மழை வெள்ளப் பாதிப்பு
கூடு தேடி பறந்து வருகின்றன
மரம் இழந்த பறவைகள் ,
,
ஒரு பாடலை முடித்து
இன்னொரு பாடலுக்குள் நுழைந்துவிட்டார் இளையராஜா
இன்னுமும் முதல் பாடலின்
முதல் வரிகளிலே பயணப்படுகிறது
பேருந்தும் நீயும் நானும்
இறங்க வேண்டிய நிறுத்தமும் ,
,
எதாவது உனக்கு வாங்கிட்டு வரவா என்று கேட்டும் ஏதாவது
ஒன்றை வாங்கிட்டு வாடா என்று
சொல்லும் அம்மாவுக்கு
எல்லாவற்றையும் வாங்கிட்டு போனேன்
அம்மா தான் இல்லை வீட்டில்
தூங்கும் போதும் படரும்
கனவு போல இதுவும் கனவாக
இருக்ககூடாதா என்றே
கடக்க நினைக்கிறேன்
நடக்க நடக்க
பின்தொடர்ந்தே பயணப் படுகிறது
என்னிலிருந்து வழியும்
கண்ணீர் துளிகள் நூறு ,
,
ஒரு வெயிலுக்கும்
இன்னொரு வெயிலுக்குமான
இடைப்பட்ட நேரத்தில்
என் மீது படரும் சிறு நிழல் போல
படர்ந்து அழிகிறது
உந்தன் பேரன்பு,
,
அப்பாவுக்கு
மழையில் நனைவதென்றால்
ரொம்ப பிடிக்கும்
சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும்
அவருக்காகவே
வியர்வை மழையை
வீசிவிட்டு செல்கிறது
சூரியனை சுமந்து சுற்றும் மஞ்சள் வானம்,
,
மழையும் நின்றபாடில்லை
பசியும் அடங்கியபாடில்லை
பொங்கி பசியாற்றிய அடுப்பெங்கும்
ஆற்றுநீர் ஊற்று
பூனை எங்கே என்று கேட்கும் மகன்
யாரேனும் வருவார்களா
என்றே எட்டி பார்த்தோம்
எட்டடி தாண்டி குடிசைக்குள்
தஞ்சம் புகுகிறது மழை நீர்
ஆற்று நீரோடு சேர்ந்து
ஆறு பேரும் நீந்தினோம்
கரையேறினோம்
எங்கே எப்பொழுது
போயிருக்குமென்று யாருக்குமே
தெரியவில்லை எங்கள் ஆறு உயிர்,
,
எங்கே போய் எழுதுவார்கள்
மழைக்கால கவிதையை
எங்கள் குழந்தைகள்
பேனாவும் இல்லை
பேப்பரும் இல்லை
ஏன் வீடும் இல்லை
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பரவி படர்ந்திருக்கிறது
ஆற்று நீரோடு கலந்திருக்கும்
எங்கள் கண்ணீர் துளிகள்,
,
செடி ஒன்றை
வரைந்து மகளிடம் நீட்ட
அவள் அதில் பூ ஒன்றை பறிக்கிறாள்
நான் புன்னகைத்தவாறே
அதன் வேருக்கு நீர் பாய்ச்சுகிறேன்
விருட்சமாக நீண்டு படர்கிறது
வீடெங்கும் பல பூக்களின் வாசம்
00
புன்னகை இதழ், கொலுசு இதழ், வாசகசாலை இணைய இதழ், ஆதிரை இதழ், புக் டே இணைய இதழ் என பல்வேறு இதழ்களில் என்னுடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன என்னுடைய முதல் கவிதை தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது