1.
யார் யாரோ
ஆகி போகிற
இவ்வாழ்க்கையில்
நான் நானாக இருப்பதில்
ஏன் இவ்வளவு துயரம்
2.
உறக்கம் என்பது சொர்க்கம்
அது யாருக்கும் வாய்க்கும்
என்பதில் தான் இருக்கிறது
பிரபஞ்ச சூட்சமம்
3.
மழை ஈரம்
அவள் சற்றேறக்குறைய
உருணடை பச்சைக் கோட்டை வளைத்து
அதன் மேல் பாகத்தில்
ஒரு செடி முளைப்பதை வரைந்திருந்தாள்
,
அந்த சற்றேறக்குறைய பச்சை பூமியில்
அவளும், அந்த செடியும் சேர்ந்து
மழையில் நனையும் சித்திரத்தை
மனதில் வரைந்துக்கொண்டிருந்த போது
அவள் நிமிர்ந்து என் முகத்தை பார்த்தாள்
,
அந்த முகம் முழுக்க
மழை ஈரம்
4.
சுயம்
கேட்பதே கொடுக்கப்படுமெனில்
சாயலற்ற பிரக்ஞையில்
புகுந்துக்கொள்ள வேண்டும்
,
இங்கு ஏதோ ஒன்றின்
சாயலில் தான் இருக்கிறது
எல்லாம்
5.
தேடல் வெளி
படைப்பின் சூட்சம கணங்களை
தொட்டுக்காட்டும் மத்திமத்தில்
அலைகிறது பாழியின் இருள்
கவிந்த பசி
6.
மாய அலை
தகிக்கும் கானலில்
சிறகை விரித்து
பறக்க துடிக்கின்றன
,
கோபுரத்தில்
கதையாகி விட்ட
கிளி
00

மாரி. கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர்
கடந்த பதினைந்து வருடமாக தீவிர இலக்கிய வாசிப்பும் கடந்த பத்து வருடமாக இணைய இதழ்களில் அவ்வபோது சிறுகதைகளை வெளியீட்டு வருகிறார்.”தளம்”சமூக உறையாடல் மையம் வழியாக இலக்கிய கூட்டங்களும்,ஊர் பொது கிணறு புணரமப்பு இயக்கம் வழியாக மூன்று பொது கிணறுகளை மக்களோடு இணைந்து தூர் வாரி மக்களிடமே ஒப்படைப்பு வேலையும் செய்திருக்கிறார்.அத்தோடு சொந்த ஊரில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான கல்வியை நோக்கி “தும்பட்டான்” சிறார் மாலை நேரப்பள்ளியும் நடத்தி வந்திருக்கிறார்.தற்சமயம் the film school லில் படித்து முடித்து சுயாதீன சினிமா எடுக்கும் பணியில் இருக்கிறார்.அப்பா மாரிமுத்து.அம்மா ஜெகநாதம்மாள்.மனைவி சுகன்யா கிராமத்தில் வசிக்கிறார்.

