புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு, சேது, வீட்டில் இருந்து வெளியே வந்தான். அவர்கள் வசிக்கும் பாரதி தெருவிலேயே அவனுக்கு இரண்டு வகுப்புத் தோழர்கள் இருந்தனர்.

”கோபி” என்ற சேதுவின் குரல் கேட்டவுடன், “இதோ வரேண்டா” என்றபடி கோபி வெளியே வந்தான்.

சில வீடுகள் தள்ளி சேகரும் அவர்கள் போவதற்குள்ளாகவே வெளியே வந்துவிட்டான்.

மூவரும் சின்னஞ்சிறு கதைகள் பேசியபடி நடந்தனர்.

கோபி தன் பையில் இருந்து இரண்டு கோலிக் குண்டுகளை எடுத்து தரையில் உருட்டி விட்டான்.

“டேய், ரோட்டுல விளையாடிக்கிட்டு போகக் கூடாதுன்னு அப்பா சொன்னாங்க” சேகர்.

கோபி தன் கையில் இருந்த கோலியால், கீழே உருண்டு கொண்டு இருந்த ஒரு குண்டின் மீது குறி பார்த்து அடித்தான்.

“உனக்கு அடிக்கத் தெரியாதுன்னு சொல்லேன்”

ஹா ஹா என சேதுவும் கோபியும் சிரித்தனர்.

உடனே சேகர் கோபி கையில் இருந்த கோலியைப் பிடுங்கி, இன்னொரு கோலிக் குண்டு மீது சரியாக அடித்தான்.

“டிரிங், டிரிங்’ சைக்கிளின் ஓசை பலமாகவே கேட்டது.

“பயலுகளா! மெயின் ரோடு வந்திரும். ரோட்டில விளையாடிகிட்டே போவீங்களா? சேகர் தான நீ?” எனக் கேட்டார் அந்த நபர்.

  ”கீழ ஷார்ப்பனர் விழுந்துடுச்சு. அத தான் எடுத்தோம் அங்கிள்” என்று சொல்லிய சேகர், “சேது கணக்குப் பாடம் முடிச்சிட்டயாடா?” என மிக பொறுப்பான மாணவன் போன்ற தோரணையுடன் கேட்டான்.

சேது அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, ”வாடா, அந்தால போயிடலாம்” எனச் சொல்லியபடி எதிர்ப்பக்கம் போனான்.

கோபியும் ஓடினான்.

அந்த ‘அங்கிள்’ நகர்ந்த பின், கோபி மீண்டும் திரும்ப வந்து தன் கோலிக் குண்டுகளைப் பொறுக்கிக் கொண்டான்.

இதோ, தெருமுனை வந்துவிட்டது. மெயின் ரோடு வந்து விடும். அது ஒன்றும் மிக மிக பரபரப்பான சாலை கிடையாது.

இவர்கள் தெருவிலிருந்து வலது பக்கம் திரும்பி, அதே கைப்பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால், மூன்று சந்துகள் தாண்டி, மீண்டும் வலது புறம் திரும்பினால், பள்ளிக்கூடம் இருக்கும் தெரு வந்து விடும்.

இவர்கள் மெயின் ரோடைக் க்ராஸ் செய்ய வேண்டாம். ஓரமாக நடந்து சென்றால் போதும்.

இருந்தாலும், தினமும் அப்பா, அம்மா, போகிறவர்கள் வருகிறவர்கள் என எல்லோரும் அவர்களைப் பார்த்து, “கவனமா போங்கடா! பத்திரம்!“ எனச் சொல்லத் தவறுவதே இல்லை.

யார் எது சொன்னாலும், அவர்கள் மூவரும் ஏதோ பேசிக் கொண்டும் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும் விளையாடியபடி பள்ளிக்கு வருவார்கள்.

மெயின் ரோடில் அவர்கள் கவனத்தை ஈர்ப்பது ஒரு சைக்கிள் ரிப்பேர் கடையும் ஒரு பலகாரக் கடையும்.

“டேய்! அந்த சைக்கிள் எனக்கு வேணும்டா!”

“போடா! எனக்கு தான நீலக் கலர் பிடிக்கும். அதுல நீல நிற சீட் தான இருக்கு நா எடுத்துக்கறேன்”

சைக்கிள் கடைக்காரர் குரல் கொடுப்பார். “போங்கடா போங்கடா”

“அண்ணே! ஒரு தரம் கொடுங்களேன். ஓட்டி பாக்குறோம்!”

“ஆங்! எதுக்கு ஓட்டிப் பாக்கணும்?”

“நல்லா இருந்துச்சுன்னா வாங்கலாமின்னு தான்”

“ஆஹா! வந்துட்டானுங்க மைசூர் மஹாராஜா பேரனுங்க, சைக்கிள் வாங்க!  போய் ஒரு ரூபா காசு கொண்டு வாங்கடா! வாடகைக்கி ஓட்டலாம்”

அடுத்தாக, பலகாரக்கடை.

“அது ஜாங்கிரியா இல்ல ஜிலேபியா ?”

“ரெண்டும் ஒண்ணுதான்”

“கிடையாது! ரெண்டும் ஒண்ணு கிடையாது! எங்க பாட்டி சொல்லுச்சு” கோபி.

”இல்லடா! அது ஒரே ஸ்வீட் தாண்டா! நாம ஜாங்கிரின்னு சொல்றோம். வேறக்காரங்க ஜிலேபின்னு சொல்ராங்க”

சேது, பலகாரக்கடை ஓனரிடம் கேட்டான், “மாமா ஜாங்கிரி, ஜிலேபி ரெண்டும் ஒண்ணு தான?”

“இதோ பாரு, நல்லா செப்பா ரோஜா நிறமா இருக்குறது ஜாங்கிரி; கொஞ்சம் மஞ்ச கலரா உள்ளது ஜிலேபி” கடைக்காரர்.

“நிறம் தான் வித்தியாசம், ஒரே ஸ்வீட் தான்” சேது.

“இல்லடா! ஜாங்கிரி கொஞ்சம் தடியா இருக்கும். ஜிலேபி கொஞ்சம் ஒல்லியா இருக்கும். ஜாங்கிரி வந்து, ம்ம்… உளுந்தம்பருப்பு வச்சு செய்றாங்க!”

“ஆமா, இவரு தான் குக்கு வித் கோமாளி!” சேகர்.

”ஆமாடா! எங்க பாட்டி வீட்டுலயே ஜாங்கிரி செஞ்சாங்கதித்திப்பு வேற மாதிரி இருக்கும் ரெண்டும் ஒண்ணு இல்ல” கோபி.

“எங்க வீட்டுல இதெல்லாம் செய்ய மாட்டாங்க. ரவா உருண்டையும் அதிரசமும் தான் செய்வாங்க” சேது.

“டேய் பசங்களா! வாசலில நிக்காதீங்க! வரவங்களுக்கு இடைஞ்சலா! கிளம்புங்க!”

சடசடவென ஏதோ சத்தம் கேட்டது.

மூன்று நண்பர்களும் திரும்பிப் பார்த்தனர்.

கடைக்கு அருகில் ஒரு சரக்கு மினி வண்டி, ஒரு முதியவர் மேல் உராய்ந்து சென்றதால், அந்த முதியவர் கீழே சரிந்து விழும் சத்தம் தான் அது.

சிட்டெனப் பறந்து ஓடினர் மூவரும்.

“ஐய ! ஐயா!” எனக் குரல் கொடுத்து சேது அவரைத் தன் மடி மீது தாங்கி பிடித்துக் கொண்டான்.

சேகர் தனது தண்ணீர் பாட்டிலைத் திறந்து, ஒரு வாய் தண்ணீரை அவருக்கு ஊட்டி, முகத்திலும் சிறிது தெளித்தான். சேகர் அவரது உடுப்பைத் தளர்த்தி ஆசுவாசப்படுத்தினான்.

பெரிய ஆட்கள் யாரும் வருவதற்குள் நண்பர்கள் மூவருமே அவருக்கு நல்லதொரு முதலுதவி செய்துவிட்டார்கள் எனத் தான் சொல்ல வேண்டும்.

“பசங்களா! கொஞ்சம் கைத்தாங்கலா அழைச்சுகிட்டு போய் அந்த கடை பென்ச்சில உட்கார வையுங்க”

“ஜூஸ் குடிக்கிறீங்களா?” கடைக்காரர்.

“சோடா குடுங்க மாமா” சேது.

சற்று சுதாரித்துக் கொண்டார் முதியவர்.

“நல்ல பசங்க! டக்குன்னு உதவிக்கு ஒடி வர பெருங்குணம்” என நண்பர்களைப் பாராட்டினார்.

“இந்த சின்ன பசங்க தான் எதையாவது வேடிக்கை, பராக்கு பாத்துகிட்டு அஜாக்கிரதையா வருவாங்க! பெரியவங்க நீங்க, ஜாக்கிரதையா வரவேணாமா?” கடைக்காரர்.

“உங்க கடையைப் பாத்தேனா? ஜாங்கிரி வாங்கறதா இல்ல ஜிலேபி வாங்கறதான்னு ஒரு யோசனை“ என முதியவர் சொல்ல, நண்பர்களுடன் சேர்ந்து கடைக்காரரும் சிரித்தார்.

நண்பர்களுக்கு ஆளுக்கு ஒரு ஜாங்கிரியும் ஜிலேபியும் கூடவே ஒரு போண்டாவும் வாங்கித் தந்தார் முதியவர்.

000

ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை ,கமலா முரளியின் படைப்புகள் தினசரி.காம், மஞ்சரி, கலைமகள், குவிகம் மின்னிதழ், நடுகல் இணைய இதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், மங்கையர்மலர், கோகுலம் ,இந்து தமிழ்திசையின் மாயாபஜார், சிறுவர் வனம், சொல்வனம் , தினமலர் பட்டம் போன்ற பல்வேறு தளங்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  எனும் மொழிபெயர்ப்பு நூலும்  “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *