மூலம்: ஏ.ஏ. மில்னி

தமிழ்ச்சுருக்கம்: எச்.கிருஷ்ணமுர்த்தி

1- வின்னியும் டைகரும்

கிறிஸ்தொபர் ராபின் என்பவன் ஒரு சீமானுடைய செல்லப் பிள்ளை. இங்கிலாந்தில் வசித்து வந்தான். அவர்களுடைய மாளிகை மிகவும் பெரியது. மாளிகைக்கு அருகிலேயே அவர்களுக்குச் சொந்தமான ஒரு காடு  இருந்தது. அடர்ந்த காடு. ராபினுடைய அப்பா அவனுக்கு நிறையப்   பொம்மை மிருகங்களும், பறவைகளும் வாங்கிக் கொடுத்திருந்தார்.  அந்தப் பொம்மைகளுடன் ராபின் நாள் முழுவதும் காட்டிலேயே விளை யாடினான். காட்டில் அவர்கள் அடித்த கொட்டம் கொஞ்ச நஞ்சமல்ல! ராபின் தன் பொம்மைகளை மிகவும் நேசித்தான்!

ராபினிடம் என்னென்ன பொம்மைகள் இருந்தன தெரியுமா? முதலாவதாக அவன் ஆசையோடு விரும்பிய வின்னி என்னும் கரடிக் குட்டி. அது குள்ளமாகக் குண்டாகப் பஞ்சு திணிக்கப்பட்டு, மெத்து மெத்தென்று அழகாக இருந்தது. அடுத்து வின்னிக்கு மிக நெருங்கிய சிநேகிதனான பிக்லெட் என்னும் சின்னஞ்சிறு பன்றிக் குட்டி. அதற்கு எதைப் பார்த்தாலும் பயம்.மேலும் கங்கா என்னும் தாயும், ரூ என்னும் குட்டியுமாக இரண்டு கங்காருக்கள், டைகர் என் னும் புலிக்குட்டி, முயல், கழுதை, ஆந்தை ஆகிய எல்லோரும் சிறுவன் ராபினுடைய ஒரு உலகத்தில் மிகவும் முக்கியமானவர்கள். ஒவ்வொரு மிருகத்திற்கும், பறவைக்கும் காட்டில்தனித்தனியே அழகான வீடு இருந்தது.

ஒருநாள் பளிச்சென்று வெய்யில் அடித்தது. பறவைகளின் பாட்டும் வண்டுகளின் ரீங்காரமும், வண்ணத்துப் பூச்சிகளின் வர்ண ஜாலங்களுமாகக் காடே களைகட்டி இருந்தது. ஜன்னல் வழியாக வெய்யில் நுழைந்ததும் வின்னி துயில் நீங்கி எழுந்தது. சோம்பல் முறித்து விட்டு, ஒரு சிவப்புச் சட்டையைப் போட்டுக் கொண்டு நேராகச் சமையலறைக்குள் புகுந்தது. பெரிய பெரிய தேன் ஜாடிகள் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. ஒரு தேன் ஜாடியை எடுத்து மேசை மீது வைத்தது. ருசி பார்த்து நிதானமாகக் குடித்தது. பிறகு காலாறக் காட்டில் நடைபோட்டது.

மர நிழலில் கிடந்த ஒரு கட்டை மேல் உட்கார்ந்து கொண்டு, ‘அடுத்து என்ன செய்யலாம்’ என யோசித்தது. புயலைப்போல பேகத்துடன் டைகர் அந்தப்பக்கம் வந்தது. அது கறுப்பு, ஆரஞ்சு பட்டை போட்ட பைஜாமா அணிந்திருந்தது. வின்னியை மோதிக் கீழே தள்ளி அதன்மேல் முன்னங்கால்களை ஊன்றிக்கொண்டு கட கடவென்று சிரித்தது. ‘ஹலோ நலமா? நான் தான் டைகர்! துள்ளித் துள்ளி நிறையத் தேகப் பயிற்சி செய்ய வேண்டும். வருகிறேன்” என்று சொல்லி க் கொண்டே மறைந்தது. வின்னிக்குத் தலையைச் சுற்றியது.

ஊதாச் சட்டையும், .பச்சைத் துண்டும் அணிந்து பன்றிக் குட்டி பாதை ஓரமாகப் போய்க் கொண்டிருந்தது. துள்ளி வந்த டைகர் அதை இடித்துத் தள்ளிவிட்டு முயலின் வீட்டை நோக்கி பறந்தது. தோட்டத்தில் இருந்த காய் கனிகளை பறித்து கைவண்டியில் வைத்துக் கவனமாக இழுத்து வந்த து முயல்.

மின்னலைப் போலத் தாவியது டைகர். அடுத்த கணம் முயல் கீழே விழுந்து கிடந்தது. கைவண்டி உருண்டு ஓடியது. காய்கனிகள் நாலாபுறமும் சிதறின. அழகான தோட்டம் அலங் கோலமாகக் காட்சி அளித்தது. முய லுக்குக் கோபமாக வந்தது. “தோட் டத்தையே அழித்து விட்டாயே, பாவி! என்றைக்குத்தான் நீ துள்ளுவதை நிறுத்தப் போகிறாயோ!”என்று ஆத்திரத்தோடு பேசியது முயல்.

”புலியின் அதிசயம் தெரியாதா?

பூப்போல் பாதம் ஸ்பிரிங்  ரப்பர்

தலைகீழ்க் கரணம் போட்டிடுவேன்!

தாவி நாலும் பாய்ந்திடுவேன்!”

– என்று உற்சாகமாகப் பாடிக்கொண்டே டைகர் துள்ளிச் சென்றது.

எப்படியாவது டைகரின் கொட் டத்தை அடக்குவதென்று முயல் தீர்மானித்தது. ஆகவே, வின்னி, பன்றிக் குட்டி இருவரையும் அழைத்து கூட்டம் போட்டது. முயல் தலைமை வகித்து, “டைகர் நமக்கு மிகவும் நெருங்கிய நண்பன்தான். இருந்தாலும் அது அளவுக்கு மீறித் தொந்தரவு தருகிறது. அது துள்ளுவதை நாம் நிறுத்தியாக வேண்டும்,’ என்று பேசியது. ‘ஆமாம், ஆமாம்!” என்று பன்றிக் குட்டி மெல்லிய குரலில் ஆமோதித்தது. “நீ என்ன நினைக்கிறாய்?” முயல் வின்னியைக் கேட்டது. வின்னி தூங்கி வழிந்தது. பன்றிக்குட்டி அதை ஓர் இடி இடித்தது. “என்ன. என்ன? மறுபடியும் சொல்லு. என் காதில் பஞ்சு அடைத்துக் கொண்டிருக்கிறது. கேட்க வில்லை” என்று வின்னி . பதிலளித்தது. .. “டைகரின் தொந்தரவை நிறுத்த எனக்கு யோசனை தோன்றுகிறது. காட்டின் ஒரு புதிய பகுதிக்கு தள்ளி நாம் பயணம் போய் டைகரை அங்கேயே விட்டுவிடுவோம்.வழிதெரி யாமல் அது திண்டாடட்டும்!” என்று முயல் ஆலோசனை கூறியது. பன்றிக் குட்டியும், பாதித் தூக்கத்தில் இருந்த வின்னியும் அதற்கு இசைந்தன.

மறுநாள் காலை. ஒரே மூடுபனி, குளிர். எதிரே வருபவரின் உருவம் தெரியவில்லை. முயல், வின்னி, பன்றிக் குட்டி, டைகர் ஆகிய நான்கும் காட்டை ஆராய்வதற்காகப் பயணம் . துவக்கின. டிருந்ததுவின்னி வயிறு நிறையத் தேனைக் குடித்துவிட்டு பகல் உணவுக்காகவும் கையில் கொஞ்சம் எடுத்துக் கொண்டது..டைகர் துள்ளித்துள்ளி வெகுதூரம் சென்று விட்டது. மற்ற மூன்றும் பின்னால் வந்தன.

‘டைகர் வெகு தூரம் சென்று விட்டது. இதுதான் நல்ல சமயம், நாம் இந்த மரப்பொந்தில் ஒளிந்து கொள்ளலாம்’, என்று சொல்லிக் கொண்டே ஒரு பழைய மரக்கட்டை யின் பொந்தில் முயல் ஒளிந்துகொண் டது. வின்னியும், பன்றிக்குட்டியும் அதைப் பின்பற்றின.

வின்னியால் வெகுநேரம் அந்த அசௌகர்யமான இடத்தில் இருக்க முடியவில்லை. வயிறு பசிக்கவே, வின்னி பொந்துக்குள் இருந்து தலையை வெளியே நீட்டியது. அப்போது, ‘“ஹலோ, ஹலோ! எங்கு இருக்கிறீர்கள்?” என்று மூடு பனியிலிருந்து டைகரின் குரல் கேட்டது. வின்னி தலையை உள்ளே இழுத்தது. டைகரும் அதே கட்டையின் மீது தாவிச் சிறிது நேரம் காத்திருந்தது. நண்பர்களின் பதில் கிடைக்காததால், அது மறுபடி வேறு திசைக்குத் தாவியது.

மறைவிடத்திலிருந்து முயல்,வின்னி, பன்றிக்குட்டி மூன்றும் வெளியே வந்தன. சுற்றிச் சுற்றி வந்தாலும் மறுபடியும் அவை ஆரம்பித்த அந்த மணல் படுக்கைக்கே வந்து சேர்ந்தன. மூடுபனியின் காரணமாக வழி தெரியவில்லை. “நீங்கள் இங்கேயே இருங்கள். நான் சரியான வழியைக் கண்டுபிடித்து வருகிறேன்’ என்று உரைத்து முயல் கிளம்பியது, வின்னியும், பன்றிக்குட்டி யும் காத்திருந்தன.

முயல் திரும்பவே இல்லை. வின்னிக்குக் கடுமையாகப் பசித்தது. வீட்டில் நிறையத் தேன் இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே அது பன்றிக்குட்டி யையும் அழைத்துக் கொண்டுவீட்டை நோக்கி நடை போட்டது.

எதிரே யார் வந்தது தெரியுமா? துள்ளித்திரிந்த டைகர் தான்! அது வழக்கம் போல நண்பர்கள் இருவரையும் இடித்துக் கீழே தள்ளி விட்டு, “எங்கே போய் விட்டீர்கள்? எத்தனை நேரமாகத் தேடுகிறேன்?” என்று செல்லமாகக் கேட்டது.

”வீட்டுக்கு வழி தேடுகிறோம்!” என்று சொல்லி வின்னி தப்பித்துக் கொண்டது.

”முயலின் திட்டம் பலிக்கவில்லை போலிருக்கிறதே!” என்று கிசுகிசுத் தது பன்றிக் குட்டி.

”எங்கே அந்த முயல்? ஒருவேளை மூடுபனியில் வழி தவறிப் போயிருக்கும்,”  என்று சொல்லி டைகர் மறைந்தது.

முயலுக்கு உண்மையிலேயே வழி தவறிப்போய் விட்டது. காட்டில் வந்த வினோதமான சப்தங்களைக் கேட்டு அது பயத்து நடுங்கியது. பசியும், சோர்வும் அதை ஆட்கொண் ட.ன. திடீரென மூடுபனியிலிருந்து முளைத்த டைகரும் களைத்துப் போன முபலும் மோதிக் கொண்டன. முயல் சரிந்தது. “நீ காணாமல் போகவில் லையா?” என்று முயல் கேட்டது.

“புலி எப்போதுமே வழி தவறாது! என் வாலைப் பிடித்துக் கொள். உன்னைப் பத்திரமாக வீட்டுக்கு அழைத்துப் போகிறேன்!” என்று கம்பீரமாகக் கூறியது டைகர். முய லுக்குத் துக்கமும், அவமானமும், தாங்க முடியவில்லை. பேசாமல் டைக ரின் வாலைப் பற்றியது. முயலை இழுத்துக் கொண்டே டைகர் வீடு நோக்கித் தாவியது.

முயலின் திட்டம் தோற்றது. டைகரின் துள்ளல் அதிகரித்தது. பனிக் காலம். காடு முழுவதும் வெண்பனிப் போர்வை. கங்காவின் குட்டியான ரூ நீல ஸ்வெட்டரும், ஸ்கார்ஃபும் அணிந்திருந்தது. தன் தோழனான டைகருக்காக அது தபால் பெட்டியின் மேல் ஏறிக் காத்திருந்தது. நாலு கால் பாய்ச்சலில் வந்த டைகர் ரூவை இடித்துக் கீழே தள்ளிவிட்டு, “ஹலோ! விளையாடப் போகலாமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டது. ”ரூவைக் கவனமாகப் பார்த்துக் கொள், சீக்கிரம் திரும்பி விடுங்கள்”,- என்றது கங்கா.

டைகரும், ரூவும் குதித்துக் குதித்துச் சென்றன. வழியில் முயலைச் சந்தித்தன. தன் வீட்டிற்கு அருகிலிருந்த உறைந்து போன குளத்தில் முயல் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தது. “உனக்குச் சறுக்கு விளையாட்டுத்தெரியுமோ?” ரூ கேட்டது.

“புலிக்குத் தெரியாத ஆட்டமும் உண்டா என்ன?” என்று சொல்லி கொண்டே, டைகர் சறுக்கு மைதானத்திற்குத் தாவியது.சுழன்று சுழன்று வெகு நேரம் ஆடியது. கடைசியில் நிலை தடுமாறி அது முயலை வந்தது. முயல் ஒதுங்க முயன்றது. அதற்குள் எதிர் எதிராகச் சறுக்கி வந்த டைகரும், வெளி முயலும் மோதின. டைகர் பாதையோரத்தில் போய் விழுந்தது.முயல் ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டுத் திறந்த கதவின் வழியாகத் தன் வீட்டிற்குள் பொத்தென்று விழுந்தது. வீட்டிலிருந்த மண்பாண்டங்கள் சிதறி உருண்டன.

சறுக்கு மைதானத்தை விட்டு டைகரும் ரூவும் பாதை வழியாகச் சென்றன. “சறுக்கு ஆட்டம் பிடிக்க வில்லை!” என்று டைகர் கூறியது.

”வேறு என்ன பிடிக்கும்? மரம் ஏறத் தெரியுமா?”’ ரூ கேட்டது.

“புலிக்குத் தெரியாத வித்தையும் உண்டா? ஏறலாம் வா” என்று பதிலளித்தது. டைகர் ரூவை முதுகில் ஏற்றிக் கொண்டது. அருகிலிருந்த ஓர் உயரமான மரத்தின் மேல் கிடுகிடு வென ஏறி உச்சியை அடைந்தது. திடீரெனக் காற்று வீசியது. மரம் ஆடியது. டைகர் கிளையைக் கெட்டி யாகப் பிடித்துக் கொண்டது. பேசா மல் தரையிலேயே இருந்திருக்கலாமே எண்ணியது. ஆனால் டைகரின் வாலைப் பிடித்துக் கொண்டு உற்சாக மாக ஊஞ்சல் ஆடிய ரூ, பிடி தளர்ந்த தால் கீழே இருந்த கிளையின் மேல் விழுந்தது. டைகர் எட்டிப் பார்த்.தது. தரை பாதாளத்தில் இருப்பது  போலத் தோன்றியது. டைகருக்குத் தலையைச் சுற்றியது. பயத்தால் அது கிளையை மேலும் இறுகப் பற்றியது.

மரத்தின் உச்சியிலிருந்த டைகரும், ரூவும் காற்று அடிக்கும் திசையில் ஊசலாடின. பனியில் பதிந்திருந்த சுவடுகளைப் பார்த்துக் கொண்டே வின்னியும், பன்றிக் குட்டியும் அந்தப் பகுதிக்கு வந்தன. துஷ்ட மிருகங்கள் நடந்த அடையாளமோ எனப் பயந்து கொண்டே அவை முன்னேறின. ”ஹலோ! ஹலோ!”, என்று ரூவின் குரல் கேட்டது. வின்னியும், பன்றிக் குட்டியும் விரைந்தன. “டைகர்  உச்சியில் மாட்டிக் கொண்டு விட்டது. இறங்க முடியவில்லை. ராபினைக் கூப்பிடுங்கள். கொஞ்சம் உதவி செய்யுங்கள்”, என்று ரூ கூவியது.

செய்தி பறந்தது. ராபின், முயல், கங்கா ஆகியோர் விரைந்தனர். டைக ரின் நிலைக்கு நண்பர்கள் இரக்கப்பட் டனர். “நன்றாக வேண்டும். இப் போது அதனால் துள்ள முடியாது, இல்லையா?” என்று சொல்லி முயல் சந்தோஷப்பட்டது.

ராபின் தன் கோட்டைக் கழற்றினான். ஆளுக்கு ஒரு மூலையாக அதை மரத்தடியில் பிடித்துக் கொண்டனர். கிளையை விட்ட ரூ நேராகக் கோட் டில் விழுந்து அம்மாவின் கைக்குத் தாவியது. “நீயும் அதேபோல் குதி”, என்று ராபின் டைகரிடம் சொன் னான். ‘“எனக்குப் பயம். நான் மாட் டேன்” என்றது டைகர்.

‘அது குதிக்கவே வேண்டாம். உச்சியிலேயே இருக்கட்டும்’, என்று உரைத்தது முயல்.

”எப்படியாவது நான் தரையில் இறங்கினால் போதும். எனக்குப்புத்தி வந்தது. இனிமேல் துள்ளவே மாட்டேன். சத்தியம்” என்று கூறி டைகர் சத்தியம் செய்தது.

’குதிக்க முடியா விட்டால்பிடியைத் தளர விடு. மெதுவாகச் சறுக்கி வர லாம்’, என்றான். ராபின். அவ்வாறே செய்து டைகர் இறங்கியது. எல்லோரும் வீட்டுக்கு நடந்தனர்.

‘சத்தியம் செய்திருக்கிறாய். இனி மேல் துள்ளக் கூடாது’ என்று முயல் நினைவுபடுத்தியது.

பழைய பொலிவையும், உற்சாகத்தையும் இழந்த டைகர், முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வேகமாக நடந் தது. டைகரின் குறும்பும், கிண்டலும், கேலியும் எங்கே `போயின என்றே தெரியவில்லை. “எப்படி இருந்த டைகர் எப்படி ஆகிவிட்டது!” என்று நண்பர்கள் பரிதாபப்பட்டனர்.

”எனக்குத் துள்ளித்திரியும் டைகரைத் தான் பிடிக்கும்”, என்றது ரூ. மற்றவர்கள் அதை ஒரு மனதாக ஆமோதித்தனர். உடனே “புலியின் அதிசயம் தெரியாதா…?” என்று பாடிக் கொண்டே டைகர் துள்ளத் தொடங்கியது. டைகரின் நண்பர் களும் பாட்டுக்கு  ஏற்றாற் போல்  துள்ளித் துள்ளி ஆடினர்.

2. வின்னியும் தேன் கூடும்

வின்னியின் வீடு ஒரு பழைய மரப் பொந்தில் இருந்தது. அழைக் கும் மணி, கதவு, ஜன்னல் எல்லாம் காணப்பட்டன. ஜன்னலுக்கு வெளியே பூந்தோட்டம். மலர்களையும் தேனீக்களையும் வின்னிக்கு மிகவும் பிடிக்கும். அவைகள் தானே ருசியான தேனைத் தருகின்றன! இலை உதிர் காலம். வின்னி வாசலில் தீமூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தது.

கடிகாரம் மணி அடித்தது. ”மணி என்று அடித்தால் என்ன செய்ய வேண்டும்?’  என்று வின்னி யோசித்தது. அதுதான் மக்கு கரடியாயிற்றே. ஒன்றுமே ஞாபகத்துக்கு வரவில்லை. உள்ளே போய்க் கண்ணாடியின் முன் னால் நின்றது. அதில் தெரிந்த உரு வத்தைப் பார்த்து, ”உனக்கு ஞாபகம் வருகிறதா?” என்று கேட்டது.  ‘ உருவம் இல்லை’ என்று தலையை அசைத்தது. இளைப்பதற்காகத் தேகப் பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் திடீரெனத் தோன்றியது. நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து, கைகளை நீட்டி வின்னி தேகப்பயிற்சி செய்தது. தேகப் பயிற்சி முடிவதற்குள் வின்னிக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது.

சமையல் அறையிலிருந்த அலமாரி யின் கதவைத் திறந்தது. தேன்,பால், சாக்லேட் எல்லாம் வரிசையாக இருந்தன. ஒரு தேன் குடத்தை எடுத்து மெதுவாக மேசைமேல் வைத் தது. அருகில் உட்கார்ந்து கொண்டு குடத்தின் உள்ளே கையை விட்டது. குடம் காலி! குடத்தை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்டது. அடியில் இருந்த தேன் வின்னியின் மூகத்தில் வழிந்தது. தேனீக்கள் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து வின்னியின் முகத்தை மொய்க்கத் தொடங்கின. சிறகடித்து வெளியே பறந்து போகும் தேனீக்களை வின்னி பார்த்தது.

“தேனீயைப் போல் சிறகிருந்தால்

திசைகள் தோறும் பறந்திடுவேன்!

வானை முட்டும் மரமெனினும்

வாரித் தேனை உண்டிடுவேன்!”

என்று பாடிக் கொண்டே தேனீக்களைப் பின்பற்றி வீட்டை விட்டு வெளியேறியது. தேனீக்கள் ஒரு மரத்தின் உச்சியில் புகுந்து மறைந்தன. வின்னி மரத்தில் ஏற முயன்றது. கீழே இருந்த முட் புதரில் விழுந்து உடம்பெல்லாம் காயம். முட்களைத் தட்டிக்கொண்டே ராபினைத் தேடிச் சென்றது.

கழுதைக்கு வால் ஓடிந்து போயிருந்தது. ராபின் சீர்செய்து கொண் டிருந்தான். கங்கா, ரூ. ஆந்தை, ஆகியவை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தன. வின்னி ராபினை அணுகி வணக்கம் கூறியது. ‘”வின்னி! உனக்கு என்ன வேணும்?” ராபின் ஆசை யோடு கேட்டான். ராபினுடைய விளை யாட்டு அறையின் வாசலில் பொம்மைகள் சிதறிக் கிடந்தன. மூலையில் ஒரு சைக்கிள். அதன் பிடியில் . ஒரு நீல நிற பலூன் பறந்து கொண்டிருந் தது. வின்னி அதைப் பார்த்ததும், ‘ஒரு பலூன் தர முடியுமா?” என்று கேட்டது.

எதற்கு பலூன்?”

”அதோ அந்த மரத்தின் மேல் தேன் இருக்கிறது. பறந்து சென்று தேன் குடிக்கப் போகிறேன்”, என்று மற்றவர்களுடைய காதில் விழாதபடி ரகசியமாகச் சொன்னது ‘வின்னி’.

“தேனீக்கள் உன்னைக் கொட்டுமே?”

“ஒரு தந்திரம் செய்கிறேன். நன்றாகச் சேற்றில் புரண்டு ஒரு கறுப்பு மேகத்தைப் போல வேஷம் போட்டுக் கொள்வேன். அவை ஏமாறும்” என்று சொல்லிச் சேற்றில் புரண்டு விட்டு வந்தது.

ராபின் சிரித்துக் கொண்டே பலூனைக் கொடுத்து, வின்னியைமரத்தின் பக்கம் தள்ளினான். வின்னி விர்ரென்று பறந்தது. மரத்தின் உச்சியிலிருந்த தேன் கூட்டை நெருங்கிக் கையை உள்ளே விட்டது. கையை வெளியே எடுத்த போது , கைநிறையத் தேனும், ஈக்களும் இருந்தன.. அப் படியே வாயில் போட்டுக் கொண் டது. தொண்டை கரகரத்தது. இருமல் வந்தது. வாய், காது, மூக்கு வழி யாகத் தேனீக்கள் வெளியே வந்து வின்னியைச் சூழ்ந்தன.

வின்னிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வின்னி ஒவ்வொரு முறை தேனடைக்குள் கையை விடும் போதும், தேனீக்கள் கூட்டம் கூட்ட மாக வெளியே வந்தன. வின்னியை வட்டமிட்டுக் கொட்டத் தொடங்கின. வின்னிக்கு வலி தாங்க முடிய வில்லை. அதே சமயத்தில் பலூனில் காற்று குறையத் தொடங்கியது. ‘ஓ’வென்று கதறிக் கொண்டே வின்னி கீழே விழுந்தது. கீழே இருந்த ராபின் வின்னியைத் தாங்கிக் கொண் டான். தேனீக்கள் இருவரையும் நோக்கிப் படையெடுத்தன. ராபின் வின்னியைத் தூக்கிக் கொண்டு ஓடி னான். சேற்றில் இறங்கிக் கையிலிருந்த குடையை விரித்தான். தேனீக்கள் அவர்களைக் கடந்து நேராகப் பறந்து போயின. இருவரும் சேற்றைப் பூசிக் கொண்டு வீட்டை அடைந்தனர்.

காலையிலிருந்து வின்னி ஒன்றும் சாப்பிடவில்லை. நிமிடத்திற்கு நிமிடம் அதற்குப் பசி அதிகரித்தது. ‘”தேன் சாப்பிட வேண்டுமே, அதற்கு என்ன வழி!” என்று யோசித்தது. உடனே, விருந்தினர்களை உபசரிக்கும் முயலின் நினைவு வந்தது.

சாப்பாட்டு மேசை மீது ரொட்டி, தேன், தேநீர் ஆகியவற்றை வைத்துக் கொண்டு அப்போது தான் முயல் சாப்பிட உட்கார்ந்தது. முயலைக் கூப் பிட்டுக் கொண்டே வின்னி சிறிய சுதவின் வழியாக உள்ளே நுழைந்தது. வின்னியின் குரலைக் கேட்டதுமே முயல், அவசர அவசரமாகத் தேன் குடத்தை ஒளித்து வைத்தது.

தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக் காட்டாமல் முயல் வின்னியைச் சாப்பிட அழைத்தது. வின்னி உற்சாகமாகப் பாடிக் கொண்டே மேசையில் அமர்ந்தது. முயல் வின்னிக்குக் கொஞ் சம் ரொட்டியும் தேனும் கொடுத்தது.

”இன்னும் கொஞ்சம் தேன் கொடேன்”, வின்னி கேட்டது.

“நீயே எடுத்துக் கொள்”, என்று சொல்லி முயல் தேன் குடத்தை நகர்த்தியது.

உடனே வின்னி அந்தக் குடத்தைக் கையில் எடுத்து மடக் மடக்கென்று தேனைக் குடித்தது. அது காலி ஆன தும் அடுத்த குடம். அப்புறம் இன் னொரு குடம். இப்படிப் பல தேன் குடங்களை உருட்டியது வின்னி.கடைசி யில் ஏப்பம் விட்டுக் கொண்டே முய லுக்கு நன்றி சொல்லியது. முகத்தில் வழியும் தேனைத் துடைத்துக்கொண்டு கதவில் வாசல் பக்கம் சென்றது. நுழைந்ததும் வின்னியால் முன்னுக்கும் போக முடியவில்லை! பின்னுக்கும் வர முடியவில்லை! முயல் அதை வெளியே தள்ள முயன்றது. பலிக்கவில்லை.

‘அதிகமாகச் சாப்பிட்டதனால் வந்த கஷ்டம்!” என்றது முயல்.

”இல்லை. இல்லை. கதவு சின்னதாக இருப்பதால் வந்த கஷ்டம்!” என்று பதிலளித்தது வின்னி!

வின்னியை விடுவிக்கும் முயற்சியில் முயல் தோற்றது. ஆகவே, ராபினை அழைத்து வரக் கொல்லைப் புறக்கதவின் வழியாகப் பாய்ந்தது. அந்தச் சமயத்தில் வின்னியின் முன்னே ஆந்தை தோன்றியது. ”யாரது? வின்னியா? என்ன தம்பி வசமாக மாட்டிக் கொண்டாயா?” என்று கேலி செய்தது.

 ”அதெல்லாம் ஒன்றும் இல்லை. சும்மாப் பொழுது போக்காக உட்,கார்ந்திருக்கிறேன்”  என்று சொல்லி வின்னி ஒரு பாட்டை முணுமுணுத்தது.

”சும்மா கதை விடாதே, தம்பி! பெரிய திறமைசாலி வந்தால் கூட  உன்னை விடுவிப்பது கஷ்டம்”, என் றது ஆந்தை.

முயல் ராபினை அழைத்து வந்தது. ”இதோ! உன்னை விடுவிக்கிறேன்- வின்னி! கவலைப்படாதே!” என்று சொல்லிக் கொண்டே ராபின் செயலில் இறங்கினான். வின்னியின் தலையும் பாதி உடம்பும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. பின் பகுதி வீட்டுக்குள் இருந்தது. உள்ளேயிருந்து முயல் வின்னியைத் தள்ளியது. வெளியேயிருந்து ராபின் அதை இழுத் தான். வின்னி அசையவில்லை.

”வின்னி! உன்னை வெளியேற்ற ஒரே வழிதான் இருக்கிறது. ஒரு நீ இளைக்க வேண்டும்”, என்றான் ராபின்.

*அதற்கு எவ்வளவு நாள் ஆகும்’? வின்னி கேட்டது.

”நாளோ, வாரமோ, மாதமோ – யாருக்குத் தெரியும்? நீ இளைக்க வேண்டும். அவ்வளவுதான்!” ராபின் பதிலளித்தான்.

வின்னியின் பின்புறம் எதிரில் இருந்த கண்ணாடியில் பிரதிபலித்தது. ‘மாதக் கணக்கில் நான் இதையே சகித்துக் கொண்டிருக்க வேண்டுமா? சே! இதற்கு ஒரு வழி செய்தாக வேண்டும்”, என்று முயல் யோசித்தது. முடிவில் வின்னியின் முதுகை ஒரு அழகான துணியால் மூடி அதன் மீது ஒரு பூத்தொட்டியை வைத்தது.

கங்காவும் ரூவும் வின்னியைப் பார்த்து ஒரு பூச்செண்டைப் பரிசாக அளித்தன. வாசனை தாங்க முடிய வில்லை. வின்னி முகர்ந்து பார்த்தது. உடனே ‘அச்சூ’ என்று பெரிதாகத் தும்மியது. அந்த அதிர்ச்சியில் வின்னியின் முதுகிலிருந்த துணியும், பூத் தொட்டியும் பறந்தன!

பாவம் வின்னி! இரவு பகலாக அந்தத் துவாரத்திலேயே சிக்கியிருந் தது. பகலெல்லாம், “உடம்பு இளைக்காதா, நான் விடுதலை அடைய மாட்டேனா?” என்று ஏங்கியது. இரவில் தன் கவலைகளை மறந்து அது குறட்டை விட்டு உறங்கியது. மறு நாள் காலையில் எழுந்திருப்பது போல வும், நன்றாகச் சாப்பிட்டுத் தேன் குடிப்பதைப் போலவும் இனிய கனவு களைக் கண்டது. ஆனால் வின்னி இளைக் கும் வரை கண்டிப்பாக அதற்கு உணவு மறுக்கப்பட்டது.

ஒருநாள் மாலை ஒரு நில அணில் வின்னியிடம் வந்தது. (Gopher) அணிலின் கையில் பெரிய உணவுப் பொட்டலமும், ஒரு ஜாடியும் இருந் தன.

”அதில் என்ன? சிற்றுண்டியா?” வின்னி ஆசையோடு கேட்டது.

”எனக்கு இரவு ஷிஃட்டு வேலை. ஆகவே, கையோடு உணவையும் எடுத்துப் போகிறேன். இப்போதுநான் சாப்பிடும் நேரம் தான்”, என்று சொல்லி அணில் பொட்டலத்தைப் பிரித்தது. அதில் ரொட்டி, கஸ் டார்டு, மீன் வறுவல் ஆகியவைகளும் ஜாடி நிறையத் தேனும் இருந்தன. அணில் ஒவ்வொரு பொருளாக எடுத்து வின்னியின் கண் முன்னாலேயே ‘லபக், லபக்’கென்று விழுங்கிக் கொண்டிருந் தது. கடைசியில் அது தேன் ஜாடியைத் திறந்ததும் வின்னியால் பர பரப்பை அடக்க முடியவில்லை. ”ஆகா, தேன், தேன்!” என்று உரக்கக் கூவி, ”ருசி பார்க்க வேண்டும். கொஞ்சம் கொடேன்!” என்று கேட்டது வின்னி.

வின்னியின் கூச்சலைக் கேட்டு முயல் ஓடிவந்தது. அணிலையும், தேன் ஜாடியையும் பார்த்ததும் முயலுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சரேலெனத் தேன் ஜாடியைப் பிடுங்கியது.

“நான் ருசி பார்க்கத் தானே கேட் டேன்”, என்றது வின்னி.

”உனக்குப் பதில் நானே. அதை ருசி பார்க்கிறேன். ஒரு சொட்டுத் தேன் கூட உனக்குக் கிடையாது. ஞாபகமிருக்கட்டும்”, என்றுசொல்லித் தேன் ஜாடியுடன் முயல் வீட்டுக்குள் மறைந்தது. அணிலுக்கு ஒரே திகைப்பு!

முயல் ஒரு பலகையைக் கொண்டு வந்து வின்னிக்குப் பக்கத்தில் மாட்டி யது. அதில் ”இந்தக் கரடிக் குட்டிக்கு உணவுக் கொடுக்காதீர்” என்று எழுதப் பட்டிருந்தது. “நீ ஏதாவது சாப்பிட் டால் அப்புறம் இளைக்கவே மாட்டாய். ஜாக்கிரதை!” என்று எச்ச ரித்துச் சென்றது முயல்,

“வின்னி எப்போது விலகும் நான் எப்போது வாசலை உபயோகப்படுத்து வேன்”, என்று முயல் கவலைப்பட்டது. வழக்கம் போல் ஒரு நாள் வின்னியைத் தள்ளும் போது அது சிறிது அசைந்து கொடுத்தது. முயலுக்கு ஒரே குஷி. ராபினுக்குச் செய்தி அனுப்பியது.

காடு முழுவதும் செய்தி பரவியது. வின்னியின் விடுதலையைக் கொண்டாடுவதற்காக நண்பர்கள் ஒன்று கூடினர். எல்லோருடைய முகத்திலும் ஆனந்தம். “டம் டம் டமர டம்” என்று ராபின் டமாரத்தை அடித்து வந்தான். கங்கா, ரூ, ஆந்தை, கழுதை, நில அணில், டைகர் ஆகியவை ராபினுடைய தலைமையில் உற்சாகமாகப் பாடிக் கொண்டே அணிவகுத்து நடந்தன.

வின்னியின் கைகள் இரண்டையும் ராபின் பிடித்துக் கொண்டான். ராபினுக்குப் பின்னால் டைகர். ஆந்தை, கங்கா, கழுதை, ரூ. அணில் ஆகி யவை ஒன்றன்பின் ஒன்றாகத் தயாராக நின்றன. கயிறு இழுக்கும். போட்டியைப் போல உரக்கப் பாடிக் கொண்டே அவை வின்னியை இழுத் தன.உள்ளேயிருந்து முயல் வின்னியைத் தள்ளியது.

தன்னுடைய முழுச் சக்தியையும் திரட்டி முயல் ஒரு தள்ளுத் தள்ளியது. பீரங்கியிலிருந்து குண்டு பறப்பதைப் போலக் கதவிலிருந்து வின்னி விர்ரென்று ஆகாயத்தில் கிளம்பியது. அது எங்கே இறங்கியது தெரியுமா? மரத்தின் மேலிருந்த ஒரு பொந்தில் வின்னி நுழைந்து சிக்கிக் கொண்டது!

”வின்னி! மறுபடியும் மாட்டிக் கொண்டு விட்டாயா? பாவம்!” என்று கழுதை இரக்கப்பட்டது.

“பயப்படாதே, வின்னி! நாங்கள் உன்னை இறக்கி விடுகிறோம்”, என்/ ராபின் ஆறுதல் சொன்னான்.

மரத்தில் சிக்கிய வின்னிக்கு அதிர்ஷ்டமடித்தது. பொந்திலிருந்த தேன் கூட்டில் தேன் நிரம்பி வழிந் தது. தேனீக்கள் கூட்டை. விட்டுப் போயிருந்தன. ஆகவே, நண்பர்களின் பேச்சை வின்னி காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. பல நாள் பட்டி னிக்குப் பிறகு கிடைத்த அருமையான தேனை வின்னி ஆசையோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

000

A.A. MILNE  எழுதிய WINNIE- – THE – POOH என்ற ஆங்கிலக் கதை சுருக்கமே இது.

வின்னி எனும் கரடிக்குட்டி அக் 74 கோகுலம்

00

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *