(சீன நாட்டுப்புறக் கதையின் மறு ஆக்கம்)
ஒரு விவசாயியின் பண்ணையில் மாட்டுத் தொழுவம், குதிரை லாயம். பன்றிக் கொட்டகை ஆகியவை அருகருகே இருந்தன. பன்றிகள் அடிக்கடி மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் பல்வேறு விதமான தொந்தரவுகளைக் கொடுத்துக்கொண்டிருந்தன. அதே போல குதிரைகள் மற்றும் மாடுகளால் பன்றிகளுக்கும் அவ்வப்போது இடையூறுகள் நேரும். இதனால் பன்றிகளுக்கும் கால்நடைகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை சச்சரவுகள்.
இதை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கால்நடைகளுக்கிடையே பேச்சு வந்தபோது செங்குதிரை ஒரு யோசனை கூறியது.
“நாம் ஓர் அமைதி விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம். அந்த விருந்துக்கு பன்றிகளை அழைப்போம். அப்போது அவைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, இந்த தொடர் சச்சரவை முடிவுக்குக் கொண்டு வரலாம். அதன் பின் இரு தரப்பும் நண்பர்களாகி, நல்லிணக்கமாக வாழ இயலும் என்று நம்புகிறேன்.”
“இது நல்ல யோசனை” என்றது காரி எருது.
“ஆனால், பன்றிகள் இதை ஏற்குமா என்பது சந்தேகம்.” வெண் குதிரை சொன்னது. “அவை குதிரைகளையோ மாடுகளையோ போல உயர் வகை விலங்குகள் அல்ல. பன்றிகள் விலங்குகளிலேயே மிகக் கீழ்மையானவை. நாய்களை விடவும் கேவலம். நாய்களுக்காவது கீழ்மையான பழக்க வழக்கங்கள் சில இருந்தாலும், நற்குணங்கள் பல உள்ளன. காவல், நன்றி, விசுவாசம் ஆகியவற்றுக்கு அடையாளமே நாய்கள்தான் என்று மனிதர்களே பாராட்டுவார்கள். ஆனால், பன்றிகளோ, ஈனப் பிறவிகள். அசுத்தம், அசிங்கம், ஈனம் ஆகியவற்றின் உச்சபட்சம் பன்றிகள்தாம். நல்லிணக்கம், அமைதி ஆகியவை அவற்றின் அகராதியில் இல்லாத சொற்கள்.”
அதை ஆமோதித்து தனது நீண்ட தலையை மேலும் கீழும் ஆட்டியது கரும்புள்ளிக் குதிரை.
“தலைமுறை தலைமுறையாக பன்றிகள் அனேக அத்துமீறல்களையும், அராஜகங்களையும் நம்மிடம் செய்து வருகின்றன. நமது தடுப்புகளை உடைப்பது, உணவுகளை எடுத்துக்கொள்வது, நமது சத்து நீர்த் தொட்டிகளில் நீரைப் பருகுவது, நமது மேய்ச்சல் நிலங்களை அசிங்கப்படுத்துவது என பல விதமான தொந்தரவுகளைச் செய்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது. மூளையில்லாத தடித் தோல் விலங்குகள் அவை. அவற்றிடம் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவது பயன்படாது. அடிக்கு அடி – உதைக்கு உதை என்பதுதான் சரியான வழி.
“அந்த ஈன விலங்குகளைப் பார்த்து நாம் ஏன் அஞ்ச வேண்டும்? குதிரைகளும், மாடுகளுமான நாம், பன்றிகளை விட பத்து மடங்கு பெரிதான உருவமும், உடல் திடமும் கொண்டிருக்கிறோம். வீரத்திலும் நாமே சிறந்தவர்கள். ஸ்பெய்ன் நாட்டு காளைச் சண்டையும், தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டும் காளைகளின் வீரத்தைப் பறைசாற்றும். உலக நாடுகளெங்கும் வரலாற்றுப் போர்களில் மனிதர்கள் குதிரைப் படையைப் பயன்படுத்தினார்கள். இப்போதும் கூட குதிரைகளான நாங்கள் வண்டி இழுப்பதும், காளை மற்றும் எருதுகளான நீங்கள் வண்டி இழுப்பதோடு விளை நிலத்தில் உழுவதுமாக உழைத்து முறுக்கேறியிருக்கிறோம்.
“ஆனால், அந்தப் பன்றிகளோ எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே தின்று கொழுக்கின்றன. அதனால்தான் அவற்றுக்கு அவ்வளவு கொழுப்பு! அவற்றின் உடலில் கொழுப்பு கட்டி கட்டியாக இருக்கும் என்றும், மனிதர் உண்ணும் இறைச்சியிலேயே பன்றி இ|றைச்சியில்தான் கொழுப்பு அதிகம் என்றும் வேலைக்காரர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். அவ்வளவு கொழுப்பு இருப்பதால்தான் அவை கொழுப்பெடுத்த துஷ்டச் செயல்களை செய்கின்றன. மாடுகள் தங்கள் கொம்பினாலும், குதிரைகள் தமது கால்களாலும் அந்த மிலேச்ச விலங்குகளுக்கு சரியான பாடம் புகட்டினால், அதன் பிறகு அவை நம்மிடம் குட்டை வாலை ஆட்டாது.”
ஆமாம், ஆமாம்! என சில மாடுகள் கொம்புகளை ஆட்டின.
“இல்லை, அது சரியானதல்ல.” செங்குதிரை இட வலமாகத் தலையாட்டி மறுத்தது. “பன்றிகள் நடந்துகொள்வது போல நாமும் நடந்துகொண்டால் பிறகு பன்றிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? நாம் நேரிய வழியிலேயே சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும்.”
காரி எருது: “குதிரைகள் மற்றும் எருதுகள் பன்றிகளுக்குத் தொல்லை தருவதும், அவற்றின் குட்டிகளைத் துன்புறுத்துவதும் கூட உண்டல்லவா! நமது தரப்புத் தவறுகளைக் கணக்கில் கொள்ளாமல், எதிர் தரப்பை மட்டும் குற்றம் சாட்டக் கூடாது. மேலும், நாம் சண்டைகள் தொடர்வது நல்லதல்ல. சமாதானமும் அமைதியுமே நன்மை தரக் கூடியவை.”
செங்குதிரை: “ஆம், அதுதான் சரியானது. அதே போல, நமது விருந்துக்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் கனவானாகவும், இரக்கம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.”
பிற குதிரைகளும், மாடுகளும் அதை ஏற்றுக்கொண்டன. இளமையும், அழகும், சாது குணமும் கொண்ட ஜெர்ஸி பசு, போட்டியின்றி ஏகமனதாக, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பன்றிகளுக்கு அழைப்பு விடுப்பதற்காக மறு நாள் ஓர் அரேபியக் குதிரை பன்றிக் கொட்டகைக்கு அனுப்பப்பட்டது. அது அங்கு சென்றதுமே, “உர்ரேய்,… உர்ரேய்…” என உறுமியபடி, உடலெங்கும் கன்னங்கரேலென்ற நாற்றச் சேற்றோடு, அசிங்கமாக வந்த ஓர் இளம் பன்றி, வழி மறித்து ஆத்திரம் காட்டியது.
“எதற்காக இங்கு வந்திருக்கிறாய்? எங்களோடு சண்டை போட விரும்புகிறாயா?”
அதன் மீதிருந்த சகதியைக் கண்டும், அதன் நாற்றம் பொறாமலும் ஓரடி பின் வைத்தது அரேபியக் குதிரை.
“இல்லையில்லை! நான் சண்டை போட வரவில்லை; சமாதானம் பேச வந்திருக்கிறேன். குதிரைகளும் மாடுகளும் இணைந்து அமைதி விருந்து நடத்துகின்றன. அந்த விருந்திற்கு உங்கள் சமூகத்தாருக்கு அழைப்பு விடுப்பதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். உங்கள் தலைவர் எங்கே?”
பன்றிகளின் தாதாவான முதிய பன்றியிடம் அரேபியக் குதிரையை அழைத்துச் சென்றது இளம் பன்றி. ரவுடிப் பன்றிகள் புடை சூழ இருந்த தாதா பன்றியிடம் அரேபியக் குதிரை விபரம் தெரிவித்து, “நீங்கள் எல்லோரும் குடும்பத்தோடு வந்து கலந்துகொள்ள வேண்டும்” என அழைப்பு விடுத்துத் திரும்பியது.
தாதா பன்றியும் பிற முதிய பன்றிகளும் ஆலோசனையில் ஈடுபட்டன.
முடிவாக, “கால்நடைகள் நமக்கு பயந்து சமாதானத்துக்கு வந்திருக்கின்றன. அமைதி நாம் விரும்பத் தக்கதல்ல. நாம் அமைதி விரும்பிகள், மிருக நேயர்கள் என்று போர்ப் பரணி பாட வேண்டுமே தவிர, வாழ்க்கையில் அவற்றைக் கடைபிடிக்கக் கூடாது. அதற்கு நேர் எதிராகவும், அனைத்து மிருகங்களுக்கும் விரோதமாகவும்தான் நடந்துகொள்ள வேண்டும். நாம் அமைதிப் பிராணிகள் என்று ஆடுகளை நம்ப வைத்தால் போதுமானது. மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் அதை நிரூபிக்க வேண்டியதில்லை. அமைதி விருந்தாம், அமைதி விருந்து! அமைதிதான் நமக்கு விருந்தே! அது இருக்கட்டும். அந்தக் கோழைக் கால்நடைகள் நமக்காக சிறந்த உணவுகளை அந்த விருந்தில் ஏற்பாடு செய்யும். எனவே, விருந்தில் கலந்துகொண்டு மூக்கு முட்டத் தின்றுவிட்டு, நாம் யாரென்று காட்டிவிட்டு வருவோம்!” என்றது தாதா பன்றி, ஆவேசமாக.
பன்றிகள் சமுதாயம் உணர்ச்சிவயமாகி, “வெற்றி நமக்கே!” என கோஷம் போட்டது.
விருந்து தினத்தன்று அரை டஜன் – ஒரு டஜன் குட்டிகள் சகிதம் பன்றிக் குடும்பங்கள் அனைத்தும் விருந்துக்குப் படையெடுத்தன.
அவை அங்கே சென்றபோது கால்நடைகளின் தலைவரான அழகிய ஜெர்ஸி பசு, விருந்தினர்களை உவகையோடு வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்தது. தாதா பன்றியும் அந்த விருந்தோம்பலை உறுமலோடு ஏற்றுக்கொண்டது. நாற்றச் சாக்கடையில் புரண்டெழுந்த வாக்கிலேயே சென்ற சில பன்றிகளைக் கண்டு பிற பசுக்களும் குதிரைகளும் மூக்கைச் சுளித்து முகம் திருப்பிக்கொண்டன. “நமது விருந்துக்கு வரும்போதாவது குளித்து சுத்தபத்தமாக வரக் கூடாதா இந்தப் பன்றிகள்?” குதிரைகள் முணுமுணுக்கவும் செய்தன. காதில் விழுந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பன்றிக் கூட்டம் விருந்து வகையறாக்களை வயிறு புடைக்க நொக்கி எடுக்கலாயிற்று.
விருந்து முடிந்ததும் பேச்சு வார்த்தை.
கால்நடைகளின் தலைவரான ஜெர்ஸி பசு உரையாற்றியது:
“நாம் நமக்குள் இருக்கிற சண்டை சச்சரவுகளை இன்றோடு முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும். பன்றிகள் இனிமேல் எங்களின் தடுப்பு வேலிகளை உடைப்பது, எங்களுடைய உணவுகளையும் சத்துக் குடிநீரையும் அபகரித்துக்கொள்வது, எங்களின் மேய்ச்சல் நிலத்தை அசுத்தப்படுத்துவது ஆகிய தொல்லைகளையும், அத்துமீறல்களையும் செய்யக் கூடாது. அதே போல எங்களுடைய எருதுகளும் குதிரைகளும் இனிமேல் இளம் பன்றிகளைத் தொந்தரவு செய்யாது என உறுதி அளிக்கிறேன். இரு தரப்பினரின் கடந்த காலத் தவறுகளையும் பரஸ்பரம் மறந்து மன்னித்து விடுவோம். இன்றிலிருந்து நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்.”
இளம் பன்றி குரல் கொடுத்தது, “ப்ரோ! இந்த மேய்ச்சல் நிலம் நமது எஜமானருடையது. உங்களுடையதல்ல. அதில் நாங்களும் எங்கு வேண்டுமாயினும் திரிவோம். எங்கள் உணவுக்காகவோ, பொழுதுபோக்குக்காகவோ நாங்கள் வேறு இடத்திற்குச் செல்லவும் முடியாது. அதே போல, எங்கள் இனத்தவர்கள் மாடு மற்றும் குதிரைகளின் மீந்துபோன உணவுகளைத்தான் உண்கிறோமே தவிர, உங்களுக்கு வைக்கப்பட்டதை நாங்கள் அபகரிக்கிறோம் என்பது அவதூறான குற்றச்சாட்டு. சரி, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். எங்கள் இனத்தவர்கள் யாரேனும் உங்கள் இனத்தவர்களைத் தொந்தரவு செய்திருக்கிறார்களா? இல்லை! கெட்ட குதிரைகள் மற்றும் எருதுகளால் எங்களின் குட்டிகள்தான் கொல்லப்படுகின்றன.”
முதிய பன்றி தொடர்ந்தது. “நாங்கள் உங்களை விட மேலானவர்கள். எஜமானர் ஒருபோதும் எங்களை வேலைக்குப் பயன்படுத்துவதில்லை. அவர் எங்களுக்கு உணவுகளை வழங்குகிறார். வேண்டிய பிற சௌகரியங்களைச் செய்து தருகிறார். நாங்கள் சுகமாக உண்டுவிட்டு, எப்போதும் விளையாடிக் களிக்கிறோம். ஆனால், காளைகள் நிலத்தை உழுவதற்கும், குதிரைகள் வண்டி இழுப்பதற்கும் அவரால் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் அவரது அடிமைகள். அதனால்தான் 20 வருடங்களாக எந்த ஓய்வும் இல்லாமல் கடுமையாகப் பணிபுரிந்து, எலும்பும் தோலுமாக நோஞ்சானாக ஆகிவிடுகிறீர்கள். ஆனால், நாங்கள் எஜமானின் கௌரவத்துக்குரிய செல்லப் பிராணிகள். அதனால்தான் சுகபோகமாக வாழ்ந்து, உண்டு கொழுத்து, உருண்டு திரண்டு இருக்கிறோம். நீங்கள் ஒருபோதும் எங்களது உடலில் எலும்புகளைப் பார்க்க இயலாது. எஜமானர் நிச்சயமாக எங்களைத்தான் மாடுகளையும் குதிரைகளையும் விட உயர்வாகக் கருதுகிறார், அதன்படியே உயர்வாக நடத்துகிறார் என்கிற உண்மையை நீங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்!”
ஆமாம், ஆமாம் நாங்களே மேலானவர்கள், நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம்! என பன்றிக் கூட்டம் கோஷமெழுப்பியது.
“நமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி நாம் பேசுவதில் அர்த்தமில்லை. எஜமான் என்ன நினைக்கிறார், ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்பது நமக்குத் தெரியாது. ஏனென்றால், நாம் விலங்குகள். எஜமான் மனிதர்” என்றது ஜெர்ஸி.
உடனே பன்றிக் கூட்டத்திலிருந்து குரல்கள் எழுந்தன.
“உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். எங்களுக்குத் தெரியும்! நாங்கள் எஜமானரை அறிந்தவர்கள்.”
“எஜமான் இந்தப் பண்ணையை உருவாக்கியதே பன்றிகளுக்காகத்தான்! குதிரைகளுக்காகவோ, மாடுகளுக்காகவோ அல்ல!”
“உங்களையெல்லாம் இந்தப் பண்ணையிலிருந்து விரட்டியடித்துவிட்டு, லாயத்தையும் தொழுவத்தையும் பன்றிக் கொட்டகையாக மாற்றும் நாள் அதிக தூரத்தில் இல்லை!”
“நீங்கள் மொத்தம் முப்பது பேர் கூட இருக்க மாட்டீர்கள். ஆனால், நாங்கள் பத்தே குடும்பங்களில் இப்போதே தொண்ணூறு பேர் இருக்கிறோம். வதவதவென்று குட்டிகள் போட்டு, ஒரே ஆண்டுக்குள் ஆயிரம் பேராக ஆகிவிடுவோம். உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது!”
பன்றிகளின் கூட்டம் சூளுரைக்கவும், சவால் விடவும் செய்தது.
மாடுகள் தலையை ஆட்டிக்கொண்டு பெருமூச்சு விட்டன. குதிரைகள் அதிருப்தியாகக் கனைத்தன. அவைகளுக்குள் சலசலப்பு எழுந்தது. ஆனால், அந்தக் கால்நடைகள் எதுவும் பன்றிகள் கூறியதை மறுத்து அவைகளிடம் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. அவைகளிடம் பேசுவது பயனற்றது என்பதை அவை இப்போது உறுதியாக உணர்ந்திருந்தன.
கால்நடைகளின் தலைவரான ஜெர்ஸி பசு துயரார்ந்த குரலில், “நண்பர்களே,… இது அமைதி விருந்து. ஆர்ப்பாட்டக் களமோ, போர்க்களமோ அல்ல. நாங்கள் உங்களை சமாதானத்துக்குத்தான் அழைத்தோம். சண்டைக்கு அல்ல. ஆனால், நீங்கள் அமைதியையும் சமாதானத்தையும் விரும்பவில்லை; ஒருபோதும் விரும்பவும் மாட்டீர்கள் என்பது தெரிகிறது. விரைவில் புது வருடப் பெருவிருந்து வரப்போகிறது. உங்கள் அனைவருக்கும் முன்கூட்டியே புத்தாண்டு வாழ்த்துக்கள். பன்றி இனத்தவர்கள் நீடூழி வாழவும், அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும், அனைத்து குதிரைகள் மற்றும் மாட்டு இனத்தாரின் சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் – இந்த அமைதி விருந்து வெற்றியடையவில்லை என்றாலும் கூட” எனப் பேசி முடித்தது.
கூட்டம் கலைந்தது.
தங்களது கொட்டகைக்குத் திரும்பும் வழியில் இளம் பன்றிகள், “நாம் வெற்றி அடைந்துவிட்டோம்… நாம் வெற்றி அடைந்துவிட்டோம்…” என வீறாவேசமாக கோஷமிட்டன.
புதுவருடப் பெருவிழா அவ் வருடமும் அவ்வூரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விருந்துக்கான இறைச்சிக்கு மக்கள் வாங்கிச் சென்றது அந்தப் பன்றிகளில் சிலவற்றைத்தான்!
*******
பின் குறிப்பு:
மறு கூறலான இக் கதையில் பல வித மேம்படுத்தல்களைச் செய்திருக்கிறேன். குறிப்பாக, மூலக் கதையில் இத்தகைய வாதங்களோ, முடிவோ இல்லை. நான் வாதங்களை விரிவாக்கி, சிறுகதை பாணியில் முத்தாய்ப்பான முடிவையும் கொடுத்துள்ளேன்.
00
சிம்பன்ஸி குரங்கும் மெய்ஞானமும்
(ஆஃப்ரிக்க நாட்டுப்புறக் கதையின் மறு ஆக்கம்)
பூமியில் உள்ள உயிரினங்களில், மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவுக் கூர்மை மிக்க உயிரினம் சிம்பன்ஸி குரங்கு. மனிதக் குரங்குகளில் முக்கியமான நான்கு வகைகள் உள்ளன. அவை: சிம்பன்ஸி, போனோபோஸ், கொரில்லா, ஒராங்குட்டான் ஆகியவை.
சிம்பன்ஸிகள் ஆஃப்ரிக்காவில் மட்டுமே உள்ளன. அதுவும் குறிப்பாக மேற்கு ஆஃப்ரிக்கா மற்றும் மத்திய ஆஃப்ரிக்காவில் இவை சற்று அதிகமாகவும், பிற பகுதிகளில் சற்று குறைவாகவும் காணப்படும்.
சிம்பன்ஸிகளுக்கும் மனிதர்களுக்கும் மரபணு 95 முதல் 98 சதவீதம் வரை ஒரே மாதிரியாக இருக்கும். சிம்பன்ஸிகள் மனிதர்களைப் போன்றே சில நடத்தைகளும், பழக்க வழக்கங்களும் கொண்டவை. உதாரணமாக, அவை விளையாடும்போது நம்மைப் போலவே சிரிக்கும்; பாசத்தை வெளிக்காட்ட அணைத்துக்கொள்ளும்; சைகைகள் மூலம் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக்கொள்ளும்.
கருவிகளைத் தயார் செய்து பயன்படுத்தக் கூடிய அரிய மிருகங்களில் சிம்பன்ஸி முதன்மையானது. கடினமான கொட்டைகளைக் கல்லால் அடித்து உடைத்து, அதன் உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து உண்ணவும்; குச்சிகளை ஆயுதமாக உபயோகிக்கவும்; மழையில் நனையாது இருக்க பெரிய இலைகளை தலைக்கு மேல் குடை போல் பிடித்துக்கொள்ளவும் செய்யும்.
மத்திய ஆஃப்ரிக்காவில், மிகுந்த புத்திக் கூர்மை வாய்ந்த ஒரு சிம்பன்ஸி இருந்தது. அது மனிதர்களைப் போலவே சிந்திக்கவும் தொடங்கியிருந்தது.
‘மனிதர்களுக்கு மூதாதையர்களே நாம்தான். ஆனால், மனிதர்களுக்கு நம் மீது அந்த மதிப்போ, மரியாதையோ இல்லை. அவர்கள் நம்மைப் பிடித்துக் கொண்டுபோய், ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைக்குப் பயன்படுத்தவும், மிருகக்காட்சி சாலைகளில் அடைத்து வைக்கவும் செய்கிறார்கள். இனியும் இதை அனுமதிக்கக் கூடாது. நான் இன்னும் அறிவு பெற்று, மனிதர்களை அடக்கியாள விரும்புகிறேன். எனவே, உலகில் உள்ள மெய்ஞானத்தை எல்லாம் நான் திரட்டிக்கொண்டு வந்துவிட வேண்டும்’ என்று திட்டமிட்டது.
அது உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று, பல்லாண்டு காலமாக கடும் சிரமப்பட்டு, எங்கெங்கோ தேடி அலைந்து, மனிதர்களின் மெய்ஞானம் அனைத்தையும் திரட்டி, சுரைக் குடுவைக்குள் போட்டுக்கொண்டு, தாய்நாடு திரும்பியது.
தான் கஷ்டப்பட்டு சேகரித்து வைத்த மெய்ஞானத்தை மற்ற எவரேனும் திருடிவிடக் கூடும் என்கிற அச்சம் அதற்கு. அதனால், மற்ற எவரின் கண்களிலும் தட்டுப்படாதபடி, உயரமான பனை மரம் ஒன்றில் அந்த சுரைக் குடுவையை ஒளித்து வைத்தது. தேவைப்படும்போது, யாரும் இல்லாத நேரங்களில் அதை எடுத்து வரவும், அதே போல கொண்டுபோய் ஒளித்து வைக்கவும் செய்யும்.
சில நாட்களாக குள்ளநரி இதை மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருந்தது. சிம்பன்ஸி சுரைக் குடுவையில் எதை ஒளித்து வைக்கிறது என்று அதற்குத் தெரியவில்லை. தேனை சேமித்து ஒளித்து வைப்பதாகவே எண்ணிக்கொண்டது. எப்படியேனும் அதைக் கவர்ந்து ருசிக்க குள்ளநரிக்குக் கொள்ளை ஆசை. ஆனால், அதற்கு மரம் ஏறத் தெரியாததால் ஆசை நிறைவேறவில்லை. சிம்பன்சிஸிடம் சண்டையிட்டு ஜெயிக்கவும் அதனால் முடியாது. தக்க சந்தர்ப்பம் வாய்த்தால் ஏதேனும் தந்திரம் செய்து அந்தத் தேனை ருசித்துவிடலாம் எனக் காத்திருந்தது.
ஒரு நாள் சிம்பன்ஸி சுரைக் குடுவையைக் கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு பனை மரத்திலிருந்து சிரமப்பட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தது. அப்போது குள்ளநரி அதனிடம், “நண்பா! சுரைக் குடுவையோடு ஏன் இவ்வளவு சிரமப்பட்டு இறங்கிக்கொண்டிருக்கிறாய்? நான் உனக்கு உதவுகிறேன். குடுவையைக் கீழே வீசு. நான் பிடித்துக்கொள்கிறேன்” என்றது, நைச்சியமாக.
நரிகள் தந்திரமானவை என்று சிம்பன்ஸிக்கு நன்கு தெரியும். அதிலும் குள்ளநரிகள் மகா தந்திரசாலிகள். எனவே அது, “உனது தந்திரம் என்னிடம் பலிக்காது. குடுவையைக் கீழே வீசினால் நீ லவட்டிக்கொண்டு ஓடிவிடலாம் என்று பார்க்கிறாயா?” என்றது, வேய்க்கான சிகாமணியாக.
குள்ளநரி வருத்த முகம் காட்டியது.
“சிரமப்படுகிறாயே என்று பரிதாபப்பட்டு உதவி செய்ய வந்தால் என்னையே சந்தேகப்படுகிறாயே! நரிகள் தந்திரமானவை, ஏமாற்றுபவை என்று சிறுவர் கதைகளில் சொல்லப்படுவதெல்லாம் வதந்தி, அவதூறு, கட்டுக்கதை. நாங்கள் புத்திசாலிகளாக இருப்பதால் எங்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிற மற்ற மிருகங்களும், மனிதர்களும் அப்படி நினைத்துக்கொள்கிறார்கள். நீயுமா அதை நம்புகிறாய்?
“மிருகங்களில் நாங்கள் புத்திசாலிகள் என்றால், அறிவாளிகள் சிம்பன்ஸிகள்தான். அதிலும், மனிதர்களுக்கு அடுத்தபடியான அறிவு சிம்பன்ஸிகளுக்குத்தான் என்று மனிதர்களே பாராட்டுகிறார்கள். அதிலும், நீயோ, உலகம் முழுவதும் சுற்றி வந்தவன். உனக்கு உலக அறிவு இருப்பதாக காடே பேசுகிறது. உன்னை யாராலாவது ஏமாற்ற முடியுமா? எங்களைப் பற்றிய கட்டுக் கதைகளை நம்பாதே! நாங்கள் அப்புராணிகள் நண்பா! எட்டாக் கனி புளிக்கும் என்கிற கதை மட்டும்தான் உண்மையானது. மற்றபடி நாங்கள் அடுத்தவர்கள் சொத்துக்கு ஆசைப்படாதவர்கள்.
“அது மட்டுமல்ல; நரி வம்சத்தார் தேன் பருகுவதில்லை என்று உனக்குத் தெரியாதா? தவிர, எனக்கு சர்க்கரை வியாதி வேறு! அதற்காகத்தான் ஆவாரந்தழையோ, சிறியாநங்கையோ கிடைக்குமா என்று தேடிக் கொண்டு இந்தப் பக்கமாக வந்தேன். அந்த தேன் குடுவையை நீயாகவே வலிய வந்து கொடுத்தாலும் நான் அதில் ஒரு துளி கூட நக்க மாட்டேன். உனக்கு விருப்பமிருந்தால் கீழே போடு; இல்லாவிட்டால் கஷ்டப்படு. எனக்கென்ன?”
சொல்லிவிட்டு போவது போல் பாவ்லா காட்டியது.
நரி அதன் வம்சம் குறித்து சொன்னதை சிம்பன்ஸி நம்பவில்லை. எனினும், தன்னைப் பற்றி அது புகழ்ந்து கூறியதில் அது பெருமிதப்பட்டது. அதைவிட முக்கியமாக, குடுவையில் தேன் இருப்பதாகத்தான் அது எண்ணியிருக்கிறது என்பதில் சிம்பன்ஸிக்கு திருப்தி. எனவே, தான் அதில் சேகரித்து வைத்துள்ள உலக மெய்ஞானத்துக்கு ஆபத்து இல்லை.
அதனால், “சரி, நண்பா! கோபித்துக்கொள்ளாதே! உனது உதவிக்கு நன்றி. குடுவையை பத்திரமாகப் பிடித்துக்கொள்” என்றுவிட்டு, குடுவையைக் கீழே வீசியது.
நரி பின்னங்கால்களில் நின்றுகொண்டு, நிமிர்ந்து நின்று, முன்னங்கால்களால் அதைப் பிடித்துக்கொள்ள முயன்றது. ஆனால் பிடி தவறி, குடுவை கீழே விழுந்து உடைந்து சிதறியது.
அதற்குள்ளிருந்த உலக மெய்ஞானங்கள் சிதறித் தெறித்தன. அவை உடனே அங்கிருந்து தத்தமது நாடுகளை நோக்கிப் பறந்து சென்றுவிட்டன.
“தேன் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இது வேறு என்னவோ புரியாத புதிர். அதுவும் பறந்து போய்விட்டது!” என்றது குள்ளநரி, ஏமாற்றத்தோடு.
“உன்னால்தான் நான் தேடிச் சேகரித்த உலக ஞானம் முழுதும் போய்விட்டது.” கொலை வெறியோடு சிம்பன்ஸி பாய்ந்தது.
குள்ளநரி நிற்குமா? உட்டேஞ் சவாரி என்று அதுவும் இன்னொரு திக்கில் பறந்துவிட்டது.
நன்மைகளில் சிறிது தீமையும், தீமைகளில் சிறிது நன்மையும் கலந்திருப்பது இயற்கை. அப்படித்தான் வஞ்சக நரியால் மனித குலத்துக்கு நன்மை உண்டாயிற்று. குள்ளநரிக்குப் பிடி தவறியதால்தான் நாம் தப்பித்தோம். இல்லாவிட்டால், மனித குலம் சிம்பன்ஸிகளுக்கு அடிமைப்பட்டிருக்கும்.
********
பின் குறிப்பு:
இது ஆமையும் மெய்ஞானமும் என்ற ஆஃப்ரிக்க நாட்டுப்புறக் கதையைத் தழுவி என்னால் எழுதப்பட்ட மறு ஆக்கக் கதையாகும். மூலக் கதையில் உள்ள ஆமைக்கு பதிலாக சிம்பன்ஸி குரங்கையும், நத்தைக்கு பதிலாக குள்ளநரியையும் பயன்படுத்தியிருக்கிறேன். கதையில் சொல்லப்படும் கருத்து மிகவும் வலுவானதாக இருந்ததால், அதற்குப் பொருத்தமாக இந்த மாற்றங்களைச் செய்தேன். இதனால் கதையில் அழுத்தம் கூடியிருப்பதை நீங்களும் உணர இயலும்.
இக் கதைக்கு அனான்ஸி என்னும் சிலந்தி மையப் பாத்திரமாக உள்ள இன்னொரு வடிவமும் ஆஃப்ரிக்க நாட்டுப்புறக் கதையில் உள்ளது.
00
ஷாராஜ்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.