ஏதோ ஒரு நிறுத்தத்தில் சந்தித்துக்கொண்டவர்கள்
**************************************
1.
நான் என்ன பேசவேண்டும் என்று
எந்த முன்திட்டங்களும் வகுக்காமல்
பேசும் நண்பனை
பல மாதங்கள் கழித்து
மிக யதேச்சையாக
சந்தித்தேன்
எல்லாப் பற்றுகளையும்
வேரறுக்கும் முனைப்போடு
திரிந்த நாளொன்றில்தான்..
,
தூரத்தில் என்னைப்பார்த்து விட்டு
பேசாமல் வந்து அருகில் நின்றான்
“அட என்ன இங்கே” என்றுதான் தொடங்கினோம்
அனிச்சையான கேள்வியாக
“எப்படி இருக்காங்க” என்று கேட்கக்கூடாததை மறந்து கேட்டேன்
“அம்மா இறந்துட்டாங்களே, நான் சொன்னேனே.
உனக்கு நினைவில்லையா” என்றான்.
சுதாரித்து நாக்கைக் கடித்துக்கொண்டேன்.
,
என் முகத்தில் எழும்
குறுக்கு நெடுக்குக்கோடுகளை வைத்து
என் மனவோட்டத்தைக்
கண்டுபிடித்துவிடுபவன் அவன்
ஏன் முகம் வாடியிருக்கிறது என்றான்
“சிரித்தேன்”
இது உன் சிரிப்பில்லவே என்றான்
மீண்டும் சிரித்துக்கொண்டே
கண்கள் கலங்கினேன்
இதுவும் உனக்குத் தெரியாதே
பரவாயில்லை நன்கு
தேறியிருக்கிறாயென்றான்
நிறைய பேசினோம்
,
அவனொருவன் இருந்ததை மறந்தேபோய்விட்ட வந்த
காலங்களில் தொடங்கி அவனுடைய தற்போதைய வாழ்வு வரை
நானும்
மரத்தடி பெஞ்சில் அமர்ந்தோம்
மிகவும் ஆசுவாசமாக
மிகவும் நிம்மதியாக
தாய்மடியருகே இருப்பது
போலும் கதகதப்பாக
வழியின்றி யதேச்சையாக அவன் கண்களைச் சந்திக்கும்
போதெல்லாம் கண்கள் மட்டும் கலங்கியபடியே இருந்தது
,
சரி, அருகே சென்று ‘ஒரு காபி சாப்பிடலாமா’ என்றான்
இல்லை என்றவுடன்
“சரியான பயந்தாங்குளி”
இன்னும் பழைய மாதிரியே
இருக்கிறாயென்றான்
அதைச் சொல்லாமல் சிரித்தபடியே
கண்கள் பனிக்கப்பனிக்கப் பழங்கதை பேசினோம்
ஊர்க் கதைகளும்
அவனுடைய கடந்தகால அறிவுரைகளை
எப்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்
என்று நான் கூறியபோது அவனுக்கு
முகம் பூரித்து விட்டது
,
மரத்தடி பெஞ்சில் காற்று இதமாக
வீசிக்கொண்டிருந்தது
என்ன சுமையென்றெல்லாம்
தெரியவில்லை
ஆனால் இறக்கி வைக்கவேண்டும்
போலிருந்தது
கொஞ்சம் தோள் சாய்ந்து கொள்ளவா
எனக் கேட்கத் தோன்றியது
சாய்ந்தால் கண்கள்
தூரெடுத்த குளமாகிவிடும்
என்றும் தோன்றியது
அதனாலேயே
பேச்சில் தொடர்பறுந்தபடி
நான் எங்கேயோ வெறிக்க
ஆரம்பித்தேன்
,
என்ன பேசுவதென தடைபட்ட நிமிடத்தில்
இருவரும் தூசிகளைத் தட்டி எழுந்து கொண்டோம்
நானொரு பறவையென்பதை
அவன் நன்கு அறிவான்
திடீரென அவன் முகம் பிரகாசமானது
மலர்ந்து சிரித்த முகத்தோடு
எப்போதும் ஜோஷாயிரு
You are the best
Always I’m with you என்றான்
,
ஏதோ உணர்ந்தவாக்கில்
எனக்கு அவனைக் கட்டிக்கொண்டு
கதறவேண்டும் போலிருந்தது
“கண்டிப்பாக டா” என்றுத்துள்ளி
கைகுலுக்கியபடியே
நொடி நிற்காமல்
ஓடிவந்து விட்டேன்.
00
2.
ஓயாது ஓடும் நதியாகத்
தேடிக் கொண்டேயிருக்கிறது
சந்திப்புகளின் மனம்
யார் யாரிடமோ
யார் யாரையோ
00
3.
தூக்கிச்சுமக்க இனி
அவசியமில்லை
அவரவர் வாழ்வு
அவரவர் பாதை
அவரவர் விருப்பம்
அவரவர் கனவு
அவரவர் துக்கம்
அவரவர் மகிழ்வு
அவரவர் என்பது இனி
அவரவருக்கானது
சந்திக்க நேரிடும் போது
முடிந்தால் ஒரு கைக்குலுக்கல்
சரிதானே?
00
4.
ஒரு நாளில் நீ என்னை நினைத்துக் கொள்கிறாயா
என்னை உனக்குப் பிடிக்குமா
என்னைக் காதலிக்கிறாயாவென
அடிக்கடி உறுதிப்படுத்திக் கொண்டேயிருந்தேன்
காந்தலானவன்
அணைத்துக்கொண்டே
மீண்டும் மீண்டும் சொன்னான்
எதுவுமே இல்லை இல்லையென.
00
5.
அவன்தான் பயிற்றுவித்திருந்தான்
எல்லாவற்றையும்
தள்ளி நின்றுபார்
தள்ளி நின்றுபாரென
ஒரு நாள்
அவன் செல்வதையும்
தள்ளி நின்று பார்த்துக்
கொண்டிருந்தேன்.
00

சுபி
கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழையஜெயங்கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்ஏ முடித்து விட்டு எம்ஃபில் படிக்கும் போது திருமணம் நிகழ்ந்தது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி.
இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ், கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர், வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், காற்றுவெளி, சிற்றுளி ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
கலகம் இணைய இதழ், நடுகல் இணைய இதழ், வாசகசாலை இணைய இதழ் ஆகியவற்றில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. க.சீ. சிவகுமார் நினைவு இயக்கம் நடத்தியதில் இவரது ‘காவன்மரம்’ சிறுகதை பரிசு பெற்றுள்ளது.

