கண்ணுக்குத் தென்பட்டவரை ஆகாசத்தில் ஒரு வெள்ளியும் இல்லை, ஆங்காங்கே இருக்கிறதோ என்னவோ அதனையும் கருமேகம் தன்னகத்தே மறைத்து வைத்துக் கொண்டது… இன்றோ அம்மாவாசை, ஆதலால் நிலவோ விடுப்பெடுத்து வீட்டில் உறங்கிப் போனது. வானத்து இருளெல்லாம் பூமியில் எதிரொலிக்க நிலமெல்லாம் இருள்… இருள்… இருள்…

அக்கரிய இருள் சூழ்ந்திருந்த நிலப்பரப்பில் அங்கும் இங்குமாய் தட்டுப்பட்ட  சில மின்மினியின் வெளிச்சத்தையும் மொத்தமாய் ஆக்கிரமித்துக் கொண்டது ஒரு டார்ச்சின் ஒளி. இடது கையில் அந்த டார்ச்,வலது கையில் தோள்பட்டைக்கு சற்றும் குறைவான உயரம் உள்ள ஒரு வேல் கம்பு கூறிய முனையுடன். வெளியே தெரிந்த தலைமயிர் நரைத்திருந்தது. அந்த நரையின் நிறத்தடர்த்தி அங்கே இருக்கும் மொத்த மயிர்களும் வெம்பஞ்சை போலத்தான் இருக்கும் என புரிய வைத்தது. அது மொத்தமும் வெளியே தெரியா வண்ணம் தலையில் உருமா கட்டி வாடைக்காற்று போகாதவாறு அதை காதுக்கு கீழ் வரை இழுத்து விடப்பட்டிருந்தது. ரோட்டோர புதர்களில் இருந்து வரும் பூச்சிகளின் சத்தத்திற்கு நடுவே “சரக் சரக்” என்ற அவரது தோல் செருப்பின் சத்தத்தை பரவ விட்டு வலசை ரோட்டில் நடந்து கொண்டிருந்தார் வனராசா. அவரது கண்கள் நாளாப்பக்கமும் சுழன்று கொண்டிருந்தது. கண் தான் பார்க்கும் திசையை முடிவெடுத்ததும் கை தானாக டார்ச்சை திருப்பியது.

அன்றிரவு வலசை ரோட்டில் வனராசா கால் படாத இடமே இருக்காது என்று சொல்லும் அளவிற்கு அனைத்து இடங்களிலும் ராவி விட்டார் தட்டுப்பட்ட பாடில்லை. அவ்வளவு நடந்தும் அவரது கால் சோர்ந்து போகவில்லை மாறாக முகமே. இனியும் இது ஆகாது என அந்த வழி திரும்பினார். ஊருக்குள் நெருங்குகையில் எம்ஐடி யின் சவுண்டை அதர விட்டுக் கொண்டு பால்கார சுப்பண்ணன் எதிரே வந்து கொண்டிருந்தான், விடிய மூன்று மணி இருக்கும்.

என்னய்யா காவலுக்கு போய் வாரிகளாக்கும்? என்று கேட்டுக் கொண்டே சுப்பண்ணன் வண்டியை நிறுத்தினான். வனராசாவின் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருக்கும் சுகந்தியும், முருகனும் மகளுடன் எதிரே சென்றனர். அவர்களைப் பார்த்துக் கொண்டே, நிற்காமல் “ஆமா சுப்பு” என்று ஒரு கேனைச் சிரிப்புடன் நகர்ந்தார் வனராசா.

வண்டியை முறுக்கி முன்னே சென்றான் சுப்பண்ணன். அந்த விடியலிலும் அவன் மூளை சரியாக வேலை செய்தது. ஆமா இந்தாளு பகல் காவலுக்குள்ள போவாப்ல இவ்வள வெள்ளனா இந்தப் பக்கோ திரிஞ்சுக்கிட்டு இருக்காப்லயே! வானத்தை அன்னாந்து பார்த்தான். அது சரி அது சரி அம்மாவாசையாக்கும் அதேங் கணக்கு, என சிரித்துக் கொண்டே வண்டியை கடுசாக முறுக்கினான்.

அவனுடைய அந்த சிரிப்பிற்கு பின்னால் காரணம் ஒன்று இருக்கிறது. இவன் மட்டுமல்ல இந்த ஒரு காரணத்திற்காகவே வனராசாவை நினைத்து ஊர் சிரிக்கும். இதை தவிர்த்து விட்டுப் பார்த்தால் வன ராசாவிற்கு ஊரில் நல்ல பெயர் தான் இருந்தாலும் அந்த ஒன்று மட்டுமே…

“இது சுத்த பைத்தியக்காரத்தனமப்பா இதுல என்னத்த ஏக்கம் வேண்டியது கெடக்கு. மனுசனுக்கு இதெல்லாம் ஒரு கொறையா வாழ்க்கைல. அவெவனுக்கு ஆயிரம் ப்ரச்சன கெடக்கு முக்கி மொணங்கி இத்தன வருஷம் சொத்தச் சேத்து வச்சவிங்க நம்ம. இன்னைக்கு பாரு ஆனக் கஞ்சி இல்லாம சொந்த வீட்லயே பிச்ச எடுத்து திங்காத கொறையா அத்தனையும் குடுத்துப்புட்டு பெத்த புள்ளைக கிட்டயே புடுங்கு பெத்துகிட்டு திரியிரோம்” என்று ஒருவர் சொல்லி முடிக்க.

ஆனா அவெ வெவரமானவன்ல இருக்குற தோட்டங்காட்ட எல்லாத்தையும் மூனா பங்கி ரெண்டு மயங்களுக்கும் ஒதுக்கி விட்டுட்டு ஒன்ன தனக்குன்னும் தம் பொண்டாட்டிக்கின்னும் வச்சுக்கிட்டான்ல. அவெம் பங்க குத்தகைக்கு விட்டுட்டு அந்த தோட்டத்திலேயே பகக் காவலுக்கும் போயிட்டு வரயான். இத்தன சொகுசான வாழ்க்கையில இருக்கும் போது கூட இன்னும் அந்த விசயத்துல மாற மாட்டேங்கிறானே…

ஏய் மெல்லப் பேசப்பா… அவனுக்கு தெரிஞ்சுச்சுன்னா வெளக்கங்குடுத்தே ஆளக் கொன்றுவியான். அப்றோ அவங் கேக்கிற கேள்விக்கெல்லாம் அம்மால பதில் சொல்ல முடியாது.

இங்க நம்ம பேசுறத்தே அவந் தோட்டத்து வரைக்கும் கேட்குதாக்கும் அட போயா…

வன ராசாவை பற்றி இப்படி பேசிக் கொண்டிருப்பவர்கள் யாரும் அல்ல அவரது கூட்டுக்காரர்கள் தான். சிறு வயதில் இருந்தே ஒன்றாய் ஓடி ஆடித் திரிந்தவர்கள் இப்போது அறுபத்தைந்தை கடந்துவிட்டது. ஊர்த் திண்ணையில் புங்க மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு அன்றாடம் ஆடு புலி ஆட்டமும்,இப்படி கதையாட்டமும் நடக்கும்…

திண்ணையைச் சுற்றி பொட்டு பொடுசுகள் கூட்டம். ஒரு பக்கம் பாண்டி, ஒரு பக்கம் தொட்டு விளையாட்டு என குழுவிற்கு ஒன்றாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். இன்றும் அது போலத்தான் நடந்தது. பொழுதாகியும் காலியாகாத ஊர்த் திண்ணைக்கு வந்து சேர்ந்தார் வன ராசா…

-என்னப்பா வனோம் (வனம்) இன்னிக்கு சோலி எப்புடிப் போச்சு ?

-தண்ணி எடுத்து விட்டேன் தென்னங்கன்டு ஊண்டுனே சுத்தி முத்தித் திரிய அப்புடியே பொழுது ஓடிருச்சு… ஒங்களுக்கெப்டி?

-போச்சு போச்சு…வசவ வாங்க இந்தா இங்கன வந்து கதய பேசவுமா போச்சு…

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு வந்து திண்ணையில் அமர்ந்தார். மலையாண்டியின் காதருகே சென்று,

-என்னப்பா எம்பேச்சு ஊடால வந்துச்சாமே என்ன செய்தி?

-எப்பயும் போலத்தா நீ நைட்டு வலசப்பக்கமா போனதப் பத்தி பேசிக்கிருந்தோம்…

-யாரு சொன்னா சுப்பண்ணனா ?

-அவனேதே…

மும்மரமாக போய்க்கொண்டிருந்த ஆட்டத்தில் மலையாண்டி நகட்ட வேண்டிய ஒரு கல்லை நகட்டி புலியிடம் சிக்கவிருந்த ஆட்டை காப்பாற்றினார் வனராசா. புலியின் கூட்டுக்காரர்கள் வனத்தை முறைத்தனர்…

மலையாண்டி ஆரம்பித்தார்,நீ ஏனப்பா இப்புடி ஊர்க்காரய்ங்க மெல்றதுக்கு தீனியாகுற? அந்தக் கருமத்த விட்டொழிஞ்சிட்டுத்தே போறதுதான. இத்தன வயசுக்கு அப்புறமும் அந்த கருமத்த (என்று சத்தத்தை குறைத்து முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டார்)

“பயப்படாத ஒன்னுமில்ல சொல்லு” என்று வனம் சொல்ல சுற்றி இருந்தவர்கள் எல்லாம் சிரித்தனர்…

-ஒனக்கிது சிரிப்பாருக்குல்ல…

-யோவ் இல்லய்யா,சொல்லு.

-அது ஒரு வெட்டிச்சோலி அது ஒன்னுக்காகத்தே ஒம்பேரே கெடுது அம்புட்டுதே நாஞ் சொல்லுவே…அங்கிருப்பவர்கள் அனைவருக்குமே மனதில் இருப்பது இதே நினைப்புத்தான் மலையாண்டி கூறியதை அனைவருமே ஏற்பார்கள். வனராசாவின் ஆசை அப்படிப்பட்டது…

வன ராசாவின் ஆசை என்பது குடும்பம் ஊரை பொறுத்தவரை மட்டுமல்ல இதை புதிதாக கேள்விப்படும் எவருக்கேனும் இது ஒரு விபரீத ஆசைதான் என்ற எண்ணத்தை தோற்றுவித்து விடும். வன ராசாவின் வாழ்நாள் கனவே கனவிலும் கூட வரக்கூடாது என்று பலர் விரும்பும் பேயை, தான் சாகும் முன்னே ஒரு முறையேனும் தன் கண்களால் பார்த்து விட வேண்டும் என்பதுதான்…

பெத்தா அஞ்சாறு என்ற கணக்கை எல்லாம் தாண்டித்தான் போகும். வனராசா பிறந்த காலத்தில் நமக்கும் நாலஞ்சு வாரிசு வேணாமா? என்ற கணக்கிலும்,வரிசையாய் பெண் பிள்ளையாய் பிறந்திருக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டாமா? என்ற கணக்கிலும், பிள்ளைகளை பெத்து எடுத்த காலம் ஆனால் வனராசாவோ வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளையாய் வாய்த்துப் போனார். அவருக்கு பிறகு ஒன்று கூட வயிற்றில் தங்கவில்லை…

“பசிச்சா தின்னு அடம் புடிச்சா கெட” என ஆக்கின சோறு பல வீடுகளுக்கு பத்தாமல் பசியாய் கிடந்தவர்களின் மத்தியில், வனராசாவின் அம்மாவோ அவருக்கு சில சமயங்களில் நிலாவைக் காட்டி,வான் நட்சத்திரங்களைக் காட்டி சோறு ஊட்டி விடுவார், இல்லை என்றால் பேய் தான் பூச்சாண்டி வந்துருவான் ரெட்ட வாலு பூச்சாண்டி,மூணு கண்ணு பூச்சாண்டி,நாலு கையி பூச்சாண்டி,மோகினி பேய், கொல்லிவாய்ப் பிசாசு,தலை இல்லாத முண்டம் என அடுக்கடுக்காய் பல பேய்கள் ஒவ்வொரு நாளாய் சாப்பிட வழி வகுத்துக் கொடுத்தது…

வயது ஏறியது, இப்போது சாப்பிடாமல் அடம் பிடிக்கும் போதெல்லாம் கெஞ்சுவார்கள்,அதற்றுவார்கள் பேயை எல்லாம் இழுக்க மாட்டார்கள், நட்சத்திரங்களைக் காட்ட மாட்டார்கள், விட்டு விட்டால் வயிறு கிள்ள ஆரம்பித்து விடும்,பிறகு வயிற்றுக்கு கொஞ்சமாய் போட்டுக் கொள்வார். இன்னும் கொஞ்சம் வயது ஏறியது. இப்போது சாப்பிடாமல் எல்லாம் இல்லை அதெல்லாம் நன்றாகவே நடக்கும். பின் பொய் சொல்வது, திருடுவது போன்ற செயல்கள் எல்லாம் செய்யும்போது “இதெல்லாம் தப்பு டா பொய் சொன்னாவோ,திருடுனாவோ சாமி கண்ண குத்திரும்” என பயம் காட்டினார்கள். இப்படி வயது வயது ஏற ஏற ஏதோ ஒன்று…

நிலா வானத்தில் மிதக்கிறது,சாமியோ சிலையாய் ஏதோ ஒரு உருவில் இருக்கிறது. ஆனால் நம்மை பயம் காட்டிய பேய்கள் மட்டும் எப்படித் தான் இருக்கும் என்று ஆர்வம் உள்ளார வன ராசாவிற்கு வளர்ந்து கொண்டே இருந்தது. அவர் வயது அதனை பொய்யாக இருக்குமோ என்று ஏற்றுக் கொள்ள முற்பட்டாலும், மனமோ இல்லையா இல்லாமல் ஏன் இருக்கும் பின் எப்படி அவர்கள் சொல்லி இருப்பார்கள். நான் கேட்கவே அடிக்கடி இரவு நேரங்களில்,சில நேரம் பகல் பொழுதிலும் கூட வலசை ரோட்டில்,நாலு புளியமரம் தோப்புப் பக்கம்,பங்களா பக்கம் பேய் நடமாட்டம் இருக்கும் என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறேனே என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொள்வார்…

அவர்கள் பார்த்தார்களோ இல்லையோ ஆனால் வன ராசாவிடம் சொல்லும்போது மட்டும். வேலய முடிச்சிட்டு வர்றப்ப நம்ம தோப்பு பக்கம் தான் தூரத்துல யாரோ நிக்கிறாப்ல தெரிஞ்சுச்சு அப்புறம் ஒன்னையுங் காணோ கிட்டக்க போகப் போக பக்கத்துல சட்டுனு சைக்கிள் முன்னாடி வெள்ளை சீலையில் தல நெறைய மல்லியப் பூ வெச்சிக்கிட்டு கொலுசு சத்தம் “சிங்கு சிங்கு”ன்னு ஒரு சிரிப்பு சிரிச்சுச்சு பாரு என்னயப் பார்த்து…

இன்னொருவன், “நா பகல்லயே பாத்தனப்பா” நாலு புளியமரம் பக்கம் கெறக்கமா இருக்குன்னு ஒரு டீய குடிச்சுட்டு போய்கிருந்தே. ஒன்னுக்கு வருதுன்னு மறவா ஒதுங்குனே. ஆளரவமில்ல, அடிச்சு முடிச்சிட்டு திரும்பி ஓரெட்டு வக்கிறே தோள புடிச்சு ஒரு கை இழுத்துச்சு. பின்னால திரும்புனா யாரையுங் காணோ. மறுக்க அதே மாறி, நாந் திரும்பவேல்லயே சைக்கிள எடுத்துட்டு ஒரே ஓட்டம். ஒரு வாரத்துக்கு காச்ச வந்து கெடையில கெடந்தனப்பா.

என கதை கதையாய் சொல்லுவார்கள்…மச்சு வீடுகள் அதிகமாக உருவாக ஆரம்பித்த காலகட்டம் அப்போதிருக்கும் சிறுசுகளிடம் ஒரு புது பேய் கதை ஓடிக் கொண்டிருந்தது.

“நைட்டு பண்ணெண்டு மணிக்கு மொட்ட மாடிக்கு போனேன்னு வையி மூலையில முனி தலய குமிஞ்சு ஒக்காந்துருக்கும். நீ சத்தம் போட்ட முழிச்சிக்கிரும் அப்பறோ நீ தர்சுதே. ஆனா சத்தம் போடாம போயி அதோட முடிய மட்டும் ஒன்ன எடுத்துட்டன்னு வச்சுக்க. பெறகு நீ சொல்றதெல்லாம் அது கேக்கும். அந்த முடிய மட்டும் நம்ம பத்தரமா வச்சுக்கணும். அதை மட்டும் அந்த முனி கண்டுபிடிச்சிருச்சு உன் உசுர எடுத்துரும். அதுக்கு தா நம்ம தொடையில ஓட்டைய போட்டு அந்த முடிய உள்ள வெச்சு தச்சிரணும். அப்புடி தச்சுடோம்னா நம்மள ஒன்னும் பண்ணாது. நம்ம வேணுங்கிறத அது கிட்ட கேட்டு வாங்கிக்கலாம்”…

இந்தக் கதையை பொடுசுகள் சொல்லி கேட்ட மாத்திரத்தில் “போட்டேன்னு வச்சுக்க யாருடா சொன்னது ஒங்களுக்கு இதெல்லாம்? போங்கடா” என விரட்டி விடுவார். உங்க அம்மாப்பாட்ட சொல்லி தோல உரிக்க சொல்றே இருங்க என சொல்லிக் கொண்டே இரண்டு பேரை முறைத்துப் பார்த்தார். அக்கூட்டத்தில் வன ராசாவின் மகன்களுமே இருந்தனர். சொன்னது போலவே அவர்களுடைய தோல்கள் உரிக்கவும் பட்டது…

தன் தோட்டத்து வெள்ளாமைகளையும் பார்த்துக் கொண்டு தோட்டத்தில் வேலையில்லா நாட்களில் மற்றவர்களின் தோட்டத்திற்கும் வேலைக்கு சென்று வம் பாடுபட்டார். தன் மகன் சோட்டுச் சிறுசுகளின் அந்த முனி கதை கேட்ட அடுத்த மூன்று வருடத்திற்குள் மச்சி வீடு ஒன்றை கட்டி விட்டார். ஒரு தோட்டத்தையும் கூட விற்றுவிட்டார் அதற்காக. அப்போது அவரது மகன்களும் கூட அந்தக் கதையை எல்லாம் மறந்து போய்விட்டனர் ஆனால் வனமோ இரவு பணிரெண்டு மணிக்கு சரியாக மொட்டை மாடிக்கு போய்விடுவார். அது தெரிந்ததிலிருந்தே இரண்டு மகன்களும் தனது அப்பாவை வித்தியாசமாக பார்க்க ஆரம்பித்தனர். ஊர்காரர்களும் தான்.

அங்கு பேயைப் பார்த்தேன் இங்கு பேயைப் பார்த்தேன் என்று சொல்லுவார்கள். ஊர்சனம் கேட்டுவிட்டு நகர்ந்து விடும் ஆனால் வனமோ பேயைப் தேடி பேயாய் அலைவார். இரவில் எவரும் போக அஞ்சும் இடங்களுக்குக் கூட தனியாக சென்று வருவார்…

* * * * * * * * * *

கோபமாக இருந்த மலையாண்டியின் தோள்களை தட்டிக் கொடுத்து “சரியப்பா நீங்க சொல்றது வாசியே கேக்குறேன் போதுமா” என ஒரு சிரிப்பைப் போட்டார்…

-ஆமா ஆமா கேட்டுட்டுத்தே மறு வேல என்ன? என அவர்களும் சிரித்துக் கொண்டனர். திண்ணைக்கு அந்தப் பக்கம் இருந்து சில குரல்கள் வந்தது.

-வயசு எம்புட்டு ஆச்சு இன்னும் இதையெல்லா  நம்பிகிட்டு இப்படி திரிஞ்சா சிரிக்கத் தான செய்வாங்க?

-அதான் ஊருக்கே தெரியுமே மாப்ள

என வன ராசாவை சீண்டினர்…

வன ராசாவை கேலி செய்யும் இவர்கள் சிறுவயதில் வன ராசாவிடம் முனிக் கதை சொன்ன கூட்டம், அவர்கள் தான் இப்போது வரை வனராசாவை கேலி செய்கிறவர்களும் கூட வன ராசா மகனின் தூண்டுதலின் பேரில்.

நாங்களே அதெல்லா மறந்துட்டோம். எவனோ எங்கயோ கெளப்பிவிட்ட கதையை இன்னும் நம்பிகிட்டுக் கெடந்தா இவர என்னன்னு சொல்லுவாங்க?

-எலேய் என்ன எகத்தாளமா! என மலையாண்டி வெடித்தார்.

-பெரிய புழுத்தாண்டி மாரி பேசிக்கிட்டு இருக்கீங்க அவெ காத் தூசிக்கு வருவீங்கலாடா நீங்கல்லா என சொல்லிவிட்டு வன ராசாவின் மகனை ஏறிட்டார். நீ இப்ப பொழக்கிற பொழப்பு தனத்த ஓன் வயசுல அவெ பண்ணியிருந்தயான்னா இன்னயேரம் பொச்செரிய அடுத்தவே தோட்டத்துல வேல பாத்துக்கிட்டு அவெங்கிட்ட புடுங்கு பெத்துகிட்டு கெடந்திருப்ப. சொத்த சேத்து வச்சு ஒன் கையில குடுத்தியான்ல அதுக்கு ஒம் பேச்சு சரிதானப்பா, ரொம்பச் சரி நீ பேசு…

-சின்ன வயசுலேந்து ஆயரோம் பேச்சு கேட்டாச்சு இவரால ராத்திரில தோட்டத்துக்கு போனாக் கூட என்னடா ங்கொப்பேங் கூட தொணைக்கான்னு கேக்காம, ஏன் அப்புடி யோசிக்காம கூட இங்க எவனாச்சும் இருப்பானா? சொல்லு மாமா. ஓன் மச்சினனுக்கு வக்காலத்து மட்டும் வாங்க வந்துட்ட. நீ எத்தனை தரஞ் சொல்லிருப்ப கேட்டாரா…அம்மா போனதுலேருந்து நானும் என் வீட்டுக்கு வான்னு கூப்ட்டுகிட்டுதே இருக்கே, ஏதோ நாந்தே அண்ட மாட்டேங்குற  மாதிரியில்ல தனியா கெடக்குறாப்ல! ஏ அந்த காட்ட நாங்க பாத்துக்குற மாட்டோமா, கஞ்சிதே ஊத்தாம விட்ருவோமா? கடேசி காலத்துல ஏங் கஷ்டப்படணுங்குறே காட்ட எம் பொறுப்புல விட்டுட்டு அங்க வந்து இருக்கச் சொல்லுங்க…

“நீங்கல்லாம் எங்க சுத்தி வந்தாலும் எதுக்கு அடி போடுவீங்கன்னு  தெரியாதாக்கும் போட”…

-மாமா தேவையில்லாததெல்லாம் பேசிக்கிட்ருக்காத அந்தாள காட்டுக்கு போக வேணாண்டு சொல்லு..

பேச்சு கடுக்க, கடுக்க வன ராசா திண்ணையிலிருந்து எழுந்து சைக்கிளேறி புறப்பட்டார்.

தெருவிற்குள் நுழைந்தார், காலையில் பார்த்த முருகன் வீடு இன்னும் பூட்டி தான் கிடந்தது. அவர்கள் மருமகளுடைய சொந்தம் தான் என்ற போதிலும் பேச்சுவார்த்தை என்பதென்னவோ கம்மிதான். பார்த்தால் ஒரு சிரிப்பு காலையில் அது கூட அவர்களிடமிருந்து வந்திருக்கவில்லை. கொஞ்ச நாட்களாகவே ஒரே சண்டை தான் வீட்டிற்குள், ஏனோ அவர்களிடம் வனராசா எதையும் கேட்டுக் கொள்ளவில்லை…

எப்போதும் போலவே இந்த இரவும் அவர் கிளம்பத் தவறவில்லை. ”முந்தானால் ஓடப் பக்கமாக ஏதோ ஒன்னு எனக்கு திகில குடுத்துச்சுப்பா” என வேலுச்சாமி சொன்னது நினைவு வர, ஓடைப்பக்கம் கிளம்பிவிட்டார்…

இன்றும் அவர் எதையும் கண்டிருக்கவில்லை. இறந்து போன தன் மனைவியாவது தன் கண் முன் தோன்றி இந்த ஆசையை நிறைவேற்றி விட மாட்டாளா என்று கூட அவர் யோசித்ததுண்டு. இரவு ஒன்றிற்கு மேல் இருக்கும் முருகன் வீட்டில் லைட் வெளிச்சம் தென்பட்டது. ராத்திரி கூடவா சண்ட போட்டுக்கிட்டு என வீட்டருகினில் சென்றார். வீட்டுக்கு வெளியே நிறைய செருப்புகள் கிடந்தது. வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது யாரோ தேம்பித் தேம்பியலும் சத்தம் கேட்க பின்பக்கம் ஓடிச் சென்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். முருகன் சுகந்தியின் மகள் உத்தரத்தில் ஆடிக்கொண்டிருந்தாள் கை கால்கள் உதற,கண்கள் திரண்டு வந்தது, நா வெளியே வர எத்தனித்துக் கொண்டிருந்தது. அவள் உயிர் அடங்குவதற்குள் காப்பாற்றி விட வேண்டுமென முன்பக்க கதவுகளை மடால் மடாலெனத் தட்டினார். உள்ளிருந்தவர்களோ இதை எதிர்பார்த்து இருக்கவில்லை. யார் என்று தெரியவில்லை எப்படி திறப்பது என உள்ளே குழப்பம், வனராசாவின் கைகள் தட்டுவதை ஒரு நொடி கூட நிறுத்தவில்லை திறக்கப்பட்ட கதவுகளையும் சுற்றி நின்றிருந்த ஆட்களையும் தள்ளி விட்டு விட்டு அவள் தூக்கிட்ட பக்கமாக ஓடினார். அங்கே அருகில் நின்றிருந்த வனராசாவின் மகன் தான் அவரை தடுத்து நிறுத்தினான்.

-லேய் லேய் உள்ள அந்தப் புள்ள தூக்குல தொங்கிட்ருக்குடா, காப்பாத்துங்கடா

-நீ மொதல்ல நில்லுய்யா என தடுக்க அவனையும் மீறிக்கொண்டு விசும்பினார்,அங்கிருந்த நாலைந்து பேர் அவரை பிடித்து நிறுத்த முருகனும் சுகந்தியும் ஒரு பக்கமாக அழுது கொண்டிருந்தனர்.

யம்மா, பச்சப் புள்ளமா அவள விட்றாத தாயி போயி நீயாச்சும் காப்பத்தும்மா ஓம்புள்ள தானம்மா அவ உத்தரத்துல ஆடுறத பாக்க என்னாலயே முடியல நீங்க எப்புடிம்மா, எனச் சொன்னதும் தேம்பல் சத்தம் அதிகமானது. “யோவ் நீ போயா அங்கிட்டுங்குறே” என வனராசவை மூலையில் தள்ளினான் மகன்.

“முடிஞ்ச்சு” என ஒரு குரல் கேட்டது. வனராசாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. குடுகுடுவென ஓடிச் சென்று உத்தரத்தில் தொங்கியவளை பார்த்தார். நா வெளியே தள்ளியிருந்தது, கை கால்கள் செயலற்று பொம்மையைப் போல அசைவுகளற்று இருந்தாள். சுற்றி இருந்தவர்கள் உத்தரத்திலிருந்து அவளை கீழே இறக்கினார்கள் வனராசாவே பேச்சற்றுக் கிடந்தார்.

முருகனும் சுகந்தியும் அவளை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தனர் கொஞ்ச நேரத்திலேயே அவ்வீட்டை தேடி சொந்தங்கள் வர ஆரம்பித்தனர். அழுகை சத்தங்கள் ஆள் கூடக் கூட ஒப்பாரியாக மாறியது சிறிது நேரத்திலேயே அந்த வீடு இளவு வீட்டுத் தோரணைக்கு மாறிப்போனது.

வனராசா நடந்ததையெல்லாம் அவரின் கூட்டுக்காரர்களிடம் சொன்னார், ஒவ்வொருவருமே அவரைத்தான் சமாதானப்படுத்தினார்கள். நிலை கொள்ளாமல் கத்தினார்…

யோவ்,என்ற சத்தத்துடன் வனராசா பக்கம் வந்தான் அவன் மகன். ”நீ சும்மா இருக்க மாட்டியா, ஓனக்கிப்ப என்ன ப்ரச்சன? ஏன் சத்தத்த குடுத்துட்டுருக்க, பேசாம ஒக்கரா மாட்டியா அங்கிட்டு போயா மொதல்ல”…

லேய், “நீங்க என்ன பண்ணிருக்கீங்கன்னு தெரியுமாடா? அது பாவம்டா அந்த பாவத்தை பண்ணிட்டு எப்புட்றா இப்புடி இருக்கத் தோணுது எதுவுமே நடக்காத மாரி”…

-நீ ஒன்னும் மெதுவா பேச வேணாம் சத்தமாவே பேசு. இங்கே இருக்க ஒவ்வொருத்தருக்குந் தெரியும் இங்க என்ன நடந்திருக்குன்னு எதுக்கு மழுப்பி பேசுற. எத்தன தாட்டி சொல்லி சொல்லி வளத்துருப்போம் கண்டவந்தே வேணும்னு நின்னா வேறென்ன செய்றது? அதே தூக்கி தொங்க விட்டாச்சு. சாவட்டும் நாற முண்ட மானத்த வாங்குறதுக்குன்னே பொறந்திருக்கா…

-மனுசய்ங்க மாதிரியாடா நடந்துக்குறீங்க? கொஞ்சமாச்சும் ஈவு இரக்கங்கறது இல்லையாடா? எல்லாந் தெரிஞ்சும் ஒன்னுங் கேக்காம, ஒரு பொண்ண கொன்னுபுட்டு ஒரு குத்துலுமே இல்லாம இப்படி சகஜமா இருக்கீங்க? ஒரு பொம்பளையும் ஏன்னு கேக்காம, ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கீங்களே.. யாராச்சும் வாயத் தொறங்களேன் என ஊர்க்காரர்களை பார்த்துக் கேட்டார்…

-தேவையில்லாத வேல பாத்துட்ருக்க ஒழுங்கா போயிரு என வனராசாவே அந்த இடம் விட்டு வெளியேறச் சொல்லி சிலர் சத்தம் போட்டனர்…

“இங்க இருக்க ஒவ்வொருத்தரும் இதத்தாயா பண்ணிருப்பாங்க யாரும் யாரையும் கேள்வி கேக்க முடியாது. கேள்வி கேட்கட்டுமே நாளைக்கு அவங்க புள்ள இத செஞ்சா அவங்க என்ன பண்ணுவாங்கன்னு கேளு” என சொல்லிவிட்டு ஊராரைப் பார்த்தான் வனராசாவின் மகன்…ஒருவரும் அவன் கூறியதை மறுத்துப் பேசவில்லை…அவன் சொன்ன அந்த வார்த்தையை கேட்டு ஒப்பாரிச் சத்தம் கூட ஒடுங்கிப் போய்விட்டது…

-நீ போய் சொல்லு யார்ட்டப் போய் சொல்லனுமோ சொல்லு. ஒன்ன ஒரு பயலும் நம்ப மாட்டான். பேய் பேய்ன்னு பேயத் தேடி அலையற ஒன்ன யார் நம்புறான்னு பாப்போம். உன்ன தான் பைத்தியக்காரன்னு ஊர் சொல்லும், ஏன் நானே சொல்லுவே பைத்தியக்காரப் பயலேன்னு. புள்ள வீட்ல உக்காந்து திங்க என்னயா வலிக்குது, இந்த வயசுல சொத்த வச்சுக்கிட்டு என்னத்த பண்ணப் போற? என தன் மனதில் இருந்த மொத்த வன்மத்தையும் சமயம் பார்த்து கொட்டித் தீர்த்தான் வனராசாவின் மகன்…

ஊர்க்காரர்கள் ஒருவர் வாய் எடுக்கவில்லை, கூட்டுக்காரர்களுமே கூட வாய் திறக்காது அமைதியாய் இருந்தனர்.

பேசத் திராணியற்று புலம்பிக்கொண்டே அவ்விடம் விட்டு நடந்தார் வனராசா, “பேயி பேயின்னு பைத்தியக்காரத்தனமா அலைஞ்சதால ஒரு உசுர போக்கடிச்சதக்கூட எங்கயுஞ் சொல்ல முடியாம போச்சே என்னால, இப்ப தான்டா நல்லா தெளிஞ்சுருக்கு என் பைத்தியக்கார மூளைக்கு,  ஊருக்கு வெளிய பேயத் தேடித் தேடி அலைஞ்ச நானு ஊருக்குள்ள ஒருபோதும் இவங்ய்கள சரியா பாக்காம விட்டுட்டேனே, எனக்கு எங்கடா இனிமேலு பேயி தெரியப் போகுது நீங்க தான் கொன்னு கொன்னு சாமியாக்கிறீங்களே”

00

“நித்வி” என்கிற புனைப்பெயரில் சிறுகதைகள் எழுதுகிறேன்.

என்னுடைய சிறுகதைகள் இணைய இதழ்களிலும், சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளும் பெற்றிருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *