மழையை நம்பி மட்டுமேஇருக்கும் கிணற்றுப் பாசன மேட்டாங்காடுகள். ஊருக்கு தெற்கு எல்லையில் அரண் அமைப்பது போல் இருக்கும் கருங்காடு, நேர் கிழக்காக கொல்லிமலை. சுமார் முப்பது  முப்பத்தைந்து மைல் தொலைவில் இருக்கும் பட்டிக்காடு அது. எளியோரிடமும்,  விவசாய பெருமக்களிடமும் தண்ணீர் பஞ்சம் தனது கடமையைத் திறம்பட செய்து கொண்டிருந்தது. கிராமத்தில் விவசாயம் செய்து மாடு கன்று வைத்து பிழைப்போர் போக அநேகமானவர்கள் விவசாயக் கூலிகள். பட்டிக்காட்டில் குறைந்த நிலம் வைத்திருப்பவர்கள் கூலி வேலைக்கும் செல்வார்கள், சொந்த  நிலத்திலேயே பண்ணையம் பண்ணிக் காலம் தள்ளுவது சிரமம். நூறு நாள் வேலை திட்டமும் நாட்டிற்கு அறிமுகம் இல்லாத காலம். அன்று அம்புலிக்கு அமாவாசை விடுப்பு என்பதால் அடர்ந்த இருட்டு பரவி இருந்தது. வெளிச்சத்தை விட இருட்டுக்குத்தான் பல உண்மைகள் தெரியும். பல அந்தரங்கங்களுக்கும் அந்தரங்கக்காரர்களுக்கும் இருட்டில் தனி சுதந்திரம் கிடைக்கும்.

அடர்ந்த இருட்டு, பனையோலை குடிசைக்குள் மட்டும் குண்டு பல்பு மிதமான வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தது, சுகந்தி அழுது கொண்டே வீட்டை விட்டு நொடிப் பொழுதில் வெளியேறினாள். “போ போ உங்க அம்மா ஊட்டுலையே இருந்துக்க எங்க போற தரித்திரத்தையோ எனக்கு கட்டி வச்சு ஏந்தாலிய அறுக்குறாங்க” என்று கத்திக் கொண்டே வெளியே வந்தான். அவள் கிணற்றினை அடைந்து அதற்கு மேல் கால் நகராமல் அங்கேயே தண்ணீர் தொட்டி மீதமர்ந்து, ஆந்தை இரண்டு ஜோடியாக மின்கம்பியில் அமர்ந்து இவளை பார்த்துக் கொண்டிருந்த வசம் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள். அவளால் செல்ல முடியவில்லை,  இவ்வளவு தூரம் அவன் பேசி இருந்தாலும் அவள் மீது அவன் காதல் காமம் மையல் என்று எல்லாமே அளவுக்கதிகமானது என்று அவள் அறியாமல் இல்லை. மோட்டார் ரூமிற்கு போடப்பட்ட குண்டு பல்பு பரண் ஆகி இருந்த நிலையில் இருட்டில் அவள் வெறும் நிழல் உருவமாக அவனுக்குத் தெரிந்தாள். அவள் பக்கத்தில் சென்று “இங்க உக்காந்து எழவ கூட்டாத, தேவிடியாத்தனம் பண்றவளுக்கு இங்க எடமில்ல, நீ உங்கூட்டுல இருந்தே அத பண்ணு” என்று விரட்டினான்.

“நா எவங்கூட படுத்தத நீ பாத்த, அப்படி எங்கம்மா எங்கப்ப என்ன வளக்கல, கேப்பா பேச்சக் கேட்டு எனக்கு நீ அவுசாரி பட்டம் கட்டிக்கிட்டு இருக்க, உனக்கு நல்ல சாவே வராது” என்று பொறுக்கமாட்டாமல் கத்தினாள். ஆம் அவனிடம் யாரோ எந்தச் சந்தர்ப்பத்திலோ தன்னைப் பற்றி அவதூறாக நம்ப வைத்திருக்கிறார்கள் என்று அவள் நம்பினாள்.

“போடி அவுசாரி எங்கெங்க ஊம்ப போனியோ ஆருக்குத் தெரியும்” பேசிக்கொண்டு கழுத்தைப் பிடித்து “போடி மயிறு” என்று தள்ளினான் வெறிக்கொண்டவனாக.

குஞ்சான், அவளின் தம்பி போன்று கூடவே சுற்றிக் கொண்டு இருப்பான். அனேக நேரங்கள் சுகந்தியின் வீட்டிலே இருப்பான். கல்யாணத்துக்கு அப்புறம் அவர்களின் வயது பொருந்தா நட்புக்கு தடை ஏற்பட்டது. சுகந்தியின் அம்மா கிழங்கு வடை சுட்டு அவனுக்கு சாப்பிட கொடுத்துவிட்டு. தூக்குச் சட்டியில் நிறைய போட்டு அடைத்து சுகத்திற்கு கொடுத்து வரச் சொன்னாள். அவனும் சுகந்தியை பார்க்க நட்பு பாராட்ட அந்த பாலகன் அவளின் வீட்டினை நோக்கி வரப்பில் நடந்து வந்து கொண்டிருக்க இவர்களின் சண்டையை இருட்டில் தூரத்திலிருந்து பார்த்தான். சண்டையென அனுமானமாய் உணர்ந்து ஓடிவர ஆரம்பித்தான். ஓடின வேகத்தில் வரப்பில் வழுக்கி விழுந்தான்,  தூக்குச்சட்டியும் தவறியது எங்கோ விழுந்தது. விழுந்தவன் சுதாரித்து எழுந்து மீண்டும் வரப்பில் ஏறி நின்று பார்க்க ஒரு உருவம் அங்கே இல்லை மற்றொரு உருவம் கிணற்றினை எட்டிப் பார்த்துக்கொண்டிருப்பது மட்டும் தெரிந்தது. இவன் இன்னும் கிட்ட வர வர அந்த மற்றொரு உருவமும் கிணற்றில் குதித்தது.

சுகந்தி நல்ல உயரமான வாட்டசாட்டமான திடகாத்திரமான பெண். வயல் வேலைகளில் ஆண்களுக்கு நிகரான வேலைகளை செய்யக்கூடியவள். கூலிக்கு ஆள் கூப்பிடுவது என்றால் எல்லா காட்டுக்காரர்களுக்கும் அவள் தான் முதலில் ஞாபகம் வருவாள், எல்லோரிடமும் வாஞ்சையாக பழகக் கூடியவள். தூக்குச் சட்டியில் சோற்றை எடுத்துக்கொண்டு தாவணிக்கு மேல் ஒரு சட்டையை உடுத்திக்கொண்டு அதற்கு மேல் ஒரு சிகப்பு துண்டை போட்டுக்கொண்டு அவள் கிளம்பும் அழகை பார்த்து, அவள் அம்மா கூட அசந்து போவாள் அப்படி இருக்கும் அவளது தோரணை. “நெறைய நெலபொலம் இருக்கறவனாப் பாத்து கட்டிக்கொடுக்கனுமாட்டம். இவ இருக்குற உடம்புக்கும் ஒழைக்கற ஒழப்புக்கும் தோதா மாப்பள புடிக்கனும்” என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தனது பேத்தியைப் பத்தி பூரிப்படைந்து சொல்லுவாள் அவள் ஆயா. அப்படி நிறைய நிலம் இல்லை என்றாலும் இருக்கும் கொஞ்ச நிலத்தில் பண்ணையம் பண்ணிக்கொண்டு அதுபோக வாணி வெட்ட கிழங்கு புடுங்க கரும்பு வெட்ட என்று வேலைக்குச் சென்று சலிக்காமல் உழைக்கும் தாய் தகப்பன் இல்லாத பெரியசாமிக்கு கட்டி வைத்தார்கள். “ரெண்டு பேரும் சேந்து பண்ணயம் பண்ண ஆரம்பிச்சா கருங்கரட்டையே சீராக்கி வெவசாயம் பண்ணாலும் ஆச்சிரியப்பட இல்ல” என்று அனேகமானவர்கள் அவர்களின் வேலைத்திறனைப் பற்றி வாழ்த்தாமல் இல்லை.

காதலும், காமமுமாக ரொம்ப அன்யோனியமாக பின்னி பிணைந்து கிடந்தார்கள் எல்லா புதுமணத் தம்பதிகள் போல. ஒரு ஊர் என்றாலும் அவளின் மீது எந்தவித முன் அபிப்பிராயமும் இல்லை. அவனின் பங்காளிகளும் மாமன் மச்சினன் முறைக்காரர்களும் அவனுக்காக இந்த முன்னெடுப்பை பண்ணினர். பெரியசாமியும் பொண்ணு நல்லா இருக்கு நம்ம ஊரு புள்ள ஒன்னும் மண்ணா இருந்து குடும்பத்தை மேடேத்த ஒத்தாசையா இருந்தா போதும் என்று கட்டிக் கொண்டான். கல்யாணம் ஆன சில நாட்களிலே முளைத்தது சந்தேகப்பயிர். பயிரை நிலத்தினுடைய உரிமையாளரே அறுவடை செய்தால் ஒழிய நிலத்தை விட்டு அகலும், வேறு யாராலும் அறுவடை செய்ய இயலாது. அவன் மனம் என்னும் நிலத்தில் அதனை விதைத்தது யாரும் இல்லை அவனது மனைவி சுகந்திதான்.

கருப்பாயி “புள்ள நல்லா கருப்பா வாட்ட சாட்டமான ஆள புடிச்சிட்ட, தெனமும் ராத்திரி ரெண்டாம் ஆட்டம் போகுதா” என்று சுகந்தியிடம் கேலியாக கேட்டுக்கெண்டிருந்தாள். “இவரும் சேகரு மாதிரியே நல்லா தடியா இருக்காப்புடி, இல்லணா உன்னலாம் கட்டுலுல சமாளிக்க முடியுமா” என்றாள் மீண்டும். அதற்கு சுகந்தி “என்ன இருந்தாலும் சேகரு மாதிரி வருமா, சேகரு சேகருதான்” என்று அவனது புஜபல பராக்ரமத்தை அறிந்தவளாக கூறி கண்ணடித்துச் சிரித்தாள். இன்னும் சேகரை பற்றியும் அவனது ஆண்மை பலத்தைப் பற்றியும் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருந்தனர். இதெல்லாம் பெரியசாமி வீட்டிற்கு உள்ளே நுழையும் கண நேரத்தில் அவனால் கேட்க முடிந்தது, இருவரின் சிரிப்பையும் சுகந்தி கண்ணடித்து கிசுகிசுத்ததையும் அவனால் கவனிக்க முடிந்தது. அவனைக் கண்டதும் இருவரும் சிறிய பதற்றத்தை வெளி காண்பித்தவாறு பேச்சை சட்டென்று முடித்துக் கொண்டனர்.

அவர்கள் அந்த விஷயத்தை அத்தோடு மறந்து விட்டார்கள். ஆனால் இவனால் விட முடியவில்லை. இரவு வெகு நேரம் அவன் மனம் அவனைத் தூங்க விடவில்லை, இன்னொரு ஆம்பளையோட தாட்டியத்தைப் பற்றி பேசுகிறார்கள் அதுவும் தம்மை இணைவைத்து பேசுகிறார்கள் பேசுவதை கேட்டதில் பெண்ணும் ஆணும் கூடும் விஷயத்தைப் பற்றி பூடகமாக பேசிக் கொண்டார்களே என்று அவனின் மனக்கவலை நீண்டு கொண்டே போனது நிமிடத்திற்கு நிமிடம். சேகர் யார்? ஒருவேளை லாரி டிரைவர் சேகரா இருப்பானோ? நம்மூரில் அவன் இல்லாமல் இன்னும் இரண்டு சேகர்கள் இருக்கிறார்கள் யாரைப் பற்றிய பேச்சு, வாட்ட சாட்டமான ஆளு என்று காதில் விழுந்ததே, அப்போது லாரி சேகர் தான் அவன்தான் ஆறடி ஆஜானபாகுவாக இருப்பான் அப்பொழுது அவனைப் பற்றி தான் இந்தப் பேச்சுகள் என்று உறுதியாய் நம்பினான்.

சுகந்தி கூட அடிக்கடி வெளியூரில் கிழங்கு புடுங்க ஆட்களுடன் அவன் லாரியில் தான் போவாள் என்பது இவனுக்குத் தெரிந்திருந்தது. அப்போ அவனேதான் என்பதில் மீண்டும் உறுதியடைந்தவனாய் சுகந்தியின் காமத் தீண்டல்களுக்கு எந்த வித பிடியும்  கொடுக்காமல் அன்று விலகி படுத்துக்கொண்டான். கல்யாணம் ஆனதிலிருந்து அன்று  அவன் அவ்வாறு நடந்து கொண்டது சுகந்திக்கு வியப்பாக இருந்தது.

அன்றிலிருந்து சுகந்தியின் மீது வெறுப்பு ஆரம்பித்தது. வெறுப்பு அவனுள் மிக ஆழமாக சென்று கொண்டிருந்தாலும் அவனால் அவளை முழுவதுமாக வெறுத்து விட முடியவில்லை. அவளின் மீது தீரா காதல் உடையவனாக அவனை அவனே உணர்ந்துகொண்ட தருணத்தில் இப்படி அவளின் மீதான இந்தச் சந்தேகம் கொதிகலனாக மாறி எந்நேரமும் அவனது உள்ளத்தை கெதிக்க வைத்துக் கொண்டிருந்தது. அவளும் இவனின் மீது உள்ளார்ந்த பற்றுக்கொண்டிருந்தாள். அம்மா வீட்டிற்கு சென்றாலும் சில மணி நேரங்களில் கிளம்பி விடுவாள்.

“இருட்டு கட்டப் போவுது, மாமா வந்துரும் நா கெளம்பறேன்” என்று அவசர அவசரமாக கிளம்புவாள்.

“வந்தா வரட்டுமடி, செத்த நேரம் இருக்கமாட்டாரா நீயி இல்லாம, எந்நேரமும் ஒரசிக்கிட்டே ஒறவாடிக்கிட்டே இருந்தா ஒடம்பு தாங்காதுடி” என்று அவளின் ஆயா ஒவ்வொரு முறையும் ஏதேனும் சொல்லி கேலி பேசாமள் இல்லை இவர்களின் பிணைப்பைக் கண்டு.

தினமும் வேலைகளெல்லாம் முடிந்து இருட்டு கட்டினதும் பெரிய சாமியை குளிப்பாட்டுவது இவள் தான். சேலையை முழங்காலுக்கு மேலே ஏத்திவிட்டுக்கொள்வாள், அவளின் அங்கங்களை அந்த இருட்டின வேலையில் யாரும் இல்லா அந்தகாரத்தில், அவனுக்கு காண்பித்துக் கொண்டே அவனை நீராட்டுவாள்,மாராப்பையும் எடுத்து இடுப்பைச் சுற்றிக்கொள்வாள். வீடுகள் அருகே அருகே இல்லாததால் வெட்ட வெளியில் கிணற்றடியில் ஆரம்பிக்கும் காதல் வேட்கை, காம வேட்கை என எல்லாம் இரவு படுக்கையில்தான் முடியும். அவள் கணவனுடனான காமம் என்பதை பேரின்பத்திலும் பேரின்பமாக கருதினாள், உணர்ந்தாள். கல்யாணம் ஆன சில நாட்களிலே கலவியில் இவளின் கை ஓங்க ஆரம்பித்தது, அவனின் முன்னெடுப்புகளை விட இவளின் முன்னெடுப்புகள் அதிகமானது. இவளே அவனை அனேக சமயங்களில் காமத்தில் ஆண்டுக்கொண்டிருந்தாள். “ஏப்புள்ள உன்ன சமாளிக்க நா தெனம் ஆறு வேல சாப்படுனுமாட்டம்” என்பான். “சாப்புடு மாமா என்னையும் சேத்து ஏழாவது வேலையா” என்று கலவியில் திருப்தி அடைந்தவளாய் அவனின் மார்பு முடிகளில் முகம் புதைத்தவளாய் முனகுவாள்.

இவ்வளவு காதல் கொண்டிருந்த மனைவியிடம் சிடுசிடுவென இருக்க ஆரம்பித்தான். எவ்வளவுதான் இவன் தன்னைக் கட்டுப்படுத்த நினைத்தாலும், மனதை மாற்றிக்கொள்ள முயற்சித்தாலும் முடியவில்லை. அவனை மீறி அவள் மீதான வெறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்ட தொடங்கி அது நாட்கள் போக போக அதிகமானது. அவனாகவே குளித்துக்கொள்ள ஆரம்பித்தான். சுகந்தியின் அங்க வெளிப்பாடுகளை கவனிக்காதவன் போல இருக்க ஆரம்பித்தான். இரவு அவள் கால் போடும்போது “உனக்கு அடங்கவே அடங்காதா, எந்நேரமும் ஊங்கூட படுத்துக்கிட்டே இருக்கனுமா” என்று அவளைத் தவிர்க்க ஆரம்பித்தான். இப்படியே சென்று அவளிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டான்.

ஏதேனும் தேவை இருந்தால் கேட்பது சொல்வது அவ்வளவுதான்.  சுகந்தி எத்தனை முறை கெஞ்சியும் அவன் மனம் மாறவில்லை. அவன் பித்தனைப் போல் காரணம் இல்லாமல் தன்னை வெறுப்பதற்கான காரணத்தை சொல்லாமல் இருப்பது மேலும் அவளை துன்புறச்செய்தது. அவன் பேசியிருக்கலாம், அவன் சந்தேகத்தைப் பற்றி உரையாடியிருக்கலாம். ஆனால் இவற்றை செய்யாமல் அவள் மற்ற ஆணை நாடுபவள் என்று அவனே முழுமையாக நம்பிக்கொண்டான். இவ்வளவு தீரா காமம் உடையவள் கண்டிப்பாக செய்யக் கூடியவள் தான் என்பதில் உறுதியாக இருந்தான். இந்தச் சந்தேகம், வெறுப்பு சண்டை எல்லாம் ஒரு வாரத்திற்குள்ளகவே அரங்கேறிற்று.

சுகந்தியை காப்பாற்ற முடியவில்லை அவளுக்கு நீச்சல் தெரிந்திருந்தும். காரணம் கிணற்றில் விழும்போது சிறிய பாறையில் ‘மட்’ என தலை இடித்து அம்மா என்ற சத்தம் ஓங்கி சில வினாடிகளில் கிணற்றுக்குள் அமுங்கி, அடங்கி போனது. என்ன நடந்தது என்று தெளிவாக பெரியசாமிக்கும் விளங்கவில்லை. தான் தள்ளி விட்ட வேகத்தில் விழுந்தாளா?, இல்லை செத்துவிடலாம் என்று நான் தள்ளிவிடும் நேரத்தை பயன்படுத்திக்கொண்டாளா? இல்லை தெரியாமல் கால் இடறி விழுந்துவிட்டாளா? என்று நொடிப்பொழுதில் எண்ணங்கள் அவனை பயமுறித்தி பழியுடையவனாக மாற்றிக்கொண்டிருந்தது. பயந்தான் பதற்றமடைந்தான், உடல் உதற ஆரம்பித்தது. உடனே குதித்து கிணற்றுக்குள் அவளைத் தேட ஆரம்பித்து அரை மணி நேரத்தில் பக்கத்தில் இருந்து வந்த சிலர் உதவியால் மேலே கொண்டுவரப்பட்டாள்.

இருட்டில் எப்படி விழுந்தாள் என்பது இறந்தவளுக்கே வெளிச்சம். குஞ்சானே சாட்சி, பொய் சாட்சி ஆக்கப்பட்டான் அவனது பெற்றோர்களாலும் அவர்களின் ஆதரவாளர்களாலும், சுகந்தி விழுந்ததையோ பெரியசாமி தள்ளிவிட்டதையோ எதையும் அவன் பார்க்கவில்லை ஆனால் அவன்தான் அடித்து வேண்டுமென்றே தள்ளி விட்டான் என்று சொல்ல வைக்கப்பட்டான். எவ்வளவு முயன்றும் பெரிய சாமியை தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.

அவள் கிணற்றில் விழுந்த உடனே பெரிய தவறு செய்துவிட்டோம் என எண்ணினான். போலீஸ் விசாரணையில் கூட தான் அவளை சந்தேகப்பட்டதாகவும் அவள் நடத்தை கெட்டவள் அதனால் வந்த விளைவு என்றும் சொல்லவில்லை. வரதட்சணை கேட்டு கொன்று விட்டான் என்று அவளது பெற்றோர்கள் வழக்கு தொடுத்தது உண்மை என்று ஒப்புக்கொண்டான். ஏனோ அவனுக்கு அவளை, இறந்தவளை நடத்தை கெட்டவள் என்று சொல்ல மனம் வரவில்லை. நம்மால் இறந்தவளுக்கு மேலும் தேவிடியா பட்டம் வரக்கூடாது என்று நினைத்தான்.

கருப்பாயி என்ற பெயருக்கு ஏற்ப அவள் அவ்வளவு கருப்பில்லை. மிகவும் கலையானவள், நன்கு கத்தையான கூந்தல். நடந்தால் அவளின் ஒற்றை ஜடை இரு புட்டங்களிலும் பட்டு பட்டு குதிக்கும். அதுக்கே ஊரில் சிருசு முதல் பெருசு வரை ரசிகர்கள் அதிகம்.  அவளை ஒரு முறையேனும் தங்களது காதலியாக மனைவியாக கற்பனை செய்து பார்க்காத ஆள் ஊரில் இல்லை. அளவான உயரம் கத்தி போல் வெட்டும் பெரிய கண்கள், அல்லக்கண் விட்டு ஒரு வெட்டு வெட்டினால் என்றால் அனைத்துப் பையன்களும் அடிமை அவளுக்கு. இவ்வளவு பேர் இவளுக்கு மயங்கி கிடக்க கருப்பாயி மயங்கியது சேகருக்கு. லாரி டிரைவர் என்பதால் பல ஊருக்கு சென்றதன் காரணமாக இவனுக்கு பல பாசைகள் அரையும் குறையுமாக தெரியும். பல விஷயங்களைப் பற்றி தெரியும், பல சுற்றுலா தளங்களையும், பெரிய நகரங்களையும் தெரியும். எல்லாவற்றையும் பற்றி இவன் பேசுவான், பல விஷயங்களை அவனுடனிருப்போருக்கு தெரியப்படுத்துவான், சில சமயம் பொய்களும் வரக்கூடும். பெதும்பை முதல் கிழவிகள் வரை கேளிப் பேச்சுக்கள் பேசி அவர்களை தன்வசம் ஆட்கொள்வதில் வித்தைக்காரன். அவ்வாறுதான் ஈர்க்கப்பட்டாள் கருப்பாயி, அதிகமாகவே ஈர்க்கப்பட்டிருந்தாள். அகன்ற மார்பும், கைலி விலகி அவ்வப்போது தெரியும் பருத்த தொடைகளும், கட்டை மீசையும் கருப்பாயிக்கு அவனிடம் மிகவும் பிடித்தமானவை. மதிமயங்கினாள், அவனது காமப் பார்வைக்கு கிரக்கமடைந்தாள், இரவில் அவனை நினைத்து தலையணை கசக்கி கற்பனையில் உடல் கிளர்ச்சி அடைந்தாள். நாட்கள் போக அவனது எண்ணம் நிறைவேறியது. அவளை அடைந்தான் காதலிப்பதாக கூறினான், இதுபோல் காதலிகள் அவனுக்கு அதிகம். கரங்கள் கோர்த்தான், நம்பிக்கை கொடுத்தான். நம்பினாள், உடலைக் கொடுத்தாள், உடலைப் பெற்றாள்.  இருவரிடையே அதிக போக்குவரத்து இருந்தது. அதிரகசியமாக இருந்தது. லாரியில் கூட இவர்கள் பிணைந்து கிடந்திருக்கிறார்கள், நிறைய முறை. ஒவ்வொரு முறை புணர்ந்ததை, அந்த  அனுபவங்களை காமத்தில் அவன் வீர தீர செயல்களை பற்றி தனது தோழியான சுகந்தியிடம் வழக்கமாக பகிர்ந்து கொள்வாள். சுகந்திக்கும் அவர்களது அந்தரங்கங்களை கேட்பது கற்பனை செய்து பார்ப்பது மிகவும் பிடித்திருந்தது.

சொந்த ஊர் திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேன். 2019 ல் இருந்து புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டு புத்தகங்கள் வாசிக்கத் தெடங்கினேன். மேலும் திருச்செங்கோடு வெளிச்சம் வாசகர் வட்டம் 2022 முதல் நடத்தும் புத்தகத் திருவிழாவில் தன்னார்வளராக இணைந்து எனது பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கிறேன். “புதுச் சட்டை” என்ற என் முதல் சிறுகதை திரு.பொன்குமார் அவர்கள் தொகுத்த நாமக்கல் மாவட்ட சிறுகதைகள் புத்தகத்தில் வெளியானது. 

பெயர் – ஆரவ்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *