மூலம் :- ஆஸ்கார் ஓயில்டு
தமிழ்ச்சுருக்கம்: எச். கிருஷ்ணமுர்த்தி
குளிர் காலம். இரவு நேரம். பனிக் காற்று வீசிற்று. இரண்டு ஏழை விறகு வெட்டிகள் காட்டிலிருந்து விறகு வெட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தகுந்த உடைகள் இல்லாததால் அவர்கள் கைகால்கள் விரைத்து விடுவது போல் தோன்றியது. மிகுந்த கஷ்டப்பட்டு அவர்கள் காட் டைக் கடந்தனர். தொலைவிலிருந்த அவர்களுடைய கிராமத்திலிருந்து வெளிச்சம் தெரிந்தது.
அவர்கள் இருவரும் மெதுவாக நடந்து செல்கையில் எதிரே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஆகாயத்திலிருந்து ஒரு நட்சத்திரம் ஒரு புதரின் பின்னால் விழுவதை அவர்கள் கவனித்தனர். நட்சத்திரம் கீழே விழுந்தால், விழுந்த இடத்தில் ஒரு பானை – நிறையத் தங்கம் கிடைக்கும் என்று அவர்கள் கேள்விப் பட்டிருந்தனர். ஆகவே, தங்கத்தை அள்ளும் பரபரப்பில் அவர்கள் அந்த இடத்துக்கு விரைந்தனர்.
ஒரு மரத்தின் அடியில் வெள்ளி நட்சத்திரங்கள் பதித்த பொன் நிறக் ‘கோட் ஒன்றை அவர்கள் கண்டனர். அந்தக் கோட்டை அவசரம் அவசரமாகப் பிரித்துப் பார்த்தனர். அதில் தங்கமும் இல்லை வெள்ளியும் இல்லை. ஒரு சின்னக் குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.
“நமக்கே சாப்பாட்டுக்கு வழியில்லை. இன்னொரு குழந்தையையும் எடுத்துப் போய் என்ன செய்யப் போகிறோம்? ஆகவே, இதை இங்கேயே விட்டு விடலாம்” என்று தங்கம் கிடைக்காத ஏமாற்றத்தோடு ஒருவன் சொன்னான்.
”சே, சே! சின்னக் குழந்தை, பாவம்! இங்கேயே இருந்தால் குளிரில் செத்துவிடும். நான் ஏழைதான். எனக்கும் குழந்தைகள் உண்டு. இந்தக் குழந்தையை எடுத்துப் போகிறேன்… என் மனைவியிடம் கொடுத்து வளர்க்கச் சொல்கிறேன்” என்று கூறி, அந்தப் பொன் நிறக் கோட்டால் குழந்தை யைப் போர்த்தினான். அதை வீட் டுக்கு எடுத்துப் போனான். வறுமையால் கஷ்டப்பட்டாலும், அவனுடைய மனைவி இரக்க சுபாவம் உள்ளவள். அவள் நட்சத்திரக் குழந்தையின் நிலைக்கு இரங்கினாள். அதை அன்போடு பாதுகாத்தாள்.
ஏழை விறகு வெட்டியின் குழந்தைகளுடன் நட்சத்திரக் குழந்தையும் வளர்ந்தது. உணவு, உடை, விளையாட்டு எல்லாவற்றையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டது. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நட்சத்திரக் குழந்தை உள்ளத்தைக் கவரும் வகையில் அழகான சிறுவனாக வளர்ந்தது. கிராமவாசிகள் அதன் அழகைக் கண்டு அதிசயித்தனர்.
அந்தோ! அந்த அபூர்வ அழகுத் தோற்றம் நட்சத்திரக் குழந்தைக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக அவனுக்கு அதிக கர்வத்தைக் கொடுத்தது. அவனை கல்நெஞ்சன் ஆக்கியது. அவன் ஏழை விறகு வெட்டியின் குழந்தையையும், கிராமத்திலிருந்த மற்றக் குழந்தைகளையும் ‘கிண்டலும், கேலியும் செய்தான். அவர்களை வெறுத்தான். தன்னை ஒரு தலைவனாகவும், அவர்களை அடிமைகளாகவும் பாவித்தான். ஆயினும், அவனுடைய அழகையும் திறமைகளையும் கண்டு அதிசயித்த ஏழைச் சிறுவர்கள் அவனையே தலைவனாக, ஏற்றுக்கொண்டனர். மேலும் ஊரிலிருந்த ஊனமுற்றோரையும், பிச்சைக்காரர்களையும் அவன் பரிகாசம் செய்தான்; துன்புறுத்தினான். மிருகங்களையும், பறவைகளையும் கூட அவன் விட்டுவைக்கவில்லை. அவற்றையும் கொடுமைப்படுத்தினான். அவனுக்கு அழகானவர்களை மட்டுமே பிடித்தது. குளத்து நீரில் தெரிந்த தனது அழகான உருவத்தைப் பார்த்துப்பார்த்து ரசித்தான்.
விறகு வெட்டியும், அவன் மனைவியும் நட்சத்திரக் குழந்தையைப் பார்த்து, “ஏழை எளியவர்களை ஏன் இப்படிக் கொடுமைப்படுத்துகிறாய்? அன்று நாங்களும் கொடுமையாக இருந்திருந்தால் இன்று நீ பிழைத்திருக்க முடியுமா?” என்று கேட்டனர். மத குருவும் ஒரு நாள் அவனை அழைத்து, “குழந்தாய்! கடவுள் படைத்த உயிர்களுக்குத் தீங்கிழைக்காதே. அன்பாயிரு” என்று உபதேசித்தார். ஆனால், அவன் எல்லோரிடமும் சிரித்து மழுப்பி விட்டான். மனம் திருந்தவேயில்லை.
ஒரு நாள் அந்தக் கிராமத்துக்கு ஒரு வயதான பிச்சைக்காரி வந்தாள். களைத்துச் சுருங்கின முகமும், கந்தல் ஆடையும், அழுக்குத் தோற்றமும் கொண்டு ஒரு மரத்தடியில் உட்கார்ந் தாள். நட்சத்திரக் குழந்தை அவளைப் பார்த்து விட்டான். உடனே மற்ற சிறுவர்களை அழைத்தான். “வாங்கடா அந்த அழுக்குப் பிச்சைக்காரியை அடித்துத் துரத்துவோம்” என்று சொல்லி, வாயில் வந்தபடி அவளைத் திட்டினான். அவள் மீது கற்களை வீசினான்.
“யாராவது உதவி செய்யுங்ளேன்” என்று கதறிக் கொண்டே பிச்சைக்காரி கீழே விழுந்தாள். அவளுடைய கதறல் ஏழை விறகு வெட்டியின் காதில் விழுந்தது. அவன் ஓடி வந்தான். விறகு வெட்டிக்கும், நட் சத்திரக் குழந்தைக்கும் வாக்குவாதம் நடந்தது.
”என் விஷயத்தில் தலையிடாதே!’ என்றான் நட்சத்திரக் குழந்தை.
”அன்று உன்னைக் காட்டில் காப்பாற்றியிருக்கிறேன். ஆகவே, தலையிடும் உரிமை எனக்கு உண்டு” என்று சொல்லி, அவன் பிச்சைக்காரியை வீட் டுக்கு அழைத்துப் போய் உபசரித்தான்.
*நீ இந்தக் குழந்தையைக் காட்டில் கண்டெடுத்ததாகச் சொன்னாயே அது, பத்து வருஷங்களுக்கு முன்னால் இதே நாளில்தானே?” என்று பிச்சைக்காரி கேட்டாள்.
”ஆமாம், ஆமாம்”-விறகுவெட்டி பதிலளித்தான்.
“அப்போது இவன் ஒரு மஞ்சள் நிற மாலை அணிந்து, பொன்னிறக் கோட் டைப் போர்த்தி யிருந்தான் அல்லவா?'” ”ஆமாம்”, என்று சொல்லிக் கொண்டே விறகு வெட்டி அந்தப் பொருள்களை உள்ளே இருந்து கொண்டு வந்து காண்பித்தான்.
“ஓ! இவன் என்னுடைய குழந்தை தான். நான் இவனைக் காட்டில் தொலைத்து விட்டேன். அன்று முதல் தேடித் திரிகிறேன். அவனைக் கூப்பிடுங்கள்” என்றாள் பிச்சைக்காரி.
நட்சத்திரக் குழந்தை வீதியிலிருந்து வரவழைக்கப்பட்டான்.
“நான்தான் உன்னுடைய அம்மா. வாடா கண்ணா! காணாமல் போன உன்னைக் கண்டுபிடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன், தெரியுமா? உன் அன்புக்காக ஏங்குகிறேன், வா” என்று சொல்லிக் கொண்டே இரு கைகளையும் நீட்டினாள்.
”உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? நான் உன்னுடைய குழந்தை இல்லை. நட்சத்திரக் குழந்தை. உண்மையாகவே நீ என் அம்மாவாக இருந்தால்கூட, அவலட்சணமான உன்னைக் கண்டாலே எனக்குப் பிடிக்க வில்லை. அவமானமாக இருக்கிறது. இங்கே நிற்காதே, ஓடிப்போ!” என்று சொல்லி விரட்டினான்.
“ஒரே ஒரு முத்தம் கொடுடா, கண்ணா! போய்விடுகிறேன்” என்று அவள் கெஞ்சினாள்.
“அவலட்சணமும் அழுக்குமான உனக்கா முத்தம்! முடியாது’ போ!’ அதைவிட ஒரு தவளைக்கோ, பாம்புக்கோ முத்தம் கொடுக்கலாம்” என்று அவன் பதிலளித்தான். பிச்சைக்காரி அழுதுகொண்டே காட்டுக்குப் போனாள்.
நட்சத்திரக் குழந்தை விளையாடுவதற்காக நண்பர்களிடம் போனான். ஆனால் அவர்கள், “உன்னோடு விளையாட மாட்டோம். நீ ஒரு தவளையைப் போல அழுக்கு. ஒரு பாம்பைப் போல அருவருப்பு. உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை. திரும்பிப் போ!’ என்று அவனைக் கேலி செய்தனர். நட்சத்திரக் குழந்தைக்கு அது ஆச்சரியமாக இருந்தது. குளத்திற்குச் சென்று தண்ணீரில் தன் உருவத்தைப் பார்த்தான். அவர்கள் கேலி செய்ததைப் போல நிஜமாகவே அவனுடைய உருவம் அருவருப்பாக மாறியிருந்தது!
அழகை இழந்துவிட்ட நட்சத்திரக் குழந்தைக்குத் தன்னையே பிடிக்கவில்லை.’ கீழே புரண்டு அழுதான்; கதறினான்; கண்ணீர் விட்டான். “என் அம்மாவை நான் கொடுமைப் படுத்தினேன். அவளைத் துரத்தினேன். என் கெட்டகுணத்திற்குத்தான் இந்த தண்டனை கிடைத்திருக்கிறது. நான் இப்போதே போய் அம்மாவைத் தேடுவேன். மன்னிப்புக் கேட்பேன், என்று தீர்மானித்தான்.
”அம்மா! அம்மா! நீ எங்கே இருக்கிறாய்? இங்கே வா அம்மா! என்னை மன்னித்துவிடு!” என்று சுதறிக் கொண்டே காடு மேடெல்லாம் சுற்றினான். ஊர் ஊராகத் திரிந்தான். எதிரில் வந்த சிறுவர்கள் அவனைக் கேலி செய்து துரத்தினர். எல்லோரும் அவனை ஒரு பைத்தியக்காரன் என்று நினைத்தனர். ஒருவராவது உதவி செய்யவில்லை.
மூன்று வருஷங்கள் நட்சத்திரக் குழந்தை தன் அம்மாவைத் தேடித் திரிந்தான். அதுவரையில் அவன் உலசுத்திடம் அன்பு செலுத்தாததால் உலகமும் அவனிடம் அன்பு செலுத்தவில்லை. இப்போது அவன் மனம் திருந்தியிருந்தான். பழைய செயல்களுக்காக வருத்தப்பட்டான்.

வழியில் அவன் ஒரு நகர எல்லையை அடைந்தான். உள்ளே நுழைந்ததும், காவல்காரர்கள் அவனைப் பிடித்தனர். ஒரு வழிப்போக்கனிடம் அவளை அடிமையாக விற்று விட்டனர். அந்த வழிப்போக்கன் ஒரு கெட்ட மந்திரவாதி. அவன் நட்சத்திரக் குழந்தையைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்றான்; சிறையில் அடைத்தான்; கொடுமைப்படுத்தினான்.
ஒரு நாள் அந்த மந்திரவாதி நட்சத்திரக் குழந்தையை நோக்கி, “இந்த ஊருக்கு அடுத்த காட்டில் மூன்று பெரிய தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவை வெள்ளை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். இன்று முதல் மூன்று நாட்களுக்கு நீ காலையில் புறப்பட்டுச் செல்ல வேண்டும். தினமும் ஒரு தங்கக் கட்டியைத் தேடி எடுத்து மாலைக்குள் திரும்பி வரவேண்டும். தங்கத்தைக் கொண்டு வராவிட்டால் தண்டனை கிடைக்கும். அப்புறம் நீ வருத்தப் படுவாய்” என்று கூறிப் பயங்கர மாகச் சிரித்தான்.
நட்சத்திரக் குழந்தை நாள் முழு தும் காட்டில் அலைந்து தேடினான். தங்கக் கட்டி கிடைக்கவில்லை. காட்டில் ஒரு வேடன் வைத்த பொறியில் அகப்பட்டு அவதியுறும் ஒரு முயலைக் கண்டான். அதன்மீது இரக்கப்பட்டு அதை விடுவித்தான். முயல் அவனுக்கு நன்றி தெரிவித்ததோடு, வெள்ளைத் தங்கக் கட்டி இருக்கும் மரப்பொந் தையும் காட்டி உதவியது.
தங்கக் கட்டியை எடுத்து வரும் வழியில் அவன் ஒரு குஷ்டரோகியைச் சந்தித்தான். குஷ்டரோகி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் நட்சத்திரக் குழந்தையைப் பார்த்து, ‘தம்பி!’ ரொம்பப் பசி. உதவி செய்யேன்!’ என்று கெஞ்சினான். “என் கையில் இந்தத் தங்கக் கட்டி மட்டும்தான் இருக்கிறது. இதை வைத்துக்கொள். எஜமானர் என்னிடம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை” என்று சொல்லி இரக்கப்பட்டு, அதைக் கொடுத்தான். வெறுங் கையோடு மாளிகைக்குத் திரும்பினான். மந்திரவாதி அவனை மிகவும் கோபித் துக்கொண்டான்.
இரண்டாம் நாளும் முறையே மஞ்சள், சிவப்பு நிறத் தங்கக் கட்டிகள் முயலின் உதவியால் கிடைத்தன. ஆனால், அவற்றையும் அந்தப் பிச் சைக்காரக் குஷ்டரோகி மீது இரக்கப்பட்டு அவனுக்கே கொடுத்து விட்டான். மூன்றாம் நாள் அவ்வாறு தங்கத்தைக் கொடுத்துவிட்டு நட்சத்திரக் குழந்தை நகர எல்லைக்குள் நுழைந் தான். காவல்காரர்கள் அவனை வணங்கி வரவேற்றனர். திரளாகக் கூடியிருந்த மக்கள், நீங்கள்தான் எங்களுடைய அழகான இளவரசர். உங்களுக்காகத்தான் வெகு நாட் களாக நாங்கள் காத்திருக்கிறோம். வாருங்கள்” என்று சொல்லி அழைத்தனர்.
‘“நான் அழகானவனும் இல்லை; இளவரசனும் இல்லை. என்னை விட்டு விடுங்கள்” என்றான் நட்சத்திரக் குழந்தை. உடனே ஒரு காவல்காரன் பளபளக்கும் கேடயத்தை நீட்டினான். நட்சத்திரக் குழந்தை அதில் தெரிந்த தன்னுடைய அழகான உருவத்தைக் கண்டு அதிசயித்தான்.கண்களில் அன்பும் கருணையும் பொங்க, முன்னைவிட அழகாக அவன் மாறியிருந்தான்.
கூட்டத்திலிருந்த பிரபுக்கள், “இதே தினத்தில் ஓர் அழகான இளவரசன் வருவான். அவனால் நாடு நலம் பெறும் என்று முன்னோர்கள் எழுதி வைத் துள்ளனர்” என்று கூறி, அவனுக்கு முடிசூட்ட முன்வந்தனர். அதற்குள் அந்தக் கூட்டத்தின் நடுவே நின்றிருந்த பிச்சைக்காரியான அம்மாவையும், அருகில் அந்தக் குஷ்டரோகியையும் கண்டான்.
ஓடிச்சென்று அம்மாவின் கால்களில் விழுந்து, தன்னை மன்னிக்கும்படி கதறினான்.
“மகனே, எழுந்திரு” என்றாள், அம்மா. எழுந்ததும் அவனுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. பிச்சைக்காரி ராணியாகவும், குஷ்டரோகி ராஜாவாகவும் மாறிக் காட்சி அளித்தனர்! அவர்கள்தான் தன் பெற்றோர்கள் என்று அறிந்து மகிழ்ச்சியடைந்தான். அவர்கள் அவனை அன்போடு அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனாக முடி சூட்டினர். கெட்ட மந்திரவாதி ஊரை விட்டு வெளியேற்றப்பட்டான். நட்சத்திரக் குழந்தை மக்களுக்குப் பல நன்மை களைச் செய்து இனிதே வாழ்ந்தான்.
(Oscar Wilde எழுதிய “The Star Child’ என்ற ஆங்கிலக் கதையின் சுருக்கமே இது.)
நன்றி :- கோகுலம்.ஜனவரி-85
00

