இரவெல்லாம் வெயில்

இயற்கைவெளியில் தன்னைத் தேடும் பசித்த கனவுகளென..

கவிதை மனதை சுருக்கெனத் தைத்திடும் கூர்வாளென்பான் மாகவி. காலவெளியில் தான் கண்ணுறும் காட்சிகளின் வழியே தனது இருப்பை ஆணித்தரமாக அடையாளப்படுத்த முனைந்து வரிகளுக்குள் தன்னையே ஒப்படைத்துக் கொள்பவன் கவிஞனாகிறான். சூழலின் நிகழ்வுகளுக்குள் தன்னைக் கரைத்தபடி உண்டாகும் கோபத்தையும் களிப்படையும் தருணத்தையும் உணர்வாக்கி எழுத்தின் வழியே நம்மை இளைப்பாற வைத்துவிடும் அவனது வரிகள் சமயங்களில் நமக்குள்‌ சமூகத்தையும் காட்சிப்படுத்திவிடுகிறது.

அன்றாட வாழ்வின் நிகழ்வுகளில் நடந்தேறும் பலவித நிகழ்ச்சிகளையும் அதன் காரணகர்த்தாக்களாகத் திகழும் எளிய மனிதர்களின் மனங்களையும் இரவெல்லாம் வெயில் சுமந்து வந்து வெளிச்சப்படுத்துகிறது. பூடகமான சொற்சித்திரங்கள் கடினமான வார்த்தைப் பிரயோகங்கள் மறைமுகமான பொருள் தேடல் போன்றவற்றையெல்லாம் களைந்து எளிய மொழியிலும் ஆழமான சிந்தனைகளிலும் கவியரசன் காட்சிப்படுத்தும் மனிதர்களை நாம் சந்தித்திருப்போம்;ஏன் சமயங்களில் நாமும் அப்படி இருந்திருப்போம். கவிதைகள் காட்டும் நிகழ்வுகளில் நம்மையும் நாம் உணரமுடியும்.

தன்னலமற்ற அன்பிலும் தாயுள்ளத்திலும் முளைத்திடும் கவிதைகளில் உலகத்தின் மீதான பெருங்கருணையே பிரசவமாகிறது. வெளிச்சத்தையே அடிநாதமெனக் கொண்டு விரிந்திடும் வரிகளுக்குள் அடங்கியிருக்கும் நேசமே வாசிப்போரை அன்பின் பக்கம் அழைத்துச் சென்றுவிடுகிறது. ‌பலவித மனிதர்களும் காலச் சூழலில் வாழ்வை பெருங்கொண்டாட்டமென அமைத்திட வழிவகுக்கும் குழந்தைகளின் மனமும் நாம் தொலைத்துவிட்ட கிராமத்தின் பசுமையையும் அதன்வழியே பெருகி வழிந்தோடும் காதலின் இன்பத்தையும் வாசல் வரை வந்து வழியனுப்பும் கடவுளின் தோழமையும் நூல் முழுக்க நிரம்பி வழிகிறது.

கூண்டில் அடைபட்ட பறவைகளின் வலிகள் உறவுகளைத் தொலைத்து கிராமத்தின் அழகியலை இழந்துவிட்ட வேதனைகள் வானைத் தொடக் காத்திருக்கும் பலூன்கள் தாயிடத்தைத் தேடும் புல்லாங்குழல் நொடிகளில் மாறும் வாழ்வின் போக்கு வாழ்வோடு ஒட்டி வரும் அழுத்தங்கள் மரணத்தையும் வரவேற்கும் வாழ்வின் சமநிலை தாங்கிக்கொள்ள நீளும் தோள்கள் இலையுதிர் காலத்தை ஏற்றுக்கொள்ளும் மரத்தின் மனநிலை வினை தீராத விநாயகர் கூண்டுகளைத் துறக்கச் துடிக்கும் விடுதலை வேட்கை ஆசைக்கும் தேவைக்கும் இடையே தத்தளிக்கும் குடும்பம் புலவனின் ஏழ்மையை உணர்ந்துகொண்ட மகளின் மனம் என நூலுக்குள் உலாவும் தருணங்களை வாசிக்கையில் சமூகத்தோடு சமர் செய்யும் மனமும் சமூகத்தை அரவணைக்கும் மனமும் ஒரு சேரக் கைவரக்கூடும்.

வானத்தை எட்டும் முயற்சிகளில் தான் வாழ்வின் நகர்தல் சுவாரசியமாகிறது குழந்தைகளும் பலூன்களும் கொடுத்திடும் குதூகலம் எப்போதும் இரட்டிப்பு மகிழ்வை ஏற்படுத்திவிடுகிறது என்பதையே நூலின் முதல் கவிதை

“பூமியிலிருந்து வானத்திற்கு

குதிக்க போராடிக் கொண்டிருக்கின்றன கையில் இருந்த பலூன்கள்””

         நமக்கு எடுத்துக் கூறுகிறது

புகழ் மாலைகள் பெருகும் போதும் உயரப் பறந்து சிகரத்தை எட்டும் போதும் எல்லா மனமும் தாய்மடியைத் தான் தேடி இளைப்பாறிக் கொள்ள விரும்புகிறது. உலகிற்கே இசை கொடுத்து உயிர்ப்பிக்கும் குழலுக்கும் தன் பிறப்பிடத்தை அடைவது பேரின்பமாகிப் போகிறது.

“” தன் மீது இசை மீட்கும்

இரகசியம் அறிந்த கரங்களைத் தேடவில்லை

தன் காயங்களுக்கு மருந்திட்டு

மீண்டும் தன்னை மூங்கிலாக்கும்

அதிசயமறிந்த கரங்களைத் தான் தேடுகின்றது

அந்த புல்லாங்குழல்””

        என்ற கவிதையில் எல்லைகள் தாண்டிப் பறந்தாலும் இருப்பிடத்தின் சொர்க்கத்தை எல்லோரும் உணர்ந்திடுவர் என்பதை கவிதை வெளிப்படுத்தி விடுகிறது.

வாழ்வெனும் கவிதையை வாசிக்க நினைப்பவர்களும் எழுத நினைப்பவர்களும் எப்போதும் நினைவில் கொள்ளட்டும் அவரவர் மனங்களில் அழுக்கு சேராமலும் அடுத்தவர் மனங்களை காயப்படுத்தாத நேசமும் நிரம்பி இருக்கும் வாழ்வை கவிதை என மலர வைத்து விடும் போக்கை விவரிக்கிறது பின்வரும் கவிதை.

“எத்தனையோ

அடித்தல் திருத்தல்களுக்கு பிறகு

நிறைவு பெறும் போது

பொருளில் மட்டும்

பிழைகள் வராமல்

பார்த்துக் கொள்ளுங்கள்

வாழ்வு ஒரு அழகிய கவிதை””.

நிதானத்தைத் தவற விட்டு அவசரத்தில் நகரும் வாழ்வின் வேகத்தில் முகமூடிகளே சில சமயங்களில் மனிதர்களை பாதுகாக்கும் கவசமாகின்றன. உள்ளிருக்கும் மனசைக் கண்டு கொள்ளாமல் போலி புன்னகை வேடமணியும் ஒவ்வொருவரும் இளைப்பாறி தன்னை உணர்வும் உற்சாகமாய் நடைபோடவும் ஏதேனும் ஒரு அன்புக்கரம் அவர்களுக்கு தலைகோதி விடும்போது மனிதம் உயிர்த்தெழ நேர்கிறது. முகமூடிகளுக்கும் நிறைந்திடும் வாழ்வைப் பேசுவது பேரன்பு தானே என்பதையே பக்கம் 18 இல் உள்ள கவிதை விவரிக்கிறது.

இல்லறம் நல்லறம் ஆவதும் தனிமனிதன் பொதுநலத்தைப் பேணுவதும் குடும்பத்தின் நகர்வு கோயிலென ஒளிர்வதும் பெண்ணின் மனதினில் பூத்திடும் எண்ணத்தில் ஒளிந்திருக்கிறது. தவறுகளையும் பேரன்பால் மன்னித்து வழிநடத்தும் அவளின் மனமே நமக்கான பாதையைக் கட்டமைத்து விடுகிறது

“என் வீட்டு கிருஷ்ணனின் காலடித்தடங்களை பாருங்கள்

என்று கூறியதும்

மனதில் எனது புல்லாங்குழல்

இசைக்கத் தொடங்கியது”

         என்ற வரிகளில் விரியும் பிரியமும் பாசமும் எல்லோருக்கும் எழும் போது வன்முறைகளின் தடங்கள் மண் மூடிப் போகக்கூடும் அல்லவா.

“யாருக்கேனும் சாயமற்ற

ஒரு புன்னகையின் நிறம்

நினைவுக்கு வருகிறதா?”

    பக்கம் 20

“உருவாவதும் நடப்பதும் முடிவதும்

என நொடிகளில் தான்

வாழ்க்கை””

         பக்கம் 21

“வானளவு பறக்க நினைக்கும் பட்டங்களுக்கு

கிடைப்பதெல்லாம்

நூலளவு சுதந்திரம்”

      இக்கவிதையே நூலின் ஆகச்சிறந்த கவிதையென ஒளி வீசுகிறது.

கட்டவிழ்த்துவிடப்பட்ட சுதந்திரம் பல சமயங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. விடுதலையின் உணர்வை உணரும் மனமே பறப்பதன் எலலையைத் தீர்மானிக்கிறது என்றும் இக்கவிதையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அன்பைச் சுமந்தபடி அலையும் மனதிற்கு பிறப்பும் இறப்பும் வாழ்வின் விழிகள் எனக் கொண்டே நகர்த்தும் உலகில் எழுதப்படும் எல்லா வரிகளும் அழகாகிவிடுகின்றன என்று பக்கம் 26ல் விளம்புகிறது கவிதை.

“நமக்கு மேலும் இருக்கிறார்கள்

கீழும் இருக்கிறார்கள்

சுழலும் போது

மாறித்தான் ஆக வேண்டும்

பூமி ஓர் உருண்டைதானே.”

           பக்கம் 29

“அடைவதில்தான்

குறிக்கோளாக இருக்கிறார்கள்

என்னோடு வா

நாமாவது இழக்கலாம்

இந்த கூண்டுகளை.”

           பக்கம் 34

“மழையிலும் மாற்றமில்லை

வெயிலிலும் மாற்றமில்லை

ரசனையில்தான் ஏற்படுகின்றன

பருவ கால மாற்றங்கள்”

         பக்கம் 36

சேர்ந்து இருப்பது புலமையும் வறுமையும் என்ற வரிகளுக்கு உயிரூட்டிச் செல்லும் இந்த கவிதை அதை அடுத்த தலைமுறைக்கு உணர்த்தி விடுவதை என்னவென்று சொல்வது? பிள்ளையின் மனநிலையைக் கொஞ்சுவதா? புலவனின் ஏழ்மையைக் கண்டு வருந்துவதா? என்பதில் வெளிப்படுகிறது வாசிப்போரின் மனநிலை.

“நான் கொண்டாடி மகிழ்ந்த

கவிதையின் சொந்தக்காரன்

இப்போது என்ன செய்கிறான்

காற்றையும் ஆகாயத்தையும்

காலை உணவாகக்

கவிதைக்குக் கொடுத்துவிட்டு

உனக்குச் சூரியனை விழுங்கத் தருகிறேன் என மகளிடம்

சொல்லிக் கொண்டிருக்கிறான்

சூரியன் வேண்டும்

நிலா போதும் என்கிறாள்

தந்தையின்

வறுமையை அறிந்த மகள்”

               பக்கம் 40

ஒற்றை வானம் தான்

காண்போரின் மனநிலைக்கேற்ப

காட்சிகளை மாற்றி விடுகிறது.

மழையும் வெயிலும் அப்படித்தான்

மனங்களில் வழியும் எண்ணங்களே மகிழ்வையும் மரணத்தையும் நிர்ணயிக்கிறது என்பதை

“அனைவருக்கும்

வானம் மழையைத்தான்

தருகிறதா?”

     வரிகள் வழிமொழிகின்றன.

       பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு

சாலையைப் புரிந்து கொண்டு வாகனம் இயக்குபவரிடம் உள்ளது. சாலையே தனக்கு சொந்தம் என அளக்க நினைக்கும் அவசரங்களால் நிறையக் குடும்பங்களின் நிம்மதி குலைந்து விடுகிறது என்பதை எச்சரிக்கிறது

“மனதால் வானத்தில் பறக்கலாம்

வாகனம் பறக்காதென

யார் சொல்வது

சாலைகளின் மீது

அவ்வளவு

கோபம் கொள்பவர்களுக்கு”

       என்ற வரிகள்.

“அனைத்து குட்டிகளுக்கும்

ஒரே நேரத்தில்

பாலூட்டும்

தாய்ப்பன்றிக்கு

எப்படியோ தெரிகிறது

ஒவ்வொன்றுக்குமான

பசியின் அளவு.”

      பக்கம் 44

“யார் மீதோ

வெளிப்படுத்த இயலாமல்

அப்படியே விழுங்கிய

கடும் கோபங்களை

சாவகாசமாக அமர்ந்து

மீண்டும் எடுத்து

அசைபோடுகின்றேன்

ஜீரணத்தே

தீர்க்க வேண்டும் என்று”

        தன்னை உணர்ந்தவர்கள் எப்போதும் தன்னையே கொல்லும் சினத்தை வென்றுவிடத் துடிப்பார்கள். விரியும் சினத்தை விழுங்கி நகரும் தருணங்களில் நம்மை நாமே விமர்சித்துக் கொள்ளவும் வழி பிறந்து விடுகிறது.

“கையைப் பிடித்து

தரிதரவென

இழுத்துச் செல்கிறது

சிரமத்தைக் கொடுக்கிறது நிர்ப்பந்திக்கிறது

மயக்க மருந்து கொடுக்காமல்

அறுவை சிகிச்சை

செய்வது போல் உள்ளது

தலைப்பிற்கு

கவிதை எழுதுவது”

        எண்ணச் சிறகுகளை பரந்து விரியும் வானத்தில் பறக்க விடுங்கள். கூண்டுக்குள் அடைத்து வைப்பது போல கொடுமை வேறில்லை. கவிதையும் அப்படியே தலைப்புக்குள் தன்னை ஒருபோதும் அடைத்துக் கொள்வதில்லை.

“”வலியோ

ஏமாற்றமோ

ஏக்கமோ

ஏதுமில்லை

இந்த காற்றின் மேல்

எத்தனை சுகமாக நடக்கிறது

முழுவதும் சரணடைந்துவிட்ட

ஒரு இலையின் மரணம்”

         வாழ்வின் பரிபூரணத்தைப் பேசும் மரணத்தை மனிதர்கள் எப்போதும் அஞ்சியபடியே எதிர் கொள்கின்றனர். இயற்கை வசம் தன்னை ஒப்படைத்து விட்ட துறவு மனம் மனிதனுக்கு எப்போதும் வாய்ப்பதில்லை. ஆறறிவு மனிதனுக்கு இலை சொல்லும் இந்தப் பாடத்தில் நிறைந்திருக்கிறது போட்டி பொறாமை துறந்த புதியதொரு வாழ்வு.

“நாம் கனவென்ற பெயரில்

அடுத்த நொடியின்மீது

உரிமை கொள்ளலாம்

இந்த நொடிக்கும்

அடுத்த நொடிக்கும் இடையில்

திடீரென உலகம் இடிந்து போகலாம்

எண்ணியதைவிட

மிகச் சிறியது தான்

இந்த வாழ்வு”

     பக்கம் 66

யாருக்காக யாரால் வரையப்பட்டது ஒழுக்கம் எனும் கூடும் எந்த அடிப்படைக்குள் ஒழுக்கத்தை நிறுத்தி வரையறை செய்திட முடிகிறது என்பதையும் எல்லோருக்கும் உணர்த்தி விடுகிறது பக்கம் 75 இல் உள்ள ஒழுக்கம்

“அவ்வளவு பாறைகளையும் வளைவுகளையும் தாண்டி

மிதந்து வந்து

கரை ஒதுங்கியது

ஒரு இலை

பெருமூச்சு விட்டபடி

கரையேறுகிறது காற்று.””

       பக்கம் 96

“பொம்மைகளுக்காக

அழுத குழந்தை

பொம்மைகளுக்கு மத்தியில்

அம்மா அம்மாவென

மீண்டும் அழுகிறது”

         பக்கம் 99

“ஒரு மழைத்துளியில் கரைந்து

நதியிலும்

கடலிலும்

மேகத்திலும்

என்னை இழந்து

மீண்டு வந்திருக்கிறேன்

நதிகடல்மேகமாய்.”

       பக்கம் 109

“குழந்தைகள்

கண்ணாடிகளாக

மாறி விடுகிறார்கள்

அவர்களின் முன்

யார் வந்து நின்றாலும்

குழந்தைகளாக

மாறி விடுகிறார்கள்.”

     பக்கம் 119

     தனக்குக் கிடைத்திருக்கும் வாழ்வில் கிடைத்திடாதவற்றை எண்ணி வருந்தாமல் போதாமைகளை எண்ணிப் புலம்பாமல் இருப்பதில் நிறைவைத் தேடி முன்னேறத் துடிக்கும் மனிதர்களின் இருப்பை உறுதி செய்கின்றன இந்நூலின் கவிதைகள். வாசிப்போரின் மனதினுள் காலத்தைக் கோடிட்டுக் காட்டி கவிஞன் அறிமுகப்படுத்தும் எல்லா மொழியிலும் ஒளிந்திருப்பது அவரவர் வாழ்வின் இருப்புதான் என்பதை கண்ணாடியாக்கி விடுகிறது கவிதைகள். தன்னை இயற்கையாகவே எண்ணிக்கொண்ட கவிமனம் தானும் எல்லோருக்கும் பயன்படும்வகையில் இயற்கையாகவே மாறிப்போய்விடுகிறது.இயற்கையின் மீதும் சக உயிர்களின் மீதும் பேரன்பு கொண்ட மனதினில் இரவெல்லாம் வெயில் இன்னும் நிறைய சிந்தனைகளை விதைக்கட்டும்.

(பிகு. ஒற்றுப்பிழைகள் வார்த்தைகள் சேர்த்து எழுதாமல் தனித்து நிற்றல் போன்ற சில குறைகளைக் களைந்திருப்பின் வாசிப்பில் ஏற்படும் இடர்ப்பாடுகளைத் தவிர்த்திருக்கலாம்.)

கி.கவியரசன், கவிதைத் தொகுப்பு, முதல் பதிப்பு செப்டம்பர் 2024

பக்கம் 120, விலை ரூ 150

வெளியீடு மௌவல் பதிப்பகம்

000

நூலகாலஜி

தமிழின் முன்னணி அறிவியல் மற்றும் அறிவியல் புனைக்கதை எழுத்தாளர் தன் அறிவியல் புனைக்கதை நூல்களுக்காக சாகித்திய அகடமி விருது தமிழ் வளர்ச்சித் துறை விருது உட்பட பல பரிசுகளை பெற்றுள்ளவர் சிறார்களுக்காக 150 க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த மூத்த படைப்பாளி என்ற பெருமைக்குரிய ஆயிஷா இரா நடராசன் அவர்கள் எழுதிய நூல் நிலையங்கள் பற்றிய தொகுப்பு நூல் இது.

ஆதியில் பிறந்த மனிதன் இனக்குழுக்களாக பிரிந்து பல்வேறு கண்டங்களை அடைந்து தனது வாழ்க்கைப் பாதையை சீர்படுத்திக் கொள்ள தொழில்களை தொடங்க ஆரம்பித்தான். தனது எண்ணங்களை வெளிப்படுத்த சைகை மொழியில் ஆரம்பித்த அவனது பயணம் மொழியின் வழியே புதிய புதிய உயரங்களைத் தொட உதவியது அந்த வகையில் அறிவின் தேடல்களான புத்தகங்களின் வழியே புதியதொரு உலகத்தைப் படைப்பதற்கு அவனுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

 அறிவுச் சுரங்கங்களாகவும் அறிவுப் புதையல்களாகவும் பொதிந்திருக்கும் நூல்களின் ஆலயமே நூலகங்கள். அத்தகு நூலகங்கள் எங்கெல்லாம் எப்படி பயன்படுத்தப்பட்டன என்பதையும் ஒரு மாபெரும் அரசை வீழ்த்துவதற்கு நூலகம் உதவி இருக்கிறது என்பதையும் ஒற்றை மனிதரால் நடத்தப்பட்ட நூலகம் ஒரு புதிய தலைமுறையையே உருவாக்கியது என்பதையும் தானே கைப்பட எழுதி தானே வெளியிட்டு தனக்குள்ளேயே வைத்துக் கொண்ட நூலக மனிதரைப் பற்றியும் இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஒரு நூலகத்தின் தோற்றம் வளர்ச்சி பாதுகாப்பிற்காக தனது உயிரையே கொடுத்தவர்கள் பற்றிய சரித்திரத்தை இந்த நூல் பேசுகிறது. வாசிப்பை இயக்கமாகக் கட்டமைத்ததால் அதிகாரத்தால் கடும் தண்டனைகளுக்கும் எண்ண முடியாத கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டவர்களுக்கு நூல் எவ்விதமான பயன்பாடுகளை அள்ளித் தருகிறது என்பதையும் இந்த புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது. மக்களிடையே மறுமலர்ச்சியையும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் புதிய புதிய எல்லைகளை அடைவதற்கான பாதைகளை அமைத்துக் கொடுக்கும் நூல்களைப் பாதுகாக்கும் நூலகங்களின் வளர்ச்சியையும் அதற்காக தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் வழங்கி பொதுவெளியில் சிறந்ததொரு மனிதர்களாக உலாவிக் கொண்டிருந்த மக்களைப் பற்றியும் இந்தப் புத்தகம் 13 கட்டுரைகளின் வழியாக சிறப்பானதொரு நூல் நிலையத்திற்குள் சென்று வந்த அனுபவத்தை கற்றுத் தருகிறது.

 நூல்களை வாசித்து அறிவை மேம்படுத்திக் கொள்ள உதவும் நூலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்து தற்கொலைக்கு முயலும் ஒருவர் அதே நூலைக் கண்டு மனம் திருந்தி பல கோடி வருமானம் ஈட்டி பல கோடி மக்களை வாசகர்களாகக் கொண்ட சுய முன்னேற்ற எழுத்தாளராக உருமாறுகிறார். தற்கொலைக்கு முயன்ற போது அவர் படித்த புத்தகத்தின் பெயர் “நான் இறப்பதற்கு முன்”. உலகின் தலைசிறந்த சுய முன்னேற்ற நூல்கள் 32 எழுதி மிகச் சிறந்த விற்பனையாளராகக் கருதப்படுபவர். தனது வாழ்க்கை வரலாற்றையே மக்களுக்கான சுய முன்னேற்ற நம்பிக்கை நூலாகத் தருகிறார் ஓக் மாண்டினோ.

மனிதனால் மனிதனின் தலையீடுகளால் புவியில் ஏற்படும் விபரீத மாற்றங்களை 1930 களிலேயே புவி பரிணாமத்தின் அடுத்த படிநிலையாக அறிவித்து சுற்றுச்சூழலியல் புவி வெப்பமடைதல் பருவநிலை மாறுபாடு என 21 ஆம் நூற்றாண்டின் சிக்கல்களை முன்னறிவித்து அதிர்ச்சி அளித்தவர் வெர்னாட்ஸ்கி. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இவர் தனது ஊரில் உள்ள நூலகம் தரைமட்டமாக்கப்படுவதை எண்ணி அந்த நூலகத்தில் உள்ள நூல்களை அனைத்தையும் அழிந்து போன ரயிலில் பாதுகாப்பாக வைத்து பிறகு அதை நூலகமாக மாற்றிக் காட்டியவர்.

 கல்வியறிவு பெற்ற சமூகம் தன்னை உணரவும் அதன் வழியே உலகத்தை கற்றுணரவும் பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்த புரட்சியாளரின் மனைவி நதேழ்தா குரூப்ஸ்கயா. சோவியத் புரட்சியில் முக்கியப் பங்காற்றியவர். லெனின் அவர்களின் துணைவியார். அது மட்டுமல்ல அவரது சிறப்பு. புரட்சிக்கு பின் அமைந்த சோவியத் அரசாங்கத்தில் பெண்கள் ஒரு சதவீதம் கூட கல்வியறிவு இல்லாத நிலையில் அவர்களுக்கு கல்வியறிவு வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து 80,000 நூலக வாசிப்பு மையங்களைத் திறந்து அதன் வழியே ஆயிரக்கணக்கான பதிப்பகங்களை உருவாக்கி நூல்களை எல்லோரது வசமும் கொண்டு செலுத்தியவர் அவர். உலகிலேயே ஒரு நூலகத்தில் உயிர் துறந்த மேதை எனும் ஒப்பற்ற புகழோடு குரூப்ஸ்கயா மாஸ்கோ லெனின் நூலகத்தில் பயிற்சி வகுப்பின் இடையில் மரணம் அடைகிறார்.

ஒரு மனிதனின் மூளையைப் பற்றி எத்தனை புத்தகங்கள் எழுதிவிட முடியும்? 10 20 என சொல்ல முடியும். ஆனால் அறநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களும் 1300 ஆய்வுக் கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கிறது என்றால் அந்த மூளையின் சிறப்பை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம் அல்லவா. மாபெரும் இயற்பியல் விஞ்ஞானி என்று போற்றப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் மூளையைப் பற்றி மட்டுமே எழுதப்பட்ட புத்தகங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் அவரது மூளையின் சிறு பகுதியும் பத்திரமாக பாதுகாக்கப்படும் இடம் பிலடெல்ஃபியா நூலகம். 18 மொழிகளில் வெளிவந்துள்ள இந்த நூல்களில் ஐன்ஸ்டீன் மூளையைப் பற்றி மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இவரது மூளை அறிவியல் ஆராய்ச்சிக்காக சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு பல அறிஞர்களின் கைகளுக்குச் சென்று சேர்ந்து நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சிவப்பு நுழைந்து விடக் கூடாது என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் நூலகங்களை மூடியது அதே சிவப்பு அடையாளத்தோடு சிலந்தி மனிதன் அதை இன்னும் பல லட்சம் நூலகங்களாக திறக்கவும் வைத்தது காலத்தின் விசித்திரம்.

 நூலகத்தில் பல எழுத்தாளர்களின் நூல்கள் பல மொழிகளில் இடம் பெற்றிருக்கும். ஆனால் ஒரே எழுத்தாளர் தனது கைப்பட எழுதிய பிரதிகளைக் கொண்ட நூலகம் ஒன்று செயல்பட்டது என்றால் அது எழுதிய எழுத்தாளரின் சிறப்பை அல்லவா குறிக்கிறது. அந்த நூலகம் முழுவதும் ஒருவரே எழுதிய நூல்களால் ஆனதாக இருந்தது. அந்த உலகத்தில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு நூலுக்கும் வரிசை எண் தரப்பட்டிருந்தது. அதைவிட அதிர்ச்சி அவை ஒரே ஒருவர் தனது முத்தான கையெழுத்துப் பிரதிகளால் எழுதியது மொத்தம் 317 நூல்கள். அவை அந்த தனித்து மரித்த நூலகன் மூலமே எழுதப்பட்டது. இந்த நூல்களின் வழியே ஏறத்தாழ 600 கண்டுபிடிப்புகள் பிற்காலத்தில் கண்டறியப்பட்டன.அப்படி ஒரு மாபெரும் விஞ்ஞானி தான் நிக்கோலாய் டெஸ்லா. இவரது வீழ்ச்சி எடிசன் என்ற ஒரு மனிதரின் பொறாமை குணத்தால் நிகழ்ந்த வரலாற்றை அறிவியல் உலகம் இருட்டடிப்பு செய்து வைத்திருக்கிறது. எங்கே தனது கண்டுபிடிப்புகள் தனக்கு பணத்தை சம்பாதிப்பதற்கு டெஸ்லா இடையூறாக இருப்பார் என்று எண்ணி அவர் மீது அவதூறுகள் பரப்பி அவரை விஞ்ஞானியாக ஏன் மனிதனாகக் கூட உலகத்தில் நடமாட விடாமல் மாபெரும் கொடுமைகளைச் செய்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். இன்று நாம் பயன்படுத்தும் கைப்பேசி முதல் வைஃபை என்று அழைக்கப்படும் இணைய சேவை வரை அனைத்தும் டெஸ்லா அவர்களின் கண்டுபிடிப்பு என்பதை இந்த நேரம் நாம் நினைவில் கொள்ளுதல் அவசியம்.

ஒரு நூலகம் மனிதர்களுக்கிடையே அறிவைப் பெருக்கி கண்டுபிடிப்புகளுக்கு வழி செய்யும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும் ஆனால் மறைவாக செயல்பட்ட ரகசிய நூலகம் ஒரு நாட்டில் புரட்சியே ஏற்படுத்தி புதியதொரு குடியரசு ஆட்சியை மலர வைத்தது என்றால் அதை நடத்திய போராளிகளின் அறிவுப்புலமை வெளிப்படுகிறது அல்லவா. ஹங்கேரியில் நடைபெற்ற எர்வின் ஸ்ஸாபோ நூலகம் அது.

மிதக்கும் நூலகம் என்ற பெயரில் ஆந்திராவில் நிறைய இடங்களில் படகுகளின் மூலம் மனிதர்களுக்கு வாசிப்பதற்கான மிகப்பெரிய இயக்கத்தை உருவாக்கிக் காட்டியவர் தமிழகத்தின் பொதுவுடமைத் தோழர் சிங்காரவேலர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் தோழர் பட்டூரி நாகபூசனம்

வங்காளத்தில் பள்ளி பாடசாலை செய்தித்தாள் என்று எதுவுமே நுழைய முடியாத 36 கிராமங்களுக்கு பல மைல் தூரம் தனது தோள்பையிலும் தலையிலும் தானே தனது சொந்த செலவில் வாங்கிய புத்தகங்களைச் சுமந்து சென்று சாதாரண மக்களின் வாசிப்பை மேம்படுத்தி தனது வாழ்நாளையே தியாகம் செய்த மாபெரும் நூலகர் போலன் சர்க்கார் ஏற்படுத்தியது நடமாடும் நூலகம் என்ற இயக்கம். இதன் வழியே இந்தியா மற்றும் பங்களாதேஷ் இலக்கியங்கள் வங்காள மக்களுக்கு பரிச்சயமாகின. நடக்கும் நூலகம் 2011 இல் வங்கதேச அரசின் உயரிய விருதான எக்குஷே படக் அவருக்கு வழங்கப்பட்டது. தான் இறக்கும் 98 வயதில் இறந்து போவதற்கு 6 நாட்களுக்கு முன்பு வரை நடக்கும் நூலகமாக இருந்து மக்களுக்கு அறிவு வழி காட்டியவர் போலன் சர்க்கார்.

ஒருமுறை இரு முறை அல்ல கல்நெஞ்சக் கயவர்களால் மூன்று முறை திட்டமிட்டு தீயிட்டு கொளுத்தப்பட்ட பெருங் கனவு பொதிந்து கிடந்த நூலகம் யாழ் நூலகம். ஒரு லட்சம் புத்தகங்கள் 4800 ஓலைச்சுவடிகள் 1800 கையெழுத்து பகுதிகள் என அனைத்தையும் எரித்த சதிச் செயல் மீண்டும் அந்த யாழ் நூலகத்தை கட்டமைப்பதற்கு மக்களிடையே மாபெரும் எழுச்சியை விதைத்தது என்றால் நூல்களின் மீதும் அவை தரும் வழிகாட்டிகளின் மீதும் மக்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே வெளிப்படுத்துகிறது.

     மனிதன் தனக்கான மன உளைச்சல் துயரம் சிக்கல் அவமானம் அதீத பதட்டம் என அனைத்துத் துன்பத்திற்கும் வடிகால் தேடும் ஓர் கலங்கரை விளக்கமாக நூல்களைத் தேட துவங்குகிறான். ஒரு நூலகம் திறக்கும்போது சிறைச்சாலை மூடப்படுகிறது என்பார்கள். அந்த வகையில் மனிதனுக்குள் ஒளிந்து கிடக்கும் பொறாமை பழிக்குப் பழி வாங்குதல் வன்முறை எண்ணம் போன்றவற்றையெல்லாம் களைந்து அவனை புதிய புதிய சிந்தனைகளுக்குள் நுழைத்து உலகையே ஒன்றிணைக்கும் மாபெரும் கருவியாக நூல்கள் திகழ்கின்றன. அத்தகைய நூல்களை பாதுகாக்கும் நூலகங்கள் எத்தனை பேர் உழைப்பிலும் தொடர்ச்சியான போராட்டத்திலும் தொடங்கப்பட்டு இருக்கும் என்பதையும் நூலகங்களின் வரலாற்றையும் இந்த புத்தகம் அறியத்தரும் அதே வேளையில் இன்னும் இன்னும் நூல்களைத் தேடி வாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் புதியதொரு பாதையையும் காட்டி விடுகிறது. இதுபோன்ற நூல்களை வாசிக்க வைத்து மேலும் மேலும் நூல்களின் மீதான எனது அறிவுத்தேடலை விரிவாக்கும் பேராசிரியர் சோ.மோகனா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.

ஆயிஷா இரா.நடராசன்

பக்கம் 96, விலை ரூ 90, வெளியீடு பாரதி புத்தகாலயம்

000

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர். மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு ((நூலேணி பதிப்பகம் தீராக் கனவை இசைக்கும் கடல் (2023 அன்பு மொழி (2024) என நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *