-பரிவை சே.குமார்
“அப்ப இதுக்கு என்னதான் முடிவு?” எனக் கேட்ட பொன்னையாவிடம், “என்ன முடிவுன்னா அது என்னவோ வேணுமின்னே இப்ப ஊன்டுனது மாதிரியில்ல எல்லாரும் பேசுறீங்க… அது எங்க பாட்டையா காலத்துல ஊனுனது. அதுதான் எங்க இடத்துக்கான அடையாளம். அதையும் எடுத்துட்டா, அப்பறம் எங்க இடத்தை எப்படி நாங்க அடையாளம் வச்சிக்கிறது..?” என வேகமாய்க் கேட்டார் மதியாரி.
“மதி என்ன பேசுறே நீ..? தலைமுறை தலைமுறையா அது உங்க இடமாவே இருக்கட்டும். இப்ப அந்தப் பக்கம் ரெண்டு பேரு வீடு கட்டிட்டாங்க. அவுக வீட்டுக்கு வண்டி வாசி போக வர இந்தக் கல்லு பெரிய இடைஞ்சலா இருக்குல்ல, அதப் புடுங்கி கொஞ்சம் தள்ளி ஒரு வேலியப் போட்டு விட்டுட்டாக்கூட அவங்க அத ஒட்டி தங்களோட வீட்டுக்குப் போவாங்க” என்றார் கருத்தையன்.
“இப்ப என்ன போகாமயா இருக்காங்க…?” நக்கலாய் கேட்டார் மதியாரி.
“என்ன நக்கலா…? நாங்க போய்க்கிட்டுத்தான் இருக்கோம். முச்சந்தி புள்ளயாரு கூட மூணு ரோடு சந்திக்கிற இடத்துல ரோட்டோரமாத்தான் இருப்பாரு. இது ரோட்டுக்கு நடுவுலயில்ல இருக்கு” கோபமாய்ச் சொன்னான் பாண்டியன்.
“நாங்க வேலி அடைக்காமப் போட்டதால அது முச்சந்திப் புள்ளயாராட்டம் இருக்கு. அதோட சேத்து அடைச்சிட்டா அது உங்க பார்வைக்கி ஓரமாத்தானே இருக்கும்”
“இப்ப மட்டும் என்ன பண்ணி வச்சிருக்கிய அங்கிட்டு எவனும் வண்டி கிண்டிய விட்டுறக்கூடாதுன்னு முள்ளு மொடலு, சாணியின்னு எல்லாத்தயும் அங்கனதானே போட்டு வச்சிருக்கிய…”
“எங்க இடத்துல நாங்க போடுறோம். உங்களுக்கு என்ன வந்திச்சி..?”
“மதி என்னப்பா இது…? ஏப்பா பாண்டி நீங்க ரெண்டு பேரும் சண்ட போட்டுக்கிறத வேடிக்கை பாக்கவா ஊரு கூடி உக்காந்திருக்கு”
“தப்புத்தாங்க… ஆனா நீங்க அவுகளுக்குத்தானே ஏந்துக்கிட்டுப் பேசுறிய…?”
“மதி… இங்க யாரும் யாருக்கும் ஏந்துக்கிட்டு வரல. ஊர்க்கூட்டம் அவன் சொல்லியிருக்கான் அதான் கேட்டுக்கிட்டு இருக்கோம்”
“அன்னக்கி அந்தப்பக்கம் ஒத்தையடிப் பாதைதான். எங்க பாட்டையா அந்தப் பக்கம் இடமிருக்கவுக போக வர ஆறடிப் பாதை விட்டுக் கொடுத்தாரு. இன்னக்கி நெலமைக்கி அந்த ஆறடிப் பாதைக்கி கொடுத்த இடமே லட்சக்கணக்குல போவும். இப்ப என்னடான்னா நான் கப்பல்மாரிக் கார் வாங்கி வச்சிருக்கேன். அதை என்னோட வீட்டு வரைக்கும் கொண்டு போகணும், கல்லப் புடுங்குன்னு நின்னா எப்புடிங்க…? இப்ப கல்லப் புடுங்குனா பெரிய ரோடாக்கி அங்கிட்டு உள்ளவுக போக வர இருப்பிய. அப்ப எங்க இடம்…? காலம் பூராவும் நாங்க விட்டுக் கொடுத்துப் போகணுமின்னு நினைக்கிறியளா…?”
“மதி இங்க யாரும் பைபாஸ் ரோடு கேக்கல. அந்தக் கல்லப் புடுங்கிட்டு ஒரு ரெண்டு மூணு அடி விட்டு நீ கல்லு ஊனுனாலோ இல்ல வேலி அடைச்சாலோ அந்தப் பக்கம் இருக்கவுகளுக்கு அது ஒரு உதவியா இருக்குமுல்ல… மனுசனுக்கு மனுசன் விட்டுக் கொடுத்து வாழ்றதுதாம்ப்பா வாழ்க்கை” என்றார் பொன்னையா.
“நல்லாயிருக்கு மாமா உங்க நியாயம்…? விட்டுக் கொடுத்ததெல்லாம் போதும். இவுகள்லாம் எங்களுக்கு என்ன உதவி செஞ்சாங்க. எங்கப்பாரு இவுக வீட்டுல போயி நின்னப்போ இவுக செஞ்சதெல்லாம் ஊருக்குத் தெரியுந்தானே. அப்புடி இருக்க ஊராரெல்லாம் இவுகளுக்காக கூடிப் பேசுறீங்க பாருங்க. இதை என்ன சொல்றதுன்னு தெரியல”
“எல்லாம் தெரியும் மதி. காலம் கடந்தும் அதைச் சுமக்கணுமா சொல்லு. அது போக இங்க யாருக்கும் ஏந்துக்கிட்டு ஊர் கூடலை. அவுக கூட்டம் சொன்னதால் உங்கிட்ட என்ன சொல்றேன்னு கேக்குறோம். இதே நீ கூட்டியிருந்தாலும் ஊர் கூடத்தான் செய்யும். உங்க பாட்டையா ஊருக்கு பல நல்லது செஞ்சவரு. அன்னக்கி அவரு அந்தப் பக்கம் போகவர வரப்புத்தான் பாதையா இருக்கு, அதுல போக வரச் சிரமமுன்னுதான் ஆறடிக்கிட்ட விட்டுக் கொடுத்திருக்காரு. இது போக அவரு கோயிலுக்கு, பஞ்சாயத்துக் கிணறுக்கு, கோயிலு கூத்து மேடைக்கின்னு விட்டுக் கொடுத்ததெல்லாம் நிறைய…”
“அதுக்கு…?”
“அவரு செஞ்சதை இந்த ஊரு தலைமுறை தலைமுறையா பேசிக்கிட்டு, வாழ்த்திக்கிட்டு இருக்கு. மனுசனுக்கு மனுசன் விட்டுக் கொடுக்கிறது காலத்துக்கும் நின்னு பேசுமுல்ல. அவரு பேரன் நீ… உனக்கும் அந்த மனசு இல்லாமலா போயிரும்”
“அப்படியா… ஆமா இங்க நீங்கள்லாம் என்னத்தை விட்டுக் கொடுத்திருக்கீங்க…?”
“நீ என்னப்பா இப்புடிப் பேசுறே…? விதண்டவாதம் பேசுனா பேசிக்கிட்டே போகலாம்”
“சித்தப்பா… விதாண்டாவாதம் பேசுனா எனக்கும் பேசத் தெரியும்ன்னு சொல்லுங்க” என்றான் பாண்டியன்.
“பாண்டி நீ இருப்பா. அதான் பேசுறோமுல்ல”
“விதண்டவாதமில்லைங்க நடப்பத்தானே சொல்றேன். எங்கய்யா என்ன கேட்டாரு. எங்க இடத்துக்கு முன்னால கிடக்குற இவுக இடத்தக் கேட்டப்போ கொடுத்தாங்களா…? அன்னக்கே அவரு இதெல்லாம் என்னோட இடமுன்னு இந்தப் பாதையை அடச்சிருந்தாருன்னா என்ன பண்ணியிருப்பாக. இவங்க மனுசங்களா நடக்கல, அவரு மனுசனா இருந்துட்டுப் போயிட்டாரு. இப்ப மட்டும் இவுக போக பாதை வேணுமின்னு ஊரக் கூட்டியிருக்காக”
“அது அந்தக் காலத்துல இருந்தவுக செஞ்சது… நாங்களா செஞ்சோம்”
“ஓகோ… அப்ப எங்கப்பா உங்க வீட்டு வாசல்ல வந்து நின்னப்போ செஞ்சவுக யாரு. அதுவும் வேற ஆளுகளா…?
“ஏப்பா ரெண்டு பேரும் பழசையே பேசாதியப்பா… இப்ப என்ன முடிவுன்னு ஊராரு சொல்லுங்கப்பா. சும்மா வளவளன்னு இழுத்துக்கிட்டு”
“இதுல உடையவன் மல்லுக்கு நிக்கிறப்போ ஊரு என்ன பேசமுடியும்”
“இதுக்கு ஒரு முடிவு தெரியலன்னா நாங்க அந்தக் கல்லை உடைச்சிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்போம். எம்புட்டு நாளாச் சொல்லிக்கிட்டு இருக்கோம். என்னமோ இவுக ஐயா கேட்டு எங்க வீட்டாளுக கொடுக்கலயாம்… இவுக அப்பாவை மதிக்கலையாம்… நாந்தெரியாமத்தான் கேக்குறேன். இவுக கேட்டதும் எல்லாரும் கொடுத்துறணுமாக்கும். அன்னக்கி பணமிருக்குங்கிற பவுசுல ஆடுனானுங்க. இப்ப பல்லுப் போயிக் கெடந்தாலும் பழய பவுச விடாம நிக்கிறானுங்க”

“பாண்டியா… நீ ரொம்பப் பேசுறே… வார்த்தையை அளந்து பேசு. உனக்கு நாலு பேருமாரி மதியாரிக்கு ஆளுங்க இருக்கத்தான் செய்யிறோம். அப்பறம் கை கலப்புலதான் முடியும்” மீசையை முறுக்கியபடி சொன்னான் காளிதாஸ்.
“மச்சான் நீ இரு மச்சான். அவுக உடைச்சித்தான் பாக்கட்டுமே. அந்த ஆறடி விட்டுத்தான் கொடுத்திருக்கு, அது இப்பவும் எங்க பேர்லதான் இருக்கு. நாங்கதான் வரிக்கட்டுறோம். சர்வேயரக் கூட்டியாந்து அளந்து அடச்சேன்னு வச்சிக்கங்க. அப்புறம் ஒத்தயடிப் பாதையிலதான் போகவர இருக்கணும்”
“உடைக்கத்தான் போறேன். இவுக அப்பாரு எதுக்கு எங்க வீட்டு வாசல்ல வந்து நின்னாகன்னு எல்லாருக்கும் தெரியுமில்ல இல்ல அதையும் நாஞ்சொல்லணுமா…?”
“டேய்…” கத்தியபடி எழுந்த மதியை சிலர் அதட்டி அடக்கினர்.
“ஏம்ப்பா… இப்புடி ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தா ஊருக்கு என்ன மரியாதை இருக்கு. இங்கே பாரு மதி… நாந்திரும்பவும் சொல்றேன். விட்டுக் கொடுத்தா கெட்டுப் போயிற மாட்டோம். உன்னோட வாரிசுக நல்லாயிக்கும். பாண்டியா விட்டுக் கொடுத்தவனுக்கிட்ட மல்லுக்கு நின்னு காரியமில்லை. கேக்குற விதமாக் கேட்டா எல்லாங் கிடைக்குமப்பா”
“யாரு என்ன சொன்னாலும் நான் அந்தக் கல்லைப் பிடுங்க மாட்டேன்”
“இம்புட்டுப் பிடிவாதம் கூடாதுப்பா. அந்தக் கல்லு தனியா நிக்கிது. அது எல்லாத்துக்கும் பிரச்சினைதான். நாளக்கே யாராச்சும் அதுல மோதி விபத்தானா…”
‘போகட்டும்”
“மதி… உங்க வீட்டுல யாரும் இப்படி ஊரை மதிக்காம பேசுனதில்ல. சாமியப்பனுக்குன்னு ஒரு மரியாதை இருந்துச்சு”
“மதிக்காம எல்லாம் பேசலை. அவுக பேசுனதுக்குத்தான் நானும் பேச வேண்டியதாயிருச்சு. ஊரு மன்னிக்கணும். சரிங்க… அவுக கேட்டமாரி பத்தடியில்ல பதினாறு அடி விட்டுக் கொடுக்கிறேன். செயங்கொண்டார் கொல்லைக்கிட்ட அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் ஒரு ஏக்கருக்குப் பக்கமா இடம் கிடக்குல்ல அதை எம்பேருல எழுதித் தரச் சொல்லுங்க. இங்க அவுக கேக்கிற தூரத்துக்கு விட்டுக் கொடுக்கிறேன்”
“அதெப்புடிங்க முடியும். இன்னக்கி வித்தாலும் அது செண்டு ரெண்டு லட்ச ரூவா போகும். இதுவும் அதுவும் ஒண்ணா”
“போதுமா… அடுத்தவமுட்டு இடமுன்னா இவுக இலவசமா எடுத்துப்பாக. இவுக இடத்தக் கொடுக்கச் சொன்னா லட்சம் போயிருமாம். இதுக்கு என்னய வேற கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க”
“ஏம்ப்பா மதி ஒரு நியாயம் வேணாமா…? அது டவுன ஒட்டிக் கிடக்கு, அதோட மதிப்பும் ஊர்ல கிடக்க வயலோட மதிப்பும் ஒண்ணா”
“என்ன நியாயம்…? அன்னக்கி எங்க பாட்டையா நியாயமாக் கொடுத்திருக்காரு. அது ஆறடி பாதைதான்னு எல்லாருக்கும் நல்லாத் தெரியுமில்ல. இவங்க வீடு கட்டும்போது நாலடி போட்டுக் கட்டாம இவுக இடம் வரைக்கும் ஒரு இஞ்சு விடாம வீட்டக் கட்டிப்புட்டு இப்ப என்னோட இடத்துல பாதை கேக்குறதும் அதுக்கு ஊரு சேர்ந்துக்கிட்டுப் பேசுறதும் உங்களுக்கு நியாயமாத் தெரியுதா..? எங்கிட்ட காசு பணம் இல்லதான்… வாழ்ந்து கெட்ட வீடு நாங்க. அவுக சொன்னமாரி பல்லுப் போன பவுசோடதான் சுத்துரோம். அவுககிட்ட இப்ப தங்கப்பல் பவுசு இருக்கு. அதான் ஊராரெல்லாம் அவுகளுக்கு துணையா நிக்கிறிய… இதெல்லாம் காலம் காலமா நடக்குறதுதான். இன்னக்கி ஒரு இல்லாதவன் வீடு கட்ட இடம் வேணுமின்னு எனக்கிட்டக் கேட்டா அந்த இடத்த நான் சும்மாவே கொடுப்பேன். இவுகளுக்கு அதுல ஒருபிடி மண்ணு கூட கொடுக்கமாட்டேன்”
“மதி… இங்க யாரும் பணத்தைப் பார்த்து, மதிப்பைப் பார்த்து பேச வரலை”
“அதான் பார்த்தேனே… வந்ததுல இருந்து நீங்க என்ன பேசுறீங்க… எப்புடிப் பேசுறீங்கன்னு… என்னால இடம் விட்டுக் கொடுக்க முடியாது. கோர்ட்டு கேசுன்னு எங்க வேணுமின்னாலும் போவட்டும். ஊர்ல கூப்புட்டீங்க, ஊர மதிச்சி வந்தேன். என்னோட பதிலச் சொல்லிட்டேன்”
கூட்டம் எந்த முடிவையும் எட்டாமல் முடிந்தது. பாண்டியன் அந்தக் கல்லுக்காலை ரெண்டு மூணு நாள்ல உடைச்சிப் போடுறேனா இல்லையான்னு பாருங்க எனக் கத்திவிட்டுச் சென்றார்.
“ஏங்க… அவுக யாரு… உங்கப்போட தங்கச்சி பசங்கதானே. தொலஞ்சிட்டுப் போவுதுன்னு விட்டுக் கொடுக்க வேண்டியதுதானே” என்ற மனைவியிடம், “அந்தக் கல்தூணைப் பிடிங்கி ஆறடியில்ல இன்னும் பத்தடி கூட விட்டுக் கொடுக்க எனக்கும் மனசிருக்கு. ஆனா அன்னக்கி எங்கப்பா அவங்க வீட்டுல பொண்ணு கேட்டுப் போயி நின்னப்போ எங்கண்ணன நொண்டின்னு கேலி பேசி, கட்ட மாட்டேன்னு சொன்னவனுங்க அவனுங்க. இந்தக் கேலியால எங்கண்ணன் தூக்குப் போட்டுக்கிட்டு செத்துப் போனான். முறைப்பெண்ணு இல்லானா வேற பொண்ணே இல்லாதமாரி உயிரை விட்டான். அவன் கோழைதான்… அவன் செஞ்சது ஏத்துக்கிற விசயமில்லைன்னாலும் அந்த வலி, எனக்குத் துணையா இருந்தவனை இவங்களோட கேலி கொன்னுடுச்சேங்கிற கோபம் எல்லாமும் எனக்குள்ள இன்னமும் நெருப்பா இருக்குடி. அது எப்பவுமே அணையாது. இவனுக அந்தக் கல்தூணை எதாச்சும் பண்ணுனாங்கன்னா சர்வேயக் கூட்டியாந்து அளந்து வேலி போட்டிருவேன். அப்பறம் காம்பவுண்ட இடிச்சிப் பாதை வச்சிக்கட்டும்” என்றபடி நிலைப்படிக்கு மேலே இருக்கும் போட்டோக்களைப் பார்த்தான். அப்பா, அம்மாவுக்கு அருகில் சிரித்துக் கொண்டிருந்தான் மதியாரின் அண்ணான் கருத்தையா.
00

பரிவை சே.குமார்.
இதுவரை எதிர்சேவை, வேரும் விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு என்கிற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன் பொற்கிழி விருது பெற்றிருக்கிறார்.

