அதிகாலை ஒருமணிக்கே
டிவிஎஸ் வண்டிகளை எடுத்து
பால் விற்க கிழக்கே செல்கிறோம்
காலை ஆறுமணிக்கு
மேற்கே
வலுப்புரம்மன் கோவில் செல்லும்
கே பத்தாம் நம்பர் பேருந்தில்
வந்திரங்கி
வடக்கால புதூர்க்கு
வெங்காயம் அரிய
அம்மாமார்கள்
வேகமாக நடையைக் கட்டுகிறார்கள்
அதன் பின்பு ஆறரை மணிவாக்கில்
நூல் மில் போலிரோ ஒன்று
ரிவேர்ஸ் எடுக்கும்
சிக்னல் சத்தம் கேட்கும் போது
காலை ஷிப்ட்க்கு
உணவு பாத்திரங்களுடன்
சிட்டாய் பறக்கிறார்கள்,
அதுக்குள்ள காலை மணி
ஏழானதும்
தெற்கே திருப்பூர் செல்லும்
வெள்ளை நிற
பனியன் கம்பெனி
வண்டி வந்து விடுகிறது
இப்போது ஊரும்
கொஞ்சம்
விழித்துக் கொள்கிறது…
00

இரா. மதிராஜ்
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள புதுக்கோட்டைக் கிராமத்தில் பிறந்து, கீழக்கரையில் கல்லூரிப் படிப்பை முடித்து தற்போது காங்கேயத்தில் உள்ளத் தனியார் நூல் ஆலையில் பணிபுரிகிறேன், தமிழ் இதழ்களில் கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன், இது வரை கொலுசு மற்றும் காற்றுவெளி போன்ற இலக்கிய மாத இதழ்களில் எனது சிறுகதைகள் வெளி வந்திருக்கிறது, அனைத்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்பையும் வாசிக்கவும், நேசிக்கவும் செய்கிறேன்