பல்லபுரம் பிரபாகரன்
அற்பத்தனமாக நடந்து கொள்கிறோம் என்று ஒருவரும் வருந்தவில்லை.
நேர்மையாக இருக்க வேண்டாமா?
யாரோ ஒருவருடைய பொருளுக்கு அத்தனை மாணவர்களும் கையை உயர்த்துகின்றனர். இது யார் யாருக்குச் சொந்தமானது? உண்மையாகத் தொலைத்தவர்கள் யார்? இந்தப் பென்சில்கள் யார் யாருடையது?
வகுப்பு ஆசிரியர் கேட்டுக் கொண்டு நின்றார்.
அப்போதுதான் அவர் உள்ளே நுழைந்தார். எப்போதும்போல் அவர் மேசையின் மீது புதிதாக மூன்று பென்சில்கள் இருந்தன. நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோது அவசரத்தில் விட்டுச் சென்று இருக்கலாம். அப்படித் தவற விடப்பட்ட பென்சில், ரப்பர், பேனா, அளவுகோல், எதுவானாலும் எடுத்து வைப்பது வகுப்புத்தலைவன் வேலை. அப்படித்தான் அன்று தியான் அவற்றை எடுத்து வைத்திருந்தான்.
ஒருமுறை தியான் வகுப்பில் கிடந்த அழிப்பானை எடுத்து ‘இது யாருடையாது?’ என்று கேட்டான். அப்போது தமதென்று இரண்டு மாணவர்கள் போட்டி போட்டனர்.
முடிவில் அவர்கள் பக்கத்தில் அமர்ந்து இருப்பவர்களை விசாரித்து உரியவனிடம் கொடுத்தான். ஆனால், அதை மற்றவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் வீட்டில் சென்று சொல்ல அடுத்த நாள், அவனுடைய பெற்றோர் பள்ளிக்கு வந்து,
“வகுப்பில் ஆசிரியர்கள் கவனம் பிள்ளைகள் மேல் இருப்பதில்லை” என்று பெரிய பிரச்சனையே செய்துவிட்டனர். அன்று முதல் ‘எது கிடந்தாலும் மேசையில் எடுத்து வைக்கும்படியும், தான் வந்ததும் விசாரித்துக் கொடுத்து விடுகிறேன்’ என்றும் ஆசிரியர் கூறியிருந்தார்.
அந்தப் பென்சில்களைக் கையில் எடுத்த ஆசிரியர், ஒளித்துவைத்தார்.
“இன்று யார் யாருடைய பென்சில் காணாமல் போனது; இந்தப் பென்சில் யாருடையது?” என்று ஆசிரியர் கேட்டதுதான் தாமதம்.
அடுத்த நொடியே எல்லோரும் ஒரே சத்தமாக,
“என்னுடையது சார்!”
“என்னோட பென்சில்!” என்று சத்தமிட்டனர்.
ஆசிரியர் சிரித்துக்கொண்டே கேட்டார்:
“கையில் இருப்பதோ மூணு பென்சில்; எல்லோரும் கையைத் தூக்கினால் யாருக்கென்று கொடுப்பது?”
ஆசிரியருக்கு கேளியும் கிண்டலும் செய்யத் தோன்றியது.
ஆசிரியர் சிறிது யோசித்துப் பார்த்தார். பின்னர் ஒரு யுக்தி நினைவுக்கு வந்தது.
“உங்கள் பென்சில்தான் என்றால் அதை நிருபிக்க, ஒவ்வொருவரும் பென்சிலில் உள்ள அடையாளங்களைச் சொல்லுங்கள், பார்க்கலாம்” என்றார்.
“என் பென்சில் புதுசு…”
“என் பென்சில் கொஞ்சம்தான் குறைஞ்சு இருக்கும்.”
“என் பென்சில் கருப்பு நிறத்தில் இருக்கும்…” மாணவர்கள் வரிசையாகக் கூறினர்.
ஆசிரியர் அவ்வபோது அவரிடம் இருந்த பென்சிலோடு ஒப்பிட்டுப் பார்த்தார். மூன்று பென்சில்களும் புதிதாக இருந்தது. அதில் பச்சை நிற பென்சில் ஒன்று மட்டும் கூர் தீட்டாமல் இருந்தது. மற்ற இரண்டு பென்சில்களும் கூர் செதுக்கப்பட்டுக் குறைந்தளவில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
ஆசிரியருக்குச் சந்தேகம் மேலும் வலுப்பெற்றது.
அப்போது வகுப்பு தலைவன் தியான் ஆசிரியரிடம் வந்து குசுகுசுவென்று சொன்னான்.
ஆசிரியர் எல்லோரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்:
“இந்தப் பென்சில் யாருடையதோ அவர்கள் நாளை இருபத்து நான்கு பென்சில்கள் வாங்கி வந்து வகுப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு பென்சிலைக் கொடுக்க வேண்டும். இதுதான் பென்சிலைத் தொலைத்ததற்குத் தண்டனை. இதனால் இனிமேல் ஒருவரும் எதையும் காணாமல் போட மாட்டீர்கள். இதுதான் உங்களைத் திருத்துவதற்கான வழி.”
ஆசிரியர் கூறியதைக் கேட்டதும், உயர்த்திய கைகள் வெகுவிரைவில் கீழே இறக்கப்பட்டன.
எல்லோரும் பொய்ச் சொல்லி இருக்கிறார்கள்? என்று நினைத்து வருந்தினார் ஆசிரியர். அப்போது ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. மூன்று மாணவர்கள் மட்டும் மெல்ல கையை உயர்த்தினர்.
ஆசிரியர் அவர்களிடம்,
“நீங்கள் என்ன பெரிய பணக்காரர்களா? எல்லோருக்கும் பென்சில் வாங்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“பணக்காரர் இல்லை சார். நேர்மையாக இருக்க வேண்டும்; உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதால்தான் சொல்கிறேன்; என்னுடைய பச்சை நிற பென்சில் ஒன்று காணாமல் போய்விட்டது.” வீட்டிற்கு சென்றபோது,
“புது பென்சில் வாங்கி கொடுத்தேன்; இதையும் காணாமல் போட்டுட்டியா!” என்று அம்மா அடித்ததையும் சொன்னான்.
இரண்டாவது மாணவன்:
“சார், என்னுடையதும் புதுசுதான்! மஞ்சள் நிறம்; அதில் கூர் உடைந்து முக்கு இல்லாமல் இருக்கும்.”
“சார், சிவப்பு பென்சில் ‘என்னுடையது’; எனக்குப் பென்சிலை கடிக்கும் பழக்கம் இருக்கு. அதன் மேல் புறத்தில் கடித்த தடங்கள் இருக்கும்” என்றான்.
ஆசிரியர் கையில் இருந்த பென்சிலைக் கவனமாகப் பார்த்தார். அவர்கள் சொன்ன சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறத்தில் பென்சில்கள் இருந்தன. உண்மையாகவே அந்த மூன்று மாணவர்களும் சொன்ன அடையாளங்கள் அந்தந்தப் பென்சிலோடு ஒத்துப் போயிருந்தன.
உடனே ஆசிரியர் தியானைப் பார்த்து,
‘நாம் பேசியதைச் சொல்’ என்பதைப் போல் தலையை அசைத்தார்.
தியான் சொல்லத் தொடங்கினான்.
நாங்கள் இருவரும் போட்ட திட்டம் வெற்றி அடைந்தது.
என்ன திட்டமென்று அறிந்துகொள்ள வகுப்பு முழுவதும் அமைதியானது.
உண்மையை அறிந்து கொள்வதற்காகவே இருபத்து நான்கு பென்சில் வாங்கி வரச் சொன்னோம். இப்படிச் சொன்னால், எப்படியும் உண்மை வெளிவரும் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்தது போலவே, ஏமாற்ற நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள்.
அவர்கள் வகுத்த திட்டத்தை வகுப்புத் தலைவன் தியான் அப்படியே கூறிமுடித்தான்.
ஆசிரியர் சிரித்தபடி அந்தப் பென்சில்களை உரியவர்களிடம் கொடுத்தார்.
“பென்சில்கள் உரிமையாளரிடம் போய்ச் சேர்ந்தது.”
மற்ற மாணவர்களைப் பார்த்து ஆசிரியர் பொதுவாகக் கூறினார்:
“பிறர் பொருளை நமதென்று சொல்லுவது தவறு. அப்படி நினைப்பது என்பதே மாபெரும் தவறு. நேர்மை ஒன்று மட்டும்தான் நமக்குப் பெருமை தரும்.”
மாணவர்கள் தலைகுனிந்து கொண்டனர். அந்த மூன்று மாணவர்கள் மட்டும் மகிழ்ச்சியாகத் தமது பென்சிலைப் பிடித்து எழுத ஆரம்பித்தனர். நேர்மையின் எழுத்துகள் முன்பைவிட அழகாக இருந்தது.
00

பல்லபுரம் பிரபாகரன்
பெற்றோர் : பி. பன்னீர்செல்வம் – வசந்தா
பிறந்த ஊர் : பல்லபுரம்
வட்டம் : இலால்குடி
மாவட்டம் : திருச்சி
படிப்பு : பி.டெக்., அக்ரி இன்ஜினியரிங்
சிறுகதைகள் மற்றும் குழந்தைகளுக்கான கதைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். வாழ்க்கை அனுபவங்களை உணர்ச்சி மிக்க கதைகளாக வடிவமைத்து இணைய இதழ்களில் வெளியிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
குழந்தைகளின் சிந்தனை, நல்ல மதிப்புகள் மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்டு பல கதைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அவற்றில் சில கதைகள் அமேசான் கிண்டில் தளத்தில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை தொடர்ந்து பின்வரும் வலைப்பதிவுகளில் எழுதி வருகிறார்:

