1
“உடன்போக்குக்குத் தயாரான
காதலர்கள் ஊர் எல்லை
மலையில் தஞ்சம்.
,
பயத்தில் பிடிபட்டவர்கள்
அடுத்த ராத்திரியே
தனித்தனியாக கூடடடைப்பு.
,
மங்கை சிறைச் சுற்றி
பகல்தோறும் கண்காட்சி கூட்டம்.
,
பெண் வீட்டார்
நாடிய பஞ்சாயத்தில்
முதல் காட்சிக்கு பின்பான அதே கலவையான விமர்சனங்கள்.
,
துண்டிப்பதற்கான முடிவில்
தீவிரமிருந்தும்
ஈருயிர்களின் நம்பிக்கை
கடைசி பந்தின் த்ரில் வெற்றி.
,
பெரும்பான்மை வாக்கெடுப்பு மீறி
நீதியை கைப்பற்றும்
ஆயுதம் காதல்.
,
2
“செல்லையா
நாளைக்கு நாயக்கர் தோப்புல
பாத்தி கட்டு மறந்திராத
சன்னமான குரலில் முடியப்பன்.
,
வேப்பங்குச்சி ஒடிச்சி
மண்வெட்டி பிடிச்சு
வடக்கு நோக்கி
கைதேர்ந்தவர்களின் வலசை.
,
நக்கலும் நையாண்டியும்
கடமேறும் அலுப்பை
நிமிடந்தோறும்
கவ்விக் கொள்கிறது.
,
வெடித்திருந்த பாதங்களுக்கு
ஈரமண் இலவசமாக
செருப்பு அணிகிறது.
,
நடு உச்சி சூரியன்
கூல் குடிக்க மரநிழலை
கருணை காட்டுகிறது.
,
சாடை பேசி
உதடு நனைக்கும்
கொட்டாங்குச்சி தேநீர்
தீண்டாமை வகுப்பெடுக்கிறது.
,
கழுத்தும் முதுகும்
நேரசைந்து விடும்
அந்தி மூச்சில் பிரிந்து போகிறது
அன்றையப் பங்கின் அடக்குமுறை.
,
3
,
“வீட்டினுள் தங்கும்
நெல் மூட்டைகள் தவிர்த்து
தாத்தாவிற்கு மூன்று பிள்ளைகள்.
,
வண்ணம் தீட்டிய
கொம்பு காளைகள்
நிரந்தரமானத் தொழுவுச் சின்னங்கள்.
,
சாணி வாசமும்
பால் நாற்றமும்
நாசித்துளைகளை கீறி விளையாடும் அன்றாட எச்சங்கள்.
,
எருமை மாடுகளுக்கு
கழுத்தில் தொங்கும் வேலிக்கட்டைகளே தடுப்புச் சுவர்கள்.
,
ஆட்டுப்புழுக்கைகள்
அடுத்த விதைப்பிற்கான
உயிரி உரங்கள்.
,
கழிதண்ணித்தொட்டி வாசலில்
ஊர் சுனையாய் நிரம்பி வழியும்.
கறவை மாடுகளும்
பாட்டியின் நீவலில் பாலைச் சுரக்கும்.
,
நெல்லுச் சோறும்
கருவாடிட்ட உப்புச் சாறும்
பிரதானமான உணவுகள்.
,
4
,
“ஒன்றிய முகங்களில்
எளிதாக பொதிந்தி விடுகிறது
வீட்டு நிகழ்வுக்கான
வரவேற்பும் உபசரிப்பும்.
,
வார்டு கரங்களின்
தார்மீக மனப்பான்மையை வெளிக்கொணர்கிறது
ரஸ்னா பாக்கெட்களின்
விநியோகங்கள்.
,
தலை காட்டாத
கரைவேட்டிகளின் ஆதிக்கம்
பீரோவில் இருந்து
ஊரைச் சுற்றி படையெடுப்பு.
,
உள்ளூர் சிக்கல்களுக்கு
பொழுதடையும் வரை
144 தடை உத்தரவு.
,
துண்டு காட்டி
சைகை அனுப்புகிறது
கருப்பு அணி.
,
விரலை நீட்டி
தலையை ஆட்டுகிறது
பச்சைக் கூட்டணி.
,
ஐந்தாண்டுக்கு ஒரு முறை
சாதியும் சார்ந்த மதமும்
விழுங்கும் வாக்கு
வெறும் மை பூசும் விளையாட்டே.
000

க.மணிமாறன்
“என்னுள் நூறு கனா’ எனும் ஒரு கவிதை தொகுப்பை எழுதியுள்ளேன்.
வாசிப்பையும் எழுத்தையும் ஒரே நேர்கோட்டில் செலுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.
இதழ்களுக்கு கவிதை எழுதுவதில் அலாதி விருப்பம்.