ஜான் பார்த்

தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்

எப்படியோ, நம் பயணத்தைப் பற்றிய எந்தவொரு கோட்பாடு உண்மையாக இருந்தாலும் சரி, நான் என்னையேதான் விளித்துப் பேசுகிறேன்- ஒரு அந்நியனிடம் சொல்வது போல் நம்முடைய வரலாற்றையும் நிலையையும் யாருக்கு நான் மீண்டும் மீண்டும் விவரித்துக் கொண்டிருக்கிறேனோ, அவரிடமே என் இரகசிய நம்பிக்கையையும் வெளிப்படுத்துவேன்—அதற்காக நான் மூழ்கிப் போக நேரிட்டாலும் சரி.

இந்தப் பயணம் என் கற்பனையா? இந்த இரவும் கடலும், அவற்றை நான் அனுபவிப்பதைக் கடந்து, தனியாக ஏதேனும் நிலையில் இருக்கின்றனவா என்று எனக்குள் கேட்டுக்கொள்கிறேன். நான் தான் உண்மையில் இருக்கிறேனா, அல்லது இது ஒரு கனவா? சில நேரங்களில் நான் வியப்பதுண்டு. அப்படியே நான் இருந்தாலும், நான் யார்? நான் கடத்துவதாகச் சொல்லப்படும் அந்தப் பாரம்பரியம் தானா நான்? ஆனால், நானே எப்படிக் கலனாகவும் அதிலுள்ள உள்ளடக்கமாகவும் இருக்க முடியும்? என் ஓய்வு நேர இடைவெளிகளை உலுக்கும் கேள்விகள் இவைதான்.

என் சிக்கல் என்னவென்றால், எனக்கு எதிலும் உறுதியான நம்பிக்கை இல்லை. நம்முடைய சூழ்நிலையைப் பற்றிய பல விளக்கங்கள் எனக்கு நியாயமானவையாகத் தோன்றுகின்றன—நாம் எங்கே இருக்கிறோம், என்னவாக இருக்கிறோம், ஏன் நீந்துகிறோம், எங்கே செல்கிறோம் என்பது பற்றி. நம்பமுடியாத விளக்கங்களையும், ஒருவேளை முக்கியமாக அவற்றைத்தான், சாத்தியமான உண்மைகளாக நான் ஒப்புக்கொள்ள வேண்டும். அவை நடக்கக்கூடியவை கூட. சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட மனநிலைகளில்—என் சக நீந்துபவர்களுடன் ஒரே குரலில் இணைந்து, முன்னோக்கி! மேல்நோக்கி! என்று கோஷமிடும்போது—நமக்கு என்று ஒரு பொதுவான படைப்பாளி இருக்கிறார். அவருடைய இயல்பையும் நோக்கங்களையும் நாம் அறியாமல் இருக்கலாம். அவர்தான் ஏதோ ஒரு விசித்திரமான வழியில் நம்மை உருவாக்கி, அவருக்கு மட்டுமே தெரிந்த ஏதோ ஒரு இலக்கை நோக்கி நம்மை ஏவியிருக்கிறார் என்று நான் நினைத்திருந்தால் (அது ஒரு கண நேர மனநிலை மட்டுமே), அந்த எண்ணங்கள் சில வட்டாரங்களில் மிகவும் பிரபலமானவை என்பதால் அல்ல- நம் இரவுக் கடல் பயணம் அவற்றின் அபத்தத் தன்மையைப் பகிர்ந்து கொள்கிறது என்பதால்தான். ஒருவர் இப்படிக்கூடச் சொல்லலாம்: அவை அபத்தமாக இருப்பதனாலேயே என்னால் அவற்றை நம்ப முடிகிறது.

இது இதற்கு முன்பு சொல்லப்பட்டிருக்கிறதா?

மற்றொரு முரண்பாடு: நீந்துவதிலிருந்து எனக்குக் கிடைக்கும் இந்த ஓய்வு இடைவெளிகள்தான் என்னை நீச்சலில் தொடர வைக்கின்றன என்று தோன்றுகிறது. மற்றவர்களோடு கைகால்களை அடித்துக்கொண்டு இரண்டு அடிகள் முன்னோக்கியும் மேல்நோக்கியும் சென்றபின், சோர்ந்து போய், தைரியம் இழந்து, இரவு, கடல், பயணம் ஆகியவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டே மிதக்கிறேன். அப்போது நீரோட்டம் என்னை ஓரடி பின்னோக்கியும் கீழ்நோக்கியும் இழுத்துச் செல்கிறது- மெதுவான முன்னேற்றம்தான். ஆனால் நான் வாழ்கிறேன். வாழ்கிறேன். என் வழியில் முன்னேறுகிறேன். ஆம், இறுதியில் என்னை விட வலிமையான, என்னை விடத் தகுதியான, தங்களின் இடைவிடாத நீச்சல் ஆர்வத்திற்குப் பலியான பல மூழ்கிய தோழர்களைக் கடந்து செல்கிறேன். என் தலைமுறையின் சிறந்த நீச்சல் வீரர்களெல்லாம் மூழ்கிப் போவதை நான் பார்த்திருக்கிறேன். இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு எல்லையே இல்லை! இந்த எண்ணம் என் மனதில் தோன்றும்போதே ஆயிரக்கணக்கானோர் மூழ்குகிறார்கள். நான் மீண்டும் நீந்தத் தொடங்கும் முன் ஓய்வெடுக்கும்போது லட்சக்கணக்கானோர் மூழ்குகிறார்கள். நாம் நம்முடைய அச்சமூட்டும் வழியில், நம் அறியாமையின் தைரியத்தோடு புறப்பட்டதிலிருந்து நூற்றுக்கணக்கான, கோடிக்கணக்கான உயிர்கள் மடிந்துவிட்டன. இருபத்தைந்து கோடிப் பேர் கொண்ட பலத்த கூட்டமாக அன்பு! அன்பு! என்று நாம் அப்போது பாடினோம். நீந்துவதின் மகிழ்ச்சியால் அந்த வெதுவெதுப்பான கடலைக் குடைந்து வெண்மையாக்கினோம்! இப்போது அனைவரும் மூழ்கிவிட்டனர்—மிதந்தவர்கள், நனைந்தவர்கள், தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் அடியில் போய்விட்டனர். ஆனால் இந்த அவலமான நான் மட்டும் இன்னும் நீந்திக் கொண்டிருக்கிறேன். என்னை மிதக்க வைத்திருக்கும் இதே சிந்தனை இடைவெளிகள்தான் என்னை வியப்பு, சந்தேகம், விரக்தி போன்ற—ஒரு நீச்சல் வீரனுக்கு விசித்திரமான—உணர்வுகளுக்குள் தள்ளியிருக்கின்றன. நம்முடைய இரவுக் கடல் பயணம் எந்த அர்த்தமும் இல்லாததோ என்று என்னைச் சந்தேகிக்கவும் வைத்திருக்கின்றன.

உண்மையில், தற்கொலை செய்துகொண்டவர்களின் கூட்டத்தில் நான் இன்னும் சேரவில்லை என்றால், அதற்குக் காரணம் (சோர்வைத் தவிர) என்னை நானே மூழ்கடித்துக் கொள்வதில், தொடர்ந்து நீந்துவதை விட அதிக அர்த்தம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை என்பதுதான்.

இந்த இரவுக் கடலை உண்மையிலேயே ரசிப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். வெறுமனே நீந்துவதற்காகவே நீச்சலை நேசிப்பதாகக் கூறுபவர்கள் அல்லது கரை சேர்வது, பாரம்பரியத்தைக் கடத்துவது (யாருடைய பாரம்பரியம், அதை நான் அறிய விரும்புகிறேன்? யாருக்குக் கடத்துவது?) போன்ற இலக்குகள் இந்தத் திகைப்பூட்டும் மதிப்புக்குத் தகுதியானவை என்று மனப்பூர்வமாக நம்புபவர்கள் இருக்கிறார்கள். நான் அப்படி இல்லை. நீந்துவதையே என்னால் ஆகச்சிறந்த பட்சத்தில் ஒரு சுமையற்ற செயலாகப் பார்க்க முடிகிறது, பெரும்பாலான நேரங்களில் அது சலிப்பானது, சில நேரங்களில் ஒரு சித்திரவதை. செயல்பாடு மற்றும் வடிவமைப்பு சார்ந்த வாதங்கள் என்னைக் கவர்வதில்லை: நாம் நீந்த முடிகிறது, நீந்துகிறோம்- ஒரு வகையில் நம்முடைய நீண்ட வால்களும் சீரான தலைகளும் நீந்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை என்பதை ஒப்புக்கொண்டாலும். அதிலிருந்து—குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை—நாம் நீந்த வேண்டும் என்றோ அல்லது நம் விதியை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்றோ பொருள்படாது. அதாவது, அது வேறொருவருடைய விதி. ஏனென்றால் என்னால் பார்க்க முடிந்தவரை, நம் விதி என்பது எப்படியாவது, சீக்கிரமோ அல்லது தாமதமாகவோ அழிந்து போவது மட்டும்தான். நம்முடைய (மறைந்த) தலைவர்களின் இரக்கமற்ற தீவிரமும், என் சொந்த இளமைக் காலத்தின் குருட்டுத்தனமான லட்சியமும், மகிழ்ச்சியும் இப்போது என்னை அதிர்ச்சியடையச் செய்கின்றன. என் தோழர்களின் மரணத்திற்காக நான் ஆறுதல்படுத்த முடியாதவனாக இருக்கிறேன். இரவுக் கடல் பயணத்திற்கு ஏதேனும் நியாயம் இருக்குமானால், அதை உறைந்துபோன நாம் கண்டறிவதற்கில்லை.

ஓ, நிச்சயமாக, அன்பு என்ற வார்த்தை எல்லாப் பக்கங்களிலிருந்தும் கேட்கிறது: அன்புதான் நம்மை இயக்குகிறது, தாங்குகிறது. இதை நான் இப்படி மொழிபெயர்க்கிறேன்: நம்மை எது இயக்குகிறது, எது தாங்குகிறது என்று நமக்குத் தெரியாது. நாம் மிகவும் பரிதாபகரமாக இயக்கப் படுகிறோம். முழுமையற்ற முறையில் தாங்கப்படுகிறோம் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். நம்மைச் சாட்டையால் அடிப்பது எது என்று தெரியாத நம் அறியாமைக்கு நாம் சூட்டிய பெயர்தான் அன்பு. கரை சேர்வது என்கிறார்கள்: ஆனால், நாம் நீந்துகிறோம், எப்போதும் நீந்திக் கொண்டேதான் இருந்திருக்கிறோம். இறக்கும் வரை இடைவிடாமல் (என்னைத் தவிர) நீந்திக் கொண்டிருக்கிறோம் என்ற பயங்கரமான உண்மைக்குக் காரணம் கற்பிக்க நாம் காணும் வெறும் கனவுதான் அந்தக் கரை என்றால் என்ன செய்வது? ஒரு கரை இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும்—என் இழிந்த தோழன் ஒருவன் ஒருமுறை கற்பனை செய்தது போல, நாம் மூழ்கியவர்களிடமிருந்து எழுந்து அந்த பாமரத்தனமான மூடநம்பிக்கைகளும் உயர்ந்த உருவகங்களும் அப்பட்டமான உண்மை என்பதை அறிந்துகொள்வதாக வைத்துக் கொள்வோம்: நம் அனைவரையும் படைத்த அந்த மாபெரும் படைப்பாளி, நம் இரவுக் கடல் பயணத்திற்கு அப்பால் இருக்கும் ஒளிரும் கரைகள்! —அங்கு ஒரு நீச்சல் வீரன் என்ன செய்வான்? உண்மை என்னவென்றால், நாம் கரையை கற்பனை செய்யும்போது, நம் மனதில் தோன்றுவது நம் நிலைக்கு முற்றிலும் எதிரானதுதான்: இனி இரவு இல்லை, கடல் இல்லை, பயணம் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், மூழ்கியவர்களின் ஆனந்த நிலை.

நின்று சிந்திக்க நமக்கு உரிமை இல்லை. நீந்துவதும் மூழ்குவதுமே நம் வேலை. ஏனென்றால் ஒரு கண நேரச் சிந்தனையும் நீந்துவதின் அர்த்தமற்ற தன்மையைப் புரிய வைத்துவிடுகிறது. பரவாயில்லை என்று சிலர் தங்களின் கடைசி மூச்சை இழுக்கும்போது கூடச் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்: இரவுக் கடல் பயணம் அபத்தமானதாக இருக்கலாம். ஆனால் இதோ நாம் நீந்துகிறோம். நம் விருப்பப்படியோ அல்லது விருப்பமின்றியோ, நீரோட்டத்திற்கு எதிராக, முன்னோக்கியும் மேல்நோக்கியும், இல்லாத ஒரு கரையை நோக்கி, அப்படியே இருந்தாலும் அடைய முடியாத ஒரு கரையை நோக்கி நீந்துகிறோம். அப்படியானால், சிந்திக்கத் தெரிந்த ஒரு நீச்சல் வீரனுக்கு இருக்கும் தேர்வுகள் இரண்டுதான் என்று அவர்கள் கூறுகிறார்கள்: கைகால்களை அடிப்பதை நிறுத்திவிட்டு நிரந்தரமாக மூழ்கிவிடுவது அல்லது இந்த அபத்தத்தை ஏற்றுக்கொள்வது. இரவுக் கடல் பயணத்தை அதன் பொருட்டே உறுதிப்படுத்துவது. எந்த நோக்கமும் இலக்கும் இல்லாமல், நீந்துவதற்காகவே தொடர்ந்து நீந்துவது. மேலும் உன்னோடு நீந்துபவன் மீது இரக்கம் காட்டுவது. நாம் அனைவரும் கடலில் இருக்கிறோம், சமமாக இருளில் இருக்கிறோம் என்பதால். இந்த இரண்டு வழிகளுமே எனக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. கற்பனையான ஒரு கரை கூட கடலில் மூழ்கிய ஒரு தோழனின் மரணத்தை நியாயப்படுத்த முடியாது என்னும்போது, நீச்சல்-அதன்-பொருட்டே அதை நியாயப்படுத்துகிறது என்று பேசுவது எனக்கு ஆபாசமாகத் தோன்றுகிறது. நான் தொடர்ந்து நீந்துகிறேன்—ஆனால் குருட்டுப் பழக்கமும், குருட்டு உள்ளுணர்வும், மூழ்குவதைப் பற்றிய குருட்டுப் பயமும் நம் பயணத்தின் பயங்கரத்தை விட இன்னும் வலிமையாக இருப்பதால்தான். சில நேரங்களில் நான் சக நீச்சல் வீரனுக்கு உதவியிருக்கிறேன். அவர்களின் உற்சாகக் கோஷங்களிலும் பாடல்களிலும் இணைந்திருக்கிறேன். மூழ்கிப்போன மாமேதைகளின் உத்திகளை மற்றவர்களுக்குக் கடத்தியிருக்கிறேன் என்றால், அதற்கு என் இயல்பிலேயே என்னை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டிக் கொள்ள எனக்கு இருக்கும் தயக்கம்தான் காரணம். தன் சொந்தத் திசையில் துழாவிச் செல்வது, தன் சுதந்திரமான வழியுரிமையை நிலைநாட்டுவது, எந்தவொரு குற்ற உணர்வும் இன்றி தன் சக தோழர்களை மிதித்துச் செல்வது, அல்லது மனசாட்சியைக் கருதாமல் முற்றிலும் இன்பங்களிலும் பொழுதுபோக்குகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது—இவ்விதம் பயணிப்பவர்களை என்னால் முற்றிலும் கண்டிக்க முடியாது. என் பாதி மனநிலைகளில் நான் அவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறேன். அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்ற விடாமல் என்னைத் தடுக்கும் பலவீனமான உயிர்ச்சக்தியை வெறுக்கிறேன். ஆனால், நான் இன்னும் பகுத்தறிவோடு இருக்கும் தருணங்களில், அவர்களின் சுதந்திரத்தையும் சுயபொறுப்பையும்தான் நான் நிராகரிக்கிறேன் என்பதை எனக்குள் நினைவூட்டிக் கொள்கிறேன். ஏனெனில் நம்முடைய அர்த்தமற்ற சூழ்நிலையில், அது வழக்கமான வழியில் பின்தொடர்வதை விடவும் மிகவும் வியத்தகு முறையில் அபத்தமானது. தற்கொலை செய்துகொண்டவர்கள், கிளர்ச்சியாளர்கள், முரண்பாடுகளை உறுதிப்படுத்துபவர்கள்—நம் கொடிய பயணத்திற்கு ‘இல்லை’ என்பவர்களும் ‘ஆம்’ என்பவர்களும் என அனைவரையும் பார்த்து நான் இறுதியில் தலையாட்டுகிறேன். நூற்றுக்கணக்கான மற்றவர்களைக் கடந்து செல்வது போல, அவர்களின் பிணங்களைக் கடந்து பெருமூச்சுடன் நீந்துகிறேன்: நண்பர்கள், எதிரிகள், சகோதரர்கள்; முட்டாள்கள், ஞானிகள், மிருகங்கள்—மற்றும் கோடிக்கணக்கான எவராலும் அறியப்படாத மனிதர்கள். நான் அவர்கள் அனைவரையும் பார்த்து பொறாமைப்படுகிறேன்.

ஒரு பரிதாபகரமான முரண்: தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும் என்ற கோட்பாட்டை அருவருப்பானதாகவும், தற்புகழ்ச்சியானதாகவும் கருதும் நான் (என் அனுபவத்தில் தகுதி என்பது தப்பிப் பிழைக்கும் திறனைத் தவிர வேறொன்றுமில்லை, அதன் ஒரே சான்று தப்பிப் பிழைத்திருப்பது மட்டுமே. ஆனால் அதன் முக்கிய கூறுகள் வலிமை, வஞ்சகம், இரக்கமின்மை என்று தோன்றுகிறது), கடைசியாக எஞ்சியிருக்கும் ஒரே நீச்சல் வீரனாக இருக்கலாம்! ஆனால் அந்தக் கோட்பாடு வெறுக்கத்தக்கது மட்டுமல்ல, பொய்யானதும்கூட: தற்செயல் நிகழ்வு தகுதியுள்ளவர்களையும் தகுதியற்றவர்களையும் ஒன்றாகவே மூழ்கடிக்கிறது. எந்த இலக்கணத்தின்படியும் தகுதியற்றவர்களை தகுதியுள்ளவர்களோடு சேர்த்து மேலே தூக்கிவிடுகிறது, மேலும் இரவுக் கடல் பயணத்தை அடிப்படையில் ஒரு கொலைவெறி பிடித்த, நியாயமற்ற, மற்றும் முழுக்க முழுக்க தற்செயலான ஒன்றாக மாற்றுகிறது.

நீங்கள் ஒரு முறைதான் நீந்துவீர்கள். பிறகு ஏன் சிரமப்பட வேண்டும்?

நீங்கள் மூழ்காவிட்டால், ஒளிரும் கரையை அடைய மாட்டீர்கள்- வெற்றுப் பேச்சு.

மறைந்த என் தோழர்களில் ஒருவன்—அதே விசித்திரமான கற்பனை கொண்ட இழிந்தவன், முதலில் மூழ்கியவர்களில் ஒருவன்—நாம் பயணத்தைத் தொடங்கக் காத்திருந்தபோது விசித்திரமான ஊகங்களால் எங்களை மகிழ்வித்தான். அவனுக்குப் பிடித்த ஒரு கோட்பாடு என்னவென்றால், தந்தை (படைப்பாளி) இருக்கிறார், அவர்தான் நம்மையும் நாம் நீந்தும் கடலையும் படைத்தார்—ஆனால் எந்த நோக்கத்துடனும் அல்லது உணர்வுப்பூர்வமாகவும் அல்ல. நாம் ஒவ்வொரு முறை துடுப்பால் அடிக்கும்போதும் அலைகளை உருவாக்குவது போல, அவர் அறியாமலேயே நம்மைப் படைத்திருக்கலாம். நம் இருப்பைப் பற்றி அவர் அறியாமல் இருக்கலாம். மற்றொரு கோட்பாடு, நாம் இங்கே இருப்பது அவருக்குத் தெரியும், ஆனால் நமக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. ஏனெனில் அவர் (தன் விருப்பப்படியோ அல்லது இல்லாமலோ) அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சீரான இடைவெளிகளில் மற்ற கடல்களையும் நீந்துபவர்களையும் உருவாக்குகிறார். அவன் மூழ்குவதற்கு சற்று முன்பு போன்ற கசப்பான தருணங்களில், என் நண்பன் நம் படைப்பாளி நாம் அழிய வேண்டும் என்று விரும்பியதாகக் கூட நினைத்தான். ஒரு கரை இருந்தது உண்மைதான். அது நம்மில் சிலரையாவது மூழ்குவதிலிருந்து காப்பாற்றக்கூடும். அதை நோக்கிப் போராடுவதுதான் நம் கடமை—ஆனால் நமக்குத் தெரியாத காரணங்களுக்காக, நாம் அந்த மகிழ்ச்சியான இடத்தை அடைவதையும் நம் விதியை நிறைவேற்றுவதையும் தடுக்க அவர் தீவிரமாக விரும்பினார். சுருக்கமாகச் சொன்னால், நம் ‘தந்தை’ நம் எதிரியாகவும், நம்மைக் கொல்ல நினைப்பவராகவும் இருந்தார்! படைப்பாளியின் தன்மையைப் பற்றிய அவனது ஊகங்கள் பாரம்பரியக் கருத்துக்களுக்குக் குறைவில்லாத அதிர்ச்சியையும் புண்படுத்தலையும் ஏற்படுத்தின: அவர் ஒரு நீச்சல் வீரராகவே இருக்க மாட்டார். ஏதோ ஒரு விசித்திரமான வடிவமாக, ஒருவேளை வால் இல்லாதவராகக் கூட இருக்கலாம். அவர் முட்டாளாக, தீங்கிழைப்பவராக, உணர்ச்சியற்றவராக, வக்கிரமானவராக, அல்லது தூங்கிப் படுத்துக் கனவு காண்பவராக இருக்கலாம். அவர் நம்மைப் படைத்து ஏவிய நோக்கம் மற்றும் நாம் எதைப் புரிந்துகொள்ள நம்மை நாமே வருத்திக்கொள்கிறோமோ, அது ஒருவேளை ஒழுக்கக்கேடானதாக, ஆபாசமானதாகக் கூட இருக்கலாம். இப்படியாக, அவனது ஊகங்களுக்கும், அவனது கற்பனையின் மரியாதையற்ற தன்மைக்கும் முடிவே இல்லை. அவனது தெய்வ நிந்தனைகளால் ஆத்திரமடைந்த சில சக நீச்சல் வீரர்களால், நம் படைப்பாளியால் திட்டமிடப்பட்டதோ இல்லையோ, அவனது ஆரம்பகால மரணம் துரிதப்படுத்தப்பட்டது என்று சந்தேகிக்க எனக்குக் காரணம் இருக்கிறது.

இருப்பினும், மற்ற மனநிலைகளில் (அவனும் என்னைப்போலவே மனநிலை மாற்றங்களுக்கு ஆளானவன் தான்) அவனது கோட்பாடுகள் பாதி தீவிரமானவையாக மாறும். குறிப்பாக விதி மற்றும் அழியாமை பற்றிய தலைப்புகளில், நம்முடைய இளமைக் கால உரையாடல்கள் பெரும்பாலும் அவற்றைப் பற்றியே இருந்தன. அப்போது அவனது வாதங்கள் கற்பனையானவையாக இருந்தாலும், கம்பீரமாகவும் தெளிவற்றதாகவும் வளர்ந்தன. அவன் எங்களை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தான் என்றால், அவனது உணர்ச்சி அந்த நகைச்சுவையைத் தகர்த்துவிட்டது. மறுமை பற்றிய பொதுவான கருத்துக்களுக்கு அவனது எதிர்ப்பு என்னவென்றால், அவை உலகளாவிய செல்லுபடியாகும் தன்மையைக் கோருவதுதான். பயணத்தின் முடிவில் மூழ்கியவர்கள் அனைவரும் தீர்ப்பளிக்கப்படுவதற்கு எழுவார்கள் என்று விசுவாசிகளும், விதிவிலக்கின்றி மூழ்குவதே இறுதியானது என்று அவிசுவாசிகளும் ஏன் நம்ப வேண்டும்? அவனது கருத்துப்படி (குறைந்தபட்சம் அவன் அப்படி உறுதியளித்தான்) கிட்டத்தட்ட அனைவரின் விதியும் நிரந்தர மரணம்தான். ஒவ்வொரு படைப்பாளியும் தன் படைப்பு வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான தனித்தனி கடல்களை உருவாக்கினார் என்றும், ஒவ்வொன்றும் நம்மைப் போல மில்லியன் கணக்கான நீச்சல் வீரர்களால் நிரப்பப்பட்டிருந்தன என்றும், கிட்டத்தட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடலும் நீந்துபவர்களும் தற்செயலாகவோ அல்லது தீங்கிழைக்கும் வடிவமைப்பாலோ முற்றிலும் அழிக்கப்பட்டனர் என்று நினைப்பதில் அவன் ஒரு கசப்பான மகிழ்ச்சியை அடைந்தான். (பன்மைத்துவவாதியாக இருந்த அவன், மில்லியன் கணக்கான, பில்லியன் கணக்கான தந்தைகள் தங்களுக்குச் சொந்தமான ஏதோ ஒரு இரவுக் கடலில் இருக்கலாம் என்று கற்பனை செய்தான்!) இருப்பினும்—இங்கே அவன் விசுவாசிகளுடன் சேர்ந்து நாத்திகர்களைத் தனக்கு எதிராகத் திருப்பினான்—ஆயிரத்திற்கு ஒரு இரவுக் கடலில், அதன் கால் பில்லியன் நீச்சல் வீரர்களில் ஒருவன் (அதாவது, இருநூற்று ஐம்பது பில்லியனில் ஒரு நீச்சல் வீரன்) ஒரு தகுதியான அழியாமையை அடைந்தான் என்று அவன் நம்புவதாகக் கூறினான். சில சந்தர்ப்பங்களில் இந்த விகிதம் சற்று அதிகமாக இருக்கலாம்; மற்றவற்றில் அது மிகவும் குறைவாக இருந்தது. ஏனென்றால் நீச்சல் தெரியாமல் பயணம் தொடங்கும் முன்பே மூழ்கிவிடுபவர்கள் உட்பட, ஒவ்வொரு அளவிலான திறமையைக் கொண்ட நீச்சல் வீரர்கள் இருப்பதைப் போல, மூழ்கியே படைக்கப்பட்டவர்கள் இருப்பதைப் போல, திறமையற்ற படைப்பாளிகள், படைக்க முடியாத படைப்பாளிகள், அதே போல் அசாதாரணமான வளமான படைப்பாளிகள் மற்றும் அவர்களுக்கு இடைப்பட்ட அனைத்து நிலைகளையும் அவன் கற்பனை செய்தான். ஒரு படைப்பாளியின் ஆக்கத் திறனுக்கும் அவரது மற்ற நற்பண்புகளுக்கும்—அவரது உயிரினங்களின் தரம் உட்பட—எந்தவொரு அவசியமான தொடர்பும் இல்லை என்பதை மறுப்பதில் அவன் மகிழ்ச்சியடைந்தான்.

மற்ற இரவுக் கடல்களில் உள்ள நீச்சல் வீரர்கள் நம் வகையாக இருக்க வேண்டியதில்லை. படைப்பாளிகளே வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். நம்முடைய குறிப்பிட்ட படைப்பாளி அவரே அழியாதவராக இல்லாமல் இருக்கலாம் அல்லது நாம் அவருடைய தூதர்கள் மட்டுமல்ல, அவருடைய அழியாமையாக இருக்கலாம். அவருடைய வாழ்க்கையையும் நம்முடைய வாழ்க்கையையும் நம் தனிப்பட்ட மரணங்களுக்கு அப்பால் மாற்றுருவம் பெற்றுத் தொடரலாம்—என்ற அவனது பைத்தியக்காரத்தனமான கருத்துக்களின் விரிவாக்கத்தை என்னால் தொடர்ந்து சொல்ல முடியும் (அவன் நிச்சயமாகச் சொன்னான்). இந்த மாற்றியமைக்கப்பட்ட அழியாமையைக் கூட (எனக்கு அர்த்தமற்றது) அவன் ஒப்பீட்டளவிலானதாகவும், தற்செயலான விபத்து அல்லது வேண்டுமென்றே முடிவுக்குக் கொண்டுவரக்கூடியதாகவும் கருதினான். அவனது செல்லக் கோட்பாடு என்னவென்றால், படைப்பாளிகளும் நீந்துபவர்களும் ஒருவரையொருவர் உருவாக்குகிறார்கள்—அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக, அவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால்—மற்றும் கொடுக்கப்பட்ட எந்தவொரு அழியாமைத் தொடரும் எத்தனை சுற்றுகளுக்குப் பிறகும் முடிவடையக்கூடும். எனவே அழியாதது (ஒப்பீட்டளவில் பேசினால்) என்பது அவதாரத்தின் சுழற்சி செயல்முறை மட்டுமே. அதுவே ஒரு தொடக்கத்தையும் முடிவையும் கொண்டிருக்கலாம். மாற்றாக அவன் சுழற்சிகளுக்குள் சுழற்சிகளை கற்பனை செய்ய விரும்பினான். அவை எல்லையுள்ளவையாகவோ அல்லது எல்லையற்றவையாகவோ இருக்கலாம். உதாரணமாக, படைப்பாளிகள் நீந்தி நம்மைப் போன்ற இரவுக் கடல்களையும் நீந்துபவர்களையும் உருவாக்கிய அந்த இரவுக் கடல், ஒரு பெரிய படைப்பாளியின் படைப்பாக இருக்கலாம். அவரே பலரில் ஒருவராக இருக்கலாம். அவர் தன் பங்கிற்கு கூடுதல். காலத்தையே அவன் நம் அனுபவத்திற்கு ஒப்பீட்டளவிலானதாகக் கருதினான், அளவைப் போல. நம் துடுப்புகளின் ஒவ்வொரு அசைவிலும், மிகச்சிறிய கடல்களும் நீந்துபவர்களும், முழு நித்தியங்களும் கடந்து போகக்கூடும் என்று யாருக்குத் தெரியும்—நம்முடையதும், நம் படைப்பாளியின் படைப்பாளியினுடையதும், ஏதோ ஒரு அதி-துடுப்பின் அசைவுகளுக்கு இடையே ஒரு மெதுவான கால வரிசையில் கழிந்து கொண்டிருக்கிறதோ என்னவோ?

இயற்கையாகவே நான் மற்றவர்களுடன் சேர்ந்து இந்த முட்டாள்தனத்தைப் பார்த்துக் கூச்சலிட்டேன். நாம் அப்போது இளமையாக இருந்தோம். முன்னால் என்ன இருக்கிறது என்பது பற்றி நமக்கு மிக மங்கலான எண்ணமே இருந்தது. நம் அறியாமையில் இரவுக் கடல் பயணத்தை ஒரு நேர்மறையான, வீரமிக்க செயலாகக் கற்பனை செய்தோம். அதன் அர்த்தத்தையும் மதிப்பையும் நாம் ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை. நிச்சயமாக, சிலர் வழியில் மூழ்கத்தான் வேண்டும், அது வருத்தத்திற்குரியதுதான் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஒரு பந்தயத்தில் வெற்றி பெற மற்றவர்கள் தோற்க வேண்டும். என் சக தோழர்களைப் போலவே நானும் நான்தான் வெற்றியாளராக இருப்பேன் என்று எடுத்துக்கொண்டேன். நாம் எங்கே, ஏன் என்று கவலைப்படாமல், இரவிலும் கடலிலும் நம் இளமையைச் சோதித்துப் பார்க்க ஆர்வமாகத் திரண்டோம். அந்தச் சந்தேகப் பிராணியை நாம் ஒரு வேடிக்கையான, பாதி அவமதிக்கத்தக்க ஒரு சின்னமாகக் கருதினோம். ஆரம்பக்கட்டப் படுகொலையிலேயே அவன் இறந்தபோது யாரும் கவலைப்படவில்லை.

இப்போதும் கூட அவனது எல்லா கருத்துக்களையும் நான் ஆதரிக்கவில்லை—ஆனால் நான் இனி கேலி செய்வதில்லை. நம் வரலாற்றின் பயங்கரம், என்னை கருத்துக்களிலிருந்தும், வறட்டுப் பெருமை, நம்பிக்கை, வீரம், தொண்டு, ஏக்கம், உயிர்ச்சக்தி போன்ற அனைத்திலிருந்தும் தூய்மைப்படுத்தியிருக்கிறது—மந்தமான நடுக்கத்தையும் ஒரு வகையான சோகமான, திகைப்பூட்டும் பிடிவாதத்தையும் தவிர. அவனது கற்பனைகளை நான் நினைவு கூர்வதற்குக் காரணம், இந்தக் கொடூரமான பயணத்தில் எஞ்சியிருக்கும் ஒரே நபர் நான் மட்டும்தானா, ஒரு தலைமுறையின் கதையைச் சொல்பவன் நான்தானா என்ற என் வளர்ந்து வரும் சந்தேகம்தான். இந்தச் சந்தேகமும், சமீபத்திய கடல் மாற்றமும், இப்போது எனக்கு எதுவும் சாத்தியமற்றது அல்ல. என் மறைந்த தோழனின் விசித்திரமான கற்பனைகள் கூட சாத்தியம்தான் என்று உணர்த்துகிறது. மேலும் என்னை ஒரு குறிப்பிட்ட அவநம்பிக்கையான தீர்மானத்திற்குக் கொண்டு வருகிறது, அதுதான் என் பதிவின் நோக்கம்.

அநேகமாக நான் என் புத்தியை இழந்திருக்கலாம். நாம் புறப்படும்போது நடந்த படுகொலைகள்; சுழல், நச்சு நீர்வீழ்ச்சி, கடல் கொந்தளிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட நம் அழிவுகள்; பீதி நிறைந்த நெரிசல்கள், கலகங்கள், படுகொலைகள், பெருந்திரள் தற்கொலைகள்; யாரும் இப்பயணத்தில் பிழைக்க மாட்டார்கள் என்பதற்கான பெருகிவரும் சான்றுகள்—இவற்றுடன் வேதனையும் சோர்வும் சேரும்போது புத்திசுவாதீனம் தப்பிப்பிழைப்பதே ஒரு அதிசயம்தான். எனவே, மற்ற சாத்தியக்கூறுகளுடன் சேர்ந்து, கடலின் தற்போதைய இனிமையான அமைதியும், ஏதோ ஒரு மாபெரும் இருப்பு, பாடல் அல்லது அருகிலுள்ள மேல்நோக்கிய நீரோட்டத்திலிருந்து வரும் அழைப்பு போன்ற தோற்றமும் சிதைந்த உணர்வின் மாயத்தோற்றங்களாக இருக்கலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்….

ஒருவேளை, நான் ஏற்கனவே மூழ்கியிருக்கலாம். நிச்சயமாக நான் இந்த நீச்சலின் முரட்டுத்தனமான போராட்டத்திற்காகப் பிறந்தவன் அல்ல. நான் ஆரம்பத்திலேயே அழிந்துபோய், ஏதோ ஒரு இறுதி ஆழத்திலிருந்து இந்த இரவுக் கடல் பயணத்தை கற்பனை செய்துகொண்டிருப்பது சாத்தியமில்லாத ஒன்றல்ல. எப்படியிருந்தாலும், நான் இனி இளமையாக இல்லை. எல்லா மாயைகளிலிருந்தும் விடுபட்ட நம்மைப் போன்ற களைப்படைந்த முதிய நீச்சல் வீரர்கள்தான் கனவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

சில நேரங்களில் நான் என் மூழ்கிப்போன நண்பன்தான் நான் என்று நினைக்கிறேன்.

வெளியே சொல்லிவிடுகிறேன்: அவள் இருக்கிறாள் என்று மட்டுமல்ல, அவள் வெகுதொலைவில் இல்லை என்றும் கடலை அமைதிப்படுத்தி, என்னை அவளை நோக்கி இழுக்கிறாள் என்றும் நான் நம்பத் தொடங்கியிருக்கிறேன்! அதிர்ச்சியுடன், அவனது விசித்திரமான கற்பனையை நான் நினைவு கூர்கிறேன். நம்முடைய இலக்கு (அது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இரவுக் கடல்களில் ஒன்றில் மட்டுமே இருந்தது என்பதை நினைவில் கொள்க) பொதுவாகக் கருதப்படும் கரை அல்ல. முரண்பாடுகளாலும் தெளிவற்ற உருவகங்களாலும் மட்டுமே விவரிக்கப்படக்கூடிய ஒரு விசித்திரமான உயிரினம். நீந்தும் நம்மிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆனால் நமக்கு நிறைவானது. நம்முடைய மரணம், நம்முடைய இரட்சிப்பும் உயிர்த்தெழுதலும், ஒரே நேரத்தில் நம் பயணத்தின் முடிவு, மையப்புள்ளி மற்றும் ஆரம்பம். நம்மைப் போல உறுப்புகளையும் கைகால்களையும் அசைக்காதது. ஆனால் கற்பனை செய்ய முடியாத அளவிலான ஒரு அசையாத அல்லது பிரம்மாண்டமாக நகரும் கோளம். தனக்குள்ளேயே நிறைந்தது. ஏதோ ஒரு வகையில் முற்றிலும் தற்செயலான ஒரு வாய்ப்பைச் சார்ந்தது (எப்போதும் அசாத்தியமானது). நம்மில் ஒருவன் இந்த இரவுக் கடல் பயணத்தில் பிழைத்து… அவளை அடைவான்! அவளை, அவன் அவள் என்று அழைத்தான். அதாவது அவன் அல்லாத ஒருத்தி. நான் தலையாட்டுகிறேன். இது மிகவும் அபத்தமானது. இந்தப் பயங்கரமான இருளில் என் பகுத்தறிவைத் தக்க வைத்துக் கொள்ள நான் என்னிடமே பேசிக் கொள்கிறேன். அவள் யாரும் இல்லை! நீயும் யாரும் இல்லை! எனக்குள் நான் பிதற்றுகிறேன். மரணம் மட்டுமே இதைக் கேட்டு அழைக்கிறது. மூழ்கியவர்களுக்கு எல்லாக் கடல்களும் அமைதியானவைதான்….

கேள்: படைப்பின் ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு வகையான படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்று என் நண்பன் வாதிட்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் எதிரானவர்கள் ஆனால் நிறைவு செய்பவர்கள். ஒருவர் கடல்களையும் நீந்துபவர்களையும் தோற்றுவிக்கிறார். மற்றவர் கடலைக் கொண்டிருக்கும் இரவையும் பயணத்தின் முடிவில் காத்திருப்பதையும் தோற்றுவிக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், முந்தையவர் விதிக்கு, பிந்தையவர் இலக்குக்கு (இருவரும் தாராளமாக, தன்னிச்சையாக, அலட்சியமாகக்கூட அல்லது அறியாமலேயே). இரவுக் கடல் பயணத்தின் நோக்கம்— பயணிக்கிறவனின் அல்லது படைப்பாளியின் நோக்கம் இருக்க வேண்டிய அவசியமில்லை! —என் நண்பனால் சுருக்கமான வார்த்தைகளில் மட்டுமே விவரிக்க முடிந்தது: நிறைவு, உருமாற்றம், எதிரெதிர் சக்திகளின் சங்கமம், எல்லைகளைக் கடப்பது. நாங்கள் சிரித்தபோது அவன் தோள்களை உயர்த்தி அந்த விஷயத்தை எங்களை விட நன்றாகத் தானும் புரிந்து கொள்ளவில்லை என்றும், அது வேடிக்கையானது, சலிப்பானது, ஒருவேளை ஆபாசமானது என்றும் ஒப்புக்கொண்டான். ஆனால் உங்களில் ஒருவர் என்று அவன் தன் வக்கிரமான புன்னகையுடன் கூறுவான். இரவுக் கடல் பயணத்தை முடித்து அவளோடு ஒன்றிணைய வேண்டிய அந்த நாயகனாக இருக்கலாம். நிச்சயமாக, நீங்கள் அதை அடைய மாட்டீர்கள் என்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். அவன் தானே அதை முயற்சிக்கப் போவதில்லை என்று அறிவித்தான். அந்த முழு எண்ணமும் அவனை வெறுப்படையச் செய்தது. அதை ஒரு அசிங்கமான புனைகதை என்று நாம் நிராகரிக்க நினைத்தால், அது நமக்கு நல்லது. கைகளை அடித்து, தண்ணீரைத் தெளித்து, மகிழ்ச்சியாக இருங்கள். நாம் விரைவில் மூழ்கப் போகிறோம். ஆனால் அது அங்கிருந்தது, தனக்கு எப்படித் தெரியும் என்றோ அல்லது ஏன் எங்களிடம் சொல்லத் சிரமப்படுகிறான் என்றோ அவனால் சொல்ல முடியவில்லை. அவளும் நாயகனும், கரையும் நீச்சல் வீரனும் தங்கள் அடையாளங்களை இணைத்து இரண்டும் அல்லாத ஒரு புதிய பொருளாக மாறிய பிறகு என்ன நடக்கும் என்று அவனால் சொல்ல முடியவில்லை. அந்த ஜாலவித்தை சங்கமத்தின் விளைவுக்கு, உதாரணமாக, இரவுக் கடல் பயணத்தின் நினைவு இல்லை என்றால், அது ஒரு மோசமான அழியாமையைத்தான் அனுபவிக்கிறது என்பதில் அவன் என்னோடு முற்றிலும் உடன்பட்டான். ஒரு நீச்சல் வீரனான நாயகனும் அவளும் இணைந்து அல்லது வெறும் எதிர்கால இரவுக் கடல்களின் மற்றொரு படைப்பாளியாக மாறினால், இவ்வளவு பெரிய உயிர்ச் சேதத்திற்குப் பிறகு அது இன்னும் மோசமானது. நிலைமை இப்படி இருக்கும்போது—அவன் அதை உறுதியாக நம்பினான்—இதயமுள்ள செயல் என்னவென்றால் இதில் பங்கேற்க மறுப்பதுதான். அவனது கருத்துப்படி, உண்மையான நாயகர்கள் தற்கொலை செய்துகொண்டவர்கள்தான். மேலும் நாயகர்களுக்கெல்லாம் நாயகன் அந்த நீச்சல் வீரனாகத்தான் இருப்பான். அவன் அந்த இன்னொன்றின் முன்னிலையிலேயே, அவள் வழங்கும் அழியாமையை மறுத்து, அதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு பேரழிவுச் சுழற்சிக்காவது முற்றுப்புள்ளி வைப்பான்.

நாங்கள் அவனை எவ்வளவு கேலி செய்தோம்! எங்கள் தருணம் வந்தது. நாங்கள் அந்தச் சாகசத்தின் பெருமையை எண்ணி முன்னோக்கிப் பாய்ந்தோம். கைகளைத் தட்டினோம். பாடினோம். சபித்தோம். மூச்சுத் திணறினோம். நியாயப்படுத்தினோம். காப்பாற்றினோம். கொன்றோம். விதைகளையும் கதைகளையும் உறவுகளையும் உருவாக்கினோம். கைவிட்டோம். தொடர்ந்து போராடினோம். ஆனால் அனைவரும் இருளிலேயே மடிந்தோம். கடைசியில் ஒரு கசப்பான எதிரொலியைப் போல, முன்னோக்கி, மேல்நோக்கி என்று முணுமுணுக்க ஒரு தளர்ந்த எச்சம் மட்டுமே எஞ்சியிருந்தது. பின்னர் அவர்களும் அமைதியாயினர்—கடைசி பயங்கரமான அலையின் பலியாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்—அப்போது ஒரு தருணம் வந்தது. நானும் முற்றிலும் தனித்து விடப்பட்டு, களைப்படைந்து, என் கடைசி அசைவை நிறுத்திவிட்டு, நீரோட்டத்திற்கு என்னை ஒப்புக்கொடுத்தேன். மூழ்குவதோ அல்லது மிதப்பதோ எதுவாக இருந்தாலும் சரி, இனி நீந்துவதில்லை என்று. உடனே, வியக்கத்தக்க வகையில் ஒரு கணத்தில் கடல் அமைதியானது! பின்னர் வெதுவெதுப்பாக, மென்மையாக, அந்த மாபெரும் அலை திரும்பியது, இப்போது செய்வது போல என்னை முன்னோக்கியும் மேல்நோக்கியும், ஒரு மகிழ்ச்சியின் வெள்ளத்தைப் போல இழுத்துச் செல்லத் தொடங்கியது—நான் திடுக்கிடலுடன் என் இறந்த நண்பனின் போதனையை நினைவு கூர்ந்தேன்.

நான் ஏமாறவில்லை. இந்தப் புதிய உணர்ச்சி அவளது வேலை. என்னை ஆட்கொள்ளும் இந்த ஆசை அவளது ஜாலம். தெளிவு என்னிடமிருந்து விடைபெறுகிறது. இன்னும் ஒரு கணத்தில் நான் ‘அன்பு!’ என்று கூச்சலிட்டு, அவளது பக்கத்தில் என்னை புதைத்துக்கொண்டு, உருமாற்றம் அடைவேன். அதாவது, நான் ஏற்கனவே இறந்து கொண்டிருக்கிறேன். உணர்ச்சியால் உந்தப்படும் இந்த மனிதன் நான் அல்ல. இரவுக் கடல் பயணத்தை வெறுத்து நிராகரிப்பவன் நான்தான்! நான்….

நான் முழுமையாக அன்பாகிவிட்டேன். வா! என்று அவள் முணுமுணுக்கிறாள். எனக்கு சுயவிருப்பம் இல்லை.

நான் யாராக மாறப்போகிறேனோ. நீங்கள் யாராக இருந்தாலும் சரி. என் உண்மையான சுயத்தின் கடைசி துடிப்போடு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். கேளுங்கள். அன்பு என்னை தாங்கவில்லை! இல்லை. அவளது ஜாலம் என்னை அதற்கு நேர்மாறாகப் பாட வைக்கத் தூண்டினாலும், இந்தத் தெய்வ நிந்தனைக்காக நான் இப்போதே மூழ்கிக் கொண்டிருந்தாலும், நான் உண்மையைச் சொல்வேன். இந்தப் பயங்கரமான கடலைக் கடந்து என்னை அழைத்து வந்தது என் ஏழை இறந்த தோழன் தந்த ஒரே ஒரு நம்பிக்கைதான். நீங்கள் என்னை விட வலிமையான மன உறுதி கொண்டவராக இருக்கலாம். மேலும் தீவிரமான கவனத்தின் மூலம், உங்களின் உத்தியோகபூர்வ பாரம்பரியத்துடன் சேர்த்து, ஒரு பயங்கரமான நினைவூட்டலையும் எதிர்மறை தீர்மானத்தையும் ஒரு தனிப்பட்ட மரபாக உங்களுக்குக் கடத்த முடியும் என்பதுதான். அது பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும், என் கற்பனை என்னவென்றால், என்னைப் போன்ற ஏதோ ஒரு கற்பனை செய்ய முடியாத வடிவம் (அல்லது அது அப்படித்தான் இருக்க வேண்டும் என்றால் நானும் அவளும் சேர்ந்து) ஏதோ ஒரு வகையில் சிதைந்த அல்லது தீவிரமான மொழிபெயர்ப்பில், இந்தச் சிந்தனைகளின் சில பிரதிபலிப்புகளை வெளிப்படுத்துவதைக் கண்டறியும். அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக இது நடந்தால், நான் யாருக்கு, யாருடைய வழியே பேசுகிறேனோ அந்த நீங்கள், என்னால் முடியாததைச் செய்யுங்கள். இந்த அர்த்தமற்ற, மிருகத்தனமான தொழிலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்! அவளது பாடலுக்கு எதிராக உங்கள் காதுகளை மூடிக்கொள்ளுங்கள்! அன்பை வெறுங்கள்!

இன்னும் உயிரோடு, மிதந்து, எரிந்து கொண்டிருக்கிறேன். அப்படியானால் என் இறுதிக்கு முந்தைய நம்பிக்கைக்கு விடைபெறுகிறேன். கரையின் எல்லையிலேயே ஒருவன் கொடிய தெய்வ நிந்தனைக்காக மூழ்கடிக்கப்படலாம். அந்த இருளைக் கடந்து முற்றிலும் இல்லை என்று சொல்பவர்கள் மட்டும்தான் தப்பிப்பிழைக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்குமோ (என் பழைய நண்பன் புன்னகைப்பான்)? ஆனால் அது கூட ஒரு அர்த்தத்தைக் கொடுக்கும். இங்கே எந்த அர்த்தமும் இல்லை. அர்த்தமற்ற அன்பு, அர்த்தமற்ற மரணம் மட்டுமே உள்ளது. இந்தச் சிந்தனைகளை யார் எதிரொலித்தாலும் அதன் ஆசிரியரை விட தைரியமாக இருங்கள்! இரவுக் கடல் பயணங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி! இனி எதையும் உருவாக்காதீர்கள்! நான் என்னை மறுக்கும்போது, என்னை நானே கைவிட்டு, என்னை அழைக்கும் அவளுக்குள் பாய்ந்து, பாடும்போது என்னை மறுத்துவிடுங்கள்…

அன்பு! அன்பு! அன்பு!

*

ஜான் பார்த் (1930 – 2024)

பின் நவீனத்துவ இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கதையை எப்படி எழுதுவது என்ற வழக்கமான பாணியை உடைத்து, புதுமையான முறையில் கதைகளை உருவாக்கியவர்.

இவர் தன் படைப்புகளில் மெட்டாஃபிக்சன் என்ற உத்தியை அதிகமாகப் பயன்படுத்தினார். அதாவது, ஒரு கதையை வாசிக்கும்போதே, அது ஒரு கற்பனையான கதைதான் என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டும் வகையில் எழுதுவதில் வல்லவர்.

இவருடைய (1972) என்ற நாவலுக்காக அமெரிக்காவின் உயரிய இலக்கிய விருதான தேசிய புத்தக விருது வழங்கப்பட்டது.

The Sot-Weed Factor – இவருடைய மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. Lost in the Funhouse – இது இவருடைய புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பாகும்.

1967-ல் எழுதிய The Literature of Exhaustion என்ற கட்டுரை இலக்கிய உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பாரம்பரியக் கதை சொல்லும் முறைகள் தங்களின் எல்லையை எட்டிவிட்டன என்றும், இனிவரும் எழுத்தாளர்கள் புதிய வடிவங்களைக் கண்டறிய வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இலக்கிய வடிவங்கள் காலாவதியாகிவிடலாம், ஆனால் கற்பனைத் திறனுக்கு முடிவே இல்லை- என்பது இவருடைய கொள்கையாக இருந்தது. இவர் 2024 ஆம் ஆண்டு, தனது 93 வது வயதில் இயற்கை எய்தினார்.

00

மொழிபெயர்ப்பாளர் பற்றிய குறிப்புகள்

பெயர்: மோகன ரவிச்சந்திரன்

பல சிற்றிதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளிவந்துள்ளன. உள்ளுறை, எதிர்முனை

பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தவர்.

இவர் எழுதி பிரசுரம் பெற்ற நூல்கள்:

1. மெய்நிகர் (கவிதைத் தொகுப்பு) லயம் வெளியீடு

2. கவிதையின் மெய்மை (கவிதை பற்றிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்) தமிழினி வெளியீடு

3. எனக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு பறவை (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) தமிழினி

வெளியீடு

4. கவிதையின் மெய்மை – புதிர்வழிப் பாதை (பின் நவீனத்துவம் மற்றும் கவிதை பற்றிய

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்) உன்னதம் வெளியீடு

5. மாயவித்தைக்காரனின் வெள்ளி மீன்கள் (கவிதைத் தொகுப்பு) எதிர்முனை வெளியீடு

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *