மாரி.கிருஷ்ணமூர்த்தி

இரண்டு  மணி நேரத்துக்கு மேலாக ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருப்பது  எரிச்சலாக இருந்தது  அரை குறை மனதோடுதான் வீட்டிலிருந்து கிளம்பினேன். இது  மதியம் குட்டி தூக்கம் போடுகிற நேரம் முன்று முறைக்கு மேல் ராயன் போன் வரவே எடுத்து பேச

சந்தானம் செஞ்சி பக்கம் இருந்து ஒரு பார்ட்டி வர்ராங்க நீ கொஞ்சம் இடத்தை நேர்ல கூட்டி போய் காட்டிட்டு வாயேன் என்று சொல்ல தட்டமுடியவில்லை

இது  வரை இருபதுக்கும் மேற்பட்டவர்களை  அந்த இடத்தை கூட்டிப்போய் காட்டியாகி விட்டது ஒன்றும் நடக்கவில்லை. அந்த இடத்தை காட்டுவதற்க்காக வண்டிக்கு போட்ட பெட்ரோலுக்கு போட்ட பணமே இரண்டாயிரத்தை தாண்டியிருக்கும் ஒவ்வொரு முறையும் இந்த இடத்தை இனி யாருக்கும் காட்டக்கூடாது என்று  நினைத்தாலும் யாராவது நல்ல இடம் இருக்குமா என்று கேட்டால்  நினைவுக்கு வருகிற முதல் இடம் ராயன் இடமாகத்தான் இருக்கும்.

  பத்து வருட ரியல் ஸ்டேட் அனுபவத்தில் இப்படி  சுற்றலில் விடுகிற இடம் வேறு எதுவுமேயில்லை. பட்டா,சிட்டானு எந்த வில்லங்கமும் இல்லாத இடம்   அதுவும் மலை சுற்றும் பாதையிலிருந்து மூன்று கிலோ மீட்டருக்குள்  இருக்குற இடமா இருந்தும் ஏன் யாருக்கும் பிடிக்காமல் போகிறது என்ற காரணத்தை  நிறைய முறை யோசித்து பார்த்தும்  பிடிபடவில்லை இத்தனைக்கும் பக்கத்தில் போகும் ரேட்டும் கம்மியா சொல்லியும் ஏன் விற்க முடியவில்லை  என்று யோசித்து கொண்டிருக்கும் போதுதான் மறுபடியும்  ராயனிடம் இருந்து போன் வந்தது.

சந்தானம் மண்டபத்தண்டத்தானே நிக்குறே

ஆமாண்டா

இப்பத்தான் பார்ட்டிக்கு  போன் பன்னேன் பைபாஸ் தாண்டி வரும் போது டயர் பஞ்சர் ஆயிடுச்சாம் ஸ்டெப்னியை மாட்டிக்கிட்டு அரை மணி நேரத்துல வந்துர்ங்கலாம் கொஞ்சம் சிரமம் பார்க்காமா எனக்காக பொருத்துக்குடா அவர் நெம்பர அனுப்புறேன் பாலோவ் பன்னிக்கிடா நாலு மணிக்கு அப்பாவ பார்க்க ஆஸ்பெட்டலுக்கு போறேன்   உள்ள போன போன் வேலை செய்யாது நா ராத்திரி வந்து உங்கிட்ட பேசுறேன்.

 பார்ட்டி நிதானமா பேசறத பார்த்தா கண்டிப்பா இந்த தடவ முடிஞ்சிடும்னு தோனுதுடா ராயனின் குரலில் இவ்வளவு நம்பிக்கை இருந்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

ராயன்  எனது பள்ளி தோழன் இப்பொழுது படித்து முடித்து சிங்கப்பூரில் இருக்கிறான்.கல்யாணம் ஆனவுடம் அப்பா அம்மாவையும் சிங்கப்பூருக்கே கூட்டிக்கொண்டு போய்விட்டான். வீட்டின் ஒரே பிள்ளை அவங்க அப்பாவுக்கு ராயனை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற கனவு இருந்தது.ஆனால் அவன் பன்னிரெண்டாவதில் அறிவியல் பாடத்தில் மட்டும்  பெயில் ஆனது  எல்லோருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எல்லா பாடத்திலும் முதல் ஐந்து ரேங்கில் வரக்கூடியவன் ஆனால் அதை விட எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி நான் அறிவியலில்  70  மார்க் வாங்கியது ஏன் என்றால் அறிவியல் பாடம் சொல்லிக்கொடுத்தே ராயன் தான் .ஊருக்கு வந்து நண்பர்களோடு பேசும்போதெல்லாம் இதை சொல்லி அவனை ஓட்டுவோம்.

அடுத்த தேர்விலே விட்டதை எழுதி இன்சினியர் ஆகிவிட்டான் எங்க செட்டுலேயே நல்லா படிச்சி வெளிநாட்டு வேலை, வீடு, கார்னு செட்டில் ஆனவன் அவன் மட்டும் தான் எங்க பிள்ளைகளுக்கு அவனத்தான் முன் மாதிரியா சொல்வோம்

மூன்று  மாதத்துக்கு முன்பு  முன்னால் மாணவர்கள் வாட்சப் குருப் காலில் இணைந்த போது  அவன் பேச்சிலும்,குரலிலும் சலிப்பு அப்பட்டமாக தெரிந்தது  பேச்சு வாக்கில்  ஊரில் ரியல் ஸ்டேட் கொடி கட்டி பறப்பதை பற்றி  பேச்சு வந்த போது அனிச்சையாக அவன் உற்சாகமானது போல  தோன்றியது என் கனிப்பு மெய்பிப்பது போல ராயன் மறு நாள் இரவு எனக்கு போன் பன்னி  அப்பாவுக்கு வந்த பூர்விக சொத்தான பெரும் திட்டு பாறையை ஒட்டியுள்ள  ஒரு   ஏக்கர்  நிலத்தை விற்று தர முடியுமா என்று கேட்ட போது  நம்பமுடியாமல்தான் கேட்டுக்கொண்டுருந்தேன் ஆனால் அதற்கு அவன் சொன்ன கதை தான் இன்னும் அதிர்ச்சியும் ஒரு திகில் படத்துக்கும் குறைவில்லாமால் இருந்தது

ஆறு  மாதத்துக்கு முன்பு  ஏதோ சின்னதாய் தலைவலி  எடுக்க மருந்து எடுத்திருக்கிறான் ஆனாலும் தொடர்ந்து தலைவலி தாங்க முடியாமல் போக டாக்டரிடம் ஸ்கேன் எடுத்த பார்த்த பிறகுதான் தெரிந்திருக்கிறது மூலையில் ஏதோ கட்டி வந்திருப்பதாக சொல்ல பெரும் பணம் செலவழித்து ஆப்ரேசன் முடித்திருக்கிறான் அதில் வீடு,கார் எல்லாம் போய்விட்டது தொடர்ச்சியாக பெட் ரெஸ்ட்டில் இருக்க வேண்டியதால் வேலையிலிருந்தும் நின்று விட்டிருக்கிறான் .இப்பொழுது அப்பாவுக்கு இரண்டாவது தடவை ஹார்ட் அட்டாக் வேற  வர ஆப்ரேசனுக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறான் இதையெல்லாம் விட அவன் சொன்னதுதான் இன்னும் அதிர்ச்சியை அளித்தது.அந்த ஆப்ரேசனுக்கு பிறகு வினோதமான கனவுகள் வருவதாகவும் அது ஓரிரு நாளிலியே நடப்பதாகவும் சொன்னதை கேட்டு

ஏண்டா கதை எதையாவது எழுதியிறீயா என்று கிண்டல் அடிக்க அவன் சொன்ன ஒரு சம்பவம் அப்படியே  போன வாரம் நடக்க ஊள்ளுர அவன் சொல்லுவதை நம்ப ஆரம்பித்து விட்டேன்.

போன வாரம் ஒரு ரியல் எஸ்டேட் பார்ட்டி  ராயனின்  இடத்தை பார்த்துவிட்டு பெரும் தொகையை அட்வான்ஸாக கொடுத்து ஒரு  வாரத்தில் ரிசிஸ்டர் என்று சொன்ன இரவு  ராயனுக்கு போன் பன்னேன் ரொம்ப சந்தோஷ்பட்டான் என்னுடைய எல்லா கடன் பிரச்சனையும் முடிஞ்சுடும்  நானும் ஊரோட வந்துருவேண்டா என்று சொல்லியவன் தான் ரிஸிட்ருக்கு முந்திய இரவு கிளம்பிட்டியா என்று கேட்க ராயனுக்கு போன் பன்னிய போது  

சந்தானம் நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டேல்ல

இல்லைடா சொல்லு

இந்த பார்ட்டிக்கு இடம் முடியாதுடா

ஏன் உனக்கு  டிக்கெட் கிடைக்கிலையா இல்ல என்று இழுக்க டக்கென்று வாட்சப்பில் பிளைட் டிக்கெட்டை அனுப்பியிருந்தான்

அப்புறம் என்ன

காலையில பார்ட்டிக்கு போன் பன்னிட்டு சொல்லு என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டான் ராயனின் மீது எரிச்சலும்,கோவமாக வந்தது எல்லாம் முடிந்த பிறகு இப்படி சொல்கிறானே என்று காலையில் பார்ட்டிக்கு போன் பன்னும் போது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.கூட வந்தவரிடம்  கேட்டபோது     இரவு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட மருத்துவமனையில சேர்த்திருக்கோம் ஆனா அவர கோமாவுக்கு போகாம தடுக்கமுடியலனு டாக்டருங்க சொல்லிட்டாங்க தம்பி

இந்த மாதிரி அபசகுனத்தால் எவ்வளோ பேர் இந்த தொழிலிருந்தே கானாமல் போயிருக்கிறார்கள் இப்பொழுதுதான் தொழிலில் நம்பிக்கையானவாக வளர்ந்து வருகிற நேரம் உடனே அட்வான்ஸை திருப்பி அனுப்பிவிட்ட்டு

சார் இந்த விசயம் கொஞ்ச நாளைக்கு யாருக்கும் தெரியாம பாத்துக்குங்கனு

சொல்ல அந்த பக்கம் மவுனமாக இருந்தது.

அதற்கு பிறகு ராயன் இடம் சம்பந்தமாக நான் முயற்சியும் செய்வதில்லை அதனால் ராயனே இந்த பார்ட்டியை பிடித்திருக்கிறான்

வெள்ளை நிற டொயாட்டா கார் ஒன்று அருகில் வந்து நிற்க.அதன் மேல்  வெய்யில் சுறர்ரென்று அடிக்க  கண்கள் கூசியது கார் கண்ணாடியை எறக்கி கொஞ்சம் நேரம் கழித்துத்தான் அந்த முகத்தை பார்க்கமுடிந்தது

 சந்தானமா

ஆமாம் என்றதும்

சாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சி

சரி போலாமா என்றதும்  டூ விலரில் முன்னே போக கார் பின்னாடி வந்துக்கொண்டிருந்தது அந்த  முகத்தை எங்கேயே   பார்த்த மாதிரி இருந்தது அதுவும் நெருக்கமாக பழகிய உணர்வு  எனது நாற்பது வயது வரை கடந்த முகங்களையெல்லாம் ஞாபகப்படுத்தி பார்த்தும் பிடிபடாமல் ராயர் இடத்துக்கு போகும் வழியை மறந்து கொஞ்சம் தள்ளியிருக்கிற  பெரும் திட்டு   பாறையை பார்த்ததும் தான் தாண்டி வந்துவிட்டோம் என்ற நினைவு வந்து வண்டியை திருப்பிய போது காரை நிறுத்திவிட்டு அவர் இறங்கி என்னை நோக்கி நடந்து வந்துகொண்டிருக்க  சட்டென அவர் நடையின் லாவகம் பிடிபட்டவுடன் என் ஞாபகத்தில்  அவர் யார் என்று பிடிபட்டது

அவரை நோக்கி ஓடி போய் சார் ஆர்.கே சார்தானே  என்றதும் அவர் முகம் மலரந்த கணமே சொல்ல முடியாத மகிழ்ச்சியாக இருந்தது.

எனது ஒன்பதாம்  வகுப்பு சமூக அறிவியல் வாத்தியார் பள்ளியில் நிரந்தர ஆசிரியர்கள் குறைவாக இருக்க பகுதி நேர பயிற்ச்சி ஆசியராக எங்களுக்கு பாடம் எடுத்தவர் அதுவும் ஆறு மாதம் மட்டுமே அவருடைய அடையாளமே அவர் வைத்திருந்த வெள்ளை கலர் எம்,ஐ,டி ஸ்கூட்டரும் அதிலிருந்து இறங்கி வேகமாக நடந்து வரும் இந்த நடையும் தான்

சார் உங்க ஸ்டூடண்ட்  சந்தானம்  என்றதும் அவர் முகம் சட்டென மாறியது.

இடம் இங்கதானா என்றதும் எனக்கு ஒரு மாதிரியா போனது

கொஞ்சம் சமாளித்தபடி இல்ல சார் கொஞ்சம் தள்ளிவந்துட்டோம். அதோ அந்த பாறையை ஒட்டியிருக்கிற  ரோட்டுல போகனும் உங்க முகத்தை தேடிகிட்டே கொஞ்சம் தள்ளி வந்துட்டேன் சார்.

அதற்கு அசட்டையாக வாங்க அந்த இடத்தை காட்டுங்க என்றதும் ஏனோ எனக்கு நெஞ்சு பாரமானது எனக்கு ரொம்ப பிடித்த வாத்தியார் என்னை அடையாளம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை அவர் கண்களில் புரோக்கராக என்னை பார்த்தது கஷ்டமாக இருந்தது.

உடனே இங்கிருந்து போய் விட வேண்டும் என்று மனம் கொதித்த கணமே ராயனின்  நிலமையை ஒரு நிமிடம் யோசிக்க வைத்தது

வண்டியை ராயன் நிலத்துக்கு போகும் பாதையில்  போய் நிறுத்தினேன்.

மேற்கு பக்கம் சரிந்திருந்த   சூரிய வெளிச்சம் சட்டென மேக மூட்டம் மறைத்து அந்த இடம் முழுக்க ஒரு போர்வையை போல  நிழல் பரவியது.

அவர் காரை விட்டு இறங்கியதும் எனக்குள் கொஞ்ச நேரத்து முன்பிருந்த மாணவன் காணாமல் போய் தேர்ந்த தொழில்காரனாய் அவருக்கு அந்த இடத்தை பற்றி விவரிக்க ஆரம்பித்தேன்

சார் அதோ அந்த பாறையில இருக்குற நாலுகாலு மண்டபத்திலிருந்து   இந்த  பக்கம் இருக்கிற பனை மரம் சாரையில திரும்பி  மலையிலிருந்து வருகிற  ஓடை வரைக்கும் இருக்கிற இடம் தான்

இந்த இடத்துக்கு நாலு பக்கமும் ரோடு இருக்கு இந்த பக்கமா போன மலைசுத்துத்துற பாதைக்கு போகலாம் அதோ அந்த பக்கமா போனா கலெக்டர் ஆபிஸ் வரைக்கும் போகும் மேற்கு பக்கமா போன ஊருக்குள்ள போகும் சார்

அதுவுமில்லாம நிலத்துல நல்ல ஊத்து இருக்கிற கிணறும், பத்து தெண்ணையும் இருக்கு சார் என்று சொல்லி முடித்து விட்டு ஒரு நிமிடம் அவரை திரும்பி பார்த்தேன்.ஆனால் நான் சொல்வதை காதில் வாங்காது மாதிரி பாறை மேல் இருந்த ஆளுயர நாலு காலு மண்டபத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென.சார்  அந்த பாறையை சுற்றி ஏழு எட்டு ஏக்கர் பொறம் போக்கு நிலம் இருக்கு  வரட்ட காடு நிழலுக்கு  இரண்டு மூனு ஆடு,மாடுங்க அனையிற அளவுக்கு ஒரு குகை மாதிரி ஒரு பாறை கிடக்கு   அத  தவிர மொத்த ஊம்புல்தான்  சார்   அதையும் பக்கத்து இடத்துக்காரங்க  பட்டாவுக்கு ரெடி பன்னிட்டு இருக்காங்க அது வந்தவுடன் நேரா  நம்ம இடத்துக்கே பாதை போட்டடலாம்   

நாலு காலு மண்டபத்துக்கு பக்கத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின்  விழுதுகளில் மேகத்தில் மறைந்திருந்த சூரிய வெளிச்சம்  லேசாக தலை காட்ட அந்த இடமே பொன் ஒளியாக பிரகாசிக்க ஏதோ கனவுலகில் இருப்பது போல பிரமை தட்டியது.

அவர் எதுவும் பேசாமல்  அந்த பாறையை நோக்கி போக நான் அவர் பின்னாடியே நடக்க ஆரம்பித்தேன்

மதிய வெய்யிலுக்கு மர நிழலில் படுத்து கிடக்கும்  யானைகள் போல    கரும் பாறைகள் அந்நிலம் விரவிக்கிடந்தன  சில இடங்களில் சொரசொரப்பாகவும் சில இடங்களில் அங்கேங்கே வழுவழுப்பான குழிகளும் அம்மி போன்ற தரை பள்ளங்களும்   இருக்க அதை பார்த்த படியே ஆர்.கே சார்  மரத்தை ஒட்டியிருக்கும்   ஓடை பக்கம் நடந்துக்கோண்டிருந்தார் .

ஓடை  சரிவில் கிடந்த  பள்ளம் முழுக்க ஆமணக்கும்,ஆவாரமும் பூத்துக்கிடக்க .அதன் நடுவே  சரலை பாறைகளில்  சிதிலமடைந்த  சுட்ட சிலைகள் கை வேறு கால்வேறாக சிதறிக்கிடந்தன. ஒரு சிறு பாறை மேல் செக்கு போல ஒரு கல் திண்டை வழுப்பாக செடி மறைவில் கிடந்தது.அதை பார்த்தபடியே மேடேறி விழுதுகளை பரப்பிகிடந்த மரத்துக்குள் நுழைந்ததும் அவர் கண்கள் எதையோ தேடியது

மரத்தடியில்  முக்கோண கல்லெடுத்து  வைத்து பூசை செய்த தடயம் தெரிய  சிரித்த படியே வெளியே வந்தவர் இந்த பக்கம் கண்ணி மார்  கும்பிடுவாங்களா?

நான் தலையசைத்தேன்

அதை தாண்டி நாலு காலு மண்டபத்தை எட்டியதும்    மண்டப தரையில் தாமரை இதழுக்கு நடுவே பெரும் பாதம் இருப்பதை பார்த்ததும் அவர் கண்கள் பிரகாசிப்பதை பார்த்தேன்.

சூரியன் மலையில் பாதி இறங்கியிருக்க இருளும்,வெளிச்சமும் அந்த இடத்தை நிரம்பியிருக்க  தூரத்தில் வியாபித்திருந்த பெரு மலையை பார்த்தபடியிருந்தார்

இந்த இடத்தை வித்தே ஆகனுமா?

அவர் கேள்வியில் இருந்த  சூட்சுமம்   ராயனுக்கு வரும்  வினோத கனவுகள் போலவே  எனக்கு பட்டது

நான் திரும்பி அவர்  கண்களை  நேருக்கு  நேராக பார்த்தேன். மஞ்சள் பூலைகளால் நிரம்பியிருந்த கண்களில்  இடது பக்கம் மட்டும் வெண்மை லேசாக பரவுவதை கண்டதும்

மனதில் இனம் புரியாத ஒரு பதட்டம் பரவியது

ம்ம்ம்ம்

யாரிடமோ சொல்வது  போல ஆர்.கே சார் சொல்ல ஆரம்பித்தார்

ஒரு கேள்வியை துரத்திகிட்டு நாற்பது வருஷமா அலையிறேன்  ஆனா பாரு அத கண்டடைஞ்ச நேரம் எந்த திகைப்பும் இல்லாம நிக்குறேன்

அந்த கேள்வி எனக்குள்ள வந்தப்பறம் வாத்தியார் வேலை கிடைச்சும் போகல

அதுக்கப்புறம் என் நாக்கு  யாருக்கும் பாடம் எடுப்பதற்கு எழவேயில்லை அது ஏன்னு எனக்கு இன்னிக்கும் வரை  புதிராவே இருக்கு

அப்புறம் அப்பா பார்த்த ஆயில் மில்லையே நடத்த ஆரம்பிச்சு நல்லா  சம்பாரிச்சி கல்யாணம் பன்னி இரண்டு  பசங்க அவங்களும்  நல்லா படிச்சி  சிங்கப்பூர்ல இருக்காங்க  அனா பாரு விதி அவங்களும் ஆயில் பிசனஸ்தான் பன்றாங்க அவங்கதான்  இந்த இடத்தை யார் மூலமோ கேள்விப்பட்டு பார்த்துட்டு வர சொன்னாங்க

“இது பள்ளி சந்தத்துக்கான நிலம்”

அவர் சொன்னது புரியாமல் அவரை பார்க்க

நான் காலேஜ் படிக்கிறப்ப

ஒரு நாள் எங்க வரலாற்று ஆசிரியரோட திருவண்ணாமலை கோயில்ல இருக்கிற கல்வெட்டுகல்லாம் ஆய்வு செஞ்சப்ப ராஜ ராஜ சோழன் சமணர்களுக்காக நில தான கொடுத்த பற்றின ஒரு  குறிப்பு இருந்தது.

அது உங்க ஊருல இருக்குன்னும் அந்த குறிப்புல இருந்தது.

அதை மய்யமா வைச்சி என்னுடை டாக்டரேட் ஆய்வு தொடங்கிச்சி  உங்க ஊர்ல இருக்குற பள்ளியிலிலே பகுதி நேர ஆசிரியர் வேலை கிடைக்க அதை பயன் படுத்திகிட்டு அந்த இடத்தை தேடுனேன் 

ஆனா நாங்க எவ்வளவு தேடியும் அந்த இடத்தை கண்டுபிடிக்க முடியல நிறைய கல்வெட்டு சான்றுகள்,களப்பணின்னு அலைஞ்ச பிறகு சமணர்கள்  உங்க ஊர்ல இருந்திருக்கிறார்கள் என்று மட்டும் தான் கண்டுபிடிக்க முடிஞ்சதே தவிர ஆனா அவங்க எங்க தங்கியிருந்தாங்க அங்க அவங்க என்ன பன்னாங்கன்னு தெரியில   

அந்த தான சொத்தையும் கண்டு பிடிக்க முடியில  அதனால அந்த ஆய்வு அப்படியே கைவிட்டுட்டு மில்லுக்கு போயிட்டேன்

அப்பத்தான் ஒரு  நாள் எண்ணெய் மில்லுல இருக்கும் போது எங்கப்பாக்கிட்ட எண்ணெய் வைத்தியம் பன்ன வந்த  ஒருத்தர்கிட்ட  வாக்கு போல ஒன்ன சொன்னாரு மலையில ஏத்துற தீபம்  முதல்ல ஆமணக்கு எண்ணெயிலதான் ஏத்துனாங்குனு    அத  அவருக்கு வைத்தியம் சொல்லிக்கொடுத்த   குரு  சொன்னதாக சொன்னார்

கண்டிப்பா சமணர்கள்தான் கண்டுபிடித்திருக்கம் முடியும்னு இரண்டையும் இணைச்சி பார்த்தும் எதுவுமே கிடைக்கிலே ஆனா உன்ன பார்த்த நொடி இதுவரை மறைந்து போயிருந்த அவ்வளவும் கண்ணு முன்னாடி வந்து காட்டுனது போல இருந்துச்சி

உனக்கு தெரியுமா எங்கப்பனும்,தாத்தனும் ஏ நான் செய்யுற அத்தனை  யாவராமும்    ஆமணக்கும்,ஆவாரம்  மட்டும்தான்

ஆமணக்குலேயும்,ஆவாரத்தைலேயும் எவ்வளவு நன்மை இருக்கோ அவ்வளவு விஷமும்  இருக்கும் அதை பிரிக்கிறதுக்கு வெறும் நுட்பம் மட்டும் போதாதுன்னு அப்பா அடிக்கடி சொல்லுவார் அதை செய்யும் போது நமக்குள்ளே அணங்கு வந்து ஏறனும்பார்.

முதமுறையா ‘’அந்த அணங்க’’  இங்கு  நிக்கும் போது உணர்ந்தேன்

உங்க குடும்பத்துல யாராவது    எண்ணெய் வைத்தியம் சம்பந்தமா இருந்தாங்களா?

இல்ல சார் ஆனா மலையில ஏத்துற தீபத்துக்கு எண்ணெய் எடுத்துட்டு போற முறை இப்பவரைக்கும் எங்க தலைமுறை கிட்டத்தான் இருக்கு

பெரிய மவுனத்துக்கு பிறகு

பிராணம்தான் எல்லாமே பிராணம் தான் சுழி,பிராணம் தான் விதி அதை சுத்தப்படுத்தத்தான் சமணர்கள் இந்த எண்ணெயே கண்டுபிடிச்சாங்க அது எல்லாருக்கும் கிடைக்குனும்தான் மலை மேல அதை தீபமா ஏத்துனாங்க

அந்த சுத்தப்படுத்தன பிராணம் இந்த இடத்தைலேயும், பூரணமா இருக்கு

இந்த இடத்தை ஒத்த ரூபாய் கூட வாங்காம  தானமா எழுதி வைக்க சொல்லு

சார் என்ன சொல்றீங்க கோடி ரூபாய்க்கு மேல போற  இடம் அதுவுமில்லாம அவன் இருக்கிற சூழல்ல

அத பற்றி அவனே சொல்லுவான்.

வீட்டுக்குள் நுழையும் போது எதிரில் வந்த மனைவி

என்னங்க   ஒங்க மேல ஒரே எண்ணெய் வாசனையா அடிக்குது என்றதும் எனக்கு திக்கென்றது

ராத்திரி பதினொறு மணியிருக்கும் இரண்டு மூன்று முறைக்கு மேல் ராயன் போன் செய்துக்கொண்டே இருந்தான் நான் எடுக்காமல் போனையே பார்த்துக்கொண்டிருந்தேன்

போன் திரை அணைந்து ஒரு நிமிடம் கடந்ததும் ஒரு வீடியோ ராயனிடம் இருந்து வந்தது.

அதை தட்டி திறக்க ஆரம்பித்தேன் மலையில் எரியும் தீபத்தின்  மேல்  சுற்றிக்கொண்டே இருந்தது.

000

மாரி.கிருஷ்ணமூர்த்தி       

திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர்

கடந்த பதினைந்து வருடமாக தீவிர இலக்கிய வாசிப்பும் கடந்த பத்து வருடமாக  இணைய இதழ்களில் அவ்வபோது சிறுகதைகளை வெளியீட்டு வருகிறார்.”தளம்”சமூக உறையாடல் மையம் வழியாக இலக்கிய கூட்டங்களும்,ஊர் பொது கிணறு புணரமப்பு இயக்கம் வழியாக மூன்று பொது கிணறுகளை மக்களோடு இணைந்து தூர் வாரி மக்களிடமே ஒப்படைப்பு வேலையும் செய்திருக்கிறார்.அத்தோடு சொந்த ஊரில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான கல்வியை நோக்கி “தும்பட்டான்” சிறார் மாலை நேரப்பள்ளியும் நடத்தி வந்திருக்கிறார்.தற்சமயம் the film school லில் படித்து முடித்து சுயாதீன சினிமா எடுக்கும் பணியில் இருக்கிறார்.அப்பா மாரிமுத்து.அம்மா ஜெகநாதம்மாள்.மனைவி சுகன்யா கிராமத்தில் வசிக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *