சென்னை சோளிங்கநல்லூர் சிக்னல்.
சிக்னல் கிடைக்க பத்து நிமிஷம் ஆகும் என்பது தின நிகழ்வுகளில் மாறாத ஒன்று.
மாலை வேளைகளில் கார் இஞ்சினை அணைத்துவிட்டு கண்ணாடியை இறக்கிவிட்டு உட்கார முடியும் என்றால் அது மார்கழி மாதம் மட்டுமே முடியும்.
கொஞ்சம் இன்ஜினை அணைத்துவிட்டு, கார் கண்ணாடியை இறக்கி காத்து வாங்கலாம் என்று அருண் எண்ணினான். ஆனால், வெளி இரைச்சலையும், மாசுக் காற்றையும் அவனால் தாங்க முடியவில்லை. முப்பது வினாடிகளிலேயே அவன் மீண்டும் தன் சொகுசுக் காருக்குள்ளே சிறையானான். கார் வானொலியில் பன்பலைகளை ஒன்று ஒன்றாக மாற்றினான். பாடல்களைவிட விளம்பரங்களும், அரட்டைகளுமே பிரதானமாய் இருந்தது. அவனுக்கு போர் அடித்தது. ஏதேனும் சுவாரசியமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.
அப்பொழுது வெகு ஸ்டைலாக ஒருவன் அவன் கார் அருகில் வந்தான்.
தொப்பியில் ஒரு வினோதக் குறியீடு இருந்தது. டி-ஷர்டில் சேகுவாரா முறைத்துக் கொண்டிருந்தார். அழுக்கு படிந்த கால் சட்டை. கையில் டைரி ஒன்றை வைத்திருந்த அவன், கார் கதவை தட்டி பிச்சை கேட்டான்.
“அட.. இவன் பிச்சைகாரனா?” என்று மனது எண்ணிக் கொண்டிருக்கையில், அவன் கை, பர்ஸை தேடியது. அதிலிருந்து ரூபாய் நோட்டை உருவி அதை கொடுப்பதற்குள், சிக்னலில் பச்சை தெரிய, பின்னால் இருந்த பல வாகனங்கள், ஒலி எழுப்பி அவனை இம்சித்தது. ருபாய் நோட்டை கொடுத்துவிட்டு, சட்டென்று கண்ணாடியை ஏற்றிவிட்டு கிளம்பினான்.
அவன் சென்ற பின்பும் அங்கு வாகனங்களின் ஒலி அடங்கவில்லை. அது அந்தப் பிச்சைக்காரனால் ஏற்பட்ட ஓலி. ரூபாயை பெற்றுக்கொண்ட அந்தப் பிச்சைக்காரன், செய்வதறியாது அங்கு நின்றுக் கொண்டிருந்தான். காரிலிருந்து வெளிவந்த குளிர் காற்று அவனுக்கு இதமாக இருந்தது. ஆனால் அது காரணமில்லை. அவன் கையில் இருந்த மெஜந்தா நிறத்தாளே காரணம். அதை அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
முழுசாக இரண்டாயிரம் ரூபாய்.
‘ஏன் இரண்டாயிரம் ரூபாயை போட்டுச் சென்றிருப்பான்? அவனுக்கு தேவைப் படவில்லையா? பண மதிப்பீடு குறைந்ததா? இந்த நோட்டு செல்லாதா?’
குழம்பினான்.
அருகில் இருந்த டீக்கடைக்குச் சென்றான். யாரேனும் பண மதிப்பு குறைந்தது பற்றி பேசுகிறார்களா என்று தன் காதை தீட்டிக் கொண்டு கேட்டான். அவனுக்குப் படிக்கத் தெரியும், டீக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த செய்தித் தாள் விளம்பரங்களில், அதைப்பற்றி ஏதேனும் செய்தி இருக்கிறதா என்று தேடினான். அவனுக்குப் அப்படி ஒன்றும் புலப்படவில்லை.
காரை பார்க் செய்துவிட்டு கீழே இறங்கிய அருண், மீண்டும் கார் கதவை திறந்து தன் பர்ஸை எடுத்தான். அப்பொழுது, பிச்சைகாரனுக்கு தெரியாமல் இரண்டாயிரம் ரூபாய் போட்டு விட்டது உரைத்தது. “ச்சே.. இப்ப எங்கும் ரெண்டாயிரம் ரூபாய் கிடைப்பதில்லை, பத்திரமாக வைத்துக் கொள்ள நினைத்து, போயும் போயும் ஒரு பிச்சைகாரனிடத்தில் பறிகொடுத்துட்டோமே” என்று தனக்குள்ளேயே அங்கலாய்துக் கொண்டான்.
சமீபகாலமாக, அவனுக்கு அவனை சுற்றி உள்ளவர்களின் மேல் நம்பிக்கை குறைந்து வந்திருந்தது. ‘நேர்மை’, ‘நியாயம்’, எல்லாம் வெறும் வார்த்தைகளாகவே இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. இது கூட யாரோ திசை திருப்பி செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
பிச்சைக்காரன் அன்று இரவு தனக்கு கொடுத்த தோசையை தின்றுவிட்டு, தோசை பொட்டலத்தில் இருந்த இரண்டு ரப்பர் பாண்டை எடுத்து டைரியின் குறுக்கும் நெடுக்குமாகப் போட்டான். ஒளித்து வைத்திருந்த நோட்டை மேலும் பத்திரப்படுத்தி விட்டதாக எண்ணிக் கொண்டு தூங்கினான்.
அரைகுறையாகவே தூக்கம் வந்தது.
அவனுக்கு மாலை வேலைகளிலேயே டியூட்டி கொடுத்திருந்தார் அவனுடைய ஏஜென்ட். அவன் என்ன செய்வான் என்று தெரியாது, ஆனால் அவன் கோட்டா பணம் இதுவரை குறைந்தது கிடையாதது அவனுடைய ஏஜென்டிற்கு நிம்மதியாக இருந்தது.
மறுநாள் டியூட்டிக்கு கொஞ்சம் சீக்கிரமே கிளம்பினான். உற்சாகமாக கிளம்பிய அவன், தன் அழுக்கு பேண்டை போட்டுக் கொண்டவுனேயே உற்சாகம் குறைந்தது.
டியூட்டி ஆரம்பிக்கும் முன் ஒரு டீ சாப்பிடுவான். அவனுக்கு அந்த டீ-கடைக்காரன் கொஞ்சம் நட்பானவன். இருவரும் அவர்களுக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் நிறைய அரட்டை அடிப்பார்கள். க்ளாஸ் டம்ளரை தவிர்த்து, பேப்பர் கப்பிலேயே டீ கொடுக்கச் சொல்லி குடிப்பான். டீ மாஸ்டர் சில நாட்கள் அவனிடம் பைசா வாங்க மாட்டான்.
அன்று, டீ -மாஸ்டர் நல்ல மூடில் இல்லை. எவனோ ஐந்து பஜ்ஜி சாப்பிட்டு விட்டு மூன்றுதான் தின்னதாக வாதாடிக் கொண்டிருந்தான். “போடா.. திருட்டுப் பையா.. உங்ககிட்ட நல்லா சிரிச்சுப் பேசினா என்ன கேனயன்னு நெனச்சுப்பீங்களோ?” என்று திட்டிக் கொண்டிருந்தான்.
டீ சாப்பிடாமல் கிளம்பினான். வழக்கம் போல ஸ்டைலாக பிச்சை எடுத்து அன்றைய கோட்டாவை அடைந்து விட்டான்.
அதே சிக்னலில் வியாபாரம் செய்பவர்களிடம் சில்லறை வாங்கலாமென்றால் ஒருவருக்கும் இரண்டாயிரம் ரூபாய் எல்லாம் தேறாது, அவர்களிடம் இதைப் பற்றி சொல்லவும் முடியாது.
தவித்தான்.
“சே… பணம் எடுக்க, பணம் போடத் தெருத் தெருவா எவ்வளோவோ மெஷின் வெக்கறாங்க… சில்லற எடுக்க மெஷின் வைக்கலயே.. ஆனா அப்படி ஒரு மெஷின் வேண்டாம்… சில கடைகள்ல என்கிட்ட சில்லற கேக்கறாங்க.. சில சமயம் நூறு ரூபாய்க்கு சில்லறை கொடுத்தா, ஒரு ருபாய் கமிஷனும் தராங்க. எதுக்கு மெஷின் வரணும்?” சில பல யோசனைகளுடன் தன் முகாமிற்குச் சென்றான்.
வழக்கம்போல கணக்கு சரி பார்க்கப்பட்டவுடன், ஏஜென்ட் கொடுத்ததை சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றான். தூக்கம் வரவில்லை, இன்னும் யோசித்தான்.
‘சரி.. எனக்கு எதுக்கு ரெண்டாயிரம் ரூபாய் தேவை படுகிறது? ரெண்டாயிரம் ரூபாயில் என்ன செய்ய முடியும்? ஒரு சொகுசு கார் வாங்கி அதில் குளிர குளிர அமர்ந்துக் கொண்டு போக முடியுமா? முடியாது.. ஆனால்… ரயிலில் டிக்கட் வாங்கி ஜன்னல் சீட்டில் அமர்ந்து காத்து வாங்கிக் கொண்டு வேறு ஊருக்குச் செல்வேன்.. கட்டிட வேலை செய்வேன்.. உழைத்து சம்பாதிப்பேன்… இங்கிருந்து ஓடிவிட எனக்கு அது பயன்படும்.’
‘நாம போயி ரெண்டாயிரம் ரூபாய காட்டினா.. முதல்ல சந்தேகமா பாப்பாங்க.. ஏஜென்ட் கிட்ட தகவல் போனா அது வேற பிரச்சனை ஆகும்.. சீ… பத்து ரூபாயில கிடைக்கிற சந்தோஷம் ஆயிரம் ரெண்டாயிரத்துல கிடைக்கறதில்ல. எப்படித்தான் இந்தப் பணக்காரங்க நிறைய பணத்தை வச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்காங்களோ தெரியல. நம்மிடம் இருக்கும் இந்தப் பணம் நம்முடனேயே இருக்கட்டும். அதுவே அதற்கு சாபம். இனி எனக்கு கிடைக்கும் வசூலில், கொஞ்சம் கொஞ்சமாக அந்த டீ மாஸ்டரிடம் கொடுத்து சேர்த்து வைக்கச் சொல்லலாம். ஆயிரம் ரூபாய் சேர்ந்தவுடன் வாங்கிக் கொள்ளலாம்’
தூங்கிப் போனான்.
மறுநாள் மிக உற்சாகமாக கிளம்பினான்.
அன்று பார்த்த அதே கார் தூரத்தில் தெரிந்தது. முதலில் பார்த்த பொழுது அவன் அது என்ன கார் என்றெல்லாம் தெரிந்துக்கொள்ள விருப்பமில்லை. இன்று பார்த்தான். அது ஆடி ஏ3. எப்படியும் அது சிக்கனலில் மாட்டும். போகலாம் என்று விரைந்தான்.
பிச்சைகாரன் வருவதை அருணும் பார்த்தான்.
“அட.._____ தினமும் நான் ஆயிரம் ரெண்டாயிரம் தருவேன் என்ற பேராசை பிடித்தவன் போல” என்று கடுப்பானான். மீண்டும் பிச்சை கேட்டு வந்தால், திட்டி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்க, அவன் யோசனையை முடிக்க அவகாசம் கொடுக்காமல் மிக விரைவாக கார் அருகில் வந்தான் பிச்சைக்காரன்.
அருண் கண்ணாடியை இறக்க, பிச்சைகாரன் தன்னிடமிருந்த டைரியிலிருந்து ரப்பர் பாண்டை நீக்கினான்.
“சார்.. தெரியாம கொடுத்துடீங்க போல.. அஞ்சோ பத்தோ கொடுங்க சார்” என்று சொல்லிக்கொண்டே அந்த ரூபாய் நோட்டை தேடினான்.
தன்னிடமிருந்த அந்த மெஜந்தா நோட்டை, ஒரு சுருக்கமும் இல்லாமல் வைத்திருந்து, டைரியிலிருந்து எடுத்து அருனிடம் நீட்டினான்.
அருணுக்கு, நேர்மை, இன்னும் எங்கோ மிச்சம் இருக்கிறது என்ற உணர்வு வர “பரவாயில்ல.. உன் நேர்மையும் ஸ்டைலும் எனக்கு பிடிச்சுருக்கு… நீயே வச்சுக்க … எனக்கு இதை சம்பாதிக்க இருபது நிமிடம் போதும்” என்றான்.
காரிலிருந்து வந்த குளிர் காற்றை விட அவன் சொன்ன வார்தகைளின் குளிர்ச்சி அதிகமாக இருந்தது.
“சார்.. இரண்டாயிரம் ருபாய்.. சில்லறையா கொடுக்க முடியுமா?” என்றான்.
000
சம்மதம்
நேற்று கொஞ்சம் குடித்தேன். ஹாங் ஓவர் தலைவலி வரக்கூடாது என்பதற்காக நிறைய தண்ணீர் குடித்துவிட்டுத்தான் தூங்கப்போனேன். பாழாய்ப்போன மொபைலில் கால் வந்தது. அரை தூக்கத்தில் இருந்த நான் அதை எடுத்து ஒரு முறை பெயரைப் பார்த்தேன். “என் செல்ல அம்மா” என்று திரையில் காண்பித்தது. தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி “தூங்கரயா தம்பி.. எதோ தோணிச்சு அதான் வரலாம்னு நினைக்கிறேன்.. உனக்கு சனி லீவுதான? நான் வரேன்… நீ தூங்கு.. பொராவு பேசுறேன்” என்று சொல்லிவிட்டு வைத்தாள். இன்னும் இரண்டு நாளில் அம்மா வருகிறாள். வீட்டை சுத்தம் செய்து வைக்க வேண்டும். இன்னும் மூணு ஃபுல் இருக்கு. காலி பண்ண முடியுமா? முடியும். நாங்க நாலு பேரு சேர்ந்திட்டா முடியும். ஆனா சங்கர் கல்யாணம் ஆனதிலிருந்து எங்களுடன் வருவதில்லை. நாமளும் நிறுத்தனும். சரி, அம்மா எதுக்கு வருகிறாள்? எல்லாம் என் மாமா மகள் பஞ்சவர்ணம் பத்தி பேசத்தான். பெயர் பழைய பெயர்தான். ஆனால் அவள் மார்டர்னாகத்தான் இருப்பாள். அவள் செய்யும் அலப்பறை எனக்கு ஏனோ பிடிப்பதில்லை. மத்தபடி பிடிக்காது என்றும் இல்லை. சரி, அம்மா வந்து சொல்லட்டும் அதுவரை ஆறு மனமே ஆறு என்று என்னை சம்மாதானப்படுத்திக் கொண்டேன். நண்பனுக்கு ஃபோன் செய்தேன்.
“அம்மா வராங்கடா. சரக்கு உங்க வீட்டுல வச்சுகறியா” என்று கேட்டேன். அந்த ஏழரை எல்லாம் நமக்கு வேண்டாம்பா. நீயே உன் வீட்டுல இருக்கற பரண் மேல வச்சிரு. அம்மாவுக்கு எட்டுதானு மட்டும் பாத்துக்கோ. அப்படி இருந்தா வைக்காத. நான் இப்போ யோகா கத்துக்கறேன். தண்ணி அடிக்கரத நிறுத்திட்டேன். நவதானிய கஞ்சிதான் குடிக்கறேன். முன்னல்லாம் ஒரு மாடி ஏறி இறங்கினாலே தஸ்ஸு புஸ்ஸுனு மூச்சு இரைக்கும். இப்போ செம்ம கூலா ஏறி இறங்கறேன். கல்யாணம் ஆகப்போகுது இல்ல மச்சி”
“யாருடா பொண்ணு?”
“எங்க ஊரு பொண்ணுதான். பேரு காத்தாயினி. நல்ல மாடர்ன் பேரு பாத்துக்கோ. அடுத்த மாசம் பதினோராம் தேதி நிச்சயம் பண்ணறோம்”.
“வாழ்த்துக்கள் மச்சி”
இந்த பார்த்திபன் எங்க கிரிக்கெட் டீமுல எப்பவுமே டொல்த்மேன். அவனுக்கு கல்யாணம். நான் ஓபெனிங் பவுலர்.
கல்யாணமானா தண்ணி அடிக்கறத நிறுத்திடராங்க, பய புள்ளைங்க.
காத்தாயினி மாடர்ன் பெயராம். அந்தகாலத்துப் பெயரை இப்போ வச்சா மாடர்ன்னு சொல்லிகராங்க. பஞ்சவர்ணம் கூட மாடர்ன் பெயர்தான்.
சரி, அம்மா வந்தா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வேண்டியதுதான்.
00

ஆசிரியர் பெயர்: ஐசா
இடம்: மாம்பக்கம், சென்னை
இயற்பெயர்: சாய் கோவிந்தன்
வங்கியில் ஐ. டி சார்ந்த வேலை. சமீபகாலமாக சிறிய கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். பகுதி நேர தன்னார்வ பணிகளிலும் ஈடுபாடு உண்டு.