை மேலும் குற்றவுணர்விற்கு உள்ளாக்கியது. சோபனா டீச்சரும் என்னிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டார்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு கும்பகோணம் கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் சயின்ஸில் சேர்ந்தேன். நாச்சியார் கோயிலிருந்து பஸ்ஸில் சென்று வருவேன். அப்போதுதான் ராஜராஜனின் பரிச்சயம் கிடைத்தது. அவன் கும்பகோணத்தில் பாலி டெக்னிக் ஒன்றில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தான். பள்ளிப் படிப்பு பற்றிய விபரங்களைப் பகிர்ந்து கொண்டபோது அவன் வைரத்தின் சொந்த அத்தை மகன் என்ற தகவலும் தெரிய வந்தது. ரொம்பவும் சகஜமாகப் பேசுவான். நிறைய தோழிகள் அவனுக்கு இருந்தனர். அவர்களின் தொலைப்பேசித் தொடர்பு எண்களும் அவன் கைவசமிருந்தன. என்னிடம் கூட ஓரிரு எண்களைப் பகிர்ந்திருந்தான். “ஜாலியா இருக்கும் மச்சி, பேசிப் பாரு!” என்று உசுப்பேற்றிவிடுவான். நானும் ஒரு ஆர்வத்தில் முயற்சி செய்து, அந்த காதல் கோட்டை , காலமெல்லாம் காதல் வாழ்க பாணி உரையாடல்கள் சில காலம் சென்றிருக்கின்றன. முதல் முறை பேசிய போதும் மட்டும் “நீங்க வைரத்தோட க்ளாஸ் மேட்டா?” என்று கேட்டு, கண்கள் பிரகாசித்ததோடு சரி, பிறகு வைரத்தைப் பற்றிய பேச்சுகளை அவனும் எடுத்ததுமில்லை, நானும் கேட்டதுமில்லை.
கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு, வைரத்தை ஒரு முறை திருப்பனந்தாளிலிருந்து சுவாமிமலைக்கு வந்துக் கொண்டிருந்தபோது பேருந்தில் கண்டேன். வெளிர் வாடா மல்லி சேலைக் கட்டியிருந்தாள். மல்லிகை சூடியிருந்தாள். கழுத்தில் தாலி ஏறியிருந்தது. அருகில் கம்பீரமாய் அவளது அப்பா அமர்ந்திருந்தார். வைரத்திடம் ஏதோ ஒன்று கூடியிருந்தது. எப்போதும் போல நிறைகுட அழகோடு தலைக் குனிந்த வண்ணமிருந்தாள். அசப்பில் அப்போது ‘மெட்டி ஒலி’ சரோவை ஒத்திருந்தாள். முகத்தில் ஒரு மெல்லிய சோகம்… அது களைப்பாக கூட இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவளது தந்தை அருகிலிருக்க, நின்றபடி தொடர்ந்து அவளை கவனிக்கவும் பயமாக இருந்தது.
அவள் எப்படியும் என்னை காணப் போவதில்லை. மேலும் கல்லூரியில் எனக்கொரு காதல் பூத்திருந்தது. இங்கே இதை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. வைரத்திடம் எனக்கிருந்தது நிச்சயம் காதலில்லை. வைரத்தை யாராலும் அப்படியொரு கோணத்திலும் பார்க்க இயலுமா..? நிச்சயம் வாய்ப்பில்லை! புதையலின் இரகசியங்கள் பூமி மட்டுமே அறியும். அந்த அளவிற்கு உற்று நோக்கி கண்டடைபவர் யார்? அவளுடைய கணவன் அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலியா? உரிமை கொள்ளும் கரங்கள் எல்லாம் யோக்கிதைகளைப் பெற்றுவிடுகின்றவா? அன்று அருகிலேயே திடீர் பந்தல்கொடியாய் பேருந்தின் கம்பியில் பின்னி நின்றுக் கொண்டிருந்தாலும், கற்பனை உலகில் ஒற்றைப் பனைமரமாய் எங்கோ ஒதுங்கி அவளைப் பற்றி மட்டுமே அதிக நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். பேருந்தின் ‘பாம்! பாம்!’ சத்தத்தில் மீண்டு வந்தவன், அவளை மீண்டும் ஒரு முறைப் பார்க்க முயற்சி செய்தேன். தாயார் சன்னதி வஞ்சுளவல்லி நாச்சியார் போலவே எழில் கொண்டிருந்தாள். மகாலட்சுமி, நிச்சயம் நன்றாகவே இருப்பாள்; சென்றடைந்த சுகந்தவனத்தின் சாவியும் அவள் பொறுப்பில் இருப்பதுதானே நியதி. கையை கவனித்தேன் மஞ்சள் பட்டில், சிவப்பு நிறத்தில் நெய்யப்பட்டிருந்த கிளிகளில் ஒன்றைப் பற்றியிருந்தது.
அந்த காட்சி போதாதா? பூரணம் என்று நிறைந்து விடைபெற்றேன்!
மிகவும் நீண்ட இடைவெளிதான். பிறகு இன்றுதான் பார்க்கிறேன். அமைதிப் பதுமையாய் வருவதும், போவதும் அவள் இயல்பு. தீர்க்கமான நோக்கங்களையும், நெறிகளையும் தன்னியல்பாகவேக் கொண்டிருந்தது அவள் பலம். அத்தனை பிரம்மாண்ட கோட்டையை நட்பென்ற வாயிலில் அடைக்கப் பார்த்தது என் தவறுதான். அவள் அன்றிலிருந்தே வஞ்சுளவல்லி தாயாராக இருந்திருக்கிறாள். நான்தான் சிறுவனாய் அவளது கிளியைப் பிடுங்கி என்னுடன் பேச வைக்க ஏதேதோ செய்திருக்கிறேன்! ஆனால் அதற்கு பின்னும் கூட ஒரு வெறுப்புப் பார்வை வீசவில்லையே..! அதுதான் இதுவரை என்னை அவ்வப்போது அலைக்கழித்து கொண்டிருக்கிறதா? செய்தது அந்த வயதிற்குரிய சிறு பிழைதானே என்று மறக்க முடியவில்லையே..! தன் பெற்றோர்களிடத்தில் அன்று நடந்ததைப் பற்றி புகார் அளித்திருக்கலாம். பெரிதுபடுத்தி அவர்களையோ, தாய்மாமனையோ, சித்தப்பன், பெரியப்பா யாரேனும் ஒருவரையோ கூட்டி வந்து எனக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கலாம். அவள் அப்படி எதுவும் செய்யவில்லை. எதுவும் பேசவில்லை. தன்னுடைய உடைக்க முடியாத மோன அலங்காரத்தை கடைசி வரை கடைபிடித்தாள்.
அது அவளுக்கு உடையா, கேடயமா அல்லது கிரீடமா எனத் தெரியவில்லை. கிடைத்த வாய்ப்பில் இன்று ஒருவரையொருவர் ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தோம் என சொல்லிவிட முடியாது. சிலைகள் வடிக்கப்பட்ட வண்ணம் கடைசி வரை இருக்கின்றன. நான் மட்டும் கண்டு கடந்தேன்.
***

இத்ரீஸ் யாக்கூப்,
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். நுண்ணுயிரியல் முதுகலை பட்டதாரி. பணி நிமித்தம் தற்சமயம் அமீரகத்தில் வசித்து வரும் இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இணைய இதழ்களில் கதைகள், தொடர்கள் எழுதி வருகிறார். இதுவரை ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ என்ற நாவலும், ‘பிறைகள்’, ‘மழையில் நனையாத குடை’, மற்றும் ‘பிராத்தனைகள் தோற்பதில்லை’ எனும் தலைப்புகளில் சிறுகதைத் தொகுப்புகளும் வெளி வந்துள்ளன.


வைரத்தோட பேசியிருப்பீங்கன்னு பார்த்தால்… சிலையாய் தரிசித்து கடந்து விட்டீர்கள்.
சிறப்பு, வாழ்த்துகள்.