மல்லி வேணுமா
முல்லை வேணுமா
இல்ல கொஞ்சம்
கனகாம்பரமாவது
வாங்கிட்டு போயான்டி
யென்றவாறு
அவள் முகத்தை
என் முகத்தால் அளக்கிறேன்
முழம் முழமாக
அளபெடுத்து கொண்டிருக்கிறது
ஒரு செடியில் பூத்திருக்கும்
பல பூக்களாகிய
அவள் முகமும்
என் கையிலிருந்த ஒரு முழம் பூவும்
–
நீ எங்கிருக்கிறாய் யென்று
ஒரு நாளும் தேடியதில்லை
தேடி அலையவும்
எனக்குள் தோன்றியதில்லை
நான் சிகரெட் பிடிப்பதை
நிறுத்தி ஐந்தாறு
ஆண்டுகளாகிவிட்டது
எங்கிருக்கிறாய் யென்று
அவ்வபோது புகைய
ஆரம்பிக்கிறது உன் நினைவு
எரிந்து கொண்டிருக்கும்
என் இதயத்திலிருந்து உனது வருகைக்கான ஆனந்தத்தில் சீச்சிலிடுகிறது ஓர் பச்சை கிளி
அதன் பெயரோ உன் பெயர்
–
கடலென நினைத்தே
நீந்தி மகிழ்வுறுகிறது மீன்
கரையும் இல்லை
அலையும் இல்லை
நீந்தும் அளவுக்கு
மேல் நிறைந்திருக்கிறது நீர்
யாரோ ஒருவர்
கொண்டுவந்து தூவும்
பொரியை விட
வேறு என்ன வேண்டும்
கண்ணாடி பேழைக்குள் அடைக்கப்பட்டிருக்கும்
சிறு மீனுக்கு வேடிக்கை பார்த்தவாறு கடந்து போகும் எனக்கும் ,
–
முன் படர்கிறது நிலா
பின் தொடர்கிறது என் நிழல்
அழுத்தி மிதிக்க
வேகமெடுக்கும் பழைய சைக்கிள்
அகல விரியும் அபாயசாலை
கண்ணெதிரே கண்களில் காட்சியாகிறது
வாசலுக்கு வெளியே
காத்திருக்கும் குழந்தைகளுக்கான பசி
பூனைகள் இல்லாத வீடு
எப்பொழுதே பற்ற
வைத்ததாக நீளும்
அடுப்பாங்கரை சோற்றின் வடுக்கள்
உருண்டை பிடித்து
சோற்றை ஊட்டிக்கொண்டிருக்கிறது
நிறைவேறாத
பல அப்பாக்களின் கனவு ,
++

ச.சக்தி
புன்னகை இதழ், கொலுசு இதழ், வாசகசாலை இணைய இதழ், ஆதிரை இதழ், புக் டே இணைய இதழ் என பல்வேறு இதழ்களில் என்னுடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது ,