தொலைத்தவை –

இங்கே தொலைந்தவை என்று சொல்வதைவிட தொலைத்தவை என்றுதான் சொல்லவேண்டும். காரணம் பலவற்றை நாம்தான் தொலைத்திருக்கிறோமே ஒழிய எதுவும் அதுவாகத் தொலைந்து போய்விடவில்லை என்பதுதான் உண்மை.

இதில் பொதுவாக நாம் எதையெல்லாம் தொலைத்து விட்டு நிற்கிறோம் என்பதைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணம். காரணம் நமக்கு முந்தைய தலைமுறை வாழ்ந்ததை அப்படியே நாம் வாழ்ந்திடவில்லை. சிலவற்றை நாம் தொலைத்தோம்; அதேபோல் நாம் வாழ்ந்ததில் சிலவற்றை அல்ல பெரும்பான்மையை இன்றைய தலைமுறை தொலைத்துவிட்டு, அவர்களுக்கென ஒரு புதிய உலகத்துக்குள் உட்கார்ந்து விட்டார்கள்.

இதைப் படித்ததும் வளர்ச்சி என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதைத் தவறெனச் சொல்லும் புரியாமையை விட்டொழிக்க வேண்டும். அதை விடுத்து அப்படி மாறாதே, பழமையைச் சுமந்து குண்டு சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டணும்ன்னு சொல்றீங்களா..? முற்போக்காச் சிந்திங்க எனச் சொல்லத் தோணும்; அப்படியில்லை எனில் நீயெல்லாம் பூமர் அங்கிள் எனக் கடந்து போகத் தோணும். இதையெல்லாம் விடுத்து ஒரு வினாடி சிந்தித்தால் இப்போது நாம் எதையெல்லாம் தொலைத்து விட்டோம் என்பது தெரியும்.

யோசித்துப் பாருங்கள். நமக்கு முந்தைய தலைமுறை எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியையும் அதிகம் பார்க்காத, அப்படியே இருந்தாலும் அதைப்பற்றி ரொம்பவே யோசிக்காத, தங்களின் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு கிடைக்கும் வருமானத்தில் தனது பெரிய குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு, சந்தோசமாக வாழ்ந்தார்களா இல்லையா…?

அவர்களுக்குப் பின் வந்தவர்களை – அதாவது ஈராயிரக் குளவிகள் என்று சொல்லப்படும் 2கே குழந்தைகளுக்கு முந்தைய தலைமுறை – இரண்டும் கெட்டான் தலைமுறை என்றுதான் சொல்ல வேண்டும். இளமைக் காலத்தை முந்தைய தலைமுறையின் பாணியில் கடந்து, இரண்டாயிரத்துக்குப் பின் அறிவியல் வளர்ச்சிக்குள் தங்களை இணைத்துக் கொள்ளச் சிரமப்பட்டாலும், அதனுடன் பயணிக்கும் மனிதர்கள் இவர்கள். சொல்லப் போனால் எல்லாத்தையும் – அதாவது பழமையையும் புதுமையையும் – அனுபவித்த தலைமுறை இது.

அன்றைக்குப் பாரதி சொன்னது போல் ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என்பதாய்தான் இருந்தது. பள்ளி விட்டு வீட்டுக்கு வந்ததும் புத்தக்கப் பையைத் தூக்கிப் போட்டுவிட்டு, விளையாட ஓடினால் இரவு ‘டேய் வர்றியா… வரவா’ என்ற அம்மாவின் கோபக் குரலுக்குப் பின்தான் வீடு வந்து சேர்வாகள். கபடி, நொண்டி, ஓடிப்பிடிச்சி, கண்டொழிஞ்சு, மரக்குரங்கு, பம்பரம், கோலிக்குண்டு, கிட்டிப்புல்  எனப் பலவகை விளையாட்டுக்களை அந்தந்தக் காலத்தில் விளையாடுவார்கள். இவற்றிற்கு இடையே கிரிக்கெட் பூதகரமாய் வளர ஆரம்பித்தபோது ஒரு சிறிய கட்டத்துக்குள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்கள். இதற்கென தென்னை மட்டை, பனை மட்டை, தடிமனான விறகு எல்லாம் பேட்டாக மாறி நிற்கும். இதற்கிடையே நுங்கு வண்டி, டயர் வண்டி, களி மண் பொம்மைகள் என மற்ற விளையாட்டுக்களும் அணி வகுக்கும்.

இன்றைய குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியாமலேயே போய்விட்டது. பிறக்கும் போதே மருத்துவமனைகளில் மண்ணில் விடாதீர்கள்; இந்தச் சோப்பை மட்டுமே உபயோகியுங்கள்; இந்த எண்ணெய் தடவுங்கள்; என்றெல்லாம் சொல்லி அவர்களின் சம்பாத்தியத்துக்கான வழிவகைகளைச் செய்து கொண்டு விடுகிறார்கள். அவன் / அவள் மண்ணுல போனா ஒத்துக்காது என்ற ஒற்றை வார்த்தையில் அவர்களை வீட்டுக்குள் அடைத்து விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை விளையாட்டு என்று சொல்லப் போனால்  செல்போனில் விளையாடும், உயிரைக் குடிக்கும் இணைய விளையாட்டுகளும் வீடியோ கேம்களும்தான். மொத்தத்தில் படிப்புக்காக நாமக்கல் போன்ற இடங்களுக்கு அனுப்பிப் பிராய்லராக்கி வைத்திருக்கும் நாம், ஓடி விளையாட விடாமல் மரப்பாச்சி பொம்மைகளைப் போல் வளர்க்க ஆரம்பித்து விட்டோம்.

அன்றைக்குப் பிறந்த குழந்தைகளுக்குப் பச்சிலை மருந்துகள் கொடுத்தார்கள். கண்ணில் எண்ணெய் ஊற்றி, வெயிலில் வைத்திருப்பார்கள். குளிப்பாட்டும் போது அரைத்து வைத்திருக்கும் பலவகைப் பொடிகளைத் தேய்த்துக் காலில் போட்டுக் கொண்டு குளிப்பாட்டி, மருந்துகள் கொடுத்து, இளம் வெயிலில் கொஞ்ச நேரம் வைத்திருந்து, சாம்பிராணி புகை போட்டுத் தூங்க வைப்பார்கள்; இன்னும் என்னென்னமோவெல்லாம் செய்தார்கள். அப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்த மனிதர்கள் இப்போது இல்லை என்பதுடன், வெயில் காண்பித்தால் குழந்தை கறுத்துப் போகும்; கண்ட கண்ட பச்சிலைகளைக் கொடுக்க்க் கூடாது; பொடிகளைத் தேய்த்துக் குளிப்பாட்டினால் தோல் பாதிப்பு வரும் என்றெல்லாம் சொல்லி மருத்துவர்கள் சொன்ன அறிவுரையின் படி, அவர்கள் எழுதிக் கொடுக்கும், அவர்களின் மருத்துவமனைகளில் விற்கும் மருந்துகள், சோப்புகள் என உபயோக்கிறார்கள்.

நம்ம ஊரில் பல விதத்தில் குழந்தை வளர்ப்பில் மாற்றங்கள் வந்திருக்கும் நிலையில் வெளிநாடுகளில் எல்லாம் நம்ம ஊரின் பழமையான குழந்தைள் வளர்க்கும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள். நாம் எதெல்லாம் பிள்ளைகளுக்குச் செய்யக் கூடாதென முடிவு செய்து ஒதுக்கி வைத்திருக்கிறோமோ அதையெல்லாம் இவர்கள் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் கீழே, விடுமுறை நாட்களில் எட்டு ஒன்பது மணிக்கெல்லாம் நாலைந்து பிலிப்பைனி ஆண்கள், குழந்தைகளுக்கு உடலெல்லாம் எண்ணெய் தேய்த்து, கண்ணில் எண்ணெய் ஊற்றி வெயிலில் காட்டிக் கொண்டிருப்பார்கள். ஆச்சர்யமாக இருக்கும்; மெல்லப் பேச்சுக் கொடுத்தால் இதுதான் குழந்தைக்கு நல்லது என்று சொல்வார்கள்.

இதேபோல் நான் நடைபயிற்சி போகும் போது வேப்பிலை பறித்து வருவது வழக்கம். வாரத்தில் மூன்று முறை வேப்பிலையைக் கொதிக்க வைத்து அந்த்த் தண்ணீரை வெறும் வயிற்றில்  குடிப்பதும் உண்டு. ஒருமுறை நான் இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு பிலிப்பைனி ‘நண்பா எனக்குக் கொஞ்சம் கொழுந்து இலைகளாய் பறித்துத் தரமுடியுமா..?’ என்றான். சரி நம்மளை மாதிரி மென்று தின்று தண்ணீர் குடிப்பான் போல என நினைத்துக் கொண்டே, பறித்துக் கொடுத்தேன். நன்றி என்றவனிடம் இதை அப்படியே திங்காதே; நல்லாக் கழுவிட்டுச் சாப்பிடு என்றதும் இது எனக்கில்லை சகோதரா; என் குழந்தைக்கு அரைத்துக் கொடுக்கத்தான்… இது பிள்ளைக்கு நல்ல மருந்துல்ல, உங்க ஊர்ல செய்வீங்கதானே என்றான். இப்பல்லாம் யார் இதெல்லாம் செய்யிறா எனச் சொல்ல வாய் வந்தாலும் ஆமாம்… ஆமாம்… நாங்க எப்பவும் கொடுப்போம் என்று சொன்னேன்.

காலையில் மோர் ஊற்றி, எலுமிச்சை ஊறுகாயைப் போட்டுக் கரைத்துக் கஞ்சி குடித்துக் கொண்டிருந்த மனிதர்கள் ஆரோக்கியமாய்த்தான் இருந்தார்கள். மூன்று வேலையும் மூச்சு முட்ட சோறு சாப்பிட்டு, விவசாய வேலைகளைப் பார்த்த மனிதர்கள் எண்பது, தொன்னூறு வயதில் கூட நல்ல திடகாத்திரமாக இருந்தார்கள். எங்க ஊரில் எனக்கு ஐயா முறை கொண்ட ஒருவர், தனது தொன்னூறு வயதுக்குப் பிறகும் சைக்கிள் ஓட்டிக் கொண்டு கடைகளுக்குப் போய் வருவார். அன்றைக்கு அவர்கள் சாப்பிட்ட சாப்பாடுக்கும் உடல் உழைப்புக்கும் நோய்கள் அவர்களின் பக்கத்தில் திரும்பவே இல்லை. இன்றைய சூழலில் இரவில் சோறு சாப்பிடக்கூடாது, சோறுதான் ரத்தச் சக்கரைக்குக் காரணம், மூன்று நேரமும் சோறு சாப்பிடாமல் இருந்தால் இன்னும் சிறப்பு. கஞ்சியெல்லாம் வைத்துக் குடிக்காதீர்கள் என்றெல்லாம் சொல்லி மூணு நேரமும் பலகாரங்களுக்கு மாற்றிவிட்டார்கள். கிராமங்களில் கூட கஞ்சியைத் தொலைத்து விட்டார்கள்.  இதில் ஒரு கூத்து என்னன்னா சோறு சாப்பிடாதீங்கன்னு சொல்லிட்டு ப்ரைட் ரைஸ் வாங்கித் தின்பார்கள். இதுதான் முரண். பழையது சாப்பிடுதல், மண் பானைச் சமையல்கள் என எல்லாவற்றையும் தொலைத்து விட்டோம்தான்.

இன்னைக்கு உடம்பெல்லாம் நோய்கள் வந்து நடைப்பயிற்சி என்பதை ஒரு வேலையாக மாற்றி  வைத்திருக்கிறோம். இதற்குக் காரணம் நாம் உண்ணும் உணவுவும், நம்மைப் பிடித்திருக்கும் செல்போன் மோகம்தான். கடைகளில் விற்பதை வாங்கித் தின்கிறோம், எந்த உடல் உழைப்பும் இல்லாமல் எந்த நேரமும் தொலைக்காட்சி முன்போ, செல்போன்களில் ஏதாவது பார்த்துக் கொண்டோ, விளையாடிக் கொண்டோ இருப்பதால்தான் நாம் நோய்களின் கூடாரமாக நம் உடலை மாற்றி வைத்திருக்கிறோம் என்பதை யாரும் உணர்வதேயில்லை.

இன்னொன்னு உறவுகளைத் தொலைத்திருக்கிறோம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பது இப்போது  சுத்தமாக – சில குடும்பங்கள் விதிவிலக்கு – இல்லாது போன நிலையில் உறவுகளின் உன்னதத்தை மொத்தமாய்த் தொலைத்து விட்டோம். பிள்ளைகளுக்கு நம் சொந்தங்களை சரியான உறவு முறை சொல்லிக் கொடுப்பதில்லை. எல்லாரையும் ‘அங்கிள்’, ‘ஆன்டி’, ‘கிராண்ட்பா’, ‘கிராண்ட்மா’ என ஆங்கிலத்துக்குள் அடைத்து வைத்து விடுகிறோம். இன்றைக்கு எல்லா இடத்திலும் உறவு முறைகளைச் சொல்லி அழைப்பது என்பது இப்படித்தான் இருக்கிறது.

அப்புறம் மரியாதை கொடுத்தல்… இது ரொம்ப முக்கியமானது.நமக்கு முந்தைய தலைமுறை கொடுத்த மரியாதையை மிக முக்கியமானது. அப்போதெல்லாம் வீட்டுக்கு ஏழெட்டுக் குழந்தைகள் இருப்பார்கள். சித்தப்பா, மாமா முறைக்காரர்கள் கூட ஒரே வயதில் இருப்பார்கள்; ஆனால் ஒரு போதும் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக் கொள்ள மாட்டார்கள், உறவு முறைதான். எங்க அப்பாவும் அவரது சித்தப்பாவுக்கும் ஏறக்குறைய ஒரே வயது; இருவரும் ஒன்றாகத்தான் படித்தார்கள் என்றாலும் இவர் சித்தப்பா என்பதைத் தவிர வேறெதுவும் சொல்ல மாட்டார். அவரோ எங்கும் அவன் இவன் என்றெல்லாம் சொல்லிப் பார்த்ததில்லை. பெயரைத்தான் சொல்வார். அதேபோல் அவர் வீட்டுக்கு வந்தால் அப்பா எழுந்து நிற்பார். இருவருக்கும் ஒரே வயதுதானே எனத் தோன்றினாலும் அவர்கள் வளர்ந்த விதம் அப்படி எனத் தோன்றும்.

இதேபோல் வீட்டுக்கு யாராவது பெரியவர்கள் வந்தால் நாம் எழுந்து நிற்க வேண்டும் என்றும், அவர்கள் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் வரை நாற்காலியிலோ, அவர்களை விட உயரமான திண்டிலோ உட்காரக் கூடாது என்றும் சொல்லி வளர்க்கப்பட்டோம். அதுதான் இன்று வரை எல்லாருக்கும் மரியாதை கொடுக்கச் சொல்கிறது. நமக்கு அப்பா, மாமா உறவு முறைக்காரர்கள் நம்மை விட வயது குறைவாக இருந்தாலும் முறை சொல்லித்தான் அழைப்பதுண்டு. யாரையும் மரியாதைக் குறைவாகப் பேசப் பேசத் தோன்றுவதில்லை.

இன்றைக்கு இதெல்லாம் ரொம்பவே மாறிவிட்டது. வீட்டுக்கு யார் வந்தாலும் நாம் சொன்னால்தான் வாங்கன்னு சொல்லுற தலைமுறையாக இன்றைய தலைமுறை மாறிவிட்டது. அதைவிட அவர்கள் இருக்கும் போதே கால் மேல் கால் போட்டுக் கொண்டு செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இதெல்லாம் வளர்ச்சி, இப்படி இருக்காதே அப்படி இருக்காதே என்றெல்லாம் சொல்லாதீர்கள் என்றெல்லாம் நம்மில் சிலர் சொல்வோம் என்றால் மரியாதை கொடுப்பதால் நாம் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. பிள்ளையை எப்படி வளர்த்திருக்கிறான் பாரு என்று சொல்லும் போது மகிழத்தானே செய்கிறோம்.

விவசாயம், அது தொடர்பான வேலைகளான உழவு – அதாவது காளை மாடுகள் வைத்து ஏர் பூட்டி உழுவது; இன்றைக்கு வந்திருக்கும் டிராக்டர் உழவு அல்ல –பரம்படித்தல், நாற்றுப் பறித்தல், நடுதல், உரம் போடுதல், மருந்து அடித்தல், கதிர் அறுத்தல், அடித்தல்,  தூற்றுதல், பிணையல் விடுதல், சொளகு வீசுதல், வைக்கோல் போர் மேய்தல் என மொத்தமாய்த் தொலைத்து விட்டோம்தானே.

மாவு ஆட்டிப் பலகாரங்கள் செய்து சாப்பிடுவதை ஆட்டுக்கல்லில் ஆரம்பித்த நாம், அதைத் தொலைத்து நாம் கிரைண்டருக்குள் பயணித்து, அரிசி ஊற வைத்து, அதை ஆட்டி… எதுக்கு இதெல்லாம் கடைகளில் விற்கும் மாவை வாங்கிச் செய்துக்கலாம் என மாறி,  இப்படியான வேலையெல்லாம் செய்து சாப்பிட எங்கே வேலை இருக்கு ஹோட்டல்ல வாங்கிட்டு வந்து சாப்பிடலாம் என யோசித்து, இப்போது வீட்டில் இருந்து போன் வழி என்ன வேண்டுமெனச் சொல்லி விட்டால் அதை வாங்கிக் கொண்டு வந்து சேர்ப்பிக்க சில கம்பெனிகள் வந்து விட்டார்கள். நாம் வேண்டுவதைக் கொண்டு வந்து கொடுக்கத் தனியாகப் பணம் என்றாலும் இப்போதைய வாழ்க்கையை நாம் அப்படித்தான் வாழ்கிறோம்.

இதில் இன்னொரு கூத்து என்னன்னா நம்மளை எதை எதைச் சாப்பிடக் கூடாதுன்னு சொன்னானுங்களோ அதையெல்லாம் பாக்கெட்டுக்களில் அடைத்து இங்கிருக்கும் மார்க்கெட்டுகளில் விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். கற்றாழைப் பழம், புளியம் பிஞ்சு என் எல்லாத்தையும் யானை விலைக்கு விற்கிறார்கள்.

இப்படித்தான் தலைமுறைகள் கடந்து பயணிக்கும் போது நாம் நிறைய விசயங்களைத் தொலைத்து விட்டுத்தான் பயணிக்கிறோம். நாம் வாழ்ந்த ஊரை, நம் உறவுகளை, நம்முடைய தொன்மத்தை என எல்லாத்தையும் தொலைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாம் தொலைத்தவற்றைத் திரையில் பார்க்கும் போது கண் கலங்குகிறோம், கவலை கொள்கிறோம் என்றாலும் தொலைத்தது தொலைத்ததுதானே.

00

பரிவை சே.குமார்

இதுவரை எதிர்சேவை, வேரும் விழுதுகளும்,  திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு என்கிற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.

நித்யா குமார் என்ற பெயரில் முகநூலில் இருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *