எல்லாமே ஒரு நாள் தங்கராஜூ மெதுவாக எழுந்திருந்ததால் நடந்தது.

வழக்கமாக அப்பா அவனை எழுப்பி விடுவார். அன்று அவரது நண்பர் வந்திருந்ததால், அவருடன் பேசி வழி அனுப்பி வைத்துவிட்டு வந்தார்.

“ராஜூவை நீ எழுப்பி விடக்கூடாதா?” என்றார் அப்பா.

“சமையல் வேலையில கவனமா இருந்துட்டேன்” அம்மா.

“ராஜூ … தங்கராஜூ எழுந்திரு”

வழக்கமான திட்டல்கள், குளியல், உணவு எல்லாம் முடிந்து ராஜு தெருமுனைக்கு வந்தான். கூடவே அப்பாவும்.

அவன் வழக்கமாகச் செல்லும் வாகனம் சென்றுவிட்டது.

சிறிது நேரம் காத்திருந்த பின் தான், நிலைமை புரிந்தது.

“அறிவு கிடையாதுடா உனக்கு! சீக்கிரம் கிளம்பிருந்தா புடிச்சு இருக்கலாம்.” திட்டிக் கொண்டே இருந்தார் அப்பா.

வீட்டுக்கு வந்து, அப்பா தன் வண்டியை எடுத்துக் கொண்டு, தங்கராஜூவைப் பள்ளியில் விட்டார்.

எல்லா வகுப்புகளும் முடிந்து மாலை நேர மணி அடித்தது. காலையில் தாமதமாக வந்ததால், உடற்பயிற்சி ஆசிரியர், துணைத்தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோரின் விசாரணை முடிந்து தங்கராஜூ வருவதற்குள் முதல் பாட வேளையே முடிந்து விட்டது.

முதல் பாட வேளை ஆசிரியர் வகுப்பில் நடத்திய பாடத்தை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வீட்டுக்குப் போகும் முன் காண்பிக்கச் சொல்லி இருந்தார். தங்கராஜூ அவரிடம் சென்று விட்டு தனது வாகனத்தைத் தேடி வந்தான். எந்த வாகனமும் இல்லை. எல்லா வாகனங்களும் புறப்பட்டுவிட்டன.

பரபரப்பாக பள்ளியின் நுழைவாயிலுக்கு வந்த தங்கராஜூ, கண்காணிப்பாளரால் தடுக்கப்பட்டான்.

“நில்லுப்பா, தம்பி, எங்க ஓடற? அம்மா வந்துருக்காங்களா?”

“இல்ல அங்கிள், என் வண்டி போயிடுச்சு?”

“வண்டியா? தெனம் வண்டியில வர தான? யாரு உன் வண்டி டிரைவரு? யாரு ஏத்தி இறக்கிவிடறது?”

“அது ஜீவாண்ணா தான் ஏத்துவாரு, அங்கிள்”

“ஓஓ! வெற்றி சார் வண்டி! அந்த ஜீவா பேரு பாத்து பொறுப்பா ஏத்திப்பானே! உன்ன எப்படி விட்டான்? காலையில எப்படி வந்த?”

அடுக்கடுக்காகக் கேள்விகளை இறக்கினார் கண்காணிப்பாளர்.

“அப்பா வண்டில விட்டாங்க” தங்கராஜு.

“அப்ப, உங்க அப்பாவே வந்து அழைச்சுக்குவாரா இருக்கும். போயி அப்படி அந்த நிழல் குடைக்கு கீழே உட்காரு” என்றார் கண்காணிப்பாளர்.

தங்கராஜூ நிழல்குடைப் பக்கம் போய் உட்கார்ந்தான்.

அங்கே சில மாணவர்கள் வியர்வையும் பெருமூச்சுமாய் வந்தார்கள். தங்கள் தண்ணீர் பாட்டிலை எடுத்து, முகத்தில் ஊற்றிக் கொண்டார்கள்.

”பாய்ஸ்” என்று உடற்பயிற்சி ஆசிரியர் ஜகதீசன் குரல் கேட்டது.

அருமையான கலவையான மணம்! தங்கராஜூக்கு நாவில் எச்சில் ஊறியது.

மாணவர்கள் கைகளில் காய்கறி உருட்டல் (அதாங்க வெஜ் ரோல்), சோளம் கலந்த சுண்டல்… டீ வேறு உண்டாம் !

தங்கராஜு விடுவிடுவென உடற்பயிற்சி ஆசிரியரை நோக்கி விரைந்தான்.

“ம்ம்.. எல்லாருக்கும் குடுத்தாச்சா? டீ நா தரேன்! கை சுட்டுரும்“ என்ற ஜகதீசன் சார், வேகமாக வரும் தங்கராஜுவைப் பார்த்தார்.

தங்கராஜூ தயங்கி நின்றான். அவன் பார்வை தின்பண்டப் பையில் ஏதாவது இருக்குமா என்ற ஆசையையும் வேண்டுதலையும் காட்டியது.

“என்னடா பாக்குற? நீ ராஜு… தங்கராஜு தான?”

தங்கராஜூ பார்வை தின்பண்டத்திலேயே நிலைத்திருந்தது.

“ஏன் வீட்டுக்குப் போகலயா?”

“என் வண்டி போயிடுச்சு சார். அப்பா வரணும்”

“சரி, சரி, இங்க நிக்காத, …”என்ற ஜகதீசன் சார், தங்கராஜுவின் பார்வையைப் புரிந்து கொண்டு,”இதெல்லாம் விளையாடற பசங்களுக்கு…” என்றார்.

“நானும் விளையாடுறேன் சார்!”என்றான் ராஜூ விடாப்பிடியாக.

”யேய்! யார்ரா நீ! வகுப்பு ஆசிரியர் கிட்ட பெயர் கொடுத்து, பணம் கட்டி,தலைமை ஆசிரியர் வழியா வரணும். புரியுதா, கிளம்பு, கிளம்பு! ” என்று உரக்கக் குரல் கொடுத்தார் சிறப்பு பயிற்சி அச்சிரியர் கிஷோர்.

முகம் சுண்டிப் போனது தங்கராஜுக்கு.

“விளையாடினாத்தான் வெஜ் ரோலா?” ராஜு.

“தங்கம்! இந்தா! “ என்று தனது பங்கில் இருந்து ஒரு விள்ளல் எடுத்து ராஜுவிடம் கொடுத்தார்” ஜகதீசன்.

“ராஜூ!“அப்பாவின் குரல்.

“அப்பா! என்னையும் விளையாட்டுல சேத்து விடுங்கப்பா!”

வழி நெடுக சோளம் சேர்த்த சுண்டலின் வாசனையையும், நிறத்தையும், கறிகாய்கள் மணத்துடன் பளபளத்த வெஜ் ரோலையும், ஆசிரியரே எல்லோருக்கும் பிடித்துத் தரும் தேநீரைப் பற்றியும் விடாமல் பேசிக் கொண்டே வந்தான் நம்ம தங்கராஜு.

“எனக்கு ஒண்ணு புரியலடா! நீ கூடைப்பந்து விளையாட்டுல சேர நினைக்கிறயா இல்ல … அங்க தரப்போற தின்பண்டத்துக்கு ஆசைப்படுறியா?”

“அப்பா, விளையாடினா, கொடுப்பாங்களாம், சார் சொன்னாரு”

“அம்மா மூணு வேளையும் சோறு போடறாங்கல்ல, அதுக்கு முதல்ல படிச்சு நல்ல மதிப்பெண் வாங்கற வழியப் பாரு! கூடைப்பந்து பயிற்சிக்கு பணம் கட்டறதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்”.

மகனின் தொடர்ச்சியான புலம்பலைக் கேட்டு, அம்மாவும் அப்பாவும் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

“ராஜு, விளையாட்டுல சேர்ந்து பயிற்சி பெறணும் நீ நினைக்கிறது நல்லது தான். ஆனா, முதல்ல, நீ இந்த வருஷ விளையாட்டுப் போட்டில ஓட்டப் போட்டியிலோ அல்லது உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் அப்படி ஏதோ ஒரு விளையாட்டுல முதல் பரிசு வாங்கு. உன்னை விளையாட்டுப் பயிற்சில சேக்கறோம்” 

தங்கராஜூ சளைக்கவில்லை. அவனது பிரிவுக்கான இரண்டு சுற்றுகள், அவனது வகுப்புக்கான இரண்டு சுற்றுகள் என நான்கு சுற்றுகளில் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்று விட்டான்.

“என்னடி, சுண்டலுக்கு ஆசைப்பட்டு உன் பையன் ஓட்டமா ஓடுறான் போல” அப்பா.

“கிண்டல் பண்றது அப்புறம் இருக்கட்டும். பணத்தை ரெடி பண்ணுங்க. பயிற்சில சேத்துடலாம்” அம்மா.

“இன்னும் விளையாட்டு நாள் ஓட்டப்போட்டி இருக்கே!” அப்பா.

“அப்பா! நா ஜெயிச்சுருவேன் அப்பா! கிஷோர் சார் சொன்னாரு”

“ஆமாங்க ஜெயிச்சுருவான்.”

“அவன் தடகளப் போட்டியில முதலா வர என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு” என்றார் அப்பா.

“சொல்லுங்களேன்! பாதாம் கொடுக்கணுமா?”

“வேணாம், வேணாம். போட்டி நடக்கும் போது, அந்த வெற்றிப்புள்ளி, இல்ல கோடு போட்டு இருப்பங்கல்ல… அந்தப்பக்கம் போய் ஒரு சமோசாவைக் கையில் தூக்கிப் பிடிச்சுக் காட்டினா போதும்…. நம்ம பையன் சிட்டாப் பறந்து வந்துவிடுவான்” என்றார் அப்பா.

நாளை மறுநாள் விளையாட்டு நாள்.

பார்க்கலாம்! தங்கராஜூ தடகளத்தில் என்ன செய்கிறான் எனப் பார்க்கலாம் !

000

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *