வா.மு.கோமு

குபேர வனக்காடு மிகப்பெரிய பரப்பளவைக்கொண்டது. வனத்தில் இந்த விலங்கினமோ, பறவையினமோ இல்லை என்று சொல்லிவிட முடியாதபடி அனைத்து வகை பறவையினங்களும், விலங்கினங்களும் வாழ்ந்து வந்தன. சிறிய விலங்கினங்கள் வாசித்துப்பழக மரத்தடி பள்ளிகளும் இருந்தன.

வனத்தில் திருட்டு ஒரு மாபெறும் குற்றமாகவும், தண்டனைகள் கடுமையானதாகவும் இருந்தது அங்கே. திருடிய விலங்கு கையும் களவுமாக பிடிபட்டால் ஆலமரத்தில் தலைகீழாக கட்டித்தொங்கவிடப்படும். தொடர்ந்து மூன்று நாட்கள் அன்னம் தண்ணி அதற்கு கிடையாது.

நான்காம் நாள் தான் வன அதிகாரியாக இருக்கும் கரடியார் துணை அதிகாரிகளுடன் வந்து சேர்ந்து திருடிய அந்த விலங்கினத்தை விடுவிப்பார். பின்பாக அதற்கு ஜூஸ் வகைகளும் வழங்கப்படும். ‘இனிமேல் வனத்தில் எங்குமே அடுத்தவர் பொருளை திருட மாட்டேன்!’ என்று எழுதப்பட்ட தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு விடுதலை செய்வார். கையெழுத்து இடத்தெரியாத விலங்காய் இருப்பின் கைநாட்டு வாங்கிக்கொள்வார்.

தலைகீழாக மூன்று நாட்கள் தொங்கும் வேதனையை அனுபவித்த திருட்டு விலங்கு மீண்டும் அந்த திருட்டு எண்ணத்தையே கைவிட்டுவிடும்.

வன அதிகாரியாக இருக்கும் கரடியார் குடும்பத்தில் கடைசியாகப்பிறந்தவன் தான் ராசாமணி. அவனுக்கு தன் அப்பா ஒரு அதிகாரியாக இருப்பதில் தனிப்பெருமைதான். அவனுக்கு வயது இப்போது நான்கு. சரியான துடுக்குத்தனம் நிரம்பியவன். ஆலமரப்பள்ளிக்கு இந்த ஒருவருடமாக வாசிக்க சென்று வந்து கொண்டிருந்தான்.

ஆலமரப்பள்ளியில் அவனுக்கு ’ரசப்பைத்தியம் ராசாமணி’ என்று தான் பெயர். பள்ளிக்கு வாசித்தும், எழுதவும் பழக வரும் மற்ற ஏனைய விலங்கினங்கள் மதிய உணவுக்கென பெரிய போசிகளில் தங்கள் வீட்டார் கொடுத்தனுப்பிய உணவு வகைகளை எடுத்து வருவார்கள். மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை உணவுக்கான நேரம்.

சிங்கக்குட்டிகள் எல்லாம் தங்கள் மதிய உணவுப் போசியில் பச்சையான சமைக்கப்படாத மான்கறித்துண்டுகள் கொண்டு வரும். அவைகள் தனியே கூட்டம் சேர்ந்து கறித்துண்டுகளைக் கவ்வி இழுத்து சுவைத்து உண்ணும். மாமிச உண்ணிகள் தனியே ஒதுங்கி மதிய உணவை முடித்துக்கொள்ளும். ராசாமணி சைவ உணவு கொண்டு வந்திருந்த ஏனைய விலங்குகளோடு சென்றமர்ந்து தான் கொண்டு வந்திருந்த சுரைக்காய் புரடையின் மூடியை அகற்றிவிட்டு உள்ளே என்ன இருக்கிறதென நுகர்ந்து பார்த்தது. வழக்கம்போல தேன் தான் இருந்தது. உடனேயே தன் பின்னங் கால்களை நிலத்தில் உரசியபடி அழத்துவங்கியது. மற்ற ஏனைய படிப்பாளிகள் உண்பதை நிறுத்திவிட்டு கால்களை நிலத்தில் உதறி உதறி அழும் கரடி ராசாமணியையே பார்த்தன.

“ஏன் ராசாமணி அழுறே? உங்கம்மா உனக்கு மதிய உணவு ஒன்னும் கொடுத்துவிடலையா? காலி புரடையையா கொடுத்து அனுப்பியிருக்காங்க?” என்று எறும்புத்தின்னி ஒன்று கேட்டது.

“எங்கம்மா நான் சொல்றதை கேட்கறதேயில்லை.. எப்பவும் போல தேனை கொடுத்து அனுப்பியிருக்காங்க! எனக்கோ ரசம்னாத்தான் விருப்பம். அதும் தக்காளி ரசம்னா ரொம்ப சூப்பரா இருக்கும். கடைசிக்கு புளி ரசமாச்சீம் வச்சி கொடுத்து விடலாம்ல? இந்த அம்மாக்கள் எப்பவும் பையன்களுக்கு எது பிடிக்குமோ அதை மட்டும் செஞ்சு தரவே மாட்டாங்க!” என்று அழுதது.

“சரி சரி அழாதேடா ராசாமணி. சாயந்தரமா பள்ளி முடிஞ்சி வீடு போவீல்ல.. அப்ப உங்கம்மாட்ட சொல்லி நைட்டு சாப்பாட்டுக்கு ரசம் வச்சித் தரச்சொல்லி ஒரு சுரைக்காய் குடுவை நிரம்ப குடியேன்.”

“எங்கம்மா தினமும் ரசம் வைக்க மாட்டாங்க. வாரத்துல ஒருநாள் தான் ரசம் வைப்பாங்க! உங்க வீட்டுல இன்னிக்கு நைட்டு ரசம் வைப்பாங்களா? அப்படின்னா சொல்லு.. இன்னிக்கு பள்ளி முடிஞ்சதீம் உன்னோடையே உன் வீட்டுக்கு வர்றேன். உன் வீட்டுல ரசம் குடிச்சுட்டு இரவு தூங்கிடறேன். காலையில நாம ரெண்டு பேருமே ஜோடி போட்டுட்டு ஜாலியா பள்ளிக்கு வந்துடுவோம்.”

“ஐய்யே! ரசமெல்லாம் எங்க வீட்டுல யாருக்கும் பிடிக்காதே! எதாச்சிம் விசேச நாள்ல மட்டும் தான் எங்க வீட்டுல வடை, போண்டா, பருப்பு, ரசமெல்லாம் வைப்பாங்க!”

“அப்ப எப்ப உங்க வீட்டுல விசேசம்? உனக்கு பிறந்த நாள் வருதுன்னா செய்வாங்கதானே?”

“செய்வாங்க.. ஆனா போன வாரம் தானே என் பிறந்த நாள் முடிஞ்சுது!”

“அப்படின்னா உங்கம்மா, உங்கப்பா பிறந்த நாளெல்லாம் வருமே!” என்றது ராசாமணி.

“ஐய்யே! அவங்க ரெண்டு பேருமே அதெல்லாம் கொண்டாட மாட்டாங்க! காட்டுல திருவிழா வரும்ல.. அப்ப செய்வாங்க! எங்கக்காவுக்கு ரெண்டு மாசம் மிந்தி கல்யாணம் நடந்துச்சு. அவளை சுந்தரவனக்காட்டுக்கு கட்டிக்குடுத்தாங்க! அன்னிக்கி உறவுச்சனமெல்லாம் வன மண்டபத்துக்கு வந்திருந்தாங்க! அன்னிக்கி பருப்பு வடை, கீரை வடை, மோரு, புளிக்கொழம்பு, முருங்கைக்காய் குழம்பு, முட்டைக்கோஸ் பொரியல் எல்லாம் போட்டு விருந்து வச்சாங்க! அன்னிக்கி உங்க அப்பா அம்மா கூட வந்திருந்தாங்க வன மண்டபத்துக்கு. நான் பார்த்தேனே!”

“என்னைத்தான் எந்த விசேசத்துக்கும் கூட்டிட்டு போக மாட்டேங்கறாங்க என்னோட அப்பா. நான் சரியான குறும்புக்காரனாம். எங்க போனாலும் எதையாச்சிம் தூக்கிப்போட்டு உடைச்சிடுவனாம். அப்படின்னு சொல்லி என்னை எங்க குகையிலயே விளையாடிட்டு இருக்கச் சொல்லிடுவாங்க!”

“சரி உனக்குப் பசிக்கும்ல.. இருக்குறதை இப்ப குடி. ரசமே வேணும்னா இப்ப எங்க போறது? யாராச்சிம் கூடப்படிக்கிறவங்க கொண்டு வந்திருந்தாலும் இந்த நேரத்துக்கு குடிச்சி முடிச்சு கையை கழுவியிருப்பாங்க. ரசமில்லீன்னு கோவிச்சிக்கிட்டு தேனைக்குடிக்காம வயித்தை காய வச்சிடாதே! அப்புறம் அது ’பசிக்குது பசிக்குது’ன்னு கத்து பிடிச்சிடும்.”

நாட்கள் ஆக ஆக ராசாமணிக்கு நண்பர்கள் என்று ஐந்தாறு பேர் சேர்ந்துகொண்டார்கள். அதில் இரண்டு குரங்கார்களும் சேர்த்தி. ஞாயிறு விடுமுறை நாளில் மரமேறி தொட்டுவிளையாடும் விளையாட்டு விளையாடி மகிழ்ந்தார்கள். குளத்தில் குதித்து அலம்பல் செய்தார்கள். குளத்தில் தண்ணீருக்காக வரும் மற்ற பெரிய விலங்குகள் இவர்களின் குதியாளத்தைப்பார்த்து கடிந்து கொண்டன. ’ஞாயிற்றுக்கிழமையும் மரத்தடிப்பள்ளி இருந்தால் நல்லது..’ என்று சொல்லிச் சென்றன.

நண்பர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரிந்து கொண்டு அவர்களின் பிறந்த நாளன்று அவர்கள் வீட்டுக்குச் சென்று வாழ்த்துவது ராசாமணியின் கடமைகளில் ஒன்றாகியது. ராசாமணிக்காகவே நண்பர்கள் தங்கள் பிறந்த நாளில் தங்கள் அம்மாவிடம் ரசம் வைக்கச் சொல்லி கெஞ்சுவதும் நடந்தது.

ராசாமணி நண்பர்களின் கூட்டத்தை மேலும் உயர்த்திக்கொள்ள ஆசைப்பட்டான். ஆனால் இவன் ஆசையை தெரிந்துகொண்ட பலரும் இவனைக்கண்டாலே ‘ரசப்பைத்தியம் ராசாமணி’ என்று கிண்டல் செய்யத் துவங்கினார்கள். கூடிய சீக்கிரமே அந்தப்பெயர் வனமெங்கிலும் பிரசித்தி பெற்றது. ராசாமணியின் அம்மாவே ஒருநாள் இவனை, ‘போடா ரசப்பைத்தியம்’ என்று சொல்லிவிட்டார்.

ராசாமணிக்கோ தன் பெயரானது மாறிப்போனது பற்றியெல்லாம் கவலையே இல்லை. அவனுக்குத்தேவை வாரம் முழுதும் ஒருவேளையேனும் ரசம் வேண்டும். ரச வகைகளில் அவன் சாப்பிடாத வகைகளே இல்லை என்று சொல்லும் விதமாக அனைத்துவித ரசங்களையும் உறிஞ்சிக் குடித்துப் பார்த்துவிட்டான். ஆனாலும் தக்காளி ரசத்துக்கு ஒரு மரியாதை வைத்திருந்தான் ராசாமணி. ஏனென்றால் அவன் முதன் முதலாக நாவில் சுவைத்துப்பார்த்த ரசம் தக்காளி ரசம்.

நண்பர்களின் அழைப்பின் பேரில் அவர்கள் வீட்டுக்குச் சென்றால் ராசாமணியின் மூக்கு சமையல்கட்டிலிருந்து வரும் வாசனையையே நுகர்ந்து பார்க்கும். ஏதேனும் வீட்டில் சாப்பிட அமரும் முன்பாகவே நேராக கேட்டுவிடுவான். ‘ரசம் வச்சிருக்கீங்களா அம்மா?” என்று. ‘இல்லையேடா தங்கம்.. புளி கிடைக்கல மார்கெட்டுல” என்று இவனை சமாதானப்படுத்தும் நோக்கில் சொன்னாலும் மனதில் உடனடியாக பெரிய வருத்தமும் ஏமாற்றமும் குடிகொண்டுவிடும்.

‘சரிங்கம்மா.. ரசம் வச்சி வையுங்க.. இன்னொருநாள் உங்க வீட்டுக்கு சாப்பிட வர்றேன்!” என்று சொல்லி கிளம்புவான். ‘அட வெண்டைக்காய் பொரியல், கத்திரிக்கா சாம்பார் எல்லாமும் இருக்குடா செல்லம்.. சாப்டுட்டு போவியாம்!’’ என்று அழைத்தாலும் நிற்கவே மாட்டான். யாருக்குவேணுமாம் கத்திரிக்கா சாம்பார்! யாருக்கு வேணுமாம் வெண்டைக்காய் பொரியல்! ஐ டோண்ட் லைக் இட்!  மனுச மிருகத்துக்கு பசி வந்தாலும் எருக்கலைபால் குடிக்காது!

இப்படியான ராசாமணிக்கு கடந்த நான்கைந்து நாட்களாய் ரசமே குடிக்க முடிக்க முடியவில்லை. வீட்டில் அம்மாவிடம் கேட்டால் புளி இல்லை, தக்காளி இல்லை என்று வெறும் கூடையை காட்டுகிறது. புளிக்கும், தக்காளிக்கும் தட்டுப்பாடு வந்துவிட்டதாம்! என்ன கொடுமைடா சாமி இது! ஒரு மிருகம் ரசம் குடிக்க முடியலையே இந்த வனத்திலே! என்று வேதனையோடு வனத்தில் நடைபோட்டுக்கொண்டு பள்ளிக்குச் சென்றது.

பள்ளியில் குரங்கான் தான் அந்தத் தகவலைச் சொன்னான். ‘நம்ம குட்டிப்புலியான் வீட்டுல அவனோட அண்ணனுக்கு இன்னிக்கி வன மண்டபத்துல கல்யாணமாம் தெரியுமா? என் வீட்டுக்கு அழைப்பு வந்திருக்கிறதா என் அப்பா சொன்னாரு நேத்து நைட்டு. நான் சாயந்திரம் பள்ளி முடிஞ்சதீம் நேரா வன மண்டபத்துக்குத்தான் போறேன். நீயும் வர்றியா? எனக்கு துணைக்கு யாருமில்லே! திரும்பி வர்றப்ப ஒருவேளை இருட்டாயிடும்னு நினைக்கிறேன். ஆனா என் அப்பா அம்மாகூட வந்துடுவேன்! நீயும் எங்களோட வந்துடலாம்டா ராசாமணி!” என்றான்.

“எங்க வீட்டுக்கு அழைப்பு வந்திருக்கான்னு ஒன்னும் தெரியலையே! எங்கப்பாவும் அதைப்பத்தி பேசவேயில்லை. அழைக்காதவங்க விருந்துக்கு நான் எப்படி வர்றது? ஆனா அவங்க கறி விருந்து தான போடுவாங்க.. நீயும் சாப்பிட மாட்டியே.. நானும் சாப்பிட மாட்டேன்!”

“சைவத்துக்கு தனிப்பந்தி போடுவாங்கடா.. அசைவத்துக்கு தனிப்பந்தி போடுவாங்க! அப்படி போடலைன்னாலும் கறி சாப்பிட்டவங்களுக்கு ஜீரணமாக பச்சைப்புளி ரசம் கண்டிப்பா வச்சிருப்பாங்க!”

“பச்சைப்புளி ரசமா? ரொம்ப டேஸ்ட்டா இருக்குமே! குடுவையில ஊத்துவாங்களா? எனக்கு சோறெல்லாம் வேண்டாம்டா.. ஊத்துனாங்கன்னா ஸ்ட்ரா போட்டு சேர்ல உட்கார்ந்துட்டு இழுக்கலாம்.” நான்கைந்து நாட்களாக ரசம் கிட்டா நாக்கு அந்த சுவைக்கு ஏங்கி ஜலவாய் ஊற்றியது.

“நீ வாடா ராசாமணி.. நான் கூட்டிட்டு போறேன் மண்டபத்துக்கு. அழைப்பே உனக்கு இல்லைன்னாலும் நீ குடுவையோட வா! நான் உனக்காக குடுவையோட சமையல் கட்டு போய் சமையல்காரங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டு குடுவை நிரம்ப ரசம் ஊத்திட்டு வந்து மண்டப வாசல்ல குடுக்கேன்!”

“ஐயோ! அது திருட்டுடா.. அப்புறம் மரத்துல மூனு நாளைக்கி உன்னை தலைகீழா கட்டி தொங்க வச்சிடுவாங்க! வேண்டாம்.. என்னோட ரசம் குடிக்கிற ஆசைக்கி நீ திருட்டுப்பட்டம் சுமக்க வேண்டாம். ஆனா நான் உன்கூட வர்றேன் மண்டபத்துக்கு. அப்புறம் பார்ப்போம்!”

அப்படித்தான் ராசாமணி மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான். வரவேற்பில் இவன் பள்ளியில் பயிலும் புலியானும், அவன் உறவினர்களும் கும்பிடு வைத்து வரவேற்றார்கள். பன்னீர் தெளித்தார்கள். குரங்கானோடு எப்படியோ மண்டபத்தினுள் வந்துவிட்டான் ராசாமணி. குரங்கான் இவனை காலி சேரில் அமரவைத்துவிட்டு, ‘நான் போய் என் அப்பாவும் அம்மாவும் வந்திருக்காங்களான்னு பார்த்துட்டு வந்துடறேன்!’ என்று ஓடிப்போனான் கூட்டத்தினுள்.

சிறிது நேரம் யாரையும் அடையாளம் தெரியாமல் திரு திருவென விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தவன் மெதுவாக எழுந்து சமையல்கட்டு பக்கம் மூக்கை உறிஞ்சிக்கொண்டு நடந்தான். விருந்த தட்புடலாக உணவறையில் ஓடிக்கொண்டிருந்தது. கறிக்கொழம்பு வாசனை மண்டபமெங்கும் வீசியது. இவனுக்குப்பிடித்தமான ரசத்தின் வாசனையே அங்கில்லை. மெதுவாக சமையல்கட்டு பக்கம் வந்து சேர்ந்துவிட்டான் ராசாமணி. அவனுக்கு எந்த அண்டாவில் ரசம் இருக்கிறது என்று தெரிந்தாக வேண்டும்.

அப்பொழுதுதான் அங்கே இரண்டு மூத்த சிங்கங்கள் வந்து சேர்ந்தன. தனியாக சமையலறைப்பக்கமாக திருட்டு விழி விழித்தபடி நிற்கும் ராசாமணியிடம் விசாரணை வைத்தார்கள்.

“யாரு நீயி? பொண்ணு ஊட்டு சொந்தமா? மாப்பிள்ளை ஊட்டு சொந்தமா? இங்க என்ன பண்ணுறே? சின்னப்பசங்க இங்கெல்லாம் வரக்கூடாதுன்னு தெரியாதா?” என்று விசாரிக்கவும் ராசாமணிக்கு உதறல் எடுத்துவிட்டது. வாய் பேச முடியாமல் அடைத்துக்கொண்டது போலாகிவிட்டது. ஏதேனும் பதில் சொல்லாவிட்டால் திருட்டுப்பட்டம் கட்டி மரத்தில் தொங்கவிட்டு விடுவார்களே!

“சொல்லுப்பா? யாருப்பா நீயி?”

அந்த சமயம் பார்த்து எலும்பு ரசம் எடுத்துப்போக வந்த கரடியம்மணி ‘பையனைப்போட்டு மெரட்டாதீங்க.. இலைப்போடறதுக்கு எங்க மச்சான் கிட்ட பொடியானை அனுப்பச் சொல்லியிருந்தேன்.. அவரு அனுப்பிச்ச பையனா இருக்கும்.. ஏஞ்சாமி..அப்படித்தான?” என்றதும் மண்டைய ஆட்டினான் ’ஆமா’ என ராசாமணி. தப்பிச்சம்டா சாமி!

அப்புறமென்ன பந்தியில் இலை விரித்து தண்ணீர் தெளிக்கும் பணியை இன்னொரு கரடியானோடு சேர்ந்து இவன் செய்யத் துவங்கிவிட்டான். கூட்டமோ கூட்டம். நான்கைந்து பந்திகள் ஓடிய பிறகுதான் கூட்டம் குறைந்தது. இவனை சாப்பிடச்சொல்வார்தான் யாருமில்லை. மூன்றாவது பந்தியிலேயே இவனைக்கூட்டி வந்த குரங்கான் தன் தந்தையோடு அமர்ந்து சாப்பிட்டு விட்டு போய்விட்டான்.

இலைபோட்டுக்கொண்டிருந்த போது இவனைப்பார்த்து சிரித்த குரங்கான்..’என்னடா இலை போடுற வேலைக்கி சேர்ந்துட்டியா? சம்பளம் எவ்ளோ? ரெண்டு குடுவை ரசம் ஊத்துறதா சொல்லிட்டாங்களாடா? ரசப்பைத்தியமுங்கறது செரியாத்தான் போச்சுடா!” என்று சொல்லி கடுப்பை ஏற்றியிருந்தான்.

ரசம் இருக்குதோ என்னவோ? எல்லோரும் ரசம் நன்றாக இருப்பதாய் கடைசியாக டம்ளரில் வாங்கி வாங்கி குடிப்பதையும் பார்த்துவிட்டான். ஓடிப்போய் ரசப்பக்கெட்டை எடுத்து வாயில் ஊற்றிக்கொள்ளலாமென்ற ஆசையும் அவனுள் எழுந்தது. ரசம்! புளி ரசம்!

பந்திக்கு ஆட்களே இல்லாத சமயம் வெளியே இருளும் கவிழ்ந்திருந்தது. மண்டபத்தில் விளக்குகள் பிரகாசமாய் எரியத்துவங்கின. கரடியம்மிணியும் மற்ற உணவு சப்ளையர்களும் ஒருவழியாய் சாப்பிட அமர்ந்தார்கள். அவர்களுக்கும் இலையை விரித்து தண்ணீர் தெளித்தான் ராசாமணி.

சாப்பாட்டை அவர்களுக்குப் போட ஒரு பெரிய வயதான கரடியார் சாப்பாட்டு பக்கெட்டை கையில் எடுத்தார். ‘கறிக்குழம்பை எடுத்துட்டு வாப்பா!’ என்று இவனுக்கு காதில் சொல்லிவிட்டு சென்றார். இவன் ரசப்பக்கெட்டை ஓடிப்போய்ப் பார்த்தான். அது காலியாய் இருந்தது. கறுக்குழம்பு பக்கெட்டிலும், எலும்புக்குழம்பு பக்கெட்டிலும் பாதிக்கும் மேல் இருந்தது. ரசம் இல்லை! இவனுக்கு உதடு பிதுங்கி அழுகை வந்தது. கட்டுப்படுத்திக்கொண்டு நின்றான்.

“ஏப்பா.. கறிக்கொழம்பு பக்கெட்டை எடுத்துட்டு வாப்பா சீக்கிரம்.. சொன்னது காதுல விழுந்துச்சா இல்லியா?” பெரியவர் குரல் கொடுத்தார்.

“ரசப்பக்கெட்டுல ஒன்னுமில்லீங்களே பெரியவரே!” என்று பதில் குரல் இவன் கொடுத்தான்.

“அட நீ என்னப்பா நான் ஒன்னு சொன்னா நீ ஒன்னு சொல்லீட்டும் கேட்டுட்டும் இருக்கே? ரசம் தான் போன பந்தியிலயே முடிஞ்சி போச்சே.. அது போயிட்டு போவுது.. விருந்தே முடிஞ்சுது இனி ரசம் இருந்தா என்ன இல்லீன்னா என்ன? எடுத்தா கறிக்கொழம்பு பக்கெட்டை!”

ராசாமணிக்கு தலை சுற்றியது. போச்சு! அழுதுகொண்டே சமையலறை கதவின் வழியாக மளாரென ஓட்டமாய் ஓடி வெளி வந்தவன் மண்டபத்தை விட்டே வெளியேறிவிட்டான். வெளியே இருள் சூழ்ந்த வனம் அவனை ’வா’வென்று அழைத்தது. அவனுக்கு இருட்டெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மனதெங்கிலும் ரசம் போச்சே! என்ற வேதனை தான். ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு ராசாமணி ஆலமரப்பள்ளி செல்லும் பாதையில் நடக்கத்துவங்கினான். அவன் மனதில் பலவித யோசனைகள் ஓடத்துவங்கின. ரசம் குடிப்பதற்க்காக இப்படி ஒரு மண்டபத்தை தேடி, அதுவும் அழைப்பே இல்லாத திருமணத்திற்கு நண்பனோடு வந்து சேர்ந்துவிட்டது மனதை என்னவோ செய்தது.

குகைக்குச் சென்றால் அப்பாவும் அம்மாவும் விசாரிப்பார்களே! ‘எங்கே இவ்வளவு நேரம் சென்றிருந்தாய்?’ கேட்பார்கள். என்ன சொல்வது? இந்த மாதிரி நண்பன் அழைத்தான் என்று ரசம் குடிப்பதற்காக மண்டபத்திற்கு சென்றேன்.. தாமதமாகி விட்டதென்று சொன்னால்.. ‘அருமையடா என் செல்லமே! சமர்த்துக்குட்டி’ என்று கொஞ்சுவார்களா என்ன? இன்றிலிருந்து ரசம் என்ற சத்தமே என் காதில் விழக்கூடாது! அதுதான் நல்லது! என்றெல்லாம் யோசித்துக்கொண்டே இருளில் நடந்தான் ராசாமணி.

அன்றிலிருந்து ராசாமணி ரசம் குடிக்கும் பழக்கத்தையே கைவிட்டு விட்டான். அம்மாவுக்கும் நிம்மதியானது!

00

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *