எழுதுவதற்கு ஏதுமில்லை
எல்லாமே எழுதிவிட்டார்கள் என்றார்
இன்னும் மிச்சமாய் இந்த வாழ்க்கை இருக்கிறதே என்றேன்
=
நடிக்கச் சொன்னால்
வேண்டாமென்று
நிழல்கூட
வெட்கப்படுமளவிற்கு
இருக்கிறது அவன்
நிஜ வாழ்க்கை
=
நண்பரிடம் கேட்டேன்
மனைவியிடம் கேட்டேன்
உறவினரிடம் கேட்டேன்
சாமியிடம் கேட்டேன்
விடையேதும் கிடைக்கவில்லை
சற்று நேரம்
கண்மூடி
என்னிடமே கேட்டேன்
உரசியதும் எதிரே நிற்கும் பூதமாக
உடனே கிடைத்தது
எனக்கான பதில்
=
பணமும் சாதியும் தான்
பல்லை இளிக்கின்றன
பட்டியல்களிலெல்லாம்
=
காலடி சத்தத்தில்
வால் சுருட்டி அமரும் நாய்க்குட்டியாக
புத்தகத்துடன் பதுங்குவோம்
அப்பாவுடன் விளையாடியது
அரிதுதான்
=

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது. 2026-ல் ‘தாழ்வரை’ நாவல் வெளிவந்துள்ளது.

