ஜீவவிருட்சம்

ஆ என்றால்

கைகள் மடக்கி சாமியாடும்

சின்னப்பொண்ணு

நேற்றின் நடுநிசியில்

புரண்டுபுரண்டு படுத்தாள்

கோணங்கி ஜெக்கம்மாவின்

டும் டும்களில்

,

விடியற்காலையே

கிழக்கு வான்நோக்கி

திக்கையம்மன் சந்நிதி எதிரே

முத்துக்காய்களை உருட்டுகிறாள்

கட்டங்களில் ஆடுகிறது

வெண் தேவதை வடம்பிடடித்து வரும்

சாபத்தின் மாபெரும் தேர்

,

முன்னொரு பொழுதில்

வீரக்குடி குளத்துக்கரை மேட்டில்

ஆலவிழுது இடுக்குகளில்

விரல் மோதிரங்களை

வெட்டுச் சீட்டில்

உதறிக்கொண்டிருந்தாராம்

ரெங்கசாமி

,

அன்றாடக் கூலிக்கு

கருவேலங்களை வெட்டி சாய்த்து

பட்டசாராயத்திற்கும்

பன்றி இறைச்சிக்கும்

மாண்டுப் போயிருந்தான்

மூன்று தங்கைகளின் சிவராமு

,

பக்கத்து வீட்டார் நட்டு வைத்த

தென்னம் பிள்ளைகளை

இராவோடு பிடுங்கி எறிந்து

இரக்கங்களின் வியாக்கியானம்

சொல்லிக்கொண்டிருந்தாள்

பசும்பொன்ணு

,

வினையெச்சங்களை

குறி சொல்ல இறங்கும்

செல்ல முத்துமாரி

சச்சுருவ சொல்லுவாள்

சந்ததியின் கடைக்குட்டியை

அகவை எண்பது வரை

காப்பாற்றி வையுங்கோ

அப்பறம் என்ன

நீர் என்றாலும்

நிலமென்றாலும்

எம் பிள்ளைக்கு

உசுரு கெட்டி தான்.

00

இயற்பெயர் கார்த்திக்.திருச்சியைச் சேர்ந்தவர்.முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். முதல் கவிதைகள் கதவு இணைய இதழில் வெளியானது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *