செங்கொடி நிறத்தையொத்தது தக்காளியின் வண்ணம்

கிணற்றை மேலிருந்து எட்டிப்பார்த்து “இனிமே கெணத்துக்குள்ள இந்த சோப்பு, ஷாம்பு  போட்டு குளிக்கிற சோலிய விட்டுப்போடுங்க. அப்படி குளிக்கிறதா இருந்தா -இந்த கெணத்துப் பக்கம் வராதிங்க” என்று மூஞ்சில அடிச்சாப்புல பேசினான் பழனி. 

   கிணற்றுக்குள் குளித்துக்கொண்டிருந்தவர்களின் சிலபேர் மனதில்  ’சோப்புப்போடக்கூடாது,மயிறு போடக்கூடாதுன்னு பேசுறான் -என்னமோ சொந்த தோட்டங்கெணக்கா.. ‘என்று நினைப்போடியது.

      “செரி மாமா ,இனிமே கெணத்துக்குள்ள சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கமாட்டாங்கே” என்று வேகமாக சொன்னான் குளித்துக்கொண்டிருந்த பாண்டி.

      “ஆமா இதுமாதிரி முப்பத்துரெண்டு தடவை சொல்லிட்டிங்க. நீங்க இப்படி சொல்றத கேட்டு கேட்டு காது புளிச்சுப்போச்சு..” என்று கோபமாக சொன்னான் பழனி.

சிறிதுநேர அமைதிக்குப்பிறகு..

    “பொழுதுபோகாம வெளையாட்டுக்கா சொல்றேன்….நீங்க கெணத்துக்குள்ள சோப்பு, ஷாம்பு போடுறத்தண்ணிய காய்கறிகளுக்கு மோட்டார் போட்டு பாய்ச்சினா காய்கறிக எல்லாம் ஏதோ ஒரு மாதிரி சூம்பி போயிதான் காய்க்கும். அதிகமா சூத்த உழுகும் – இதெல்லாம் ஒங்களுக்குத் தெரியுந்தானே…? நானே அடுத்தவங்க தோட்டத்தை சாவியத்துக்கு (குத்தகை) எடுத்து விவசாயம் பார்த்துக்கிட்டு இருக்கேன். அதப்புரிஞ்சுக்காம.. இப்படி பண்ணுறிங்களே” என்றான் எரிச்சலில் பழனி.

ஊரில் சாவியத்துக்கு வருகிற தோட்டங்கள் நாலஞ்சு இருந்தாலும்- இந்த தோட்டம்தான் பழனிக்கு கண்ணில்பட்டது. ஊரின் எதுப்பத்தில் இருப்பதால் நாலு எட்டில் வீட்டிலிருந்து வந்துவிடலாம். அதுவுமில்லாமல் கோடைகாலத்தில்கூட, இந்த தோட்டக்கிணற்றில் ஒரு குறுக்கமளவு பாய்ச்சுகிற தண்ணீர் ஊறும்.

இந்த தோட்டத்தை சாவியத்துக்கு(குத்தகை) எடுப்பவர்,வருஷத்துக்கு எட்டாயிரம் ரூபாய் கட்டணும் தோட்டத்து உரிமையாளருக்கு.

கட்டிட வேலைக்குப் போய்க்கொண்டிருந்த பழனி. ஒருநாள் வேலையின்போது சாரத்திலிருந்து விழுந்து காலில் வசமான அடிபட்டு ஆஸ்பத்திரிக்கும்,வீட்டுக்கும் அழைந்தபோதுதான் திடீரென்று பேசாம இனி கட்டிட வேலைக்குப் போறத விட்டுட்டு நாலு ஆட்டுக்குட்டி,ஒரு பசுமாடு வாங்கி -ஏதாவது தோட்டத்த சாவியத்துக்கு எடுத்து, காய்கறி,பயிர்,பருத்தி ஏதாவது போட்டு… ஆடுமாடுகளுக்கு எதாவது நாத்து, கீத்து விதைச்சு அப்படியே பொழப்ப ஓட்டவேண்டிதுதான் என்ற யோசனை வந்தது.

அவனுக்கு விவசாயத்தில் ஏற்கனவே கொஞ்சம் அனுபவமிருந்தது. அப்பா இருக்கும்வரை அவருடன் சேர்ந்து கரிசக்காட்டில் கூடமாட விவசாயம் பார்த்தான். படிக்கும்போது விடுமுறை நாட்களில் அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் பார்க்க காட்டுக்கு போவான்.

பழனியுடைய மூன்று அக்காகளின் திருமண செலவுக்காக – அவனுடைய அப்பா இரண்டு கரிசக்காடுகளை விற்ற பிறகு பழனிக்கும் விவசாயத்திற்கும் இடைவெளி அதிகம் ஆகிப்போனது.

அதுவுமில்லாமல் பழனி சோட்டுடைய வயதுக்காரர்கள் பெரும்பாலும் கல்கிடங்கு, கட்டிட வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும்- இவனும் அந்த மாதிரி வேலைக்கு செல்ல ஆரம்பித்தான்.

தோட்டத்தை சாவியத்திற்கு எடுக்கிற விஷயத்தை பழனி தன் மனைவியிடம் வந்து சொன்னபோது சந்தோஷப்பட்டு சரி என்றாள். அதற்குப்பிறகு அவள் ‘யாரு தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்துப் பார்க்கப்போறிங்க’ என்று கேட்டாள். அதற்கு ‘குருசாமி தோட்டத்த எடுத்துப் பார்க்கப்போறேன்’ என்று பழனி சொன்னதும்,அவளுக்கு அந்த நொடியே எரிச்சல் வந்தது.

அவள் அப்படி எரிச்சல் படுவதற்கு காரணம் இருந்தது.

பழனி சாவியத்துக்கு எடுத்திருக்கும் தோட்டத்தின் வடக்குப்புறம் ஒரு காட்டைத்தாண்டி சுப்புச்சாமி காடு இருந்தது. 

சுப்புச்சாமியுடைய அப்பா பல வருஷத்துக்கு முன்னால் பழனியோட அப்பாவிடம் வாங்கிய கடனை அடைக்க  முடியாததால் தனக்குச் சொந்தமான காட்டை வாங்கிய கடனுக்காக வச்சுக்கிறச்சொல்லி தந்தார் .

இப்போது மாதிரி அப்போ உடனுக்குடன் பத்திரப்பதிவு செய்யும் பழக்கம் இல்லை. வாங்குனு துட்டுக்கு இந்தா இந்த காட்ட வச்சுக்கோ என்று கடன் வாங்கியவர் சொன்னால் போதும்- அடுத்த நொடியே கடன் கொடுத்தவருக்கு சொந்தமாகிவிடும் நிலம். அப்போதிருந்த மனிதர்கள் சொன்ன சொல்லுக்கு உண்மையாக இருந்தார்கள்- அதனால் அப்போது பத்திரப்பதிவு எதுவும் செய்யாமல் காட்டை பயன்படுத்த ஆரம்பித்தார் பழனியுடைய அப்பா. அதுவே பின்னாளில் வினனையாகிப்போனது.

பழனி கொஞ்ச வருடம் கழித்து காட்டை தன் பெயரில் பத்திரப்பதிவு செய்ய சுப்புச்சாமியை அழைத்தபோது காட்டு விலையின் மதிப்பு கூடியிருந்தது. அதனால் சுப்புச்சாமி ஒன்னுக்கு ரெண்டா மண்டக்கனமா ஏதாவது சொல்ல ஆரம்பித்தான்

”அந்தக் காலத்தில் எங்கப்பாவ எப்படியோ ஏமாத்திதான

காட்ட வாங்குனிங்க.. அவர மாதிர நானு ஏமாற ஆளில்ல”னு சொல்லி,  காட்டை ஏழுதித்தர மறுத்தான்.

அவன் அப்படிச் சொல்வதைப் பார்த்துவிட்டு பக்னு ஆகிப்போச்சு பழனிக்கு.  கோபத்தில் “ஏன்டா இப்படி மாத்திப் பேசுற. உங்கப்பா

எங்கப்பாகிட்ட அன்னைக்கு வாங்குன காசு மதிப்புக்கு இந்த காட்டை வச்சுக்கிற சொன்னார். இன்னைக்கு இந்த காட்டோட மதிப்பு கூடியதுமே நீ ஏன் இப்படி பேசுற” என்றான் கோபத்தில்.

”அதெல்லாம் தெரியாது, எனக்கு இந்த காடு இன்னைக்கு எவ்வளவு மதிப்புப்போதோ அதத்தந்தா எழுதித்தாரேன்” என்றான் திமிறாக சுப்புச்சாமி. அவன் அப்படிச் சொல்வதைப் பார்த்துவிட்டு படக்குனு மல்லுக்குப் பாய்ந்தான் பழனி.

கடைசியில் போலீஸ் ஸ்டேஷன் வரைப்போயி இறுதியில் தீர்ப்பு சுப்புச்சாமிக்குதான் சாதகமாய் வந்தது.  

அதிலிருந்து பெரும் பகையாகிப்போனது.

பழனி மனைவி பெரும்பாலும் மற்றவர்களுடன் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ நினைப்பவள்- அதனால்தான் சுப்புச்சாமி காட்டுக்கு பக்கத்திலிருக்கிற அந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுக்க வேண்டாமென்றாள். அதையும் மீறித்தான் அந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்தான் பழனி.

மீண்டும் கிணற்றுக்குள் குளித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு, திடீரென்று இனி இவெங்கள சொல்லி பயனில்லை.நாளைக்கு தக்காளிச் செடி காயெடுத்தப் பிறகு இவெங்க வாட்டுக்கு சோப்பு,ஷாம்பு போட்டு குளிப்பாங்கெ. அதுக்கு முன்னாடி நாம சுதாரிச்சு கெணத்துப் படியை வேலிமுள்ள வச்சு அடைச்சு வைத்துவிடுவதுதான் நல்லது. இல்லேனா நம்ம பொழப்பு கெட்டுப்பபோகும் என்று நினைத்துக்கொண்டே தக்காளி நட்டியிருந்த பாத்திகளைப் பார்த்தான் பழனி. அப்போது மூனு,நாளு ஆடுகள் தக்காளிச் செடிகளை கடித்துக்கொண்டிருந்தன.

 “ஏய்..ச்சூ ..”என்று அரட்டிக்கொண்டே கீழே கிடந்த கற்களை எடுத்து எறிந்தான் உச்ச கோபத்தில்.

ஆடுகள் களைந்து ஓடின.அதன் பின்னாடியே வெளமெடுத்து விரட்டிக்கொண்டே  ஓடினான். “ஆடுகள கட்டிப்போட்டு வளர்ப்பாங்கெளா… பெரிய மயிரு மாதிரி அவுத்துவிட்டு வளர்க்குறாங்கே..இன்னோரு தடவ வந்திச்சினா.. வசமா ஏதாவது செஞ்சு போடணும். அப்பதான் ஆடுகள அவுத்து விடமாட்டாங்கெ.. அவன் அவன் கடன்வாங்கி கப்பவாங்கி வெவசாயம் பண்ணிக்கிட்டு இருக்காங்கே” என்று ஏதேதோ புலம்பிக்கொண்டு ஓடி களைத்துப்போயி நின்றான். ஓடியாந்ததால் சாரத்திலிருந்து விழுந்து அடிபட்ட காலு சுருக்சுருக்னு குத்தியது .

திரும்பி வந்து பாத்திகளைப் பார்த்தான். ஆடுகள் கடித்ததால் தக்காளிச்செடிகள் மொட்டக்கட்டையாக இருந்தன.

இதை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று நினைத்ததுமே நினைவு

பின்னோக்கிப்போனது பழனிக்கு.

தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்ததுமே முதல்வேலையாக திக்கம்திக்கம் முளைத்திருக்கும் மஞ்சனத்தி செடிகளை வாச்சாத்தால் தூர்வரை வெட்டி எடுத்தான் பழனி. பிறகு ஆங்காங்கே முளைத்திருக்கும் அருகுகளை மம்பட்டியால் கொத்தினான். தண்ணி ஓடும் வாய்க்கால்களின் இருபுறமும் நல்ல மேடுபடுத்தினான்.

இந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்ததில் பழனி மனைவிக்கு ஆரம்பத்தில் கோபமிருந்தாலும், போகப்போக அவளும் பழனியோட சேர்ந்து தோட்டத்தில் வந்து வேலை பார்க்க ஆரம்பித்தாள் .

என்னதான் வேலை பார்த்தாலும் அவளுக்கு உள்ளூர ஒருவித பயம் இருக்கத்தான் செய்தது.

தோட்டத்தில் எப்பையாவது ஏதாவது வேலை செய்துகொண்டிருக்கும்போது தற்செயலாக சுப்புச்சாமி காட்டை பார்க்கும்போதெல்லாம், படுபாவிப்பையன் வாங்குன காசுக்கு காட்டை எழுதித்தரமாட்டெனு சொல்லிட்டானே…என்று சுப்புச்சாமியை மனதுக்குள்ளே வைதாலும்-அதனை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள்.

    இதேமாதிரி எதோ ஒரு நினைப்பில் பழனி, சுப்புச்சாமி காட்டைப் பார்த்து கோபப்படும்போதெல்லாம் “இதுக்குதேன் இந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுக்கவேண்டுமென்னு தலையில அடிச்சு அடிச்சுச் சொன்னேன். மண்ணோடு மனுஷன் மல்லுக்கட்டுன பெழைச்சுக்கலாம். மனுஷனோடு மனுஷன் மல்லுக்கட்டுனா பெழைக்கமுடியுமா..?” என்று கோபப்பட்டு சத்தமிடுவாள்.

    அப்படி ஒருநாள் அவள் வையும்போதுதான் பேச்சை மாற்றுவதற்காக “செரி செரி கொச்சுகொச்சுனு சொல்லாத தோட்டத்தில என்ன விதைக்கலாம்னு சொல்லு”என்றான் .

அவள் “தக்காளி நாத்து போடுவோம் ஒரு குறுக்கத்துக்கு.. மிச்ச ஒரு குறுக்கத்தில சோள நாத்து வெதைச்சிடுவோம் ஆடுமாடுளுக்கு”என்றாள் வேகமாக.

பழனி “தக்காளிக்குப் பதிலாக கத்தரி நாத்து இல்லேனா மிளாகச்செடி போடுவோமா..?”என்றான்.

அவள் விடாப்பிடியாக “தக்காளி நாத்தே போடுவோம்.. போனாவாட்டி இராமசாமி சின்னையா அவரு தோட்டத்துல தக்காளி நாத்து நட்டிதான் நல்ல விலைக்கு போட்டார்” என்றாள்

பிறகு என்ன நினைத்தானோ பழனி. அவள் சொல்வதற்கு சரி என்றான்

முதலில் தோட்டத்தை டிராக்டரின் சட்டிக் கலப்பை கொண்டு உழுதான். அதற்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபா வந்தது. பிறகு ஒரு மழைக்குப்பிறகு டிராக்டரின் கொற்கழுப்பை (பல்லுக்கலப்பை) கொண்டு உழுதான்.

உழுத கரிசமண் பொறித்த ஆட்டு(ஆடு) இரத்தம்போல காட்சியளித்தது .

விருதுநகர் விதைக்கடைகளில் தக்காளி விதை வாங்கிவந்து தோட்டத்தின் ஈசான மூலையில் பன்னிரெண்டுக்கு பன்னிரெண்டு அளவை மூன்று பங்காக பிரித்திருந்த பாத்திகளில் தக்காளி விதையை பாவி, தண்ணியை விட்டான் பழனி.

பிறகு உழுது போட்டதை முழுவதும் பாத்தி கட்டுவதற்கு மூன்று வேலை ஆட்களை ஏற்பாடு செய்தான் பழனி. ஒரு குறுக்கத்தை முழுவதும் பாத்திகட்ட அந்த மூன்று ஆட்கள் நாலு நாட்கள் எடுத்துக்கொண்டனர்.

தக்காளி நாத்து பிடுங்கி நட்டும் அளவு வளர்ந்தபிறகு பத்து வேலை ஆட்களைக்கொண்டு ஒரே நாளில் ஒரு குறுக்கத்திற்கு முழுவதும் நட்டி முடித்தான்.

தக்காளி நாத்து நட்டிய ஆரம்பத்தில் ஐந்து ஆட்கள்வீதம் என ஒரு குறுக்க பாத்தி முழுவதும் களையெடுக்க ஒருவாரம் ஆனது.அந்த ஒரு வாரத்தில் களை எடுத்த கூலி ஆறாயிரம் வந்தது.

இப்போதே இப்படியின்ன.. செடி பூவெடுக்கேல இன்னொரு களை எடுக்கனும்.. பிறகு செடி காய்வைக்கேல ஒரு களை எடுக்கனும்.. யப்பா என்று மனதுக்குள்ளே ஒருவித அயற்சி வந்தது பழனிக்கு.

இதனால் என்னவோ தக்காளி எப்படியாவது நல்ல விலைக்குப்போகணும் என்று அப்பைக்கப்ப வேண்டாத தெய்வமில்லை.

நாளாகநாளாக பாத்திமுழுவதும் பசேரென்று தக்காளி நாத்து வளர்ந்து வருவதைப்பார்க்க அவ்வளவு சந்தோஷமாகியிருந்து பழனிக்கும்-அவனது மனைவிக்கும்.

இனி கொஞ்ச நாளில் செடி காய் வைத்துவிடும் என்ற நினைப்பே அவனுக்கு சந்தோஷத்தை தந்தது.

அப்படிப்பட்ட சந்தோஷதத்தை அழிக்க வந்த அந்த ஆடுகளை இபபோது நினைக்கும்போது அவ்வளவு கோபம் வந்தது.

 பையிலிருந்த பீடி ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டே ஆடுகளால் கடிபட்ட இலையை தடவிக்கொண்டு தற்செயலாக சுப்புச்சாமி காட்டைப்பார்த்தான் பழனி.

 சுப்புச்சாமி அவனது காட்டில் ஏதோ வேலையில் மும்மரமாக இருந்தான். அப்போது அவனருகே உள்ள வேப்பமர நிழலில் காலையிலிருந்து மஞ்சனத்தி செடியில் கட்டிப்போடப்பட்டிருந்த அவனது ஆடுகள் அசைபோட்டுக்கொண்டிருந்தன.

      **********************************

       “சொன்னா கேட்டயா..? மானாங்கணியா அவங்க தக்காளி போட்டு நல்ல வெலைக்கு போட்டாங்க… இவங்க தக்காளி போட்டு நல்ல வெலைக்கு போட்டாங்கன்னு சொல்லி இப்படி மண்ணாக்கிட்டயே பொழப்ப.. இப்ப தக்காளி கிலோ ரெண்டு ரூபாயக்குதான் அருப்புக்கோட்டை, விருதுநகர் சந்தையில வாங்குறாங்கே.. இந்த ரெண்டு ரூபாய் புளுத்திக்குதேன் இத்தன நாளு தக்காளி நாத்து நட்டி இருபதாயிரத்துக்கு மேல முதல்போட்டு இப்படி நாயா ஒழச்சம்மா..வக்காளி நெனச்சாலே எரிச்சக்கூதியாயிருக்கு.. ஏதோ சொல்லுவாங்களே உன்னி புடிச்ச மாட்டையே (மாடு)உன்னி புடிக்கும்னு.. அதுமாதிரிதான் நம்ம நெலம ஆகிப்போச்சு.. மூசாம கத்திரிக்கா, மெளகாய் போட்டிருந்தாகூட நல்ல விலைக்கு போயிருக்கும்..தேவையில்லாம ஓம்பேச்சைக்கேட்டு.. ச்சேய் தோட்டத்துபக்கம் போகவே எரிச்சலாயிருக்கு.. என்னத்தான் செருப்பால அடிச்சிக்கிறணும்.. வெவசாயம் பார்த்து பெழைக்கிறதுக்கு பதிலா.. நாலுசுன்னியப் பார்த்து ஊம்பிட்டுப் போயிறலாம்”என்றான் கோபமாக பழனி.

     “இப்படி நடக்கும்னு நம்மளுக்கின்னா தெரியுமா.. எல்லாம் நம்ம தலையெழுத்து..“ என்று புலம்பினாள் பழனியோட மனைவி.

அதற்கு பதில் பேசாமல் பீடியை எடுத்து பற்ற வைத்தான் பழனி.

  “நடந்தது.. நடந்திருச்சு.. இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம். நாளைக்கு வெள்ளைனையா அருப்புக்கோட்டைக்குப்போயி தக்காளியை போட்டுவாங்க”என்றாள்.

“ஆமா கிலோ ரெண்டு ரூபா புளுத்திக்கு அத பஸ்ஸில ஏத்தி அதுக்கு லக்கேஜ் எடுத்து நொட்டுறாங்கே..”

 “ச்சீ அப்படி பேசாதிங்க.. ரொம்ப நாளைக்குப்பிறகு நாம வெவசாயம் பார்த்து மொதமொத வெளஞ்சத.. அதப்போயி இப்படி எகத்தாளமா பேசணும்னா.. சாமி நமமளப் பார்த்து சிரிச்சடப்போகுது”

“அதேன் சாமி ஏற்கனவே நம்ம பொழப்ப பார்த்து சிரிச்சிருச்சே.. இனி புதுசா சிரிக்கணுமாக்கும்”

“மொத மொத வெளஞ்சது.. அதுக்காகனாச்சும்.. போயி சந்தையில போட்டுட்டு வாங்க.. இல்லேனா நான் போயி போட்டுட்டு வாறேன்” என்றாள் வேகமாக பழனியோட மனைவி.

அவள் அப்படிச்சொன்னதுமோ அரைகுறைமனதோட “செரி நானே போயிட்டு வாரேன்” என்றான் மனது நொந்து பழனி.

மறுநாள் காலை அருப்புக்கோட்டைக்கு செல்லும் தனியார் பேருந்தில் தக்காளியை கொண்டு செல்வதற்கு  ஊரின் பேருந்து நிறுத்தத்தில் ஆயுத்தமாக நின்றான் பழனி. அவனருகே இரண்டு பெட்டிகளிலிருந்த தக்காளிகள் புரட்சிக்கு பேர்போன செங்கொடி நிறத்தில் இருந்தன.

அந்தப்பேருந்து சாத்தூர், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்,கோட்டூர் குருசாமி கோவில் வழியே கடந்து வருவதால் ஏற்கனவே கூட்டமாக வந்தது. பஸ் வந்து நின்றதுமே கூட்டத்தைப் பார்த்து மலைத்துப்போனான் பழனி.

பஸ்ஸின் சைடு டிக்கிகளில் ஏற்கனவே பூக்கள் மூடை காய்கறி மூடைகள் அடைத்துக்கிடந்தன. அதனால் அதுக்குள்ளே ஏற்றி அடைக்க முடியாது. ஏற்கனவே பஸ்ஸுக்குள் கூட்டமாக இருப்பதால் உள்ளேயும் ஏற்ற முடியாது. இந்த பஸ்ஸை விட்டால் இன்னும் ஒரு மணிநேரம் காத்துக்கிடக்கணும் என்று நினைக்கும்போது எரிச்சலாக வந்தது.அதனால் என்னவோ பழனி தக்கிமுக்கி தக்காளிப்பெட்டியை படியில் இருப்பவர்களை விலகச்சொல்லி உள்ளே ஏற்ற பார்த்தான்.

அதுக்குள்ள பஸ்ஸுன் நடத்துனர் எரிச்சல்பட்டு “ஏய் தக்காளிப்பெட்டியை உள்ள ஏத்தி எடஞ்சல் பண்ணாத..” என்றார்.

தக்காளிப்பெட்டியை சுமந்துகொண்டு வியர்த்து விறுவிறுக்க“பெறகு எங்க ஏத்த, ஒசக்கவா” என்றான் பதட்டத்தில்.

“ஆமய்யா..வேமா டாப்ல ஏத்துய்யா..” என்று எரிச்சல்பட்டு பேசினார் பஸ் நடத்துனர்.

பதினாலு கிலோ தக்காளிப்பெட்டியை தலையில் சுமந்து கொண்டே வேகமாக அரக்கப்பரக்க பஸ்ஸின் பின்புறமுள்ள ஏணிப்படிக்கட்டுகளில் ஏறி பஸ் மேற்கூரையில் போயி இறக்கி வைக்கும்போது கால் சுள்ளுனு வலித்தது பழனிக்கு. இந்த வலியில் இன்னொரு தக்காளிப்பெட்டியையும் பஸ்ஸின் உயரே ஏற்றினான்.

பஸ்ஸுக்குள் உள்ளவர்களுக்கு டிக்கெட் போட்டுவிட்டு மெட்டுக்குண்டு ஊர் வந்ததும் உள்ளிருந்து இறங்கி பஸ்ஸுன் மேற்கூரையில் உள்ளவர்களுக்கு டிக்கெட் போட ஏறினான் பஸ் நடத்துனர்.

  பழனி முப்பது ரூபாய் கொடுத்து மூன்று டிக்கெட்கள் எடுத்தான். ஒன்று அவனுக்கு -மற்ற இரண்டு டிக்கெட் ,தக்காளிப்பெட்டி லக்கேஜ்களுக்கு.

எடுத்த டிக்கெட்டை சட்டையின் மேல்பையில் வைத்துவிட்டு, மனதுக்குள்ளே கணக்குப்போட ஆரம்பித்தான்

கொண்டுபோறது இருபத்தெட்டு கிலோ தக்காளி. ஒரு கிலோ ரெண்டு ரூபாய்க்குத்தன் போகுது.மொத்தமா போட்டாக்கூட அறுபது ரூபாய்கூட வராது.. இதுக்கு லக்கேஜ் டிக்கெட், எனக்கு டிக்கெட்டு, டீ செலவு …ச்சீ நெனச்சாலே எரிச்சலாத்தான் வருது என்று நினைத்துக்கொண்டே பீடியை பற்ற வைத்து ஊத ஆரம்பித்தான் பழனி.

பஸ் ஒவ்வொரு ஸ்டாப்பாக கடந்து பாலவநத்தம் ஸ்டாப் வந்து நின்றதும் திடீரென்று பஸ்ஸில் டிக்கெட் செக்கர் (பரிசோதகர்) ஏறினார்.

கொஞ்ச நேரத்தில் பஸ்ஸூக்குள் டிக்கெட் பரிசோதித்துவிட்டு, பஸ்ஸின் மேற்கூரையில் பரிசோதனை பண்ண ஏறினார் பரிசோதகர். ஒவ்வொரு ஆளாய் பரிசோதித்து வந்தவர், பழனியிடம் வந்ததும்,தக்காளிப்பெட்டி லக்கேஜ் எல்லாம் கணக்குப்பண்ணி மூன்று டிக்கெட்டை எடுத்து காண்பிக்கச் சொன்னார்.

    டிக்கெட் எடுத்தாச்சே என்ற மிதப்பில் மேல்சட்டைப்பையிலிருந்து  டிக்கெட்டை எடுத்தான்.ஒரு டிக்கெட் குறைந்தது. அப்போது திறுதிறுனு முழித்தான். பீடி எடுக்கேல டிக்கெட் விழுந்திருச்சுபோல என்ற யோசனை ஓடியது பழனிக்கு.

“என்னய்யா.. ஒரு டிக்கெட் குறையுது. இப்படி ஏச்சுதான் இந்த தக்காளிப்பெட்டியை ஏத்திட்டு வாரயா.. லக்கேஜ் எடுக்காம ஒன்னும் எடுக்காம வர- இதுன்ன ஒங்கொப்பன் வீட்டு பஸ்ஸா.. ஒன்னமாதிர நாலுபேரு இப்படி பண்ணுனா புளுபுளுப்புனு இருக்கும்…ஒனக்கெல்லாம் அறிவில்ல…கட்டுய்யா  பைன்ன (அபராதம்)என்றார் டிக்கெட் பரிசோதகர்.

“சார் லக்கேஜ் டிக்கெட்டெல்லாம் எடுத்துட்டேன் சார்.. எப்படியோ டிக்கெட் கீழே விழுந்திருச்சு.. வேணும்னா கண்டெக்டர கூப்பிட்டு கேளுங்க ” என்றான் அத்தனேபேர் முன்னிலையில் பதட்டப்பட்டுக்கொண்டே பழனி.

பரிசோதகர் விசில் அடித்தார். பஸ் நின்றது. சில அழைப்புகளுக்கு பிறகே பஸ் நடத்துனர் பஸ்ஸின் மேற்கூரைக்கு வந்தார்.

பஸ் நடத்துனரைப் பார்த்து பரிசோதகர் “இந்தாளு தக்காளிக்கு லக்கேஷ் டிக்கெட் எடுத்தானா..? ”என்றார்.

அத்தனை கூட்டத்திற்கு டிக்கெட் கொடுத்திட்டு வந்ததால் நடத்துனருக்கு சரியாக ஞாபகமில்லை -அதனால் பழனி டிக்கெட் எடுத்தானா என்ற சந்தேகத்தில் பதில் சொல்லமுடியாமல் திறுதிறுனு முழித்தார் நடத்துனர்.

“என்னய்யா இப்படி முழிக்கிற.. நீயெல்லாம் என்னத்ததேன் இத்தன வருஷம் கண்டெக்டரா இருந்தயோ..”, என்றார் பரிசோதகர்.

பிறகு பழனியைப்பார்த்து “நீ டிக்கெட்டா எடுத்தயோ.. இல்லையோ எனக்குத்தெரியாது- ஆனா இப்ப ஓங்கிட்ட லக்கேஜ் டிக்கெட் இல்லை.. அதனால இப்ப நீ பைன் கட்டித்தான் ஆகணும்”என்றார் பரிசோதகர்.

“நான் டிக்கெட் எடுத்தேன் சார்” என்றான் பழனி கெஞ்சிய குரலில்.அப்போது எல்லோரும் அவனை அனுதாபமாக பார்த்தனர்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது  அபராதத்தைக்கட்டு”என்றார் பரிசோதகர் மண்டக்கணமாக.

கெஞ்சிப்பார்த்தான் பழனி. பரிசோதகர் விடுவதுமாதிரி தெரியவில்லை.

அப்போது கோபத்தில் தக்காளிப்பெட்டியை ஒரு பார்வை,பரிசோதகரை ஒரு பார்வை பார்த்த பழனி.

இந்த தக்காளிப்பெட்டிக்குத்தான லக்கேஜ் எடுக்குல.. இது இருந்தாதான பிரச்சனை என்று சொல்லிக்கொண்டே  தக்காளிப்பெட்டியை கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வலிகடுக்கும் கால்களால் எத்தி பஸ்ஸின் மேற்கூரையிலிருந்து சரித்துவிட்டான் பழனி. அப்போது பதட்டத்தில் “ஏய் ஏய்”என்று கத்தம்போட்டார் பரிசோதகர்.

பஸ்ஸின் மேற்கூரையிலிருந்து சிவப்பு அருவிபோல கீழே கொட்டிய தக்காளிகள் சாலையெங்கும் உருண்டு பரவி திசைதிசைக்கு சிதறின. பரிசோதகர், கண்டெக்டர், பஸ்ஸில் இருந்தவர்கள் சாலையில் போவோர்  வருவோர் எல்லோருக்கும் அப்போது எப்படியோப்போனது.

சாலையில் சிதறிய தக்காளிகளைப் பார்த்ததும் ஆங்காங்கேயிருந்த பறவைகள் வர ஆரம்பித்துவிட்டன.

 கண்கலங்கிக்கொண்டே பஸ்ஸிலிருந்து படபடவெனு இறங்கி குதித்து  வெக்குவெக்குனு பஸ் போகிற எதிர்திசையில் நடையைக் கட்டினான் பழனி. அப்போது ரொம்பப்பேர் ஓடிப்போய் பழனி கையைப்பிடித்து இழுத்து தாஜா பண்ணினர். அவன் எல்லோர் கைகளையும் உதறிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

பழனி போவதையே  பார்த்துக்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் ‘ச்சே எல்லாம் என்னாலதான். ஒரு லக்கேஷ் எடுக்காததிற்குப்போயி இப்படி அவன பாடாய்படுத்திட்டமே..கொஞ்சம் பொறுத்துப்போயிருக்கலாமோ.. “ என்று தன்னையறியாமலே கண்கலங்கினார்.சிலநொடியில் விசில் சத்தம் கேடடதும் பஸ் நகர ஆரம்பித்தது. அப்போது டயர்களுக்கு அடியில் கிடந்த   தக்காளிகள் நசுங்கி தெரித்தன.

   வெறுப்பில் நடக்கநடக்க வியர்வை அதிகரித்தது பழனிக்கு. பீடியை எடுத்து பற்றவைத்தான். எப்போதாவது சரக்கு அடிக்கும் பழக்கம் கொண்டவன்- இன்று சாலையில் இடதுபுறம் ஒரு ஒயின்ஷாப் தட்டுப்பட்டதுமே ஒரு குவாட்டர் வாங்கப்போனான்.

   குவாட்டர் பாட்டிலில் போட்டிருந்த விலையைவிட, கமிஷனாக கூடுதலாக ஐந்து ரூபாய் கேட்டான் ஒயின்ஷாப்பின் சேல்ஸ்மேன்.

தன் சட்டைப்பையிலிருந்து ஜந்து ரூபா எடுத்து சேல்ஸ்மேனுக்கு கமிஷனாக கொடுத்தபோது, திடீரென்று பழையது ஒன்று ஞாபகம் வந்தது பழனிக்கு.

 அப்போது பழனி பன்னிரென்டு படித்துட்டு ஆறேழு வருஷம் நிலையான வேலையில்லாமல் அழைந்தபோது, தமிழக அரசு ஒயின்ஷாப்பு வேலைக்கு சேல்ஸ்மேன், சூப்பர்வைசர் பிரிவுகளில் ஆள் எடுத்தது.

    இந்த விஷயத்தை தெரிந்த பழனியுடைய பெரியப்பா மகன்

சேல்ஸ்மேன் வேலைக்கு பழனிக்கும், தனக்கும் சேர்த்து விண்ணப்பம் வாங்கி வந்தான்.

விண்ணப்பத்தை நிரப்பிய பழனி- அப்பாகிட்ட போயி “ஒயின்ஷாப்பு வேலைக்கு ஆள் எடுக்குறாங்க கவர்மென்ட். அதுக்குதான் இந்த விண்ணப்பம்.வேலைக்கு சேரணும்னா முன்கூட்டியே ஐம்பாதயிரம் ரூபா கவர்மெண்டுக்கு கட்டணுமாம்” என்றான்.

    விஷயத்தை புரிந்துகொண்ட அவர் “ஏன்டா.. சம்சாரி வீட்ல பொறந்திட்டு போயும் போயும் சாராயக்கடையில வேலை பார்க்கப்போறிங்கிற..“ என்று சொல்லிக்கொண்டே கோபத்தில் விண்ணப்பத்தை சரட்டுசரட்டென்று கிழித்தெறிந்துவிட்டார்.

இதை இப்போது நினைக்கும்போது அப்பாமேல் அவ்வளவு கோபம் வந்தது பழனிக்கு.

இப்போது ஒயின்ஷாப்பில் வேலை பார்ப்பது எவ்வளவு பெரிய கௌரவம். ஒயின்ஷாப்பில மட்டும் இன்னியாரம் வேலைக்கு சேர்ந்திருந்தா சம்பளத்துக்கு சம்பளம்.. குவாட்டருக்கு அஞ்சு ரூபாய் கமிஷன்னு.. நல்லா வாழ்ந்திருக்கலாம்.

தேவையில்லாம அப்பா செஞ்ச வேலையால, இப்ப இரண்டு ரூபாய்க்கு விக்கிற தக்காளியை தூக்கிட்டு ஊரெல்லாம் அசிங்கப்பட்டு தெரிய வேண்டியாதிருக்கு.. எல்லாம் என் தலையெழுத்து என்று எண்ணிக்கொண்டே விரக்தியில் குவாட்டர் பாட்டிலை திறந்து அப்படியே ராவாக வாயில ஊத்தினான்.

தக்காளி விலை சரிவு, பஸ்ஸில் பரிசோதகர் நடத்திய விதம் ஆகியவற்றால் நெஞ்சு வயிறெல்லாம் பழனிக்கு ஏற்கனவே எரிந்துபோனதால் -இந்த ராவான குவாட்டரின் எரிச்சல் அவ்வளவாக தெரியவில்லை. போதை  ஏறியதும் எல்லாம் அந்த முண்டையால வந்தது என்று மனதுக்குள்ளே தன் மனைவியை வைதான் பழனி.

சிலநொடியில் தோட்டத்தில் காய்த்து நிற்கிற தக்காளிதான் கண்முன்னே வந்து வந்து எரிச்சலைத் தந்தது.

   கொஞ்ச நேரத்தில் தோட்டத்திற்கு வெக்வெக்னு வந்த பழனி கையில் ஒரு மூங்கில் கம்பை எடுத்துக்கொண்டு சிவிரென்று காய்த்து தொங்குகிற தக்காளியையெல்லாம் அடித்து சாய்க்க நெருங்கினான்.

இவனுக்கு முன்னாடியே நாலைந்து ஆடுகள் தக்காளிகளை கடித்து மேய்ந்து நாசம் பண்ணிக்கொண்டிருந்தன.

நாம பண்ண நினைத்ததை இந்த ஆடுகள் பண்ணிக்கொண்டிருக்கே என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டே, -அதற்கு உறுதுணையாக பழனியும் கையில் வைத்திருந்த மூங்கில் குச்சியால் விளைந்து கொழுத்திருந்த தக்காளிகளை சராமாரியாக அடிக்க ஆரம்பித்தான். அவன் வெறுப்பில் அடிபட்டு விழுந்த தக்காளியிலிருந்து சாறுகள் வெதுவெதுப்பாக வடிந்தன-அவனின் கண்ணீரைப்போல..!

அப்பொழுது பக்கத்து காட்டிலிருந்த சுப்புச்சாமி கட்டிப்போட்டிருந்த தன்னுடைய ஆடுகளை காணோமே என்ற பதட்டத்தில் பழனி சாவியம் பார்க்கிற தோட்டத்தை  நோக்கி  ஓடி வந்துகொண்டிருந்தான். அப்போது பழனி பக்கத்தில் சுப்புச்சாமியுடைய ஆடுகள் தக்காளிகளை மேய்ந்துகொண்டிருந்தன.

க. செல்லப்பாண்டி

செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *