அனைத்து மனிதர்களைப் போலவுமே நானும் என் அன்னையின் வயிற்றிலிருந்து தான் பிறந்தேன். பிறந்தவுடன் வீறிட்டு அழுதும் விட்டேன். இல்லையென்றால் அதையும் கூட ஒரு காரணமாய் தொற்றிக் கொள்வார்கள். பின் தவழ்ந்தேன், நடந்தேன், ஓடினேன் பொத்தென தரையில் விழுந்தேன்.

கைகளிலும், கால்களிலும் அடிபட்டது ரத்தம் சொட்டச் சொட்ட… அப்போது நான் என் கண்களாலேயே உற்றுப் பார்த்திருந்தேன். எனக்கு நன்றாகவே அது நினைவில் இருக்கிறது. மறந்தெல்லாம் போகவில்லை நான் தான் அடிக்கடி பார்க்கிறேனே அடிபடும்போதெல்லாம் என் ரத்தம் சிவப்பு நிறம் தான் அதில் எனக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை…

வாயால்தான் உண்கிறேன். நிச்சயமாக அடித்துச் சொல்வேன் ஆசனவாய் மூலமாகத்தான் மலம் கழிக்கிறேன். அங்கேயும் கூட நிற வேறுபாடுகள் அற்றவனாகத்தான் இருக்கிறேன். மாற்றுக் கருத்து இருப்பின் நிரூபிக்கத் தயார். தாங்கள் என்னிடம் நிச்சயம் ஆதாரம் கேட்க மாட்டீர்கள் எனத் தெரியும். அவர்களும் இதை மறுக்க முடியாது. நான் பார்த்திருக்கிறேன் அவர்களுக்கு அடிபட்டிருக்கும் போது அதே சிவப்பு நிறம் தான். இதிலும் எனக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை…

நீங்கள் எங்களுக்காக எப்போதோ தூணிற்கும், துரும்பிற்கும் வந்து விட்டீர்கள் என நான் நம்புகிறேன். ஆனபோதிலும் உங்களை அங்கே தான் வந்து பார்ப்போம் என்று நாங்கள் ஏன் அடம் பிடிக்கிறோம் என்று தங்களுக்கு தெரியுமா? எங்களுக்கும், அவர்களுக்கும் ஒரே சிவப்பு தானே அப்படி இருக்க உங்களைப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுவதை அவர்கள் யார் தடுக்க?

                         **************

இப்படி ஒரு கடிதத்தை நான் உங்களுக்கு எழுதி இருந்தேன் என்று தெரிந்திருந்தால் அதை உங்களிடம் சேரவிடாமல் தடுக்க ஒரு கூட்டமே இருந்தது அது உங்களுக்கு தெரியும் தானே ? என்று கேட்டார்…

“நீங்கள் தான் என்னிடம் அதை அனுப்பவே இல்லையே” என்றேன்.

“தங்கள் முகவரியே என்னிடம் இல்லையே பின் எப்படி?” என்றார்.

“”நீங்கள் தான் அதில் எழுதி இருந்தீர்களே தூணிலும் நான் இருப்பேன், துரும்பிலும் நான் இருப்பேன்” என்று…

இதை நான் சொல்லி முடிக்க இருவருமே ஈரு  தெரிய சிரித்தோம்…

நான் அவரிடம் சொன்னேன் “இப்போது அக்கூட்டம் அளவில் சுருங்கிப் போய்விட்டது தானே,  அவர்களின் அர்த்தமற்ற பேச்சுக்கள் கேட்பாரற்று கிடைக்கிறது அல்லவா” என்றேன்…

ஆமோதிப்பதைப் போல் தலையாட்டினார்…

“காலங்கள் செல்லச் செல்ல இன்னும் சுருங்கும் ஒரு கட்டத்தில் இல்லாமலும் கூட போகலாம். ஆனால் என்ன பார்க்க நீங்கள் இருப்பீர்களா என்று தெரியவில்லையே” என்றேன்…

மறுபடியும் ஈரு தெரிய ஒரு சிரிப்பு… சுவையான ஒரு தேநீர் அருந்தினோம். பின் நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். அதற்கடுத்து நான் அவரை சந்திக்கவில்லை. ஏனோ அவரும் என்னை சந்திக்க விரும்பியதாகத் தெரியவில்லை. என்னைப் பற்றி எவரிடமும் அவர் சொல்லக்கூட இல்லை. இவை என் தனிப்பட்ட உரிமை என்று நினைத்து கூட அவர்  சொல்லாமல் இருந்திருக்கலாம்…

இப்படியாகத்தான் எனக்கு அவர் எழுதிய கடிதத்தை பற்றிய பேச்சு பின்னாலில் எங்களது சந்திப்பின்போது நிகழ்ந்தது…

அவர் யார் என்று என்னிடம் கேட்டால், யாராக இருந்தால் என்ன கடவுள் நான் சொன்னால் கூட இந்த நிகழ்வை நீங்கள் நம்ப மாட்டீர்களா என்ன ?

புத்தகம் : என் சுயசரிதை குறிப்புகள்

அத்தியாயம் : 23

ஆசிரியர் பெயர் : கடவுள்

இருள்

டீச்சர் நேற்றே ஞாபகமாக மனதில் வைத்துக் கொள்ளும்படி சொல்லி அனுப்பினார்,மறந்துவிட்டேன். நேற்று எங்களது பள்ளியில் ஐடி கார்டுக்கு போட்டோ எடுத்தார்கள் அதற்காக இன்று வீட்டில் பணம் வாங்கி வரச் சொல்லி நான் எடுத்து வரவில்லை. இப்போது அறக்கப்பறக்க மதிய உணவைத் தின்றுவிட்டு ஓடோடி வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

எனது பள்ளி தோழர்கள் இருவரையும் என்னுடன் அழைத்துக் கொண்டு போகிறேன்.

“வருகிறீர்களா” என்று கேட்டேன்.

“வரேன்” என்றார்கள். மூவரும் போய்க் கொண்டிருக்கிறோம்…

“லேய், இவ்வள தூரமாடா ஒங்க வீடு?”

“ஆமா…”

“இவ்வள தூரமிருந்தா டெய்லி வார?”

“ஆமாடா…”

“சைக்கிளே இல்லாம எப்புட்றா நடந்தே வார?”

இவனை எப்படி அமத்துவதெனத் தெரியவில்லை.கேள்வியாய் கேட்கிறான் என்று புலம்பிக் கொண்டிருந்த நேரம் சரியாக அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தோம்.

“அங்க பார்றா”…

இருவரும் நான் கைகாட்டிய திசையைப் பார்த்தனர்…”அங்க என்னடா?”

“நாஞ் சொன்னேன்ல”…

அதுவா இது! என எச்சிலை முழுங்கினர் இருவரும் கேட்டுவிட்டு…

பின் அதைத் தாண்டி வீடு வந்து சேர்ந்தோம். அம்மா,அப்பா இருவருமே காட்டு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டையே ராவி தான் காசை எடுத்தேன். வீட்டை பூட்டி விட்டு ஒரு அடி கூட நகரவில்லை.

இருவரில் ஒருவன் கேட்டான் “அந்தப் பக்கமா போவோமா”?

இன்னொருவன், “போடா அங்குட்டு நா வரமாட்டே”.

“போவோம்” என்றேன்…

இன்னொருவன், “வேணான்டா ஸ்கூலுக்கு லேட்டாச்சு சீக்கிரம் போவோன்டா எனக்கு பயமாருக்கு…”

“நாம இப்ப வந்த ரோடுதே சுத்து ரோடு,அந்த தெருவுதே குறுக்கு தெரு அப்புடி போனாத்தே சீக்கிரோ போக முடியு…”

நானும்,ஒருவனும் “போவோம்” என்றோம்…

இன்னொருவன், “சரி போவோ ஆனா,என் கையை ரெண்டு பேருமே புடிச்சுக்கிரணும் விட்றக் கூடாது அப்பத்தே வருவே சரியா?”

ம்ம்ம்ம்… என ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நடக்கலானோம்…

நான் சொன்ன அந்தத் தெருவிலே புளியமரம் ஒன்று இருக்கிறது முன்பு எப்பவோ ஒருவர் அந்த மரத்தில் தூக்கு போட்டு செத்துவிட்டார். அவர்தான் மரத்தைச் சுற்றியே பேயாக அலைகிறார் என ஏரியாவுக்குள் பேச்சு,அதற்கேற்றார் போலவே அந்த புளிய மரமும் படு பயங்கரமாக காட்சியளிக்கும். அகண்ட உடம்பு,பரந்து விரிந்த கிளைகளைக் கொண்டு கிட்டத்தட்ட முப்பது பேர் நிழலுக்கு ஒதுங்கும் அளவிற்கு அந்த மரம் இருக்கும். அதில் எக்கச்சக்கமான ஆணிகள் அறையப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆணிக்கும் தெருவில் ஒவ்வொரு கதை சொல்வார்கள். அவ்வப்போது இரவில் அந்தத் தெருவை கடக்க சில சமயங்களில் பயந்து தான் இருக்கும்.ஆனால்,பகலில் அது போன்ற ஒரு பயத்தை நான் உணர்ந்ததில்லை.

நான் சில பல ஆணிக் கதைகளை அவர்களிடம் சொல்லி இருக்கிறேன் அதுதான் அவர்களுக்கு ஒரு சின்ன பீதி…

தற்போது அந்த தெருவிற்குள் தான் நடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

அந்த மரத்தின் அருகில் சென்று விட்டோம் ஒருவரின் கை இன்னொருவரை இறுக பிடித்துக் கொண்டது. அந்த மரத்தை ஏறெடுத்தே பார்க்கக் கூடாது என்பதைப் போலவே எங்கள் பாவனைகள் இருந்தது கழுத்து தன் நேர்கோட்டில் இருந்து இம்மி அளவு கூட மரம் இருக்கும் திசைக்கு திரும்பவில்லை. தரையையும் எங்கள் பாதங்களையும் பார்த்தவாரே மரத்தை கடந்து வந்து விட்டோம் ஒரு சில அடிகள்…

ஒருவன் கால் சட்டென நின்றது.

இன்னொருவன் கால் முன்னே செல்ல எத்தனித்தது.

“நா அந்த மரத்த பாக்க போறே” என ஒருவன் சொன்னான். இன்னொருவன் தயங்கினான்…

ஒருவன் திரும்பினான், நானும் திரும்பினேன். இருவரும் நிமிர்ந்து மரத்தைப் பார்த்தோம். இன்னொருவன் தயங்கித் தயங்கித் திரும்பினான். ஆனால்,அவன் தலை நிமிர்ந்து மரத்தை ஏறெடுக்கவில்லை கீழ் வாக்கிலேயே அந்த மரத்தை பார்த்துக் கொண்டிருந்தான் …

ஏனோ அவ்வளவு நேரம் இல்லாத காற்று சரியாக நாங்கள் திரும்பியவுடன் வீசியது. அடித்த காற்றிற்கு ஏற்றார் போல் மரம் தன் கிளைகளை ஆட்டி அசைத்தது…

ஆ ஆ ஆ ஆவென சத்தம்…ஒருவன் கத்தினான். ஒருவர் கை மற்றவரை மேலும் இறுக்கியது…நான் கத்தினேன்,இன்னொருவனும் கத்த,அங்கு எடுத்த ஓட்டம் ஸ்கூலுக்கு தான் சென்று நின்றது…

ஒருவன் மூச்சிரைத்து மூச்சிரைத்து. ‘நீ அத பாத்தியா? எனக்கு பயமா வந்துருச்சுடா.அந்த மரத்ததுலருந்து பேயோட கையி தெரிஞ்சுச்சு நீ பார்த்தியா,’ நானும் அதை மூச்சிரைத்துக் கொண்டே ஆமோதித்தேன். எங்கள் கை ஒருவரை ஒருவர் இன்னுமும் இறுக்கிக் கொண்டுதான் இருந்தது. ‘நாந்தா சொன்னேன்ல அங்க பேய் இருக்குன்னு சொல்றாங்கன்னு. இப்ப நம்புறியா’ என நானும் ஒருவனும் பேசிக்கொண்டே சைகை காண்பித்து அவன் மூஞ்சிய பாரு என சிரித்துக் கொண்டே  இன்னொருவனை ஏறிட்டோம். இன்னொருவனின் முகம் பயத்தில் இருளடித்துக் கிடந்தது.

‘நீ பாத்தியா சொல்லுடா,நீ பேயோட கைய பாத்தியா,உனக்கு தெரிஞ்சுச்சா?’ என நானும் ஒருவனும் மாறி மாறி கேட்க, எங்களை நிமிர்ந்து பார்த்தவன்.

“தெரிஞ்சது பேயோட கையில்லடா காலு”. அவன் சொல்லி முடிக்க எங்கள் கைகள் நடுங்கத் தொடங்கியது. இன்னொருவனின் இருள் என்னையும், ஒருவனையும் தொற்றிக் கொண்டது.

000

சொந்த ஊர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர்.
நித்வி என்கிற பெயரில் சிறுகதைகள்  எழுதுகிறேன். என்னுடைய சிறுகதைகள் திண்ணை, வாசகசாலை, நடுகல், கலகம் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. சிறிய கால இடைவெளிகளில் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *