மணிமீனாட்சிசுந்தரம்.
பொதுவாக மனிதர்களுக்குக் கடவுளைச் சென்றடையும் பாதைகள் என்பவை அவர்களது தேவைகளால் உருவாக்கப்படுபவை; அவை, தம்மையும் இவ்வுலகத்தையும் படைத்தவனிடம் இவ்வாழ்வுக்குத் தேவையானவற்றைப் பெறுவதே முறை எனப்பட்டவை. கடவுளை, தமக்குத் தேவையானவற்றைப் பெறும் தூரத்திலும், விரும்பியது தரும் கொடையாளனாகவும் வைத்திருப்பதே பொதுவான மனநிலையாக இங்கு இருந்து வருகிறது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவதெல்லாம் இதற்குத்தான். இறைவனுக்கும் பொதுமனிதனுக்குமான இந்த தூரம் நித்தியமானது. பொதுவான மனநிலையின் மாறாத பழக்கம் இது.
கடவுளை நெருங்காது அவன் தரும் பயன்களை விரும்புவதே வழிபடு நிலையாகிப் போனதில் உருவான, இறைவனின் கை பக்தனை எட்டும் தொலைவேயான, இந்தத் தூரத்தை ஒரு பொதுமனிதன் எப்போதும் கடக்க விரும்பமாட்டான். தமது தேவைகளைத் தரும் தூரத்தில் இறைவனை வைத்திருப்பதே மனிதன் கடவுளை எட்டிய இடம் என்றாகிப் போனது.
இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ இந்தத் தொலைவை,கடவுள் – மனிதன் ஆகிய இருவருவருக்குமான இந்த தூரத்தை மனிதன் மகிழ்ச்சியோடே ஏற்றுக்கொள்கிறான். இறைவன் மனிதனைப் படைத்திருக்கலாம் என்பது கண்ணுக்குப் புலனாகாத கருத்தாக்கம் மட்டுமே. ஆனால், மனிதன் தான் மகிழ்ச்சியாக வாழவே இறைவனைப் படைத்தான் என்பது கருத்தாக்கம் அல்ல; அது தினமும் காணும் கண்கண்ட காட்சி. கடவுளுக்கும் மனிதனுக்குமான இந்தத் தொலைவே ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட இஷ்ட தெய்வங்களைத் தேடி ஓட வைக்கிறது. மனிதன் தனது கைக்கெட்டும் தூரத்தில் உள்ள கடவுளைக் கண்டறிய ஊர் ஊராகப் பயணம் மேற்கோள்வதும் இதை ஒட்டித்தான்.
இந்தச் சிக்கலான, பதட்டமான பொது மனநிலையை ஆசுவாசப்படுத்தும் இருகவிதைகள் பற்றியே இங்குப் பேச விரும்புகிறேன். இறைவனுக்கும் மனிதனுக்குமான இந்த மாறாத தொலைவை இக்கவிதைகள் மிக எளிதாகக் கடக்கின்றன; கொடுப்பவன் – பெறுபவன் என்ற நிலையையும் நமக்காக வாழும் இறைவன் என்ற பொது மனநிலையையும் புறந்தள்ளி, நம்மோடு வாழும் இறைவனாக ஒத்து உணர வைக்கின்றன.
மனிதர்கள் தம் தேவைகளைச் சொல்லியே வெறுப்பேற்றிய கடவுளை, அன்போடு தோளணைக்க நீளும் கரங்களாகவே இந்தக் கவிதைகள் உள்ளன.
கடவுளை, வேண்டுவதைத் தரும் பரம்பொருளாக மட்டுமில்லாமல், மனிதனாக, தம்மில் ஒருவனாக ஒத்து உணர்ந்து பாடுவது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல.கடவுளைத் தந்தையாக, தாயாக, குழந்தையாக, தோழனாக, காதலனாக, காதலியாகப் பார்த்துப் பாடுவது நம்மில் திளைத்த மரபுதான் என்றாலும் அவற்றில் பாவனைகளே மிகுதி. பாவனைகள்
அற்ற ஒரு பிரியம், இங்குக் கடவுளை நோக்கிக் கவிதையாய் ஒலிக்கிறது.
கவிதை -1
——————-
முடியாதிருப்பவர்கள்
—————————————
/ தெற்கு கோபுர வாசலையும்
வடக்குக் கோபுர வாசலையும்
திறந்து வைக்கக் கூடாதா
யாராவது.
காந்திமதி அம்மை நேர்ப்பார்வை.
கட்டிப்போட்ட மாக்காளை
எங்கும் போகமுடியாமல்
இருக்கிறான் நெல்லையப்பன்
கம்பாநதி மண்டபத்தின்
கல்தூண் அறியும் கங்காதேவியை /
கவிஞர் கல்யாண்ஜியின் கவிதை இது.முதல்முறை வாசிப்பில் கவிதை இறைவனை நையாண்டி செய்வதாகத் தோன்றலாம். ஆனால், கோயில் நடைமுறை அறிந்தவர்கள் அப்படி நினைக்க வாய்ப்பில்லை. பெருங்கோயில்களில் பத்துப் பன்னிரண்டு நாள்கள் கொண்டாடப்படும் திருவிழாக்களின் இறுதி நாளில் கோயிலின் உற்சவர் சில பரிவார தெய்வங்களோடு காலையில் புறப்பட்டு அருகில் உள்ள கடலிலோ, அருவியிலோ நீராடி மாலையில் கோயிலுக்குத் திரும்புவார். உடனுறை பெண் தெய்வம் உடன் செல்வதில்லை. கோயிலை அடைந்ததும் உடன் வந்த பரிவார தெய்வங்களில் ஒன்று உள்ளே போனதும், இறைவனை வெளியில் வைத்து இறைவி கதவைச் சாத்திவிடுவார். அதற்குக் காரணம், முதலில் கோயிலுக்குள் சென்ற தெய்வம்,இறைவியிடம் அவர் இல்லாத நிலையில் இறைவன் செய்த திருவிளையாடல்களை வத்திவைத்துவிடுவதே காரணமாகும். இறைவன் வெளியே இருந்து, செய்த தவறுக்கு மன்னிப்பும், இனிமேல் செய்யாதிருக்க உறுதியும் கூறி மன்றாடுவார். கடைசியில் மனமிரங்கி இறைவி கதவைத் திறந்து இறைவனைக் கோயிலுக்குள் அனுமதிப்பார். நம் திருவிழாக்களின் விரிவான நடைமுறைகள் எல்லாமே இறைவனை மனித நிலையில் வைத்து மகிழ்பவைதாம்.
அப்படியான மனித இயல்பைக் கடவுளிடம் வைத்தே இக்கவிதையும் பார்க்கிறது. பொதுவாகக் கல்யாண்ஜியின் கவிதைகள், மனிதனை இறைவனுக்குள் இணைத்து மகிழவும், இறைவனை மனிதப் பண்போடு அணைத்து மகிழவும் ஆர்வம் கொள்பவை.
/ சிறு தெய்வமோ, பெருந்தெய்வமோ
கோவிலுக்கு வெளியேதான்
கும்பிடுகிறேன் அனைத்தையும் /
என்று கூறும் போதும்
/ தண்ணீர் இல்லாத குளத்துக்குக்
கண்ணீர் விடுகிற ஒருத்தன்
தன்னுடைய கொடைக்குச் சாமியாடுவதை
எந்த மாடன்தான்
விரும்பாமல் இருப்பான்? /
என்னும்போதும், கல்யாண்ஜியின் கவிதைத் தளத்தில் மனிதனும் இறைவனும் பேதமற்று இணைந்தே நிற்கிறார்கள் என்பதைக் காணமுடியும்.
கோயிலின் வழக்கமான சடங்கு நிகழ்வை இக்கவிதை நினைவூட்டினாலும், கவிதையின் தொனி முற்றிலும் இங்கு வேறொன்றாகவே ஒலிக்கிறது.
“எனக்கு அவரை நன்கு தெரியும்; மிகச் சிரமப்படுவார்; அவரால் இருக்க முடியாது; அவரது மனைவியோ கண்டிப்பானவர். யாரேனும் உதவக்கூடாதா? எனக் கேட்கும் கவிதையின் தொனி,எல்லாம் அறிந்தவன் என்று மனிதன் கருதும் இறைவனை, நீங்கள் நினைப்பதுபோல் இல்லை. கொஞ்சம் உதவ வாருங்கள் எனக் கை நீட்டி அழைக்கிறது. இறைவனிடம் உதவியையே எதிர்பார்த்து ஓரத்தில் நிற்கும் மனிதனை, இறைவனுக்கு உதவ கொஞ்சம் நெருங்கிப்போ எனத் தள்ளுகிறது. பெண்ணைக் குற்றம் சொல்லாத பேரன்பு நமது. அதனால் ‘காந்திமதி அம்மை நேர்ப்பார்வை ‘ என்கிறது கவிதை. கங்காதேவியை உடன் வைத்துக் கொண்டு அப்பனும் அம்மையும் சத்தமாகச் சிரிக்கும் சத்தம் நம் காதில் கேட்கிறது.
கவிதை – 2
———————
திருக்காமக்கோட்டத்து ஆளுடைநாச்சியார்
—————————————-
/ மரகதவல்லி
மாணிக்கவல்லி
கற்பூரவல்லி
சுந்தரவல்லி
அபிராமவல்லி
அபிஷேகவல்லி
தடாதகைப்பிராட்டி
பாண்டிப்பிராட்டி
கயற்கண்குமாரி
கோமகள்
குமரித்துறையவள்
மதுராபுரித்தலைவி
மும்முலைத்திருவழுதிமகள்
பச்சைத்தேவி
அங்கயற்கண்ணி
மீனாட்சி
இத்தனை பெயர் இருக்கையில்
என்ன சொல்லிக் கூப்பிடுவான்
எங்கள் எளிய சொக்கன் /
கவிதை, மதுரையம்பதி வாழும் தெய்வங்களைப் பற்றியது. கவிதையில் குறிப்பிடப்படும் பெயர்கள் மதுரை மீனாட்சி அம்மையின் பெயர்களாகக் கோயில் தலபுராணம் குறிப்பிடுபவை. பெயர்களை மட்டும் வரிசைப்படுத்தும் கவிதை, கடைசி மூன்று வரிகளில்தான் உயிர் பெற்றுக் கிளை பரப்புகிறது.
சொக்கநாதரும் அங்கயற்கண்ணியும் வீற்றிருக்கும் மதுரைக்கோயி்ல், மக்கள் வழக்கில் மீனாட்சியம்மன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, கோயிலுக்குள் முந்தி அடித்துக்கொண்டு போகும் கூட்டமெல்லாம் முதலில் பார்க்க நினைப்பது அம்மையைத்தான். சிவனேயென்று அதைக் கவனித்தவாறே அமர்ந்திருக்கும் அப்பனைக் காண்பதெல்லாம் அப்புறம்தான். என்ன செய்வது? வாக்கப்பட்ட வீட்டில் வாலைச் சுருட்டிக்கொண்டிருப்பதுதானே அழகு!எத்தனை திருவிளையாடல்கள் ஆடினாலும் அத்தனையும் அம்மைக்கு முன் அடங்கிக்தானே போகும் ?!
திருவிளையாடல் புராணம் பாடவந்த பரஞ்சோதி முனிவர், மதுரையில் சிவபெருமான், தாம் எப்போதும் அணியும் கொன்றை மாலையை விடுத்து மதுரைக்கே உரிய வேப்பம்பூ மாலையை அணிந்து கொண்டிருப்பதாகக் பாடியிருப்பார்.வேறென்ன செய்வது? அம்மை மகிழத்தானே அப்பனின் அலங்காரம்!சிவனுக்கும் புரிந்த, பரஞ்சோதியாருக்கும் தெரிந்த ஒன்றை நவீன கவிதை இங்கு நையாண்டி செய்கிறது. ஆனால், கவிதை காட்டும் பார்வை நுட்பமானது. வெறும் வேடிக்கைப்பேச்சுடன் முடித்துக்கொள்ளாத நையாண்டி இது. அத்துடன் வெறும் தகவல்களையும் கவிஞனின் தனித்த பார்வை கவிதையாக்கிடும் என்பதற்கும் இந்தக் கவிதையே சான்று.
இங்குக் கவிதை, இறைவனையோ இறைவியையோ தொழும் நிலையில் வைத்துப் பார்க்கவில்லை; தன் தேவைகள் குறித்த மன்றாடல் இல்லை; அதற்கென எழுப்பப்படும் புகழ் மாளிகைகள் இங்கில்லை. பெண் வீட்டுக்குச் சொந்தக்காரன் ஒருவன் மாப்பிள்ளை பையனை வம்புக்கு இழுப்பதை ஒத்திருக்கிறது இந்தக் கவிதை. அதேசமயம் நுட்பமான ஒரு நடப்பு உளவியலையும் இக்கவிதை தனக்குள் வைத்துப் பேசுகிறது.
மனைவிக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் என்ன? எங்கள் சொக்கநாதர்கள் மனைவியின் பெயர் சொல்லியா அவளை அழைக்கிறார்கள்?
“இந்தா, ஏண்டி, அடியே, ஏய்” என்பதுதானே வழக்கம். எத்தனை பெயர்கள் இருந்தாலும் பெயர் சொல்லிக் கூப்பிடப்படாத மீனாட்சிகளை உயர்த்திப் பார்க்க நினைக்கிறதா கவிதையின் உள்மனம்!?அம்மையை மகிகைப்படுத்துவதே கவிதையின் உடனடி நோக்கமாகத் தெரிந்தாலும், கவிதையின் உள்ளுறையாக இந்த உண்மை மீனாட்சியின் மூக்குத்தி ஒளியாக மினுக்கிடுகிறது. இங்குக் கவிஞன் மீனாட்சியின் சன்னிதி நோக்கிப் பெருங்கூட்டத்திற்குள் முண்டியடிக்கும் ஒருவனாகத் தெரியவில்லை. சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி வேடமிட்ட மகளைத் தோளில் சுமக்கும் தந்தையாகவே நமக்குக் காட்சியளிக்கிறார்.
துணை நின்ற நூல்கள் :
——————————————–
1. கல்யாண்ஜி கவிதைகள், வ.உ.சி நூலகம், சென்னை – 600014
2. அவன் எப்போது தாத்தாவானான்- விக்ரமாதித்யன், நற்றிணை பதிப்பகம்,
சென்னை -600005
00



கடவுளையும் மக்களையும் இணைத்து ரசனையும் பகடியுமாக உங்கள் பார்வையில் சொல்லி இருப்பது சிறப்பு ஐயா. வாழ்த்துகள்