விசில் பறக்கும்
தகரக்கொட்டாய்களில்
ஆங்காங்கு ஓட்டைகள்
எதிர்ப்பு
சீழ்க்கை ஒலிகளுக்கு
பயந்தே
முடிதிருத்தும் நிலையம்
பட்டாசு
விற்பனை சிலைடுகளும்
வாஷிங்பவுடர் நிர்மா
விளம்பரமும் நிறுத்தப்படும்
சரோஜ் நாராயணசாமி யின்
வறுத்த குரலோடு
வயலின் பின்னணி இசை
இழைய
பூச்சியாகப் பறக்கும்
கெலிகாப்டரில்
வெள்ளசேதத்தைப் பார்வையிடும்
தலைமை மந்திரிக்கும்
விசில்சப்தங்களும்
ஹாய் ஹூய்களும்
ஸ்டாப்பிங் சிக்னல்கள்
விளம்பரமின்றி
தொலைக்காட்சி இயங்காது
அரைமணித்தொடருக்கு
மூன்று மணித்துளிகள்
இரண்டரைமணிநேர
திரைப்படத்திற்க்கு
மூன்றுமணித்துளிகளில்
கூந்தல் மயிர் தைலமும்
வில்லா விளம்பரங்களும்
கிட்காட்டை
மெல்லக்கிள்ளும்
யுவதி
உதிர்ந்த
ஒருபருக்கையை
விரல் நுனியில் தீண்டி
செவ்வாயில் இட்டு
ஒருமுழ சாக்கலேட்டு
தின்ன அசையும்
தாடைகளின் நடிப்பு
நளினம்..
ஓ..
விளம்பரமே
செல்பேசி காணொளியை யும்
கபளீகரம்
செய்துவருகிறாய்
ஸ்கிப் 1 2 3 4
என வீடியோவை நிறுத்தி-
பார்க்கும் எங்கள் பொறுமை
உணர்வுகளுக்கு
மதிப்பெண் போடுகிறாய்.
வினாடிகளுக்கு
ஆயிரமமும் லட்சங்களும்
எல்.ஆர்.சுவாமியே மேல்
எங்கள் பழைய
விளம்பரங்களுக்கு
ஐம்பதும் நூறும் என்று.
000

சூர்யமித்திரன்
இயற்பெயர் இ.செல்வராஜ்
சொந்த ஊர் காஞ்சிபுரம். தற்போது வசிப்பிடம் குடியாத்தம்.
படைப்புக்குழுமத்தில் நடுவர்
திரு.பெருமாள் முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை”விருத்த சேதனம்”ஆகும்.
2018.டிசம்பரில் பாதித்த பக்கவாதத்தால் மீண்டெழுந்தவர். மூன்றுகவிதைதொகுப்புகளை2020ல்2021ல்வெளியிட்டுள்ளார்.