1.

இருளோடு குளிர் நிறைந்த பெரும் தேயிலைத் தோட்ட மலை கிராமத்து ஒற்றை அறை ஓட்டு வீட்டில் நின்று நிதானமாய் கனகனவென்று எரிகின்ற முன்அடுப்பில்  உலையும், நடு அடுப்பில்  தே-தண்ணியும் மற்றும் கட அடுப்பில் சுடு தண்ணியும் வைத்து சிவகாமி உட்காந்திருந்த போது மணி அதிகாலை நான்கு. தூக்கம் கலைந்து தரை படுக்கையிலிருந்தே, குச்சிக்கட்டிலில் தூங்கிய தன் பிள்ளையை எட்டிப்பார்த்தப்படி  மனைவி சிவகாமியிடம், அட்டால்ல வெறவு முடிஞ்சிரும் போல,

“வெள்ளன வெளி அடுப்ப பத்த வச்சு புள்ள குளிக்க தண்ணிய சுட வைக்கணும்” என்ற சின்னமுத்துவுக்கு தே-தண்ணியை  கொடுத்தார் சிவகாமி.

இருக்கிய தலபாவுடன் கட்டம்போட்ட நீல லுங்கியை மடித்துக்கட்டி கதவு மூலையில் இருந்த கோடாலியை கையில் எடுத்துக்கொண்டே,

“இராத்திரி அடிச்ச மழைக்கு வெறகு நனஞ்சிருச்சோ? என்னமோ, மூடிதானே இருக்கு”?

“செரவெறகும் கொறைவதான்யிருக்கு, இருக்க வெறக வைச்சு  கூட கொஞ்சம் மெலாரையும் சேர்த்து அடுப்பை பத்த வைக்கிறேன்,  இன்னைக்கு  ரெண்டுபேரும் வேலைவுட்டு வரும்போது கொஞ்சம் வெறகு கட்டிக்கிட்டு வந்திடுவோம்”

என்றபடி  கதவைத்திறந்து, 

மழைச்சாரல் வீட்டிற்குள் வராமலிருக்க  போட்டிருந்த பாலிதீன் பையையும் வாசபடியில் நனைந்த சாக்கையும் விலக்கி வெளியே வந்தார் சின்னமுத்து.

வெறகொடைக்கும் சத்தத்தில் தூக்கம் கலையாத கண் எரிச்சலோடு விழித்துப் பார்த்த  மகளிடம்,

“நேரமாச்சி அம்மாலு சீக்கிரம் எந்திரி பஸ்சுக்கு  போனுமில்ல! என்றபடியே தே-தண்ணியை பானுவின் அருகில் வைத்தாள் சிவகாமி.

கொதித்த உலையில் அரிசியைப் போட்டு முடித்தபின் சிவகாமி, பானுவை கூட்டிக்கொண்டு அருகிலுள்ள கானாற்று கரைபயின் பக்கம் ஒதுங்க வீட்டினுள்ளிருந்து வெளியே வந்த போது,

“கவனமா போயிட்டு வாங்க கரடி காட்டுமாடு எதுவும் நிக்க போகுது” என சொல்லிக்கொண்டே வெளி அடுப்பை எரிப்பதில் மும்முரமாக இருந்தார் சின்னமுத்து. செல்லும் வழியெங்கிலும்  பல்வேறு பறவைகளின் கீச்சுகளுக்கு  நடுவே அக்காக்குருவியின் குரல் இவர்களை மயக்கியது.

இருவரும் திரும்பி வரும்போதே லேசாக விடியத் தொடங்கியிருந்தது.  சின்னமுத்து மகள் குளிக்க  சுடுத்தண்ணிய வெளாவிக் கொடுக்க, சிவகாமி சமையல் வேலைகளைத் தொடர்ந்தார்.

குளித்து வந்த பானு குண்டு பல்பு மஞ்சள்  ஒளியில் ஆணியில் மாட்டியிருந்த  பச்சை நிற சின்ன சதுரக் கண்ணாடியைப் பார்த்து தலைமுடியை  சீவி, பவுடர் பூசும்  போதுதான் லேசாக கண்ணை விழித்துப்  பார்த்துக்கொண்டிருந்தான் பானுவின் தம்பி பாக்கியராஜ்.

இரவு வைத்து மிச்சமிருந்த  மாட்டுக்கறிக் குழம்பு சூடாக,  முட்டைக் கொழம்பு கொதிக்க, சின்னமுத்து ரொட்டி சுடும்போது  வெளித்திண்ணையிலிருந்த அம்மியில் தேங்காசம்பல்  அறைத்துக் கொண்டிருந்தாள் சிவகாமி.

ஆசிரியையாகும் வாழ்நாள் லட்சியத்தோடிருக்கும்

தன் அன்புகொண்ட தோழி வான்மதிக்கு அன்று பிறந்த நாள் என்பதால்  பரிசுக்கொடுக்க முதல் நாளே ஊட்டி நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் வாங்கிய புத்தகத்தில் வாழ்த்தெழுதி கையொப்பமிட்டு கவனமாகப் பையில் வைத்துவிட்டு, அடுப்பருகில் சாப்பிட உட்கார்ந்த பானு, தேங்காய்த் துருவல் சேர்த்த சுட சுட சூடான ரொட்டியுடன் சம்பலும் மாட்டுக்கறிக் குழம்பும் ஆவி பறக்க சாப்பிட்டாள்.

மகளுக்கு மதியத்திற்காக முட்டைக் குழம்பில் சாப்பாடு கட்டிய சிவகாமியிடம்,  “சுடுதண்ணியை போத்தலில் ஊற்றியவாறே,

”தனியா ரெண்டு ரொட்டியும் சம்பலும் வச்சிரு புள்ளைக்கு எடையில பசி எடுத்தா  சாப்பிட்டுக்குமில்ல” என்றது சின்னமுத்துவின் குரல்.

பக்காசூரன் மலைகிராமத்து தார்ச் சாலை பாதியிலயே நின்றுவிட்டதால் வீட்டிலிருந்து தேயிலைத் தோட்டத்திற்கு நடுவே ஒன்றரை கிலோ மீட்டர் கருங்கற்களாலான பாதையில்  நடந்து சென்றால் தான் பேருந்தை அடைய முடியும்.  பானுவை பஸ் ஏற்றி விட வழித் துணைக்குச் செல்வது சின்னமுத்துவின் அன்றாட பணி.

தம்பி பாக்கியராஜிடம் பயணம் சொல்லிவிட்டு தோல் பையை மாட்டி வெளியில் வந்து செருப்பு போடும் போதுதான்,  கயிறை சுருட்டியெடுத்துக் கொண்டிருந்த  சின்னமுத்துவை கவனித்தாள் பானு.

“ஏன்பா கயிறுயெடுத்துகிட்டுயிருக்க”?

“வழி ஓரத்துல கவாத்து வெட்டிக்  கெடக்கு  ஆயா, உன்ன பஸ் ஏத்தி விட்டு வரும்போது ஒரு செம மெலாறு கட்டிட்டு வந்தறேன், வெறகு கம்மியா தான்யிருக்கு நாளைக்கு உனக்கு தண்ணி சுட வைக்க உதவுமில்ல”.  இதற்கு பானு,

“யாரும் நடமாட்டம் இல்லாத இந்த நேரத்துல தனியா வெறவெல்லாம்  ஒன்னு கட்ட வேணாம் பா. காட்டு மாடல்லாம் ஜாஸ்தியா இருக்கு. வேணா பாட்டி கடையில்  கயிற வைச்சிரு காலேஜ் வுட்டு வரும்போது நா ஒரு செம கட்டிகிட்டு வந்தர்றேன்”.

பாட்டி கடை என்றதும் சிவகாமிக்கு ஏதோ ஞாபகம் வந்தது போல, ’நேத்து டிவிலயிருந்து பாட்டிய படம்பிடிக்க வந்தாங்களாமே?’

“ஆமாம்மா நான் நேத்து காலேஜ் வுட்டு வரும்போது பார்த்தேன் ரெண்டு மூணு அண்ணாங்க பாட்டி 103 வயசுலையும் தனியா கட வச்சுறுக்கத அப்பறம் அவங்க குடும்பத்தப்பத்திலாம் கேட்டுட்டு இருந்தாங்க, இந்த வாரத்துல ஒருநாள் டிவியில வருமாமா!” என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக, சரிமா டைமாச்சு நாங்க கிளம்புறோம்! என்றாள் பானு. அம்மாலு பார்த்து கவனமா போகணும் கெட்டிக்கார புள்ளையா படிக்கனும் கருத்தாயிருக்கனும் சரியா! என்ற சிவகாமியை, சரிமா என சொல்லி கட்டி அணைத்து  முத்தம் கொடுத்து டாட்டா காண்பித்து பானு கிளம்ப ஆரம்பித்தாள் கூடவே சின்னமுத்துவும் கிளம்பினார்.

மாலை மழை பெய்யத் தொடங்கி  இரவிலும் கொட்டித் தீர்த்து நின்றிருந்ததால் வழியில்  தேயிலைச் செடிகளும் அதன் முடிவிலுல்ல சோலைமரங்களும் குளித்ததுபோல் பச்சைப்பசேலென்றும், தூரத்தில் சிறுபிள்ளை  முகத்தில் பவுடர் போல் ஆங்காங்கே வெண்மேகங்களும் நகரத் தொடங்கின. கரட்டாடு  இவர்களைப் பார்த்து ஓட, காட்டு மாடு இவர்களை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தன. பேருந்தை அடையும்போது ஓட்டுநரும் நடத்துனரும் பேருந்தின் முன் கண்ணாடியை தண்ணீர் ஊற்றிக் கழுவிக் கொண்டிருந்தனர்.

பேருந்துக்குள் தூரத்துக்கு ஒரு சிலர் அமர்ந்திருக்க முதல் படியில் ஏறிய பானு திரும்பி சின்னமுத்துவிற்கு டாடா காண்பித்தாள்,  வெறகு கட்டிகிட்டு போகக்கூடாது என்ற கண்டிசனை கூடவே வைத்தாள். பேருந்தின் நடுப்பகுதி  இருக்கையில் சன்னலோரமாக  அமர்ந்து கொண்டாள் பானு. “தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே”  என்ற பாடல் தொடங்க பேருந்து கிளம்பியது.  சின்னமுத்துவிற்கு டாட்டா காட்டியபடியே கொஞ்சம் கொஞ்சமாக சன்னலுக்கு வெளியில் இருந்து தலையையும் கையையும் உள்ளிழுத்துக் கொண்டாள் பானு.

ஈரம் படர்ந்த மலைச்சாலை வளைவுகளில் ஏற்றமும் இறக்கமுமாய் ஆங்காங்கே பயணிகளை ஏற்றிக்கொண்டே  குன்னூரை நோக்கி  வேகமெடுத்தது பேருந்து.

குன்னூர் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பானு இறங்கும் போது மணி 7.20 ஆகியிருந்தது. ஊட்டி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாய் வந்தபோது பானுவிற்கு பேரதிர்ச்சி. பள்ளி கல்லூரி மாணவர்கள்  தொழிலாளர்கள் அரசுப் பணியாளர்கள் என ஏற்கனவே நீண்ட நேரம் பேருந்திற்காக காத்திருந்த காலைநேர மக்கள் கூட்டம் அலைமோதியதைப் பார்த்து.

காத்துக்காத்து அலுத்துப்போய் விரைவு பேருந்துகள் நிறுத்தும் இடத்துக்கு வந்தாள் பானு.  சமவெளியிலிருந்து கூடலூர்  செல்லும் பேருந்தில் அடித்துப்பிடித்து ஏறி  சன்னலோர இருக்கை கிடைத்த மகிழ்ச்சியோடு ஒரு “சேரிங்கிராஸ்” என டிக்கெட் வாங்கிக்கொண்டாள்.

பேருந்தில் ஒலித்துக்கொண்டிருந்த,

 “பின்னே என்னோடுனொன்னும் பறையாதே

பகல் பக்ஸி ஸ்வயம் பறந்ஞொங்கோ போய்?”

என்ற மலையாள பாடலைக்கேட்டுக்கொண்டிருக்கும்போதே,

தூக்கம் கண்ணைச் சொருக, மடியில் வைத்திருந்த பையில் அப்படியே சாய்ந்தாள்.

                                         2.                                                

குளிர்ந்த பனி கொஞ்சம் கொஞ்சமாக விலக இதமான காலை வெயில் தொடங்க பரபரப்புக்கு தயாராகிய ஊட்டி நகரத்தில், அமைதி சூழ்ந்த பேராசிரியர்கள் குடியிருப்பு வீட்டில் நிதானமாக கண்விழித்து படுத்திருந்த பேராசிரியருக்கு உறக்கத்திற்கு ஏங்கும் விழிகளோடு  பம்பரமாய் சுழன்ற அவரின் மனைவி, பேராசிரியரின் கட்டில் தலைமாட்டில் காஃபியை வைத்து,

“டைம் எட்டு ஆகிருச்சிங்க, கீசர்ல தண்ணி கொதிக்குது  எழுந்து குளிங்க!

”ம்ம் சரி.”

”நைட்டு சொன்ன ட்ரெஸ்ஸ அயன் பண்ணியாச்சா?”

”பண்ணிடேங்க”.

”சூ பாலீஷ் போட்டாச்சா?”

”அதுவும் போட்டேங்க”.

“ஓகே வெரி குட்.”

“டிபன் ரெடி பண்ணு குளிச்சிட்டு வரேன்.”

வெள்ளை உள்பனியன், வயிற்றிலிருந்து கட்டிய வேஷ்டி  தோலில் துண்டுடன் குளித்து வந்தவருக்கு மேசையில் தயாராகயிருந்த சூடான காய்கறி சாம்பார் பொங்கல் இட்டிலியை மனைவி பரிமாறியபடியே, 

“மாப்பிள்ளையும் பொண்ணும் நாளைக்கு  வராங்கலாமாங்க.”

“ஓ! சரி! சரி! வரட்டும் வரட்டும்!”

“அப்பறம் பையன அவங்க காலேஜுலயிருந்து டூர் கூட்டிட்டு போறாங்கலாமா! கொஞ்சம் கேஷ் வேணுமாங்க!”

“ஒ! சரி நா பாத்துகிறேன்”  என பேசியக்கொண்டே உணவருந்தி முடித்து பின், அயர்ன் செய்த உடைகளை மாற்றிக் கல்லூரிக்கு கிளம்பினார்.

குடியிருப்பு அருகிலே கல்லூரி என்பதால் மெதுவாக நடந்து வந்து, வருகைப்பதிவேட்டில் கையொப்பமிட்டப்படியே அலுவலகக்  கடிகாரத்தை பார்த்தார் நேரம் சரியாக ஒன்பதாகியிருந்தது. கல்லூரி வளாகத்தினுள் சிரித்து மகிழ்ந்திருந்த முதல்வர் மற்றும் சக பேராசிரியர்களின் அரட்டையில் ஆர்வத்துடன் பங்கெடுத்தார்.

மாணவர்கள் அவரவர் வகுப்பறைகளுக்கு அவசர அவசரமாக சென்றுக்கொண்டிருந்தனர். பத்து நிமிடத்தைக் கடந்த அரட்டைக்கு நடுவே  பேராசிரியரிடம் இரண்டு மாணவிகள் வந்து,

“குட் மார்னிங் சார்”.

“குட் மார்னிங். என்ன?”

“ஃபர்ஸ்ட் ஹவர் நம்ம சப்ஜொக்ட் தான் சார்.”

“ஓ அப்டியா!?”

“எஸ் சார்.”

“டுடே டே ஆர்டர் என்ன?”

“டே ஆடர் த்ரி சார்.”

“நம்ம ஹவர்தானா?”

“எஸ் சார்.”

“ம்ம்ம். ஒகே.”

“நம்ம சப்ஜெக்ட் புக் எடுத்து ரெடியாயிருங்க!”

“ஒகே சார்.”

“அப்படியே டிபாட்மெண்ட்லயிருக்க உங்க  அட்டனன்ஸ எடுத்து கிளாஸ்ல வைங்க நா வறேன்.”

“ஒகே சார்.”

“தேங்க்யூ சார்!”

திரும்பியபோது பேராசிரியர்கள்யெல்லம் கலையத் தொடங்க,

முதல்வருடன் சிலர் கல்லூரி நுழைவு வாயில் பக்கம் சென்றனர். அரட்டை பாதியில் தடையான சங்கடத்துடன்  வேறு வழியின்றி துறைக்கு செல்ல ஆயத்தமானார்.

துறை பேராசிரியர் அறையில் அமர்ந்து  சிறிது நேரம் இளைப்பாறியபின் மெதுவாக வகுப்பறைக்கு நகர்ந்தார்.

                                              3.

“சேரிங்கிராஸ் சேரிங்கிராஸ்ல எறங்குறவங்கலாம் வெளிய வாங்க” என்ற நடத்துனரின் குரல் கேட்டு விழிப்படைந்து பார்த்தாள் பானு. தந்தை பெரியார் நினைவு சின்னத்தினருகில் பேருந்து மெதுவாக நின்றது.நேரம் 9.15 ஆகியிருந்தது.

பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்று தொலைவான மேட்டுப்பகுதியில் கல்லூரி அமைந்துள்ளதால், முண்டியடித்து பேருந்து படியில் இறங்கி அவசர அவசரமாக சாலையைக் கடந்து மேடான படிகள் நிறைந்த நடைபாதையில் வேகவேகமாக மூச்சிரைக்க ஓட்டமும் நடையுமாய் கல்லூரி நுழைவு வாயிலை அடையும் போது  வாட்ட சாட்டமாகக் கோட்டு சூட்டுடன்  முதல்வரும் இன்னும் சில பேராசிரியர்களும் நுழைவுவாயிலின் முன் நிற்பதை அதிர்ச்சியுடன் பார்த்த பானு. 

“கேட்ல வாட்ச்மேன்  தானே நிப்பாரு. என்ன? பிரின்ஸ்பல் நிக்கிறாரு. ஒருவேளை வாட்ச்மேன் வேலையையும் இவரே எடுத்துகிட்டாரோ”

என மனதுக்குள் நினைத்துக் கொண்டே அருகில் செல்லும் போதுதான் புரிந்தது  பானுவிற்கு, தாமதமாக வரும் மாணவர்களிடம் அக்குழு விசாரணை நடத்திக்கொண்டிருப்பது. அந்தச் சிறு கூட்டத்தில் கடைசியில்  பதற்றத்துடன் நின்று கொண்டாள் பானு. முதலாமாண்டு மாணவர்கள் கண்ணீருடன் நிற்க, இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மெதுவாக பேசிக்கொண்டிருந்தனர். “லீஸ்ல இருந்து கிளம்பி பஸ்ச புடிச்சி வரதே நமக்கு பெரிய கஸ்டமா இருக்கு இதுல இவனுங்க வேற கடுப்பேத்துரானுங்க, அதாவது பரவால்ல டீ! நைட்டு  அடிச்ச மழைக்கு எங்க வீடு விடியவிடிய  ஒழுக மழைத் தண்ணிய புடிக்க பாத்திரத்தை  மாத்தி மாத்தி வச்சுக்கிட்டிருந்தோம். யாருமே தூங்கவே இல்ல தெரியுமா, வீடே தண்ணி கோலமா ஆகிருச்சி” என முணுமுணுத்தனர் இரு மாணவிகள். மற்ற மாணவர்களிடம் முடித்து பானுவிடம் விசாரணையைத் தொடங்கினார்  முதல்வர்.

“எந்த இயர்?”

“சார் ஃபைனல் இயர்.”

“ஃபைனல் இயர் படிக்கிற காலேஜுக்கு கரைக்ட் டைம்கு வர தெரியாதா உனக்கு?”

“இல்ல சார் பஸ்சு கிடைக்கல அதான் சார் லேட்.

“பஸ் டைமுக்கு நீதான் கிளம்பனும் உனக்காக ஸ்பெசலா பஸ் வருமா?”

“சாரி சார்!”

கூட்டத்தில் நிற்கும் எல்லாரையும் மொத்தமாகப் பார்த்து பேச ஆரம்பித்தார் முதல்வர்

“இதுதான் உங்க எல்லாத்துக்கும் ஃபைனல் வார்னிங். இனிமே கரைக்ட் டைம்கு  வரணும். அப்டியில்லேனா  என்னோட ஆக்சன் வேற மாதிரி இருக்கும் எல்லோரும் அப்பாலஜி லெட்டர் எழுதி கொடுத்துட்டு கிளாசுக்கு கெளம்புங்க.”

தாமதமாக வந்து அப்பாலஜி எழுதுவதில் கைதேர்ந்த பானு  சில நிமிடங்களிலே எழுதிக் கொடுத்துவிட்டு அவசரஅவசரமாக வகுப்பறையை நோக்கி மீண்டும் ஓட  ஆரம்பித்தாள்.

துறை வளாகம் எங்கும் அமைதி சூழ்ந்திருக்க முதலாமாண்டு இரண்டாமாண்டு வகுப்பறைகளைத்  தாண்டி கடைசியில் இருப்பதுதான் பானுவின் மூன்றாம் ஆண்டு வகுப்பறை.

வகுப்பறை கதவு மூடியிருக்க  உள்ளே ஆசிரியரின் சத்தம் மட்டும் கேட்டது.

மெதுவாக கதவைத் திறந்து எக்ஸ்க்யூஸ் மீ சார்! என்றாள்.  உள்ளிருந்த பேராசிரியர் சில நொடி பானுவை உற்றுப்பார்த்து  கோபம் தலைக்கு ஏறியது போல், “உனக்கெல்லாம் அறிவே இல்லையா டைமிங்கு  காலேஜ்க்கு  வர தெரியாதா? கிளாஸ் எடுக்கும் போது லேட்டா வந்து இப்படித்தான் டிஸ்டர்ப் பண்ணுவியா? எனக்கு பஞ்சுவால்டி தான் முக்கியம். நேரத்துக்கு கிளாஸ்க்கு வர தெரியாத உனக்கெல்லாம்  படிப்புதான் ஒரு கேடு. இத்தனை பேர் இங்கே வந்து உட்கார்ந்திருக்கும் போது உனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் டைம்? இது என்ன உங்க மாமியார் வீடுனு  நினைச்சியா? நீயெல்லாம் எங்கே உருப்படப் போறே? உன்னையெல்லாம் படிக்க சொல்லி யார் அடிச்சது. வீட்ல கெடந்து தொலைக்க வேண்டியதுதானே.இங்க வந்து என் உசுர வாங்குறீங்க. போ என் கண்ணு முன்னாடி நிக்காத அந்தப்பக்கமாக போய் நில்லு நான் போனதுக்கு அப்புறம் இங்க வா”.

வகுப்பில் உள்ள அத்தனை மாணவர்களும் கதவருகில் தலைகுனிந்து நின்றிருந்த பானுவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். பானு குனிந்த தலை நிமிராமல் நின்றிருக்க.

கதவருகில் அமர்ந்திருந்த மாணவனிடம்,

“டோர க்ளோஸ் பண்ணு  அந்த சனியன் அந்தப் பக்கம் போய் தொலையட்டும்’ என்று பேராசிரியர் சொன்ன சில நொடிகளில் இரும்பு கதவு இழுத்து மூடப்பட்டது. மூடிய அந்த பெரிய கதவின் முன் குனிந்த தலையை நிமிர்ந்து பார்த்த பானு  மனதிற்குள் ஓடியது

” தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே”

அடுத்த கணமே

“ஒன்னும் கேட்க முடியாது”

 என நினைத்துக்கொண்டு ஓரமாய் நின்று கொண்டாள்.

வகுப்பறை வெளியில் நிற்க வைப்பது வாடிக்கை என்றபோதிலும் களைப்பில் லேசான பசியை உணர்ந்த பானு பையிலிருந்த ரொட்டியையெடுத்து சம்பல் ஊறிய சுவையோடு ருசித்துச் சாப்பிட்டாள். பசியாறி பயண இளைப்பாறி வெளியில் காத்துக் கிடந்தாள். பேராசிரியர்  வகுப்பை முடித்துக்கொண்டு வெளியில் சென்ற மறுகணமே  வகுப்பறைக்குள் பாய்ந்தோடி  தனது இருக்கையில் அமர்ந்தாள்.  காத்துக்கிடந்த தன் அன்புத் தோழி வான்மதியை கட்டியணைத்து வாழ்த்துகளில் அன்பை பரிமாறினாள். பானு வராமல் இருக்கவும் யாருக்கும் எந்த ஒரு சாக்லேட்டும் கொடுக்காமல் வைத்திருந்த வான்மதி முதல் சாக்லேட் எடுத்து பானுவிற்கு ஊட்டினாள். தன் பையினுள் வைத்திருந்த பிறந்தநாள் பரிசை வான்மதியின் கரங்களில் கொடுத்தாள் பானு. பரிசை பெற்று மகிழ்வோடு பிரித்து பார்த்தாள் வான்மதி,

அகம்மகிழ்ந்து பள்ளிசீருடையில் குழந்தைகள் சிரிக்கும் அட்டைப் படத்தைத்தாங்கிய புத்தகமிருந்தது  அது……..!

“விருட்சங்களாகும் விதைகள்” பாமா.

என்றிருந்தது.

ஹரிஹரன்.ஆர்

சாமானியர்களின் உரிமைகளை அதிகாரத்தின் காதுகளுக்கு எடுத்துச் செல்லவும், அதிகாரப் பகட்டை மக்கள் மேடையில் தோலுரிக்கவும் துடிப்பவன். காட்டையும் அது தரும் இசையையும் உயிரென சுவாசிப்பவன். சமூகநீதியான சமத்துவத்தையும் மரிக்காத மனிதத்தையும் தேடியலையும் ஒரு சாமானிய கவிஞன் இவன்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *