பிரசித்தி பெற்ற மலையாள எழுத்தாள மேதையும், கார்ட்டூனிஸ்ட்டுமான ஓ.வி.விஜயனின் (1930 – 2005) மிகப் பிரசித்தி பெற்ற நாவல், கஸாக்கின் இதிகாசம். (மலையாளத்தில்: கஸாக்கின்டெ இதிகாசம்). 1969-ல், முன்னணி வார இதழான மாத்ருபூமியில் தொடர்கதையாக வெளியாகி, பிறகு நூலாக்கம் பெற்ற அவரது இந்த முதல் நாவல்தான் அவரது மாஸ்டர்பீஸ் என்ற உச்சம் பெற்றதோடு, மலையாள நாவல்களின் உச்ச நாவலாகவும் ஆகி, அவருக்கு காலத்தால் அழியாத பெரும் புகழைப் பெற்றுத் தந்துள்ளது. ஆறு நாவல்கள், ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள், ஒன்பது கட்டுரைத் தொகுப்புகள், நினைவுக் குறிப்புகள் உள்ளிட்டவற்றை எழுதியிருப்பினும், ஓ.வி.விஜயன் என்றதுமே மலையாள வாசகர்களுக்கு நினைவுக்கு வருவது கஸாக்கின் இதிகாசம்தான்.
பிரசுரமானது முதல் இன்று வரை மலையாள வாசகர்களால் கொண்டாடப்படுவதும், விமர்சகர்களால் விவாதிக்கப்படுவதுமான இந்த நாவலுக்கு அனேக முக்கியத்துவங்கள், பெருமைகள் உள்ளன. பலரும் கூறியவற்றிலிருந்தும், அந்த நாவல் குறித்த பொது விவரங்களிலிருந்தும் பின்வரும் புள்ளிகளைத் தொகுக்கலாம்.
- மலையாள நவீன இலக்கியத்தின் துவக்கம் நிகழ்ந்த நாவல் இது. நவீன செவ்வியல் எனும் சிறப்புத் தகுதியைக் கொண்டது.
- மலையாள இலக்கியத்தின் மைல் கல் என்று போற்றப்படுகிற அளவுக்கு செல்வாக்கு பெற்றது. அதன் கதை, கதைக்களம், தரிசனம், புதுமையும் கவித்துவமும் செறிந்த மொழி யாவும் வாசகர்களையும் விமர்சகர்களையும் ஒருங்கே கவர்ந்தவை.
- அதுவரையிலான மலையாள நாவல்களின் கதை சொல்லல் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, புதிய கதை சொல்லல் முறையைக் கைக்கொண்டது. அடுத்த பத்தாண்டுகளில் மலையாள இலக்கியவாதிகளிடம் மட்டுமன்றி பத்திரிகைத் தரப்பிலும் இதன் மொழி நடை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்த நாவல் ஒரு புது சகாப்தத்தை உருவாக்கியது.
- எழுதப்பட்டு அரை நூற்றாண்டுக்குப் பிறகும், தலைமுறைகள் தாண்டியும், இன்றளவும் மலையாள வாசகர்களால் மிக விரும்பி வாசிக்கப்படவும், கொண்டாடப்படவும் கூடியதாக இருக்கிறது.
- மலையாள இலக்கியத்தை கஸாக்கின் இதிகாசத்துக்கு முன், பின் எனப் பிரிக்கலாம். இதில் முந்தையது எதார்த்தவியல் காலம்; பிந்தையது நவீனத்துவ காலம்.
- பின்னோடி நாவலாசிரியர்களுக்கு கஸாக்கின் இதிகாசத்தைப் பின்னுக்குத் தள்ளுவது ஒரு சவாலாக இருந்தது. ஆயினும், அந்த நாவலுக்கு நிகரான வேறொரு நாவல் இன்னமும் மலையாள இலக்கியத்தில் படைக்கப்படவில்லை. சொல்லப்போனால், ஓ.வி.வி. பிற்பாடு எழுதிய தர்மபுராணம், வாசகத்தரப்பில் கடும் உணர்ச்சித் தாக்கத்தை ஏற்படுத்தி, பலத்த சர்ச்சையை உண்டாக்கினாலும், அதற்குப் பிறகு எழுதிய குருசாகரம் அவரது முக்கிய படைப்புகளில் ஒன்றாக இருந்தாலும், அவரால் கூட கஸாக்கின் இதிகாச சாதனைகளை முறியடிக்க இயலவில்லை. ஓ.வி.விஜயனைப் போல ஓ.வி.விஜயன் மட்டுமே; அவருக்கு சமானம் இல்லை என்று சொல்லப்படுவதற்குக் காரணமானது இந்த நாவல்தான்.
- பொதுவாக உலக அளவில் சோதனை ரீதியான நாவல்கள், நவீன நாவல்கள் ஆகியவற்றுக்கு வெகுமக்கள் வாசிப்பு இராது. ஆனால், கஸாக்கின் இதிகாசம் இதற்கு மாறாக பரவலான வெகுமக்கள் வாசிப்பையும், அவர்களின் விருப்பத்தையும் பெற்றிருக்கிறது.
- இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மலையாள இலக்கிய வரலாற்றில் ப்ளாட்டின எழுத்துகளில் பொறித்து வைக்கும்படியான மகத்தான நிகழ்வையும் இந்த நாவல் விளைவித்திருக்கிறது. பாலக்காடு மாவட்டத்தில், பாலக்காடு நகரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில், கினாசேரி அருகே உள்ள தஸ்ராக் என்னும் கிராமம்தான் இந்த நாவலில் தஸ்ராக் என்னும் பெயரிலான கற்பனை கிராமமாகப் புனையப்பட்டுள்ளது. அதனால் அந்த கிராமமே இந்த நாவலால் பிரசித்தி பெற்று, பிரபல சுற்றுலாத்தலமாக ஆகியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன், கேரள அரசின் சுற்றுலாத்துறை, தஸ்ராக் கிராமத்தில், கஸாக் என்னும் பெயரில் இந்த நாவலுக்காகவும், ஓ.வி.விஜயனுக்காகவும் கலைக்கூடம் போன்ற நினைவகம் அமைத்துள்ளது.
கஸாக்கின் இதிகாசம், ஒரு இலக்கிய காந்தக் கல்லாக இன்றளவும் வாசகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. அதை வாசித்தவர்கள் மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு செய்கின்றனர். இன்றைய இளம் வாசகர்கள் புதிதாக அதை வாசித்து, மகிழ்ச்சிப் பரவசமும் பிரமிப்பும் அடைகின்றனர்.
யூ ட்யூப் காணொளியில் மலையாளப் பேராசிரியர் ஒருவர் – அவரது பெயர் எனக்கு மறந்துவிட்டது – குறிப்பிட்டது இது. அவரின் மாணவரான இளைஞர் ஒருவர் கஸாக்கின் இதிகாசத்தை வாசித்துவிட்டு பேராசிரியரிடம் வெகுவாக சிலாகித்திருக்கிறார். பேராசிரியர் அவரிடம், “இந்தத் தலைமுறையினரான நீங்கள் எல்லாம் பென்யாமின், கே.ஆர்.மீரா, சந்தோஷ் எச்சிக்கானம் போன்ற சமகால நவீன இலக்கிய நட்சத்திரப் படைப்பாளிகளைத்தானே கொண்டாடுவீர்கள்?” என்று கேட்டாராம். அதற்கு அந்த மாணவர், “அது வாஸ்தவம்தான் ஸாரே! ஆனால், கஸாக்கின் இதிகாசம் – அது ஒரு சம்பவம்தான்!” என்றாராம்.
அந்த நாவல், இந்த அளவுக்கு அருஞ்சாதனைகள் படைக்கவும், காலத்தைக் கடந்து ஆதிக்கம் செலுத்தவும், இலக்கிய உலகிலும் வெகுமக்களிடமும் செல்வாக்கு பெறவும் காரணம் என்ன? அந்த நாவலில் அப்படி என்னதான் இருக்கிறது?
வாருங்கள், கஸாக்கிற்குள் சென்று இவற்றுக்கான விடைகளைக் காண்போம்.
*******
முதலில் இந்த நாவலின் புறக் கூறுகளைப் பார்த்துவிட்டு, பிறகு கதைக்கும், அதன் அகக் கூறுகளுக்கும் செல்லலாம்.
வழக்கமாக நவீன நாவல்கள் யாவும் நகர்ப்புற வாழ்வியலைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும். நவீனத்துவத்துக்கு அது இயல்பாகவும், எளிதாகவும் பொருந்தக்கூடியதும் கூட. ஆனால், கஸாக்கின் இதிகாசம், உள்ளார்ந்த கிராமப்புறத்தைக் கதைக்களமாகக் கொண்டது. இதனால் மலையாள இலக்கியத்தில் நவீனத்துவம் காலூன்றியது கிராமியத்தில்தான் என்பது ஒரு முரண் சுவை.
இதைச் சொல்லும்போது எனக்கு உடனடியாக யுவான் ருல்ஃபோவின் நினைவு வருகிறது. லத்தீன் அமெரிக்க நவீன இலக்கியவாதியான அவரது சிறுகதைகளும், ஒரே நாவலான பெட்ரோ பராமோவும் கிராமங்களைக் கதைக்களமாகக் கொண்டவையே. அவரது படைப்புகளும் நவீன செவ்வியல் ரகத்தவை. கவித்துவ மொழி நடை, கதை கூறல் முறை ஆகியவற்றில் ருல்ஃபோவும் ஓ.வி.விஜயனும் ஒப்புநோக்கத் தக்கவர்களும் கூட.
கஸாக்கின் இதிகாசம் நாவல், கஸாக் என்னும் கற்பனை கிராமத்தில் நிகழும் கதையும், அந்த கிராமத்தின் கதையுமாகும்.
நாவல் எழுதப்படுவதற்கு சுமார் 12 ஆண்டுகள் முன்னதாகவே அதன் கதை, ஓ.வி.வி.யின் மனதில் உருவாகிவிட்டது. நாவலில் கஸாக் எனப்படுகிற தஸ்ராக், இன்னமும் கூட அதிக வசதிகள் ஏதும் இல்லாத, நடந்து சென்று முழுதும் பார்த்துவிடக் கூடிய அளவே உள்ள, பனைகளும் வயல்களும் நிறைந்த குக்கிராமம். ஓ.வி.விஜயனின் சகோதரி ஓ.வி.சாந்தா, அந்த ஊரில் ஓராசிரியர் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் ஆசிரியப் பணி செய்துகொண்டிருந்த ஓ.வி.வி.க்கு ஏதோ காரணத்தால் பணி இழப்பு நேர்ந்தது. அப்போது தஸ்ராக்கிற்கு வந்து, சகோதரி வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்தார். அந்த அனுபவத்தைக் கொண்டு, அவர் டெல்லி சென்ற பிறகு எழுதியதுதான் கஸாக்கின் இதிகாசம்.
கஸாக்கும், அதன் சுற்றுப்புறங்களும் நாவலில் விவரிக்கிறபடி அப்படியே இல்லை. கதைக்கு ஏற்ப சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, இயற்கை எழில் கொண்ட தஸ்ராக் என்னும் சாதாரண குக்கிராமம், ஓ.வி.வி.யின் சித்தரிப்பில் புராணிக கதைக்களமாக விரிவடைகிறது. அவரது வல்லமை மிக்க படைப்பு உருவாக்கத்தில், கதாபாத்திரங்கள் காவிய பாத்திரங்கள் போல, என்றென்றும் மனதில் நிற்கும்படி பதிகிறார்கள்.
வெளியான காலகட்டத்தில் மட்டுமன்றி, இப்போதும் புதிதாக வாசிக்கிறவர்களுக்கு புதுமையான அனுபவங்கள் தரக்கூடிய நாவல் இது. புதிய பிரதேசம், புதிய கதாபாத்திரங்கள், புதிய மொழி, புதிய கதை சொல்லல், புதிய வர்ணனைகள், புதிய படிமங்கள், புதிய தொன்மங்கள் என பற்பல புதுமைகள் சேர்ந்து, முற்றிலும் ஒரு புதிய உலகத்திற்குச் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
பாலக்காடு மாவட்டம் கரும்பனை தேசம் என்று சிறப்பிக்கப்படக் கூடியது. கேரளத்தில் நெல் விளைச்சல் அதிகம் உள்ள மாவட்டமும் இதுவே. தமிழகத்தின் கொங்கு மண்டலத்தை ஒட்டிய பகுதியான இந்த மாவட்டத்தில், எல்லையோரப் பகுதிகளில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும். பாலக்காடு நகரத்தில் கல்பாத்தி என்னும் பகுதி தமிழ் ப்ராமணர்களுக்குப் பேர் பெற்றது. இந்த மாவட்டத்தின் சில உள்ளார்ந்த பகுதிகளிலும், மலையாளத்தில் தமிழ் மொழியின் கலப்பு இருக்கும்.
பனைகளின் தேசமான இம் மாவட்டத்தில், கள் இறக்கும் பனையேற்றத் தொழிலைக் குலத்தொழிலாகக் கொண்ட (தமிழக – கேரள நாடார் ஜாதியினர் போன்ற) ஈழவர் ஜாதியினர் அதிகம். அவர்கள் பேசும் மலையாள மொழி, அந்த ஜாதி வழக்குகளோடு கூடிய கொச்சைத்தன்மை கொண்டது.
கஸாக் கிராமத்தில் ஈழவர்களும், இஸ்லாமியர்களும் பெரும்பான்மைகளாக உள்ளனர். பழங்குடிகள் உள்ளிட்ட மற்ற தாழ்த்தப்பட்ட ஜாதியினர்களும் கணிசமாக வசிக்கின்றனர். இவர்களின் பேச்சு மொழிகள், அந்தந்த ஜாதி – மத வழக்குகளோடு கச்சாவாக நாவலில் இடம்பெறுகிறது. பொது வாசிப்பு மட்டுமே பழக்கப்பட்ட வாசகர்களுக்கு இந்த வட்டார மொழித்தன்மை, வாசிப்பில் சிரமத்தை உண்டாக்கும். ஆனால், வட்டாரமொழிகள், ஜாதி – மத – இன மொழிகள் ஆகியவற்றின் தனித்தன்மையான அழகுகளை ரசிக்கும் மொழி ரசிகர்களுக்கு அது அலாதியான அனுபவம்.
மேலும், ஓ.வி.வி., இந்த நாவலில் ஆசிரியர் கூற்றாக கவித்துவமும், செறிவும் கொண்ட தனித்துவமான மொழிநடையைப் பயன்படுத்தியிருப்பார். இலக்கிய நயங்களை விரும்பும் வாசகர்களுக்கு நாவல் நெடுக சொற்சுவை வாசிப்பு இன்பத்தை வாரி வழங்கக்கூடியது அது. ஆனால், இத்தகைய மொழி நடைகளுக்குப் பழக்கப்படாத வாசகர்களை இந்த அம்சங்கள் திணறடிக்கும். மேலும், நாவலின் புது விதமான நுட்பங்களால் பலருக்கும் முதல் வாசிப்பில் நாவலின் அர்த்தமும், தரிசனங்களும் பிடிபடாமல் போகும் வாய்ப்பு நிறையவே உள்ளது. ஆகச் சிறந்த படைப்புகள் பலவும், தேர்ந்த வாசகர்களுக்குமே கூட, கால இடைவெளிகளுக்குப் பின் வாசிக்கையில், ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய வாசிப்பு அனுபவங்கள் கிடைக்கும்; புதிய நுட்பங்கள் பலவும் பிடிபடும். வாசகர் எந்த அளவுக்கு வயது, வாழ்வியல் அனுபவம், அறிவு, வாசிப்பு அனுபவம் ஆகியவற்றில் வளர்கிறாரோ அந்த அளவுக்கு அவை அமையும். கடந்த வாசிப்புகளில் தென்படாத சில அம்சங்களாவது கடைசி வாசிப்பில் தென்பட்டு வியப்பளிக்கும். கஸாக்கின் இதிகாசம், அவர்களுக்கு ஒரு கலைடாஸ்கோப் போல ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப் புது அழகுகளையும், நுட்பங்களையும் காட்டி, வாசிப்பு இன்பத்தைக் கூட்டக் கூடியது.
இந்த நாவலின் துவக்கப் பதிப்புகள் ஒவ்வொன்றிலும் ஓ.வி.வி. சிறு சிறு திருத்தங்கள் – குறிப்பாக, மொழியில் – செய்துகொண்டே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேய்வீரியமான பழைய மொழியில் எழுதுவது வாசிப்பில் சலிப்பை உண்டாக்கும். அது கூடாது என்பதற்காக ஓ.வி.வி. இந்த நாவலின் எழுத்து மொழியைத் திட்டமிட்டு வடிவமைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும், அவர் இந்த நாவலில் எழுதியுள்ள, ஆழமும், நுண்மையும், பூடகங்களும் கொண்ட விஷயங்களை, சாதாரணமான தட்டை மொழியில் எழுதியிருந்தால் இப்போது உள்ள இலக்கிய நயங்கள் வாய்த்திராது; அவர் ஏற்படுத்த விரும்பியதும், வாசகர்களில் உண்டானதுமான தாக்கமும் இந்த அளவுக்கு இருந்திராது.
நான் பாலக்காடு மாவட்டத்தின் கொங்கு மண்டலமான தமிழக எல்லைப் பகுதியில் பிறந்து வாழ்ந்தவன். பிறப்பால் மலையாளி என்றாலும் வீட்டிலும், வெளியிலும் பேச்சு மொழி தமிழ். கற்றதும் தமிழ். மலையாளத்தை தமிழ் கலந்து பேசத் தெரியுமே தவிர, எழுதத் தெரியாது. புத்தாயிரத்தாண்டு காலகட்டம் வரை மலையாளம் வாசிக்கவும் தெரியாது. எண்பதுகளின் இறுதி, மற்றும் தொண்ணூறுகளின் துவக்கத்தில், எனது இருபதை ஒட்டிய வயதுகளில், கோவை ஞானியின் களம் கூட்டத்தில்தான், மலையாள இலக்கியங்களை அறிமுகம் செய்யும் பெரியவர் ஒருவரால் கஸாக்கின் இதிகாசம் பற்றித் தெரிய வாய்த்தது. தமிழில் மலையாள இலக்கிய மொழிபெயர்ப்புகள் போதிய அளவு வந்துகொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், பிரசித்தி பெற்ற இந்த நாவலை மொழிபெயர்ப்பது கடினம் என்பதாலேயே இன்னமும் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கிறது என்று அவர் சொன்னதாக ஞாபகம். புத்தாயிரத்துக்குப் பின் நான் மலையாளம் வாசிக்கக் கற்ற சமயத்தில் எங்கள் குக்கிராம நூலகத்திலிருந்து கஸாக்கின் இதிகாசம் மலையாள நூலை எடுத்துச் சென்று வாசிக்க பகீரதப் பிரயத்தனம் செய்து படு தோல்வியடைந்தேன்.
அதற்குப் பிறகு சிதாரா.எஸ் சிறுகதைத் தொகுப்புகளை வாசித்து, மிகவும் பிடித்துப் போய், அதில் ஒரு தொகுப்பை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியீடு கண்டேன்; அந்த மொழிபெயர்ப்பு வெகு சிறப்பாகவும், கன கச்சிதமாகவும் இருப்பதாக நண்பர்கள் சிலர் பாராட்டவும் செய்தனர். ஆனால், அப்போது கூட என்னால் கஸாக்கின் இதிகாசத்தை மலையாளத்தில் வாசிக்கக் கூட முடியவில்லை என்பது அடிக்கோடிட்டுக் குறிப்பிடத் தக்கது.
சமீப வருடங்களில்தான் இந்த நாவலை ஒலி நூல் வடிவில் கேட்டு, அதி பரவசம் அடைந்தேன்.
அதோடு தமிழில், காலச்சுவடு வெளியீடாக, யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் இந்த நாவல் கிடைக்கவே, அதையும் ஆவலோடு வாசித்துப் பார்த்தேன். மலையாளத்தில் கேட்டுவிட்ட அதை தமிழிலும் வாசிக்கக் காரணம், நீண்ட காலமாக மொழிபெயர்ப்பு செய்ய இயலாதது எனக் கைவிடப்பட்டிருந்த அதை, யூமா வாசுகி எப்படி மொழிபெயர்த்திருக்கிறார் என்பதைப் பார்ப்பதுதான். எதிர்பாராத பெரு மகிழ்ச்சி. யூமாவின் மொழிபெயர்ப்பு வெகு சிறப்பு. அசாத்தியமானதை சாத்தியமாக்கிவிட்ட அவர் பாராட்டுக்குரியவர். ஆங்காங்கே சில சிறு குறைகள் இருந்தாலும், மலையாளச் சாயலோடு, நாவலின் அசல் தன்மை கெடாமல் மொழிபெயர்த்துள்ளார். மலையாளத்தில் உள்ள, கஸாக் பகுதிக்கே உரித்தான, தனித்துவமான வட்டாரக் கொச்சை மொழிகளை, அதற்கு நிகரான வகையில் தமிழிலோ பிற மொழிகளிலோ மொழிபெயர்ப்பது, கடின உழைப்பைக் கோரக்கூடிய ஆகப் பெரும் சவால். அதில் யூமா வென்றிருக்கிறார். அவர் ஒரு சிறந்த கதாசிரியராகவும், கவிஞராகவும் இருப்பது, காவியத்துவமான இந்த நாவலைச் சிறப்புற மொழிபெயர்க்கப் பெருமளவில் உதவியிருப்பதை உணர முடிகிறது.
மற்ற மொழிபெயர்ப்புக் குறைகளைப் பொருட்படுத்தாமல் விடலாம். ஆனால், குஞ்ஞாமினா என்னும் பெயரை குங்ஙாமினா என்று பிழையாக எழுதியிருப்பது, பெரிய தவறு. குஞ்ஞாமினா என்றால் குட்டி ஆமினா அல்லது சிறிய ஆமினா எனப் பொருள்படும். குங்ஙா என்பது பொருளற்ற எழுத்துச் சேர்க்கை. காலச்சுவடு வெளியீடு, 2017, இரண்டாம் பதிப்புதான் நான் வாசித்த பிரதி. அதில் குங்ஙாமினா என்றே இருக்கிறது. பிற்பாடு பதிப்புகள் வந்ததா, அதில் இத் தவறு திருத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.
இந்த நாவலை முழுதாகக் கேட்பதற்கு / வாசிப்பதற்குக் கால் நூற்றாண்டு காலம் முன்பே அதன் கதைக் கரு பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். கஸாக்கின் இதிகாசத்தை ஒலிப் புத்தகமாகக் கேட்பதற்கு சில மாதங்கள் முன்பு, தற்செயலாக, பிரபல மராத்தி எழுத்தாளர் வெங்கடேஷ் மாட்கூல்கரின் சாஹித்ய அகாடமி விருதுபெற்ற நாவலான பங்கர்வாடி என்னும் நாவலை வாசிக்க நேர்ந்தது. 1995-ல் மராத்திய திரைப்படமாகவும் வெளிவந்துள்ள இந்த நாவல், கஸாக்கின் இதிகாசத்துக்கு முன்பு, 1954-ல் எழுதப்பட்டதாகும். ஆட்டு இடையர்களான ராமோஷி இன மக்களின் கிராமத்திற்கு ஓராசிரியர் பள்ளியாசிரியராக வரும் இளைஞன் ஒருவனின் பார்வையில், அவனே தன்மை ஒருமையில் கதை சொல்வதாக அமைந்த நாவல் இது. அந்த ஆட்டு இடையர்களின் வாழ்வையும், பல்வேறு குணச்சித்திரங்கள் கொண்ட அந்த கிராமத்து மனிதர்களையும், அவர்களின் பல வித வாழ்வியல் சூழல்களையும், நாவலின் கதைசொல்லியான இளைஞன் அந்த கிராமத்தில் ஓராசியர் பள்ளி அமைப்பது தொடர்பான விஷயங்களையும், எளிய மொழியில், அச்சு அசலாக நம் கண் முன்னே திரைப்படம் பார்ப்பது போலச் சித்தரிக்கும் நாவல் இது.
இந்த நாவலின் எளிமை, மண் மணம் கொண்ட மனிதர்களின் பல வித குணச்சித்திரங்கள், தேர்ந்த கதை சொல்லல், பல்வேறு பருவங்களின் நிலக்காட்சி சித்தரிப்புகள், ஆட்டு இடையர்களின் முழுமையான வாழ்வியல் யாவும் என்னை மிகவும் கவர்ந்ததால், நாவல் கலை கற்கைக்காக மீண்டும் இரு முறை மறுவாசிப்பு செய்தேன்.
இந்த நாவலை முதல் முறை வாசித்தபோதே, ஓராசிரியர் பள்ளி ஆசிரியராக ஒரு கிராமத்திற்கு ஓர் இளைஞன் வந்து தங்குகிறான் என்கிற அம்சம், கஸாக்கின் இதிகாசத்திலும் உள்ளதாகக் கேள்விப்பட்ட ஞாபகம் வந்தது. பிற்பாடு கஸாக்கின் இதிகாசத்தை வாசித்தபோது அது உறுதியானது. ஆனால், இந்த அம்சத்தைத் தவிர இரண்டு நாவல்களின் கதையும் முற்றிலும் மாறுபட்டவை. கதை சொல்லல் முறை, எழுத்து நடை ஆகியவற்றில் இரண்டுமே எதிர் எதிரானவை. பங்கர்வாடி நாவல் எளிமையும், எதார்த்தமும் கொண்டது; கஸாக்கின் இதிகாசம் செவ்வியல் தன்மையும், நவீனத்துவமும் கொண்டது. இருப்பினும், கஸாக்கின் இதிகாசம் வெளியானபோது அது மராத்திய நாவலான பங்கர்வாடியின் தழுவல் என்று சிலரால் சொல்லப்பட்டதாம். ஓ.வி.வி.யிடம் அது குறித்துக் கேட்டபோது, எனக்கு மராத்தி வாசிக்கத் தெரியாது என்று பதிலளித்தாராம். மராத்தி வாசிக்கத் தெரியாவிட்டால் என்ன; 1958-ல் இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, தி வில்லேஜ் ஹேட் நோ வால்ஸ் என்ற தலைப்பில் வெளியாகி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவலான பாராட்டுகளைப் பெற்றதாம். ஓ.வி.வி., அதை வாசித்திருக்கலாம்; அல்லது, யாரேனும் சொல்லக் கேட்டிருக்கலாம் என்பதற்கு நிறைய சாத்தியம் உள்ளது. அவ்வாறன்றி, ஓராசிரியர் பள்ளி ஆசிரியர் ஒரு கிராமத்திற்கு வருவது எனும் ஒற்றுமை, இவ்விரு நாவல்களிலும் தற்செயலாக நேர்ந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. காரணம், அப்போது அது இந்தியா முழுக்க, உள்ளார்ந்த கிராமங்கள் எங்கும் நடைபெற்ற ஒன்றுதான்.
கஸாக் என்னும் பெயர், தஸ்ராக் என்னும் நிஜ கிராமப் பெயரின் தழுவலே என்பது வெளிப்படை. எனினும், ரஷ்ய நாவல்களில் நாம் வாசித்து அறிந்த, கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த கஸாக்குகளின் பெயர், இதற்கு ஒரு தூண்டலாக இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.
*******
கஸாக்கின் இதிகாசம் பற்றி எனது 19 – 20 வயது காலகட்டத்தில் கேள்விப்பட்டது சில வரிகளே. அதில் அதன் செவ்வியல்தன்மை பற்றியோ, நாவலின் முக்கியத்தும் பற்றியோ, பல வித சிறப்புகள் பற்றியோ எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை. ஒரு இளைஞன் தனது சிற்றன்னையுடன் தகாத உறவு கொள்கிறான் என்பது பற்றிய கதை அது என்பதாகவே இரண்டு முன்று இடங்களில் கேள்விப்பட்டும், வாசித்தும் இருந்தேன். நீண்ட வருடங்களுக்குப் பிற்பாடுதான் அந்த நாவலின் சிறப்புகளும் முக்கியத்துவமும் சிறிதளவு தெரிய வந்தன.
நாவல் தலைப்பு சுட்டுகிறபடி பார்த்தால் இது ரவியின் கதையல்ல. கஸாக்கின் கதை. ஆனால், அதோடு சேர்ந்து ரவியின் கதையும் ஊடுபாவாக இடம்பெறுகிறது. ரவியின் கதைக்குப் பின்புலமாக கஸாக்கின் கதை அமைக்கப்பட்டுள்ளதா, கஸாக்கின் கதையைச் சொல்வதற்கு ரவியின் பாத்திரமும் கதையும் பயன்பட்டதா எனப் பிரித்தறிய இயலாதபடி, இரண்டும் பின்னிப் பிணைந்துள்ளன.
நாவலின் நாயகனான ரவியின் உயர் நடுத்தர வர்க்கக் குடும்பம் ஊட்டியில், தேயிலைத் தோட்டத்தில் வசிக்கக் கூடியது. அப்பா ஒரு தோட்டத்தில் மருத்துவர். ரவியின் தாய், அவனது குழந்தைக் காலத்திலேயே இறந்துவிட்டாள். அப்பா, மறுமணம் புரிந்துகொண்டவளான சித்தியின் இரு பெண் மக்களும் இப்போது வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தனர். ரவி மதறாஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் படித்தவன், தாம்பரத்தில் வசித்தவன். ஆஸ்ட்ரோ பிசிக்ஸில், ப்ரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் மேற்கல்வி மேற்கொள்ள இருந்தவன். அவனது பேராசிரியரின் மகளான பத்மாவைக் காதலித்துக்கொண்டும் இருந்தான். இந்த நிலையில், அப்பா நோய்வாய்ப்பட்டு மரணத்துக்குக் காத்திருக்கும்போது, ரவிக்கு சிற்றன்னையுடன் தகாத உறவு ஏற்படுகிறது. அதனால் உண்டாகிற பாவ உணர்ச்சியும், தந்தைக்கு இப்படி துரோகம் செய்து, தந்தை – மகன் உறவின் புனிதத்தைக் களங்கப்படுத்திய குற்ற உணர்ச்சியும் அவனை வதைக்கின்றன. அவனால் படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை. படிப்பைக் கைவிடுகிறான். தன்னை வேட்டையாடும் குற்ற உணர்விலிருந்து தப்பிக்க முற்பட்டு, எங்கெங்கோ சுற்றித் திரிந்து, என்னென்னவோ செய்து, இறுதியில், கஸாக்கிற்கு ஓராசிரியர் பள்ளி ஆசிரியனாக வந்து சேர்கிறான்.
நாவலை வாசித்தபோது, கிட்டத்தட்ட பாதி ஆகியும் சிற்றன்னையுடன் தகாத உறவு என்கிற பிரசித்தி பெற்ற விஷயம் வரவே இல்லை. சிற்றன்னை பாத்திரமும் இடம்பெறவில்லை. எனக்கு அது வியப்பாகவும், கேள்விக்குறியதாகவும் இருந்தது. பிற்பாடு அந்த விஷயங்கள் இடம்பெறும்போதும், மிக மிகச் சுருக்கமாகவே அந்த விஷயம் பற்றி – தகவல் தெரிவிப்பு என்கிற அளவுக்கு மட்டுமே இடம்பெறுகிறது. பாலுறவு கொண்டார்கள் என்பதை விவிலியத்தில், ‘அறிந்தார்கள்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறபடி, ‘அவன் சிற்றன்னையை அறிந்தான்’ என்று சொல்லிவிட்டு ஓ.வி.வி. கடந்து சென்றுவிடுகிறார். அவர்களுக்கிடையே பாலியல் விழைவு ஏற்படுவது பற்றியோ, அவர்கள் பாலுறவு கொள்வது பற்றியோ கிளர்ச்சியூட்டக் கூடிய வகையிலான சித்தரிப்புகள், வர்ணனைகள் எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல; சாதாரணமான விவரிப்பு கூட இல்லை. சிறு சுட்டிக் காட்டல் மட்டுமே செய்கிறார். கதைக்கு அது போதுமானது. இது பாலியல் நாவல் அல்ல. நாவல் நாயகனான ரவிக்கு சிற்றன்னையுடன் தகாத உறவு ஏற்படுவது இந்த நாவலின் கதையும் அல்ல. இந்த உறவு, சிற்றனையை பாதிக்கிறதா இல்லையா, அவர் அதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறார் என்பது பற்றிய தகவல்களே இல்லை. ரவி இதை வேறு எவரிடமும் பகிர்ந்துகொள்வதும் கிடையாது. அந்தத் தகாத குடும்பப் பாலுறவு, ரவிக்குள் ஏற்படுத்துகிற குற்ற உணர்ச்சி, பாவ உணர்ச்சி ஆகியவை கூட அவ்வளவாக இடம்பெறுவதில்லை. அவனுக்குள் ஏற்படும் குற்ற உணர்ச்சியின் விளைவுகளும், கஸாக்கின் முன் கதைகளும், இரண்டு ஆண்டுகளில் நிகழும் சம்பவங்களும்தான் நாவலின் கதை.
ரவியின் கதையும் கஸாக்கின் கதையும் மாறி மாறி, பல்வேறு பாத்திரங்களின் பார்வையில் இடம்பெறுகின்றன.
ஓராசிரியர் பள்ளிப் பணிக்கு அதிக படிப்பு ஒன்றும் தேவையில்லை. ஆனால், ரவியோ அந்தப் பணிக்குத் தேவையில்லாத அளவு மெத்தப் படித்தவன். அறிவாளி. சூழலும், அவனது குற்ற உணர்ச்சியும்தான் அவனை அங்கே கொண்டு வந்து சேர்த்தியிருக்கின்றன. நவ நாகரிக இளைஞனான அவனுக்கும், அந்த கிராமத்துப் பாமர மக்களுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. ஆனால், அவன் அந்த வேற்றுமைகளைக் கடந்து அவர்களில் ஒருவனாக ஆகிறான். அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்கவும், அவர்களுக்குப் பல்வேறு வகையில் உதவவும் செய்கிறான். அதோடு, அவர்களோடு சேர்ந்து குடிக்கவும், வாய்ப்புள்ள பெண்களோடு பாலியலில் ஈடுபடவும் செய்கிறான்.
ரவி நல்ல மனிதன். ஆனால், ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாதவன். அவனுக்கு வாழ்வில் இலக்கு என்று எதுவும் கிடையாது. வாழ்க்கையை அதன் போக்கில், மிருக இச்சைகளை ஒட்டி வாழ்பவன். ஒரு வகையில் பார்த்தால் அவனது வாழ்க்கையே ஒரு ராசலீலை போலவும், கஸாக் அவனது அந்தப்புரம் போலவும் தோன்றும். ஆனால் அவன் எதையும் கொண்டாடித் திளைப்பதில்லை. அதிக உணர்ச்சிவசப்படுவதில்லை. அதற்கு மாறாக, சுகத்தையும், குற்ற உணர்ச்சியையும் அமைதியாக ஆழ்ந்து அனுபவிக்கிறான். தனது பாவத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறவன், மீண்டும் மீண்டும் அதே பாவத்தைச் செய்கிறான்.
நாவல் துவக்கத்திலேயே, அதுவும் மூன்றாவது பத்தியிலேயே, அவனது குணச்சித்திரம் சொல்லப்படுகிறது. முந்தைய நாள் தங்கியிருந்த ஆசிரமத்திலிருந்து, சன்யாசினியின் வேட்டியை மாறி உடுத்திக்கொண்டு வந்துவிட்டான் என்பது அது. அப்படியெனில் இருவரும் முந்தைய தின இரவில் பாலியலில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அந்த சன்னியாசினியின் சன்னியாசமும் நமக்குக் கேள்விக்குறியாவதோடு, ரவியின் ஒழுக்கம் எப்படிப்பட்டது என்றும் காட்டப்பட்டுவிடுகிறது. கஸாக்கில் அவன் அழகி மைமூனா, சாராயம் விற்கும் பெண்ணான கேளச்சி உள்ளிட்ட பெண்களுடன் பாலுறவில் ஈடுபடுகிறான். அதுவும், கேளச்சிக்கு வைசூரி எனும் பெரியம்மை நோய் பீடித்திருந்த சமயத்தில் அவளோடு உறவு கொள்வது, அவனது தீராத காம வேட்கையின் உச்சம்.
பாவத்திலிருந்து தப்பிக்கச் சென்றவன், மீண்டும் மீண்டும் பாவத்தில் வீழ்கிறான். குற்றச் செயல்கள், தீய பழக்கங்கள் ஆகியவற்றில் ஒரு முறை அகப்பட்டவர்கள், அது குற்றம், தீமை என்று தெரிந்தாலும், அவற்றைக் கைவிட முடியாமல் தொடர்ந்து அதற்கு அடிமையாகிவிடுவது போல, பாலியலில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் அதிலேயே உழல்வது உளவியல் சிக்கல்களில் ஒன்று. அது ஒரு வகை சுயம் நசிப்பு, ஆத்ம நசிப்பு என்றும் சொல்லலாம்; இன்னொரு வகையில் மசோகிஸம் என்றும் சொல்லலாம்.
கஸாக்கின் கதையானது, அதன் தொன்மங்கள், சமய நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றாலும், அவ்வூர் மக்களில் சில முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்வாலும் கட்டமைக்கப்பட்டது. இஸ்லாமியர்களும் இந்துக்களும் பாதி பாதி அளவுக்கு வாழக்கூடிய அந்த குக்கிராமம், மத நல்லிணக்கத்தை மட்டுமல்ல; நம்பிக்கைக் கலப்பையும் இயல்பாகக் கொண்டது. இஸ்லாமியர்கள் இந்து நம்பிக்கைகளையும், இந்துக்கள் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் வேறுபாடின்றிக் கடைபிடித்து வாழ்ந்த அந்தக் காலம், இன்று பழங்கதையாகப் போய்விட்டதை எண்ணி ஏங்க வைக்கக் கூடிய பதிவுகள் பலவும் உள்ளன.
கஸாக் கிராமத்தவர்களான நாவலின் முக்கிய அங்கத்தினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையான கதைகள் உள்ளன. அந்தக் கிளைக் கதைகள் ஒவ்வொன்றும் நாவலில் சிறுகதை அளவுக்கோ, குறுநாவல் அளவுக்கோ, குட்டிக் கதை அளவுக்கோ இடம் பெறுகின்றன. சிறிதோ, பெரிதோ, அக் கதைகளும் வலுவான அல்லது அழுத்தமான கதைகள்.
தையல்காரர் மாதவன் நாயரின் இளம் வயது விதவை அம்மாவுக்கு, மாதவன் நாயரின் மீது பாலியல் ஈர்ப்பு இருப்பது போன்ற குறிப்புணர்த்தல்கள் இடம்பெறுகின்றன. தாய் – மகன் தகாத உறவைக் குறிக்கும் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்னும் பதம் இங்கே நினைவுக்கு வரும். இதன் காரணமாகவே மாதவன் நாயர், தவறு நடந்துவிடக் கூடாது என்பதற்காக அம்மாவை விட்டு வேதாந்தம் படிக்க வெளியூர் செல்கிறார். ஆனால் அவர் திரும்ப வரும்போது அவரது தாய் பாலியல் தொழிலாளியாக ஆகியிருக்கிறாள். மகனிடம் அப்போது தாய் கேட்கும் கேள்வி, சொடுக்கக் கூடியது.
ரவிக்கும் சிற்றன்னைக்குமான தகாத உறவு, அதன் விளைவாக அவனுக்குள் எழும் குற்ற உணர்வு, அதன் விளைவாக படிப்பு, காதல், குடும்பம், சொந்த ஊர் ஆகிய யாவற்றையும் துறந்து, தப்பிக்க முற்படுதல் ஆகியவற்றோடு இணைத்தும் ஒப்பிட்டும் பார்க்கத் தக்கது, மாதவன் நாயரின் கதை.
பிறவியிலேயே உடல் குறையும், மூளை வளர்ச்சியின்மையும் கொண்ட அப்புக்கிளி, உடன் பிறந்த சகோதரிகளான ஐந்து அம்மாக்களுக்கு ஒரே மகன். திருமணம் ஆன நான்கு சகோதரிகளுக்கும் குழந்தைகள் இல்லை. திருமணம் ஆகாத நீலிக்கு அப்புக்கிளி பிறக்கிறான். அந்தக் கருவுக்குக் காரணம், சகோதரிகளில் ஒருத்தியின் கணவன். அப்புக்கிளியின் கதாபாத்திரம், குணச்சித்திரம், பேச்சு, நடத்தைகள் யாவும் மறக்க முடியாதபடி ஆழப் பதியக் கூடியவை.
கள் இறக்கும் தொழிலாளியான குப்புவச்சன், தொழில் இழந்து, மகனின் மனைவியான மருமகளைக் கூட்டிக் கொடுத்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
ரவிக்கு அடுத்தபடியாக நாவலில் முக்கிய அங்கம் வகிப்பவரும், இஸ்லாமியப் பள்ளியான மதரஸா ஆசிரியருமான அல்லாபிச்சை மொல்லாக்கா, அவரது மகள் மைமூனா, அவளின் காதலனான நைஸாமலி ஆகியோரின் கதைகள் சேர்ந்து ஒரு குறுநாவல் அளவுக்கு இடம்பெறுகின்றன. அல்லாபிச்சை மொல்லாக்காவுக்கும், விடலை நைஸாமலிக்கும் ஓரினச் சேர்க்கை உறவு இருப்பது குறிப்புணர்த்தப்படுகிறது. தன் மகள் மைமூனாவை அவனுக்கு மணம் முடித்துக் கொடுக்க அல்லாபிச்சை விரும்புகிறார். பொருத்தமான ஜோடியான நைஸாமலியும் மைமூனாவும் காதலிக்கவும் செய்கின்றனர். ஆனால், நைஸாமலியுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவனை விரட்டிவிட்டு, மைமூனாவை, அவள் வயது மகள் உள்ளவரான முங்காங்கோழி என்னும் சுக்ரு ராவுத்தருக்கு மறுமணம் செய்து வைக்கிறார். அல்லாபிச்சையின் இந்தச் செயல் நமக்கு அவர் மீது வெறுப்பை உண்டாக்க வேண்டும். ஆனால், அவர் மீது ஏனோ நமக்கு வெறுப்பு ஏற்படுவதில்லை என்பது, பாத்திர வார்ப்பின் வெற்றி. நைஸாமலி பீடிக் கம்பெனி முதலாளியாகி, பின் வீழ்ச்சியுறுகிறான். அல்லாபிச்சை மொல்லாக்கா, ‘செருப்பு கடித்து மரணம்’ என்று சொல்லப்படுகிற புற்றுநோய் மரணத்துக்கு ஆளாகிறார். மைமூனாவும் திருமணத்துக்குப் பின் நைஸாமலியுடனும், பின் ரவியுடனும் தகாத உறவு கொள்கிறவளாக நடத்தை பிறழ்கிறாள்.
இந்த நான்கு கதைகளிலுமே பாலியல் சார்ந்த வெவ்வேறு விஷயங்கள், பாதிப்புகள், தாக்கங்கள் இடம்பெறுவது கவனிக்கத் தக்கது. ரவியின் கதையோடு பொருந்திப்போகக் கூடிய முக்கிய அம்சம் இது. பாலியல் வேட்கை, இந்த நாவலின் அடிநாதமாக இயங்குகிறது எனலாம்.
கஸாக்கிற்கு தனிப்பட்ட அம்சங்கள் இருப்பினும், கஸாக் மக்களின் வாழ்க்கை, சாதாரணமாக உள்ள எந்த கிராமத்து மக்களின் வாழ்விலிருந்தும் மாறுபட்டதல்ல. கிராமமோ நகரமோ, எந்த நாடோ, மொழியோ, இனமோ, மதமோ, ஜாதியோ – மனிதர்களின் அடிப்படை உணர்வுகள், உணர்ச்சிகள், தேவைகள் ஒன்றுதானே! அதே போல நன்மை தீமை, இன்ப துன்பங்கள், லாப நஷ்டங்கள், ஏற்ற இறக்கங்கள், மகிழ்ச்சி துக்கம் ஆகியவை கலந்ததுதான் வாழ்க்கை. கஸாக்கினர்களின் வாழ்க்கையும் இப்படிக் கழிகிறது.
மனிதர்கள் எல்லோருமே சூழ்நிலைக் கைதிகள். முன் தீர்மானப்படி எல்லோரின் வாழ்வும் கடைசி வரை நிகழாது. இடையிடையே ஏற்ற இறக்கங்கள், வளர்ச்சி வீழ்ச்சிகள், திருப்பங்கள், குண மாற்றம், நடத்தை மாற்றம், பிறழ்வுகள், ஒழுக்கக் கேடுகள், தீய பழக்கங்கள், கால மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அது பாதிக்கப்பட்டு, சிறிதோ பெரிதோவான மாற்றங்களுக்கு உள்ளாகும். அப்படித்தான் மேற்கூறிய கிளைக் கதைகளின் பாத்திரங்களின் வாழ்விலும் நடைபெறுகிறது. இறுதியில் அவர்களோடு சேர்த்து ஊர் முழுதுக்குமான பெரிய பாதிப்பாக வைசூரித் தொற்றின் மரணங்கள். நாவலின் கதையில் இறுதி மற்றும் வலுவான அழுத்தம் அது.
இந்தப் பின்புலத்தில் ரவி என்னவாகிறான், அவனது வாழ்வு எப்படி இருக்கிறது என்பது முதன்மைக் கதை. முன்பே சொன்னபடி, பாவத்தின் குற்ற உணர்விலிருந்து தப்பிக்கும் முயற்சியிலேயே அவன் ஓராசிரியர் பள்ளி ஆசிரியப் பணிக்காக கஸாகிற்கு வருகிறான்; அனால், மீண்டும் மீண்டும் பாவத்தில் ஈடுபடுகிறான். அவனுக்கு இருப்பது தப்பிக்கும் எண்ணம்தானே தவிர, பாவத்துக்குப் பிராயச்சித்தம் தேடுவதோ, பாவத்திலிருந்து மீள்வதோ அல்ல என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. பிராயச்சித்தம் தேடுவது, பாவத்திலிருந்து மீள எண்ணுவது ஆகியவை மனதின் ஆழத்திலிருந்து, ஆத்மார்த்தமாக வரக் கூடிய உள்ளுணர்வுகளாகும். அப்படிப்பட்டவர்கள், பாவிகள் நிலையிலிருந்து விடுபடலாம். அவர்கள் புனிதர்கள் என்னும் நிலைக்கு உயரவும் கூடும். ரவிக்கு இருப்பது மனதின் மேல் மட்டத்தில் உள்ள குற்ற உணர்ச்சி மட்டுமே. அதனால்தான் அவனால் பாலியல் வேட்கையிலிருந்து விடுபட முடிவதில்லை. மீண்டும் மீண்டும் அதிலே உழன்று, மைமூனாவுக்காக நைஸாமலியுடன் கைகலப்பு, வைசூரி பீடித்த கேளச்சியுடன் பாலுறவு எனும் அளவுக்குப் போகிறான்.
உள்ளீடற்ற மனிதன் என டி.எஸ்,எலியட் குறிக்கிறபடியான நவீன மனிதனாகவே ரவி இருக்கிறான். உயர் கல்வியும், அறிவும் கொண்டவன்தான். ஆனால், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, சிற்றன்னையுடன் தகாத உறவில் ஈடுபட்டு, குற்ற உணர்ச்சியின் துரத்தலுக்கு உள்ளாகிறான். அதனால் அவனது சமநிலை தவறுகிறது. தான் செய்வது சரியா – தவறா என சிந்தித்து முடிவெடுக்கும் தேட்டமின்றியும், யாருடனும் எந்த ஆலோசனைகளும் பெறாமலும் வழி தவறுகிறான். அவனுக்கு அக வாழ்க்கை என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. புற வாழ்க்கையின் எளிய இன்பங்களைத் துய்த்தும், கஸாக்கின் சாமான்ய மக்களோடு மக்களாக வாழ்ந்தும் அவனது வாழ்க்கை சாரமற்றுக் கழிகிறது.
ஒழுக்கக் கேடானவன் எனினும் ரவி நல்லவன். ஏழைகளுக்கும் அபலைகளுக்கும் இரங்குகிறவன்; உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவுகிறவன். அதனால் அவனை அவ்வூர் மக்களும் தங்களில் ஒருவனாக ஏற்று நேசிக்கின்றனர். அவனுக்கு இந்த வாழ்க்கை போதுமானதாக இருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவனது காதலி பத்மா அவனைத் தேடி வருகிறாள். இருவரும் நகரத்தில் சந்திக்கின்றனர். அவள் அவனது தாழ்வுகளை சுட்டிக் காட்டி, அதிலிருந்து மீட்டு, அவன் செல்ல வேண்டிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடுகிறாள். சம்மதித்துத் திரும்பும் அவன், தான் செய்த பணியை விட்டுவிட்டு, கஸாக்கிலிருந்து வெளியேறுகிறான். ஆனால், பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்குக் காத்திருக்கும் நேரத்தில், பாம்பு தீண்டியதில் விஷம் ஏற்று மரிக்கிறான். நாவல் அதோடு நிறைவுறுகிறது.
*******
நாவலில் கஸாக்கின் கதை, கஸாக் மக்களின் கதை, ரவியின் கதை ஆகியவை தெளிவாகவே சொல்லப்படுகின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த நாவலை வாசிக்கையில், அந்தக் கதைகள் சொல்லும் செய்தி என்ன; அல்லது, இந்த நாவல் எதைச் சொல்ல வருகிறது என்பது உடனடியாகப் புலனாவதில்லை. ஆழ்ந்த இலக்கிய வாசிப்பு, தத்துவம், உளவியல் ஆகியவற்றில் அறிதல் ஆகியவை கொண்டவர்களுக்கே அது உடனடியாகப் பிடிபடும். எனக்கு இவற்றில் பற்றாக்குறை என்பதால் முதல் வாசிப்பில் புரிந்தும் புரியாத மயக்க நிலைதான். தொடர் வாசிப்பில்தான் நாவலின் தரிசனங்கள் இவையாக இருக்கலாம் என்பது லேசாகப் புலப்பட்டது. இதுதான் தரிசனம் என்று நாவலாசிரியர் எதையும் சொல்வதோ, சொல்ல முற்படுவதோ இல்லை. வாழ்வையும் மனிதர்களையும் இருண்மையான முறையில், கொஞ்சம் காண்பித்தும் நிறைய மறைத்தும் நமக்குக் காட்சிப்படுத்துகிறார். வாசக இடைவெளி அல்லது மௌனம் என்று சொல்லப்படுகிற, படைப்பாளி சொல்லாமல் விடக்கூடிய பகுதி, ஏராளமாக இருக்கிறது. அது கஸாக்கில் ஓ.வி.வி. சித்தரிக்கிற பரந்த நிலப்பரப்பை விட பன்மடங்கு விரிந்து பரந்தது. அந்த வெளியினூடே கடந்து சென்றுதான் நாவலின் தரிசனங்களை அடைய வேண்டும்.
இது ஒரு இருத்தலியல்வாதப் பிரதி என்றும், இதை வாசித்து பலரும் அனார்க்கிஸ்ட்டுகளாக ஆனார்கள் என்றும் சொல்லப்படுகிறது. வாழ்வின் அர்த்தமின்மையை மையக் கோட்பாடாகக் கொண்ட இருத்தலியல் தத்துவ நோக்கில் அமைந்த, ஆல்பர் காம்யுவின் அந்நியன் உடனடியாக ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால் அது வெறுமை, அர்த்தமின்மை, விட்டேற்றி, விரக்தி ஆகிய உணர்வுகளை மட்டுமே கொண்டது. கஸாக்கின் இதிகாசமோ, வாழ்வின் இன்ப துன்பங்கள், சுக துக்கங்கள், கொண்டாட்டங்கள், வேதனைகள், அவலங்கள் அனைத்தையும் அனுபவித்துக் கடந்து, இறுதியில் அர்த்தமின்மையை, சூனியத்தை அடையக்கூடியது.
இருத்தலியல்வாதம் பற்றி ஓஷோ பேசுகையில், அது மெய்ஞானத்துக்கு மிகவும் நெருக்கமான தத்துவ இயல் என்று குறிப்பிட்டிருப்பதோடு, நீட்ஷே இன்னும் ஒரு படி மேலே சென்றிருந்தால் புத்தராகியிருப்பார் என்றும் சொல்லியிருக்கிறார். இருத்தலியல்வாதத்தின் சூனியம் வெறுமை, விரக்தி ஆகியவற்றால் ஆனது; புத்தரின் சூனியம் முழுமையால் ஆனது என்று சொல்லலாம் என நினைக்கிறேன். உறுதியாகத் தெரியவில்லை.
ரவி, உணர்ச்சிமயமானவன் அல்ல. உணர்வுபூர்வமானவன். ஆயினும், இச்சைகளின் போக்கில், வாழ்வின் போக்கில் வாழ்பவன். அவனுக்கு எதிலும் பெரிய பிடிப்போ, அவனுக்கென்று நிரந்தர லட்சியங்களோ இல்லை. தற்காலிகமான நோக்கம் மட்டுமே இருக்கிறது. அது, குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பித்தல். தான் வாழ்கிற இடங்களையும், தான் பழகுகிற மனிதர்களையும், தான் செய்கிற வேலை / செயல்களையும் விட்டுவிட்டு, அறியாத இடத்துக்குச் சென்றால், தனது குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்கலாம் எனக் கருதுகிறான். அது எப்படி சாத்தியம்? குற்ற உணர்ச்சி அவனுக்குள் அல்லவா இருக்கிறது! தனது பாவத்திலிருந்து மீள்வது, அல்லது பாவத்துக்குப் பிராயச்சித்தம் தேடுவது என்கிற ரீதியில், மதம் அல்லது ஆன்மிக வழிகளில் சென்றிருந்தால் ஒருவேளை அவனுக்கு சாந்தியும் சமாதானமும் கிட்டியிருக்கலாம். அவன் தேர்ந்தெடுத்த வழியும், அவன் சென்றடைந்த ஊரும், அவனை மீண்டும் மீண்டும் அதே பாவத்தில் உழலும்படி ஆழ்த்திவிட்டன.
ரவியின் இந்தப் பயணம், சுயம் தேடல் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அவனது சுயம் இழத்தல் அல்லது சுயம் நசித்தல் என்பதே நமக்கு அதிகமும் அனுபவப்படுகிறது.
ஒரு ஊருக்கு ஒரு புதிய கதாபாத்திரம் வருவதில் தொடங்கி, அது ஊரை விட்டுச் செல்வதில் முடியும் நாவல்கள், திரைப்படங்கள் பல. பங்கர்வாடி நாவலும் அப்படித்தான். கஸாக்கின் இதிகாசம் நாவலும் அவ்வாறே, கஸாக் கிராமத்திற்கு சில கி.மீ. தள்ளி உள்ள, கூமன்காவு எனும் குக்கிராமத்தின் பேருந்து நிறுத்தப் பகுதியில் ரவி பேருந்தில் வந்து இறங்குவதில் தொடங்கி, அதே இடத்தில் அவன் பேருந்துக்குக் காத்து நிற்கும் காட்சியின்போது முடிவடைகிறது. ஆனால், இந்தத் துவக்கமும் முடிவும் சாதாரணமானதாக இல்லை. நாவலின் துவக்கமாக உள்ள முதல் பத்தியும், இறுதியாக உள்ள கடைசி மூன்று பத்திகளும் ஒருவித அசாதாரணமும், புதிர்மையும் கொண்டதாக உள்ளன. நாவல் நெடுக உள்ள இருண்மைக்கும், கதைக்கும் தக்க தன்மைகள் அவை.
ஆழமான கதைகள், நாவல்களுக்கு உரித்தானபடி கஸாக்கின் இதிகாசம், மிக மெதுவாகவும், மிகுந்த நிதானத்தோடும் நகரக்கூடியது. ஆயினும் வாசிப்புச் சுவை மிக்கது. உணர்ச்சிக் கொந்தளிப்புகளை உள்ளீடாகக் கொண்ட, உணர்வுபூர்வமான கதை. மறக்க முடியாத கதாபாத்திர வார்ப்புகள். கார்ட்டூனிஸ்ட்டுமான ஓ.வி.வி.யின் சித்தரிப்புகளில் ஓவியத் தன்மையும், கார்ட்டூன் தன்மையும் கைகொடுத்துள்ளன. கவித்துவமும், நுட்பமும் கொண்ட அவரது மொழி நடையில், ஆங்காங்கே நையாண்டியும் கருப்பு நையாண்டியும் மிளிர்கின்றன.
நாவலின் இலக்கிய நயங்களை சொல்லப் புகுந்தால் சொல்லிக்கொண்டே இருக்கலாம். உதாரணங்கள் காட்டவோ, மேற்கோள் காட்டவோ புகுந்தால் அதுவே பல பக்கங்களுக்கு நீண்டுவிடும் என்பதால் அவற்றைத் தவிர்க்கிறேன்.
இந்த நாவலுக்கு கஸாக்கின் இதிகாசம் என்று நாவலாசிரியர் தலைப்பு சூட்டக் காரணம் என்னவாக இருக்கும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. சாமான்ய மக்களின் சாமான்ய வாழ்வும் இதிகாசம் ஆக முடியும் என்றும், இதுவும் இதிகாசங்களுக்கு சமானம்தான் என்றும் அத் தலைப்பு உணர்த்துகிறது. ஆனால், இதிகாசங்கள் போல இது வீர தீரங்களையோ, மேலான விழுமியங்களையோ பறைசாற்றுவதல்ல. சாமான்ய நடுத்தர மக்கள், ஏழைகள், விளிம்பு நிலை மக்கள் ஆகியோரின் வாழ்வை, கீழ்மை, ஒழுக்கக் கேடு என பொதுப் பார்வைகளில் மதிப்பிடப்படக்கூடியதும், ஆனால் அந்த மக்கள் அது குறித்துக் கவலைப்படாததுமான அடித்தட்டு வாழ்வை, அதன் அழுக்குகள், கறைகள், காயங்கள், வலிகள், துயரங்கள், அவலங்கள் ஆகியவற்றோடு சொல்கிறது. நன்மை – தீமை, ஒழுக்கம் – ஒழுக்கமின்மை, மேன்மை – கீழ்மை ஆகிய பேதங்களுக்கு அப்பால், அவர்களின் வாழ்க்கையை உணர்வுகளோடும், உணர்ச்சிகளோடும், கலை மேதைமையோடு சித்தரித்துக் காட்டுகிறது. இதிகாசங்களிலும், அரச வம்சங்களில், உயர் குலத்தவர்கள் என சொல்லப்படுகிற இதர வர்க்கங்களில், இதே வித தீமைகள், ஒழுக்கக் கேடுகள், கீழ்மைகள் ஏராளமாக உள்ளதுதானே!
கஸாக்கின் கதை மாந்தர்கள் பலரின் வாழ்விலும் தகாத பாலியல் உறவுகளும், அதன் பல்வேறு விளைவுகளும் இடம்பெறுகின்றன. இந்த ஒழுக்கக் கேடுகளைப் பாவம் எனக் கொண்டால், கஸாக்கின் இதிகாசம் நாவல், பாவத்தின் கதை அல்லது பாவிகளின் கதை என்று கூட சொல்லலாம். ஆனால், பாலியல் கதை என்று சொல்ல முடியாது. வாசகர்களுக்குக் கிளர்ச்சி ஏற்படுத்தக் கூடிய வகையிலான பாலியல் வர்ணனைகளோ, சித்தரிப்புகளோ இதில் இல்லை. உலகின் மாபெரும் செவ்வியல் நாவலான அன்னா கரீனினா, தகாத உறவு பற்றிய கதைதான். ஆனால், அதிலும் அப்படித்தான், பாலியல் வர்ணனைகளோ, சித்தரிப்புகளோ இராது. தமிழ் இலக்கியத்தின் முக்கிய தகாத உறவுப் படைப்பான அம்மா வந்தாள் நாவலில், அம்மா கதாபாத்திரமான அலங்காரத்தம்மாளின் தகாத உறவுதான் மையம். ஆனால், அவளும் கள்ளக்காதலனும் அருகருகே இருப்பதான காட்சியோ, கள்ளக் காதல் அல்லது பாலியல் பேச்சுகளோ கூட இராது. தி.ஜா.வின் வர்ணனைகளிலும் கிளர்ச்சியூட்டக்கூடிய பாலியல் அம்சங்கள் இராது. இந்த நாவல்கள் யாவுமே பாலியல் கதைகள் அல்ல; தகாத உறவின் விளைவாக ஏற்படும் உளவியல் சிக்கல்களையும், வாழ்க்கைப் பிறழ்வுகளையும் கண்ணியத்தோடு சொல்லக் கூடியவை. அதனால்தான் அவற்றுக்கு உயரிய இடம் கிடைத்துள்ளது. மேலும், மனிதர்களுக்கு என்றும் இருக்கக் கூடிய அடிப்படைச் சிக்கல்களில் ஒன்று, பாலியலும், அது சார்ந்த ஒழுக்க விழுமியங்களும். அதனால் இந்த நாவல்களுக்கு ஒரு கவர்ச்சி இயல்பாகவே வாய்க்கிறது.
சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் குணச்சித்திரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தமிழில் ‘பாத்திர வார்ப்பு’ என்று பரவலாக சொல்லப்படுகிற அது, உண்மையில் பாத்திர வார்ப்பு அல்ல. குணச்சித்திர வார்ப்பு என்பதே சரியானது. பாத்திரம் என்பது ஆங்கிலத்தில் ரோல் எனப்படுவது; குணச்சித்திரம் என்பது கேரக்டர். பாத்திரங்களை எளிதாக நியமித்துவிடலாம். அவர்களின் குணச்சித்திரங்களை தனித்துவமாக வார்ப்பதுதான் கதாசிரியர்களுக்கு சவாலானது. ஓ.வி.வி. இந்த நாவலில் வார்த்திருக்கும் முதன்மைப் பாத்திர குணச்சித்திரங்கள் ஒவ்வொன்றும் நம் மனதை விட்டு அகலாதவை.
இந்த நவீன நாவல் எப்படி வெகுமக்களிடம் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றது; அதுவும் – வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் கடுமையாக உள்ளதை மீறி அது எப்படி அவர்களிடம் வரவேற்பு பெற்றது; இதை அவர்கள் விரும்பக் காரணம் என்ன; ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இது இலக்கிய வட்டாரத்திலும், வெகுமக்கள் தரப்பிலும் பலத்த செல்வாக்கு செலுத்தக் காரணம் என்ன என்பது ஆய்வுக்குரியது. முக்கியமாக, நாவல் படைப்பாளிகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய, அல்லது குறைந்தபட்சம் கவனம் செலுத்த வேண்டிய கேள்விகள் இவை.
மலையாள இலக்கியத்தில் வெகுமக்கள் எழுத்து, இலக்கிய எழுத்து ஆகியவற்றுக்கு இடையே அதிக இடைவெளி இல்லை. தமிழில் உள்ளது போன்ற, தனிச்சுற்றுக்கு மட்டுமான சிற்றிதழ் இலக்கியக் கலாச்சாரம் என்பதும் அங்கே கிடையாது. தனிச்சுற்று இதழ்களும், தீவிர இலக்கிய இதழ்களும் இருப்பினும், சீரிய இலக்கியப் படைப்புகளும் வெகுமக்கள் படைப்புகளும் வெகுமக்கள் இதழ்களில் வெளியாகும். இந்த நாவலும் அப்படி தொடர்கதையாக வந்து, பின்னர் நூலாக்கம் பெற்றதுதான்.
இந்த நாவல் மக்களிடையே பெரும் செல்வாக்கு பெறக் காரணம், சாதாரண மக்களின் அசாதாரணமான கதை என்பதும், அதன் கலைச் சிறப்புகளும்தான் என்று நினைக்கிறேன். அரை நூற்றாண்டு கடந்தும், தலைமுறைகள் தாண்டியும், இந்த நாவல் மலையாள வாசகர்களின் நெஞ்சில் குடிகொண்டிருக்கிறது. அந்த நாவலை வாசித்து, அதன் மீது பேரபிமானம் கொண்ட வாசகர்கள், நாவலின் மூல நிகழ்விடமான தஸ்ராக் கிராமத்திற்குச் சென்று, நாவலின் முக்கிய கதைக் களங்களான கூமன்காவு, ஓராசிரியர் பள்ளி, நாற்றுப்புரை, அரபிக்குளம், பள்ளிவாசல் முதலான இடங்களைக் காண்பது வழக்கமாகியது.
அந்த நாவல், இலக்கிய வரலாற்றிலும் மக்களிடையேயும் பெற்ற உயரிய இடமும், அதன் வாசகர்கள் தஸ்ராக்கிற்கு சுற்றுலா சென்று நாவல் களங்களைக் கண்டு மகிழ்வதும், கேரள அரசின் கவனத்தை ஈர்த்தது. அதனால் கேரள அரசாங்கம் அந்த இடங்களில் சிலவற்றை வாங்கி, சில வருடங்களுக்கு முன் கஸாக்கின் இதிகாசம் நாவலுக்காக அங்கே கஸாக் என்னும் பெயரில், விரிந்து பரந்த நினைவகம் அமைத்துள்ளது.
ஒரு வகையில் தஸ்ராக் கிராமம் முழுதுமே கஸாக்கின் இதிகாச நினைவகமாக ஆகியுள்ளது எனலாம். ஊருக்கு வெளியே, நாவலில் கூமன்காவு எனப்படுகிற, பேருந்து நிறுத்தப் பகுதியில், நுழைவாயில் தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், நாவல் துவக்கத்தில் ரவியின் வருகையைச் சித்தரிக்கும் காட்சி, செதுக்குச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. நாவலில் இடம்பெறும் மற்ற சில விஷயங்களின் சித்தரிப்புகளும் அந்தத் தோரணவாயிலில் வடிக்கப்பட்டுள்ளன. தஸ்ராக் ஊருக்குள், நாவலின் முக்கிய நிகழ் களங்கள் யாவும் சேர்த்து, கஸாக் என்னும் பெயரிலேயே நினைவகமாக ஆக்கப்பட்டுள்ளன. நாற்றுகள் வைப்பிடமான பழங்கால நாற்றுப்புரையில் ஓ.வி.வி.யின் போட்டோக்கள் ஒரு அறையிலும், கார்ட்டூன்கள் இன்னொரு அறையிலுமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஓர் அறை, ஆவணப் படம் திரையிடலுக்கானது. நாற்றுபுரைக்கு வெளியே, கலை அழகோடு நிர்மாணிக்கப்பட்டுள்ள தோட்டத்தில், ஓ.வி.வி.யின் மார்பளவு உருவச் சிலை உள்ளது. அருகே உள்ள புதிய, பெரிய கட்டிடத்தில் ஓ.வி.வி.யின் கடிதங்கள், கார்ட்டூன்கள் ஆகியவற்றின் காட்சிக் கூடங்கள் உள்ளன. வெளியே இன்னொரு பகுதியில், அழகிய தோட்ட அமர்விடங்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கு ஓ.வி.வி.யின் நாவல்களான தர்மபுராணம், குருசாகரம் முதலான பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இவை தவிர, வேறு ஓவியர்கள் தீட்டிய, கஸாக்கின் இதிகாசம் நாவல் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் நினைவகச் சுவர்களை அலங்கரிக்கின்றன. கருத்தரங்கக் கூடம் தனியே உள்ளது. அங்கே இலக்கியவாதிகள் பங்கேற்கும் பல கருத்தரங்குகள் நிகழ்த்தப்பெறுகின்றன.
நினைவகக் கட்டிடங்களுக்கு வெளியே, தோட்டம், நாற்றுப்புரை, அரபிக்குளம் செல்லும் வழி மருங்குகள் ஆகிய பகுதிகளில், அலங்காரச் செடிகள் நடுவே ஏராளமான கற் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை கஸாக்கின் இதிகாச கதாபாத்திரங்கள். மனிதர்கள் மட்டுமன்றி, நாவலில் இடம்பெறுகிற ஓணான், தும்பி உள்ளிட்ட உயிரினங்களுக்கும் தனித் தனியே சிற்பங்கள் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது கவனம் கவரக் கூடியது. அந்தப் பகுதி முழுதுமே பரந்து விரிந்த, திறந்தவெளிக் கலைக் கூடம் போன்ற உணர்வு உண்டாகிறது.
இந்த நினைவகத்தால் இப்போது இந்த ஊர் இன்னும் பிரசித்தியுற்று, வாசகர்களின் சுற்றுலாத் தலமாக ஆகிவிட்டது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர். அனுமதி இலவசம்.
நினைவக வலைத்தள இணைப்பு: https://www.ovvijayanmemorial.com/en/
ஒரு நாவலுக்கு இப்படியான நினைவுக்கூடமும், சுற்றுலாத்தலமும் அமைவது, உலகில் வேறு எங்கேனும் நிகழ்ந்ததுண்டா என்பது தெரியவில்லை. ஒருவேளை அப்படி இருந்தாலும் ,அதுவும் அரிதாக, மிகச் சில ஊர்களில், ஓரிரு நாவல்களுக்கு மட்டுமே நிகழ்ந்ததாக இருக்கக் கூடும். வேறு எங்கும் இப்படி நிகழ்ந்ததில்லை எனில், இது உலக மகா சாதனைதான்!
தேடலும் ரசனையும் கொண்ட வாசகர்கள் அவசியம் வாசிக்கவும், நாவலாசிரியர்கள் அவசியம் கற்கவும் வேண்டிய நாவல், கஸாக்கின் இதிகாசம்.
*******
ஷாராஜ்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். இந்த ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.