அயல்தேசக் கதை
தமிழில் : தம்பி சீனிவாசன்
பல ஆண்டுகளுக்கு முன்பு மொரீ ஷியஸ் கிராமம் ஒன்றில் ஒரு கிழவன் ஆசையாக ஒரு பசுவை வளர்த்து வந் தான். அதன் பாலே அவனது வருமானம். ஒருநாள் அந்தப் பசு செத்து விட்டது. கிழவன் வருந்தினான். வருமானத்துக்கு வேறு வழி இல்லை.
‘சரி. பசுவின் தோலை விற்று, கிடைப்பதைக் கொண்டு காலம் கழிக்கலாம்” என்று நினைத்தான். செத்த மாட் டின் தோலை உரிப்பதும் அதைப் பக்குவப்படுத்துவதும் கடினமான வேலை. கிழவன் பொறுமையாகத் தோலைப் பிரித்து, அதை உள்புறம் தேய்த்து வெயிலில் காயவைத்தான். காய்ந்ததும் சுருட்டி எடுத்துக் கொண்டு பட்டணத் துக்குப் போனான்.
கடை கடையாக ஏறி இறங்கினான்.ஒருவரும் அந்த மாட்டுத் தோலை வாங்க முன்வரவில்லை. அவ்வளவு ஏன், அது என்ன விலை என்று கூட யாரும் கேட்கவில்லை! கிழவன் வேறு வழியில்லாது அடுத்த நாள் வேறு ஒரு பட்டணத்துக்குப் போனான். அங்கேயும் யாரும் இதைச் சட்டை செய்யவில்லை. இப்படியே பல பட்டணங்களுக்குப் போன கிழவன், யாருமே அதை வாங்க முன்வராததைக் கண்டு அலுத்துப் போனான்.
இனி என்ன செய்வது என்று புரியாமல் வீடு திரும்பிய போது இருட்டு வேளை. காட்டு வழியே வந்த போது பின்னால் குதிரைகள் வரும் குளம்போசை கேட்டது. பயந்து போன கிழவன் அருகே இருந்த ஒரு ஆலமரத்தின் மேலே ஏறி அடர்ந்த கிளைகளின் நடுவே ஒளிந்து கொண்டான்.
சற்று நேரத்தில் நாலைந்து குதிரைகள் வந்து அதே ஆலமரத்தின் கீழே நின்றன. கிழவன் கண்கொட்டாமல் பார்த்தான்.
குதிரையிலிருந்து குதித்தவர்கள் தரையிலே ஒரு துணியை விரித்தார்கள். முதல் ஆள் தனது அங்கியிலிருந்து வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொட்டி னான். அடுத்தடுத்து இப்படியே ஒவ்வொருவரும் செய்யவும் அங்கே ஒரு சிறு குவியலாகத் தங்க வெள்ளி நாணயங்கள் குவிந்தன!
அத்தனை பேரும் திருடர்கள். தாங்கள் கொள்ளையடித்த பணத்தை எடுத்து வந்து தலைவன் முன்னே இவ்வாறு ஒன்றாகக் கொட்டி சமமாகப் பங்கிட்டுக் கொள்வது அவர்கள் வழக் கம். தலைவன் வந்து பணத்தை எண்ணி ஆளுக்கு இவ்வளவு என்று சொல்ல வேண்டும்.
ஆலமரத்தின் – மேலே கிளைகள் நடுவே இருந்த கிழவன் மெதுவாகக் கீழே எட்டிப் பார்த்தான். அவன் கண்பிதுங்கிப் போயிற்று. அவன் வாழ் நாளில் அத்தனை தங்க வெள்ளிக் காசு களை மொத்தமாகப் பார்த்தது கூட இல்லை. அந்த பிரமிப்பில் அவன் உடலெல்லாம் வெடவெடத்தது.அந்த நடுக்கத்தில் அவன் கையிலிருந்த மாட்டுத் தோல் மூட்டை நழுவியது. மரத்தின் கீழே, அமர்ந்திருந்த கொள்ளையர் தலைவன் தலையிலே ‘படேர்’ என்ற சப்தத்துடன் விழுந்தது!
அது நன்கு பதப்படுத்தப்பட்ட தோலானதால் உறுதியாக, வலுவாக, மொடமொடப்பாக இருந்தது. தன் மீது திடீரென்று ஏதோ தாக்கியதும் திடுக்கிட்டு அரண்டு போன தலைவன் ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று தன் குதிரை மீது தாவிப் பறந்தான். அரண்மனை வீரர்கள்தான் தாக்க வந்து விட் டார்கள் என்று அவன் பயந்தான். எதற்கும்.அஞ்சாத தங்கள் தலைவனே பயந்து மாய்ந்து ஓடவும், ஏதோ விபரீதம்தான் நடக்கப் போகிறது. தலைவனே, கொள்ளைப் பணப் பங்கைக் கூட விட்டு விட்டு மிரண்டு ஓடும் போது, நாம் மட்டும் இருப்பது முட்டாள் தனம். நாமும் தப்பி விடுவோம் என்று மற்ற கொள்ளையர்களும் மின்னல் வேகத்தில் தங்கள் குதிரைகளில் ஏறி அந்த இடத்திலிருந்து ஓட்டமாக ஓடி விட்டார்கள்!
எல்லோரும் போனதும் மரத்திலிருந்து இறங்கிய கிழவன் அனாதையாகக் கிடந்த நாணயக் குவியலை ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு வீடு திரும்பினான்.
அந்தக் கிராமத்திலேயே அவனைப் போலப் பணக்காரன் யாரும் இல்லை என்று சொல்லும்படி கிழவன் வசதியான வாழ்க்கையை வாழத் தொடங்கினான். எந்தப் பொருள் வேண்டுமானாலும் பட்டணத்துக்குத்தான் செல்வான். செலவு செய்வதில் அளவுக்கு மீறி தாராளமாக இருந்தான். எட்டுப் பொன் னுக்கு ஏதாவது ஒரு சாமான் வாங்கினால், பத்துப் பொன் காசு நாணயத்தைத் தருவான். “மீதி சில்லறையை நீயே வைத்துக் கொள்” என்பான் தாராள மனத்துடன்!
சோற்றுக்கே தாளம் போட்ட கிழவன், திடீரென்று பெரும் பணக்கரனாகி, தாராளமாகச் செலவும் செய்யும் விவரம் மன்னனின் காதுக்கும் எட்டியது. ஒற்றர்கள் கிழவனைக் கவனிக்க ஆரம்பித்தனர். ‘பரம்பரை பணக்காரர்களும் அரச குடும்பத்தாரும் கூட இவ்வளவு தாராளமாக இருக்க மாட்டார்களே!’ என்று இந்த விவரங்களை மன்னனிடம் தெரிவித்தார்கள்.
மன்னன் பெரிய ராஜா அல்ல. சாதாரணமான ஒரு குறுநில மன்னன்தான். அதுவும் வருமானம் குறைவு. கிழவனின் தாராளமான செலவு பற்றி ஒற்றர்கள் மன்னரிடம் தெரிவித்தனர். அவன் கிழவனுக்குச் சொல்லி அனுப்பினான்.
*’உனக்கு இத்தனை பணம் ஏது?” என்று மன்னன் அதட்டிக் கேட்கவும், “மன்னரே! எனது ஒரே பசுவை இழந்து விட்ட நான், அதன் தோலை உரித்து விற்றுச் சாப்பிடப் பயணமானேன். அப்படிக் கிடைத்ததே இந்தப் பணம்” என்றான் கிழவன்.
”ஒரு பசுத் தோலுக்கு இத்தனை செல்வம் கிடைக்குமா?” என்று ஆச்ச ரியப்பட்ட மன்னன், தன்னிடம் இருந்த நூறு பசுக்களையும் கொல்லச் செய்தான். அவசர அவசரமாக எல்லாவற்றையும் தோலுரித்து பதமாகாததற்கு முன்னதாகவே அவசர அவசரமாக வண்டியில் ஏற்றிக் கடைத் தெருவுக்கு அனுப்பினான். அந்தத் தோலை வாங்குவோர் யாரும் இல்லை. அந்த ஊரிலும் இல்லை. அடுத்த ஊரிலும் இல்லை. வண்டிகளை எடுத்துச் சென்ற வீரர்கள் அலுத்து விட்டார்கள். நன்கு பதமாகாத தோலின் துர்நாற்றம் நாளுக்கு நாள் சகிக்க முடியவில்லை. நெடி வேறு. அதோடு விஷப் புழுக்கள் வேறு சேர்ந்து விட்டன. ஆவது ஆகட்டும் என்று மாட் டுத் தோல் எல்லாவற்றையும் ஆற்றிலே எறிந்து விட்டார்கள்! மன்னனுக்கு இதனால் வருமானம் ஒன்றும் கிட்ட வில்லை. நூறு பசுவும் நஷ்டம்தான்.
வீரர்கள் வந்து நடந்த விஷயத்தைச் சொன்னதும் நூறு பசுக்களை நஷ்டமாக இழந்ததை எண்ணி மன்னன் வருத்தப் பட்டான். இவ்வளவு மட்டமான யோசனை தனக்குத் தோன்றக் காரண மான கிழவனை மன்னன் மறக்கவில்லை. அவனைத் தேடிப் பிடித்து நன்கு விசாரிக்க எண்ணம் கொண்டான். யாரையும் அனுப்பாமல் தானே குதிரை ஏறிக் கிழவன் வாழும் இடத் திற்கு விரைந்தான். வீரர்கள் பின் தொடர்ந்தனர்.
மன்னனும் அவன் ஆட்களும் வருவதை தூர இருந்தே பார்த்து விட்ட கிழவன் பயந்து பதைபதைத்தான். ஆனாலும் தந்திரசாலியான அவன், தனது பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் விடு விடுவென்று விநோதமான காரியம் ஒன்றைச் செய்தான். வீட்டு அடுப்பிலே கொதித்துக் கொண்டிருந்த அவியல் குழம்புப் பாத்திரத்தை எடுத்து முற்றத்திலே தரையில் வைத்தான். ஒரு மாட்டுச் சாட்டையைக் கையிலே பிடித்து, பாத்திரத்தை அடி அடி என்று அடிக்க ஆரம்பித்தான்.
மன்னனும் அவனது வீரர்களும் உள்ளே வந்த வேளையில் இந்தக்காட்சி யைப் பார்த்துத் திகைத்தனர்.
“நீ என்ன செய்கிறாய்?” என்று மன்னன் கேட்டான்.

“சமையல் ஆகிறது மன்னவா. இந்த அவியல் குழம்பு கொதித்தால் சமையல் தயார். அதற்குத்தான் சாட்டையால் அடிக்கிறேன். சாட்டையால் அடிக்க அடிக்கக் குழம்பு கொதிக்கும்” என்றான் கிழவன்.
கிழவன் கூறிய பதிலைக் கேட்ட தும் அப்பாவி மன்னனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. இதோ கண்ணெதிரே குழம்பு கொதிக்கிறதே, அடுப்பு இல்லாமல் விறகு இல்லாமல் சாட்டை வீச்சுக்குக் கட்டுப்பட்டு குழம்பு கொதிக்கிறதே! இவ்வளவு வல்லமை உள்ள கிழவனை எப்படிக் கோபிப்பது? பேசாமல் நாமும் நாளை முதல் இவனைப் போலவே அடுப்புச் செலவு இல்லாமல் சமையல் செய்வோம் என்று திரும்பி விட்டான்.
அரண்மனை சமையற்காரரை அழைத்து பெரிய பாத்திரத்திலே குழம்பு வைக்கச் சொல்லி, அதை அடுப்பிலே ஏற்றாமல், சாட்டை அடியாலே கொதிக்க வைக்கச் சொன்னான். மன்னனின் கட்டளையாயிற்றே! மீற முடி யுமா? குழம்பிப் போன சமையற்காரர் நம்பிக்கையே இன்றி சாட்டையால் வேக வேகமாக அடித்த அடியில், குழம்புப் பாத்திரம் கவிழ்ந்து குழம்பு கீழே கொட்டியதுதான் மிச்சம்!
நஷ்டம் ஒரு பக்கம். அவமானம் ஒரு பக்கம். மன்னன் ஆலோசனை செய்தான். கிழவன் மீது கோபமான கோபம் வந்தது! நாலு தடியர்களை அழைத்து, கிழவனைப் பிடித்து வரச் சொன்னான்.
நாலு தடியர்களும் கிழவனைப் பிடித்தார்கள். குண்டுக் கட்டாகக் கட்டினார்கள். அப்படியும் கிழவன் திமிறியதால் கிழவனின் கைகால்களைக்கட்டி விட்டு ஒரு கோணியிலே இறக்கினார்கள். நாலு தடியர்களில் ஒரு தடியன் அந்தக் கோணி மூட்டையை முதுகிலே சுமக்க நாலு பேரும் நடந்தனர். வழியிலே ஒரு பானக்கடை.. மூட்டை சுமந்த தடியன், ‘இந்தக் கிழவனைச் சுமந்து சுமந்து முதுகுவலி கண்டுபோச்சு. வாங்க ஏதாவது குடித்து விட்டு மறுபடி கிளம்பலாம்” என்றான். மூட்டையைத் தெருவோரம் சுவரிலே சாத்தி விட்டு நாலு பேரும் உள்ளே போனார்கள்.
அவர்கள் மன்னனின் அடியாட்கள் என்று தெரிந்தும் கடைக்காரன் அவர்களுக்கு பானகத்துடன் டிபனும் தாராளமாகக் கொடுத்தான். இஷ்டத் திற்கு சாப்பிட்டு பானகத்தைக் குடித்து விட்டுத் திரும்ப நேரமாயிற்று.
இதனிடையே தெருவோரம் சுவ ரிலே சாத்தி வைத்த மூட்டைக்குள் இருந்த தந்திரக் கிழவன் தப்பிக்க வழி தேடினான். வெளியே என்ன நடக்கிறது என்று கவனித்தபடி இருந்தான்.
ஒரு ஆட்டிடையன் ‘தானானா’ பாடிக் கொண்டு வந்தான். கிழவன் மூட் டைக்குள் இருந்தபடி ஆடு மேய்ப்பவன் வருவதை ஊகித்து விட்டான். உடனே மூட்டைக்குள்ளிருந்து “நான் மாட்டேன். மன்னன் மகளை மணக்க மாட் டேன். அவள் சிறியவள். நான் கிழவன்” என்று உரக்கச் சொன்னான். திரும்பத் திரும்ப அதையே சொன்னான்.
ஆடு மேய்ப்பவன் மூட்டை அருகே வந்து இந்த விநோத வேண்டுகோளைக் கேட்டான். ”உள்ளே யார்?” என்றான். “முதலில் கோணியை அவிழ்த்துப் பார்!” என்றான் தந்திரக்காரக் கிழவன்.
ஆடு மேய்ப்பவன் கோணிக் கயிறை அவிழ்த்தான். கிழவன் வெளியே வந்து, “தம்பி! நாலு பேர் மன்னனின் ஆட்கள் என்னைக் கட்டி விட்டார்கள். மன்னர் மகளை மணக்க வேண்டுமாம். என்னால் முடியாது என்றால் பலாத்காரமாக மூட்டை கட்டி அழைத்துப் போகிறார்கள். என்ன செய்வது? நல்லவேளை நீ இளைஞனாக இருக்கிறாய். நீதான் மன்னன் மகளை மணந்து கொள்ளேன்?” என்றான். அவன் மகிழ்ச்சி யுடன் சம்மதிக்கவே ஆடு மேய்ப்பவனைக் கோணியுள் கட்டினான் கிழவன். அவனது முந்நூறு ஆடுகளையும் தனது ஊருக்கு ஒட்டிப்போய்விட்டான்!
தின்று பானம் குடித்து விட்டு வந்த நாலு தடியர்களும் சாலையிலே சுவரோரம் கிடந்த மூட்டையைத் தூக்கிக் கொண்டு மன்னரிடம் கிளம்பினார்கள். “மூட்டை இப்போ அதிகமா கனக்கிறதே!” என்றான் தடியன். ஒரு “போடா போ. நன்றாக மூச்சு முட்டத் தின்றாயே. அதனால்தான் கனமாகத் தோணுது” என் றனர் அவன் சகாக்கள். மன்னன் இவர்களைப் பார்த்தவுடனே ஒன்றும் விசாரியாமல், “அந்தக் கிழவனை மூட்டையோடு அப்படியே ஆற்றில் தூக்கிப் போட்டு விடுங்கள்!” என்று கட்டளையிட்டான். அவ்வாறே அவர்களும்அந்த மூட்டையை நதியிலே எறிந்து விட்டனர்.
இரண்டு நாள் கழித்து கிழவன் ஆடுகளை ஒட்டிக் கொண்டு போவதை ஒரு தடியன் பார்த்து விட்டான். வியப்பும் பயமும் கொண்டான். “மூட்டையோடு, தண்ணீரிலே மூழ்கியவன் மறுபடி உயிரோடு வந்து விட்டானே! எப்படி?” என்று மன்னனிடமே சென்று கேட்டனர்.
மன்னனும் கிழவனை அழைத்து விசாரித்தான்.
“ஒன்றுமில்லை. நீங்கள் நதியிலே என்னை வீசிப் போட்டது நல்லதாயிற்று. இந்த மாதம் இந்த நதியிலே மூழ்கினால் நதி தேவதை முந்நூறு ஆடுகளைத் தருவது வழக்கமாம்!” என்றான் கிழவன் அமைதியாக.
“அப்படியானால் என்னையும் மூட்டைகட்டிநதியிலே வீசுங்கள்!”என் றான் அசட்டு மன்னன்!
கட்டளை நிறைவேற்றப்பட்டது!
00
நன்றி :- ஜனவரி 93, கோகுலம்

