வாசனையில் மலரும் தசைகள்

ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு வாசனை உள்ளதுபோல் பன்றிகளுக்கும் இருக்கத்தானே செய்யும். ஆனால் அதைத் துணிந்து அறிந்துவிடவே கூடாதென்ற கண்டனம் மிக இளம் பிராயத்திலே மனதில் ஊன்றப்பட்டுவிட்டது. நாங்கள் வசித்துவந்த நகரில் இருவேறு வகையான பன்றிகள் காணப்பட்டன. தோமா ஆலயத்தில் பாதிரியார்கள் தவுடு வீசி வளர்க்கும் வெள்ளைப் பன்றிகள். மற்றவை சுண்ணாம்பு கால்வாய் வழித்தடங்களில் ஏரியாவுக்கெனத் தனிச்சிறப்புடன் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட பொது கக்கூஸ்களின் (அதற்கு முன்புவரை வாக்குச் செலுத்த மட்டுமே பயன்பட்டுவந்த அரசாங்கக் கான்கிரிட் கட்டடமாக அது இருந்ததுஐந்தாண்டின் அவசரத்தைவிட, ஐந்துமணியின் அபாயச் சமிக்ஞை மிகத் தீவிரமானது என்பதால் பெரும் போராட்டத்துக்குப் பின்னர் இது சாத்தியமாகியுள்ளது) சேமிப்பை மேயும் கரும்பன்றிகள்.

அதே கரும்பன்றிகள் ஆலயத் தோட்டத்தில் தவுடு மேய்ந்திருந்தாலும் யாரும் வாங்கியிருக்கப் போவதில்லை என்பதைச் சொல்லி அறியத் தேவையில்லை. மாமாவுக்கு ‘மூலம்’ கண்டிருந்தது. அடிக்கடி பொது கக்கூஸுக்கு ஓடியபடி இருப்பார். பிள்ளை அலைக்கழிப்புக்கு உள்ளாகிறானே என்ற கவலையில் அம்மாச்சி, அரசாங்கச் சுகாதார மையத்தின் ஆயா பணியிலிருந்து ஓய்வுப்பெற ஈராண்டுகளே பாக்கியிருந்த வேளையில் வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு ஒரு தொகை தேற்றி வந்தார். புண்ணியமாய்ப் போக என வீட்டார் கொண்டாட, முகப்பு வாசலை ஒட்டி கருவேப்பிலை மரமும் பசலிக்கீரைகச் செடிகளும் வேர்விட்டிருந்த பகுதியில் கழிவறை கட்டியாயிற்று. வீட்டுக்குள்ளே என்றாலும் அலைச்சல் தானே. தாத்தாவின் சேக்காளி ஒருவர், பன்றிக்கறி சாப்பிடக் குளுமைக் கூடி, இரத்தப் போக்குக் குறைந்து, எரிச்சல் நீங்கி, சதை வளர்தல் கட்டுக்குள்ளாகி என மரணத்தைத் தவிர சகல பிணிகளும் நீங்குமென ஆலாபித்துவிட, அதைத் தாத்தா அப்படியே மாமாவின் சுருட்டை முடிகளால் மூடிப்பட்டிருக்கும் தலைக்குள் ஓதித் திணித்தார்.

மாமா அன்றே என்னைத்தான் அள்ளித் தன் பஜாஜ் மொபட்டில் போட்டுக்கொண்டு, இளங்காளி கோயிலைத் தாண்டி ஏரியாவின் முகப்பிலே கூரை வேய்ந்து போடப்பட்டிருக்கும் பன்றி இறைச்சிக் கடைக்குப் போனார் (அன்றெல்லாம் கோயிலிருக்கும் ஏரியாவில் மாமிசக் கடை இருக்கக்கூடாதென்று யாரும் சொல்லிக்கொண்டிருக்கவில்லை). வெட்டப்பட்ட பன்றித் துண்டுகளிலிருந்து வயிற்றைப் புரட்டும் வித்தியாசமான மணம் மூளையைத் தாக்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்திலே, கரும்பாலைப் பக்கத்தில் குடியிருப்பவனின் நாசியைப் போல் பழக்கமாகியும் போனது. ஆனால் இதையா மாமா தின்ன வேண்டும் என்று பாவப்பட்டேன்.

வீட்டுக்கு வந்ததும், பண்டிகை நாளுக்கென உள்ளே பாதுகாப்பாக உறங்கும் நாள்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பை, ரேழியில் கிடத்தி ‘ஆட்டுக்கறி செய்யிற மாதிரித்தான் செய்வேன். இல்லனா நீயே சுட்டுத் தின்னுக்கோ, முடியாதுனா உம்பொண்டாட்டிய செய்யச் சொல்லு’ என்று அம்மாச்சி திட்டிக்கொண்டே மண்சட்டியில் கொதித்துக்கொண்டிருந்த கறியை மரக்கரண்டியால் கிளறிக்கொண்டிருந்தார் – வீசிவிட வசதியாக இருக்குமாம். உள்ளிருந்து அத்தை மாமாவிடம் பழிப்புக்காட்டுவது போல் கன்னத்தை அதக்கி விளையாடிக்கொண்டிருந்தாள். இதையெல்லாம் ‘தின்னுட்டு எம் பக்கத்துலே வந்துடாதீங்க’ என்று வேறு மாமாவிடம் குசுகுசுத்தாள்.

‘தின்னதும் முத உம்மா உனக்குத்தான் அமலா. அடுத்து எம் மாப்பிள்ளைக்கு’ என்றதும் ஒரே ஓட்டமாகத் திண்ணைக்கு ஓடி தாத்தாவுக்குப் புறமாகப் படுத்துக்கொண்டேன். நான் படுத்திருப்பது தெரிந்தும் கமுக்கமாக கண்மூடி உறங்கிக்கொண்டிருந்த தாத்தாவின் திமிலில் பூத்திருந்த உப்பூறிய தசையில் நக்கவே, ’ச்சே ச்சே பாண்டை’ எனத் துண்டை விசிறினார். அங்கிருந்து ஓடவும், ‘சாந்தா இவனைப் பிடிச்சு வையிமா. எங்கிருந்து கத்துக்கிறானோ. வாயிலே போடு’ என்றார். அம்மா, பொட்டுக்கடலையும் வெல்லமும் கலந்து கிண்ணத்தில் போட்டு என்னிடம் நீட்டிவிட்டு அடுப்பங்கறைக்குள் என்னை இழுத்துக்கொண்டாள். இலேசாக அவளது கண்கள் மண்சட்டியில் நொதித்துக்கொண்டிருந்த கொழுப்பைத் தீண்டி மறைந்தது.

‘உன் மாமன் குடுத்தான்னுட்டு வாயில கீல வச்சேன்னு வையி. கரண்டிய பழுக்கக் காய்ச்சி நாக்குலே இழுத்துப்புடுவேன்’ என்றாள். அடுப்புக்கு எதிரே போடப்பட்டிருக்கும் ஷோஃபாவில் அமர்ந்துகொண்டு ‘மாட்டேன்மா’ என வெல்லத்தை மட்டும் தேடி எடுத்துச் சுவைக்கவாரம்பித்தேன். மதிய வெயிலின் உஷ்ணமும் அடுப்பெரியும் தகிப்பும் அறையையே சூடாக்கியிருந்தது. கீத்தின் துளைப் பகுதிகளிலிருந்து ஒளிக்கதிர்கள் பென்சில் போல் நீள்கோட்டில் ஊடுருவி சிமெண்ட் தரையை வெப்பமூட்டின. அம்மா தாத்தாவின் பழைய பனியனைக் கிழித்துத் தயாரித்திருந்த கரித்துணியால், சோற்று நீரை வடிக்கவெனப் பாத்திரத்தைச் சாய்க்கும்வேளை, வேகமாய் முன்பக்கம் ஓடினேன்.

மாமா சிறு அலுமினியத் தட்டில், மினி யானைக் கால் போல் வழவழத்துக்கொண்டிருந்த போர்க் துண்டுகளைக் கண்கள் மூடிச் சுவைத்துக்கொண்டிருந்தார்.

பழுப்பை உடுத்திய மாமிசத் துண்டுகள்

மதன்ராஜும் நானுமாக பிலோமினாம்மாள் நகரின் பின்பக்கத் தெருவில் நடந்துகொண்டிருந்தோம். அதைத் தொடர்ந்துவரும் குறுக்கு சந்தினைக் கடந்தால், குட்டி நாய்கள் தாவும் அளவுக்கான சாக்கடை, கங்கா நகரைப் பிரித்துக்கொண்டிருக்கும். வழக்கமாக கங்கா நகர்ப் பக்கமாக ஊர்ந்தபடி, சவுக்குமரங்களால் சூழப்பட்டிருக்கும் ஓட்டு வீட்டின் உட்புறத்திலிருந்து வீதிக்குத் தாவும் கலாக்காய்களைப் பறித்தவாறுதான் இவ்வழி வருவோம். அன்று மாஞ்சாக் கயிறுக்காக மாட்டுக் கொழுப்பு வேண்டுமென நெடுஞ்சாலை வழியாக வந்தோம். எங்களுக்கு வாங்கித் தருவதாக வாக்களித்திருந்த மணியின் வீடு பூட்டியிருக்கவே, சாக்கடையைத் தாண்டி கங்கா நகர் வழியாகவே ரேஷன் கடையை ஒண்டி சாத்தப்பட்டிருக்கும் தோணி பக்கம் சென்று அமர்ந்துகொள்வதாக நடக்கத் தொடங்கினோம். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து, உய்யக்கொண்டான் கால்வாய் வழியாக அரசாயி கோயில் படித்துறையில் உடைப்பெடுக்கவே, அந்நகரே நீச்சல் போட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது. அப்போது தலைக்கு ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு இரண்டு நாட்கள் வலம் வந்த தோணிகளில் ஒன்று எடுப்பார் யாருமற்று இருவாரம் கழித்தும் அங்கேயே கிடக்கிறது. நியாயவிலை அங்காடிப் பக்கம் உள்ளதால் அரசாங்க உரிமைக்குரியது என யாரும் உரிமைப் பாராட்டவில்லை என்று காலையிலே மதனின் அப்பா நன்காறிய தேநீரைச் சுவைத்துக்கொண்டே சொன்னபடி இருந்தார். திருத்தோணியப்பரின் பரிசோ என்னவோ! எதுவாயினும் சரி அவர் சொன்னதிலிருந்து அதில் ஏறி அமர்ந்துகொள்ள வேண்டுமென்கிற ஆவல் கூடிக்கொண்டேதான் போனது.

சந்தினைத் தாண்டிய கணம் வேலி போடப்பட்டிருந்தது. நுழைய வழியிருந்த சிறு தோட்டப் பகுதியில் முருங்கைகள் சூழ்ந்திருந்தன. ஏராளமான முருங்கைகள் சுவைக்க ஆளின்றிக் கொட்டிக்கிடக்கவே எடுத்துக்கொள்ளலாம் என உள்ளே புகுந்தோம் (இச்சமயம் மற்றுமொரு சிறு குறிப்பை அறியத் தரவேண்டும்: மதனின் அம்மாவுக்கு மதன் எதையேனும் பயன்படக்கூடிய அளவில் வீட்டிற்கு எடுத்துச் சென்றால் மெச்சியே பழகிப் போயிற்று. பாசனத் தொட்டியாகத் தற்போது மாற்றப்பட்டிருக்கும் மஞ்சத்திடல் குளத்திலிருந்து ஜிலேபி கெண்டைகளைத் துண்டை வைத்து அள்ளிய போதெல்லாம், அவனது அம்மாவால் எங்களுக்கான வறுத்த உணவாக அவை மாறியிருக்கின்றன). முத்தியதும் அரும்பியதுமாக பல காய்கள் மண்ணில் வீழ்ந்துகிடந்தன. முத்தியதைப் பார்த்தும் தன் அப்பாவுடையது என்றும் சிறியதைக் கையிலெடுத்து அது தன்னுடையதும் என்றும் மணி சொல்லிச் சிரித்துக்கொண்டான்.

ஒவ்வொன்றாக அடுக்கும்வேளை அவ்விடத்தின் தென்மூலையிலிருந்து பன்றிக்குட்டிகள் முனகும் சத்தமெழுந்தன. மதன் தனக்குப் பன்றிகளைக் கண்டாலே பயம், அருவருப்பு என்ற பேசியவாறு நெருங்கிச் சென்றான். நான் அங்கிருந்த குட்டிகளை எண்ணத் தொடங்கினேன். மொத்தமாய் ஒன்பதிருந்தன. ஒன்றை ஒன்று அண்டிப் படுத்தபடி. எல்லாமும் முடி வளராது; பழுப்பை ஆடையெனக் கொண்ட சில நாட்களே ஆன பிஞ்சுயிர்கள். ஆனால் அருகில் அதன் தாயோ அல்லது கண்காணியோ இல்லாதது ஆச்சர்யமளித்தது.

அந்நேரம் மாமா சுவைத்த கொழுத்த மாமிசத் துண்டு நினைவுக்கு வந்தது. அவர் சாப்பிட்டதைக் கூறப்போகவே, தயக்கத்துடன் ஒரு குட்டியின் முனகலைப் பொருட்படுத்தாது வலக்கையில் பிடித்திருந்த மதன் அசூயையுடன் கீழே தவறவிட்டான். மூவடி உயரத்திலிருந்து சேறு பாவிய மண்ணில் விழுந்த குட்டி ஞே என்று சத்தமெழுப்பிக் கூக்குரலிட்டது.

வரிசையாய் ஒவ்வொன்றாக அவன் எடுத்து கீழே போட்டு விளையாடவே, குட்டிகளனைத்தும் ஒரேசேரக் கத்தத் தொடங்கின. தோட்டத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலிபோல் வேயப்பட்டிருந்த மூங்கில்கள்; நீண்டு வளர்ந்திருந்த முருங்கைகள் எனப் பசுமைப் போர்த்துதலைத் தாண்டிச் சிறு சிறு கூழாங்கல் இடைவெளியாய் ஆங்காங்கே தெரிந்த வானத்திலிருந்து கதிர்கள் உள்ளிறங்கிக் கொண்டிருந்தன.

செருப்புகளின் முனைகள் சேற்றினுள் புதைந்து, விரல்களை நசநசக்கச் செய்தன.

சுற்றிலும் நாற்பது அடிகளுக்கு வேறு வீடுகளே இல்லாததால், அவற்றின் சன்னமான வலியொலி யார் செவிகளையும் அண்டாது எனக் கணிக்க முடிந்தது. என்னைவிட மதனால் இதைத் துல்லியமாக உணர முடியும். கார்த்திகை மாலைகளில் வீதிகளில் ஆட்கள் பரவலாக இருக்கும்போதே விளக்குகளை அபேஷ் செய்து வரும் சாதுர்யம் உள்ளவன். ஆனாலும் அவன் ஏன் அக்குட்டிகளைத் துன்புறுத்தி விளையாட ஆசைப்பட்டான் என்பதை நானும் அவன் போலவே செய்யும்வரைப் புரிந்து கொண்டிருக்கவில்லை.

‘டே குட்டிகளோட அம்மா எங்கேந்தாது பாத்துட்டு இருக்கும். கரு வச்சிடுச்சுன்னா நம்ம முருங்கக்காய துண்டாக்காம விடாது பாத்துக்கோ’

‘அடப்போடா இதுகள அடிச்சா பெரிய பண்ணி தொறத்திட்டு வருமாக்கும்’ என அவன் தன் உயரமே முளைவிட்டிருந்த சிறிய முருங்கைக் குருத்தை உடைத்தான். மெலிதாய் மூன்றடி நீண்டிருந்த அக்கழியிலிருந்த கீரைக் கிளையெல்லாம் பிய்த்தெறிந்துவிட்டு அவன் காலுக்கடியில் கண்மூடி திசைமறந்து முனகிக்கொண்டிருந்த பன்றியில் முதுகில் ஓங்கி அடித்தான். வீல் என அலறித் துள்ளியது. அதுபோலவே ஒவ்வொரு குட்டியாகச் சாத்தினான். நானும். பிறகு எங்கே யாரேனும் வந்து குற்றப்படுத்தி விடுவார்களோ என வீதிக்கும் தோட்டத்துக்குமாக ஓடியபடி இருந்தேன். சில நிமிடங்களுக்குள்ளாகவே குட்டிகள் உடல் சிவந்து போயிருந்தன. இரத்தச் சொட்டுக்கள் அரும்பிப் பூத்தன. கீறிட்ட நாவிலிருந்து ஒழுகும் சிவப்பை, அவற்றின் உடலெங்கும் கண்டேன். அவன் முதுகில் ஓங்கி குத்திவிட்டு, ‘எவன்கிட்டயாது மாட்டி அடிபட்டுச் சாகுடா’ என முகப்பிற்குத் திரும்பி ஓடினேன். தோட்டத்தின் வாயிலில் கழுத்தில் சிவப்பும் வெள்ளையும் கட்டங்களாய்ப் பதிந்திருந்த துண்டு போட்ட பெரியவர் நின்று எங்களையே முறைத்துக்கொண்டிருந்தார். தாடி மயிர்களின் அடர்த்தி முகத்தையே இருளாய்க் காட்டியது.

அவரது டி.வி.எஸ் முறையாக ஸ்டாண்ட் போடப்படாததால் தெருவை மறித்து விழுந்து கிடந்தது.

‘புண்ட பிள்ளைங்களா… மனுசந்தான் உங்கள பெத்தானாடா. குட்டிகள அடிச்சிட்டிருக்கீங்க!?’ என்றதும் மறுபக்கம் இருந்த வேலியில் முட்கள் கிழிக்க புகுந்துகொண்டு ஓடி மறைந்தான் மதன். கையிலிருந்த முருங்கைக் குச்சி இரத்தப் படிதலுடன் அவனுடன் கூடவே ஓடியது. எங்கே என்னைப் பிடித்தால் அடித்துவிடுவாரோ என அவன் சென்ற பக்கமே திரும்ப நினைக்க, அதற்குள்ளாக தடித்த கரங்கள் என் கழுத்தை அழுந்தப் பற்றித் தெருவுக்கு இழுத்துப் போயின. என் டிரவுசர் அவிழ்ந்துவிடும் நிலையில் அரைஞான்கயிறிடம் கெஞ்சிக்கொண்டிருந்தது. காலர் கிழிபட, நான் வாயைத் திறக்கும் முன்னே என் இடக் கன்னத்தில் அவரது வலக்கை வலுவாகப் பதிந்தது.

‘அண்ணா அண்ணா நான் எதுவும் பண்ணலீங்கணா அவந்தான் அடிச்சான். நான் அடிக்காதடானுதான் சொன்னேன்’ என்று மன்றாடத் தொடங்கினேன்.

‘அப்புறம் ஏண்டா லவடா ஓடப் பார்த்தே!’ எனக் கழுத்தைப் பற்றித் தூக்கியவராக, அருகிலிருந்த போஸ்ட் கம்பத்தில் சாய்த்துத் தன்னை நிலைபடுத்திக்கொண்டார். அறையும்போதே கலக்கம் கண்ட கண்கள் தூக்கி நிறுத்திடவே குரல் வளை அழுந்தப்பெற்று, நீரைச் சிந்தத் தொடங்கியது. தொடர்ச்சியான என் பேச்சற்றக் கெஞ்சலிலும் அழுகையிலும் மனமிரங்கி, ‘ச்சே ஓட்றா நாயே இனி இந்தப்பக்கம் உன்ன பாத்தேன், செத்த!’ என்கவும், ஒருவிசை கூடத் தாமதிக்காமல் சாக்கடை கட்டையைத் தாவி கங்கா நகருள் புகுந்தேன்.

செல்லும் வழியெங்கும் பன்றிக்குட்டிகளோ, மதனோ நினைவில் எட்டிப்பார்க்கவே இல்லை. என்னை அறைந்த வலுவான கரங்களை எப்படிச் சமாளித்திருக்க முடியும். நாலடி உயரம் கொண்ட நான் ஐந்தேமுக்கால் அடிக்கும் மேலாக வாட்டசாட்டமாக உள்ள ஓராளை எப்படி எதிர்கொண்டு வீழ்த்துவது எனக் கற்பனை செய்துகொண்டே நடந்தேன். கிழிந்திருந்த காலர் பிடி நடனமாட, அவரை அடித்துச் சாய்த்திருக்க வேண்டிய முறைகளைப் பற்றியே மனதில் ஓட்டிக்கொண்டு நடந்தேன். இலவச வகுப்பெடுக்கும் கராத்தே மாஸ்டரின் அப்பர் பஞ்ச், மிடில் பஞ்ச், லோயர் பஞ்ச் என மூன்றில் ஒன்றுகூட வேலைசெய்யவில்லையே என நொந்துகொண்டேன். உள்ளங்கைகளை மடக்கியும் நடுவிரலை மட்டும் மூடப்பட்ட விரல்களின் மத்தியிலிருந்து வெளியே துருத்தியவாறு வைத்துக்கொண்டு, அவர் முகத்தில் எவ்வாறு குத்தி பல்லை உடைக்கப் போகிறேன் என மூர்க்கித்தவாறே நடந்தேன். வீட்டை நெருங்குகையில் பச்சிளம் சிசுக்களின் இரத்தக் கறை என் வெள்ளை பனியனில் தெளித்திருப்பதைக் கண்டுகொண்டேன்.

மனந்திருப்பிய இரத்தம்

உடலியல் தேவைகள் எக்காளமிடத் தொடங்கிய பருவத்தில்தான் ஜெபின் அண்ணா பழக்கமாகிறார். அவருடன் ஒன்றாக பேருந்திலேறி மலைக்கோவில் நிறுத்தத்தில் இறங்கி, புதிதாக எழுப்பப்பட்ட சபைக்குச் செல்வது வாடிக்கையாக மாறியது. அவர் இல்லாத சமயங்களில் நானாகவே சைக்கிளில் சென்று வரத் தொடங்கினேன். திருச்சபையின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்ளும் விசுவாசமுள்ள ஆத்மாவாகியிருந்த காலகட்டம். அன்றைய ஞாயிற்றுக் கிழமையில் மத்தேயு சுவிஷேசத்தில் பன்றிகளின் உடம்புகளில் கிறிஸ்துவால் ஏவப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிசாசுகள் எப்படி மலைமுகட்டிலிருந்து கடலில் விழுந்து மாண்டு போயின என்பது குறித்துப் போதகர் விவரித்துக் கொண்டிருந்தார்.

வாலிபர் – மாணவர் கூடுகை என அறிவித்தவுடன் ஜெபின் அண்ணாவைப் பிடித்துக்கொண்டு அவர் உதவியால் போதகரின் கரங்களைப் பற்றிக்கொண்டேன். மைக் பிடிக்கவும், அப்பத்தைப் பிய்க்கவுமே பழக்கமான ம்ருதுவான கரங்கள்.

‘பன்னிக பிசாசா பாஸ்டர்?’

‘எந்தப் பன்னி சொன்னுச்சு!’

‘நீங்க தானே பைபிள்ல கர்த்தர் துரத்தினாருன்னு வாசிச்சு காமிச்சீங்க’ என்றதும் சுற்றி நின்ற என் வயதொத்தவர்கள் சிரித்துவிட்டனர்.

முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்த கடுப்பை மறைத்துக்கொண்டு,

‘ஆண்டவர் பிசாசுகள மாட்டு மேலயோ, ஆட்டு மேலயோ ஏறச் சொல்லல பாத்தீயா. சாத்தான் அசுத்தம். அழுக்கு அழுக்கோடதான் சேரும். அதான் பன்னிகள மேல ஏவுனாரு பாத்துக்கோ. நீ ஒழுங்காக் கவனிச்சியா இல்லியா. பிசாசுகளாத்தானே எங்கள பன்னிக மீது ஏறிக்கொள்ள அனுமதியும்னு கேக்குதுங்க’ என்று சொல்லிச் சிரித்தார்.

‘அப்ப பன்னிகள அடிச்சிக் கொல்லலாமா பாஸ்டர்’

‘டேய் தம்பி. உக்காருடா. ஜெபத்துக்கு நேரமாவுது. சும்மா பன்னி கின்னினுட்டு’ என்று வாய்க்குள் மேலும் எழுந்த முனகலை விழுங்கிக்கொண்டு நின்றார். நான் எல்லோரும் பார்க்கச் சபையை நீங்கி சைக்கிளைத் திருப்பிக்கொண்டு மிதிக்கவாரம்பித்தேன். ஒவ்வொரு மிதிக்குமாக பெடல், போடா பன்னி எனப் போதகரைச் சபித்துக்கொண்டே சுழன்றது.

பின்பு என்னை மட்டும் ஏன் சபிப்பதற்கான அடையாளமாய் உலகின் மீட்பர் மாற்றித்தர வேண்டும் என ஆட்டுக்குட்டியைத் தோளில் தாங்கி நிற்பவரைக் குற்றஞ்சுமத்தும் பன்றிகள் தெள்ளத் தமிழில் மனுபோடத் தொடங்கின.

வேலிக்கு வெளியே நடப்பட்டவை

ரம்யா நைட்டி போன்ற சுடிதாரில் நின்றபடி, ஒவ்வொரு பாத்திரமாய் தன் தள்ளுவண்டிக்கடையிலிருந்து எடுத்துக் கீழே வைத்தாள். தன் காலிற்குச் சற்று அருகே முக்காலி ஒன்றையும் போட்டாள். தினமும் அதில் தனக்கு உட்கார நேரமே இல்லை என்றாலும் அதை எடுத்துப் போட அவள் தவறுவதில்லை. பொரித்துக் கொண்டு வந்திருந்த சிறு இட்லி போன்ற பூரிகளை நொறுக்கி, நல்ல கொதியில் இருந்த சுண்டல் குழம்பைச் சிறிது ஊற்றி சுவை கூட்டிடவென நறுக்கி வைத்திருந்த காய்கறி வெங்காயத் துருவல்களைத் தூவி சூடு பறக்க முதலாக எனக்குத் தட்டை நீட்டினாள். வாங்கி அவளிடமே திருப்பி நீட்டவே, புரிந்துகொண்டவளாக மிளகு பொடியை அள்ளித் தெளித்தாள். சுண்டல் வெந்துகொண்டிருந்த அடுப்பிற்கு அருகில் புளிக்கரைசலும் மஞ்சள் நீரும் கலந்த பிரத்யேகமான பூரி ரசப் பானை. அந்தோணியார் மேனிலைப் பள்ளி மணியடிக்கும் வேளை நெருங்கிக் கொண்டிருக்கவே, நாளின் மூச்சுமுட்டும் வியாபாரத்திற்காக மும்முரமாகக் காத்திருந்தாள்.

‘ஏம்புள்ள தினமும் எனக்கு முதல்ல தர்றீயே. என்ன வச்சு டெஸ்ட் தானே பண்ணுற?’

‘நீதான் இதே பொழப்பா வந்து நிக்கிற. வேணாட்டி போ, வேற எதாவது மாட்டுக்குப் போட்டுக்கிறேன்’ என்று சிரித்தாள்.

அவளது அப்பா தாஸுக்குக் காலில் வெரிகோஸ் வந்ததிலிருந்து, அவளது அன்றாடம் பானிப்பூரிக் கடை என்றாகிவிட்டது. பணம் செலுத்தாத, செலுத்தினாலும் முதலாளியால் வாங்கிக்கொள்ள விரும்பாத வாடிக்கையாளன் ஆகிவிட்டேன். சாலையோரப் புழுதி, உணவின்மீது படாதவாறு ஞெகிழி போர்வையால் பூரியை மூடினாள்.

‘கூட வந்துரு சொல்லிட்டிருக்கேன். நீ தினமும் பூரிகூடத்தான் குடும்பம் நடத்துவேங்குற!’

‘உனக்கே நான்தான் வயித்த ரொப்பிட்டிருக்கேன். உன்ன கட்டிக்கிட்டா எங்க நைனாவுக்கு யார் கஞ்சி ஊத்துவா? சும்மான்னு போ மாமா நீ’ எனப் புன்னகைத்தவாறு ரசப் பானையை ஆராய்ச்சி செய்தாள்.

‘எம் பவுசு என்னான்னு தெரியாம ஒளறிட்டிருக்க புள்ள. உக்காந்தே சாப்பிடற அளவுக்குச் சொத்து வச்சிருக்கேன் தெரியுமில்ல!’ என்றேன். பக்கத்தில் பாட்டி தன் வழக்கஸ்தலத்தில் கூடையைத் திறந்து மல்லிகைச் சரங்களின் மீது நீரைத் தெளிக்கவே, ரம்யம் மேலும் கூடிகொண்டது.

‘எது சத்திரம் பேருல பட்டா இருக்குன்னு அலைஞ்சிட்டிருக்கீங்களே அந்தச் சொத்தா?’ என்று சிரித்துக்கொண்டாள்.

பதில் தர முடியவில்லை. இன்னும் எத்தனை காலம்தான் அவளாலும் காத்திருக்க முடியுமோ! சைரனைப் போல் பள்ளி மணி அடித்ததும், அவளிடம் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து நழுவினேன். என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல் அமைதியாய்ச் சாலையை வெறித்துக்கொண்டிருந்தாள். புழுதி என்னை மூடப் பார்த்தபடி சுழன்றது.

மாலை நானும் மாமாவுமாக ரம்யா வீட்டிற்குச் சென்றோம். சுற்றிலும் அழுக்குத் தோய்ந்திருந்த ஞெகிழிக் குடுவையில் மருந்துபோல் குடிப்பதாகச் சொல்லிக்கொண்டு ஹனி பீ சரக்கை ருசித்துக் கொண்டிருந்தார் (அதன் குரங்கு மூத்திர நிறத்தை வைத்தே இன்ன பிராண்ட் எனக் கண்டறிந்த பெருமை மாமாவையே சேரும்.)

‘இங்க பாருங்க தாஸு சும்மா நாம வெவ்வேற ஆளுங்கனு யோசிக்காதீங்க. இப்பலாம் யாரு என்னங்க பாக்குறாங்க!’

‘நாளப்பின்ன எம்புள்ள ரோட்டுல வண்டிப் போட்டு நின்னவதானே. அவ அப்பன் ஒரு குடிசைக்கு வக்கில்லாதவன் தானேனு உங்க பக்கத்துலேந்து யாராச்சும் பேசிட்டாங்கனா என்ன செய்யிறதுன்னுதான் யோசிக்கிறேன்’ என்று செம்பட்டையும் வெள்ளையுமாய்ப் பிசிறாய்த் தொங்கிக்கொண்டிருந்த தாடி மயிர்களைத் திருகியபடி பேசினார்.

‘என்ன இப்படிச் சொல்லிட்டிங்க. உங்க மாப்புல உங்களயும் மகளோடச் சேர்த்து வச்சிக்கிடணும்ல பேசிட்டிருக்காப்புல…. சும்மா தலைய ஆட்டி வைங்க. மத்த ஆகுற வேலயெல்லாம் பாத்துடலாம்!’ என்று மாமா தன் வலக்கையில் ஆடிக்கொண்டிருந்த பிரேஸ்லட் பட்டையில் தாளமிட்டபடி பேசியவாறே வாசலில் கிடத்தப்பட்டிருந்த கயித்துக்கட்டிலிலிருந்து எழுந்தார்.

‘அதுக்கில்ல. நகை செஞ்சு போடற அளவுக்கு எனக்குத் தெம்பில்ல…’

‘அதுக்கெல்லாம் நான் விரும்பலயே மாமா. ரம்யா சொல்லலயா!’ என்று நான் முந்திக்கொள்ளவே மாமா தொண்டையைக் கரகரத்துக்கொண்டு, ‘பாத்துக்கிடலாம். மேப்படி வந்து பேசுறோம்’ என இழுத்துச் சென்றார்.

எதிரே கல் பதித்திருந்த சுவரில் பக்கவாட்டை உரசியபடி தன் காய்ந்திருந்த விட்டையையே பார்த்துக்கொண்டிருந்தது முதிய பன்றி ஒன்று.

பன்றிக்கு நன்றி சொல்லி

சரி பார்க்கவெனக் கொடுக்கப்பட்ட திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு மாமா வீட்டுக்குத்தான் புறப்பட்டேன். வழியெங்கும் இந்தக் காரியம் இவ்வளவு சீக்கிரமாய் நிறைவேறிவிட்டதே என்கிற பூரிப்பு மனம் தணியச் செய்தது. ரம்யா இனி கால்கடுக்க சாலையில் நிற்க தேவையில்லை. மாமா தரப்போகும் அம்மாவுக்கான வீட்டுப் பங்குப் பணத்தில் நிச்சயம் சின்னதாக டிஃபன் கடை போட்டுவிடலாம். நானும்கூட முடிந்தால் முழுப் பணம் கட்டியே கார் ஒன்றெடுத்து வாடகைக்கு ஓட்டலாம் என நினைத்தவாறே நகர்ந்துகொண்டிருந்தேன்.

தாத்தாவும் அம்மாச்சியும் மரித்த, அம்மா மாமாமேல் கசந்துகொண்டு விலகிய, அப்பாவால் ஒருக்காலும் எட்டிப் பார்க்கப்படாத பூர்வீக வீட்டின் வாசலில் சென்று வண்டியை நிறுத்தினேன். வாசலில் மாப் பூ வைக்கத் தொடங்கியிருந்தது. அதன் காலடியில் உராய்ந்தவாறு நந்தியாவட்டைச் செடிகள் பரவியிருந்தன. முழுதும் தாளிடப்படாத இரும்புத் திறப்புகளைச் சத்தமெழுப்பாது தள்ளியவாறு உள்ளே நுழைந்தேன். ரேழியில் வரிசையாய் பத்து குடங்களுக்கும் மேல் நிரப்பப்பட்டிருந்தன. அம்மா இருந்தபோது செய்த வேலையைத் தற்போது அத்தை செய்கிறாள் எனப் புரிந்தது.

விறகடுப்பு எரிந்துகொண்டிருந்த அறையில் சாலைக்கு உதவாத தாத்தாவின் டிவிஎஸ் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அத்தையும் மாமாவிடம் பேசும் சத்தம் சன்னமாகக் கேட்கத் தொடங்கியதும், என்றுமில்லாமல் ரகசியம் கேட்கும் ஆசை கூடியது.

‘ஏங்க உங்கக்கா பையனுக்குப் போயும் போயும் பன்னி மேய்க்கிற சாதியிலதான் பொண்ணு எடுப்பீங்களா?’

‘பய மேஞ்சிட்டு தவுட்டு ருசிதான் சுகமுங்குறான் வெறென்னத்த பண்ண. என்னவோ அக்காவும் மாமாவும் இல்ல. கல்யாணத்த செஞ்சுவச்சிட்டு எண்ணூறு சதுர அடி பங்குக்கு ஒன்னோ ஒன்றரையோ கொடுத்துவிட்டற வேண்டியதுதான். இனி அவன் பாடு.’

‘எந்தச் சிறுக்கி என்ன ருசினு ஐயாவுக்கு நல்லா தெரியுமோ. நீங்க எவ்ளோ பேரை மேஞ்சீங்க?’

‘உன்ன மட்டும்தாண்டி என் அரைக்கிழவியே. இப்பவும் உன்னதான் மேயப்போறேன்!’ என்று அவர் தன் தொண்டையைச் செறுமும் சத்தம் கேட்கவே, உள்ளே நுழைந்ததற்கான அடையாளம் தெரியக்கூடாதென ஒலியெழுப்பாது வாசலுக்கு வந்து பைக்கை ஆன் செய்து முறுக்கினேன்.

புதிதாக வந்திருப்பதைப் போல் காட்டிக்கொண்டு, வாசல் கதவைத் தட்டி, ‘மாமா….’ என்று குரல் கொடுக்கவே, தன் கைலியை நன்கு வரித்து மேலிழுத்துக் கட்டியபடி ‘வா மாப்ள’ என்றபடி கதவைத் திறக்க வந்தார்.

‘பத்திரிக்க கரெக்‌ஷனுக்கு வந்துடுச்சு மாமா. அதான் காட்டிடலாம்னு வந்தேன்…’

‘என்னடா எம் மக என்ன சொல்லுறா?’ எனப் பையை வாங்கிப் பத்திரிகையைப் பிரித்தார்.

வீட்டிற்கு முன் போடப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் தட்டிக்குக் கீழ் நாற்காலியில் அமர்ந்துகொண்டோம். அத்தைத் தன் விரலை உள்நுழைத்தபடி நன்கு புடைத்திருந்த செம்பை நீட்டினாள். பேருக்கு ஒரு மடக்கு பருகிவிட்டு, கீழே வைத்தேன். மாமா அதற்குள் தங்கள் அன்புள்ள என்பதின்கீழ் இரத்த நிறத்தில் பதியப்பட்டிருந்த தன் பெயரையும் மனைவி பெயரையும் தடவிவிட்டுப் புன்னகைத்துக் கொண்டார்.

‘மாதா காலண்டர் கீழ பத்திரிகைகள வச்சிட்டு சாப்பிட்டுட்டுப் போடா’ என்றார். அவசரமாக வேலையிருப்பதாக எழுந்துகொள்ளவே அத்தையிடமிருந்து மென்னகைப் புறப்பட்டது.

முதல்முறை தசை அறுக்கப்பட்ட பன்றியிடமிருந்து எழுந்த வீச்சத்தை இம்முறை முகர்ந்துகொண்டேன். அதைச் சிவந்த நால் உதடுகள் காற்றெங்கும் பீச்சியடித்தன.

000

ஜார்ஜ் ஜோசப்

ஜார்ஜ் ஜோசப் என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனச் செய்துவரும் இவரது இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். எமரால்ட் என்கிற சிறுகதைத் தொகுப்பும், பூனைகளில்லா உலகம் என்னும் ஜப்பானிய மொழிபெயர்ப்பு‌ நாவலும் சீர்மை வெளியீடாக வெளிவந்துள்ளன. இஸ்மாயில் என்கிற அமெரிக்க சூழலிய மொழிபெயர்ப்பு நாவலும் வெளிவர இருக்கிறது. மெய்யியல் துறையில் ஈடுபாடு கொண்டவர். கலீல் ஜிப்ரான், புதுமைப்பித்தன், அசோகமித்திரன், மா. அரங்கநாதன் போன்றோரை எழுத்துலக ஆதர்சங்களாகக் கருதுகிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *