-ராணி கணேஷ்

“பாஞ்சாலி நிக்கறா…”

“பாஞ்சாலி பின்னாடியே வாரா…”

“பாஞ்சாலி இங்கிலிசு எல்லாம் பேசுதா”

இப்படித்தான் சிறுவர் சிறுமியர் எல்லோரும் மணிக்கூண்டைக் கடக்கையில் பேசிக்கொள்வார்கள் பாஞ்சாலியைப் பற்றி. பாஞ்சாலி… யார் அவள்? பாஞ்சாலி ஒரு பைத்தியக்காரி. அப்படித்தான் எல்லோராலும் அழைக்கப்படுகிறாள்.

அவளை மணிக்கூண்டின் அருகிலோ, செந்தில்வேல் தியேட்டர் பக்கமோ, பாளையங்கோட்டை ரோட்டிலோ, குளக்கரையிலோ பார்க்கலாம். கூட்டத்தோடு நிற்கையில் அவளை வேடிக்கைப் பார்க்கும் பிள்ளைகள் பள்ளி விட்டு தனியாக நடந்து வரும் பொழுது அவளை ஏறெடுத்துப் பார்க்கவே பயப்படுவார்கள். எதாவது செய்துவிடுவாளோ என்ற அச்சத்தின் காரணமாய் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே சாலையின் மறுபுறத்துக்கு அவசரமாய் விரைந்து சென்றுவிடுவார்கள். அங்கு எல்லா பிள்ளைகளுமே அப்படித்தான். பாஞ்சாலி அருகே போகப் பயப்படுவார்கள்.

மணிக்கூண்டு அருகே இருக்கும் டீக்கடைக்காரர் தான் ஒன்றுமே பேசாமல் டீயைக்கொண்டு வந்து கொடுப்பார். அவளும் மணிக்கூண்டின் மூட்டில் சாய்ந்தவாறு அமர்ந்து மெதுவாக டீயை உறிஞ்சி குடிப்பாள். சமயத்தில் யாராவது ஒரு பன் ரொட்டியை வாங்கி கொடுப்பார்கள். மறுக்காமல் வாங்கிக் கொள்வாள். சிலநேரம் சிறு துணிமூட்டை அவளோடு இருக்கும். சிலநேரம் ஒரு வேப்பங்குச்சியை கையில் வைத்திருப்பாள். அப்படி சமயத்தில் தான் அடித்து விடுவாளோ என்று சிறுவர்கள் அஞ்சுவார்கள். ஆனால் அவள் யாரையும் அடித்து யாரும் இதுவரையிலும் பார்க்கவில்லை.

ஒருநாள் பள்ளி விட்டு வரும் வழியில் குச்சியுடன் பாஞ்சாலி நடந்து கொண்டிருந்தாள். அவளை வேகமாய் கடந்து சென்று விடலாம் என்ற ரவியின் நினைப்பை செயலாக்கவிடாமல் செய்தது அவள் கைகளில் வைத்திருந்த பெரிய சவுக்கு மரத்தின் குச்சி. யாராவது நடந்தால் அவர்களோடு சேர்ந்து நடந்து விடலாம் என்ற நினைப்பு நினைப்பாகவே மிதக்க மிக மெதுவாக அவள் பின்னால் சிறிது இடைவெளி விட்டே நடந்தான் ரவி. ஒருவழியாக மணிக்கூண்டு அருகே இருக்கும் அம்மன் கோவில் பக்கமாய் அவள் செல்ல ரவி வேகமாக நடந்து தெருவை அடைந்தான். வீட்டிற்குள் நுழையும் போதே 

“பைத்தியம்னா அடிக்குமா ஆச்சி?” என்று தன் ஆச்சியைக் கேட்டான் ரவி.

“ஆத்தாடி பைத்தியங்க கிட்டக்க எல்லாம் போயிராத. நான் சின்னப்பிள்ளைல இப்படி ஒரு பைத்தியத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன்”

“அப்படியா…எப்படி ஆச்சி? எப்படி தப்பிச்சே அப்புறம்?”

“தப்பிக்கவா? அது என்ன உடாம புடிச்சி வைச்சிக்கிட்டு…. எங்க அம்மை புடிச்சி இழுக்கா… உடுவேணாங்கு”

“அதுன்னா ஆம்பளையா, பொம்பளையா ஆச்சி”

“பொம்பளை தான். அவா புடிச்சபுடியானது… இப்ப நினைச்சா கூட வலிக்குது போ. அப்படி ஒரு முரட்டு கெட்டா புடிச்சிக்கிட்டா. தெருவுல நின்னவுகளும் இழுக்காக அவ விடல என்ன”

“பொறவு…”

“அந்தாக்குல எங்க குட்டியப்பா கம்ப எடுத்துட்டு வந்து அடி விளாசி போட்டாரு, பாவமா தான் இருந்துச்சு. அதுக்கு புத்தி இல்லல்லா நாம சொல்லுதது எங்க புரியும். அவ பிள்ளனு நெனைச்சாலோ இல்லன்னா அவ கண்ணுக்கு என்னனு தெரிஞ்சுதோ அப்படி இறுக்கமா புடிச்சிக்கிட்டா, நானும் கையத்திருவிப் பாக்கேன் முடியல. முடியாம ஒரே கூப்பாடு போட்டு அழுதுட்டேன். எங்க அம்மையும் சத்தம் போட்டு ஆள சேத்துட்டா. இல்லனா அன்னைக்கே என்ன கழுத்த திருகிப் போட்டாலும் போட்டுருப்பா”

“புள்ளனு நினைக்கவா அப்படி கொல்லுவாளாங்கும்?”

“அவ கண்ணுக்கு எப்படி தெரிஞ்சுதுனு என்னத்த கண்டோம். எங்க அம்மை சொல்லுவா மனநோய்காரவுக கண்ணுக்கு மனுசம் சிங்கம் கெனக்கவும், பூதம் கெனக்கவும் தெரியுமாம். அப்படி கண்டும் புரிஞ்சிக்கிட்டு அடிச்சாளோ என்னமோ”

“அடிச்சாளாங்கும்”

“ஆமாலே… அவ அடிக்கையில தான் நான் கத்தி கூப்பாடு போட்டேன், எங்க அம்மை வரவும் என்ன ஆவிசேத்து கெட்டிப்பிடிச்சிக்கிட்டா. உடமாட்டேனுட்டா”

“பொறவு என்னாச்சு. அவள அடிச்சதும் உட்டுட்டு போய்ட்டாளா?”

“அதுவோ வலி தாங்கும், எங்க உட்டா, இன்னும் இறுக்கமா புடிச்சிக்கிட்டா. நாலஞ்சு பேரு சேந்து இழுத்து அவகிட்ட இருந்து என்ன பிரிச்சாவோ. அன்னைக்கு காய்ச்சல்ல விழுந்து பொழைச்சது மறுபொழப்பு போ. எங்க அம்மை தம்பி டாக்டர்ட்ட கூட்டுப் போயி ஊசிபோட்டா. மேலுக்கு சுகமாவ ஒரு வாரம் ஆச்சு”.

“ம்ம்ம்ம் பாஞ்சாலி யா உன்ன புடிச்ச பைத்தியம்?”

“ஆரு அது பாஞ்சாலி?”

“இங்கன ரோட்டோட அலைவாள்ளா ஒரு கிறுக்கச்சி, கிழிஞ்ச சேலையும், சட்டையுமா அவதான்”

“ச்சே ச்சே.. அவா இல்ல. அய்யோ பாவம் அவ. அவ குடுத்தத தின்னுட்டு அவ பாட்டுக்கு அலையுதா”

“அப்போ அவ நல்ல பைத்தியாமாச்சி? ஒன்னும் செய்ய மாட்டாளா?”

“அது நம்ம சொல்ல முடியுமா? அதுகளுக்கு திடீருன்னு வேகம் வந்துரும். அமாவாசை பெளர்ணமின்னா ஒருபடியா வந்துரும் அதுகளுக்கு. பேய்புடிச்சவுகளுக்கு வந்தாப்புல. அது ஏன் அவ கிட்ட போனும் உனக்கு, மணிக்கூண்டு சுத்தி வரனுமாங்கும்? எஸ் டி ஆர் மண்டபத்து வழியா வரவேண்டியது தானே”

“அங்கன மதுக்கடை இருக்குன்னு அம்மாதான் சாந்திநகர் வழியா வரச்சொன்னா”

“அந்த தெருவுக்கு ஏம்ல எறங்குத? ரைஸ்மில் தெருவழியா எறங்கி எதுத்த தெரு வழியா வரவேண்டியது தானே”

“பஸ்ல வந்தா மணிக்கூண்டு ஸ்டாப்ல தானே எறங்கவேண்டி இருக்கு”

“ஒரு ஸ்டாப்பு முன்னாடி எறங்கி தெருவுக்குள்ளோடி வாரதுக்கு என்ன, உன்னம்பிட்டு பிள்ள தான அது, அவ ஒழுங்கா வாரால்லா? உனக்கென்னலே. எப்படியோ அவ நின்னாக்கா ஒதுங்கி நடந்து வா”

ஒருமனதாக “சேரி சேரி “ என்றான் ரவி. ரவி கவனமாக இருக்க வேண்டும் என்று தான் ஒரு பைத்தியத்திடம் சிக்கிய கதையை ஆச்சி கூறிய பின் உண்டான பயம், பாஞ்சாலியைக் காணும் போதெல்லாம் ரவிக்குத் தொற்றிக்கொண்டது.

அவன் தங்கை ராதா சாயந்திரம் தன் தோழிகளோடு எஸ்.டி.ஆர் கல்யாண மண்டபம் வழியாக நடந்து வருவாள். சமயத்தில் பஸ்சில் ஏறி இவனோடு வருவாள். பஸ் பாஸ் மறந்த நாட்களில் இவன் சாந்திநகர் நண்பர்களோடு அரட்டை அடித்தபடி சாந்திநகர் வழியாக நடந்து வருவான். அப்படியான நாட்களில் தான் பாஞ்சாலியை கடந்து வரவேண்டி வரும். சமயத்தில் திடீரென்று பின்னால் நடந்து வருவாள். எந்த நிமிடம் தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் ஓட்டமில்லாத வேக நடையில் ஓரக்கண்ணால் பார்த்தவண்ணம் நடப்பான் ரவி.

பாஞ்சாலியைப் பற்றி பலகதைகள் பேசப்பட்டது. ஆனால் சிறார்கள் மத்தியில் ஒரு கதை வளர்ந்து திரிந்தது. அவள் நிஜப்பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. பாஞ்சாலியாகவும் கூட இருக்கலாம். அவள் முன்னர் பேரழகியாய் இருந்தாளாம். நல்ல சிவப்பாம். இப்பொழுது வெயிலில் அலைந்து நிறம் கம்மலாகி விட்டாளாம். நீளமான முடி உண்டுமாம். அவள் மிக வசதியான பாளையங்கோட்டை பணக்காரரின் மகளாம். சீரும் சிறப்புமாக கல்யாணம் முடித்து குடுத்து பின் மாமியார் கொடுமை, கட்டியவன் கொடுமை என்று பலக்கஷ்டத்தை அனுபவித்திருக்கிறாள். இப்பொழுதும் அவள் இடக்கையின் மேல் தோலில்லாமல் வெளுத்திருப்பது அவள் புருஷன் வெந்நீரை ஊற்றிய வடு என்று தான் கூறுகிறார்கள். அத்தனைக் கொடுமையையும் அப்பனிடம் சொல்லாமல் பெத்த மகனுக்காக பொறுத்துக்கொண்டாளாம். அந்த மகனால் தான் பைத்தியமானாளாம். பையனைக் கையில் பிடித்துக்கொண்டு நடக்கையில் கையைத் திருகிக்கொண்டு தனியாய் நடந்தவன், திடீரென எதிர்ப்பட்ட கிணற்றை எட்டிப்பார்த்திருக்கிறான். பாஞ்சாலி நிதானிப்பதற்குள் எட்டிப்பார்த்தவன் கால் எக்கி பார்க்கையில் உள்ளே விழுந்துவிட்டான். கண்முன்னால் நொடியில் நடந்து விட்ட சம்பவத்தை பாஞ்சாலியால் காலத்துக்கும் மனக்கண்ணில் இருந்து அகற்ற முடியவில்லை. அப்பொழுது கிணற்றில் மிதந்த மகனைக் கண்டு உறைந்தவள் பெரும் சத்தத்தோடு சிரித்திருக்கிறாள். மகன் இறந்த சோகத்தையும், துக்கத்தையும் பாஞ்சாலி சிரிப்பாக தான் வெளிப்படுத்தினாளாம். இந்த பைத்தியத்தை கட்டி அழ முடியாது என்று அவள் பிறந்தவீட்டில் கொண்டு விட்டுவிட்டானாம் கணவன்.

பாஞ்சாலியின் அண்ணன் அவளை அறையில் வைத்து பூட்டினான். மகள் மேல் அலப்பரிய பிரியம் வைத்த அப்பா கெஞ்சிக் கூத்தாடி அறையை விட்டு அவளை வெளிக்கொணர்ந்தார். எண்ணெய் வைக்காத கேசம் சிடுக்கு விழுந்திருக்க, அழுக்கு உடையோடு அவள் தெருவை நோக்கி ஓடினாளாம். பின்னோடு ஓடி அவளை பிடித்து இழுத்து வந்து வீட்டுத்தூணில் சங்கிலியால் கட்டினானாம் அவள் அண்ணன். பாஞ்சாலியைக் குறித்த கவலையில் அவள் தகப்பன் போய் சேர்ந்துவிட, ஒரு கட்டத்திற்கு மேல் அவளை வீட்டில் வைக்க முடியாமல மனநிலை சீர்ப்படுத்த கூடிய  ஆசிரமத்தில் கொண்டு சேர்த்தானாம் அவள் அண்ணன்.

அங்கிருந்து தப்பியோடியவள் இறுதியாக வந்து சேர்ந்தது மணிக்கூண்டு அருகே. செந்தில்வேல் தியேட்டர் எதிர்புறம் இருக்கும் குடிசை வீடுகள் சிலசமயம் மழையிலிருந்து அவளை காப்பதுண்டு. ஊசி பாசி விற்கும் குறவன் குறத்திகள் அங்கே தான் இருந்தார்கள். நாடோடிகளாய்  வந்து குடில்களை அமைத்து மண்சிலைகள் செய்து ரோட்டோரமாக அடுக்கி வைத்து விற்பவர்களும் அந்தப்பக்கம் தான் இருந்தார்கள். எல்லோருமே ஜான் சா மில் பக்கத்தில் இருக்கும் நல்லியில் தான் தண்ணீர் பிடிக்க வருவார்கள்.

பாஞ்சாலி சமயத்தில் அங்கே குளிப்பாள். ஒருநாளும் உடைகளை கலைந்து குளித்தாளில்லை. உடுத்தியிருக்கும் சீலையுடன் குளிப்பாள். அப்படியே ஈரத்தோடு நடப்பாள். வெயிலில் தானாக காய்ந்து போகும் அவளது ஈர உடைகள். சிலநேரங்களில் அவள் கையில் ஒரு துணி மூட்டை இருக்கும், உள்ளே என்ன வைத்திருக்கிறாள், துணிகள் தானா? அப்படியானால் அதை எப்பொழுது மாற்றுவாள், எங்கு மாற்றுவாள் என்று யாருக்கும் தெரியாது. சிலசமயம் ஒற்றைச் செருப்போடு நடப்பாள். ஒருமுறை காலையில் பார்க்கையில் கிழிந்த ஜாக்கெட்டோடு இருந்தாள். ஆனால் மாலையில் ஆண்கள் அணியும் சட்டை அணிந்திருந்தாள். யாராவது கொடுத்திருக்கக் கூடும். பாஞ்சாலி ஒருநாளும் அமைதியாக இருக்கவில்லை. பேசிக்கொண்டே இருப்பாள். தனக்குத்தானே பேசுவாள். மனிதர்களிடம் அவள் பேசுவதில்லை. அவளுக்கு சாலையின் நடுவே நடக்கக் கூடாது என்று தெரிந்திருந்தது. 

அன்று ரவி அதிகாலையில் மணிக்கூண்டின் அருகில் பால் பாக்கெட் வாங்க காத்திருக்கையில் பாஞ்சாலி நடந்து வந்துக் கொண்டிருந்தாள். அவள் நேராக டீக்கடை அருகே சென்றாள். ரவி நிற்பதை அவள் பார்த்தது போல இல்லை. முதல் போனியாக டீயை ஆற்றி அவளை நோக்கி எடுத்து வந்து கொடுத்தார் டீக்கடைக்காரர். ரவிக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த செய்கை. அவள் கேட்கவில்லை. ஆனாலும் அவர் மெனக்கிட்டு கொண்டு கொடுக்கிறார். பின் ஒரு பன்னும் கொண்டு கொடுத்தார். அவள் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டாள். அவளை போ என்று ஒருத்தரும் விரட்டவில்லை.

பாஞ்சாலியை பட்டும் படாமல் கவனித்துக் கொண்டிருக்கையில் ரவிக்கு சட்டென பெரிய தாத்தா வீட்டில் நடந்த சம்பவம் ஞாபகம் வந்தது. தாத்தா வீட்டு மாடிப்படியில் நின்று பார்த்தால் பக்கத்து வீட்டின் அடுக்களை வாசல் தெரியும். அங்கே ஒரு பெண் அமர்ந்து தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். ரவியை விட நான்கு வயதே மூத்திருந்த தாத்தா பையன் அவள் ஊமை என்றான். மேலும் வாய்பேச முடியாதவர்கள் முன்பாக சென்று மூக்கைச் சொறிந்தால் அவர்களுக்கு கோபம் வரும் என்றும் கூறினான்.

அதனை நம்பாத ரவி பரிசோதித்து பார்க்க அந்த நடையில் அமர்ந்திருந்த பெண் மேலேப் பார்க்கையில் மூக்கைச் சொறிய, மற்ற பிள்ளைகளும் அதையே செய்ய அவள் பெரும் ஆத்திரமடைந்தாள். உரத்த குரலில் ஓலமிட்டாள். படியிலிருந்து இறங்கி சுவற்றை நோக்கி அடிக்க கையை ஓங்கிக்கொண்டு ஓடி வந்தாள். பதறிப்போன ரவியும் மற்ற பிள்ளைகளும் வீட்டிற்குள் ஓடி ஒளிந்தார்கள்.

வெளியே ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருக்க ரவியும், சின்ன தாத்தா,பெரிய தாத்தா பிள்ளைகளும் கூட்டாக கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கிடந்தனர். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் வந்த பெரிய தாத்தா அத்தனை பேரையும் வரிசையில் நிற்க வைத்து வகுப்பெடுத்தார். உடல்குறை மனக்குறை உடையவர்களை சீண்டவோ, துன்புறுத்தவோ, அவர்கள் இன்னும் பாதிக்கும் வகையான நடத்தையோ கூடாதென்றார். அவர்களால் பக்கத்து வீட்டில் அவர் மன்னிப்பு கேட்டதாகக் கூறினார்.  அப்பொழுதும் அந்தப் பெண் உக்கிரமாக கத்திக் கொண்டே இருப்பது கேட்டது. ஆனால் பாஞ்சாலி யாரையும் துன்புறுத்தி இதுவரை பார்க்கவில்லை. சமயங்களில் பாஞ்சாலிக்கு தனது டிபன் பாக்ஸில் இருந்து உணவு கொடுக்க எண்ணமிருந்தாலும் அருகே செல்ல பயந்து அவளை கடந்து சென்றுவிடுவான். அவள் குழந்தையை பற்றிய கதையால் அவள் மீது இரக்கமே அதிகமிருந்தது.

பாஞ்சாலி மீது பிரியமும், இரக்கமும் வர ரவிக்கு இன்னுமொரு காரணமிருந்தது. எட்டாம் வகுப்பு விடுமுறை ஆரம்பமானது. அன்று காலையில் குளிப்பதற்காக நண்பர்களோடு வாய்க்காலுக்குச் சென்றான் ரவி. திம்மராஜபுரத்தில் பெருமாள் கோவில் வழியாக வாய்க்காலுக்கு ஒரு பாதை இருந்தது, அதை விடுத்துப் பிள்ளையார் கோயில் பக்க பாதை வழியாகவும் செல்லலாம். இரண்டு கோவில்களையும் இரண்டு தெருக்களையும் இணைப்பது அக்கிரஹாரத் தெரு. ரயில் பாதைபோன்ற இரு தெருக்களையும் இடையில் கிடக்கும் பலகைபோல இணைத்தது அக்கிரஹாரம். இடப்பக்கமிருக்கும் எல்லா வீடுகளின் புறவாசலும் வாய்க்காலில் தான் முடியும். சிலர் பாத்திரம் தேய்க்க பாத்திரக்கூடையோடு வாய்க்காலுக்கு வருவார்கள்.

படித்துறையில் இருந்து துணி துவைக்கும் பெண்களை தொந்திரவு செய்யாமல் ரவியும் அவன் தோழர்களும் படியை அடுத்திருக்கும் சிமெண்ட் சறுக்கில் ஏறி ஓடிச்சென்று குதிப்பார்கள். அப்படி திரும்பி நின்று குதிக்க காத்திருக்கையில் தான் ரவி நேராக இருந்த வீட்டின் வாசலில் தலைவிரி கோலத்தில் ஒரு கிழவியைக் கண்டான். பாதி நரை கூடிய அவள் அவள் வீட்டு வாசலில் அமர்ந்து ரவியை பார்த்துக்கொண்டே இருப்பதாக ரவிக்கு பட்டது. வெற்றிலைக் குதப்பிக் கொண்டிருக்கிறாளோ என்று ரவிக்கு தோன்றியது. வெறித்த பார்வையில் அவள் இமைக்காது ரவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரவி தண்ணீரில் குதித்து பின் நீந்தி படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்றான். அப்பொழுதும் அவள் அங்கேயே தான் இருந்தாள். மீண்டும் அவள் ரவியைத் தான் பார்க்கிறாள் என்று தோன்ற ரவியும் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். அருகே வந்த தெருத்தோழன் குமார் ‘எலே ரவி அந்தக் கிழவிய பாக்காத… அது பைத்தியம் போல இருக்கு’ என்றான். பாஞ்சாலியை அறிந்திருந்த ரவிக்கோ இந்த பாட்டி ஒன்றும் செய்யாது என்று தோன்றியது.

வெகுநேரம் அப்படி பார்த்துக் கொண்டே இருக்க அவள் முகம் சிவந்து ஒரு குரங்கினைப் போல அவள் உருமாற்றம் கொள்வதாய் தோன்றியது. மேலும் உற்றுப் பார்த்தான் ரவி. திடீரென்று எழுந்து நின்றாள் அவள். தலைவிரி கோலத்தில் மேலே ஜாக்கெட்டும் கீழே முட்டி வரை மட்டுமே ஒரு அரைசீலையும் உடுத்தியிருந்தாள். ரவி யோசிக்கும் முன்னரே சட்டென தனது கீழுடையை மேலே உயர்த்திக்காட்டி விட்டு வசை பாடத்துவங்கினாள்.

கொஞ்சம் தள்ளி தான் வாசல் இருந்தாலும் அவள் கத்துவது வாய்க்கால் வரை தெளிவாகக் கேட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ரவிக்கு ஒன்றுமே ஓடவில்லை. தோழர்களைத் தேடியவன் அவர்கள் அவசரமாய் கரையேறுவதைக் கண்டான். ஒரு நல்ல பாம்பு வாய்க்கால் நீரில் நீந்தி கரையை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. மீண்டும் வீடுகளை நோக்கி திரும்பிய ரவிக்கு பேரதிர்ச்சிக் காத்திருந்தது. அவள் ஒரு விறகுக் கட்டையோடு ரவியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தாள்.

பக்கத்துவீட்டு சிவா தான் அவசரமாய் கத்தினான், “அய்யய்யோ பைத்தியம் அடிக்க வருது”. ரவிக்கு தெளிவாக விளங்கியது அவன் தான் பார்த்துக் கொண்டே இருந்தான், அவனை அடிக்கத்தான் வருகிறாள் என்று. பாம்பை கரையேறவிடாமல் வாளியில் தண்ணீரைக் கோரி விசிறிக்கொண்டிருந்தாள் அவர்கள் தெருவில் வசிக்கும் ஜெயந்தி அக்கா. சிவாவின் குரலால் மேலே இரண்டு படி ஏறி நோக்கினாள். சிவாவோ, ‘தண்ணில குதிச்சிரு லே’ என்றான். பாம்பைக் கண்ட பின் எப்படி குதிப்பான் ரவி. பயத்தில் படியில் இறங்கி நின்றான்.

கிழவி கர்ணகடூரமாகக் கத்திக்கொண்டே அருகே வந்துவிட்டாள். ஜெயந்தி அக்கா ரவியை தன் பின்னால் மறைத்துக்கொண்டே கூறினாள், ‘பயப்படாதே அவ ஒன்னும் செய்ய மாட்டா’ என்றாள். சிவாவோ ‘யக்கா அவளுக்கு ஆம்பிளைகள புடிக்காது, கட்டாயமா அடிப்பா, அன்னைக்கொரு நாளு இப்படித்தான் செல்லத்துரைய கட்டைய கொண்டி அடிச்சி போட்டா’ என்றான். அதிர்ந்து பார்த்த ஜெயந்தி ‘யாரு என்ன பண்ணானுவளோ… ஆம்பளைய புடிக்காம போக. நீ சின்ன பையன் தானடா செவனேன்னு நின்னு‘ என்றாள். ரவிக்கு வேர்த்துக் கொட்டியது. அவன் நண்பர்கள் பக்கவாட்டில் சிதறி ஓடினர்.

கட்டையை ஓங்கிக்கொண்டு அருகே வந்தவள் ஒருநிமிடம் நிதானித்து ரவியைத் தேடினாள். அருகே இருந்த மற்ற பெண்கள் ‘வீட்டிற்கு போ’ என்றார்கள் கிழவியிடம். கோபத்தில் கட்டையை வாய்க்காலை நோக்கி வீசினாள். சரியாக பாம்பின் அருகே விழ அது தன் திசையை மாற்றி நீந்தியது. ரவியை காணாமல் அவள் படியில் கால் வைக்கவும் அவள் வீட்டுப் பெண் அவசரமாய் ஓடி வந்து அவளைப் பிடிக்கவும் சரியாக இருந்தது. ‘வா அத்தை போகலாம். அப்பா வீட்டில இருக்கார் பேசுவார்’ என்று வலுக்கட்டாயமாக அவளை இழுத்துச் சென்றாள்.

அந்த பெண்மனி ஏகவசனத்தில் திட்டிக்கொண்டே சென்றாள். அவள் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே தான் நடந்தாள். ஜெயந்திக்கு பின் நின்று எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். அன்று நண்பர்களோடு கிளம்பாமல் ஜெயந்தி அக்காவிற்காக காத்திருந்து அவளோடு வீட்டிற்கு சென்றான்.

இவர்களைப் போல பாஞ்சாலி இல்லை என்பது ஆசுவாசமாக இருந்தாலும் ஆச்சியின் கதையால் பாஞ்சாலி அருகே செல்லாமலே இருந்தான் ரவி. அன்று நல்ல மழையாக இருந்தது. பள்ளி விடுமுறை என்று அறிவிக்க, கிளம்பி சென்றுவிட்ட பிள்ளைகள் உற்சாகமாக வீட்டிற்கு திரும்பினர். ரவி தன் பள்ளி பையை பாலிதீன் கவருக்குள் சுற்றிவிட்டு பேருந்திலிருந்து மணிக்கூண்டில் இறங்கினான் தன் தங்கையுடன்.

குடை பிடிக்காமல் ஜாலியாக நனைந்து கொண்டே செல்ல திட்டமிட்டபடி பஸ் ஸ்டாண்டில் நின்று பையை கண்ணாடி கவருக்குள் மேலும் பத்திரமாக பொதிந்தார்கள். அப்பொழுது தான் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது. பஸ் ஏற காத்திருந்த பெண் மணிபர்ஸை திறந்து சில்லறையை எண்ணிக் கொண்டிருக்க அவளுடன் இருந்த ஐந்து வயது மதிக்கதக்க சிறுவன் மழையில் நனையும் ஆசையில் கைநீட்டியபடியே சட்டென ரோட்டிற்கு சென்று விட்டான். சரியாக அதே நேரத்தில் ஒரு வேன் வர எல்லோரும் ஸ்தம்பித்து விட்டார்கள். பஸ் ஸ்டாண்ட் மேல்புறமாய் பாஞ்சாலி நின்றிருந்தாள் போலும், புயல் வேகத்தில் சிறுவனைப் பற்றிக்கொண்டு மறுபுறம் பாய்ந்தாள். அவள் கீழே கிடக்க சிறுவன் அவள் மேல் கிடந்தான். அவள் கைகளில் தார்சாலையில் உராய்ப்பில் இரத்தம் சொட்டியது. சற்று தள்ளிப்போய் வேனும் கிரீச்சிட்டு நின்றது. வேன் ஓட்டுநர் கோபமாக மழையில் இறங்கி வந்தார்.

அழுதுகொண்டே சிறுவனை தூக்கிய அந்த பெண் பாஞ்சாலியை நோக்கி கைகூப்பினாள்.

“ஏம்மா இம்புட்டு மழைல ஆள் ரோட்ல வாரதே தெரில. பச்சபுள்ளைய கைல புடிச்சி கூட்டுப் போகாம இப்படிய ஓட விடுவே. ஒரு நிமிசம் என்ன ஆயிரப்பாத்துச்சி” என்றார் வேன் ஓட்டுநர்.

“அய்யோ யண்ணே… கவனிக்காம உட்டுட்டேன். எம் புள்ள உசிர இந்த மகராசி காப்பாத்தி கொடுத்துட்டா” என்றாள். அவர் மேலும் அவளை திட்ட, பாஞ்சாலி சிரித்துக்கொண்டே அந்த சிறுவனின் தலையை தடவி விட்டு மழையில் அவள் பாட்டுக்கு நடக்க தொடங்கினாள். மழையின் ஊடாக ரவி பாஞ்சாலியை பார்த்துக் கொண்டே நின்றான்.

000

ராணி கணேஷ்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பப்புவா நியுகினியாவில் தற்போது வசிப்பவர். பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.

தமிழ் இலக்கியம் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து நூல்களை வாசிப்பதிலும் படைப்பு நுட்பங்களை, மொழியின் புதிய வண்ணங்களைக் கற்பதிலும்  உற்சாகமாக ஈடுபடுகிறார். தற்போது கவிதைகள், சிறுகதைகள்,

நாவல் என்று பலவகை முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

One thought on “பாஞ்சாலி

  1. தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும் ராணி கணேஷின் தமிழ் ஆர்வம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது……அவருடைய ‘திம்மராஐபுரத்துக் கதைகள் ‘ என்ற சிறு கதைத் தொகுப்பு என்னுள் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியது – நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்று…இள வயதில் நான் கேட்டு வளர்ந்த நெல்லைத் தமிழை அவர் ரசிக்கும்படி கையாளும் விதமே தனி…கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் கண்டு மறந்த யாரையாவது நினைவூட்டுகிறார்கள் இந்தக்கதையில் வரும் மன நலம் இழந்த பெண் உட்பட…..பொதுவாக அவர் சிறு கதைகளின் முடிவில் ஒரு சின்ன நெளிவு வைத்து விடுவார்…நிச்சயம் ரசிப்பீர்கள்…இவ்வளவு இளம் வயதில் மனித உள்ளங்களை இவ்வளவு ஆழமாகப் புரிந்து வைத்திருக்கும் ராணி கணேஷுக்கு என் வாழ்த்துக்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *